Pages

February 21, 2005

மாமிகளும் உறவுகளும்

வெகு நாட்கள் கழித்து கடந்த வார விடுமுறைக்காக சென்னைக்குச் சென்றிர்ருந்தேன். முக்கிய காரணம், என் தங்கை, கோவைலியிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்துள்ளாள். அவளுக்கு குடித்தனம் வைப்பதற்காக, நானும் என் மனைவியும் சென்னைக்குச் சென்றோம். அப்படியே, எனது நண்பி கால்யாணத்திற்கும் போய் வரலாம் என்று தான் முடிவெடுத்திருந்தோம். சென்னையில் இந்த தடவை, அவ்வளவாக வெயில் தெரியவில்லை. (பெங்களூரில் வெயில் கூடிவிட்டதாலோ என்னவோ???!!!) குடித்தனம் வைக்கும் படலம் எல்லாம் இனிதே அரங்கேரியது.

ஞாயிறு மாலை, நண்பியின் வரவேவிற்புக்காக சென்றோம். சென்றதும், நேரே மணமேடைக்குச்சென்று, வாழ்த்து மடலையும், பரிசையும், அவர்கள் கையில் கொடுத்து விட்டு, courtesy வாழ்த்தான wish you both a very happy married life எல்லாம் சொல்லி, புகைப்படக்காரர்களுக்கு பல்லைக்காட்டி விட்டு, நேரே உணவருந்தும் கூடத்துக்குச் சென்றோம். மணமகளை மட்டுமே தெரிந்திருந்ததனால், யாரோடும் பேச வேண்டிய நிர்பந்தம் இல்லை.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, ஒரு மாமி என் மனைவியிடம் வந்தாள். "ஏய் செளக்கியாமா??? எப்போ வந்தே??? எப்படி இருக்கே?? ஆத்துக்காரர் எப்படி இருக்கார்?" என்று மடமடவென விசாரிப்புகள் அரங்கேரின. "சாப்பிட்டுவிட்டு வா. வெளியே wait பண்ணறேன்" என்று போய் விட்டாள். நாங்கள் கை கழுவி வந்ததும் எங்களுக்காகவே காத்திருந்தது போல், என் மனைவியிடம் குசலம் விசாரித்தாள். இவள் மட்டும் தான் என்று பார்த்தால், ஒரு பெரிய பட்டாளமே, என் மனைவியை சூழ்ந்து நிற்கிறது. என்னையும் எல்லொரிடமும் அறிமுகம் செய்து வைத்தார்கள். எனக்கு ஒரே tension. (உனக்கு என்னிக்கு தான் டென்ஷன் இல்லை???) ரயிலுக்கு நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இவர்களது அறிமுகாப்படலம் இன்னும் முடிந்த பாடில்லை. பிறகு, என் மனைவி கையில் ஒரு பக்ஷண கவர் தாம்பூலப்பை, எல்லாம் கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. வெளியே வந்ததும், யாரந்த மாமி என்றேன். என் மனைவி சொன்னாள், "முதலில் எனக்கே தெரியவில்லை". பிறகு அந்த மாமியே தன்னை அறிமுகம் செய்து கொண்டாளாம். "என் பாட்டியின் அக்காவின் மாட்டுப்பொண் என்றாள். நான் ஒரு பெரிய கொட்டாவியே விட்டு விட்டேன். அந்த மாமியின் அண்ணா பையன் தான், என் நண்பி மணந்து கொள்ளும் மணமகன். ஆக, பெண் வீட்டுக்காரனாகாப்போய், மாப்பிள்ளை வீட்டுக்காரனய் திரும்பி வந்தேன்.

சரி தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் குழம்பிப்போய் நிற்பது என் கண்ணுக்கு புலப்படுகிறது. எந்த கல்யாணத்திற்குப் போனாலும், இம்மாதிரி ஓரிரண்டு மாமிகள் உண்டு. எங்க அக்காவோட நாத்தனாரோட, மச்சினரோட மாட்டுப்பொண்ணோட.... என்று சொல்லிக்கொண்டு உறவுகளை ஒரு full cycle கொண்டு போகும் மாமிகள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். எப்படியாவது ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்திவிடுவார்கள்.
வாழ்க இம்மாதிரியான மாமிகள். வளர்க நம் உறவெனும் வ்ருட்சம்.

No comments: