Pages

October 06, 2005

நவராத்திரி

நவராத்திரி என்றாலே, எங்கள் வீட்டில் கொலு வைக்கும் வைபவம் தான் ஞாபகம் வரும். பள்ளிக்கூடக் காலத்தில், இந்த ஒன்பது நாட்களும் பள்ளி காலாண்டு விடுமுறை விட்டு விடுவார்கள். மாஹாளய அம்மாவாசையின் முந்தைய தினம் பரீட்சை எல்லாம் முடிந்து விடும்.
வருடந்தோறும், விட்டில் கொலு வைப்போம். நான் தான் உத்தரத்தின் மீதேறி(ஏறுவது குதிப்பது எல்லாம் தான் நமக்கு கை வந்த கலையாச்சே), ஒவ்வொரு கொலு பொம்மையாக எடுத்துக் கொடுப்பேன். எங்கள் வீட்டில் பொம்மைகளெல்லாம் தனித்தனியாக இல்லாமல் எல்லாமே, செடு செட்டாக இருக்கும். வெங்கடாசலபதி அலமேலுமங்கை செட், வரலக்ஷ்மி விரதம் செட், தசாவதாரம், கருட சேவை, சிவன் நந்தி, ராமர் பட்டாபிஷேகம், கிருஷ்ண லீலைகள் (னந்தவனத்தில் கிருஷ்ணர் கோபிகா ஸ்த்ரீகளுடன் குஜால் செய்தவை) செட்டியார் கடை இப்படியாக நிறைய செட்டு பொம்மைகள். ஆற்றங்கரையிலிருந்து கரம்பை வெட்டி வந்து காடு மலையெல்லாம் செய்வோம். அப்பா சீரியல் லைட்டு போடுவார். எல்லா விளக்கும் ஒரு வழியாக சரஸ்வதி பூஜையன்று தான் எரியும். துர்கை லக்ஷ்மி சரஸ்வதியென தலா ஒவ்வொருவருக்கும் மூன்று நாட்களென காலையில் அஷ்டோத்திரம் சொல்லி பூஜை செய்வேன்.
இதையெல்லாம் விட ஸ்வாரஸ்யமாக இருப்பது ஒவ்வொரு நாளும் என் தங்கைக்கு ஏதாவது ஒரு வேஷத்தை போட்டுவிட்டு எல்லா வீடுகளுக்கும் சென்று அழைத்து வருவாள். ஒரு முறை "நானும் வேஷம் போட்டுக் கொள்வேன்" என்று அடம் பிடித்ததால் , குடுகுடுப்பாண்டி வேஷம் போட்டுவிட்டாள். (நம்ம மூஞ்சிக்கு அது தான் எடுப்பா இருந்தது)
எப்போடா சரஸ்வதி பூஜை வரும் என்று காத்திருப்போம். நாளிதழ் கூட படிக்க மாட்டேன். மாதத்திற்கொருமுறை சரஸ்வதி பூஜை வரக்கூடாதா என்று ஏங்கியதுண்டு. மறுநாள் விஜயதசமி ஏண்டா வருகிறதென்று இருக்கும். பள்ளி திறந்து விடுவார்கள். அதை விடக் கொடுமை, விடைத்தாளெல்லாம் ஒரே நாளில் விநியோகம் செய்து விடுவார்கள். நம்ம வண்டவாளமெல்லாம் அன்று தண்டவாளம் ஏறிவிடும். ஒவ்வொரு விஜயதசமியும் கவலை தசமியாகத் தான் இருக்கும். ஏதாவது விடைத்தாளை மறைத்தால் கூட என் உடன் பிறப்பு வந்து போட்டுக் கொடுத்துவிடுவாள்.
கல்லூரி வந்த பிற்பாடு தான் விஜயதசமி கவலையில்லாமல் கழிந்தத்து.

இம்முறை மனைவியும் அம்மாவும் சேர்ந்து கொலு வைத்திருக்கிறார்கள். ஆனால் நான் அந்த வைபவத்தைக் கண்டுகளிக்க என் மேலாளருக்கு மனம் ஒப்ப வில்லை போலும். என்னை ஒரு வாரத்த்ற்கு இத்தாலி அனுப்பி விட்டார். இது போதாதென்று இவ்வாரத்தில் இரண்டு நாள் விடுமுறையும் போயிற்று. இத்தாலி பயணம் பற்றி அடுத்த வாரம். (ஆமாம், பெரிய மெகா சீரியல் எடுக்கே. அடுத்த வாரம்னு பெரிய சஸ்பென்ஸ் உண்டாக்குதியாக்கும். வெளக்கெண்ணெய்)