Pages

November 02, 2005

கடவுளின் சொந்த ஊர்

"என்னப்பா, ஆவணி அவிட்டம் விநாயகர் சதுர்த்தி நவராத்திரின்னு ஒரே திருவிழா ஸ்பெஷலாவே இருக்கே, அடுத்து என்ன தீபாவளி பற்றி எழுதப் போறியா"ன்னு நண்பர் ஒருவர் எந்த வேளையில் கேட்டுத் தொலைத்தாரோ, இப்போது நான் எழுதிக்கொண்டிருப்பது தீபாவளி பற்றிய வலைப்பதிவு தான். இந்த வருஷம் நமக்கு தலை தீபாவளி வேறு. அதனால் இந்த வருடம் தீபாவளியை நான் கழித்தது என் மனைவியின் சொந்த ஊரான ஆலப்புழையில். கேரளாவில் தீபாவளி அவ்வளவு விமர்சையாகக் கொண்டாடுவது இல்லை. வெடிச் சத்தமே கேட்கவில்லை. மருந்துக்கூட ஒரு வெடிக்கடை கூட இல்லை. ஆஷியாநெட்டில் ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சி கூட கிடையாது. :(
இப்படி இருக்க இந்த தீபாவளியை எப்படி விமர்சையாகக் கொண்டாடுவது என்று ஆலோசிக்கலானேன். சரி எல்லோரையும் கூட்டிக்கொண்டு எங்காவது சென்று வரலாம் என்று முடிவு செய்தேன்.
பெண் பார்க்கச் சென்ற தினத்தன்றே இந்த ஊரை கிழக்குலகின் வெனிஸ் என்று சொன்னார்கள். (உண்மை வெனிஸை இவர்கள் பார்த்திருக்கிறார்களா என்று தெரியாது) ஊருக்குள்ளே ஏகப்பட்ட கால்வாய்க்கள் இருக்கிறதென்றும், மக்கள் படகுகளை போக்குவரத்து சாதனமாக பயன் படுத்துவார்கள் என்றும் கேள்விபட்டேன்.இதற்கு முன் ஆலப்புழை சென்ற போதெல்லாம் எங்குமே செல்லாமல் திரும்பி வந்து விட நேரிட்டது.

இதற்கு முன் ஆலப்புழை சென்ற போதெல்லாம் எங்குமே செல்லாமல் திரும்பி வந்து விட நேரிட்டது. ஒரிரண்டு கோவிலகளுக்கு மட்டும் சென்று விட்டு, வேறெங்கும் என்னை அழைத்துச் செல்ல வில்லை என் மனைவியானப் பட்டவள். அவளுக்கு இந்த கால்வாய்களையும் படகுகளையும் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போய்விட்டதாம். (எனக்கு இருட்டுக் கடை அல்வா பழகி விட்டதைப் போல்)
ஆனால் இம்முறை பிடிவாதமாக படகுச் சவாரி செய்தே ஆக வேண்டும் என்று தீர்மானம் செய்து விட்டேன். என மனைவியின் கஸின்களை அழைத்துக் கொண்டு படகுச் சவாரிக்கு ஆயத்தமானோம்.
நல்ல வேளை அன்று வானிலையும் ஒத்துழைத்தது. முந்தைய தினம் மழை. தீபாவளி அன்று மழை ஏதும் பெய்யாமல் ஆதவன் மேகங்கள் படை சூழ வானிலே வட்டமிட்டான். அதனால் அவனது தாக்கமும் அதிகமில்லமல் we had a perfect day and weather for boating.

படகுத் துறையிலிருந்து படகு மெல்ல மெல்ல கால்வாயை கிழித்துக் கொண்டு புறப்பட்டது. (என்னவோ டைடானிக் நகருது மாதிரி சொல்லொதியேன்னு கேக்குறீயேளா??) இரு புறமும் அடர்த்தியாக தென்னை மரங்கள். அந்தக் காட்சியே மிக ரம்மியமாக இருந்தது.
போகும் வழியில் ஏகப்பட்ட படகுகள். இல்லை இல்லை இவற்றை படகு வீடுகள் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு படகுக்குள்ளும் ஒரு நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதிகள் இருக்கின்றன. உள்ளேயே ஒரு ஹோட்டல் அறை போன்ற வசதியை செய்திருக்கிறார்கள். இதற்குள்ளேயே சில திங்கள் தங்கலாம். குடும்பத்தோடு விடுமுறையைக் கழிக்க ஒரு நல்ல வழி.

கால்வாயைத் தாண்டி படகு காயலுக்குள் சென்றது. அதுவரையில் முப்பதடி அகலம் கொண்ட கால்வாய், திடீரென ஒரு கடல் போல் காட்சியளித்தது. அக்கறையைக் காணவே இல்லை. எல்லாம் ஒரே நீல நிறம். சிறுசிறு படகுகள் ஆங்காங்கே காட்சியளித்தன. ஆஹா அந்த காட்சியை வர்ணிக்க வைரமுத்துவைத் தான் அழைத்து வர வேண்டும். நிறைய புகைப்படங்களை கிளிக்கித் தள்ளினேன். (டிஜிடல் கேமராவில் அதுவொரு வசதி. வேண்டாததை அழித்து விடலாம்).

இந்த ரம்மியமயமான காட்சியைப் பார்க்து விட்டுத் தான்,

கேரள நாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
என்று பாரதி பாடினார் போல.

சரி அவர் அடந்த மகிழ்ச்சி நாமும் ஏன் அடையக்கூடாது என்று, நாங்கள் அந்தாக்ஷரி எல்லாம் விளையாடினோம். இரண்டு மணி நேரம் கழிந்ததே தெரிய வில்லை. திபாவளியன்று ஒரு வெடி கூட பற்ற வைக்காவிட்டாலும் இப்படி ஒரு படகுச் சவாரி செய்தது மிகவும் இனிமையாய் இருந்தது.
இப்போது புரிகிறது கேரளத்தை கடவுளின் சொந்த ஊர் என்று ஏன் சொல்கிறார்கள். இவ்வளவு எழில் மிகு ஊரில் கடவுள் கண்டிப்பாக வாசம் செய்கிறார்.

நண்பன் ஒருவன், திருமணத்திற்குப் பின் தனது தேன் நிலவை ஆலப்புழையில் கழிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளன். இந்த வலைப் பதிவை படித்துவிட்டு, அடுத்த வாரமே தேன் நிலவுக்குச் சென்றால் கூட ஆச்சர்யமில்லை. :)

October 06, 2005

நவராத்திரி

நவராத்திரி என்றாலே, எங்கள் வீட்டில் கொலு வைக்கும் வைபவம் தான் ஞாபகம் வரும். பள்ளிக்கூடக் காலத்தில், இந்த ஒன்பது நாட்களும் பள்ளி காலாண்டு விடுமுறை விட்டு விடுவார்கள். மாஹாளய அம்மாவாசையின் முந்தைய தினம் பரீட்சை எல்லாம் முடிந்து விடும்.
வருடந்தோறும், விட்டில் கொலு வைப்போம். நான் தான் உத்தரத்தின் மீதேறி(ஏறுவது குதிப்பது எல்லாம் தான் நமக்கு கை வந்த கலையாச்சே), ஒவ்வொரு கொலு பொம்மையாக எடுத்துக் கொடுப்பேன். எங்கள் வீட்டில் பொம்மைகளெல்லாம் தனித்தனியாக இல்லாமல் எல்லாமே, செடு செட்டாக இருக்கும். வெங்கடாசலபதி அலமேலுமங்கை செட், வரலக்ஷ்மி விரதம் செட், தசாவதாரம், கருட சேவை, சிவன் நந்தி, ராமர் பட்டாபிஷேகம், கிருஷ்ண லீலைகள் (னந்தவனத்தில் கிருஷ்ணர் கோபிகா ஸ்த்ரீகளுடன் குஜால் செய்தவை) செட்டியார் கடை இப்படியாக நிறைய செட்டு பொம்மைகள். ஆற்றங்கரையிலிருந்து கரம்பை வெட்டி வந்து காடு மலையெல்லாம் செய்வோம். அப்பா சீரியல் லைட்டு போடுவார். எல்லா விளக்கும் ஒரு வழியாக சரஸ்வதி பூஜையன்று தான் எரியும். துர்கை லக்ஷ்மி சரஸ்வதியென தலா ஒவ்வொருவருக்கும் மூன்று நாட்களென காலையில் அஷ்டோத்திரம் சொல்லி பூஜை செய்வேன்.
இதையெல்லாம் விட ஸ்வாரஸ்யமாக இருப்பது ஒவ்வொரு நாளும் என் தங்கைக்கு ஏதாவது ஒரு வேஷத்தை போட்டுவிட்டு எல்லா வீடுகளுக்கும் சென்று அழைத்து வருவாள். ஒரு முறை "நானும் வேஷம் போட்டுக் கொள்வேன்" என்று அடம் பிடித்ததால் , குடுகுடுப்பாண்டி வேஷம் போட்டுவிட்டாள். (நம்ம மூஞ்சிக்கு அது தான் எடுப்பா இருந்தது)
எப்போடா சரஸ்வதி பூஜை வரும் என்று காத்திருப்போம். நாளிதழ் கூட படிக்க மாட்டேன். மாதத்திற்கொருமுறை சரஸ்வதி பூஜை வரக்கூடாதா என்று ஏங்கியதுண்டு. மறுநாள் விஜயதசமி ஏண்டா வருகிறதென்று இருக்கும். பள்ளி திறந்து விடுவார்கள். அதை விடக் கொடுமை, விடைத்தாளெல்லாம் ஒரே நாளில் விநியோகம் செய்து விடுவார்கள். நம்ம வண்டவாளமெல்லாம் அன்று தண்டவாளம் ஏறிவிடும். ஒவ்வொரு விஜயதசமியும் கவலை தசமியாகத் தான் இருக்கும். ஏதாவது விடைத்தாளை மறைத்தால் கூட என் உடன் பிறப்பு வந்து போட்டுக் கொடுத்துவிடுவாள்.
கல்லூரி வந்த பிற்பாடு தான் விஜயதசமி கவலையில்லாமல் கழிந்தத்து.

இம்முறை மனைவியும் அம்மாவும் சேர்ந்து கொலு வைத்திருக்கிறார்கள். ஆனால் நான் அந்த வைபவத்தைக் கண்டுகளிக்க என் மேலாளருக்கு மனம் ஒப்ப வில்லை போலும். என்னை ஒரு வாரத்த்ற்கு இத்தாலி அனுப்பி விட்டார். இது போதாதென்று இவ்வாரத்தில் இரண்டு நாள் விடுமுறையும் போயிற்று. இத்தாலி பயணம் பற்றி அடுத்த வாரம். (ஆமாம், பெரிய மெகா சீரியல் எடுக்கே. அடுத்த வாரம்னு பெரிய சஸ்பென்ஸ் உண்டாக்குதியாக்கும். வெளக்கெண்ணெய்)

September 16, 2005

கன்னி சமையல் அனுபவம்

"நாம அலைஞ்சு திரிஞ்சு ஒழைச்சு சம்பாதிக்கறது எதுக்கு?இந்த ஒரு ஜாண் வயித்த நிறப்பத் தானே" என்று பாய்ஸ் படத்தில் செந்தில் ஒரு டயலாக் பேசுவார். நிறைய பேர் இதை கவனித்திருக்க முடியாது. ஆனால் எவ்வளவு பெரிய தத்துவம். இவ்வளவு அசால்ட்டா சொல்லிட்டாரே. சரி சமையல் பற்றி தலைப்பை கொடுத்துவிட்டு என்னென்னமோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.

வயிற்றை நிறப்புவதற்கு சாப்பாடு அவசியம். அதை நன்றாகச் சமைத்தல் இன்னும் அவசியம். அப்பாடா, ஒரு வழியா கொடுத்த தலைப்புக்கு ஒரு மாதிரி சம்பந்தம் இருக்கற மாதிரி வந்துடுத்து ;-) சிறு வயதில் அம்மா என்ன சமைத்தாலும் அது பிடிக்காது இது பிடிக்காது என்று அநியாயத்துக்கு அடம் பிடிப்பேன். (ஒக்காத்தி வச்சு அம்மா அதுக்கப்புறம் வாயில திணித்ததெல்லாம் தனி கதை). "என் சமையலை பிடிக்கலைன்னு சொல்லற பாத்தியா! ஒரு நாள் நாக்கு வெண்டிப் போய் (நாக்கு செத்து போய்) என் கால்ல வந்து விழறியா இல்லையான்னு பாரு" என்று சொல்லுவாள்.
வேலை நிமித்தமாக கொல்கொத்தா செல்லும் வரை சாப்பாட்டிற்கு என்றுமே கஷ்டப்பட்டதுகிடையாது. அங்கு சென்ற பின் நிஜமாகவே சாப்பட்டுக்கு லாட்டரி அடித்துள்ளேன். அது வரை சமையலில் அ ஆ கூட தெரியாது. (ஆனா ஆவன்னான்னு படிக்கணௌம்;-)) வென்னீர் போடத் தெரியும். அவ்வளவு தான். அங்கு எல்லா ஹோட்டலும் அசைவம் தான். வேறு வழியில்லாமல் ஒரு சமையல் காரனை அமைத்திருந்தோம். ஒரு நாள் அவன் சொந்த ஊருக்கு போய் விட்டான். சரி இங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டால் வேலைக்காகாது என்று தோன்றியதால் நானும் என் நண்பனும் இன்று நாமே சமைப்போம் என்ற முடிவிற்கு வந்தோம். அதுவரை அடுப்பாங்கரை பக்கம் எட்டிக்கூட பர்த்ததில்லை. சரி என்ன தான் இருக்கு பார்ப்போம் என்று முதலில் நோட்டமிட்டோ ம். உருளைக்கிழங்கும் வெங்கயமும், மற்ற சில பொடிகளும் இருந்தன. stove cooker எல்லாமே கூட இருந்தது. அரிசி மட்டும் இல்லை. நண்பன் அரைக்கிலோ அரிசி வாங்கி வந்தான். அதுவும் விலையுயர்ந்த basmati அரிசி. இதற்கு முன்னால் சமைத்த அனுபவம் என்ன, சமையல் செய்வதை பார்த்த அனுபவம் கூட கிடையாது. அரிசியை எப்படி களைய வேண்டும், எவ்வள்வு தண்ணீர் வேண்டும், ஒன்றுமே தெரியவில்லை. சரி நமக்கு ஒன்றும் தெரியாது என்று காட்டிக்கொள்ளக்கூடாது என்று என் மனசாட்சி கண்டிப்பான கட்டளையிட்டதால் கம்மென்று இருந்துவிட்டேன்.

நண்பன் முதலில் அரிசியை கழுவினான். அம்மா அரிசியை களைவதை பார்த்திருக்கிறேன். இவன் என்னவோ வித்தியாசமாக கழுவுவதை பார்த்து, "டேய் அரிசியை களைய மாட்டாயா. அப்படியே போடுறியே" என்றேன். அவன் தனது பாலக்காட்டுத் தமிழில் (இதை கொஞ்சம் மூக்கால் படித்துப் பார்க்க வேண்டும்) "டாய்! இப்படியாக்கும் என் அம்மா பண்ணுவாள். கேட்டியா" என்றான். அவன் கழுவிய அரிசி குறைவாக இருந்தது போல் தோன்றிற்று. "டேய் நீ போட்டிருக்கற அரிசி எனக்கே காணாது போலிருக்கே, நாம ரெண்டு பேரும் சாப்பிடணும்டா. இவ்வளவு போதுமா" என்று என் போறாத வேளைக்குக் கேட்டுத்தொலைத்தேன். "அப்படிங்கறியோ!!இன்னும் எவ்வளவு போடணுங்கறாய்" என்றான். "நீ வாங்கிண்டு வந்திருக்கறதே கொஞ்சமாத் தான் இருக்கு. அம்புட்டயும் போட்டுடேன்" என்றேன். பாஸ்மதி அரிசியின் எடை மற்ற அரிசிகளை விட எடை கூடுதலாக இருக்கும் என்று தெரியாது. அரைக்கிலோ அரிசியையும் போட்டு விட்டு அடுத்த கேள்வி எழுந்தது. எவ்வளவு தண்ணீர் வைக்க வேண்டும்? அப்போது தான் நான் ஒரு சூப்பர் டூப்பர் ஐடியா கொடுத்தேன். "டேய், அந்த குக்கர் மனுவலில், எவ்வளவு அரிசி வைத்தால் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று போட்டிருப்பான்" என்றேன். ஒரு வழியாக மனுவலை தேடியெடுத்துப் பார்த்தால், தண்ணீர் அளவு பற்றி ஒன்றுமே போடவில்லை. "இதே அமெரிக்காவில் நடந்திருந்தால், அந்த குக்கர் கம்பெனி மீது வழக்கு தொடர்ந்திருக்கலாம். நம் போராத வேளை, இந்தியாவில் இருக்கிறோம், என்று நொந்து கொண்டு, தோராயமா அரிசி முங்குகிற அளவுக்கு தண்ணீர் விட்டோம்.
குக்கரையும் அடுப்பிலேற்றி வைத்து அதன் மீது வெயிட் எல்லாம் போட்டாயிற்று. மணல் கயிறு விசு மாதிரி அதன் மேல் விபூதியோ குங்குமமோ இடாதது தான் குறை.
நண்பன் உருளைக்கிழங்கு கறி பண்ணுகிறேன் பேர்வழியென்று உருளைக்கிழங்கை நறுக்க ஆரம்பித்துவிட்டான். வெறும் சாதத்தையும் உருளைக்கிழங்கையும் எப்படி சாப்பிட. என்ன பண்ணுவது. கடலுக்குள் இறங்குவதென்று முடிவான பிறகு பின் வாங்க முடியுமா?
அடடா முதலில் உருளைக்கிழங்கை வெந்து வச்சுக்கணுங்கறது தெரியாமப் போயிடுத்தே என்று பிறகு தான் தெரிந்தது. சரி என்ன பண்ண, சாதம் ஆகும் வரை பொறுத்திருக்கலாம் என்றிருந்தோம். பத்து நிமிடங்களாகியும், விஸில் வராததால் எனக்கு லேஸாக சந்தேகம் வந்தது. இருந்தாலும் அடுப்பு பக்கம் போக பயம். விஸில் சத்தம் கேட்காமல் குக்கரைத் திறக்கக் கூடாது என்பது எங்கேயோ படித்த ஞாபகம் வேறு. நண்பன் குக்கர் மனுவலை தோண்ட ஆரம்பித்தான். "என்னடா தேடற" என்றதற்கு, "எவ்வளவு விஸில் வந்த பிறகு அடுப்பை அணைக்க ஏதாவது போட்டுருக்கா என்று பார்க்கிறேன் என்றேன். இந்த விபரமும் இல்லை. இரண்டு அபராதங்களுக்காக குக்கர் கம்பெனி மீது கேஸ் போட்டிருக்கலாம். சே. என்ன மனுவல் இது. அரை மணி நேரம் கழித்தும் விஸில் வராததால், அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து திறந்தால், அரிசி இருக்கும் இடமே தெரியாமல் போய் எல்லாம் ஒரு பெரிய மாவுக் குழம்பாகி இருகிப் போயிருந்தது. அதுவும் குக்கரின் விளிம்பு வரை. ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டோ ம். இப்படியாகிவிட்டதே என்று சிரிக்கவா, பசி வயிற்றைக் கிள்ளுகிறதே என்பதை நினைத்து அழவா என்று தெரியாமல் முழித்தோம். அப்படியும் நான் விடவில்லை. ஒரு spoon எடுத்து அந்த மாவையும் தின்ன ஆரம்பித்தேன். நமக்குத்தான் வெறும் சாதம் பிடிக்குமே. அதுவும் பாஸ்மதி அரிசின்னா சும்மாவா? ஆனா எவ்வளவு தான் சாப்பிட. இரண்டு வாய்க்குப்பிறகு ஒன்றும் உள்ளே போகவில்லை. வேறு வழியில்லாமல் எல்லாத்தையும் ஒரு plastic பையில் போட்டு குப்பையில் போட்டு விட்டு, ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் சாயாவும் குடித்துவிட்டு படுத்துக் கொண்டோம்.
இந்த சம்பவம் நடந்த பிறகும், சமையல் செய்யும் ஆர்வம் மட்டும் எனக்கு இன்னும் குறையவேயில்லை. என் சமையல் ருசியாக அமைவதும் இல்லை ;-((
எனது சமையல் அனுபவங்கள் (சமையல் என்ற பெயரில் நான் செய்த / செய்து கொண்டிருக்கும் சர்க்கஸ் கோமாளித்தனங்கள்) பற்றி எழுதவேண்டும் என்றால், ஒரு மெகா சீரியலே எடுக்கலாம். இருந்தாலும் என்னுடைய maiden சமையல் அனுபவத்தை நினைத்தால் இன்றும் விழுந்து விழுந்து சிரிப்பேன்.

September 08, 2005

விமர்சையான விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி திருநாள் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது என் அப்பா ஊரான கல்லிடைக்குறிச்சியில் நடக்கும் பத்து நாள் திருநாள் தான். எங்கள் தெருவில் இருப்பதென்னவோ சிறியதொரு விநாயகர் கோயில் தான். டுண்டி விநாயகர் என்று பெயர். தெருவின் பெயரே தொந்தி விநாயகர் தெரு தான். ஆனாலும் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பத்து நாளும் தெருவே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். பத்தாவது திருநாளாக விநாயகர் சதுர்த்தியன்று திருவிழா நிறைவு பெறும்.
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒருத்தர் கட்டளைதாரராக இருப்பார். தினமும் காலையில் கணபதி ஹோமம் நடக்கும். பிறகு ஜபங்கள் தொடரும். நானும் சில நாள் ஜபத்திற்குச் செல்வதுண்டு. ஜபம் செய்தவற்களுக்கு தட்சிணை தருவார்கள். (நான் தட்சிணை ஏதும் வாங்கக்கூடாது என்று அம்மா கட்டளையிடுவாள்) பிறகு சுவாமிக்கு அபிஷேகமும் தீபாரதனையும் நடக்கும். நான் சிறுவனாக இருந்த காலத்தில் சேண்டியை எடுத்துக்கொண்டு தெரு முழுவதும் சென்று அபிஷேகம் நடக்கப்போகிறது, எல்லோரும் வாருங்கள் என்று தண்டோரா போடுவோம். சில சமயம் நானும் தண்டோரா கோஷ்டியோடு சென்றதுண்டு. இப்போதெல்லாம் மைக்கிலேயே அறிவிக்கிறார்கள்.
பிறகு சர்க்கரைப் பொங்கலும் பஞ்சாமிர்தமும் பிரசாதமாகத் தருவார்கள். பிரசாதம் விநியோகம் போது ஒரு பெரிய அடிபுடி சண்டையே நடக்கும். யாரு நிறைய தடவை பிரசாதம் வாங்குகிறார்கள் என்று சிறுவர்கள் இடையே ஒரு போட்டியே நடக்கும். நான் சக்கரைப்பொங்கல் மட்டும் வாங்கிக் கொள்வேன். பஞ்சாமிர்தம் பிடிக்காது. எல்லோருமாக வாய்க்காங்கறைக்குச் சென்று அங்கு மதில் படியில் உட்கார்ந்து சாப்பிடுவோம்.

மாலையில் சுவாமி புறப்பாடு இருக்கும். மேள தாளங்கள் முழங்க குழந்தைகள் ஆலவட்டம் பிடிக்க, சுவாமி தெருவை ஒரு சுற்று சுற்றி வருவார். நான் சிறு பிள்ளையாக இருந்த போது நான் தான் தீவட்டி பிடிப்பேன் என்று அடம் பிடிப்பேன். நான் தீவட்டி ஏந்திச் செல்வதை என் தாத்தா பார்த்தால் (என்னைத்தவிர) எல்லோருக்கும் திட்டு விழும் என்பதால், எனக்கு தீவட்டி கொடுக்க மாட்டார்கள். தீவட்டி கிடைக்கவில்லையே என்று பலமுறை ஏங்கியிருக்கிறேன். என் நண்பர்களுடன் கொடிச் சண்டை போடுவோம். இரவு தீபாரதனைக்குப் பிறகு பெண்களும் சிறுமிகளும் கோவிலை கழுவிவிட்டு மறுநாள் விசேஷத்திற்குக் கோலம் போடுவார்கள். பருவ வயதை அடைந்த பின் சில பெண்களை கலாய்த்த அனுபவமும் உண்டு. ஒரு படை இளநீர் வெட்ட கிளம்பும். எனக்கு மரம் ஏறத்தெரியாதலால், கீழேயே நிற்பேன். வெட்டும் இளநீரில் சரிபாதி பங்கு எங்களுக்கு. மற்றவை தான் பிள்ளையாருக்கு.

ஒன்பது நாள் திருநாள் முடிந்து பத்தாவது திருநாளாக சதுர்த்தித்திருநாள் நடைபெறும்.
சதுர்த்திக்கு முந்தைய நாள் இரவு தெருவில் எந்த பையனும் தூங்க மாட்டான். எல்லோரும் தோரணம் கட்டுவோம். வீதி வீதியாக சென்று சுவரொட்டிகள் ஒட்டுவோம். அதிலும் "விளம்பரம் செய்யாதீர்" என்று எங்கு ஒட்டியிருக்கிறதோ அங்கு தான் ஒட்டுவோம். சில வீடுகளில் சுக்குமல்லிக் காப்பி, தேனீர், உப்புமா, புளியோதரை தயிர் சாதமெல்லாம் தருவார்கள். இது போததென்று ஏதாவது தின் பண்டமும் தருவார்கள். இந்த கொண்டாட்டங்களுக்காகவே சதுர்த்திக்கு முந்தைய நாள் அங்கு கழிக்க வேண்டும். ஓவ்வொருவர் வீட்டிலும் போட்டிருக்கும் கோலங்களைக் காண கணகள் இரு கோடி வேண்டும்.
காலையில் கணபதி ஹோமம் ருத்ர ஏகாதசி பிறகு தாரா ஹோமம், அப்புறம் சுவாமிக்கு அபிஷேகமும் தீபாரதனையும் நடைபுபெறும்.

மாலையில் தெருவே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். வீதி முழுவதும் மின் விளக்கு பொருத்தியிருப்பார்கள். பதினெட்டுதெருவிலுமுள்ள மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு வருவார்கள். அவர்களை பார்ப்பதற்காகவே நாங்களெல்லாம் திண்ணையில் உட்கார்ந்து வம்படிப்போம். என்ன Brigade Road என்ன Forum. அன்று வரும் ஃபிகருங்களுக்கு ஈடு இணையுண்டா. கோவில் கும்பத்திற்கு அபிஷேகமும் பூஜை நடக்கும். சஹஸ்ரநாம ஜபத்திற்க்குப்பின் ஒரு நீண்ட பிரேக். இரவு பத்து மணியளவில் சுவாமி புறப்பாடு. இம்முறை எல்லா தெருவையும் சுற்றி வருவார். வெகு ஜோராக அலங்காரம் இருக்கும். இந்த சப்பரம் தள்ளுவதே ஒரு பெரிய வைபவம். எல்லா தெருவையும் சுற்றி வந்து சுவாமி இறங்குவதற்கு எப்படியும் இரண்டு மணியாகிவிடும். சுவாமி வந்திறங்கியபின், நாதஸ்வரக்காரர் ஒரு சூப்பர் பாட்டு இசைப்பார். (கணேசன் இசைக்கும் 'நாத முடி மேலிருக்கும் நாகப்பாம்பே'யை கேட்டால் நமக்கே படமெடுத்து ஆடத் தோன்றும்). சுவாமியை உள்ளே வைத்து விட்டு எல்லோருக்கும் பிரசாதம் குடுப்பார்கள். அதிலும் ஸ்பெஷல் புளியோதரை மற்றும் பானகம். சுவாமி கூட வந்தவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். அதை வாய்க்கால் படியில் போட்டு சாப்பிட்டு விட்டு உறங்கி மறு நாள் எழுந்தோமானால், ஊருக்குத் திரும்ப மனதே இருக்காது. பத்து நாளும் ஜே ஜே யென்று இருந்து விட்டு தெருவே அழுத முகமாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் கனத்த இதயத்தோடு திரும்பி ஊருக்கு வருவேன்.
பத்து நாளும் சதுர்த்தி திருநாளை கல்லிடையில் கழிக்க வேண்டும் என்ற நெடு நாள் ஆசை என்று நிறைவேறப்போகிறதோ தெரியவில்லை.

August 25, 2005

கால வெள்ளோட்டம் கொண்டு சென்றவை

போன வெள்ளிக்கிழமை ஆவணி அவிட்டம். வயசு பசங்க கல்லூரிக்குக் கல்தா கொடுக்கும் நாள். பொண்ணுங்கள்லாம் ராக்கிய எடுத்துண்டு வந்துட்டாங்கன்னா. அதுக்காக எஸ்கேப் ;-))
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஆவணி அவிட்டத்திற்கு என் அப்பாவின் சொந்த ஊரான கல்லிடைக்குறிச்சிக்குப் போவது வழக்கம். என் தாத்தா வீடு அங்கிருந்ததால் ஒவ்வொரு விசேஷத்திற்கும் அங்கு சென்று விடுவோம். அதற்கு முன் கல்லிடைக்குறிச்சி பற்றி ஒரு சிறு விளக்கம். மேற்குத் தொடற்சி மலையின் அடியில், அம்பாசமுத்திரத்திற்கருகில் தாமிரபரணி கொஞ்சி விளையாடியோடும் ஒரு பெரிய கிராமம். ஒரு காலத்தில் பெரும்பாலும் அந்தணர்களே வசித்து வந்தனர். பதினெட்டு அக்கிரஹாரங்கள். இங்கு தான் சாமி மற்றும் Gentleman படங்களின் பல காட்சிகள் எடுக்கப்பட்டன. அண்ணாமலை சீரியலும் தான். எங்கள்
வீட்டிற்கு முன்பாக ஒரு பெரிய வாய்க்கல் போகும். அதில் தான் நீச்சல் கற்றுக் கொண்டேன். இப்படியாக, எழில் மிகுந்த ஊரில் ஆவணி அவிட்டம் படு ஜோராக நடக்கும்.
பிராமணனாகப் பொறந்தவன் தினமும் மூன்று வேளையும் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும் என்பது
ஐதீகம். ஆனால் இன்று 99 விழுக்காடு மக்கள் அதைச் செய்வதில்லை. (என்னையும் சேர்த்துத்தான்). பூணூல் போடும் போதே, "நித்ய கர்ம அனுஷ்டான யோக்யதா சித்யர்த்தம்" என்று சொல்லித் தான் போடுகிறார்கள். இன்று நாமெல்லாம் நித்ய கர்மங்களையும் செய்வதில்லை, யோக்கியமாகவும் இருக்கிறோமா என்றும் தெரியவில்லை. அதனால் ஆவணி அவிட்டம் ஒரு நாளாவது எல்லாம் செய்வோமே என்று தவறாது எல்லோரும் பட்டு வேஷ்டி கட்டிக் கொண்டு கையில் பஞ்ச பாத்திரம் எடுத்துக்கொண்டு எங்கள் தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு வந்து விடுவர்.
முதலில் காமோகாரிஷீது மந்திரத்தில் ஆரம்பிக்கும். வாத்தியார் 1008 சொல்லச் சொல்லுவார். ஆனால் அலுவலகம் செல்லுவோர், 108 போதுமே மாமா என்று சொல்லி விட்டு அதையும் சொல்லாமல் நழுவி விடுவர். சில பிரம்மச்சாரி பிள்ளைகள் சமிதாதானம் செய்வார்கள். தினமும் செய்ய வேண்டிய எல்லாம், அன்று ஒரு நாள் மட்டும் கிரமமாக நடக்கும். அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு break. வாத்தியார் மற்ற தெருக்களுக்கெல்லாம் போய் விடுவார். பிறகு 11 மணியளவில் திரும்பி வருவார். வந்த பிறகு பிரம்ம யக்ஞம். "என்னப்பா எல்லோரும் மாத்தியாந்நிகம் பண்ணியாச்சா" என்பார். முக்கால் வாசி பேர் பண்ணியிருக்க மாட்டார்கள். ஆனால் எல்லோரும் "ஓ பண்ணியாச்சே" என்று தலையாட்டிவிடுவார்கள். என் அப்பாவிற்கு நான் தான் மாத்தியாந்நிகம் கற்றுத் தருவேன். "பிள்ளை சொல்லித் தந்து மந்திரம் சொல்லறேளே; வெக்கமா இல்லையா" என்று அம்மா கிண்டல் செய்வாள். அப்பா இதற்கெல்லாம் அசரும் ஆசாமி இல்லை. "நீண பாட்டுக்கு மந்திரத்தை சொல்லிண்டே போ. நான் சொல்லற வரைக்கும் வெயிட் பண்ணாதே" என்று instruction கொடுத்து விடுவார்.
பிறகு மஹா சங்கல்பம் நடக்கும். இது ஒரு அரை மணிண நேரம். எங்கள் வீட்டு கொட்டடியில் (அக்கிரஹாரங்களில் உள்ள வீடுகளின் முதல் அறையை இப்படித் தான் அழைப்பார்கள்) தான் இது நடக்கும்.
பிறகு வாய்க்காலில் சென்று ஸ்னானம் செய்து மீண்டும் பட்டாடை உடுத்தி பூணூல் மாற்ற வேண்டும். 10 நிமிடத்தில் எல்லாரும் வந்துடணும் என்று வாத்தியார் கட்டளையிடுவார். நாங்க வயசுப் பசங்க அப்போத் தான், தண்ணீரில் தொட்டுப்பிடிச்சு விளையாடுவோம்.
குளித்து முடித்து காண்டரிஷித் தர்ப்பணம் முடிந்து கோவிலில் கூடுவோம். கோவிலில் இன்னும் பல மந்திரங்கள் சொல்லி, சுவாமிக்கு தீபாரதனை நிவைத்தியம் எல்லாம் முடிந்து வீட்டிற்கு வரும் போது 2.30 ஆகிடும். வீட்டிற்கு வந்து பெரியவா காலிலெல்லாம் விழுந்து ரூபாய் வாங்குவோம். தெருவில் நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று அவர்கள் அம்மா அப்பா காலிலெல்லாம் விழுந்து ஒரு 10-15 ரூபாய் சேர்த்து விடுவேன். என் தங்கைக்கு காதிலிருந்து புகையா வரும். நமக்கும் இந்த மாதிரி ஆவணி அவிட்டம் இல்லையே என்று. அப்புறம் தான் சாப்பாடு.

ஆவணி அவிட்டத்திற்கும் கோமணத்திற்கும் என்ன சம்பந்தமோ தெரியாது. எங்கள் ஊரில் ஆவணி அவிட்ட தினத்தன்று ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று கோமணத்துணி வாங்குவோம். அதுவும் எப்படி, ஒரு பாடுப்பாடி.
ஆவணி அவிட்டம் கோமணம்
அம்பி பொறந்தா சோபனம்
அங்கிச்சி பொறந்தா கல்யாணம்
அக்கா பொறந்தா சீமந்தம்
தம்பி பொறந்தா பூணல்.

இந்த பாட்டை இப்போ நினைத்துப்பார்த்தால் சிரிப்பு தான் வருது. அக்கா எப்படி இனிமேல் பிறக்க முடியும். ஆனாலும் பாட்டில் ஒரு வீச்சு இருக்க வேண்டும் என்பதற்காக வைத்தார்களோ தெரியாது. இப்படி பாடினால் தான் சில மாமாக்கள் கோமணத் துணி தருவார்கள். இந்தத் துணி எங்கள் தெருவிலிருக்கும் பிள்ளையார் கோவில் சதுர்த்தி விசேஷத்தின் போது தீவட்டி கொளுத்துவதற்காக. பிள்ளையாருக்கு ஏன் தான் இப்படி அழுக்கு துணியில் தீவட்டி கொளுத்துகிறார்களோ???? இப்படி ஒரு சிறு விசேஷம் கூட மிக விமர்சையாக நடக்கும்.

மறு நாள் காயத்திரி ஜபம். பிரம்மச்சாரி பிள்ளைகள் ஹோமம் வளர்த்து 1008 சமித்துகளை காயத்திரி மந்திரம் ஜபித்து ஒவ்வொன்றாக நெய்யில் முக்கி போட வேண்டும். இப்படிச் செய்தால் விசேஷம். நான் ஒழுங்காக செய்கிறேனா என்று பார்ப்பதற்கு என் தாத்தாவும் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வார். இதில் ஒரு பெரிய கூத்தே நடக்கும். யாருக்கு 1008 சமித்துகளை ஒவ்வொன்றாக போடுவதற்கு பொறுமை. அவர் அந்தப் பக்கம் எங்காவது நகரும் போது ஒரு பெரிய கட்டை, அப்படியே நெய்யில் முக்கி போட்டு விடுவேன். (எனக்கு காயத்திரி என்று பெயர் கொண்டவளே மனைவியாக வந்தது இதன் பலன் தானோ என்னவோ. இந்த வருடம் காயத்திரி காயத்திரி என்று ஜபித்தாயா என்று அம்மா கிண்டல் செய்தாள்)

இப்போது திரவியம் தேடி பெங்களூர் வந்த பிறகு 1 மணி நேரத்திற்குள் ஆவணி அவிட்டம் முடிந்து விடுகிறது. வீட்டிலேயே மந்திரம் சொல்லி பூணூல் மாற்றிக்கொள்கிறேன். அப்படியே கோவில்லுக்குச் சென்றாலும் 1 மணி நேரத்தில் மந்திரம் சொல்லி வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். சென்னையிலிருந்து ஆவணி அவிட்ட மந்திர புத்தகத்தை அனுப்புமாறு என் தங்கையிடம் சொல்லியிருந்தேன். ஆனால் வந்ததோ இரண்டே பக்கத்தில் அடக்கமாக இருந்த சில மந்திரங்கள். பிரம்ம யக்ஞத்தை விழுங்கி விட்டார்கள். மஹா சங்கல்பத்தில் பாதி மந்திரத்தைக் காணோம். சமிதாதானம் பற்றி ஒன்றுமே போட வில்லை. வருடத்திற்கொரு நாள் அனுஷ்டானங்களை முழுதாக செய்யலாம் என்றால், நகரத்தில் இருக்கும் வாத்தியார்களே பாதி மந்திரத்தை விழுங்கி விடுகிறார்கள். "ஆதித்யம் தர்ப்பயாமி" என்று உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒருவன் அர்க்க்யம் விடுவதால் தான் காலையில் ஆதவன் உதயாமாகிறான், மாலையில் மங்குகிறான் என்று வேதங்கள் கூறுகின்றன. அனுஷ்டானங்களையும் பழக்கங்களையும் நாளுக்கு நாள் மறந்து வருவதால் கலியவதாரம் சீக்கிரத்திலேயே நடந்துவிடும் போலிருக்கிறதே.

August 22, 2005

நூலுக்குள் நுழைந்தேன் - 2

எனது முந்தைய பதிப்பான "நூலுக்குள் நுழைந்தேன்" பதிப்பைப் படிக்க வில்லையென்றால், அதை முதலில் படித்து விட்டு பிறகு இதைப் படிக்கவும்.

ஒரு புத்தகத்தைப் பெருவாரியான மக்களைப் படிக்க வைப்பதென்பது சாமன்னியப்பட்ட விஷயமல்ல. (அது ஒரு சாதாரண விஷயமாக இருப்பின் நான் எவ்வளவோ பெரிய கதாசிரியனாகியிருப்பேன் ;-))) )
ஆனால் ஒரு புத்தகத்தில் தன்னையே ஐக்கியப் படுத்திக் கொள்ளச் செய்தலென்பது அதை விடவும் மிக கடுமையானது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அப்படி ஒரு மாபெரும் சாதனையைத்தான் அமரர் கல்கி தனது சில கதைகள் மூலம் செய்துள்ளார். அதிலும் பொன்னியின் செல்வன் புத்தகம் எவரையும் கதையினுள் இழுத்துக் கொள்ளும் வல்லமை பெற்றது. ஒவ்வொரு கதா பாத்திரமும் நம் முன் பேசுவது போல் தோன்றும்.
இதைப் படித்த எவருமே தன்னையும் அதில் ஒரு கதாபத்திரத்தோடு இணைத்துப் பார்க்காமல் இருந்ததில்லை. "நான்லாம் அப்படி இல்லப்பா" என்று யாராவது சொன்னால் அவர்கள், ஒரு மிக அற்புதமான வினோதமான அனுபவத்தை இழந்துவிட்டார்கள் என்று தான் சொல்லக் கூடும்.
என்னை மிகவும் கவர்ந்த கதாபத்திரம், குந்தவை. நான் வந்தியத்தேவனாக மாறியதால், அவன் காதல் வயப்பட்டவள் மேல் எனக்கும் காதல் ஏற்பட்டது. அந்த கதை நடந்த இடத்துக்கெல்லாம் செல்ல வேண்டும் போன்றிருந்தது. கதையில் வரும் கதாபத்திரங்களோடு நாமும் பேச மாட்டோமா என்ற ஆவல் ஏற்பட்டது.
ஒரு முறை கும்பகோணம் செல்லும் வழியில் தஞ்சாவூரைக் கடக்க நேரிட்டது. அப்போது காவேரியாற்றங்கரையைக் கடிக்கையிலே, எனது குந்தவையும் இவ்விடத்தில் நீராடியிருப்பாளோ. இந்த நீராழி மண்டபத்துக்கு வந்திருப்பாளோ என்றெல்லாம் என்னை எண்ண வைத்தது. குந்தவையைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுபவர்கள் "காதல் கொண்டேன்" பதிப்பினைப் படிக்கவும்.


கும்பகோணம் சென்ற பிறகு பேருந்துவில் பயணம் செய்கையிலே அங்கு பழையாறை என்ற ஊர் இருக்கிறதா என்று வினவினேன். (பழையாறையை சுந்தரபாண்டியன் 1600ல் இடித்து தரைமண்ணாக்கிவிட்டான் என்று பிற்பாடு தெரிய வந்தது) இப்படி ஒவ்வொரு இடத்தையும் பார்க்கையிலே பொன்னியின் செல்வன் கதையில் இந்த இடங்களில்லாம் என்ன நடந்திருக்கும் என்று எண்ண வைத்தது.

புத்தகம் படித்து முடித்த பிறகு என்னுள் நடந்திருக்கிறதென்றால், புத்தகம் படிக்கும் போது எவ்வளவு பித்து பிடித்தவன் போல் இருந்திருப்பேன். (நீ இப்பவும் அப்படித் தான் இருக்கேடா!!!)
புத்தகத்தின் கடைசி பாகத்தை ஒரே இரவில் படித்து முடித்தேன். அதுவும் இப்புதகத்தை படிக்கணினியில் (லப் டாப்) வைத்து pdf முறையில் படித்தேன்.

படித்த பிற்பாடு யாருடானாவது இதைப் பற்றி பேச முடியாதா? இதில் வரும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பை யாருடனாவது பகிர்ந்துகொள்ள முடியாதா என்றெல்லாம் ஏங்கியதுண்டு. அப்போது தான் வலைதளத்தில் பொன்னியின் செல்வனுக்கென்றே ஒரு யாஹூ குழுமம் இருப்பது தெரியவந்தது. இக்குழுவில் தற்போது 500 மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் என்னைப் போல் பொன்னியின் செல்வனைப் படித்து பித்து பிடித்தவர்கள்.

உங்களுக்கும் இப்புதகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறதா? எனக்கு ஒரு மினஞ்சல் அனுப்புங்கள். நான் எல்லா பாகங்களையும் pdf முறையில் அனுப்பித்தருகிறேன். நீங்களும் அந்நூலுக்குள் நுழையுங்கள்.

August 17, 2005

நூலுக்குள் நுழைந்தேன்

சிந்து பைரவி படத்தில் சுஹாசினி பேசும் ஒரு வசனம் இது.
"நாமளா பாடறது ஒரு சுகம். நாமளா கேக்குறது ஒரு சுகம். ஆனா, சங்கீதத்தப் பத்தி நாமளா பேசுறது இன்னோரு விதமான ஒரு சுகம்."
அது மாதிரி நாம் விரும்பி படிக்கும் நூல்கள் பற்றி யாருடனாவது விவாதம் செய்வது ம் ஓர் இனிமையான அனுபவம். நான் மிகவும் ரசித்துப் படித்த சில புத்தகங்கள்:

எனக்கு ஞாபகம் வந்து நான் படித்த முதல் நாவல் சிட்னி ஷெல்டன் எழுதிய "த ரேஜ் ஆஃ ஏஞ்சல்ஸ்" (The Rage of Angels) படிக்கும் போதே இது தமிழில் மக்கள் என் பக்கம் கதை தான் என்று புரிந்து விட்டது. ஸாரி,மக்கள் என் பக்கம் படம், இந்த கதையின் அடிப்படையில் தான் எடுக்கப் பட்டது என்று தெரிந்து போய் விட்டது. நான் படித்ததிலேயே இது தான் சிறந்தது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் எனக்கு நாவல்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியதில் சிட்னி ஷெல்டனின் பங்கு அதிகம் என்பதாலும் இது என்னுடைய கன்னி நாவல் என்பதாலும் இதைச் சொல்கிறேன். சிட்னி ஷெல்டன் பற்றி இரண்டொரு வாக்கியம் எழுதாவிடில் நாவல் படிக்கும் நல்லுலகம் என்னை எந்த ஜென்மத்திலும் மன்னிக்காது. கதை சொல்லும் விதத்திலும் கதையைக் கொண்டு செல்லும் விதத்திலும் இவருக்கு இணை வேறொருவர் கிடையாது என்றால் அது மிகையாகாது. அதன் பின் இவர் எழுதிய பெரும்பாலும் எல்லா புத்தகங்களும் படித்துவிட்டேன். அதில் நான் மிகவும் ரசித்துப் படித்தது "இஃ டுமாறோ கம்ஸ்" (If Tomorrow Comes) குங்குமம் விளம்பரத்தில் வருவது போல் "பக்கத்துக்கு பக்கம் வித்தியாசம்; படிக்கப் படிக்க ஸ்வாரஸ்யம்" என்று. அப்படித் தான் இதுவும் இருக்கும்.

இவருக்குப் பிறகு நான் விரும்பிப் படித்த நாவலாசிரியர் ஜெஃப்ரி ஆர்ச்சர். இவரது நாவலான் "கேன் அண்டு ஏபல் (Kane And Abel)" தான் என்னை மிகவும் கவர்ந்தது. முதல் பாகம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாகம் முதல் கியர் மாறிவிடும். இதன் தொடர்ச்சியாக "புராடிகல் டாட்டர் (Prodigal Daughter)" மற்றும் "ஷல் வி டெல் த பிரஸிடென்ட் (Shall We tell the President)" என்ற இரண்டு நாவல்கள் வந்தாலும் கேன் அண்டு ஏபல் போல் இல்லை.

இதன் பின் நிறைய எழுத்தாளர்கள் நாவல்கள் படித்தாலும் சமீபத்தில் இர்விங் வாலேஸ் மாதிரி யாராலும் குஜாலாக எழுத முடியவில்லை. குஜால் நாவல்கள் படிக்கணுமா? த செகண்டு லேடி(The Second Lady) மற்றும் த ஃபேன் கிளப் (The Fan Club) படிக்க வேண்டும். ஃபேன் கிளப்பில் ஸ்வாரஸ்யம் கிடையாது. நூறு சதவிகீதம் குஜால் மட்டர் தான். (பெண்கள் இதைப் படிக்க வேண்டாம் என அறிவுறைக்கப் படுகிறார்கள்).

சொல்ல மறந்து விட்டேனே, டான் பிரவிணின் ஒவ்வொரு நாவலையும் மூன்றே நாட்களில் படித்திருக்கிறேன். மனுஷன் இஷ்டத்துக்கு காதுல பூ சுத்தினாலும் நல்லாத்தான் சுத்துறாரு. அதுவும் ஏஞ்சல்ஸ் அன்டு டெமன்ஸ் ரொம்ப ஓவர். இந்தாளு பத்தி பேசுறதுக்கு இந்த தமிழ் போதும்.

என்ன தான் புத்தகங்கள் படித்தாலும், அவையனைத்தும் ஒரு முறை படித்து விட்டு தூக்கிப் போட்டு விடும்படியானவை தான். எதுவுமே என்னை அதில் ஐக்கியப்படுத்தியதில்லை. இம்மதிரியான புத்தகங்களைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் ஒற் அழகான வார்த்தை உண்டு.
"Books of the Hour" அந்த நேரத்தைக் கழிப்பதற்காக இவை உதவுகின்றன.
மீண்டும் மீண்டும் அந்த புத்தகத்தைப் படிப்பதற்கான உந்துதல் இருந்ததில்லை. அதில் நாமே ஒரு கதா பாத்திரமாக மாறியதில்லை. ஆனால் அந்த அதியசமும் நிகழ்ந்தது.
அந்த கதையில் நானும் ஒரு கதாபாத்திரமாக என்னை நினைத்துக் கொண்டேன். சந்திரமுகி மாதிரி. ஒவ்வொரு முறை அந்த கதாபாத்திரம் வரும் போதும், அதில் என் பிரதிபிம்பத்தைப் பார்த்தேன். அவன் பேசினால், நான் பேசுவது போலிருக்கும். அவன் சண்டை போட்டால் நானும் சண்டை போடுவடு போலிருக்கும். பெண்களிடம் நூலு விட்டால், நான் கடலை போடுவது போலிருக்கும். அந்த நாவல்.......

August 11, 2005

பரிணாம வளர்ச்சியினால் வழக்கொழிந்த சொற்கள்

என் மனைவிக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்பதாலும், இதைப் படிக்கும் எவருக்கும் என் மனைவியின் மின்னஞ்சலோ நடமாடும் முண்டக்கூவி (mobile phone) எண் தெரியாது என்ற தைரியத்தால் தான் இதை எழுதுகிறேன். இதை படித்துவிட்டு என் மனைவியிடம் என்னைப் போட்டுக் கொடுப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

எனது பழைய அலுவலகத்தில் தோழியொருத்தி எனக்கு சாபமிட்டாள். "தமிழே தெரியாத ஒரு பொண்ணோடத் தான் மாரடிக்கப் போறே" என்று. என்ன நினைத்து சாபமிட்டாளோ, அவளது சாபம் பாடி பலித்து விட்டது. என் மனைவியின் சொந்த ஊர், கடவுளுக்கு சொந்த ஊரான கேரளவிலுள்ள ஆலைப்புழை நகரம். பெண் பார்க்கச் சென்ற தினத்தன்று அவளிடம் கேட்ட முதல் கேள்வியே, தமிழ் தெரியுமா அன்பது தான். அதுவும் ஆங்கிலத்தில் தான் கேட்டேன். தெரியுமென்று தமிழில் விடை வந்த பிறகு தான் நிம்மதி பெருமூச்சு வந்தது. இதற்கு முன்னமே ஒரு வருடம் ஒரு பாலக்காட்டுவாசி என் சக அறையாளனாக இருந்தான். (எலேய், இதே ரேஞ்சுல புரியாத வார்த்தையெல்லாம் உபயோகப் படுத்தினே அரப்படப்போர"ன்னு யாரோ சொல்லுவது எனக்கு கேட்கிறது. ரூம் மேட் என்பதைத்தான் அப்படி விளித்தேன்(இது மெய்யாலுமே தமிழ் வார்த்தை தான். ஆனால், இதை மலையாளத்தில் தான் உபயோகிக்கிறார்கள்). அவன் பேசும் தமிழை நிறைய கேலி செய்ததுண்டு. வீடு மாற்றும் போது அவன் என்னிடம் கேட்டான், "இந்த சாமானையெல்லாம் எப்படி கடத்தப் போறாய்" என்றானே பார்க்கலாம். நானும் எனது இன்னொரு கோவை நண்பனும் விழுந்து விழுந்து சிரித்தோம். ஆனால், பெண் பார்த்த தினத்தன்று எனக்கு மனைவியாக வரப்போகிறவள் பேசிய தமிழ் அப்படியெல்லாம் எந்த ஒரு மலையாள சாயலுமே இல்லை. (மலையாள சாயலில் தமிழ் பேசினால் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்பதற்காக special training எடுத்துக்கொண்டாளா என்று தெரியவில்லை).

ஒரு வழியாக திருமணமும் இனிதே அரங்கேறியது. திருமணம் கழிந்து மறுவீடு சென்ற போது தான் மொழிப்பிரச்சினை ஆரம்பித்தது. நான் ஏதோ சொல்லப் போக, என் மனைவி, "அது அப்படி அல்லா" என்றாள். எதற்காக அல்லாவை அழைக்கிறாள் என்று திருதிருவென முழித்தேன். பிறகு தான் தெரியவந்தது, "அது அப்படி இல்லை" என்பதைத்தான் "அல்லா" என்றிருக்கிறாள்.
பிறகு அவளது தங்கைகளிடம் பேசிக்கொண்டிருக்கையில், "ஒன்றும் சாரமில்லை" என்றாள். "சாரமா", நமக்கு தெரிந்த வரை சாரம் என்றால் லுங்கி தானே, இங்கு யாரும் லுங்கி யாரும் அணியவில்லையே, எதற்காக இவள் சாரமில்லை என்கிறால் என்று எனக்கும் ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது பரவாயில்லை என்பதை சாரமில்லை என்றிருக்கிறாள். இது மலையாளம் இல்லை, தமிழ் தானென்றும் சொன்னாள். இன்னும் இப்படி எவ்வளவு புரியாத தமிழை கேட்டுக் குழம்பபோகிறோம் என்று நொந்து கொண்டேன்.

காரை எடுக்கச் சென்ற போது சாவியைக் கொடுக்குமாறு கேட்டேன். ஏதோ சேட்டனை கூப்பிட்டு, "கார் தார்க்கோல் கொண்டா" என்றதும் அதிர்ந்தே போய் விட்டேன். எது காருக்கு தார்க்கோலா???? எங்கள் ஊரிலெல்லாம், பெரிய பிரம்மாண்ட தேரோடு வடத்தை இணைப்பதற்கு ஒரு பெரிய கம்பி உபயகப்படுத்துவார்கள். இல்லை மாட்டு வண்டியில் சக்கரத்தில் இருக்குமே, அதற்குத்தான் தார்க்கோல் என்பார்கள். இவளென்னடா, கார் சாவியைக் கேட்டால் தார்க்கோல் கொண்டு வரச்சொல்கிறாளே, எதைக் கொண்டு வரப்போகிறார்களோ, என்று நினைக்கையில், நல்ல வேளையாக சாவியை கொடுத்தார்கள். இப்படியாக பல புதிய வார்த்தைகள் உபயோகத்திலிருப்பதைக் கண்டு நான் அவ்வப்போது என் மனைவியை கிண்டல் செய்வதுமுண்டு.
தரையில் புழுதி / தூசி இருக்கிறது என்று சொல்ல மாட்டார்கள் - பொடி இருக்கிறது என்பார்கள். நூலாம்படை என்பது அவள் அகராதியிலேயே கிடையாது.அதை வலை என்பாள். துண்டை தோர்த்து என்பாள். போர்வையை பொதப்பு என்பாள்.

தோழி விட்ட சாபம் ஞாபகம் அவ்வப்போது வரும். முழுவதாக பலிக்காவிட்டாலும் கொஞ்சமாவது பலித்துவிட்டது.

சில நாட்களுக்கு நான் அவளது தமிழை கேலி செய்ததுண்டு. என்னடீ தமிழ் பேசுகிறீர்கள். பாதி புரியவில்லை.
பிறகு ஒரு நாள் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய விகடன் ஒன்றை படிக்கும் போது, அதில் சில வார்த்தைகள் என் மனைவி ஊரில் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் இருந்தன. தமிழ் நாட்டில் நாம் பேசும் தமிழ், பரிணாம வளர்ச்சியினால் பிற மொழிகளிலிருந்தும் சில வார்த்தைகளைக் கடன் வாங்கியிருக்கிறது.
பண்டைய தமிழில் "இல்லை" என்ற ஒரு வார்த்தையே கிடையாது. "அல்ல" என்று தான் இருந்திருக்கிறது. பரவாயில்லை என்ற வார்த்தை பாரசீக மொழியிலுள்ள பாதி வார்த்தை. பாரசீக வார்த்தையான பர்வாஹ்+இல்லை (இது தமிழ்) என்பதைச் சேர்த்து தான் பரவயில்லை என்கிறோம். பாதி என்ற வார்த்தையே தவறு. பகுதி என்பது தான் சரி. பகுதி என்ற வார்த்தை தான் மறுவி பாதி என்றாகிவிட்டது.
சாவி என்ற சொல்லும் வட மொழிச் சொல். அக்காலத் தமிழர்கள் சாவிக்கு பதிலாக தார்க் கோலைத்தான் உபயோகித்திருக்கிறார்கள்.

தமிழின் இந்த பரிணாம வளர்ச்சியினால் எத்தனை வார்த்தைகள் வழக்கொழிந்து விட்டன. இந்த உண்மை அறிந்த பின் என் மனைவி பேசும் தமிழை கேலி செய்வதை நிறுத்தி விட்டேன். இப்போதெல்லாம் என் நாவிலும் அவ்வப்போது அல்லா எட்டிப்பார்க்கிறார். ;-)

August 09, 2005

இசை ஓவியம்

கடந்த வார இறுதியில் ஊருக்குப் போகும் போது, பேருந்துவில் காதல் ஓவியம் படம் பார்க்க நேரிட்டது. (வி.சி.டி.க்கெல்லாம் அம்மா ஆப்பு வச்சப்பறம் இந்த மாதிரி ஹைதர் அலி காலத்து படத்த தான் பஸ்ஸுல போடுறானுங்க). பாரதிராஜா, இளையராஜா வைரமுத்து கூட்டணியில் வந்த படம். படம் என்னவோ தோல்வியிலும் தோல்வி அப்படி ஒரு தோல்வி. ஊர் பேரு தெரியாத ஒரு கதாநாயகன். ஓரிரண்டு படங்கள் மட்டுமே செய்திருந்த ராதா, இது தவிர படத்தில் நிறைய வந்திருப்பது ஜனகராஜ். இவர் எப்போ வந்தாலும் எரிச்சல் தான் வருது. ஹீரோ மொகரக்கட்டையைக் கண் கொண்டு பார்க்க முடியாது. (குருடனாக வரும் காட்சியில் மட்டும் அச்சு அசல் கண் இல்லாதவர் போலவே பண்ணியிருக்கார்). இவரின் குரலுக்காகவே கதாநாயகிக்கு இவர் மேல் காதல் வருகிறதாம். கதாநாயகி தனது பாட்டின் ரசிகை என்பதற்காகவே நாயகனுக்கு அவள் மேல் காதல் வருகிறதாம். அவளைப் பார்த்தது கூட கிடையாது, ஆனால் அவள் கால் கொலுசு சத்தம் மட்டும் தனியாக கேட்குமா. கொலுசை மாற்றினாலும் கிளைமாக்ஸில் அவளது கொலுசு சத்தம் கேட்கிறது. இருந்தாலும் இப்படத்தை முழுதாக பார்த்தேன். (உனக்கு வேற விவஸ்தையே இல்லைடா என்று நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது). இந்த படத்தை 2 மணி நேரம் ஓட்டியிருப்பது இளையராஜாவும் வைரமுத்துவும், எஸ்.பி.பாலசுப்புரமணியம் ஜானகியும் மற்ற பிற பின்னணியில் வாத்தியங்களை இசைத்திருக்கும் கலைஞர்கள்.

சில பாடல்களை legendary என்பார்களே, இப்படத்தில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்தும் அவ்வகையைத் தான் சேரும். பாடல் வரிகளுக்கு வைரமுத்து கொடுத்திருக்கும் அத்தானை உவமைகளும் அதீத கற்பனை வளம். உதாரணத்துக்கு,

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்


என்று ஆரம்பிக்கும் பாடல் செவிகளுக்கு ஓர் இசை விருந்து. காம்போதியில் ஆரம்பித்து, ஆனத்த பைரவியில் சில நேரம் சஞ்சாரம் செய்துவிட்டு மறுபடியும் காம்போதிக்கு வரும் இப்பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு ஃபிகரை வர்ணிப்பது போல் பாடியிருப்பார்.

மற்றொரு பாடல், இளையராஜா, சௌந்தர்ய லஹரியின் முதல் சுலோகத்தோடு ஆரம்பிப்பார்.
அவிஞானாம் அந்தஸ்திமிர மிஹிர ரீப நஹரி
ஜடானாம் சைதன்யஸ்தபஹ மஹரந்த ஸ்ருதிஜரி
என்று இப்பாடல் ஆரம்பிக்கும். இது ஆதி சங்கரர் அம்பிகையின் அழகை வர்ணிக்கும் பாடல்.
ஸ்ருங்கார ரஸத்தை ஆதிசங்கரர் என்னடா, நான் வர்ணிக்கிறேன் பார், என்று வைரமுத்து போட்டி போட்டுக்கொண்டு இவ்வரிகளை எழுதியிருக்கிறார் போல.

நதியில் ஆடும் பூவனம், அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
ஸ்ருங்கார ரஸத்தில் வரிகள் மட்டும் அமைந்தால் போதுமா, அதற்கேற்ப ராகம் வேண்டாமா, தேவகாந்தாரியும் ஹிந்தோளத்தையும் குழைத்துக்கொண்டு இசைஞானி இசை அமைத்திருப்பார். இசை மட்டும் அமைத்தால் போதுமா, என் மாதிரி ஆட்கள் இதைப் பாடினால் எப்படி இருக்கும். அப்படி இருக்கச் செய்யாமல், எஸ்.பி.பியும் ஜானகியும் தனது குரல் வளத்தால் இப்பாடலுக்கு இன்னும் மெருகூட்டியிருக்கிறார்கள். எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காத பாடல். பாடலைக் கேட்டாலே மனம் இதமாகிவிடும்.

ஸ்ருங்கார ரஸம் மட்டும் தானா. அம்மா அழகே உலகின் ஒளியே என்ற பாடலில் பக்தி பெருக்கெடுத்து ஓடுகிறது.

பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ என்ற பாடலில் கடவுளின் மீதே குரோதத்தை வெளிப்படுத்துகிறார் இசைஞானி.
குயிலே எந்தன் கீதங்கள் கேளாயோ என்ற பாடலில் பிரிவும், உச்சகட்டமாக, சங்கீதஜாதிமுல்லை பாடலில் ஆற்றாமையும் வெளிப்படுகிறது. இப்படி ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரஸத்திக்கேற்ப இசையமைத்ததற்கு இசை ஓவியம் என்று பெயரிட்டிருந்தால், இசைக்காகவாவது இன்னும் சில நாட்கள் படம் ஓடியிருக்கும்.

படம் ஃபிளாப் ஆனதால் படத்துடன் பாடல்களும் இன்றைய தலைமுறையினர் நிறைய பேருக்கு தெரியாமல் போனது அவர்களின் துரதிர்ஷ்டம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

பி.கு. ராகங்கள் பற்றிய தகவல்களெல்லாம் என்னுடைய இடைச்செருகல்கள். அவையெல்லாம் எந்தெந்த ராகங்களோ, இளையராஜவுக்கே வெளிச்சம். ;-)

August 04, 2005

மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

முதல் முதலாக அயல் நாட்டுப் பயணம் மறக்க முடியவில்லை
விமானப் பணிப்பெண்ணிடம் வழிந்த வழிசல் மறக்க முடியவில்லை
அருகிலிருந்த சிங்கி பெண்ணிடம் கடலை வறுத்தது மறக்க முடியவில்லை
அவளுக்கு ஆங்கிலம் புரியாமலிருந்தது மறக்க முடியவில்லை
அறைமணிக்கூர் விமானப் பணிப்பெண்ணிடம் பசிக்கிறதென்றது மறக்க முடியவில்லை
ஒரே நாளில் இரண்டு சூர்யோதயம் மறக்க முடியவில்லை
அமெரிக்காவில் கால் வைத்த தருணம் மறக்க முடியவில்லை
ஏர்போர்ட்டில் நண்பனை தொலைந்தது மறக்க முடியவில்லை

5 சென்டுக்கு எவ்வளவு ரூபாய் என்று கணக்கு பார்த்தது மறக்க முடியவில்லை
இலவசமாக காலை உணவு உண்டது மறக்க முடியவில்லை
வீரா தின்ற மாமிசமும் கூட மறக்க முடியவில்லை
பேஸ் பால் விளையாடிய பசங்களை விரட்டிவிட்டு கிரிக்கெட் விளையாடியது மறக்க முடியவில்லை
காரசாரமாக சமைத்த உணவு மறக்க முடியவில்லை
ஆஃபீஸில் அடித்த லூட்டி மறக்க முடியவில்லை
ஐஸ்கிரீம் பார்டி கூட மறக்க முடியவில்லை
மேலாளர் செய்த சாட்டும்(!!!!!) கூட மறக்க முடியவில்லை

அயல் நாட்டு ஃபிகரை பார்க்காதது மறக்க முடியவில்லை
லாஸ் ஏஞ்சல்ஸ் பயணம் மறக்க முடியவில்லை
கப்பிள்ஸ் டிக்கட்டில் இரண்டு ஆண்கள் சென்றது மறக்க முடியவில்லை
ரோலர் கோஸ்டர் ரைடுக்குப் பிறகு நண்பன் எடுத்த வாந்தி மறக்க முடியவில்லை
ஹாலிவுட் பயணம் மறக்க முடியவில்லை
ஜுரஸ்ஸிக் பார்க் ரைடு மறக்க முடியவில்லை
பிச்சைக் காரன் கேட்ட பிச்சை மறக்க முடியவில்லை
என்னடா ஊரு இது, நம்ப ஊரு மேலு என்று பாடிய தினங்கள் மறக்க முடியவில்லை

களையாடிய எங்கள் நெஞ்சில் விளையாடிய தினங்கள் மறக்க முடியவில்லை
ஊருக்கு கிளம்பிய அன்றைய தினமும் மறக்க முடியவில்லை
பசுமை நிறைந்த அந்த நாட்களை என்றுமே மறக்க முடியவில்லை

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா...

நேற்று ஆடிப்பெறுக்கு. அதனால் என்ன என்கிறீர்களா?? பள்ளிக்கூடம் சென்ற காலங்களில் ஆடிப்பெறுக்கு என்றால், மூன்று மணிக்கெல்லாம் பள்ளியை மூடி விடுவார்கள். அன்றைய தினம் அம்மா பல தரப்பட்ட சமையல் செய்வாள். சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சம்பழம் சாதம், எள்ளுஞ்சாதம், புளியோதரை, தக்காளிச்சாதம், தயிர் சாதம், வடகம், அப்பளம், மோர் மிளகாய், ஊர்காய் (இப்போ தான் புரியுது, நீ ஏன் இப்படி இருக்கேன்னு) எல்லாம் செய்திருப்பாள். எல்ல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஆற்றங்கரை மணலில் அமர்ந்தவாறு சாப்பிடுவோம். எங்கள் ஊரில் குறுக்குத்துறை என்ற இடத்திற்குச் செல்வோம். அங்கு தாமிரபரணி சாந்த ஸ்வரூபிணியாக இருப்பாள். அவ்வளவு எழில் மிகு ஆற்றங்கரை. படிக்கட்டெல்லாம், நிறைய இருக்கும். ஏதோ நூற்றாண்டில் ஏதோ புண்ணியவான் கட்டியது. எங்கள் குடும்பம் மட்டுமல்லாது ஊரே திரண்டு வந்திருக்கும்.
மங்கையர் பாவாடை தாவணியெல்லாம் அணிந்து, கூந்தலில் தாழம்பூ குஞ்சலம் வைத்து பின்னியிருப்பர் (இப்போ எவளும் பாவாடை தாவணிகூட போடுறதில்லை, இதுல குஞ்சலம் வேறயா!!!!) அன்னாளில் சைட் அடிப்பதை ஒரு பாவச்சஎயலாக நினைத்திருந்தலால், எவளையும் லுக்கு விட வில்லை. ( நீ சரியான மாங்காட விஜய்)

கால வெள்ளோட்டத்தில் நகரத்துக்கு குடி பெயர்ந்த பிறகு ஆடியாவது பெறுக்காவது. எல்லாம் வீட்டில் தான். நேற்றும் அம்மா வீட்டில் எல்லாம் பண்ணியிருந்தாள், ஆனால் .....

August 03, 2005

சொர்க்கமே என்றாலும் நம்மூரப் போல வருமா!!!!

எத்தனையோ பாடல்களை கேட்டிருக்கோம், ரசித்திருக்கோம் ஆனால் எத்தனை பாடல்களை அனுபவித்திருக்கோம்.

சொர்க்கமே என்றாலும் நம்மூரப் போல வருமா!!!!
அட எ ந் நாடு என்றாலும் அது நம் நாட்ட போல வருமா!!
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா?

இந்த பாடலை ராம ராஜன் நடித்த ஒரு படத்தில் இடம் பெற்ற பாடல். இந்த படத்தை பார்த்த காலத்தில் (டேய், ராம ராஜன் படமெல்லாம் பாப்பியாடான்னெல்லாம் கேக்கப்படாது) எவனாவது சிங்கப்பூர்ல போயி இப்படி பாடுவானான்னு" கேலி செய்ததுண்டு. ஆனால், நிஜமாகவே என் வாழ்க்கையில் இப்பாடல் வரிகளை என் வாழ்வில் அனுபவித்த கணங்களும் உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன் முதன் முறையாக அயல் நாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதுவும் அமெரிக்கா. மேலாளர் சொன்ன நாள்லேர்ந்து, அமெரிக்கா பற்றிய கனவு தான். நான் மட்டுமல்லாது, என்னுடன் என் உற்ற நண்பர்களும் வருகிறார்கள் என்றதும் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆனது.
அமெரிக்கா செல்லும் அந்த நாளும் வந்தது. ஒரு வழியாக எல்லோரும் அமெரிக்கா வந்து சேர்ந்தோம். எல்லோரும் ஒரே விமானத்தில் வர முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. விமானப்பணிப் பெண்களுடன் ஜல்சா செய்து கொண்டே போகலாம் என்ற எண்ணம் மட்டும் நிறைவேற வில்லை.
ஒரு வழியாக எல்லோரும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். ஆளாளுக்கு ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கொண்டோம்.
மறு நாள் அமெரிக்காவில் இருக்கும் நாட்கள் நீட்டிக்கப்பட்டன. 4 வாரங்கள் ஆறாக மாறின. எல்லோருக்கும் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன. (எத்தன நாட்களுக்குத்தான் இதே உவமையை குடுப்பிங்கடா. கொஞ்சம் மாற்றக்கூடாதா??)
ஒரு வாரம் ஒரு வழியாக ஓடிக் கழிந்தது. பிறகு கஷ்டங்கள் ஆரம்பித்தன.

பெங்களுரில் ஹோட்டலிலேயே சாப்பிட்டு சாப்பிட்டு பழகிய எங்களுக்கு இரவு வந்து சமைத்துச் சாப்பிட வேண்டிய அவசியம். எல்லோரும் சைவம். அதுவும் அக்கம் பக்கத்தில் கடைகளே கிடையாது. அப்படி ஒன்று இரண்டு இருந்தாலும் அதில் நாம் சாப்பிடும் பொருள் எதுவுமே கிடைக்காது. ஒரு வாரத்துக்கு வேண்டிய பொருட்களை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். எதுவுமே குறைந்தது 2 கிலோ கணக்கில் தான் கிடைக்கும். உப்பு முதல் காரப்பொடி வரை எல்லாமே கிலோ கணக்கில் தான் ;-)) மளிகைச் சாமான்களுக்கு யார் பணம் தர வேண்டும் என்று ஒரு சண்டையே நடக்கும். மளிகைக் கடையிலிருந்து விடுதிக்கு வருவதற்கு போக்கு வரத்து வசதி கிடையாது. அரை மணிக்கு ஒரு பேருந்து வந்தால் ஆச்சர்யம். அதையெல்லாம் மா-பேரூந்து என்று தான் அழிக்க வேண்டும். எப்போதுமே சக ஊழியனின் போக்குவரக்தை நம்பியிருக்க வேண்டும்.
அலுவலகத்தில் யாராவது நீண்ட நேரம் இருக்க வேண்டியதாக இருந்தால், இன்னொருத்தன் அவனுக்கு துணை இருக்க வேண்டும். இரவு நேரத்தில் தனியாக வருவது அவ்வளவு நல்லதல்ல என்று மேலாளர் கூறியிருந்தார். எங்கு செல்ல வேண்டுமானாலும் டக்ஸிதான். வேறு வழியே கிடையாது. ஷாப்பிங் மால் அப்படி இப்படி ஏதாவது ஒரு ஃபிகர் கண்ணில் பட்டால் கூட அது நம்மூர் பொண்ணாகத்தான் இருக்கும். முக்கால்வாசி கல்யாணமான பெண்ணாக இருக்கும். கடைசி வரை அமெரிக்க ஃபிகரைப் பார்க்கவே இல்லை. (யப்பா, இது முற்றிலும் உண்மை). எந்த கடைக்குச் சென்றாலும் சுய உதவி தான். ஒரு பொருள் வேண்டும், அதை எப்படி உபயோகிக்க வேண்டும், அதன் விலை என்ன, அதற்கு கியாரண்டீ உண்டா, இப்படியெல்லாம் ஒன்றும் தெரியாது. பிடிக்கவில்லையா, திருப்பிக் கொடுத்து விடலாம். டாலர் திருப்பி தந்து விடுவார்கள். ஒரு முறை எலக்ட்ரானிக்ஸ் அங்காடிக்கு சென்றிருந்தோம். டிஜிடல் கமெரா வாங்க. எந்த மாடலை எடுத்தாலும் அதை எப்படி உபயோகிப்பது என்று செயல் முறை விளக்கம் கொடுக்க ஒருவர் கூட இல்லை.

இரண்டு முன்று வாரங்களுக்குள்ளாகவே எல்லோருக்கும் எப்போடா ஊருக்கு போகப் போகிறோம், என்ற எண்ணம் வந்து விட்டது. நானும் என் நண்பனும் அடிக்கடி சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா என்ற பாடலை முணுமுணுப்போம். எங்கள் எல்லோராலும் மறக்க முடியாத அனுபவம் எல்லோரும் லாஸ் ஏஞ்சல்ஸ் போனது தான். அது பற்றி இன்னொரு நாள்.

July 20, 2005

செம லாஸு!!!!

சிறு வயதில், கணக்கு பரீட்சைபோதெல்லாம், அப்பா எனக்கு கணக்கு சொல்லித் தருவார். சொல்லிக் கொடுக்கறேன் பேர்வழின்னு கஷ்டமான கணக்கெல்லாம் கொடுத்து நொங்கெடுப்பார் என்று தான் சொல்லணும். எந்த ஒரு கணக்குக்குமே முழுமையான ஒரு பதில் வராத மாதிரி தான் கொடுப்பார். எதுக்குமே, பின்ன (decimal) வகையில் பதில் வரும். என் தங்கை கொஞ்சம் அப்பா செல்லம். அப்பா கூப்பிட்டால் கூட வர மாட்டாள். ஓடி விடுவாள். நான் தான் பலி ஆடாக அகப்படுவதுண்டு. என் கூட படிப்பதற்காக எனது சக வகுப்பாளினியும் வருவாள். (ரொம்ப குழம்ப வேண்டாம், classmateஐ தான் அப்படி சொன்னேன். தமிழ் குடிமகன் ஆத்மா சாந்தி அடிந்திருக்கும். இனிமேல் இவளை ச.வ. என்றே விளிப்போம்.) என் வயித்தெறிச்சலைக் கொட்டிக்கொள்ள வேண்டாமா??

இதில் வேதனை என்னவென்றால், என்னைவிட நன்றாகவே கணக்கு செய்வாள். பொண் குழந்தை நன்னா கணக்கு போடறா, உனக்கென்னட குறைச்சல்னு அப்பப்போ ரெண்டு குட்டு வேறு விழும்.
ஒரு கணக்கு பரீட்சை அன்றைய தினம் லாப நஷ்ட கணக்கு கொடுத்தார். ஒரு முட்டை வியாபாரி சில பல டஜன் முட்டை வாங்கி வருகிறான். அதில் சில முட்டைகள் அழுகியும் உடைந்தும் விட்டன. மீதியை ஒரு குறிப்பிட்ட ரூபாய்க்கு விறகிறான். விற்பனையில் அவனுக்கு லாபமா நஷ்டமா என்பது தான் கணக்கு.
இது என்ன பிரமாதமான கணக்கு என்று எண்ணுபவர்கள், இக்கணக்கில் கொடுக்கப்பட்ட எண்களைப் பார்க்க வேண்டும். 97 டஜன் முட்டை 83 அழுகி விட்டது. ஒரு முட்டையின் விலை 1.54 ரூபாய். இப்படியாகத்தான் எல்லாமே இருக்கும். இப்படிப் பட்ட எண்களை கொடுத்தால் கணிப்பொறியே நம்மைத் திட்டும். அப்பாவைத் திட்ட முடியுமா? என் தலையெழுத்தை நொந்து கொண்டு கணக்கு போட ஆரம்பித்தேன். ஒரு 10 நிமிடம் கழித்து என்னிடம் கேட்டார், "என்னடா, இன்னும் போடலியா. நீ போட்டுட்டியாம்மா. என்ன பதில். லாபமா நஷ்டமா" என்றார். அவர் எதிர்பார்த்தது லாபமா நஷ்டமா என்பது தான். எவ்வளவு லாபம் என்று அவரே கூட கணக்கு போட்டு பார்த்தால் பிழை வரக் கூடும். ச.வ. லாபம் என்றாள். லாபமா!!!!ஐயையோ நமக்கு நஷ்டம்னா வந்திருக்கு. என் வயிற்றிற்குள் புளியைக் கறைக்க ஆரம்பித்தது.
"என்னடா உனக்கென்ன வந்திருக்கு" என்று ஒரு அதட்டல் வேறு.
என்ன சொல்வதென்று தெரியாமல் மரியாதையாக முழித்தேன்.
"ஏண்டா, இப்படி இஞ்சி தின்ன குரங்காட்டம் ஒக்காந்திருக்கே. ஏதாவது சொல்லித் தொலையேன்".
"லாபமெல்லாம் இல்லை. செம லாஸு" என்றேன்.
"லாஸா, கொண்டா இப்படி நோட்டை" என்று என்னிடமிருந்து பிடிங்கினார். எதைப் பார்த்தாரோ தெரியாது, என் இடுப்புக்கு மேல் எல்லா பாகமும் வலிக்கத் தொடங்கியது. அவர் விளாசாத இடமே இல்லை. எப்போதுமே அப்பா அடித்தால் அம்மா சமாதானப் படுத்துவாள். அன்று அவளும் கட்சி மாறி விட்டாள்.
ஒரு வழியாக அழுது முடிந்த பின் அப்பா கேட்டார், "எந்த லக்ஷணத்துல குடுத்த கணக்கை எழுதியிருக்கே பாரு. 83 முட்டை அழுகியிருக்குன்னு கொடுத்திருக்கேன். நீ 83 டஜன் அழுகியிருக்குன்னு எழுதியிருக்கே. ம்ம் பரவாயில்லை. நீ எழுதியிருக்கும் கணக்குக்கு வந்த பதில் சரி தான் என்றார்".
"ஏம்பா, இதெல்லாம் அடிக்கறதுக்கு முன்னாலேயே பார்த்திருக்கக் கூடாதா??" இப்படி மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். யாருக்கு அவரிடம் இப்படி பேச தைரியம்.

பல வருடங்களுக்குப்பின், நிறைய பேருக்கு லாப நஷ்ட கணக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறேன். எப்போதுமே எனக்கு அப்பாவிடம் சொன்ன "செம லாஸு" தான் ஞாபகம் வரும்.

பி.கு. அன்றைய தின கணக்கு பரீட்சையில் நான் வாங்கிய மார்க் 100/100. அது தான் என் வாழ்க்கையில் கடைசியாக நூறு மார்க் வாங்கியது என்பது ஒரு பெரிய சோகக் கதை ;-))

July 15, 2005

இல்லறம் சிறக்க.....

இல்லறம் சிறக்க என்ற தலைப்பிலே,
விவாதம் நடக்கிறது.

ஒருவர் சொன்னார், எல்லா
கணவர்களும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை
அறிய வேண்டும்; அன்பு
இன்னொருவர் சொன்னார்,
வேண்டாம் வேண்டாம். இரண்டெழுத்து
வார்த்தை அறிந்தால் போதும்; சரி

July 13, 2005

கேக்கறவன் கேனையன்னா, கேழ் வெரகுல நெய் வடியுதும்பாங்க


டுபாகூர் வுடறதுல நம்ம பயலுவள அடிச்சுக்கறதுக்கு ஆளே இல்லை. லேட்டஸ்ட் டுபாகூர் அஹமதாபாதுல நடந்திருக்கு. அஞ்சுல் பாண்டியான்ற பதினெட்டு வயசு பையன், மைக்ரொஸாஃப்ட்ல (Microsoft) வேலை பாக்கறதா ஒரு பெரிய கதை கட்டி அத மத்தவங்க நம்பும்படியா பண்ணியிருக்கான். ஐயா கூட பில் கேட்ஸ் அப்பப்போ சட் (chat) பண்ணுவாராம். இவரு microsoft நடத்துன நிறைய கோர்ஸ்ல உலகத்துலயே நம்பர் ஒண் ரங்க் வாங்கியிருக்காராம். இவரு தான் மைக்ரொசாஃப்டோட டெக்னாலஜி டிபார்ட்மென்டையே அட்மினிச்டர் பண்ணுறாராம். இவருக்கு ஒரு வாரத்துக்கு 5000 $ சம்பளம் தரேன்னு பில் சொன்னாராம். ஆனா இவர் அதுக்கு ஒத்துக்கிடலையாம். இவரு B.E கம்பியூடர் சயின்ஸ் படிக்கிறாராம். Harvard Universityல M.Phil பண்ணுறாராம்.

ஐயா சொவத்துல நிறைய சான்றிதழெல்லாம் மாட்டி வச்சிருக்காறாம். இத பத்தி இன்னும் நிறைய படிக்கணூம்னா, http://timesofindia.indiatimes.com/articleshow/1169345.cms



இது தான் இப்படின்னா, இதே ஊர்ல ஹர்ஷில் பாரீக்ன்ற 19 வயசு பையன் ஒரு படி மேல போயிட்டான். இவரு ISROல வேலை பாக்குறாராம். இவரு தான் ISRO Moon Mission இயக்குனராம். இப்படி ஒரு டுபாகூர சொல்லி ஒரு பொண்ணோட அப்பாவ ஏமாத்தி அந்த பொண்ண கல்யாணம் பண்ணியிருக்கான். ஐயா ரொம்ப பேஸுறாரேன்னு யாரோ சந்தேகப்பட, போலீஸு வந்து வெசாரிச்சப்போ தான் குட்டு வெளிப்பட்டிருக்கு. இவரு 10th படிக்கும் போதே ஒரு பொண்ணுக்கு நூலு வுட்டாறாம். அது நீ வாழ்க்கைல செட்டில் ஆனப்பறம் பாப்போம்னுட்டுதான். (பொண்ணுங்கல்லாம் இப்போ ரொம்ப உஷார்மா) அதை வளைக்க தான் ஐயா இப்படி ஒரு டுபாகூர் நாடகத்த நடத்துனாராம். இந்த டுபாகூர்ல அந்த பொண்ணும் பொண்ணப்பெத்த அப்பனும் மயங்கிட்டானுவ. இதோட நிறுத்திக்கிட்டாலாவது சரி. இப்பவே கல்யாணமும் பண்ணீக்கிடணும். இல்லைன்னா 20 வருஷத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட முடியாதுன்னு வேற அளந்து வுட்டிருக்காரு. இதுக்கு அப்துல் கலாம் உதாரணம்னு சொல்லவும், கல்யாணமும் முடிஞ்சாச்சு. இப்போ மாமியாரு வூட்டுல ஒக்காந்து களி தின்னுக்கிட்டுருக்காரு.

கேக்கறவன் கேனையன்னா, கேழ் வெரகுல நெய் வடியுதுன்னும் சொல்லுவானுங்கன்றது எவ்வளவு உண்மையாப் போச்சு???

July 08, 2005

வழக்கு போடறதுக்கு ஒரு வெவஸ்தையே இல்லையாடா??

இந்திரா காந்தி பத்தி நிக்ஸனும் கிஸ்ஸிங்கரும் 30 வருஷத்துக்கு முன்னாடி பேசிக்கிட்டத அமெரிக்க இப்போ வெளியிட்டிருக்கு. அதுல இவனுங்க ரெண்டு பேரும் இந்திரா காந்திய காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி இருக்கானுங்க. யம்மா தாயே, பாகிஸ்தான் மேல போர் தொடுக்காதன்னு அண்ணாச்சி மன்னாடி கேட்டுக்கிட்டாராம். நம்ம அம்மணி போடா வெண்ண, ஒனக்கும் பெப்பே, ஒங்கப்பனுக்கும் பெப்பேனு, ரஷ்யா துணைக்கு இருக்குதுன்ற தைரியத்துல பாகிஸ்தான் மேல போர் எவுச்சு. இதுக்கப்பறம் நடந்தது தான் இந்த காய்ச்சும் படலம். என்னத்த பேசிக்கிட்டானுங்களோ ஒரு எளவும் தெரியாது. ஆனா, நல்ல கெட்ட வார்த்தைல வைஞ்சிருக்கானுங்கன்னு அரசல் புரசலா பேசிக்கிடறானுங்க.

ஒவ்வொரு வருஷமும் அமெரிக்காவுல அந்த நாட்டுல கமுக்கமா வச்சிட்டிருந்த ஆவணங்கள பொது மக்கள் பார்வைக்கு வப்பானுங்க (ரொம்ப முக்கியம். You can't find more Idiots in the world, than what you can find in the US of A என்பது என்னுடைய தாழ்மையான கருத்து) இதுல ஏதோ ஒரு புண்ணியவான், இந்திராவ பத்தி இந்த ரெண்டு பெரிய மனுஷங்களும் என்ன பேசிக்கிட்டாங்கன்னு எப்படியோ தோண்டி எடுத்திருக்கான்.

சரி பேசிக்கிட்டது தான் பேசிக்கிட்டாங்க. ரெக்கார்ட் டேப்பையெல்லாம் அணைச்சிட்டு பேசியிருக்கலாம்ல. சரி, அதுவும் நடந்த்து கிட்டத்தட்ட 30 வருஷமாச்சு. இது நம்மூர் காங்கரெஸ் காரனுங்களுக்கு பொறுக்கல. இவனுங்க தான் நேரு குடும்பத்துக்கு எப்பவும் விசுவாசியா இருப்போம்னு சிலாசாசனம் எளுதி கொடுத்திருக்கானுவளே. அவன் அவன் அறிக்கை வுடறான். அமெரிக்கா பகிரங்கமா மன்னிப்பு கேக்கணூமாம்.

இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. ஒரு அதீத இந்திரா விசுவாசி, இந்தூர் கோர்ட்ல அமெரிக்கா மேல 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு போட்டிருக்கான். இந்த பணத்த குஜராத் வெள்ள நிவாரண நிதிக்கு பயன் படுத்திக்கிடணுமாம். எப்படி போகுது கதை???

சரி இந்தாளு ஏதோ கோட்டி புடிச்சு வழக்கு போட்டிருக்கான்னா, அதையும் இந்தூர் கோர்ட் ஏத்துக்கிட்டு ஜூலை 11 இந்த விசாரிக்கப் போறாங்களாம். அப்படியே, இந்த வழக்குல இந்தாளுக்கு சாதகமா, தீர்ப்பு வந்திருச்சின்னா, யாருல ரூபாய் கொடுப்பா? நிக்ஸனும் கிஸ்ஸிங்கரும் என்ன நம்மூர் அரசியல்வாதியா? கீழ் கோர்ட் தண்டன கொடுத்திச்சின்னா மேல் கோர்ட்ல அப்பீல் பண்ண??? இதுல என்ன வேடிக்கைன்னா, நிக்ஸன் மண்டயப்போட்டு, அவன பொதச்ச எடத்துல புல்லு முளச்சாச்சு. கிஸ்ஸிங்கரும் போற வழிக்கு புண்ணியம் தேடிக்கிட்டிருக்காரு. இந்த லக்ஷணத்துல 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரணுமாம். அதை அப்படியே வெள்ள நிவாரண நிதியா பயன் படுத்திக்கிடணுமாம்.

எதெதுக்கு வழக்கு போடணும்னு ஒரு வெவஸ்த இல்லையால? ஏற்கெனவே நம்மூர் கோர்டெல்லாம் சூப்பர் ஸ்பீடா இயங்கிட்டு கடக்கு. இதுல இந்த கோட்டிக்காரப் பயலுங்க வேற இந்த மாதிரி வழக்கு போடறாங்க. கலி காலமடா இது.


இது ஒரு மட்டரு, இத்த பத்தி இவ்வளவு எளுதியிருக்கியேல. ஒனக்கு கூட தான் வெவஸ்தையே இல்லங்கியேளா??? :-)

July 07, 2005

இசையே உன் பெயர் இளையராஜாவா???



தமிழ் பாடங்களில் அருஞ்சொற்பொருள் என்றொரு பகுதி உண்டு. இசை என்பது அருஞ்சொல் ஆகி விட்ட நிலையில் (இப்போதுள்ள இசையில் இசையை விட ஓசை தான் மிகுதி), அதற்கு இளையராஜா என்பது பொருத்தமான பொருள். நேற்று மழையையும் பொருட்படுத்தாது 2 கடைகள் ஏறியும் இளையராஜவின் சிம்ஃபனி இசையில் திருவாசகத்தை வெளியிட்டுள்ள ஒலிப்பேழை ( CD ரொம்ப மண்டையைப்போட்டு உடைத்துக்கொள்ள வேண்டாம்) கிடைக்கவில்லை. நானும் என் முயற்சி விடாது மூன்றாவது கடையில் இந்த ஒலிப்பேழையை ஒரு வழியாக வாங்கி ஆகி விட்டது. வீட்டுக்கு விரைந்து வந்து அதைப்போட்டுக்கேட்கலாம் என்றால், கோலங்களும் ரோஜாவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் கூறும் நல்லுலகில் திருவாசகத்துக்கு ஏது இடம். கொஞ்சம் பொறுத்திருக்க நேர்ந்தது. அப்பப்போ இடையில் சிறிது சிறிது பாகமாக கேட்க அனுமதி கிடைத்தது. முதலில் கேட்கும் போது அவ்வளவாக மனம் லயிக்கவில்லை. வீட்டில் எல்லோரும் ஒரே கேலி, எக்காளம். 150 ரூ. தண்டம் என்றெல்லாம். ஏதுடா, சுஜாதா பாலமுரளிகிருஷ்ணா போன்ற மேதைகள் இவ்வளவு சிலாகித்து கூறியதா இந்த லக்ஷ்ணத்தில் இருக்கிறது ஒரே மன வருத்தம். இருந்தாலும் எப்படியாவது, இதை ரசித்தே ஆக வேண்டும் என்ற வரட்டு பிடிவாதத்தில் ஆஃபீஸுக்கு வந்து ஹெட் ஃபோன்ஸ் வைத்து எனக்கு மட்டும் கேட்குமாறு கேட்டேன். நம்பினால் நம்புங்கள், I was in for a different kind of a feeling. இது வரை கேட்டறியாத ஆனால் வினோதமான சப்தங்களை கேட்க நேரிட்டது.
இதே ஒலிப்பேழையைத்தான் வீட்டில் போட்டு கேட்டேன். ஆனால் இப்போது உண்டாகும் அனுபம் ஏன் வீட்டில் உண்டாக வில்லை என்று எண்ணிய போது, சில காரணங்களை உணர்ந்தேன்.
1. இதை மற்ற ஒலிப்பேழை மாதிரி எப்போதும் கேட்க முடியாது. மனது அமைதியாக இருக்க வேண்டும்.
2. ஒரு புதிய இசை ஆராய்ச்சியை வரவேற்கும் அளவிற்கு மனது பக்குவப்பட்டிருக்க வேண்டும். பக்தி பாடல்களையெல்லாம் மிருந்தங்கம் தப்லா கடம் போன்ற பக்க வாத்தியங்களுடனே கேட்ட நமக்கு சிம்ஃபனி ஆர்கெஸ்ட்ரா போன்ற மேல் நாட்டு சங்கீதத்தோடு கேட்பது முதலில் ஏற்றுக்கொள்வது சற்று கடினம்.
3. இதை music surround system வைத்துக் கேட்பது உசிதம். வீட்டில் உள்ள music system'இல் இந்த வசதி இல்லை. சில ஹெட் ஃபோன்ஸில் இந்த உண்டு.
4. இதை தனிமையிலே மட்டுமே சரிக்க முடிகிறது.

மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. எனக்கு மிகவும் பிடித்தது 'பூவேரு கோனும் புரந்தரனும்' என்று பவதாரிணி பாடும் பாடல். இந்த சிம்ஃபனி திருவாசகத்தை விமர்சனம் தகுதி எனக்கில்லை. அதனால் இதில் உள்ள நிறை குறைகளை நான் அலசப்போவதில்லை.

இந்த ஒரு மாபெரும் சாதனையைச்செய்ய இளயராஜா செய்வதற்கு நிறைய பணம் தேவைப்பட்டிருக்கிறது.
எவ்வளவு ஒலிப்பேழை விற்கிறதோ அந்தளவிற்கு இதை வெளியிட்டுள்ள நிறுவனம் பயன் அடையும். அதனால் இதை காசு கொடுத்து வாங்குவோம். தயவு செய்து இதை MP3'ஆக மாற்றி இணையத்தில் ஏற்றி விடாதீர்கள். MP3 முறையில் இதைக்கேட்டால் இதில் கேட்கும் சில அற்புதமான இசை கேட்பதில்லை. நான் ஏற்கனவே மாற்றிக் கேட்டுப்பார்த்து விட்டேன்.

இளையராஜனே, நீ இன்னும் பல இமயங்கள் கடக்க எங்களது வாழ்த்துக்கள்.

July 06, 2005

கிரிக்கெட்டும் மாறுது

(Deccan Chronicle Ad ராகத்தில் வாசிக்கவும்)
வந்தாச்சு வந்தாச்சு புதிய ரூல்ஸு வந்தாச்சு
பின்ச் ஹிட்டருக்கு ஆப்பு வக்க
புதிய ரூல்ஸு வந்தாச்சு


"ஸ்ரீ லங்காவுல நடக்கப்போகற திரிகோண போட்டிகள்லேர்ந்து தான் புதிய ஒரு நாள் ஆட்டத்துக்கான விதிமுறைகள் நடைமுறல வரும்னு முதல்ல சொன்னாங்க. ஆனா, நம்மூர் ஆடி தள்ளுபடிய ஆனி மாசத்துலயே ஆரம்பிச்சுட்ட மாதிரி இங்கிலாந்துல நடக்குற Natwest challenger series'லேர்ந்தே ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க."
எலேய் எலேய் கொஞ்சம் நிறுத்து. என்ன நீ பாட்டுக்கு சொல்லிட்டே போற. என்ன விதிமுறைங்க. என்ன மாறிச்சு. யாரு என்னத்த சொன்னாங்க. ஒரு முன்னுரையே கொடுக்காம நீ பாட்டுக்கு இப்படி டாப் கியர்ல போனா யாருக்கு என்னல புரியும்னு நினைக்கிறீயேளா??

கொஞ்ச நாளாகவே ஒரு நாள் சர்வதேச ஆட்டத்துல யாரு ஜெயிப்பா யாரு தோப்பான்றது கொஞ்சம் predictive'ஆ அகிட்டுது. நம்ம தமிழ் சினிமா மாதிரி. அதனால ஆட்டத்துல என்ன மாறியான மாற்றம் கொண்டுட்டு வரலாம்னு கிரிக்கெட் வாரியம் யோசிச்சு. எலேய் இது நம்மூரு தண்ணீரு வாரியம் மாதிரி இல்ல. யோசிச்சுட்டே இருக்கறதுக்கு. கொஞ்சம் ரோசன பண்ணி அத செயல் படுத்தவும் செய்யப் போறாங்க. அந்த யோசனையின் முடிவுதான் இந்த மாற்றங்கள்.

ஒரு நாள் ஆட்டம் ஒவ்வொரு அணியும், தலா 50 ஓவர் வரைக்கும் வெளாடலாம். இதுல மொத 15 ஓவருக்கு 2 பயலுவ தான் வெளி வட்டத்துல நிக்கலாம். மத்த பயலுவளெல்லாம் உள் வட்டத்துக்குள்ள தான் நின்னாகணும் (என்னல ஏதோ தேர்தல்ல நிக்க வட்டம் மாவட்டம்'னு சட்டு புட்டுனு விஷயத்துக்கு வா)

சரி ரூல் நம்பர் 1:
இனிமே மொத பத்து ஓவருக்குத்தான் 2 பேரு வெளிய நிப்பானுவ. அப்புறம் மீதி 40 ஓவருல ஃபீல்டிங் கப்டன் எப்போ வேணாலும் இந்த மாதிரி ரெண்டு பேத்த மட்டும் வெளிய நிப்பாட்டலாம். ஆனா, இந்த மாதிரி நிப்பாட்டும் போது 5 ஓவருக்கு கொறயாம நிப்பாட்டணும். அதுவும் ரெண்டு வாட்டி இந்த மாதிரி நிப்பாட்டணும்.

ரூல் நம்பர் 2:
ஸப்ஸ்டிட்யூட் ஆளு இனிமே பேட்டும் டிரிங்ஸும் மட்டும் கொண்டு வந்துட்டு பந்து பொறுக்கிப்போட்டுட்டிருக்க வேண்டாம். அவனுங்களும் பேட்டிங்கும் பவுலிங்கும் செய்யலாம். எப்ப வேணாலும் இந்தாளுங்கள உள்ள கொண்டாந்துக்கலாம்.

ரூல் நம்பர் 3:
ரன் அவுட்டுக்கு மட்டுமில்லாம, இனிமே எல்லா விதமான அவுட்டுக்கும் மூணாவது அம்பயர கேட்டுக்கலாம்.
ஆனா, மூணாவது அம்பயர் மொத ரெண்டு அம்பயரின் முடிவுல தலையிட முடியாது.

Test rules are Partial to bowlers.
One Day rules are Partial to batsmen.
Cricket rules are always partial to Umpires

சரி இதுனால அப்படி என்ன மாற்றம் வரும்னு கேக்கியேளா???
ஆட்டத்துக்கு முன்னாலேயே ரெண்டு அணியும் தங்கள நல்லா தயார் படுத்திக்கணும். ஒவ்வொரு கட்டத்துக்கு தகுந்த மாதிரி வியூகம் அமைச்சக்கணும். இங்கே தான் கப்டனும் கோச்சும் நல்லா யோசிக்கணும். More than a coach every team would need a strategeist.
நம்மாளுங்க பிட்ச்ல, ஸ்பின் எடுக்கும்னு நினச்சு முரளி கார்த்திக் மாதிரி ஒரு ஸ்பின்னர டீம்ல வச்சிருப்பானுங்க. ஆனா, பந்து சுழலவே செய்யாது. கில்கிரிஸ்டு மாதிரி ஆளு விளாசு விளாசுன்னு விளாசரான்னா, முரளிய தூக்கிப் போட்டுட்டு வேற ஒரு ஃபாஸ்ட் பவுலர கொண்டாரலாம். திடீர்னு லக்ஷ்மணன் நடுவுல ரன் எடுக்காம கட்ட போட்டான்னா அவன தூக்கிட்டு அதிரடியா ஆடுற தோனிய கொண்டாரலாம். இதுனால விளையாடரவனுங்களும் உஷாரா இருப்பானுங்க. ஒழுங்கா ஆடல, "ஆப்பு என்பது எல்லோர் முன்னிலயிலும் வைக்கப்படும்"

அதே மாதிரி தான் ரெண்டு பேத்த வெளிய நிக்க வைக்கற விதியும். மொத பத்து ஓவரிலேயே பட்டிங் டீம் 3 விக்கட்ட எழந்திரிச்சின்னா, இன்னும் அஞ்சு ஓவருக்கு 2 பேத்த வெளிய நிக்க வக்கலாம். எதிராளி இன்னும் தடுத்தாடுற மூடுல தான் இருப்பான். இல்ல மொத 10 ஓவரிலேயே 100 ரன் அடிச்சுப்புட்டானுங்களா? ஃபீல்டிங்க கொஞ்சம் தளர்த்தி ஸ்பின் கொண்டாரலாம். அடிச்சு ஆடுறவனுக்கு திடீர்னு தடுத்தாடுறது கொஞ்சம் கஷ்டம். எப்படியும் தூக்கி அடிப்பான். எல்லா பந்தும் பவுண்டரிய எகிறாது. ஆக இந்த மாதிரி ஆட்டம் இன்னும் பரவசமா இருக்கலாம்னு நம்புறாங்க. இது வெற்றி அடைஞ்சா, இதையே தொடர்றதா உத்தேசம்.

பாப்போம். இந்த மாற்றங்கள் எந்தளவுக்கு கிரிக்கெட்ட இன்னும் எந்தளவுக்கு பரவசமாக்குத்துன்னு??

July 04, 2005

தேவை ஒரு அந்நியன்

போன வாரம் முழுக்க ரேஷன் கார்டு கொடுக்காங்க ரேஷன் கார்டு கொடுக்காங்கன்னு அம்மா டி.வியும் தாத்தா டி.வியும் போட்டி போட்டு கூவிக்கிட்டு கெடந்தாங்க. நானும், நம்ம வூட்டு ரேஷன் கார்டு வாங்கறதுக்காக நம்மூருக்கு போனேன். அவங்க அவங்க வட்டாரத்து ரேஷன் கடைகள்லயே ரேஷன் கார்டு வாங்கிக்கிடலாம்னு தான் சொன்னாங்க. நானும் நேர ரேஷன் கடைக்கு போனேன். அங்கே ஈ காக்கா கூட இல்லை. என்னடான்னு விசாரிச்சா, அரசு பள்ளிகூடத்துல தான் ரேஷன் கார்டு குடுக்கறாங்கன்னுட்டாங்க.
சரின்னுட்டு அரசு பள்ளிகூடத்த தேடி கண்டுபுடிச்சு அங்கிட்டு போனேன். யம்மாடியோவ், ஏதோ தேர்தல் நடக்க மாதிரி அம்புட்டு கூட்டம். இதுல கொடுமை என்னன்னா, கூட்டம் நகளவே மாட்டிக்கி. வெசாரிச்சு பாத்தா, ஒவ்வொருத்தருக்கும் கார்டு கொடுக்கறதுக்கு கொறஞ்சது பத்து நிமிஷம் ஆவுது. ஒரு அறை மணி நேரம் கழிச்சு பக்கத்துல இருக்க ஒரு ஆள் கிட்ட இன்னொரு ஆள் சொல்லுறாரு, போன தடவை கார்டு புதுப்பிக்கயில ஒரு சீட்டு குடுத்தானுவளாம். அத்த கொண்ணாந்தாத்தான் கார்டு தருவானுங்களாம். இல்லைன்னா, வட்ட வழங்கல் அலுவலகம் போவணுமாம். அதென்னய்யா வட்ட வழங்கல் அலுவலகம்'ன்னா, தாலுகா ஆபீஸ்ன்றாங்க ;-)))

இதேதுடா கொடுமன்னு, வூட்டுக்கு வந்து, இருக்க எல்லா அலமாரியும் தேடி பாத்து, ஒரு வழியா அந்த
சீட்ட கண்டு புடிச்சு மறுபடியும் அங்கிட்டு போனேன். இப்பவும் அதே அளவு கூட்டம் இருந்திச்சு. நல்ல வேளை, இந்த தடவை படிக்க பொஸ்தகமும், கேக்க நடை மனிதனும் (அதாங்க walk-man) கொண்டுட்டு போயிருந்தேன். ஒரு 3 மணி நேரம் கால் கடுக்க நின்னிருப்பேன். ஒரு வழியா நானும் ரேஷன் கார்டு குடுக்கும் அதிகாரி பக்கம் வந்தேன். என் காதுலேர்ந்து hear phone 'ஐ கழட்டிட்டு முன்னால நிக்க ஆளு கிட்ட என்ன கேக்கார்ன்னு கவனிச்சேன். அப்போத்தான் தெரிஞ்சது, ஏன் ஒவ்வொருத்தருக்கும் 10 நிமிஷம் ஆகுது. இந்த அதிகாரிங்க கையில ஒரு லிஸ்ட் இருக்குது. அந்த லிஸ்டுல, நம்ம பேரை தேடி பாப்பானுங்க. பேரு இருந்தாத்தான், கார்டு. இல்லைன்னா அப்பீட் ஆயிக்க வேண்டியது தான். அந்த லீஸ்ட, விண்ணப்பம் எண்ண வெச்சோ, ஆளுங்க பேர வச்சோ அடுக்கி வச்சிருக்கலாம்ல. அதுவும் இல்ல. ஒரு 30 பக்கத்துக்கு பேரு இருக்குது. நம்ம பேர கேட்டதும் ஒவ்வொரு பக்கமா தேடி பாப்பாரு. அவரு எந்த லக்ஷணத்துல தேடுறாருங்கறது கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஏன்யா, இதுக்கெல்லாம் தான் இப்போ கம்ப்யூட்டர் வந்துட்டுதே, ஒரு சின்ன sort n search ப்ரோகிராம் எழுதி, இந்த வேலையை பார்க்க தெரியாதா? ஒலகத்துக்கே நம்ம பயலுவ சாஃப்ட்வேர் எழுதி தரானுங்க. இந்த பிஸ்கோத்து வேலைக்கா சாஃப்ட்வேர் எழுத தெரியாது. பன்னண்டாம் கிளாஸ் படிக்க பய கூட இத்த எழுதிப்புடுவானே. ஹ்ஹ்ம்ம்ம் யார குத்தம் சொல்ல. சரி நம்ம கதைக்கி வருவோம்.
நான் அந்தாளுகிட்ட போனதும் என் சீட்ட வாங்கிட்டு, மறுபடியும் கூகிள் (தேடல்) செய்ய ஆரம்பிச்சாரு. ஒரு பக்கத்துல எங்கம்மாவின் பேரு இருக்கறத, நான் தான் காட்டினேன் அந்தாளுக்கு. (எத்தன பேரைஅந்தாளு ஒங்க பேரு இல்லன்னு திருப்பி அனுப்பிச்சாரோ???) எங்க வூட்டு முகவரியும் சரியா இருக்கான்னு பாத்துட்டு, கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு அடுத்த ஆளோட சீட்ட வாங்கிக்கிட்டாரு. நானும் ஒரு பத்து நிமிஷம் பொறுத்து பாத்தேன். அந்தாளு கிட்ட போயி, "சார் கார்டு என்னாச்சுன்னு கேட்டேன்". அதுக்கு அந்தாளு கொஞ்சம் கூட சலனமே இல்லாம, "ஒங்க வூட்டு கார்டு இங்குட்டு இல்ல. போய்ட்டு அடுத்த வாரம் வா"ங்கறான். (இந்த மாதிரி ஆளுங்கக்கெல்லா மருவாத ஒண்ணு தான் கொறச்சல் !!!!!)
"சார், இப்போ தானே, எங்க வூட்டு விலாசம் எல்லாம் இந்த லிஸ்டுல இருந்துச்சு. நீங்க கூட ஒரு ரெஃபரென்ஸ் நம்பர் குடுத்தீயளே"ன்னு கேட்டேன்.

"சார், லிஸ்டுல பேரு இருக்கு. ஆனா, கார்டு இல்ல. என்ன செய்ய. பேரு இருக்க எல்லாருக்கும் கார்டு இருக்குன்னு சொல்ல முடியாது. சில பேருக்கு இருக்கும், சில பேருக்கு இருக்காது.
நிறய பேரு லீஸ்டுலயே இல்ல. அதுக்கு என்ன பண்ணறது. ஏதுன்னா கேக்கணும்னா தாலுகா ஆபீஸ்ல போயி கேளுங்க. எங்களுக்கு ஒண்ணும் தெரியாது"ன்னான். ஏற்கனவே மணி நாலே முக்கால். அதுவும் சனிக்கெளம. தாலுகா ஆபீஸ்ல ஒரு பயலும் இருக்க மாட்டானுங்க. இதுல யாரு கிட்ட போயி கேக்கறது.

அந்தாளு கிட்ட மறுபடியும் போயி, " சார், இந்த ரேஷன் கார்டு வாங்கறதுக்காக நான் பெங்களுர்லேந்து வந்திருக்கேன். அடுத்த வாரமும் என்னால மறுபடியும் வரது கஷ்டம். இப்போ என்ன பண்ணறதுன்னு கேட்டேன்."

"இந்த மாசம் முழுக்க கார்டு கொடுப்போம். நீங்க கடைசி வாரம் கூட வந்து வாங்கிக்கலாம்."

"கடைசி வாரமும் எங்க கார்டு இல்லன்னா என்ன பண்ணறது"

"ஒன்ணும் பண்ண முடியாது. தாலுகா ஆபீஸுக்கு போயி அங்கே விசாரிக்கணும். எங்களால ஒன்ணும் பண்ண முடியாது"

இது எனக்கு மட்டும் நடந்தது இல்ல. கார்டு வாங்கறதுக்காக வந்த முக்காவாசி பேருக்கு இந்த கதி தான். இது திருநெல்வேலியில் மட்டுமில்ல. கிட்டத்தட்ட எல்லா ஊரிலயும் இது தான் நடந்திருக்கு.

எவனுக்குமே ஒரு பொறுப்புணற்சின்றது இல்ல. இதுல கொடுமை என்னன்னா, இத மேற்பார்வை பார்க்குர கலெக்டர், ஏதோ ஆளுங்கட்சி தீத்தாலாண்டி வரான்னுட்டு, அவன வரவேற்க போயிட்டாரு. எம்.எல்.ஏ வோ எம்.பி யோ, வட்டாட்சியாளரோ, ஒரு பய கூட கையில கெடக்கலை. நாடு இந்த மாதிரி இருந்தா, எந்த நூற்றாண்டுல உருப்படறது??

இந்த மாதிரி, பொது மக்கள மூணு நாலு மணி நேரம் வேகாத வெயில்ல காக்க வெச்சு, கடைசில கார்டு இல்ல, அடுத்த வாரம் வான்னு சொன்னா, இந்த மாதிரி அதிகாரிங்கள என்ன செய்யறது. இவனுங்களுக்கெல்லாம் அந்குபதமோ கும்பீபாகமோ குடுக்க வேண்டியது தான். அதனால் நம்ம ஒடனடி தேவ, ஒரு அந்நியன்!!!!

June 23, 2005

சட்டில இருந்தாத்தாம்லே அகப்பைல வரும்

நம்மாளுங்க கிரிக்கெட் வெளாண்டு ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது. எல்லா பயலுவளும் அயல் நாட்டுல கவுண்டி ஆடப்போயிட்டானுங்க. ( நம்மாளுங்களுக்குத்தான் காசு கண்ட எடம் சொர்க்கமாச்சே). ஆனாலும் பேப்பருல நெதம் கிரிக்கெட் பத்தி, பத்தி பத்தியா எளுதறானுவ. அதுவும் யாரப்பத்தி. நம்ம பயலுவள புதுசா பெண்ட நிமித்தறதுக்கு வந்திருக்க கிரேக் சப்பல் பத்தி தான்.
என்னவோ இந்தாளு இந்திய கிரிக்கெட்டுக்கு இது வரை கிடைக்காத வரப்பிரசாதம் மாதிரி.
இவரால தான் நம்ம பயலுவ 2007 ஒலக கோப்பய வெல்ல முடியுமாம்.
இந்தாளு வியூகம் வகுக்குறதுல வேணா சாணக்கியனா இருக்கலாம். ஆனா நம்ம பயலுவ வெறும் வெட்டி பயலுவளா இருந்தா என்னத்த பண்ண முடியும். எலேய் இப்படி இப்படி வெளாடுன்னு ஐடியா குடுக்கறதுல வேணா இந்தாளு பெரிய ஐடியா அண்ணாசாமியா இருக்கலாம். ஆனா, அதை நம்ம பயலுவ தானே செயல் படுத்த முடியும். நம்மால குருதய கொளத்துக்குத்தான் கூட்டிட்டு போவ முடியும். ஆனா, தண்ணி குடிக்க வேண்டியது குருத தான. அப்படி நம்ம பயலுவள என்ன பண்ணப் போறேன்னு இந்தாளு இது வரைக்கும் ஒண்ணும் சொல்லல. கேட்ட டிரேடு சீக்ரெடுன்றாரு. இந்தாளு பத்தி நெதம் ஒரு கட்டுறை
எளுதிப்புடுதானுங்க. எலேய் ஒங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லுதேம்ல. சட்டில இருந்தாத்தான்ல அகப்பைல வரும் அத்த புரிஞ்சுக்கோங்க. அம்புட்டுத்தான்.

June 16, 2005

எலேய் விவேக்கு, நீயுமால???!!!

தமிழ் சினிமாவுல காமெடி எப்பவுமே அது பாட்டுக்கு ஒரு தனி கதையாத்தேன் இருக்கும். முளூசா காமெடி படம் எடுத்தாத்தேன் படத்தோட ஒட்டிக்கிட்டு காமெடி வரும். உண்மையை சொல்லணூம்னா நாகேஷ் தங்கவேலு காலத்துக்கு பெறவு எவனுமே எனக்கு பிடிக்கலை. என்னல காமெடி பண்ணுதீகன்னு தேட்டரிலேயே திட்டிப்புடுவேன். அம்புட்டு கோவம் வரும். ரொம்ப வருஷத்துக்கு பெறவு இந்த விவேக் பய பண்ணுற காமெடி நல்லா இருந்திச்சு. பய மத்தவங்களை கிண்டல் பண்ணித் தான் காலத்தை ஓட்டுறான். இருந்தாலும் என்னவோ எல்லார் கூடவும் சேர்ந்து பாக்கலாம். மத்த பயக மாறி கத்தி பேசுறதில்ல. டபுள் மீனிங் வசனம் பேசுறதில்ல. சில பட வசனத்தயும் உல்டா பண்ணி பேசறதும் நல்லாத்தான் இருந்திச்சு. நடிகர் திலகம் சிவாஜி பராசக்தி படத்துல பேசுவாரே, அந்த மாதிரி இந்த பயபுள்ள ஒரு படத்துல பேசுனான். உண்மைய சொல்லுதேம்ல, தியேட்டர்ல விழுந்து விழுந்து சிரிச்சேன். எலேய் விவேக்கு, நீ நல்லா வருவலேன்னு வாழ்த்தவும் செஞ்சேன். ஒரு படத்துல நாலு ஆளுங்க கிட்ட அடி வாங்கிட்டு டீ கடை காரனப்பாத்து சொல்லுவன், "டேய், இங்க ஒரு ரத்த ஆறே ஓடுது. ஆளே இல்லாத கடையில யாருக்குல டீ ஆத்துதே"ன்னு கேப்பான் பாரு. ஒக்கா மக்கா, அத்த நான் இன்னிக்கு நினைச்சாலும் உருண்டு புரண்டு சிரிப்பேன்.

ஆனா, பயலுக்கு கொஞ்ச காலத்துல மண்ட கனம் எகிறிப்போச்சுன்னு நினைக்கேன். கனா கண்டேன் படத்துல எல்லாமே டபுள் மீனிக் தான். கேக்கவே காது கூசுது. பொண்டாட்டிய பாத்து, " நீளமா, எதுனா பாத்துப்புட்டா வாயை பொளந்துடுவியாடீ"ன்னு கேக்கான். சீ சீ என்ன டயலாகுல இது. இந்த எளவுக்கு தான் சின்ன கலைவாணர்ன்னு பேரு வச்சிருக்கியால. கலைவாணர் இப்படியெல்லாமா தான் பேசினாரோல.
பொண்டாட்டி கூட சண்டை போட்டா டான்ஸ் பாருக்கு தான் போணுமால. அப்படி பாத்தா, நட்டுல பாதி பயலுவ ராத்திரி முளுக்க அந்த மாறி எடத்துல தான் இருப்பானுங்க. ஆணுறை பத்தி நீ சொல்லலைன்னு யாரு அளுதா. ரொம்ப முக்கியம் பாரு. நாட்டுல இருக்கற ஆளுங்களை எல்லாம் கிண்டலடிச்சு வாங்கி கட்டிக்கிட்டது போதாதா? இப்போ போய் எதுக்குல கருணானிதிய கிண்டலைடிக்கே???

எலேய், நல்ல காமெடி பண்ணு. இப்படி வக்கிரமா பண்ணின, இவ்வளவு சம்பரிச்ச பேரெல்லாம் ஒரே நாள்ல பறந்துடும். பாத்து நடந்துக்கோ. அம்புட்டு தான் சொல்லுவேன். மவனே ஒளுங்க அடுத்த படம் பண்ணு. இல்லாட்டி ரொம்ப சீக்கிரம், சினிமலேர்ந்து காணாம போயிடுவ. அம்புட்டுதான்.

June 10, 2005

இன்டர்வியூ எடுக்க பயந்த கதை!!!

நேற்று என் மேலாளர் (அதான்பா manager) என்கிட்டே வந்து, விஜய் இன்னிக்கு ஒரு candidate interviewக்கு வராங்க. Interview பண்ண முடியுமான்னு கேட்டார். திருவிளையாடல் தருமிக்கு நான் குறுக்கே பொறந்தவனாச்சே. நமக்கு கேள்வி கேக்கறதா கஷ்டம்? ஓ! எடுக்கலாமே அப்படின்னு சொல்லிட்டேன்.
Candidate'ஓட பயோ டேடால எடுத்த உடனே ஒரு பொண்ணு பெயர் வேற போட்டிருந்திச்சா, ஒரே குஜால் தான். ( நல்ல வேளை, என் பொண்டாட்டி இதை படிக்க மாட்டா ;-)))) மேலே, படிக்க படிக்க என் வயித்துல புளிய கரைக்கற மாதிரி ஒரு ஃபீலிங். சாதாரணமா எல்லாருக்கும், interview attend பண்ணத்தான் பயப்படுவாங்க. அங்கே என்னத்தக் கேட்டு கொடயப்ப்போறானுங்களோன்னு, மனசுக்குள்ள புளிய கரைக்கும். இதென்னடா, interview எடுக்கவே பயப்படறானே இவன்னு நினைக்கிறீங்களா? அந்த பயோ டேடாவ பார்த்திருந்தா, எல்லாரும் இப்படி தான் கதி கலங்கி போயி நிப்பாங்க. மொத்தம் 13 பக்கங்கள். எம்மாடியோவ். படிக்கவே அரை மணி நேரமாச்சு. I would call it as an intimidating resume. சே, பேரு நல்லா இருக்கே. அவங்க neural networks and Fuzzy logic in DSP அப்படிங்கற சப்ஜெக்ட்ல Phd பண்ணி இருக்காங்க. அது மட்டுமா, MAtlab for Beginners அப்படிங்கற புஸ்தகம் வேற எழுதிருக்காங்க. இது தவிர ஒரு நல்ல company'ல project manager ஆ இருக்காங்க. அவங்களுக்கு கீழே 33 பேர் இருக்காங்க. (அம்மணிக்கு என்ன தொல்லையோ, அங்கேரிந்து ஏன் மாறப்பாங்கறதுதெரியலை).

சரி, மாட்டேன்னு எப்படி சொல்லறது. ஒரு மாதிரி தைரியத்த வரவழிச்சுண்டு, எடுக்கறேன்னு ஒத்துக்கிட்டேன். என் மனேஜரும் கூட இருப்பேன்னு சொன்னதும் கொஞ்சம் தைரையம் வந்தது. Interview'வும் ஆரம்பித்தது. எப்போதும் கேக்கற Tell about urself, what have u worked on, etc. கேள்விகளுக்கப்பறம், என் மனேஜர் 'what do u expect from this job' அப்படின்னு கேட்டதும், 'I would like to improve upon my managerial skills, to develop a team that works on core embedded projects' என்று சொன்னாள்.
நானும் என் மனேஜரும் ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிட்டோ ம். என் மனேஜர் சொன்னார், இங்கே நான் மட்டும் தான் மனேஜர். மத்த எல்லாரும் எஞ்சினியர் தான். வேணா, நீங்க ஒரு tech architect'ஆ இருக்கலாம். அம்மணி என்ன நினைச்சாங்களோ தெரியலை. 'என்னல்லாம் மறுபடியும் coding எல்லாம் பண்ண முடியாது. மனேஜர் போஸ்ட் இருந்தா சொல்லுங்க. இல்லைன்னா நடைய கட்டறேன்.' மறுபடியும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தரை பாத்துக்கிட்டோ ம். சாரி மடம். உங்களுக்கு ஏத்த வேலை இங்கே இல்லை. ரொம்ப நன்றின்னு சொல்லி வழியனுப்பி வச்சோம்.

அவங்க போனப்பறம், என் மனேஜர் சொன்னார், "இந்த HR மக்கள், எனக்கு கீழ வேலை பாக்கறதுக்கு ஆள் அனுப்பங்கடான்னு சொன்னா, என்னையே, தூக்கறதுக்கு ஆள் அனுப்பறாங்களேன்னு" நொந்துக்கிட்டார்.

இந்த மாதிரி candidates'ஓட பயோ டேடாவ process பண்ணற மக்களுக்கு ஒரு சிறு advice. Candidate என்ன விரும்பறான், அவன் எதிர்பாக்கற வேலை இங்கே இருக்கான்னு, முதல்ல தெரிஞ்சுக்கிட்டு அப்பறம், அவங்களை, இன்டர்வியூக்கு அனுப்புங்க. ஏதோ profile மட்டும் match ஆனாலே அனுப்பிடாதீங்க. எல்லாரோட நேரமும் வீணாகுது.

June 08, 2005

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !!!

என்னடா ரொம்ப நாளா யாரும் அறிக்கை விடலியே, என்ன ஆச்சு நம்ம அரசியல்வாதிகளுக்கெல்லாம்னு நினைச்சுக்குட்டு இருந்தேன். திடீர்னு அத்வானி விட்டார் பாரு ஒரு அறிக்கை. (பின்ன திடீர்னு விடாம, சொல்லிட்டா விடுவாக) ஜின்னா ஒரு மதச்சார்பற்றவர்னு ஒரு திரியை கொளுத்திப்போட்டுப்புட்டார். ஏன்யா யோவ், ஜின்னாஹ் பொழுது போகாமலா இந்தியாவ பிறிச்சாரு. நாட்டுல அவர யாரும் கண்டுக்கலை. என்னடா, நாம வளர்த்து விட்ட ஆளு இந்த காந்தி, இந்தாளுக்கு நாட்டுல இவ்வளவு மருவாத, நம்மள
எவனும் கண்டுக்கமாட்டேன்றாங்களே அந்தாளுக்கு வவுத்தெறிச்சல். என்ன பண்ணலாம்னு, யோசிச்சப்ப
தான், லார்ட் இர்வின் ( நமக்கெல்லாம், தெரிஞ்ச ஒரே லார்ட், லபக்கு தாஸு தான்!!!) எலேய், உனக்கு ஒரு அடையாளம் வேணும்னா, முஸ்லிம் மக்களுக்காக ஒரு நாடு வேணும்னு கேளுலன்னு ஒண்ணா இருந்த நாட்ட பிரிக்க வழி வகுத்தான். இந்தாளும், இது தான் சரின்னு முஸ்லிம் மக்காக்களெல்லாம், இந்தியாவுல இருந்தா உருப்பட முடியாது, நாங்க பிரிஞ்சு போறோம்னு சொல்லிப்புட்டு பிரிஞ்சாங்க. அவுக நாட்டுல யாரு வேணா வந்து இருங்கப்பான்னா சொன்னாரு. இருக்கற எல்லா ஹிந்துக்களௌயும், எலேய் இனிமே நீங்க இங்க இருக்காதீங்கடான்னு வெரட்டி விட்டானுங்க. அப்படி ஓடி வந்தவரு தானே, இந்த அத்வானி. மனுஷனுக்கு ஏதேனும் Alzeimer நோய் வந்துட்டுதா? ரெண்டு நாட்டுலயும் ஓடுன ரத்த ஆறெல்லாம் மறந்து போச்சா??

நம்மாளு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உறவுப்பாலத்த பலப்படுத்த போறென்னு பாகிஸ்தான் போனாரு. (உள்ளூர்ல இருக்கற பாலத்தயெல்லாம் விட்டுப்புட்டானுங்க. இதுல அயல் நாடு கூட உறவு பாலத்த பலப்படுத்த போறானுங்களாம்). போனவர் போனோமா, முஷராஃப பாத்தோமான்னு தேமேன்னு வர வேண்டியது தானே. ஜின்னாவோட சமாதிக்கு போயிருக்காறு. நம்மூருக்கு யாரு வந்தாலும், நேர காந்தி சமாதிக்கு கூட்டிட்டு போக மாட்டோ மா, அந்த மாறி, அவுக ஊருலயும் கூட்டிட்டு போயிருக்கானுங்க. (சென்னைக்கு எவனாச்சும் வந்தாக்க எம்.ஜி.ஆர். அண்ணா சமாதிக்கு கூட்டிட்டு போறாங்களான்னு தெரியலை !!!!) போனவரு ஒரு நாலு பூவ அள்ளிப்போட்டோ மா, வந்தோமான்னு இருக்காம, என்ன அறிக்க வேண்டிக்கடக்கு. ஜின்னா ஒரு மதச்சார்பற்ற பாகிஸ்தானத்தான் நிறுவ நினச்சார்ன்னு சொல்லித் தொலக்கணுமா. இந்தாளூக்கு, கடைசி காலத்துல, தான் பொறந்த ஊர்ல வாழணும்னு ஆசை வந்துட்டுதோ என்னவோ. அங்கே ஒரு பிளாட் வாங்கி போட்டு வூடு கட்டலாம்னு நினச்சாரோ என்னவோ!!

சரி இந்தாளுதான், ஏதோ புத்தி கெட்டுப்போய் ஏதோ உளறி இருக்கார்னு விட மாட்டானுங்களா. இந்தாளு எப்படி இப்படி சொல்லலாம்னு ஒரு தகராறு பண்ணணுமா. அவனவன் வூட்டுல தண்ணி கரண்ட் ஒழுங்கா வரமாட்டிகுது. அத விட்டுப்போட்டு 50 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு மனுஷன் மதவாதியா இல்லையான்னு சிண்டப்புடிச்சுக்கிட்டு நிக்கறானுங்க.

ஹிந்துத்வா ஹிந்துத்வான்னு பொலம்பிக்கிட்டுருந்த இந்தாளுக்கு ஜின்னா மதவாதியா இருந்தா என்ன, இல்லைன்னா என்ன. இந்தாளு எதுக்கு மதச்சார்பின்மை பத்தி திடீர்னு கவல. எதுக்கு மதச்சார்பின்மை ஸ்டண்ட் அடிக்கணும். ஆனா ஒரு விஷயம் பாராட்டணும். நம்ம பழய தாத்தா மாறி சொன்ன அறிக்கைக்கு வெளக்கமெல்லாம் குடுக்காம, "எலேய், நான் சொன்னது தான் சரி தான்ல. ஒன்னால என்னல பண்ணமுடியுமோ அத்த பண்ணிக்கோல"ன்னு, மனுஷன் ஸ்டிராங்கா இருக்காரு.

இதெல்லாம் பாக்கும் போது, நம்ம கௌண்ட மணி சொன்ன டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!!

June 07, 2005

நுழைவுத்தேர்வு ரத்து!!!!

அம்மா அடுத்தவாட்டியும் ஆட்சிய புடிக்கறதுக்கு அடிக்கற இன்னொரு பல்டி, தமிழ் நாட்டுல எஞ்சினீரிங் மெடிக்கல் படிப்புக்குண்டான நுழைவுத்தேர்வை ரத்து பண்ணிட்டாங்க. ஏழை எளிய மக்களால, நுழைவுத்தேர்வுல நிறைய மார்க் எடுக்க முடியலையாம். ஏழை எளிய மக்களும் படிக்கணும் தான். ஆனால், அதுக்காக, மனப்பாடம் பண்ணி மார்க் எடுக்கற ரகத்துலேர்ந்து, புரிஞ்சு படிக்கற பசங்களை பிரிச்சு காட்டறது இந்த நுழைவுத்தேர்வு தானே?
தமிழ் நாட்டுல 12th ல மார்க் எடுக்கறது ஒரு கஷ்டமே கிடையாது. Question எல்லாம் புஸ்தகத்துலேர்ந்து வந்தாகணும். இல்லைன்னா, எவனாவது கேஸ் போட்டுடுவான். Out of Syllabusன்னு சொல்லி முழு மார்க் கொடுக்கணும்னு கோர்டும் உத்தரவு குடுத்துடும். இதே ஜெயலலிதா அரசு 10-12 வருஷத்துக்கு முன்னாடி, CBSE'ல நிறைய மார்க் போட்டுட்டானுங்க. அதுனால state board'ல படிச்ச பசங்க நிறைய பேர் எஞ்சினீரிங் மெடிக்கல் படிக்க முடியாதுன்னு சொல்லி entrance மார்க் மட்டும் தான் valid'ன்னு சொன்னது. இந்த கூத்துக்கு ஒரு அளவே இல்லையா? இந்த உத்தரவு பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு பெரிய வரப்பிரசாதம். அவளுங்க என்னிக்கு புரிஞ்சு படிச்சாளுங்க. புக்ல என்ன எளவு இருக்கோ அதை அப்படியே உருப்போட்டு, பரீட்சைல வாந்தி எடுத்துதானே மார்க் வாங்குறாளுங்க. இதுனால பசங்களுக்கு ஒரு advantage. இனிமேல், நிறைய பொண்ணுங்க எஞ்சினீரிங் மெடிக்கல் சீட் வாங்குவாளுங்க. College'ல உள்ள ஃபிகர் index எகுரும். பசங்களுக்கெல்லாம் ஒரே ஜகால்டி தான்.

ஒரு மாசம் கஷ்டப்பட்டு படிச்சு, entrance test'ல நிறைய மார்க் வாங்கினவனுங்களெல்லாம் என்ன கேனக்கிறுக்கனுங்களா?? சரி entrance test'க்கு செலுத்தின பணத்த இந்த அரங்கம் refund பண்ணுமா?? ஒரு எளவும் கிடயாது. Entrance test'ல நிறைய மார்க் வாங்கினவங்களுக்கெல்லாம் அல்வா தான்.

கிரமாங்கள்ல இருக்கற ஏழை மக்களும் நிறைய மார்க் வாங்கணும்னா என்ன பண்ணணும்? அவங்களுக்கு நல்ல கோச்சிங் கொடுக்கணும். அவங்களையும் நகரத்து மக்களோட போட்டி போடற அளவுக்கு தயார் பண்ணணும். அதை விட்டுப்போட்டு, entrance test'னால் தான் ஏழை மக்களால சீட்டு வாங்க முடியலைன்னு சொன்னா இது என்ன நியாயம். கணக்குல 10 மார்க் கேள்விக்கு 6 மார்க் step மார்க்ன்னு போட்டே ஆகணும். பதில் தப்பா இருந்தாலுமே, ஒரு பையன், steps எழுதியிருந்தான்னா, அவனுக்கு ஸ்டெப் மார்க் உண்டு. இப்படி மார்க் எடுத்து எஞ்சினீரிங் காலேஜுக்கு போயி, அந்த பையன் எந்த லக்ஷணத்துல படிக்கப்போறான்.

இந்த மாதிரி படிப்பு விஷயத்துல அரசாங்கம் எப்படி தடீர்னு ஒரு முடிவு எடுக்கலாம். சில கல்வியாளர்களோட கலந்தாலோசித்துல இந்த முடிவு எடுத்துருக்கணும். ஏற்கனவே இங்க engineering syllabus எல்லாம் சூப்பரா இருக்கு. இந்த லக்ஷணத்துல படிக்கற மாணவர்களோட தரத்தயும் குறைச்சுட்டா இன்னும் சூப்பரா இருக்கும். என்னவோ பண்ணித்தொலைங்க. பாவம் மாணவர்களோட எதிர் காலத்துல மண்ணடிக்காதீங்க. இப்படி ஏதாவது பண்ணணும்னா, இந்த test எல்லாம் வக்கறதுக்கு முன்னாடி பண்ணித்தொலைங்க. பசங்க லீவுல கொஞ்சம் ஜாலியா இருக்கட்டும்.

June 03, 2005

காதலித்துப்பார்!!!!

இது சத்தியமா நான் எழுதினது இல்லை. ஒரு ஹிந்தி கவிதையின் மொழிபெயர்ப்பு. அங்கங்கெ என் இடைச்செருகல்களும் உண்டு ;-))

காதலித்துப்பார்! பல்ஸர் ஸீட் தேயும்
செல் பில் ஏறும்

காதலித்துப்பார்! பெட்ரோல் போட காசு இருக்காது.
ஆனால் பில் கேட்ஸ் போல் பேசுவாய்

காதலித்துப்பார்! கடன் மலை போல் இருக்கும்
ஆனால் ஹைக் கிடைத்தது போல் குதிப்பாய்.

காதலித்துப்பார்! பெங்களூரில் டிராஃபிக் ஜாம் இல்லை என்பாய்.
BTM'ல்லிருந்து ECக்கு இரண்டு நிமிடம் தான் என்பாய்.

காதலித்துப்பார்! பர்ஸில் காசு இருக்காது.
Credit card இருக்கே என்பாய்.
விசா மாஸ்டர் கார்ட் தெய்வமாகும்

காதலித்துப்பார்! forum கோவிலாகும்
மீடிங் பாயிண்ட் பிரகாரம் ஆகும்

காதலித்துப்பார்! இத்துப்போன பனியன் அணியும் நீ
வெஸ்ட் சைடில் தான் துணி வாங்குவாய்

காதலித்துப்பார்! பாக்கெட்டில் சீப்பு இருக்கும்
ஆனால் கையால் தான் தலை கோதுவாய்

காதலித்துப்பார்! hard disk ரொம்பினால் கூட,
Client அனுப்பிய மெயில் trash ஆகும்
அவள் அனுப்பிய மெயில்கள் மட்டும் அழியாது

காதலித்துப்பார்! Desktop'ல் ஒரு ஃபோல்டருக்கு
அவள் பெயரை rename செய்வாய்

காதலித்துப்பார்! Google'ல் காதலி
பெயரை search செய்து பார்ப்பாய்

காதலித்துப்பார்! ரிஸீவ்ட் கால்ஸில் உன்
காதலி பெயரை பார்த்து ரசிப்பாய்.
மிஸ்ட் கால்ஸ் கூட கதை சொல்லும்

காதலித்துப்பார்! பொமரேனியன் நாய்களும்
teddy bearகளும் பிடிக்கும்

காதலித்துப்பார்! சிலப்பதிகாரம் எழுதியது
sydney sheldon என்பாய்

காதலித்துப்பார்! Computer Mouse
உன் காதலி என்பாய்.
ஒவ்வொரு க்ளிக்கும் ஒரு முத்தம் என்பாய்
யாரும் பார்க்காத நேரத்தில் அவள் படத்தை
வால்பேபராக செட் செய்வாய்

காதலித்துப்பார்! மொபைலில்
"I Love you" என்று டைப் செய்வாய்
ஆனால் அனுப்ப மாட்டாய்

காதலித்துப்பார்! பிச்சைக்காரனுக்கு உனது
நோட்டுகள் தானமாகும்
Pizza Hut'ல் உனது பர்ஸ் ஊனமாகும்

கவிதை வரவில்லையா? காதலில் தோற்றுப்பார்.
கட்டாயம் கவிதை வரும்.

காதலித்துப்பார்! கடிதம் கூட ஒழுங்காக
எழுதிப்பழகாத நீ கவிதை எழுத முயற்சிப்பாய்

கவிதை வரவில்லையா? காதலில் தோற்றுப்பார்
கட்டாயம் கவிதை வரும்.


இதற்கு மாற்றுக் கவிதை எழுதினால் super'ஆ இருக்கும். அதாவது 'காதலில் தோற்றுப்பார்' என்று.

May 31, 2005

குழிக்குள் நெல்லை

ஜெயலலிதா ஆட்சில எது கெடக்குதோ இல்லையோ, அரசாங்கம் மக்களுக்கு நெறைய குடக்கும். நாடு நகரமெல்லாம் நல்லா தான் இருந்திச்சு. எவன் என்னத்த சொன்னானோ, எல்லா ஊருலயும், பாதாள சாக்கடை தோண்டுனானுங்க. மத்த ஊரு மக்களெல்லாம் இந்த தொந்தரவை எப்படியோ சமாளிச்சுப்புட்டானுங்க. அவுக ஊருலல்லாம், ஒரு ரோட்டை தோண்டினா, இன்னொரு ரோட்டுல போனானுங்க. இங்க திருநெல்வேலில, இருக்கறதே, ஒரு ரோடு. அத்தையும் தோண்டிப்போட்டுனாங்க படுபாவிங்க. இதுல கூத்து என்னனா, இவனுங்க தோண்டுறதுக்காக, ஒரு மஷினை வாடகை எடுத்துருக்கானுங்க. அதை சும்மாவே நிறுத்தக்கூடாதாம். எவ்வளவு சீக்கிரம் ஊரு முளுசா தோண்டி முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தோண்டிற்ராங்க. ஊரு முளுக்க ஒரே குழி மயம் தான். அதுலயும், எந்த விதமான தடுப்பும் கெடயாது. உள்ளார விழுந்தா, நேர பரலோகம் தான்.

ஏதாவது ஒரு ஏரியாவுல, வேலையை முழுசா முடிச்சப்பறம், அடுத்த ஏரியவை தோண்டலாம்ல. அந்த அறிவே கெடயாது. ஊருல ஒரு ரோடு கூட உருப்படியா இல்லை. ஒண்ணு தோண்டி போட்டிருப்பானுங்க. இல்லை, தோண்டின ரோட்டை, கல்லும் மண்ணும் போட்டு மூடிருப்பானுங்க.
பெருமாள் புரத்துல ஒரே ஒரு ரோடு மட்டும் புதுசா போட்டிருக்கானுங்க. அதுவும் முழுசா போடலை. நடுவுல ஒரு segment மட்டும் தார் ரோடு போட்டுருக்கானுங்க. அதுவும் ஒரு மழை பெஞ்சா புட்டுக்கும். அங்கே, ஏதேன் MLA வீடோ கட்சிகாரன் வீடோ இருக்குது போலிருக்கு.

பாளை பஸ் ஸ்டாண்டிலேர்ந்து முருகன் குறிச்சி வரைக்கும் பஸ்ஸே கெடையாது. வாய்க்கா பாலம் ரூட்டுல டூ வீலர் தவிர வேற எந்த வண்டியும் போக முடியாது. அட, அட் லீஸ்ட் இந்த வண்டிங்களை எல்லாம், பாளை பஸ் ஸ்டாண்டிலேயே ஒரு போர்டு வச்சு வேற வழில போங்கடான்னு சொல்லலாம்ல. அதுவும் கெடயாது. Rajendra Sports வரைக்கும் வந்தப்பரம் திரும்ப போன்னு சொல்லிடுவானுங்க. இத்த சொல்லறதுக்கு ரெண்டு மாமா நிப்பானுங்க.

கொடுமை, பழைய பஸ் ஸ்டாண்டிலேர்ந்து மதுரை ரோடு தான். இந்த ரோட்டையும் தோண்டிப்போட்டுடானுங்க. ஒரு jeep போக தான் வழியே இருக்கு. இதுலயும், ஏதாவது KPN வண்டி வந்து ரோட்டை மறிச்சுடும். இப்போ தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ஜெயலலிதா வறான்னு, A.R Lane ரோட்டை புதுசா போட்டாங்க. ரோடு எங்கன்னு தேடணும். அப்படி இருக்கு.

இதுல உள்ள கொடுமை என்னான்னா, ஜெயலலிதா ஆட்சி முடியறதுக்குள்ள, இந்த பாதாள சாக்கடை project'ஐ முடிக்கல, அவ்வளவு தான், நெல்லை நகர மக்களுக்கு, இந்த ஜென்மத்துக்கு நல்ல ரோடு கெடக்காது. சத்தியமா அடுத்த ஆட்சி வந்த ஒடனே, இந்த project'ஐ நிறுத்துவானுங்க. கேஸ் போடுவானுங்க. கேஸ் நம்ம ஆயிசு காலத்துல சத்தியமா முடியாது. நெல்லை மக்கள் கதி அதோகதி தான்.

கடவுள் தான் காப்பாத்தணும்.

April 29, 2005

இவர்களுடன் ரஜினி

ரஜினி படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு பரபரப்பு எல்லாம் இருந்த காலம் மலையேறிப்போய்விட்டதா என்று எண்ணும் அளவிற்கு அமைதியாக வெளிவந்து அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறாள் சந்திரமுகி. மன்னன் திரைப்படத்திற்குப் பிறகு, படத்தில் வரும் தன் பெயரையே, படத்தின் பெயராக வைக்காமல் செய்திருக்கிறார் ரஜினி. என்ன தான் வலுவான கதை இருந்தாலும் ஒரு திரைப்படத்தை நகர்த்திச் செல்வது திரைக்கதை மட்டுமே. ஆனால் முதல் பாதியில் திரைக்கதையில் நன்றாகவே கோட்டை விட்டிருக்கிறார் பி.வாசு. முதல் பாதியில் கதை நகரவே மறுக்கிறது.

கதைப்படி எல்லோருமே பணக்காரர்கள் தான். அதற்காக சாதாரணமாக இருக்கும் போது கூட பட்டுச் சேலை தான் உடுத்த வேண்டுமா?? வடிவேலு மனைவியை வைத்து ரஜினி அடிப்பது காமெடி அல்ல, காமநெடி. வடிவேலு செய்யும் நகைச்சுவை, பார்த்துப் பார்த்து புளித்துப் போன அதே நடிப்பு. இதை நகைச்சுவை என்று ஒத்துக்கொள்ளக் கூட முடியவில்லை. ப்ச் கொட்டச் செய்கிறது.

ரஜினியிடம் ஒரு வேண்டுகோள். தயவு செய்து, உங்கள் படங்களுக்கு தேவாவை மட்டுமே இசையமைக்கச் செய்யுங்கள். நீங்கள் நடந்து வரும் போது அந்த "ஹே ஹே" சத்தம் இல்லாதது ஒரு பெரிய குறையாகவே தோன்றுகிறது. வெகு நாட்களுக்குப் பிறகு பன்ச் டயலாக் இல்லாமல் ரஜினி படம் வந்திருக்கிறது. ஒரு பெரிய ஆறுதல். தளபதிக்கு பிறகு அறிவுரை இல்லாத படம். இயக்குனரின் தைரியத்திற்குப் பாராட்டுக்கள்.

ரஜினியின் குறல் ஒரு மாதிரியாக இருக்கிறது. பிளாஸ்டிக் ஸர்ஜரி செய்து கொண்டதன் விளைவோ??

ஜோதிகா பற்றி எழுதவில்லையென்றால், தமிழ் கூறும் நல்லுலகம் என்னை எப்பிறவியிலும் மன்னிக்காது. Stupendous Performance Jyothika. You outclassed every one. அதென்ன ஜோதிகாவுக்கு மட்டும் ஆங்கில பாராட்டு என்று எண்ணுபவர்களுக்கு என் விளக்கம், "ஜோதிகாவால் தமிழ் படிக்க முடியாதே. அதனால் தான் அங்கிலத்தில் எழுதினேன்". முதல் பாதியில் கூட்டத்தோடு கூட்டமாக இருந்தாலும், பின் பாதியில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதிலும் சந்திரமுகியாக மாறும் காட்சியில் மிரட்டுகிறார்.

ரஜினிக்கு ஜோடி இல்லாமல் டூயட் இல்லாமல் படம் எடுக்க முடியுமா?? அதற்காக நயந்தாரா வந்து போகிறார். அய்யாவை விட இதில் கொஞ்சம் உப்பியிருக்கிறார்.

இளைய திலகம் இளைக்கவே மாட்டாரோ?? பிரபு ஸார், கொஞ்சம் உங்க உடம்பை இளைக்க வைக்க ஏதாவது பண்ணக் கூடாதா? பார்க்கவே சகிக்கலை. எல்லோரும் மூக்காலேயே பேசுவது போல் ஒரு ஆடியோ எஃபெக்ட். எக்கச்செக்க கதா பாத்திரங்கள். மாளவிகா, நாசர், செம்மீன் ஷீலா etc. எதற்காக இவ்வளவு பேர் என்று தெரியவில்லை. ஆஹா ஓஹோ என்று மற்ற விமர்சனங்கள் கூறுவது போல் அப்படி ஒன்றும் இல்லை. I wouldn't say it is an 100% entertainer. Nevertheless, it aint boring.

சரி, தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைக்கிறீர்களா? படத்தில் எழுத்து போடும் போது, SUPER STAR என்று கிரஃபிக்ஸில் போடாமல் "இவர்களுடன் ரஜினி" என்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கு.



டெயில் பீஸ்:
எப்படியெல்லாம் ரஜினியை கடவுளுக்கு நிகராக சித்தரித்து படம் எடுத்தார்கள். ஆனால் இப்போது என்ன ஆயிற்று?? தமிழ் நாட்டையே ஆட்டி வைத்திருந்த ஒரு மாமனிதருக்கே இந்த நிலைமையென்றால், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களெல்லாம் எம்மாத்திரம். இனியாவது தலையும் மலையும், தனது படங்களில் பன்ச் டயலாக் அடிக்காமல், தன்னை ஒரு super Man'ஆக சித்தரித்துக் கொள்ளாமலிருந்தால் நல்லது.
ரஜினியின் இந்த நிலையை பார்க்கும் போது, விவேக்கின் ஒரு டயலாக் தான் நினைவிற்கு வருகிறது. இனியும் நான் இந்த கட்டுரையை தொடர்ந்தேனானால், சிலர் என்னை ஆள் வைத்து அடிக்க கூடும். அதனால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

Mr. Rajini, I think its time for you to pad up for the second innings. You may have to change your playing style. Remember your are made to follow on.

April 12, 2005

ஆதலினால் தாய்மொழியும் பயிற்றுவீர்

தாய்க்கு நிகராக தாய் நாட்டையும் தாய்மொழியையும் குறிப்பிடுகின்றோம். வேறெதற்கும் தாய் என்ற அடைமொழி கிடையாது. தாய் நாட்டைப் பிரிந்திருக்கையிலே, நம் நாட்டவனைக் கண்டால் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு முறை நான் அயல் நாட்டிற்கு சென்ற போது, தனிமை என்னை வெகுவாக வாட்டியது. என் நாட்டவன் யாரையாவது காண மாட்டேனா என்ற ஏக்கம் என்னுள்ளே எழுந்தது. ஆனால் என் தாய்மொழி பேசும் அண்டை நாட்டவனைக் கண்ட போது, எனது மகிழ்ச்சி அளவிடமுடியா உயரத்தை எட்டியது. என் தாய் மொழி பேசும் ஒருவனை சந்தித்ததில் தாயையே சந்தித்த மகிழ்ச்சி.

ஆனால், இன்று வெகுவான பெற்றோர்கள், தமது குழந்தைகளுக்கு தாய்மொழியை போதிக்க மறந்துவிட்டனர். தாய் மொழியிலே பேசினால் கூட அது ஒரு கௌரவக் குறைச்சல் என்று எண்ணுகிறார்கள். A for Apple , B for Ball என்று கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் அம்மா, ஆடு, இலை, என்று சொல்லிக்கொடுப்பதில்லை. ஒரு குழந்தையிடம் யானையின் படத்தைக்காட்டி, இது என்ன என்று கேட்டால், elephant என்று பதில் வருகிறதே தவிர, யானை என்று சொல்லத் தெரியவில்லை. One two three four என்று நூறு வரை சொல்லும் குழந்தைக்கு ஒன்று இரண்டு மூன்று என்று சொல்லத் தெரியவில்லை. என் பிள்ளை mummy daddy என்று தான் கூப்பிடுவான் என்று சில பெற்றோர்கள் பெருமை பட்டுக்கொள்கிறார்கள். பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சங்களிலே தாய்மொழி ஏதோ தவறான மொழி என்ற ஒரு மாயை ஏற்படுத்திவ்விட்டார்கள். நான் சில அரசியல் வாதிகளைப்போல, தாய் மொழியிலே தான் கல்வி கற்க வேண்டும் என்று சொல்ல வில்லை. சத்தியமாக இல்லை. போட்டி மிகுந்த இன்றைய உலகத்தில் எதிர் நீச்சல் போட வேண்டும் என்றால், ஆங்கிலத்திலே பயில்வது அவசியமாகிவிட்டது. இது ஒரு மறுக்க முடியா உண்மை. தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது என் வாதம் அல்ல. தாய்மொழியைப் புறக்கணிக்காமல் கல்வி கற்ப்பிப்போம் என்பதே என் வேண்டுகோள்.

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு Ba Ba Black Sheep சொல்லிக்கொடுக்கும் போது, அம்மா இங்கே வா வா என்ற பாட்டும் சொல்லிக்கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு Tinkle comics வாங்கும் போது, அம்புலிமாமாவும் சிறுவர்மலரும் வாங்கிக்கொடுங்கள். நெபோலியனையும், கார்ல் மார்க்ஸையும் பற்றிச் சொல்லிக்கொடுக்கும் போது, நம் சேர சோழ பாண்டியர் பற்றியும் சொல்லிக்கொடுங்கள். Harry Potter புத்தகங்கள் வாங்கும் போது, ஒரு பொன்னியின் செல்வனையும் வாங்குங்கள். குறைந்த பட்சம், பத்து குறளாவது கற்றுக்கொடுங்கள். At least திருவள்ளுவர் யார் என்று கேட்க வைக்காதீர்கள். ஔவ்வையாரும், பாரதியாரும், கம்பரும் எழுதாததை, மில்டனும், டென்னிசனும் வேர்ட்ஸ்வொர்தும் எழுதிவிடவில்லை. முடிந்தவரை வீட்டிலே, தாய் மொழியில் உறையாடுங்கள். சச்சின் டெண்டுல்கரே, வீட்டில் மராட்டியில் பேசுகிறார். தம் குழந்தைகள் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்.

பிற மொழி கற்பது பாபமல்ல. தாய்மொழியைப் புறக்கணிப்பது புண்ணியமுமல்ல.

பெற்றோர்களே, ஆதலினால் உங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழியும் பயிற்றுவீர்!!!!!!!

பி.கு. மேலே நான் சொன்ன இலக்கிய உதாரணங்கள் யாவும் தமிழிலே உள்ளதால், நான் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள் என்று சொல்லவில்லை. என் தாய்மொழி தமிழ் என்பதால், தமிழ் உதாரணங்கள் கொடுத்துள்ளேன். மலையாளம் எண்ட மாத்ரு பாஷா என்று பரைபவர்கள், மலையாள உதாரணங்கள் போட்டுக்கொள்ளலாம் :))))

April 07, 2005

திரையில் உலர்ந்த கவிதைகள்

சில அற்புதமான கவிதைகளுக்கு நல்ல இசை சேர்த்தால், அந்த இசை அதில் மறைந்திருக்கும் கவிதை வரிகளை வெகுவாகவே overshadow செய்த்துள்ளன. அப்படி இசையால் overshadow செய்யப்பட்ட சில கவிதைகள் இங்கே.

அதனால் இந்த blog'க்கு திரையில் மலராமல் உலர்ந்த கவிதைகள், என்று பெயரிட்டுள்ளேன்.


படம்: ஒரு தலை ராகம்

கவிஞர்: டி.ராஜேந்தர்


இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம், இது நதியில்லாத ஓடம்.


நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப்பார்க்கிறேன்,

வடமிழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்.


வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொட்டுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்,

விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப்பார்க்கிறேன்

விருப்பமில்லா பெண்ணை எண்ணி, உலகை நான் வெறுக்கிறேன்.


உளமறிந்த பின் தானோ, அவளை நான் நினைத்தது,

உறவுருவாள் என தானோ மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக்கொண்டு, கவிதை நான் வடிப்பது

ஒரு தலையா காதலிலே, ஏத்தனை நாள் வாழ்வது.


அதே படத்திலே இடம் பெற்ற இன்னொரு பாடல். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பாடல் hit ஆன அளவிற்கு, மேலே உள்ள பாடல் ஹிட் ஆக வில்லை.


வாசமில்லா மலரிது, வசந்தத்தை தேடுது

வைகையில்லா மதுரையிது, மீனாட்சியைத்தேடுது

ஏதேதோ ராகம், என்னாளும் பாடும்,

அழையாதார் வாசல் அலை வைத்து ஓடும்


பாட்டுக்கொரு ராகம், ஏற்றி வரும் புலவா,

உனக்கேன் ஆசை நிலவவள் மேலே

மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை,

உனக்கேன் ஆசை கலைமகள் மேலே


என்ன சுகம் கண்டாய் இன்று தொடர்ந்து,

உனக்கேன் ஆசை ரதியவள் மேலே

வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை என்றும்

உனக்கேன் ஆசை மன்மதன் போலே.


மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்

உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட

மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே

உனக்கேன் ஆசை உறவென்றும் நாட


வாசமில்லா மலரிது, வசந்தத்தை தேடுது

வைகையில்லா மதுரையிது, மீனாட்சியைத்தேடுது

ஏதேதோ ராகம், என்னாளும் பாடும்,

அழையாதார் வாசல் அலை வைத்து ஓடும்


நமக்கெல்லாம் டி.ராஜேந்தரை அடுக்கு மொழி வசனம் எழுதும் ஒரு வசன கர்த்தாவாகத்தான் தெரியும். அவருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மாபெரும் கவிஞனை நிறைய மக்களுக்கு தெரியாது.


இன்னும் சில பல உலர்ந்த கவிதைகள் அடுத்த blog'இல் பார்ப்போம்.

March 28, 2005

காதல் கொண்டேன்

ஒரு நாள் என் மனைவியோடு கதைக்கையிலே, திடீரென வினவினாள் "நீங்கள் இதற்குமுன் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா?"
"ஆஹா இப்படி கேட்டுப்புட்டாளே, இதுக்கு நான் என்னத்தைச்சொல்ல" என வடிவேலு ஸ்டைலில் யோசிக்க ஆரம்பித்தேன். நான் என் வாயை திறப்பதற்குள், "என்ன பயங்கர ஆலோசனை?" என்றாள். "ஒன்றும் இல்லை. யாரிடமிருந்து ஆரம்பிக்கலாம் என்று தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன் என்றேன்." அவ்வளவு தான். அவள் முகம் சிவந்து புருவம் உயர்ந்து, எங்கள் ஊரில் கார்த்திகைக்கு கொளுத்தும் சொக்கப்பானை போல் கொழுந்து விட்டு எரியத்தொடங்கி விட்டது. "அடப்பாவி மனுஷா!! எத்தனை பொண்ணுங்க பின்னாடிடா சுத்தி இருக்கே" என்று தொடங்கி விட்டாள். அதற்குப்பின் அவள் சொன்னதெல்லாம் "unparliamentary" சொற்கள். அவள் சற்று நிறுத்தியதும் நான் சொன்னேன், "அடி பைத்தியக்காரி. உன்னிடம் தான் என் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லியிருக்கிறேனே. நான் sight அடித்த, என்னை sight அடித்த எல்லா பெண்கள் பற்றியும் சொல்லி இருக்கிறேனே. நான் உன்னிடம் விளையாடுகிறேன் என்பது கூட உனக்கு புரியவில்லையா?" என்று சமாதானம் கூறினேன். "இந்த மொகரக்கட்டையை sight வேற அடிச்சிருக்காங்களாம். நான் நம்ப மாட்டேன்" என்று முணுமுணுத்த்தாள்.
"சரி, ஒரு பொண்ணு கூட உங்களை disturb பண்ணலியா??ஒருத்தியைப்பார்த்தும் உங்களுக்கு காதல் என்னும் உணர்வே வரவில்லையா?" என்றாள். இவ்வார்த்தைகள் என்னை ஒரு முறை உலுக்கிப்போட்டு விட்டது. சற்று தனிமையிலே அமர்ந்து யோசித்தேன். "எத்தனை பெண்களை கடந்திருப்பேன். இப்படி என் மனம் துடித்ததில்லை" என்ற பாடல் வரிகளை எத்தனை தடவை ஹம் செய்திருப்பேன். இந்த வரிகளுக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில், என்னை யாருமே cross செய்யவில்லையா" என சிந்தித்தேன்.
அப்போது தான் என் சிந்தையிலே சில நாள் குடிகொண்டிருந்து என்னை சில நாள் அவள் நினைவாலேயே என்னை பித்துப்பிடித்தவன் போல் அலையச்செய்தவள் என் நினைவ்வுக்கு வந்தாள். ஆம் அவளிடம் நான் கொண்டிருந்தது காதல் தான்.
சென்றேன் என் மனைவி இருக்கும் இடம் நோக்கி. (ஆமாம் இவுக இருக்கிறது அந்தப்புறம் பாரு!!!)
சொன்னேன் அவளிடம். "கொண்டேன் கொண்டேன். நானும் காதல் கொண்டேன்"."அப்படியா, யாரந்த நாரிமணி. கல்லுக்கு நிகரான நெஞ்சுடைய என் கணவனையும் கரைத்த அந்த மாதரசி யார்" எனக்கேட்பாள் என நினைத்தேன். ஒரே ஒரு பார்வ்வையிலேயே இவையனைத்தையும் கேட்டாள்.

அவளை நான் கண்டதில்லை. ஆனால், அவளைக்கண்டால் மன்மதன் ரதியை விவாகரத்து செய்துவிடுவான்.
அவள் குரல் கேட்டதில்லை. ஆனால், அவள் பாடினால், கலைமகளும் அவளிடம் இசை பயில ஏங்குவாள்.
அவளிடம் நான் பழகியதில்லை. ஆனல், அவள் ஈகையிலே கர்ணனையும், கருணையிலே புத்தரையும் மிஞ்சியவள்.
ஐஷ்வர்யா ராயை எட்டாவது அதியசயம் என வைரமுத்து பாடினார். இவளைக்கண்டிருந்தால், இவள் தான் முதல் அதியசம். மற்றவை, இவ்வளுக்கு பிறகு தான் என்று பாடியிருப்பார்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒன்று மட்டும் அழகு. இவளுக்கு மட்டும் ஒவ்வொன்றுமே அழகு. இப்படி சொல்லிக்கொண்டே போனேன்.

"நான் நினச்சது சரி தான்" என்றாள். "என்ன நினைத்தாய்", என்றேன். "இல்லை கொஞ்ச நாளாவே, உங்க போக்கே சரியில்லை. தனியா பேசிக்கிறீங்க. சிரிச்சுக்கறீங்க. தூக்கத்துல பொலம்புரீங்க. ஏதோ நட்டு கழண்டிருக்குன்னு நான் நினைத்தது சரி தான்" என்றாள். "அடியே என் நட்டு loose'ஆ இருக்கட்டும், இல்லை டைட்டா இருக்கட்டும். நான் காதலித்த பெண் யாரென்று நீ கேட்கமாட்டாயா". "நான் கேக்காட்டாலும் நீங்க சொல்லாம இருக்கப்போரதில்லை. ம்ம் சொல்லுங்க. நீங்கள் காதல் கொண்ட பெண்ணின் பெயரை" என்றாள். "அவள் பெயர் குந்தவை" என்றேன். என் மனைவியின் முகபாவனையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அந்த பாவத்தின் பெயரும் தெரியவில்லை. நவரசங்க்களிலே fit ஆகாத ஒரு ரசம் என்று தான் சொல்ல வேண்டும். "இப்படி ஒரு பெயரை நான் கேள்விப்பட்டதேயில்லை. சரி யாரவள். எங்கே இருக்கிறாள். என்ன செய்கிறாள்" என்று அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுத்தாள். அவள் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவள் என்றும் சோழ பேரரசன் ராஜ ராஜ சோழனின் தமக்கை என்று கூறியது தான் தாமதம், "perfectly confirmed. ரொம்ப முத்தியே போச்சு. ஏதாவது நல்ல psychiatrist'இடம் காட்ட வேண்டிய கேஸ்" என்றாள் என் காதலை புரிந்து கொள்ளாத என் மனைவி.
ஆம் நான் காதல் கொண்டது சுந்தர சோழரின் புதல்வியை. தன் இளவல் அருமொழி வர்மனை ராஜ ராஜனாக மாற்றியவளை. வீரத்திருமகனான வந்தியத்தேவனின் நெஞ்சையும் கரைத்தவளை. ஒரு முறை குடந்தை சென்றிருந்த போது, தஞ்சையைக்கடக்க நேரிட்டது. காவிரிக்கரையிலே உள்ள ஒவ்வொரு மண்டபத்தைப்பார்க்கும் போதும், "என் குந்தவை இந்த இடத்திற்கு வந்து நீராடியிருப்பாளோ என்று எண்ணி அகமகிழ்ந்தேன்.
என் தாய் என்னிடம், "உனக்கு எப்படிப்பட்ட பெண்ணடா மனைவியாக வரவேண்டும்" எனக்கேட்டபோது, சட்டென என் மன வானில் தோன்றிய மின்னலின் பெயர் "குந்தவை". "அம்மா, எனக்கு குந்தவை போல் ஒரு பெண் மனைவியாக வரவேண்டும்" என்றேன். எனக்கு திருமணம் நிச்சயம் ஆன போது, குந்தவையின் எந்தெந்த குணங்கள் என் fiancee'யிடம் இருக்கிறது எண்ணிப்பார்த்தேன்.
என்னுடைய இந்த காதல், ஏனோ ஒரு சாமான்னிய மனித உள்ளம் படைத்த எவருக்கும் புலப்பட மறுக்கிறது.
மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனித காதல் அல்ல.. காதல் அல்ல...
அதையும் தாண்டி புனிதமானது... புனிதமானது...

March 23, 2005

ஏழு நாட்களில் 5 கிலோ குறைக்க எளிய வழி

பிறர் உங்களை குண்டு, உருளைக்கிழங்கு என்று அழைக்கிறார்களா? எடை குறைக்கிறேன் பேர்வழி என்று Gym'க்கு மாதம் 200 ரூ. தண்டம் அழுகிறிர்களா?? இதோ எழே நாளில் 5 கிலோ எடை குறைக்க எளிய வழி.
இதனால் எந்த side effect 'உம் கிடையாது.

முதல் நாள்:
இன்று நீங்கள் காட்டு வாசியாக வாழ வேண்டும். பயப்பட வேண்டாம். இன்று வெறும் பழங்கள் தான் ஆகாரம். ஆனால் வாழை சேர்க்கக்கூடாது. வ்வாழை தவிர வேறு எந்த பழத்தையும் உண்ணலாம். அளவே கிடையாது. நிறைய பழச்சாறும் அருந்தலாம். இதிலும் வாழை கூடாது. தர்பூஷணி மிகவும் நல்லது.
தர்பூஷணி மிகவும் நல்லது. இந்த உணவால் ஒரே கஷ்டம் என்னவென்றால், மிகுதி நேரம் கழிப்பரையிலேயே செலவிட நேரிடும். (என்னடா இது??) உடலில் நிறைய நீர் சுரக்கும். அதனால் சிறு நீர் நிறைய போகும். அச்சம் வேண்டாம்.


இரண்டாம் நாள்:
இன்றும் நீங்கள் காட்டுவாசி தான். ஒரே வித்தியாசம். இன்று பழங்களுக்கு பதிலாக காய்களை உண்ண வேண்டும். இதிலும் அளவே கிடையாது. உருளைக்கிழங்கு சேர்க்கலாகாது. நிறைய நீர் அருந்த வேண்டும். முடிந்தால் எல்லா காய்களையும் போட்டு மிளகு தூவி சூப் வைத்து குடிக்கலாம். பழச்சாறும் அருந்தலாம். "டேய், எங்களை எல்லாம் ஒரு வழி பண்ணறதுன்னே முடிவ்வு பண்ணிட்டியா" என்று யாரும் திட்ட வேண்டாம்.

மூன்றாம் நாள்:
இன்றும் நீங்கள் நாட்டுவ்வாசியாக முடியாது. இன்று காய் மற்றும் கானிகளை உண்ண வேண்டும். "வரும் வாரம் காய் கறி வாரம்" என்று நினைக்கிறீர்களா??? இன்றும் வாழை கூடாது. இன்று சூப் மற்றும் பழச்சாற்றை அருந்தலாம். காலை உணவிற்கு ஒரு பெரிய உருளைக்கிழங்கை சற்றே நெய் விட்டு வெந்து உண்ணலாம். "எலேய் அறை படப்போறே" என்று நீங்கள் சொல்வது என் காதில் நன்றாகவே விழுகிறது :)

நாங்காம் நாள்:
கடந்த 4 நாட்களாக எதை தவிர்த்தோமோ அது தான் இன்று தான் உணவு. ஆம். இன்று வெரும் வாழைப்பழம் தான். எவ்வளவு உண்ண முடிகிறதோ அவ்வளவு உண்ணலாம். எவ்வளவு தான்டா வாழைப்பழம் திங்கறது'ன்னெல்லாம் கேக்கப்படாது. சொன்னா செய்யணும். அது தான் சமத்துப்பையனுக்கு அழகு. இரண்டு கப் பாலும் குடிக்கலாம். ஆனால் சர்க்கரை கூடாது. ஏன் விட்டா மாட்டுக்காம்பிலிருந்து நேரா குடிச்சா இன்னும் நல்லது'ன்னு சொல்லுவே பொலிருக்கு :((

ஐந்தாம் நாள்:
இன்று கொழுப்பு சத்து சேர்க்கும் நாள். (ஆமாமாம் கண்டிப்பா தேவை. உன்னை வந்து நாலு சாத்து சாத்தரதுக்கு இது ரொம்ப தேவை). காலை உணவுகு இரண்டு பன்னும் கொஞ்சம் வேக வைத்த பன்னீரும் உண்ணலாம். இதை பர்கர் போல் கொஞ்சம் தக்காளியும் சேர்த்து உண்ணலாம். சுவைக்கு மிளகு பொடியும் உப்பும் சேர்த்துக்கொள்ளலாம். இது தவிர வெரும் தக்காளி தான் இன்று உணவு. நான் சொல்லுவது காய்கறியான தக்காளியை. வேறேதும் அர்த்தம் கொள்ள வேண்டாம். உங்கள் நீர் அளவையும் இரண்டு மடங்காக அதிகறிக்க வேண்டும். (கிழிஞ்சது போ)

ஆறாம் நாள்:
நேற்று உண்டதை இன்று அளவில்லாமல் உண்ணலாம். நிறைய காய்களும் சேர்க்கலாம். உருளை கூடாது. நிறைய நீர் அருந்த வேண்டும்.

ஏழாம் நாள்:
எப்போடா இந்த நாள் வரும் என்ற எதிர்பார்ப்பு உங்களுள் அதிகறித்து விடும். இன்று கொஞ்சம் சோறும் பழச்சாறும், காய்காளும் உண்ணலாம். ஒரு வேளைக்கு மட்டும் தான் சோறு. மற்ற வேளைகளுக்கு காய்கள் தான். என்ன வேண்டுமானாலும் உண்ணலாம். எண்ணெய் கூடாது.
இந்த ஏழு நாட்கள் கழிந்ததும் 5 கிலோ எடை குறைந்திருக்க வேண்டும். இல்லையென்றால், மீண்டுமொரு வாரம் இதை repeat செய்ய வேண்டும். நீங்க repeat செய்யுங்க. நான் appeat ஆகிக்கறேன். :))))))
Belive me this works.

February 21, 2005

மாமிகளும் உறவுகளும்

வெகு நாட்கள் கழித்து கடந்த வார விடுமுறைக்காக சென்னைக்குச் சென்றிர்ருந்தேன். முக்கிய காரணம், என் தங்கை, கோவைலியிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்துள்ளாள். அவளுக்கு குடித்தனம் வைப்பதற்காக, நானும் என் மனைவியும் சென்னைக்குச் சென்றோம். அப்படியே, எனது நண்பி கால்யாணத்திற்கும் போய் வரலாம் என்று தான் முடிவெடுத்திருந்தோம். சென்னையில் இந்த தடவை, அவ்வளவாக வெயில் தெரியவில்லை. (பெங்களூரில் வெயில் கூடிவிட்டதாலோ என்னவோ???!!!) குடித்தனம் வைக்கும் படலம் எல்லாம் இனிதே அரங்கேரியது.

ஞாயிறு மாலை, நண்பியின் வரவேவிற்புக்காக சென்றோம். சென்றதும், நேரே மணமேடைக்குச்சென்று, வாழ்த்து மடலையும், பரிசையும், அவர்கள் கையில் கொடுத்து விட்டு, courtesy வாழ்த்தான wish you both a very happy married life எல்லாம் சொல்லி, புகைப்படக்காரர்களுக்கு பல்லைக்காட்டி விட்டு, நேரே உணவருந்தும் கூடத்துக்குச் சென்றோம். மணமகளை மட்டுமே தெரிந்திருந்ததனால், யாரோடும் பேச வேண்டிய நிர்பந்தம் இல்லை.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, ஒரு மாமி என் மனைவியிடம் வந்தாள். "ஏய் செளக்கியாமா??? எப்போ வந்தே??? எப்படி இருக்கே?? ஆத்துக்காரர் எப்படி இருக்கார்?" என்று மடமடவென விசாரிப்புகள் அரங்கேரின. "சாப்பிட்டுவிட்டு வா. வெளியே wait பண்ணறேன்" என்று போய் விட்டாள். நாங்கள் கை கழுவி வந்ததும் எங்களுக்காகவே காத்திருந்தது போல், என் மனைவியிடம் குசலம் விசாரித்தாள். இவள் மட்டும் தான் என்று பார்த்தால், ஒரு பெரிய பட்டாளமே, என் மனைவியை சூழ்ந்து நிற்கிறது. என்னையும் எல்லொரிடமும் அறிமுகம் செய்து வைத்தார்கள். எனக்கு ஒரே tension. (உனக்கு என்னிக்கு தான் டென்ஷன் இல்லை???) ரயிலுக்கு நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இவர்களது அறிமுகாப்படலம் இன்னும் முடிந்த பாடில்லை. பிறகு, என் மனைவி கையில் ஒரு பக்ஷண கவர் தாம்பூலப்பை, எல்லாம் கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. வெளியே வந்ததும், யாரந்த மாமி என்றேன். என் மனைவி சொன்னாள், "முதலில் எனக்கே தெரியவில்லை". பிறகு அந்த மாமியே தன்னை அறிமுகம் செய்து கொண்டாளாம். "என் பாட்டியின் அக்காவின் மாட்டுப்பொண் என்றாள். நான் ஒரு பெரிய கொட்டாவியே விட்டு விட்டேன். அந்த மாமியின் அண்ணா பையன் தான், என் நண்பி மணந்து கொள்ளும் மணமகன். ஆக, பெண் வீட்டுக்காரனாகாப்போய், மாப்பிள்ளை வீட்டுக்காரனய் திரும்பி வந்தேன்.

சரி தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் குழம்பிப்போய் நிற்பது என் கண்ணுக்கு புலப்படுகிறது. எந்த கல்யாணத்திற்குப் போனாலும், இம்மாதிரி ஓரிரண்டு மாமிகள் உண்டு. எங்க அக்காவோட நாத்தனாரோட, மச்சினரோட மாட்டுப்பொண்ணோட.... என்று சொல்லிக்கொண்டு உறவுகளை ஒரு full cycle கொண்டு போகும் மாமிகள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். எப்படியாவது ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்திவிடுவார்கள்.
வாழ்க இம்மாதிரியான மாமிகள். வளர்க நம் உறவெனும் வ்ருட்சம்.

February 18, 2005

'காதல்' திரைப்படம் - ஒரு கண்ணோட்டம்

படம் பார்த்தே ரொம்ப நாளாகிவிட்டதே, என்ன படம் பார்க்க போகலாம் என்று ஒரு நாள் யோசித்துக்கொண்டிருந்தேன். அதுவும் கல்யாணமாகி, பொண்டாட்டியைக்கூட்டிக்கொண்டு ஒரு படம் கூட இன்னும் போகவில்லையே, நாளைக்கு சன்ரைஸ் நீங்கள் கேட்ட பாடல்ல விஜய் சாரதி கேக்கும் போது சொல்லறதுக்காகவாது, ஒரு படம் போயே ஆஅக வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, என் மனைவி காதல் படம் போகலாம் என்று ஐடியா கொடுத்தாள். சரி, இந்த படத்துக்கே போகலாம் என்றும் முடிவும் ஆகிவிட்டது. பெங்களூரிலே எல்லாம் காஸ்ட்லி. சினிமா டிக்கட் உட்பட. 100 ரூபாய் கொடுத்து இரண்டு டிக்கட்டும் வாங்கியாச்சு. போனவுடன் படமும் ஆரம்பமாகிவிட்டது.

எடுத்தவுடன், ஒரு காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிப்போவதுடன் படம் ஆரம்பிக்கிறது. (வேற யாருடா ஓடிப்பாவா? அசடு!!!!) பிறகு எப்படி தங்கள் இருவருக்குள் காதல் மலர்ந்தது என்பதை, நாயகனும் நாயகியும் (அதாங்க ஹீரோவும் ஹீரோயினும்!!!! இப்படி சொல்லலைன்னா திருமாவளவன் கோவிச்சுப்பார்;-(( ) தனித்தனியே யோசித்துப்பாக்கறாங்க. (என்னடா, திடீர்னு கொச்ச தமிழுக்கு மாறிட்டே???) இது தான் படத்தோட ஸ்வாரஸ்யமான பகுதி. முதல் பாகம் முழுவதும் மதுரைல நடக்குது. ரொம்ப யதார்த்தமா, காட்டியிருக்காரு. எல்லாத்திலயும் மதுரை மண்வாசனை. பேச்சு முதல் ஏச்சு வரை, எல்லாமே மதுரைமயம் தான். அதிலயும், அந்த workshop குட்டிப்பையன் பேசும் தமிழ் மிக மிக யதார்த்தம். (ஆமாமாம், மத்தவங்க பேசறது என்ன பதார்த்தமா??? சே யதார்த்தம் பதார்த்தம், எதுகையும் மோனையும் கலக்கலா இர்ருக்குல்ல???) நாயகிக்கு இரண்டாம் சந்திப்பில் காதல் மலர்கிறது. நாயகன் ஒரு நாள் அவளிடம் எரிஞ்சு விழுவதாலேயே அவளுக்கு அவன் மேல் காதல் வளர்கிறதாம். (எங்கப்பா இப்படி எல்லாம் பொண்ணுங்க இருக்காங்கன்னெல்லாம் கேக்ககூடாது!!!) அவனை அழுக்கா என அழைக்கிறாள். (நான் கூடத்தான், அழுக்கா இருக்கேன். ஆனால், என் மனைவிக்கு கோபம் தான் வருகிறது.) அவள் பூப்படைந்தவுடன் வெட்கமும் நாணமும் கூட தொற்றிக்கொள்கிறது. புதுமுக நாயகி சந்தியா, நன்னாவே பண்ணியிருக்கா!!!! சந்தியாவைப்பார்க்க கண்கள் கோடி வேண்டும். (டாய் டாய், உனக்கு கல்யாணம் ஆயாச்சுடா).

இப்போ நாயகனுக்கு வறேன். நாயகன், நமக்கு பாய்ஸ் மூலம் அறிமுகம் ஆகிய பரத். நல்லாவே பண்ணியிருக்கார். (அதென்ன பண்ணியிருகார்ர்ர்ர்ர்ர்ர்???) இவர் நல்லா டான்ஸ் ஆடுவார் என்பதற்காக ஒரு டான்ஸும் உண்டு. மதுரை ஊரிலே எந்த மெக்கானிக், இவ்வளவு ஸ்மார்டா இருக்கான்னு தெரியலை. அவ்வளவு அழகு. (அதுக்காக விட்டா, உன்னை ஹீரோவாப்போட முடியுமா??) முதல் பாகத்தில், நாயகன் நாயகியை நோக்க, நாயகி நாயகனை நோக்க (அதாங்க sight அடிச்சுக்கறாங்க), இப்படியே படம் நகர்கிறது. நாயகி வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை நிச்சயம் செய்யறாங்க. கல்யாணத்திலிருந்து தப்பிக்க இருவரும் சென்னைக்கு ஓடிப்போகிறார்கள்.
இனிமேல் தான் தலைவலி ஆரம்பம். என்ன தான் யதார்த்தமா இருந்தாலும் ஒரு bachelor hostel என்றால் இப்படித்தான் இருக்கும் என்றா காட்டவேண்டும். ஒவ்வொரு குட்டி கதாபாத்திரத்துக்கும் (character'ன்னு சொல்லேண்டா வெண்ணை!!!!) ஒரு flash back. நாயகனின் நண்பனாக வரும் ஸ்டீபன் அப்படியே வடிவேலுவின் தம்பி போல் இருக்கிறான். இவர்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்தி முடிக்கிறான். அப்பாலே, எல்லா ஹாஸ்டல் பசங்களும் காசு போட்டு இவங்களுக்கு குட்டித்தனமும் வைக்கிறாங்க்ய (ச்ச. நமக்கும் இந்த மதுரை பாஷை தொத்திக்கிச்சே!!!!). அதுக்குள்ளே, நாயகியின் சித்தப்பா அக்கம் பக்கத்தில் விசாரித்து சென்னை வந்து விடுகிறார். இவரைப்பார்த்தாலே, பயமா இர்ருக்குப்பா. அநியாயத்துக்கு சாதுவா இருக்கார். ஆனால், க்ளைமாக்ஸில் தான் இவரின் விஸ்வரூபம் தெரிகிறது.
நாயகி கதறி அழுகிறாள். இருவரையும் அழைத்துக்கொண்டு, ஊர் திரும்புகிறார். இனிமேல் படத்தில் அடுத்த 15 நிமிடங்களுக்கு ஒரே அழுகை தான். நாயகனை அடித்து துவைத்தெடுக்கிறார்கள். (பின்ன என்ன ஆரத்தியா எடுப்பாக???) நாயகன் உயிருடன் இருந்தாலே போதும் என்பதற்காக, அவன் கட்டிய தாலியை அறுத்து எறிகிறாள். அப்பாடா, படம் முடிஞ்சது, போகலாம் என்று நினைத்தால், அங்கு தான் திருப்பமே!!!! சில ஆண்டுகள் கழித்து என்று எழுத்து போட்டு, நாயகியை ஒரு பைக்கின் பில்லியன் சீட்டில் ஒரு குழந்தையுடன் காட்டறாங்க. (டேய், ஒழுங்கா உனக்கு எழுதத்தெரியலைன்னா விட்டுத்தொலையேன். ஏன் இப்படி, எங்க காழுத்தை அருக்கறே???) முன்னாடி ஒக்காந்திருப்பது அவளது கணவன். மடியில் அவர்களது கைக்குழந்தை. ஒரு தாடிக்காரனைப்பார்க்கிறாள். அவன் நெஞ்சில் தன் பெயர் பச்சை குத்தி இருப்பதைப்பார்த்து, அது தன் முன்னாள் காதலன் என்பதை அறிகிறாள். அப்படியே மயங்கி விழுகிறாள். நள்ளிரவில் அவனைத்தேடிவந்து அவன் முன் கண்ணீர் விட்டு அழுகிறாள். அவள் கணவன் அவளை ஒரு கரத்திலும், அவனை இன்னொரு கரத்திலும் அணைத்துக்கொண்டு நடந்து செல்கிறான். பிறகு ஒரு captioon போடுகிறார்கள். அவனை, ஒரு மன நல காப்பகத்தில் வைத்திரிந்து அவனுக்கு சிகிச்சை அளிக்கிறானாம். இப்படிப்பட்ட ஒரு மனிதனை, இப்படத்தின் இயக்குனர், ஒரு ரயில் பயணத்தில் சந்திக்க நேர்ந்ததாம். அந்த மனிதன் தான் இப்படம் எடுக்க அவருக்கு ஒரு inspiration'ஆம்.

சரி, இப்போ இன்னா சொல்ல வரைன்னு நீங்க கேக்கலாம். கேக்காட்டியும் கேட்டுதான் ஆகணும்.
படத்தை பார்க்கும் போது, அடடா, இன்னுமொரு பள்ளிப்பருவத்தில் ஏற்படும் காதலையும், அதன் தீவிரம் தெரியாது, குடும்பத்தை நிற்கதியாகிவிட்டு ஓடிப்போகும் காதலர்களின் செயல்களை 'சரி' என்றே முரசு கொட்டும் இன்னொரு படமா, என்று வருந்தினேன்.

அடேய் மூடர்களே, படங்கள் காட்டும் காதல்கள் எல்லாம் நடைமுறையில் எவ்வளவு முட்டாள்தனம். இதனால், எத்தனை பேருக்கு துக்கம் உண்டாகிறது. தன் வாழ்க்கையே, எப்படி அகிறது பார், என்று மண்டையில் சம்மட்டியால் அடிப்பது போல் உள்ளது. பள்ளிப்பருத்தில் காதல் வயப்பட்டிருக்கும் ஆண்கள் பெண்கள், இப்படத்தைப்பார்த்தாவது திருந்துவார்கள் என் நம்புவோம்.

பி.கு.
படத்த்தில் இப்படி ஒரு பாடல் வருகிறது. Excellent music and cinematography. நிஜமாகவே என் உள்ளத்தில் உதிரம் உதிர்ந்தது.

உனக்கென உயிருப்பேன்.
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்,
உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே, அழுவதேன்.
வழித்துணை நானிருக்க???
கண்ணீர் துளிகளை, கண்கள்
தாங்கும் கண்மணி, காதலை
நெஞ்சம் தான் தாங்கிடுமா??
கல்லறை மீது தான்
பூத்த பூக்கள் என்று தான்
வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா??
மின்சாரக்கம்பிகள் மீது,
மைனாக்கள் கூடு கட்டும்
நம் காதல் தடைகளைத்தாண்டும்.
வளையாத நதிகள் இல்லை.
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் ஆற்றும்.
நிலவொளியை மட்டும் நம்பி,
இலையெல்லாம் வாழ்வதில்லை
மின்மினியும் ஒளி கொடுக்கும்.

தந்தையையும் தாயையும் தாண்டி
வந்தாய் தோழியே, இரண்டுமாய்
என்றுமே நானிருப்பேன்
தோளிலே நீயுமே சாயும்போது
எதிர்வரும் துயரங்கள்
அனைத்தையும் நானெதிர்ப்பேன்.
வெண்ணீரில் நீ குளிக்க,
விரகாகி தீக்குளிப்பேன்
உதிரத்தில் உன்னைக்கலப்பேன்.
விழிமூடும் போதும் முன்னே,
விலகாமல் நானிருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்
நானென்றால் நானே இல்லை,
நீ தானே நானாய் ஆனேன்
நீ அழுதால் நான் துடிப்பேன்.