Pages

July 30, 2008

ஆடிக்காலம்

எந்தச் சானல் திருப்பினாலும் சதாவோ, ஸ்நேஹாவோ ஷ்ரியாவோ இல்லை மீரா ஜாஸ்மினோ ஏதாவதொரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விளம்பரங்களைப் பார்க்கும் பொழுது விகடனில் வந்த ஒரு ஜோக் தான் ஞாபத்திற்கு வருகிறது.

நீதிபதி: பக்கிரி, நீ ஏன் சரவணா ஸ்டொர்ஸில் உன் கை வரிசையைக் காட்டினாய்.
பக்கிரி: எஜமான், நான் அங்கே திருடினதுக்கு நடிகை சதா தான் காரணம்
நீதிபதி: அதெப்படி?
பக்கிரி: அவங்க தானே எல்லா சானலிலும் எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோன்னு பாடறாங்க. அதான் அங்கே திருடினேன். நீங்க தண்டனை கொடுக்கறதா இருந்தா அவங்களுக்குத் தான் கொடுக்கணும்

என் மனைவி ஜூலை முதல் தேதியிலிருந்தே "எனக்கு ஆடிக்கென்ன வாங்கித்தராப்புல ஐடியா" என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். அப்படியென்ன தான் ஆடிமாதத்திற்கும் ஜவுளிக்கடைகளுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. ஒரு முறை என் அப்பா, ஜவுளி கடை அதிபரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில், "சார், ஆடியில் எந்த வீட்டுலயும் விசேஷம் ஏதும் இருக்காது. பண்டிகையும் கிடையாது. ஸ்கூலும் திறந்துடுவாங்க. எங்க வியாபாரமெல்லாம் ரொம்பவே சுணங்கிப் போயிடும். வியாபாரத்தைப் பெருக்கத்தான் இந்த தள்ளுபடி விற்பனை அது இதுன்னு ஏதாவது ஏற்றி விட்டால், நம்மூர் பொம்பளைங்க கியூல வந்துடுவாங்க" என்று சொன்னாராம். இது நிஜமாகவே ஜவுளிக் கடை முதலாளி சொன்னாரா இல்லை என் அம்மா ஜவுளிக் கடைப் பக்கம் போகாமலிருக்க அப்பா இப்படி கிளப்பி விட்டாரா என்று தெரியவில்லை.

எங்கள் ஊரில் ஆடி மாசம் என்றால் காற்று பிய்த்துக் கொண்டு போகும். குற்றால சீஸனும் களை கட்டி விடும். இந்த வருடமாவது சீஸனுக்கு குற்றாலம் போகமுடியுமா என்று தெரியவில்லை. ஆடி மாசத்தில் தான் நானும் அவதாரம் எடுத்தேன் என்பதால் எனக்கிது கொஞ்சம் ஸ்பெஷல் மாசம். ஆடி அம்மாவாசை அன்று வானதீர்த்தம் அருவியில் (சின்ன ஆசை சின்ன ஆசை என்று மதுபாலா ஆடுவாறே) நல்ல கூட்டம் இருக்கும். ரோஜா படத்தில் மதுபாலா சொல்லுவாரே "பூக்குடையெல்லாம் எடுத்துக் கொண்டு வண்டி கட்டிக்கொண்டு செல்வோம் "என்று, அந்தத் திருவிழா நடக்கும் ஊர்.
ஆடிப் பெருக்கும் படு அமர்க்களமாக இருக்கும். இனி அதெல்லாம் எந்த ஜன்மத்திலோ?

July 28, 2008

கூட்டாஞ்சோறு

தசாவதாரம் இரண்டாம் முறை பார்த்தபோது இன்னும் நிறைய ரசிக்க முடிந்தது. சென்ற முறை பார்த்த போது கவனிக்காத வசனங்களை இம்முறை கவனிக்கவும் ரசிக்கவும் முடிந்தது.
உதாரணத்திற்கு, புஷ் பேசும் ஒரு வசனம்.
புஷ் தனது உதவியாளரிடம்: "Could you please explain it to me?"
உதவியாளர்: "Mr. President, it is a bit complicated:
புஷ் : "Don't explain it to me if it is complicated"
இன்னும் அசினையும் எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கும் விட்டுக்களையும் ரசிக்க இன்னும் 2 தடவை பார்க்க வேண்டும். அது வரை பெங்களூருவில் படம் ஓட வேண்டும்.

பெங்களூருவில் வெடி குண்டு பற்றிய பீதி அடங்குவதற்கு முன்பாகவே அஹமதாபாத் வெடி குண்டு வெடித்து இன்னும் நெஞ்சில் புளியைக் கரைத்துவிட்டது. அஹமதாபாதிலுள்ள எனது மாமா நலமாகவே இருக்கிறார்.

எல்லாவற்றையும் விட மிக மோசமான கொடுமையான செயல், இலங்கைக்கு எதிராக இந்தியா சந்தித்த படு தோல்வி. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், முரளிதரனும் மென்டிஸும் செய்த சூழ்ச்சிக்கு நிஜமாகவே ஆட்டம் போட்டனர். இனிமேலும் தொடரில் விளையாடாமல், "போங்கடா நீங்களும் உங்க ஸ்பின்னும்" என்று சொல்லிவிட்டு "மற்ற இரண்டு போட்டிகளிலும் நீங்களே ஜெயித்து விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டு வந்து விடலாம். ஏதோ அம்பயர் பரிதாபப்பட்டு கையைத் தூக்காமலிருந்தாலும் இந்த மூன்றாவது அம்பயர் வந்து ரொம்பவே படுத்தி விட்டார். முதலில் இந்த அப்பீல் முறையை ஒழித்தாக வேண்டும்.
"ஆமாம், சொல்லறதுல ஒண்ணும் குறைச்சலே இல்லை. அடுத்த மேட்ச் ஆரம்பிக்கட்டும், எந்த தீத்தாலாண்டியோ ஒக்காந்து பேச ஆரம்பிக்கதுலேர்ந்து பார்த்தாகிடும்" என்று என் மேலிடம் புலம்புவதை நான் யருக்கும் சொல்ல மாட்டேன்.
அலுவலகத்தில், சக உழைப்பாளினி(!!!) (அதாங்க colleague) கொடுத்த "மிஸ்டர் கிச்சா" என்ற கதைகளடங்கிய கிரேஸி மோஹன் எழுதிய புத்தகம் படித்தேன். புண்பட்ட நெஞ்சை இப்படித்தான் ஆற்ற வேண்டியிருந்தது. கிச்சா வந்து மூட்டிய கிச்சு கிச்சுவில் விழுந்து விழுந்து சிரிக்க முடிந்தது.
வாய் விட்டு சிரித்தால் நோய் மட்டும் தான் போகுமா? நம்மை சூழ்ந்த துன்பங்கள் கூட பறந்து போயிடும். கிச்சாவால் இந்திய கிரிக்கெட் வீரர்களைத் திட்டித் தீர்ப்பதை கொஞ்சமேனும் குறைக்க முடிந்தது.
இனிமேலும் இவர்களை வீரர்கள் என்று தான் சொல்ல வேண்டுமா. தமிழில் வேறு வார்த்தைகளே இல்லையா?

July 26, 2008

இனிமேலாவது விழித்துக் கொள்ளட்டும்

உதயகீதம் படத்தில் கௌண்ட மணி தேங்காயில் பாம்ப் என்றொரு புரளியைக் கிளப்பி விடுவார். அதற்கு ஒரு அர்ச்சகர், "கோயில்ல வச்சா. பஸ் ஸ்டாப்புல வச்சா, தியேட்டர்ல வச்சா, இப்படி தேங்காயில பாம்ப் வைக்கலோமோ?" என்று கேட்பார். அதற்கு கௌண்டர், தனக்கேயுரிர்ய நக்கலில் "வச்சுட்டாளே" என்பார்.
அது மாதிரி , "ஜம்முல வச்சா, காஷ்மீர்ல வச்சா, டில்லில வச்சா மும்பையில வச்சா. இப்ப பெங்களூரிலும் வைக்கலோமோ"

"வச்சுட்டாளே" என்று நக்கலிடித்து பதில் சொல்ல முடியவில்லை. குண்டு வெடிப்பின் சேதமென்னவோ பெரியதாக இல்லை. இருந்தாலும், நாம் தினமும் போய்க்கொண்டிருக்கும் இடத்திலேயே பாம்ப் வெடித்திருக்கிறதென்று நினைத்தாலே கிலி ஏற்படுகிறது. இதைத் தான் பாம்ப் வைத்தவன் எதிர்பார்த்தானோ? பாம்ப் வெடித்த கோரமங்களா பஸ் நிறுத்தத்தில், எத்தனையோ முறை என் மனைவியை இறக்கி விட்டிருக்கிறேன். இனி் அதே பேரூந்து நிலையத்தில் அவளை இறக்கி விடும் போது எனக்கு இந்த குண்டு வெடிப்பு தான் நினைவில் வரும்.
இன்னொரு குண்டு வெடித்த இடமான மடிவாலா என் அலுவலகத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரம் கூட இல்லை. என் நண்பர்கள் நிறைய பேர் அங்கே சென்று மதிய உணவிற்குச் செல்வார்கள். அங்கேயே உள்ள விப்ரோ அலுவலகத்தில் 3 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். ஏதோ ஆண்டவன் கருணையால் குண்டு வெடித்த இடங்களில் எங்கேனும் நான் இல்லை என்று தான் ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும்.
குண்டு வெடிப்பில் பலியான அந்தப் பெயர் அறியாத நபரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். நான் நாலமா, என்று விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும், "நாங்கள் எல்லோரும் இங்கு தற்சமயம் நலமாக இருக்கிறோம். தொடர்ந்து நலமாக இருப்பது கடவுள் கையில் தான் இருக்கிறது". அவர் தான் குண்டு வைக்கும் நபர்களின் மனதை மாற்ற வேண்டும். வேறென்னத்தைச் சொல்ல.

தொலைக்காட்சி ஊடகங்கள் ஆருஷி தல்வார் கொலையில் காட்டிய ஆவலை இந்த குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதிலும் காட்டினால், நிஜமாகவே இவர்களுக்கு நாட்டு நலனில் அக்கரையிருக்கிறது என்று ஒற்றுக்கொள்ளலாம்.
கர்னாடகா அரசுக்கு இது ஒரு wake up call. புலி வருது புலி வருது என்று சொல்லியே இவ்வளவு நாள் கடத்தியவர்கள் இன்று புலியை நேரிலேயே பார்த்தாயிற்று. இனிமேலாவது இவர்கள் ஒரு Anti-Terrorist Squad அமைப்பது உசிதம். நேற்று நடந்த குண்டு வெடிப்பின் அளவு மாட்டும் ஜாஸ்தியாகிருந்தால், It is completely unimaginable.

என் மேல் அக்கறை கொண்டு என் நலம் பற்றி விசாரித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி........ நன்றி.

July 25, 2008

கதை கேளு கதை கேளு - 3.1

இந்தக் கதைக்கு இரண்டு முடிவு தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். இதோ இன்னொரு முடிவு. எது பிடித்திருக்கிறதோ, அதை எடுத்துக்கொள்ளலாம். இது முடிவின் இன்னொரு version . அதனால் இது கதை கேளு கதை கேளு 3.1
-----------------------------------------------------------------------------------------------
"யாரு யாரு பேசறது. நா தழ தழைக்க இரண்டொருமுரை எச்சிலை விழுங்கியவாறு கேட்கலானான் சுரேஷ்.

"க்ரீடிங் கார்ட் கிடைச்சதா?", பெண்குறல் ஏக்கத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டது. ஒவ்வொரு துடிப்புக்கும் இதயம் இலவசமாக இன்னொரு முறை துடித்தது. சுரேஷுக்கு தன் இதயம் அடிக்கும் சத்தம் தனக்கே கேட்டது.
உடம்பில் அட்ரினலின் எங்கும் பாய வியர்த்துக்கொட்டியது."வந்தது என்று சொல்" என்று இதயம் இசைந்து கொடுக்க, "எந்த கார்ட் யார் போட்டது என்று கேள்" என்று மூளை முந்திக் கொண்டு கட்டளையிட்டது. மூளைக்குப் பணிந்து அதன் சொல்படி நடந்தான்.

"நிஜமாகவே வரலியா?" குரலில் ஏமாற்றம் தொனித்தது.

சுரேஷ், "ஓ நிஜமாகவே அனு தான் கார்ட் அனுப்பியிருக்காளா?" என்று மனதிற்குள் பயம் கலந்த மகிழ்ச்சி கொண்டான். இதே பெண்ணை பல முறை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாலும், அவள் பால் காதல் இருக்கவில்லை. அவளும் தன்னை காதலிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்திருக்கவில்லை. அப்படியிருக்க, திடீரென்று அவளே தன் காதலைச் சொல்வதால் திக்கு முக்காடிப் போய் நின்றான்.சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "நீங்க.... நீ, அனு தானே பேசறது?" அவன் கேட்டது தான் தாமதம், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இது அனு தானா, இல்லையா, ஐயோ மண்டையே வெடித்துவிடும் போலிருக்கே. அவள் குரல் எப்படி இருக்கும் என்று மனத்திரையில் ஓட்டி பார்க்க, அவன் மூளையில் செய்லபட்ட குரல் பரிசோதிக்கும் அல்காரிதம் தீர்மானமாக எதையும் சொல்லமுடியவில்லை. அவளாகவும் இருக்கலாம்; அவளில்லாமலாகவும் இருக்கலாம். அனுவேதான் என்று மனம் முடிவெடுக்க, மூளை அங்கீகரிக்க மறுத்தது. விடியும் பொழுது இதற்கு விடை கிடைக்கும் என்ற எண்ணத்தில் படுத்துறங்க முற்பட்டான். உறங்க நினைத்த பல முயற்சிகளனைத்தும் 'திரு'வை நீக்கி விட்டு வினைகளை மட்டுமே கொடுத்தன.
மறுநாள் யாரும் வீட்டில் அதைப் பேசாதிருந்தது, ஒரு மாதிரியான நிம்மதியைக் கொடுத்தது. யாரோ என்னோடு விளையாடுகிறார்கள் என்பதை அம்மா அப்பா புரிந்திருப்பது அவனுக்கு இன்னும் பெரிய நிம்மதி தந்தது. வினோதுடன் கல்லூரிக்குச் செல்லலானான். வினோதும் அதைப்பற்றி வாயைத் திறக்கவில்லை. "சரி தான், இது எல்லாரும் சேர்ந்து தான் இந்த நாடகம் நடத்தறாங்க போல. அதான் யாருமே நேற்று நடந்ததைப் பற்றி மூச்சு விடலை" என்று தனக்குள்ளே ஆறுதல் செய்து கொண்டான்.
தாம்பரம் ரயில் நிலையம் வந்ததும் எப்போதும் செல்லும் ரயிலில் ஏறப்போன வினோத்தை தடுத்து நிறுத்தினான். "ஏண்டா நிறுத்தறே. நாம எப்போதும் இந்த ட்ரெயின்'ல தானே போவோம். மற்ற பசங்களும் இதுல தானே வருவாங்க" என்றதற்கு, "காரணமாகத்தான் சொல்லறேன். அடுத்த ட்ரெயின்'ல போகலாம்" என்று பதிலளித்தான் சுரேஷ்.ஒன்றும் புரியாத வினோத் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கலானான். அடுத்த ரயில் வரவும் வினோத், "டேய் சுரேஷ், அந்த ரயிலிலேயே போயிருக்கலாமில்லையா? பாரு இதுல கூட்டம் ரொம்பி வழியுது"என்று எரிச்சலுடன் ஒரு வழியாக உள்ளே ஏறிக்கொண்டான். அடுத்தடுத்த நிறுத்தங்களில் கூட்டம் பெருகியதே தவிற குறையவில்லை. பழவந்தாங்கல் நெருங்க நெருங்க, சுரேஷுக்கு மீண்டும் மனம் இரட்டிப்பு வேகத்தில் துடிக்கலானது. "எப்போதும் போல அவள் போன ரயிலிலேயே போயிருக்க வேண்டும்" என்று ஒரு சர்வ சமய பிரார்தனை நடத்தினான்.
ஆண்டவன் கொட்டும் போது கூறையைப் பெயர்த்துக்கொண்டு தான் கொட்டுவானாம். கஷ்டங்களிலும் அப்படித்தான் போலிருக்கு. பழவந்தாங்கலில் உள்ள ஆலைகளுக்குச் செல்லும் ஊழியர்கள் சிலர் இறங்க சற்றும் எதிர்பாரத அனுவும் இவர்கள் பயணிக்கும் அதே வண்டியில் உள்ளே ஏறினாள். அதுவும் எப்போதும் ஏறும் மகளிர் கம்பாட்மென்டில் ஏறாமல் இவர்கள் பயணிக்கும் அதே பெட்டியில்.
வினோத், "டேய் இப்போதான்டா புரியுது. நீ ஏன் இந்த வண்டியில வரன்னு. எல்லாம் சொல்லி வச்சுத் தான் செய்யறீங்களா" என்று மீண்டும் கலாட்டா செய்ய, சுரேஷுக்கு தன் கால்களின் கீழ் பூமி நகர்வது போல் தோன்றிற்று. அனு இவர்கள் இருப்பதை கவனிக்கமலிருந்தாலும், வினோத் சும்மா இருக்காமல், "அவள் உன்னை நோக்க, அண்ணல் அவளை நோக்காதது ஏனோ" என்றான்.
நேற்று வரை அனுவை வைத்த கண் வாங்காமல் பார்த்தவனுக்கு, இன்று அவள் நிற்கும் திசையிலேயே கூட பார்வையைத் திருப்பவில்லை. அதிலும் வினோத் இப்படிச் சொல்ல, "டேய் அவள் என்னைப் பார்த்தாளா" என்றான்."நான் என்ன பொய்யா சொல்லறேன். ஒண்ணு நீங்க இரண்டு பேரும் சொல்லி வச்சு இந்த மாதிரி ஒரே ரயிலிலே வரணும். இல்லை போன ரயிலில் உன்னைக் காணாமல் அவளும் இந்த ரயிலுக்காகக் காத்திருந்திருக்கணும்.இதில் ஏதோ ஒன்று தான் நடந்திருக்கு. அதுவும் அவள் எப்போதும் போல பெண்கல் பெட்டியில் ஏறாம இதுல ஏறியிருக்கானா Something is wrong"
சுரேஷ், "டேய் சத்தியமா சொல்லறேன், அவள் கிட்ட நான் முழுசா 5 வார்த்தைகூட பேசினது கிடையாது. ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது?"
வினோத், "சரி உன்னுடைய இந்த சந்தேகத்தை இப்பவே தீர்த்துடாலாம்" என்று சுரேஷ் சற்றும் எதிர்பாராமல், அனுவைநோக்கி கூட்டத்தினூடே நகர்ந்தான்.
சுரேஷ், "வினோத் என்ன பண்ணறே"
வினோத், "பேசாம இரு. என் கூட வற்ரியா?"
சுரேஷ் பதிலேதும் சொல்லாமல் இவன் என்ன செய்யப் போகிறானோ என்றிருந்தது. 5 நிமிடங்களில் வந்து விடும் அடுத்த நிறுத்தமான பரங்கி மலை வருவதற்கு 50 நிமிடங்கள் ஆவது போல் தோன்றிற்று.
வினோத் அனுவிடம் சென்று, "ஹாய் அனு. பார்த்து ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கே? என்ன இன்னிக்கு இந்த ட்ரெயின்'ல? அதுவும் லேடீஸ் கம்பாட்மென்டில் போகாம இதுல போறே?"
அனு, "ஹாய். இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆயிடுத்து. லேடீஸ் கம்பாட்மென்ட் பக்கமே போக முடியலை. அதான் இங்கே ஏறினேன். நீங்க இரண்டு பேரும் இதிலே தான் எப்போதும் போவீங்களா?"
வினோத், "எங்களுக்கும் இன்னிக்கு லேட் ஆயிடுத்து"
இவர்கள் இருவரும் பேசுவதைக் பார்த்துக்கொண்டிருந்த சுரேஷ், திடீரென்று அவர்கள் தன்னை நோக்கி வருவது மீண்டும் பீதியைக் கிளப்பியது.
"ஐயோ என்ன கேட்டானோ தெரியலியே. இப்போ இவள் வந்து என்ன கேட்கப் போகிறாளோ" என்று மனதிற்குள்ளேயே ஒரு போராட்டம்.
அனு சுரேஷ் அருகில் வந்து, "ஹாய் சுரேஷ். நேற்று உன் பிறந்த நாளாமே. உங்க வீட்டுல ட்ரீட் எல்லாம் கொடுத்திருக்கே. Belated Birth Day Wishes" என்றதும் கொஞ்சம் மனம் நிம்மதியானது.
கல்லூரிக்குள் தனது வகுப்பை நோக்கி அனு போன பிறகு வினோத், "பிடி கொடுத்தே பேச மாடேங்கிறா. ரொம்ப மன அழுத்தம் ஜாஸ்தி. நானும் ஏதாவது clue கிடைக்கும்னு பார்த்தால் ஒண்ணுமே தெரியலியே. சுரேஷ் ஒரு ஐடியா. இது கடைசி செமஸ்டர். அவனவன் ஆட்டோகிராஃப் புக்கை எடுத்துக்கிட்டு கையெழுத்து வேட்டை நடத்திக்கிட்டிருக்காங்க. நீயும் அனு கிட்ட ஆட்டோகிராஃப் கேளு. அதை வைத்து அவள் கையெழுத்தைக் கண்டு பிடித்து விடலாம்" என்று ஐடியா கொடுக்க சுரேஷிகும் சரியென்று பட்டது.
மறுநாள் வினோதிடம் சுரேஷ், "டேய் நீ சொன்னியேன்னு அவ கிட்ட போய் ஆட்டொகிராஃப் புக்கை நீட்டினேன்". அதற்கு அவள், "நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்கக்கூடாது'ங்கறதுக்காத் தான் இந்த மாதிரி ஆட்டொகிராஃப் எல்லாம். உன்னை நினைப்பதையே என்னால் மறக்க முடியாது. அப்படியிருக்க மறக்க எப்படி என்னால் நினைக்க முடியும்"னு ஏதேதோ கவித்துவமா பேசி புக்கைத் திருப்பி கொடுத்துட்டாடா".
வினோத், "Total confusion"
சுரேஷ், "I have decided. இனிமேலும் இது பற்றி சிந்திக்காமலிருப்பது என்ற முடிவிற்கு வந்து விட்டேன்".
வினோத், "அப்போ உண்மையை தெரிந்து கொள்ள வேண்டாமா உனக்கு?"

சுரேஷ், "என்னடா பெரிய உண்மை. அனுவைப் பார்த்தால் ரொம்ப கண்ணியமான பொண்ணா இருக்கா. அவள் இப்படி நேரா வீட்டுக்கே கார்ட் அனுப்புவாள் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. நான் இதை இன்னும் தோண்டித் துறுவி அனு இதை கார்டை அனுப்பவில்லையென்ற கசப்பான உண்மையைத் தெரிந்து கொள்வதை விட, இது அனு அனுப்பியது தான் என்ற இனிப்பான பொய்யை சுமந்து கொண்டு இருந்து விட்டுப் போகிறேன்"
வினோத், "OK. It is Upto you"
சில மாதங்களுக்குப் பிறகு....
"சுரேஷ் இல்லையா"

சுரேஷ் அம்மா, "அவன் மொபைல வச்சுட்டு எங்கேயோ வெளியில போயிருக்கானே.என்ன விஷயம்"
"இல்லை, நானும் சுரேஷும் ஒரே கம்பெனியில தான் செலக்ட் ஆகியிருக்கோம். எல்லாருக்கும் சென்னைல தான் ட்ரெயினிங்க். ஆனால் எனக்கும் சுரேஷுக்கும் மட்டும் தான் பூனவுல ட்ரெயினிங்க்'னு வந்திருக்கு. அதான் சுரேஷோட பிளான் பற்றி கேட்கலாம்னு ஃபோன் பண்ணினேன்"
சுரேஷ் அம்மா, "சுரேஷ் வந்ததும் உனக்கு ஃபோன் பண்ணச் சொல்லறேன். உன் பெயரைச் சொல்லவே இல்லையே?"

"அனு"
முற்றும்

July 24, 2008

கதை கேளு கதை கேளு - 3

"யாரு யாரு பேசறது. நா தழ தழைக்க இரண்டொருமுரை எச்சிலை விழுங்கியவாறு கேட்கலானான் சுரேஷ்.

"க்ரீடிங் கார்ட் கிடைச்சதா?", பெண்குறல் ஏக்கத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டது. ஒவ்வொரு துடிப்புக்கும் இதயம் இலவசமாக இன்னொரு முறை துடித்தது. சுரேஷுக்கு தன் இதயம் அடிக்கும் சத்தம் தனக்கே கேட்டது.

உடம்பில் அட்ரினலின் எங்கும் பாய வியர்த்துக்கொட்டியது."வந்தது என்று சொல்" என்று இதயம் இசைந்து கொடுக்க, "எந்த கார்ட் யார் போட்டது என்று கேள்" என்று மூளை முந்திக் கொண்டு கட்டளையிட்டது. மூளைக்குப் பணிந்து அதன் சொல்படி நடந்தான்.

"நிஜமாகவே வரலியா?" குரலில் ஏமாற்றம் தொனித்தது.

சுரேஷ், "ஓ நிஜமாகவே அனு தான் கார்ட் அனுப்பியிருக்காளா?" என்று மனதிற்குள் பயம் கலந்த மகிழ்ச்சி கொண்டான். இதே பெண்ணை பல முறை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாலும், அவள் பால் காதல் இருக்கவில்லை. அவளும் தன்னை காதலிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்திருக்கவில்லை. அப்படியிருக்க, திடீரென்று அவளே தன் காதலைச் சொல்வதால் திக்கு முக்காடிப் போய் நின்றான்.சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "நீங்க.... நீ, அனு தானே பேசறது?" அவன் கேட்டது தான் தாமதம், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
"ச இப்படியாகி விட்டதே. மறுபடியும் கூப்பிடலாமா வேண்டாமா" என்று தயக்கம். சரி அழைக்கப்பட்ட தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொள்ளலாம் என்று பார்த்தால், 5 இலக்கம் மட்டுமே இருந்த எண் அது. சரி, இது VoIP மூலம் வந்த அழைப்பு. இது எங்கிருந்து வந்ததென்று துப்பறிய கணினியை இயக்கினான். அவன் தேடிய தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏமாற்றம் தாளாமல், தூங்கவும் முடியாமல் நிலை தடுமாறிய போராட்டம். தொலைபேசியில் பேசிய பெண்ணின் குரலை மீண்டும் மனதினில் ஓட்டிப் பார்த்தான். "அது நிஜமாகவே அனு தானா, இல்லை யாரேனும் நம்மோடு விளையாடுகிறார்களா? சரி அனு பெயரைக்கொண்டு ஏதாவது நண்பன் கலாட்டா செய்யலாம். ஆனால் ஒரு பெண்ணே என்னோடு பேசுகிறாளே. இது அவள் தானா? எனக்கு அவள் குரல் கூட ஒழுங்காகத் தெரியாதே" என்று எண்ணிக்கொண்டிருந்த நேரம், மீண்டும் தொலைபேசி மணியடித்தது. அதே 5 இலக்க எண்ணிலிருந்து தான் அழைப்பு. இம்முறை நிதானமாகப் பேசவேண்டும் என்று மூளை காட்டளையிட்டிருந்தது. ஆனால் மனமோ மூளையைத்தூக்கி மூலையில் போட்டு விட்டு, "அனு. அனு தானே பேசறது" என்று உளறித் தொலைக்க, மறு முனையிலிருந்த பெருத்த சிரிப்பொலி.
"என்னடா அனுவா, யாரது புது Girl Friend'ஆ" என்றொரு பழக்கப்பட்ட குரல்.
"யார் யாரிது. நீங்க தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கார்ட் கிடைச்சதான்னு கேட்டது"
"ஹ்ம்ம் ஆப்பக்கடை மூக்கன் பேசறேன். உங்களுக்கு நாங்க யாருன்னு தெரியலியோ. எங்க கிட்டேர்ந்தெல்லாம் கால் வந்தால் பேச மாட்டீங்களோ?"
சுரேஷுக்கு எல்லாம் விளங்கிற்று. "ஏய் வத்சலா, இதெல்லாம் உன் விளையாட்டு தானா? விளையாடறதுக்கு ஒரு அளவே இல்லையா? இப்படி ஒரு பெண்ணோட பெயர் போட்டா கலாட்டா செய்வே"
வத்சலா சுரேஷின் பெரியப்பா மகள். அக்கா முறை.
வத்சலா, "ஏண்டா, நீ மட்டும் என் கல்யாணத்துக்கு முன்னாடி அவர் ஃபோன் பண்ணுற மாதிரி பண்ணிட்டு, என்ன கலாட்டா பண்ணினே. நானும் அவர் தான் பேசறாரோன்னு நினைச்சுண்டு என்னல்லாமோ உளறித்தள்ளினேன். அதை வச்சுண்டு என்னல்லாம் கேலி பண்ணினே. அதான் பழிக்குப் பழி ரத்தத்துக்கு ரத்தம். பாவம், அனு கார்ட் போடலியேன்னு ரொம்ப ஃபீலிங்க் ஆகிட்டியா?"
சுரேஷ், "அடிப்பாவி. ஒரு 4 மணி நேரம் என்னைப் புலம்ப வச்சுட்டியே. அம்மா அம்மா, இந்த கார்ட் விவகாரமெல்லாம் இந்த வத்சலா பண்ணின கூத்து. நாலு வாங்கு வாங்கு" அன்று அம்மாவிடம் ஃபோனைக்கொடுத்தான்.
"ஏண்டி அவன் பிறந்த நாள் அதுவுமா, இப்படியா கலாட்டா பண்ணுவாங்க" என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள்.
சுரேஷ் கை பேசியை வாங்கி, "ஆமாம், உனக்கு எப்படி என் காலேஜ் மேட் எல்லாம் தெரியும்"
"இவரோட கலீக் தங்கை தான் அனு. சில நாட்களுக்கு முன்னாடி தான் தெரிஞ்சது, அவளும் நீயும் ஒரே காலேஜில் படிக்கறது. உன்னைப் பற்றி வேற ரொம்ப பெருமையா பேசினா. அப்பவே முடிவு பண்ணிட்டேன், அவள் பெயர் போட்டு உன்னை இப்படி பழி வாங்க. இந்த பிறந்த நாளை உன்னால் மறக்கவே முடியாது" என்று முடித்தாள்.
"அப்பாடா, ஒரு வழியாக நிம்மதிடா சாமி. உருப்படியா தூங்கலாம்" என்றெண்ணி படுத்தவனுக்கு மறுபடியும் தூக்கம் வரவில்லை."ச, நிஜமாகவே அனு இந்த கார்ட் போட்டிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். ஹ்ம்ம் எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை இருக்கணும்" என்ற ஏக்கத்துடன் கண்ணயர்ந்தான்.
சில மாதங்களுக்குப் பிறகு....
"சுரேஷ் இல்லையா"
சுரேஷ் அம்மா, "அவன் மொபைல வச்சுட்டு எங்கேயோ வெளியில போயிருக்கானே.என்ன விஷயம்"
"இல்லை, நானும் சுரேஷும் ஒரே கம்பெனியில தான் செலக்ட் ஆகியிருக்கோம். எல்லாருக்கும் சென்னைல தான் ட்ரெயினிங்க். ஆனால் எனக்கும் சுரேஷுக்கும் மட்டும் தான் பூனவுல ட்ரெயினிங்க்'னு வந்திருக்கு. அதான் சுரேஷோட பிளான் பற்றி கேட்கலாம்னு ஃபோன் பண்ணினேன்"
சுரேஷ் அம்மா, "சுரேஷ் வந்ததும் உனக்கு ஃபோன் பண்ணச் சொல்லறேன். உன் பெயரைச் சொல்லவே இல்லையே?"
"அனு"
முற்றும்

எங்கிருந்தாலும் வாழ்க

உன்னைப் பிரிந்த நாளன்று தானடி
உன் அருமை அறிந்தேன்
நீ இனிமேலும் என்னவள் இல்லை
என்ற உண்மை உணர்ந்தேன்

உனக்குத் தெரியுமா, நீ பிறந்த கணமே
என் மனதினுள் நுழைந்தாய்
உனை அடையவேண்டும் என்றெண்ணிய தினமே
என் மனையினுள் நுழைந்தாய்

நீ கறுத்த நிற உடையணியும்
வரை காத்திருந்தேன்
நீ கறுக்கும் வரை
பொருத்திருந்து பார்த்திருந்தேன்

தாய் மடி போக மீதி நேரமெல்லாம்
உன் மடி தானடி
ஒரு சேய் போல் எப்பொழுதும்,
என்னை நீ சுமந்தாயடி

யாரும் உன்னைத் தீண்டாதவாறு
உன்னை நான் காத்து வந்தேன்
தூசும் உன் மேல் படியாமலிருக்க
போர்வைகள் பல போர்த்தி வந்தேன்

எங்கு சென்றாலும் உன்னையும்
அழைத்துச் சென்றேன்
நேரம் தவறாமல்
சென்றது நான் சுமந்தது நீ

நான் மணக்கும் பெண் இவளென்றதும்
புன்முறுவல் புரிந்தாய்
ஏதும் சொல்லாமல் அவளையும்
சேர்த்தே சுமந்தாய்

காலங்கள் பல மாறிய போது
தேவைகள் பல கூடின
தேவைகள் பல கூடக்கூட
செலவுகள் பெருத்தன

செலவைக் குறைக்க
தேடினேன் ஒரு வழி
அதற்கு தேவையில்லாமல்
போட்டேன் உன் மீது பழி


உன் உடலிலும் வந்திருந்தன
சில சோதனைகள்
உன்னைப் பார்க்கையில்
உண்டானதுப் பல வேதனைகள்

பிரிய மனமுமில்லை
பிரியாமலிருக்க முடியவுமில்லை
மறக்க முடியவில்லை
மறந்து வாழ துணிவுமில்லை

முடிவு செய்தேன் உன்னை துறக்க
அழுதேன் ஒரு நாள் முழுவதும் உறக்க
தாரை வார்த்தேன் உன்னை இன்னொருவனுக்கு
எப்படி நான் பதிலுறைப்பேன் இறைவனுக்கு

உன் நினைவு வராமலிருக்கத்தான்
உன்னை எடுக்கலையோடி ஒரு படம்
இது கூட செய்யவில்லையே
நான் ஒரு ஜடம்

உன்னைப் பிரிந்த பொழுதே
கண்ணீர் சிந்தியது வானகம்
காதலி நீ தானடி என்
இரு சக்கர வாகனம்

இனியவளே உன் நினைவுகளில்
நான் இங்கு மூழ்க
மாற்றானோடு எப்போதும் நீ
எங்கிருந்தாலும் வாழ்க!

July 21, 2008

கதை கேளு கதை கேளு - 2

கதை கேளு கதை கேளு - 1

சுரேஷ்,

என் எண்ணங்கள் அனைத்துக்கும்

வண்ணங்கள் பல கொடுத்தாய்!

உன்னை நான் கடந்து

சென்ற போதெல்லாம்

என் மனதை கடத்திச் சென்றாய்

வேகமாயிருந்த என்னுள்

வெட்கம் வரவைத்தாய்

புயலாயிருந்த என்னை, உன்

புன்னகையால் பணியச் செய்தாய்

இவ்வளவும் செய்த நீ,

என்னிரு கன்னங்களில் பல,

சின்னங்கள் பதிப்பதெப்போது?

தனியாகப் பிறந்த நாள்

கொண்டாடும் நீ

என்னோடு சேர்ந்து மணநாள்

கொண்டாடுவதெப்போது?

அனு,
BE Electrical Engineering,

Final Year Electrical Engineering,

Anna University

இதைப் படித்தபோது தான் சுரேஷ் சப்த நாடியும் ஒடுங்கி வெலவெலத்துப் போய் நின்றான். என்னடா பேந்தப் பேந்த முழிக்கிறே என்று அம்மா மறுபடியும் கேட்டதும் தான் நினைவுக்கு வந்தவன், "This is all rubbish. என்னை யாரோ வேணும்னே இப்படி பண்ணறாங்க. இதை நான் சும்மா விடமாட்டேன்" என்று கூச்சல் போட ஆரம்பித்து விட்டான்.

"என்னாச்சும்மா" என்று வினோத்தும் நுழைய, சுரேஷுக்கு வந்த கார்டை அவனிடம் நீட்டினாள். அதை படித்த வினோத்துக்கு அதிர்ச்சியைவிட சிரிப்பு தான் வந்தது.

"டேய் கண்ணா, இந்த பூனையும் பாலக் குடிக்குமான்னு இருந்துட்டு,இப்படி ஒரு காரியம் வேற பண்ணியிருக்கியா. சொல்லவே இல்லை. அம்மா, காலேஜுல எல்லா பசங்களும் அந்தப் பொண்ணு அனு கூட இரண்டு நிமிஷம் பேச மாட்டோமான்னு அலையறாங்க. பையன் என்னடானா, சைலன்டா இருந்து வேலை பார்த்திருக்கானே"என்றவுடன், சுரேஷுக்கு கோபம் மூக்கின் நுனிக்கே வந்து விட்டது.

சுரேஷ், "டேய் நாயே, தினமும் நீயும் நானும் தானே சேர்ந்து போயிட்டு வரோம். என்னிக்காவது அந்தப் பொண்ணு கிட்ட நான் பேசறதைப் பார்த்திருக்கியா சொல்லு"

அம்மா, "டேய் அவன் கிட்ட ஏன் சாடறே? வினோத், இப்போ இதைப் பற்றி ஒண்ணும் பேச வேண்டாம்.எல்லோரும் முதல்ல போகட்டும்". வெளியில் வந்து, "என்னப்பா சாப்பாடெல்லாம் எப்படி இருந்தது. எல்லோரும் நல்லா சாப்பிட்டீங்களா?" ஒரு நண்பன், "அம்மா, சாப்பாடு சூப்பர் மா. நாங்கள்லாம் கிளம்பறோம். சுரேஷ், பார்க்கலாம்டா"

எல்லோரும் போன பிறகு, "ம்ம் இப்போ சொல்லு, யாரிந்த பொண்ணு"

சுரேஷ், "அம்மா அந்தப் பொண்ணு பழவந்தாங்கல் ஸ்டேஷன்ல ஏறுவா. அதுவும் லேடீஸ் கம்பாட்மென்டில் தான் ஏறுவா. அவ்வளவு தான் தெரியும்"

அம்மா, "ஓ இவ்வளவு நோட் பண்ணி வச்சிருக்கியா"

சுரேஷ், "அம்மா என்ன நீ. எல்லாப் பசஙளும் தான் அவளுக்கு லுக் விடறானுங்க"

அம்மா, "ஆனா, அவள் உனக்கு தானே லவ் லெட்டர் எழுதியிருக்கா"

சுரேஷ், "அம்மா படுத்ததேம்மா. இது அந்தப் பொண்ணு எழுதியிருக்கறது இல்லை. அவ்வளவு தான்"

அம்மா, "ஏன் உனக்கு அவளோட எழுத்து எப்படி இருக்கும்னு தெரியுமா?"

வினோத், "இது girls எழுத்து மாதிரிதான் இருக்கு"

சுரேஷ், "ஐயோ அம்மா, ஓவெரா பில்ட் அப் கொடுத்துண்டே போகாதே. சத்தியமா சொல்லறேன், அந்தபொண்ணு கூட நான் பேசினதே கிடையாது"

வினோத், "ஆ ஆ, யார் கிட்ட பொய் சொல்லறே, போன மாசம் கூட அந்தப் பொண்ணு கூட கல்சுரல் பிரொகிராம் காம்பியர் பண்ணினியே. அதுக்குள்ள பேசினதே கிடையாதுன்னு சொல்லறே"

சுரேஷ், "டேய் வினோத், சேம் சைட் கோல் போடாதே டா. சேர்ந்து காம்பியர் பண்ணினோம். ஆனால் ஒண்ணும் பேசலை"

"ஆமாம், அவளும் உன் கிட்ட பேசினது மாதிரி எழுதலியே. நீ அவளைப் பார்வையாலேயே மயக்கியிருக்கறதாத் தானே எழுதியிருக்கா?" என்று அம்மாவும் கலாய்க்க ஆரம்பித்தாள்.

"என்ன யார் என்ன எழுதியிருக்கா?" என்று கேட்டுக் கொண்டே சுரேஷின் அப்பா வந்தார். "அம்மா அம்மா ப்ளீஸ் ப்ளீஸ்" என்று சுரேஷ் சொல்லச் சொல்ல அப்பாவிடம் அவனுக்கு வந்த வாழ்த்து கார்டை நீட்டினாள். அப்பா ஒரு பார்வை பார்த்து விட்டு, "ஹ்ம்ம் எனக்கெல்லாம் இந்த மாதிரி யாராவது அனுப்பியிருந்தா, உங்க அம்மாவை கல்யாணம் பண்ணியிருக்க வேண்டாம். All the Best சுரேஷ்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

சுரேஷ், "அம்மா அந்தப் பொண்ணு கூட ஒரு இரண்டு மூன்று தடவை காலேஜ் ஃபங்ஷன்'ல பேசியிருக்கேன். அவ்வளவு தான்"

வினோத், "முதல்ல பேசினதே கிடையாதுன்னு சொன்னே, இப்போ இரண்டு மூணு தடவை தான் பேசியிருக்கேன்னு சொல்லறே. எது உண்மை. அம்மா, இவன் எதையோ மறைக்கிறான்"

சுரேஷ், "நான் எதையும் மறைக்கலை. இது யாரோ வேணும்னே என்னை கலாய்க்கறதுக்காக இப்படி அனுப்பியிருக்காங்க"

அம்மா, "அப்போ நாளைக்கே இதை கன்ஃபர்ம் பண்ணிடுவோம். அந்தப் பொண்ணு கிட்டே போய் கேளு. எனக்கு இந்த மாதிரி கார்ட் அனுப்பினியான்னு?"

சுரேஷ், "அவ்வளவு தான். அந்தப்பொண்ணு ப்ரின்சிபால் கிட்ட புகார் கொடுத்ததுன்னா, இவ்வளவு நாள் கட்டிக்காத்த மானம் எல்லாம் கப்பலேறிடும். எனக்கு தெரியும், இதை எப்படி விசாரிக்கணும்னு. மறுபடியும் சொல்லறேன், இது அந்தப் பொண்ணு எழுதினது இல்லை" என்று பொறிந்து தள்ளி விட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டான்.


படுக்கையில் படுத்தவனுக்கு தூக்கம் வருமா? "யார் இப்படி செய்திருப்பார்கள்? எவ்வளவோ கலாய்த்திருக்கும் நண்பர்கள், ஒரு பெண்ணின் பெயரை உபயோகப்படுத்தும் அளவிற்குப் போக மாட்டார்கள். தெரிந்து விட்டால் பிரச்னையாகிவிடும். அனுவைப் பற்றி தெரிந்த யாரோ தான் செய்திருக்க வேண்டும். காலேஜ் நண்பர்கள் தவிர வேறு யாருக்கும் அவளைத் தெரியாது. ஒரு வேளை அனுவே தான் இதை அனுப்பியிருப்பாளோ? இந்த எண்ணம் மனதிற்குள் வர, தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். இப்படியெல்லாம் கூட எழுதும் பெண்ணா? அவளைக் கவரும் படி அப்படி என்ன செய்து விட்டேன். போன வருஷம் Quiz போட்டியில் நான் ஜெயித்ததை முதல் வரைசியிலிருந்து பார்த்தாளே, அப்போது impress செய்திருப்பேனோ? மாணவர்கள் கோரிக்கையை ப்ரின்சிபாலிடம் எடுத்துறைத்து எல்லா மாணவர்களாலும் பாராட்டப்பட்டேனே, அப்போது என்னைப் பிடித்திருக்குமோ? இல்லை நானும் அவளும் கல்ச்சுரல் ப்ரோகிராம் காம்பியர் செய்தோமே, அப்போது கவர்ந்திருப்பேனோ.

அவளை ஒரு ஐந்தாறு முறை நேருக்குநேர் பார்த்திருப்பேன். பெரிசாக எதுவும் பேசியது கூட கிடையாது. அப்புறம் எப்படி இவள் இப்படியொரு கார்ட் அனுப்பியிருக்கிறாள். அதுவும் என் கைபேசிக்கோ மெயிலுக்கோ அனுப்பாமல் வீட்டுக்கு அனுப்பியிருக்காளே. ஒரு வேளை, நிஜமாகவே என்னை விரும்புகிறாளா? என்னைவிட personality'யானவர்கள் கல்லூரியில் நிறைய பேர் இருக்கும் போது, என்னை ஏன் விரும்ப வேண்டும்?

சீ சீ, என்ன இது இப்படியெல்லாம் நினைக்கிறேனே. என்னா ஆச்சு எனக்கு. இது அவள் அனுப்பிய கார்ட் இல்லை. இது யாரோ என்னை கலாய்ப்பதற்காகத் தான் செய்திருக்கிறார்கள்" என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு புரண்டு படுக்கையில், அவன் கைப்பேசி மணியொலித்தது. "யாரிந்த வேளையில் என்று எடுத்துப் பார்த்தவனுக்கு, புதிதாக ஒரு நம்பரிலிருந்து அழைப்பு. படுத்த படியே ஹலோ என்று சொன்னவன், தூக்கிவாரிப் போட்டு எழுந்து உட்கார்ந்தான்" .
மறுமுனையிலிருந்து, "Is this சுரேஷ்" என்று ஹஸ்கியாக ஒரு பெண்ணின் குரலைக் கேட்டு.


தொடரும்...




July 19, 2008

கதை கேளு கதை கேளு

எவ்வளவு நாள் தான் சுய புராணம் பாடியே பதிவுகள் போடுவது. நம்ம கற்பனைக்குதிரியும் எவ்வளவு தூரம் தான் போகிறதென்று பார்த்து விடலாம் என்ற தைரியம் வர, இதோ நான் நானே எழுதும் கதை.
நன்றி: பிளாக்ஸ்பாட் வலைத்தளம்! எதிர்ப்பெதுவும் தெரிவிக்காமல் வாய் மூடி இதை பிரசுரித்ததற்காக!
------------------------------------------------------------------------------------------------
"சுரேஷ் இன்னிக்கு உன் பிறந்த நாள்டா. எழுந்திரு எழுந்திரு." குழந்தைப் பருவத்திலிருந்தே அவனது பிறந்த நாளை அம்மா தான் ஞாபகப்படுத்துவாள்.
சுரேஷ், டீனேஜ் முடிந்து இருபதுகளில் அடியெடுத்து வைக்கிறான். ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ஆண்டவன் தனக்காக ஒதுக்கப்பட்ட நாட்களில் ஒரு வருடத்தை முழுமையாகக் கழித்துக் கொண்டுவிட்டானே என்ற காரணத்தாலேயே, பிறந்த நாளையும் ஒரு சாதாரண நாள் போலவே கழிப்பவன்.
சுரேஷ் கிண்டி அண்ணா பல்கலைகழகத்தில், பொறியியல் Electronics & Communications இறுதியாண்டு படிக்கும் மாணவன். தாம்பரத்திலிருக்கும் தனது வீட்டிலிருந்து ரயில் பஸ் என மாறி கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கும் day scholar. மாநிறத்துக்கும் சற்றே குறைவான நிறம். வசீகரிக்கும் அழகு இல்லாவிடினும், கண்களாலும் சிரிப்பாலுமே மற்றவரகளை தன் மீது ஈர்க்கும் தோற்றம். நிறைய நண்பர்கள்.


அவனது தோழர்கள் அவன் வீட்டுக்கு வந்திருந்து ராப்பகலாக இருப்பது ரொம்ப சகஜம். அவனது அம்மா அப்பாவையும் அவர்கள், அம்மா அப்பா என்றே கூப்பிடுவார்கள். சில் பேர் சமையலறைக்கே சென்று "அம்மா ஒரு காஃபி கிடைக்குமா" என்று கேட்கும் அளவுக்கு அவ்வளவு நெருக்கம். பெண்களிடம் கடலை போடாவிட்டாலும், ஹாய் ஹலோ என்று ஒரு புன்னகைப்புடன் இருப்பவன். இதனாலேயே பெண்களுக்கு இவன் மேல் ஒரு தனி மரியாதை. அழகான பெண்களை தவறாது சைட்டும் அடிப்பவன். எப்போதுமே கண்களை நோக்கிப் பேசுபவன்.
அம்மா எழுப்பியதும் போர்வையை இழுத்து மூடிக்கொள்ளாமல், உடனே எழுந்து கல்லூரிக்குச் செல்லத் தயாரானான். குளித்து முடித்து அம்மா அப்பாவிடம் ஆசீர்வதம் வாங்கிக் கொண்டு கல்லூரிக்குப் புறப்படலானான். தாம்பரத்தில் ரயிலேறியதுமே, நண்பர்கள் Happy Birth Day வாழ்த்து சொன்னார்கள். எல்லோரது வாழ்த்துக்களையும் ஒரு புன் முறுவலுடன் ஏற்றுக்கொண்டான்.
சில நண்பர்கள், "என்ன மாப்ளே, காலேஜ் லைஃப்ல இது தான் உன் கடைசி பொறந்த நாளு. பார்ட்டி ஏதும் கிடையாதா?"
"இல்லைடா மச்சான். பிறந்த நாளெல்லாம் எனக்கு அப்படி ஒண்ணும் பெரிய நாளு கிடையாது. "
இன்னொருவன், "இவன்கிட்ட என்னடா கேட்கறது. சாயங்காலம் இவன் வீட்டுக்கு போய் அம்மாவிடம் கேட்டால் ஒரு சூப்பர் treat கொடுக்கப் போறாங்க"
கல்லூரி முடித்து சுரேஷ் வீடு திரும்புவதற்கு முன்னரே சில நண்பர்கள் இவன் வீட்டுக்கு வந்திருந்தனர். அதில் இவனது உற்ற நண்பன் வினோத்தும் இருந்தான். எல்லோரும் இவர்களை அண்ணா தம்பி என்றே நினைத்திருந்தனர். அவ்வளவு அந்நியோன்யம்.
"என்னம்மா நான் வருவதற்கு முன்னாலேயே இந்த தடியனுங்க கிளாஸ் கட் அடிச்சுட்டு இங்க வந்துட்டாங்களா"
"ஆமாண்டா. இது தானே உன் காலேஜ் லைஃப்'ல கடைசி பிறந்த நாள். அடுத்த வருஷம் யார் யார் எங்கெங்கே இருக்கப் போறீங்களோ. அதான் எல்லாரையும் இங்கேயே இருந்து சாப்பிட்டுப் போகச் சொல்லிட்டேன். அப்பாவுக்கும் ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேன். அவரும் உங்க கூட இன்ன்னிக்கு டின்னர் சாப்பிடறதுக்கு வந்துடறதா சொல்லிருக்கார்"
"ரொம்ப thanks மா"
"சீ போடா. எல்லாரும் நம்ம வீட்டு பசங்க தானே. ஒரு நாள் இவங்க எல்லாருக்கும் சமைச்சுப் போட்டா ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டேன். ஆங், சொல்ல மறந்துட்டேனே. நீ இன்னிக்கு மொபைல் கொண்டு போகலியா. விடாம ஒரே வாழ்த்து மெஸேஜா வந்து குவிஞ்சிருக்கு. எடுத்துப் பாரு"
"நான் பாத்துக்கறேன் மா"
"எல்லாரும் சாப்பிட வாங்கபா. Buffet மாதிரி தான். யார் யாருக்கு என்னென்ன வேணுமோ எடுத்துப் போட்டு சாப்பிடுங்க. சுரேஷ் கொஞ்சம் உள்ளே வாயேன்."

சுரேஷ் உள்ளே சென்றவுடன், அம்மா தாழ்ந்த குறலில், "சுரேஷ் உனக்கு இந்த greeting card'உம் வந்திருக்கு. அதுவும் courier'ல"
"கார்டா? யாரு courier பண்ணியிருக்காங்க?"
பிரித்துப் படிக்க ஆரம்பித்த சுரேஷ் அப்படியே உரைந்து போனான். முகம் வியர்த்து விருவிருக்க ஆரம்பித்து விட்டது. கைகள் நடுநடுங்க வாய்கள் டைப் ரைடர் அடித்தது. அப்போது வினோதும் உள்ளே நுழைய, அம்மா சுரேஷிடம் கண்டிப்போடு கேட்டாள், "யார்டா இந்தப் பொண்ணு. என் கிட்ட கூட சொல்லாம, எத்தனை நாள் இது நடக்குது"

தொடரும்....

July 08, 2008

புத்தம் புதுக்காலை, இன்று மப்பான வேளை

காலையில் 8 மணிக்கெல்லாம் ஆஃபீஸ் வந்துவிடவேண்டும் என்று சீக்கிரமாகவே அலாரம் எல்லாம் செட் செய்து தூங்கினால், வழக்கம் போல் அலாரத்துக்கு அல்வா கொடுத்து விட்டு 7 மணி வரை தூங்கி விட்டேன். அலரல் குரல் கொடுப்பதால் அதற்கு அலாரம் என்று பெயர் வந்ததோ? எழுந்து பார்த்தால் ஆதவனும் உரங்கி விட்டானோ என்றொரு எண்ணம். வெளிச்சமே இல்லை. பலகணியில் வந்து பார்த்த பிறகு தான் தெரிந்தது, வானம் மப்பும் மந்தாரமுமாக இப்பவோ அப்பவோ, எப்ப வேணாலும் மழை பெய்யலாம் என்றிருந்தது.
எனக்கு விழித்தெழும் போதே மழை பெய்து கொண்டிருந்தாலோ, பலமான காற்று அடித்துக் கொண்டிருந்தாலோ ரொம்பப் பிடிக்கும். இன்று அந்த மாதிரி ஒரு சீதோஷணநிலை. வானத்தில் மேகக்கூட்டம் ஒன்றையொன்று துரத்திச்செல்ல, அதற்கு தென்னை மர ஓலைகள் பின்னணி இசை கொடுக்க, அடா அடா அடா அங்கேயே நின்று ரசித்துக் கொண்டிருக்க மனம் துடித்தது.
ஊருல குற்றால சீஸன் சமையத்தில் இப்படித்தான் இருக்கும். இந்தக் காட்சியை கார்த்திகா பார்த்திருந்தா 'மேகங்கள் தொட்டுப்பிடிச்சு கண்ணாமூச்சி விளையாடுது'ங்கற மாதிரி ஒரு சூபர் கவிதை எழுதியிருப்பாங்க.
பலகணியிலே நின்றவாறு இயற்கையின் எழிலை ரசிக்க முடியாமல், ஆஃபீஸ் செல்லத் தயாரானேன். வெளியிலே காரெடுத்ததும் ஒரு லேசான சாரல் மழை. அப்படியே கார் கண்ணாடிமேல் ஒரு வெண் பஞ்சு படுக்கை விரித்த மாதிரி ஒரு effect. அவ்வளவு அழகான மழை.
ஆனால் அப்படியே ஓட்ட முடியுமா? பெங்களூர் சாலைகளில் சென்டிமீட்டர் தூரக்கணக்கில் எல்லோரும் ஓட்டுகிறார்கள். வேறு வழியின்றி கொஞ்சம் கூட இரக்கமில்லாமல், ரசனை என்பது கொஞ்சம்கூட இல்லாதவனாய் இயற்கை செய்யும் ஜாலங்களை ரசிக்க முடியாமல், கண்ணாடி மேல் படிந்திருக்கும் அழகான மழைச் சாரல் திட்டுக்களை, கார் வைப்பர் போட்டு துடைத்து விட்டுத்தான் ஓட்ட முடிந்தது.
"புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை
என்வானிலே தினந்தோறும் தோன்றும்
புரியாத வாசம் எந்நாளும் ஆனந்தம்"

என்ற அலைகள் ஓய்வதில்லை பாடலை சி.டியில் ஒலிக்கவிட்டவாறே வந்தேன். இந்த மாதிரி இயற்கை விளையாட்டெல்லாம் ஆஃபீஸ் செல்லும் நாளில் தான் வந்து தொலைக்கணுமா?

July 04, 2008

தின்னுட்டியா??

விஜய் டி.வி நடத்தும் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் ஒருவர், வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களில் இருக்கும் நகைச்சுவைகளை அழகாகக் கதை போல் சொல்வார். அப்படி என் வாழ்க்கையிலும் சில ஸ்வாரஸ்யமான சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.
சிறு வயதில் (பத்தாவது படிக்கும் போது என்று நினைக்கிறேன்)அப்பாவோடு ஒரு முறை நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் கான்ஃப்ரன்ஸுக்குப் போயிருந்தேன். இரவு டின்னர் புஃபே (buffet) முறை. நாம போனதே அதற்காகத்தானே?! அப்பா என்னை அம்போ என்று விட்டுவிட்டு அவரது சகாக்களோடு சாப்பிடப் போய்விட்டார். முதல் முறையாக புஃபே டின்னர் சாப்பிடுகிறேன். அதுவும் நட்சத்திர ஹோட்டலில். எதிலிருந்து தொடங்குவது, எதை முதலில் விழுங்குவது என்று ஒரு பெரிய திண்டாட்டாம், மனப்போராட்டம். பிச்சைக்காரன் பாத்திரத்தில், எல்லோர் வீட்டு சாப்பாடும் இருக்குமே. அது மாதிரி ஒரே தட்டில் எதையெல்லாம் எடுத்துக்கொள்ள முடியுமோ, அத்தனையும் எடுத்துக் கொண்டேன். இப்படி நான் சாப்பிடுவதை அம்மா, "அவக்கை மாதிரி சாப்பிடாதே. நீ சாப்பிடுவதை யாரும் எடுத்துண்டு போக மாட்டா" என்று அடிக்கடி திட்டுவாள். இதெல்லாம் எனக்கு செவிடன் காதில் ஊதின சங்கு மாதிரி தான்.
ஒவ்வொரு பதார்த்ததையும் எடுத்துக் கொள்ளும் முன் முன்னால் எழுதியிருக்கும் அதன் பெயரைப் படித்துப் பார்ப்பேன். அது அசைவம் இல்லை என்று தெரிந்த பிறகு தான் எடுத்துக் கொள்வேன்.
இப்படித் தான் ஒவ்வொண்ணா பார்த்துப் பார்த்து எடுத்துக் கொண்டிருக்கும் போது, அது என் கண்ணில் பட்டது. அதற்கு முன்னால் எழுதியிருப்பதும் எனக்குப் புரியவில்லை.சரி இது என்ன என்று தெரிந்து கொள்ள, அங்கு நின்றிருந்த சர்வரிடம், "Is it vegetarian or Non-Vegetarian" என்று கேட்டேன். பின்ன, அம்மாம் பெரிய ஹோட்டல்ல போயி இங்கிஷுல பேசினாத்தானே ஒரு பந்தாவா இருக்கும். அவர் சொன்ன ஒரு வார்த்தை பதில் என்னை இன்னும் சிந்தனையில் ஆழ்த்தியது. ரோஜா அரவிந்சாமி மாதிரி ஒரே வார்த்தையில் அவர் சொன்னது "XXXX". (அவன் என்ன சொன்னான் என்று இறுதியில் சொல்கிறேன். அது என்னவென்று நான் இப்பொழுதே சொல்லிவிட்டால் ஸ்வாரஸ்யம் இருக்காது. கொஞ்சம் பொறுமை காக்கவும் )
நம்ம மரமண்டைக்கு இங்கிலிஷுல கேள்வி மட்டும் தான் பந்தாவா கேட்க முடிந்ததேயொழிய அவர் சொன்னது என்னவென்று புரியவில்லை. அதனால் மறுபடியும் கேட்டேன். அப்படியும் நான் விடவில்லை. மறுபடியும், "Sir, Is it vegetarian or Non-Vegetarian?". இந்த தடவை கொஞ்சம் மருவாதை ஜாஸ்த்தி. அந்தாளுக்கு அப்பவாச்சும் தெரியவேண்டாம். இது வெறும் வெட்டி பந்தா பார்ட்டி. இதுக்கு நாம சொன்னது மண்டையில ஏறலைன்னு. மறுபடியும் அந்தாளு அதே ஒரு வார்த்தையைச் சொன்னான். யாமறிந்த கூட்டு கறிகளிலே இது போல் எங்கும் கேள காணோமே, "இதை try பண்ணிப் பார்ப்போமா" என்று மூளை என்னும் சட்டசபையில், இதைச் சாப்பிடலாமா என்ற மசோதாவைத் தாக்கல் செய்தேன். மூளை தலைமைச் செயலகமான மனதை கன்சல்ட் செய்ய, மசோதாவிற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. மசோதா நிராகரிக்கப்படவே, ச ச இந்தப் பழம் புளிக்கும். இது என்ன எழவோ, சரி போனா போறது. அப்புறமா வந்து பார்த்துக்கலாம் என்று மனதை தேற்றிக் கொண்டு அடுத்த டிஷ் நோக்கி நகரலானேன்.
எதிர்த் திசையிலிருந்து அப்பாவும் எதோ எடுத்துக்கொண்டு வந்தார். அவரிடம் அப்பா, "XXXX அப்படின்னா என்ன" என்று கேட்டேன். அது என்ன ஏதென்று அப்பா சொல்லாமல் அவர் கொடுத்த reaction இருக்கே, அது இன்றும் என் கண் முன்னால் அப்படியே இருக்கிறது. "தின்னுட்டியா???" அவர் வாயிலிருந்து வந்த வார்த்தையே இது தான். "டேய் அது XXXXடா. நெஜமா சொல்லு தின்னையா இல்லையா"
"இல்லைப்பா. அந்தாளு சொன்னது எனக்கு புரியலை. எனக்கென்னவோ ஒரு சந்தேகம் இருந்தது. அதனால நான் அதைச் சாப்பிடலை"
அப்பா சொன்னார் " இங்க பாரு, அம்மா இதெல்லாம் பண்ணிப் போட மாட்டா. இங்க தின்னுண்டாத்தான் உண்டு. அதனால சும்மா சொல்லு. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். யார் கிட்டயும் சொல்லவும் மாட்டேன்"
அதைக் கேட்டதற்குப் பிறகு அது இருக்கும் பக்கமே போகவில்லை. மற்ற சமாசரத்தையெல்லாம் நல்ல ஒரு வெட்டு வெட்டிவிட்டு வீடு திரும்பினோம்.
சரி, அப்படி அந்த சர்வர் என்ன தான் சொன்னான். அவன் சொன்ன சரி, அப்படி அந்த சர்வர் என்ன தான் சொன்னான்.
அவன் சொன்ன ஒரே வார்த்தை "PORK"
ஏண்டா வெண்ணை ஒரு சாதாரண விஷயத்தை இப்படி இழு இழுன்னு இழுத்திருக்கியேன்னு நிறைய பேர் சொல்லறீங்க. என்ன பண்ணறது.
நம்ம கற்பனைக் குதிரையை அவிழ்த்துவிட்டு எங்கேயாவது போய் மேய்ஞ்சுட்டு வா என்று சொன்னால், அது தோட்டத்துக்குள்ளேயே தான் வட்டமடிக்கிறது. அது போய் மேயும் வரை சுய புராணம் தான்.