Pages

August 03, 2009

காய்ச்சல் கொண்டேன்

சில நாட்களாக பெங்களுரில் நிலவி வரும் சீதோஷநிலையில் ஆதவனைக் காண்பதே அரிதாகி விட்டது. (சென்னை மக்களின் காதுகளிலிருந்து புகை வருவதைக் காண முடிகிறது) மப்பும் மந்தாரமுமாகவும், கொப்பும் கொலையுமாகத் தான் இருக்கிறது. சூரியபகவான் வெகேஷனில் போய்விட்டதால் வைரஸுகளுக்கெல்லாம் கொண்டாட்டம் தான். “ஹையா ஜாலி”யென்று , மக்கள் மீது படையெடுக்க ஆரம்பித்து விட்டன. இதிலுள்ள கொடுமையென்னன்னா, நானும் அந்த வைரஸ்களின் கொரில்லாத் தாக்குதலுக்கு ஆளானது தான்.

சனி மதியம் சாப்பிட்டு விட்டு, டி.வி பார்த்துக் கொண்டிருந்த போதே காய்ச்சல் ஏறி விட்டது. ”என்ன உடம்போப்பா. எப்படித் தான் இப்படி திடீர்னு காய்ச்சல் வருதோ” என்று காயத்ரி கவலை கொண்டாள். “உடம்புன்னு ஒண்ணு இருந்தா, காய்ச்சல் வரத்தான் செய்யும். பாவம் அதுக்கும் போய் இருக்க ஒரு இடம் வேண்டாமா!!” என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

சரி டாக்டரிடம் போகலாம் என்றாள். சிறு வயதிலிருந்தே டாக்டரிடம் போவது எனக்குப் பிடிக்காத விஷயம். எனக்கு மட்டுமில்லை, என் அப்பா தாத்தா என்று யாருக்குமே பிடிக்காது. “ஒண்ணும் வேண்டாம். ஒரு பாராசிடமாலும் எரித்ரோமைசினும் போட்டுக் கொண்டால் போதும்” என்று சொல்லிவிட்டேன். பொதுவாகவே ஒரு மாத்திரைக்கே உடம்பிலுள்ள வைரஸ்களெல்லாம் காலி பண்ணிப் போய்விடும். இது கொஞ்சம் விடாப்பிடியான வைரஸ் போலிருக்கு. ஞாயிறு காலையிலும் காய்ச்சல் குறைய வில்லை. இனிமேலும் சும்மா இருக்கக் கூடாது, கண்டிப்பாக டாக்டரிடம் போயே ஆக வேண்டும் என இப்போது மேலிடத்திலிருந்து உத்தரவு பிறந்தது.

“இங்க பார் டாக்டரிடம் போனாலும் ஒரு டோலோவோ, இல்லை காம்பிஃப்ளேமோ தான் எழுதித் தரப் போறார். அதை நாமே வாங்கிப் போட்டுண்டாப் போச்சு. இதென்ன அமெரிக்காவா? Presciption இல்லாமல் மாத்திரை தரம்மாட்டேன்னு மெடிக்கல் ஸ்டோர்ஸ் காரன் சொல்ல” என்று என்ன சொல்லியும் எடுபடவில்லை.
“இல்லை இல்லை, ஒரு ஊசி போட்டுண்டு, அப்படியே பிளட் டெஸ்ட் எதுவும் எடுக்கச் சொன்னால் அதையும் எடுத்துடலாம்” என்று அதட்டலான ஒரு சமாதானம் பிறப்பிக்கப் பட்டது.

“சரி, எந்த ஆஸ்பத்திரியில் இப்போது டாக்டர் இருக்கிறார் என்று விசாரி” என்றேன். என்ன ஆச்சர்யம்!ப் ஞாயிறென்றால், பெங்களூரில் ஆஸ்பத்திரிக்கும் விடுமுறை போலிருக்கு. ஒரு ஆஸ்பத்திரியிலும் ஒரு டியூடி டாக்டர் கூட இல்லை என்று சொல்லிவிட்டு, ஃபோனையும் உடனே வைத்து விட்டார்கள். “என்னடா இது பெங்களூருக்கு வந்த சோதனை. ஏதேது பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமைன்னா யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போகக்கூடாதா?! இழுத்துண்டிருக்கற கேஸுன்னாக் கூட திங்கள் வரை பொறுக்கணும் போலிருக்கே!!

“சரி கவலையை விடு. டாக்டர் கிட்ட போனாலும், டோலோ, காம்பிஃப்ளேம் ஏதாவது தான் எழுதித் தரப் போறார். அதை நாமளே வாங்கிக்கலாம். டாக்டருக்கு தண்டம் அழுது தான் இதைச் சாப்பிடணும்’னு இல்லை” என்று சொல்லியும், காயத்ரி இசையவில்லை. எங்கேயெல்லாமோ விசாரித்து, ஒரு வழியாக ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டர் இருக்கிறார். அவரும் 12 மணி வரை தான் இருப்பார் என்று தெரிந்து கொண்டு, அவரைப் பார்க்கப் புறப்பட்டோம்.

இந்தப் பாழாப்போற ஊர்’ல உள்ள ஒரு கொடுமை என்னவென்றால், எந்தவொரு ஆஸ்பத்திரியாகட்டும், அங்கே நாம் முதலில் ரெஜிஸ்டர் கொள்ள வேண்டும். அதற்கென்று தனியாகப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலில் இந்த துவாரபாலகர்களைக் கவனித்தால் தான் உள்ளே அனுமதி. “நீ டாக்டரைப் பாரு இல்லை, எக்கேடு கெட்டுப் போ. எங்களை முதலில் கவனி” என்று சொல்லாமல் நாசூக்காகக் காசு பிடுங்கும் தந்திரத்திற்குப் பெயர் தான் ரெஜிஸ்ட்ரேஷன். சரி துவாரபாலகர்களைக் கவனித்தாயிற்று. டாக்டர் இருக்கும் அறை எங்கே என்று தேடிக் கொண்டு போனால், ஒரு அறைக்குள் உட்காரச் சொன்னார்கள்.

எனக்கா காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருக்கிறது. இவர்களென்னன்னா, ஏ.ஸியை, எவ்வலவு குறவான தட்பவெப்பத்தில் வைக்க முடியுமோ, அவ்வளவு குறைவாக வைத்திருந்தார்கள். என் பற்கள் ஒரு ஜலதரங்கக் கச்சேரியே நடத்தின. இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து வெள்ளை அங்கி அணிந்த ஒரு பெண்மணி உள்ளே நுழைந்தாள். ஸ்டெதஸ்கோப் வைத்திருப்பவர் தான் டாக்டர் என்று எனக்குத் தெரியாதா. எம்புட்டு தமிழ் சினிமா பார்த்திருக்கோம். பொய் சொல்லப் போறோம் படத்துல “நீங்க புரோக்கரா பார்டியா”ன்னு கேப்பாங்களே, அது மாதிரி, “நீங்க டாக்டரா நர்ஸா”ன்னு கேக்கணும் போல இருந்தது. கேட்கவில்லை. “டாக்டரை இருக்காறா இல்லையா” என்றேன். முதலில் நான் செக்கப் செய்வேன். பிறகு தான் டாக்டர் பார்ப்பார் என்றாள். சரி தான் முதலில் துவாரபாலகர்கள், அப்புறம் இந்த உபதெய்வங்கள், அப்புறம் தான் சந்நிதிக்குள்ளேயே விடுவார்கள் போலிருக்கு.

ரத்த அழுத்தம், பல்ஸ் எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டாள். “ஹலோ, நான் வந்திருப்பது காய்ச்சலுக்காக. நீங்க ஆள் மாற்றி இதெல்லாம் பார்க்கறீங்களா” என்றேன். ஒரு புன்னகையுடன், “உங்களை முழுசா செக்கப் செய்வதற்குத்தான் இதெல்லாம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

10 நிமிடக் காத்திருத்தலுக்குப் பின், திரை போடப்பட்டிருந்த சந்நிதி திறந்தது. ஐ மீன் டாக்டரைப் பார்க்க அனுமதிக்கப் பட்டேன். ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டுக் கொண்டு சாஃப்ட்வேர் எஞ்சினியர் போல், இளமையான டாக்டர். ஒரு வேளை ஹவுஸ் சர்ஜன் எனப்படும் அப்ரெசிந்தியாகக் கூட இருக்கலாம். இவரிடம் ஸ்டெதஸ்கோப் இருக்கு. டாக்டர் தான் என்பது ஊர்ஜிதம் ஆனது. வக்கீலிடமும் வாத்தியாரிடமும் உண்மையை மறைக் கூடாதே. அதனால் எனக்கு எப்போது காய்ச்சல் வந்தத்து, என்னென்ன மாத்திரை எடுத்துக் கொண்டேன் , இதற்கு முன் காய்ச்சல் வந்த போதெல்லாம் என்னென்ன மாத்திரை எடுத்துக் கொண்டேன், என்னென்ன சாப்பிட்டேன் என்று ஒன்று விடாமல் அனைத்தும் ஒரே மூச்சில், எதோ கேள்விக்கு பதில் சொல்வது போல் ஒப்பித்துத் தள்ளினேன்.

நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டாரா இல்லையா தெரியவில்லை. மீண்டும் ரத்த அழுத்தம், பல்ஸ், உடல் உஷ்ணம் என எல்லாம் செக்-அப் செய்தார். நர்ஸ் மீது அவ்வளவு நம்பிக்கை போலிருக்கு. “உங்களுக்கு வந்திருப்பது வைரல் ஃபீவர் தான்” என்றார்.

“இது எங்களுக்குத் தெரியாதா!! இத்தக் கேக்கவா அம்புட்டு தூரத்துலேர்ந்து வந்திருக்கோம்” என்று என் மனம் சொல்வதை காயத்ரி என் கண்களைப் பார்த்தே தெரிந்து கொண்டவள் வேறொரு புறம் திரும்பிக்க் கொண்டாள்.

“உங்கள் காய்ச்சலுக்கு டோலோ எடுத்துக் கொள்ளுங்கள். அதை ப்ரிஸ்கிரைப் செய்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் சரியாகி விடும்” என்று சொல்லிவிட்டு மருந்துசீட்டில் எழுதிக் கொடுத்தார். மீண்டும் காயத்ரியை நான் பார்க்க யத்தனிக்க , அவள் முகம் என் பக்கம் திரும்பவே இல்லை.

“அப்போ எனக்கு ஊசியெல்லாம் எதுவும் போடப்போறதில்லையா” என்றேன்.
“தேவையில்லை” என்றார்.
“ஒரு பிளட் டெஸ்ட் வேணா எடுத்துப் பார்த்துடுங்களேன். ”
“No need. This is just a viral infection"

மீண்டும் காயத்ரி பக்கம் திரும்பியிருந்தால் அவள் எழுந்து போயிருப்பாள்.

“நான் ஏற்கனவே எடுத்த்துக் கொண்ட அதே மருந்தைத் தான் டாக்டரும் எழுதிக் கொடுத்திருக்கார், இதுக்கெல்லாமாவா ஃபீஸ் வாங்குவீங்க” என்ற என் விண்ணபத்தை துவாரபாலகர்கள் ஏற்க மறுத்து விட்டனர். வலுக்கட்டாயமாக அர்ச்சனைக்கான காசைப் பிடுங்கிக் கொண்டார்கள். வாத்தியாருக்கும் வைத்தியருக்கும் கடன் வைத்தால் படிப்பும் வராது, நோயும் போகாது’ன்னு எங்கேயோ கேட்டிருந்ததால், போனாப் போறது என்று நினைத்துக் கொண்டு அவர்கள் கேட்ட தொகையைச் செலுத்திவிட்டு வீடு வந்தோம்.

பி.கு. இன்று ஓரளவு உடம்பு பரவாயில்லை. நாளை ஆஃபீஸ் போய்விடலாம் என்று நினைக்கிறேன்.

“ஏண்டா வெண்ணை, ஒரு சாதாரண காய்ச்சல் வந்ததை இப்படியொரு மொக்கைப் பதிவாப் போட்டு, எங்க நேரத்தை வீணடிக்கிறியேடா” என்று யாரும் பின்னூட்டத்தில் கேட்க வேண்டாம்.