Pages

December 31, 2008

புத்தாண்டு சபதங்கள்

“இந்த வருடத்திலிருந்து உருப்படியாக என்ன செய்வதாக உத்தேசம்” என்று காயத்ரி கேட்டாள். “சபதமெடுக்க ஒரு நேரம் காலம் வேண்டாமா? புது வருடம் பிறந்ததும், ஒரு நல்ல நாளா பார்த்தா அதைப் பற்றி யோசிக்கலாம்” என்றால் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லை மேலிடம். ஜனவரி 1 அன்று எந்த ராகு காலம் யம கண்டமும் பார்க்க வேண்டாம், என்று சொல்லிவிட்டு, நான் மேற்கொள்ளவிருக்கும் புத்தாண்டு தீர்மானங்கள் என் சம்மதமே இல்லாமல் அதுபாட்டுக்கு நிறைவேற்றப் பட்டன.

தீர்மானம் 1:
உடம்பு எடையைக் குறைக்க வேண்டும்.
கல்யாணத்தின் போது 32’ஆக என் இடுப்பு சுற்றளவு இப்போது 34 ஆகிவிட்டது. வெட்டிவ்ம்பு படிக்கும் நல்லவர்களே, நீங்களே சொல்லுங்கள், இதில் என்னுடைய தவறு என்ன இருக்கிறது. கல்யாணத்திற்குப் பிறகு என்னவள் செயது போட்ட சமையலைச் சாப்பிட்டதன் விளைவு தானே உடம்பு ஏறியிருப்பதற்குக் காரணம். “நான் குண்டாகியிருப்பது உன் சமையலுக்கு நான் கொடுக்கும் காம்ப்ளிமண்ட் தானே” என்று சொன்னால் அதையும் ஒத்துக் கொள்ள மாட்டேங்கிறாள். நாளையிலிருந்து ஐந்தறை மணிக்கு அலாரம் அலறும் என்று வானிலை அறிக்கை மாதிரி அறிவிக்கிறாள்.

தீ்ர்மானம் 2:
அடிக்கடி கோபப் படக்கூடாது. டென்ஷன் ஆகக் கூடாது.
கோபத்தின் ரிஷி மூலம் நதி மூலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தோமேயேனால், நமக்குப் பிடித்த ஒருவர் நமக்குப் பிடிக்காத காரியத்தை செய்யும் போது ,கோபம் வருகிறது. இப்போது சொல்லுங்கள், நான் அடிக்கடி கோபப் படுகிறேனென்றால் அது எதனால், யாரால்? இதைச் சொன்னால், “அதெல்லாம் எனக்குத் தெரியாது. இனிமேல் தேவையில்லாமல் கோபப் படக்கூடாது” என்று இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 3:
உருப்படியாக வெட்டிவம்பு எழுதணும். சும்மா தங்கமணியை வாரி, நாலு பேரை நக்கல் அடிக்காமல் எழுதணும்.
இதைச் சொன்னதும், ”இது தான் நான் எழுதும் கடைசி பதிவு" என்று நினைத்து விட்டேன். நம்ம பதிவை நாலு படிக்கறதுக்கு முக்கிய காரணமே தங்கமணியை நக்கல் அடிப்பதால் தான். முதலுக்கே முடிவு கட்டினால் நான் என்ன செய்ய முடியும்? இதோடு நின்று விடாமல், “வெட்டிவம்பைப் படிப்பவர்கள் சிந்திக்கற மாதிரி எழுதணும்” என்றொரு உபரி தீர்மானமும் வேற, ஒரு அடெண்டமாக. “சிந்திக்கற மாதிரின்னா, புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமான்னு எழுதலாமா. எல்லாரும் மோட்டு வளையைப் பாத்துக் கிட்டு சிந்திக்க் ஆரம்பிச்சுடுவானுங்க” என்று சொன்னால் முறைக்கிறாள்.

தீர்மானம் 4:
மேலும் ஒரு புத்தகம் வாங்காமல் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடிக்கணும்
எனக்குள்ள ஒரு கெட்ட பழக்கம் ஒரு புத்தகம் படித்து முடிப்பதற்குள்ளாகவே இரண்டு புத்தகம் வாங்கிவிடுது. “அலமாரியெல்லாம் வழிந்து நிறைகிறது. எதை மேல வைக்கலாம் என்று கேட்டாலும், அதை இன்னும் படிக்கலை என்றால் எப்படி” என்று காயத்ரி கடிந்து கொள்கிறாள்.

பார்ப்போம், என் வி்ருப்பமில்லாமல் அவளாகவே நிறைவேற்றிக் கொண்ட எத்தனை சபதங்கள் அபத்தங்களாகின்றன என்று?

December 26, 2008

காணக் கண்கள் கோடி வேண்டும்

காலை 5.00 மணி. பெங்களூர் மார்கழிக் குளிரில் ஜாகிங் வாக்கிங் போகும் கடமை கண்ணாயிரங்கள் கூட இழுத்துப் போர்த்தி உரங்கும் நேரத்தில் நான் என்ன செய்கிறேன். மார்கழி மாசத்தில் அதிகாலையில் கோவிலுக்கு வரச் சொன்ன்னாள் அம்மா. அதிகாலையில் எழுந்து குளிரை எதிர்கொண்டு, ஸ்வெட்டர் மஃப்ளர் ஏதும் இல்லாமல் சில்லென்று அடிக்கும் காற்றில் நடந்து பெருமாளை சேவித்து வந்தோம். பெருமாளென்றால் சேவிக்கணும். சிவன் பிள்ளையார் முருகன் இவர்களையெல்லாம் கும்பிடணும்.

இதெல்லாம் நடந்தது ஒரு வாரம். ஒரே வாரம். அடுத்த வாரத்திலிருந்து, “அம்மா, நேற்று ஆஃபீஸிலிருந்து 12 மணிக்குத் தான் மா வந்தேன்” என்று இழுக்க, பிள்ளைக்காக பெருமாளைத் துரந்தது, பித்து மனம் கொண்ட தாய் மனது.

பெங்களூரில் எங்கள் வீட்டருகுலிருக்கும் இந்தப் பெருமாள் மட்டும் தான் அதிகாலையிலேயே எழுந்திருக்கிறார். IT மக்களால் பூஜிக்கப் பட்டு வரும் அருகிலிருக்கும் பிள்ளையாரை 7 மணி வரை யாரும் தொந்தரவு செய்வதில்லை.

சிறு வயதில், மார்கழி மாதத்தில் அம்மா வீட்டுக்கு முன்னால் பெரிய பெரிய கோலமெல்லாம் போடுவாள். ஒரே நேரத்தில் இரட்டை இழையில் கோலம் போடுவாள். ஸ்கேலே இல்லாமல் நேர்கோடுகளும் காம்ப்ஸ இல்லாம ஆர்க் வரைவதும், கோலப் பொடி அவள் இடும் கட்டளையை செவ்வன செய்யும். இம்மாதிரி கோலம் போடும் கலை இன்றைய தலைமுறை பெண்களிடம் அவ்வளவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவ்வப்போது தூங்கிய விழிக்க மறுக்கும் விழிகளோடு என் தங்கை செம்மண் இடுவாள். அம்மாவுக்குத் துணையாக வாசலில் காவல் காப்பது என் வேலை.

ஒரு கோஷ்டி கையில் ஜால்ரவெல்லாம் எடுத்துக் கொண்டு,
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

என்று பஜனை பண்ணிக் கொண்டு போகும். இவர்களோடு பஜனை பண்ணிக் கொண்டு போனால், பெருமாள் கோவிலில் சுடச் சுட வெண்பொங்கலும் பானகமும் கிடைக்கும். அதிகாலையில், அந்த துளசி நறுமணம் கமழ, லக்‌ஷ்மி பூமாதேவி சமேதராகப் பெருமாளை தரிசிக்க, ஆஹா காணக் கண்கள் கோடி வேண்டும்.

இப்போது மணி மீண்டும் 5.20. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிவடைந்து ஊரே நித்திரா தேவியை ஆரத்தழுவிக்கொண்டு உரங்கிக் கொண்டிருக்கும் வேளை. குளிர் இன்னம் கூடியிருக்கிறது. பாதரசம் சென்ற வாரத்தை விட இரண்டு இலக்கங்கள் கீழே இறங்கியிருக்கிறது. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?

ஆஸ்திரேலியாவிற்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் டையே பாக்ஸிங்க் டே டெஸ்ட் மேட்ச் நேரடி ஒளிபரப்பு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

கிழக்கே உதிக்கும் ஆதவன் உதயமாகத் தவறினாலும் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங்க் டே அன்று மெல்பேர்ன் நகரத்தில் டெஸ்ட் மேட்ச் நடப்பது தவறாது. எந்த நாடு அஸ்திரேலியாவிற்கு பயணிக்கிறதோ, அந்நாட்டோடு டிசம்பர் 26 மெல்பேர்ன் நகரத்தில் டெஸ்ட் மேட்ச் நடக்கும். மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் மெல்பேர்ன் கிரிக்கெட் கிரவுண்டில் டெஸ்ட் மேட்ச் பார்க்க, ஆஹா, காணக் கண்கள் கோடி வேண்டும்.

டிஸ்கி: இதுக்கு மட்டும் முழிப்பு வருமாக்கும் என்று அம்மா இடித்துக் காட்டுவது, பின்னாலிருந்து கேட்கிறது.

December 23, 2008

நியானும் மலையாளமும்

எனிக்கும் மலையாளத்துக்கும் நன்னாயிட்டு சம்பந்தமுண்டாக்கும். எனிக்கு நன்னாயிட்டு ஓர்மையுண்டு, எண்ட பாட்டி, அவளண்ட பால்ய காலம் கேரளாவிலே கழிச்சு. எண்ட தாத்தாவுக்கு கேரளத்தில் கஸ்டமர் உண்டு. எண்ட அச்சன் மூக்கைப் பிடித்துக்கொண்டு தமிழ் பரையெங்கில் அதே வல்லிய மலையாளமாக்கும். எண்ட குருவினண்ட பார்யாவுக்கு அம்பலபுழையாக்கும் சொந்த ஊர். எண்ட பார்யாவிண்ட நாடு ஆலப்புழை. இதாக்கும் எண்ட மலையாள சம்பந்தம்.

மலையாளிகளையும், தமிழை மலையாளத்தில் கலந்து தலையாளமாப் பரையும் தலையாளிகளை நியானும் எண்ட சிநெகிதனும் நன்னாயிட்டு களியாக்காம். மலபார் போலீஸண்ட ஒரு தமிழ்ப் படம். ஆ படத்தில் சத்யராஜ் நடிச்சு. அயாள் ஒரு கேரளா போலீஸ். அயாளெண்ட அசிஸ்டெண்ட் கௌண்ட மணி தன்ன. எடா, மலையாளி சத்யாராஜை அயாள் இந்தா இந்தா களிச்சு, எடா நியானும் எண்ட சிநேகிதனும் ஆ படம் கண்டுட்டு உருண்டு புரண்டு சிரிச்சு. ஆ படத்தை எந்த மலையாளி நோக்கினெங்கிலும், அவன் கௌண்ட மணியை கொன்னு களைஞ்சு.

சாரி சாரி, தமிழ் பேசும் நல்லார்கள் ஆன்றோர்கள் சான்றோர்கள் எல்லோரும் என்னை மன்னிக்கணும். இவன் என்னடா பெனாத்துறான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? காயத்ரி பேசுவதற்கு ஒரு காதைக் கொடுத்துக் கொண்டே எழுதினேனா எல்லாம் மலையாளமா வந்துவிட்டது. இது ஒரு மாதிரியான ஃபோபியாவோ? தங்கமணி பேசுவதைக் கேட்டாலே சிந்தனையெல்லாம் Malayalify ஆகிறதே நான் மட்டும் கேரளாவிலேயே செட்டில் ஆகியிருந்தால், ஐயோ, வெட்டிவம்பைப் படிப்பவர்கள் என்னைக் கூலிப் படை வைத்துப் போட்டுத் தள்ளியிருப்பார்கள்.

எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சக்தி மலையாளத்துக்கு உண்டு.
ஒரு எஃபக்ட் என்று கூடச் சொல்லலாம் அது என்ன? எந்த மொழி பேசுபவரானாலும், அயாள் (பார்த்தீர்களா, எழுதும் போதே மலையாளம் மூக்கை நுழைக்கிறது) அந்த ஆள் கேரளாவிலே செட்டில் ஆனால், அவர்கள் பேசும் மொழிக்கு ஒரு மலையாள மூலாம் பூசினது போலிருக்கும்.

நான் கொல்கத்தாவிலே இருந்த போது என் சக அரையாளன், பாலக்காட்டைச் சேர்ந்தவன். அவன், “சாமான்களை எப்படி கொண்டு போகப் போறே” என்று கேட்பதற்கு, “எடா, இந்த சாமானெல்லாம் எப்படியாக்கும் கடத்தப் போறாய்” என்பான். இவன் பேசுவதை தமிழ் தெரிந்த ஒரு மூன்றாவது மனிதர் கேட்டால் என்ன நினைப்பார். இவனுங்க ஏதோ கஞ்சா கடத்தப் போறாங்க போலிருக்கேன்னு நினைக்க மாட்டார். அவன் கூட ஒரு வருடம் இருந்து விட்டு நெல்லைக்கு வந்திருந்த போது, ஒரு ஆள் என்னிடம், “நீங்க மலையாளியா” என்றார். எனக்கு அப்படியே பத்திண்டு வந்தது.

என் நெருங்கின தமிழ் சிநேகிதன் ஒருவன் பெங்களூரிலிருந்து எரணாகுளத்திற்கு மாற்றலாகிப் போய் விட்டான். சமீபத்தில் அவனோடு தொலைபேசியில் பேசும் போது, “நியான் நியான், புவான் புவான்” என்று ஹார்ன் அடிப்பது பேசுகிறான். “டேய், ஏண்டா இப்படி பேசறே” என்றால், “எந்தா செய்யறது. அப்படியாக்கும் வரது” என்று மூக்கால் தலையாளுகிறான்.

தமிழில் நாம் பேசும் சில வார்த்தைகள் மலையாளத்தில் வேறொரு வார்த்தையாக உபயோகப்படுத்துவார்கள். எங்க பெரியம்மாப் பாட்டி கேரளாவிலே செட்டில் ஆனவங்க. அவங்க எங்க வீட்டுக்கு ஒரு தடவை வந்திருந்த போது, என் தங்கையிடம், “எடி, விளக்கைப் பார்க்கலியோடி. அது இன்னும் கத்தறது”. ”என்னது விளக்கு கத்தறதா” என்று பயந்தே போயிட்டேன். நாம அதுக்கு ஹாரனா ஃபிட் பண்ணி வச்சிருக்கோம்னு பார்த்தா, விளக்கு எரிவதைத் தான் கத்தறது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்படித் தான் இன்னொரு முறை ஒரு பையனை அவன் அம்மா வீட்டில் தேடிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பாட்டியிடம், பையனப் பார்த்தீகளா என்று கேட்டதற்கு, “அவன் கொல்லப்புறத்துல தணல்ல நிக்கறான்” என்றார். எல்லாரும் அடிச்சுப் பிடிச்சு, “ஐயோ, தீ ஏதாவது வந்துடுத்தா. பிள்ள தணல்ல நிக்கறான்னு சொல்லறாளே”ன்னு போய் பார்த்தா, அந்தப் பையன் வேப்ப மரத்து நிழலில் விளையாடிக் கொண்டிருக்கிறான். நிழல் என்பதற்குத் தான் தணல் என்று சொல்லுவார்களாம், கேரளாவுல. நல்லா சொன்னாங்க.

இதாவது பரவாயில்லை. ஒரு முறை காயத்ரி என்னிடம் வந்து “இன்னிக்கு ஊர்ல ஆத்துக்கு ஸ்கந்தன் வந்திருந்தானாம்.” ”யாரந்த ஸ்கந்தன்” என்று யோசிப்பதற்கு முன்பாகவே, “அவனோட சின்ன வயசுல கோவில் விசேஷத்துக்கு கூட்டிண்டு வந்திருந்தப்போ, நம்பாத்துல தான் இருந்தான். இந்த வருஷம் கோவில் விசேஷத்துக்கு நம்பாம் வழியா நடந்து போயிண்டிருந்தப்போ தானாவே காம்பவுண்டுக்குள் வந்துட்டானாம்” என்று புல்லரித்துப் போய்ச் சொன்னாள்.

யாரடா இந்த ஸ்கந்தன். சரி, அப்படியே அவன் வந்திருந்தாலும் அதுக்கு ஏன் இவ்வளவு புல்லரித்துப் போகணும் என்று நியானும் குழம்ப, மேலும் சொன்னாள், “இன்னிக்கு அம்மா அவனுக்கு பெரிசா இரண்டு வாய் உண்டக் கட்டியும் வெல்லமும் கொடுத்தாளாம்” என்றாள்.
”யாருடீ இந்த ஸ்கந்தன்” என்றேன். ”ஐயோ பக்கத்து ஊர் கோவில் ஆனையாக்கும்” என்றாளே பார்க்கலாம். வாயடைத்துப் போய் விட்டேன்.

இதே போல் ஒரு முறை, எனக்குத் தெரிந்த ஒருவர் கேரளாவிலுள்ள உறவினர் வீட்டுக்குப் போயிருக்கிறார். உறவினர் மருந்துக் கடை வைத்திருந்தாராம். மருந்து வாங்க வந்த ஒருத்தன், “கேசவனுக்கு பனியாணு (கேசவனுக்குக் காய்ச்சலாம்). நூறு க்ரோஸின் இல்லெங்கில் நூறு பாராசிடமோள் குடுக்காம்” என்றானாம். கடைக் காரர் பயந்து போய், “நூறு பராசிடமோள் கழிச்செங்கில் அயாள் மரிச்சு போகும். அயாள் எவட?” என்றார். மருந்து வாங்க வந்தவன், மீண்டும் அதே பல்லவியைப் பாடியிருக்கிறான். இதைப் பார்துக் கொண்டிருந்தவர், “அந்த ஆள் எங்கே” என்று கேட்டிருக்கிறார். அதற்கு மருந்து வாங்க வந்தவன், ”கேசவன், இவட வர மாட்டான்.” என்றான்.
”ஏன்” என்றதற்கு “அவன் ஆனை” என்றானாம்.

மலையாகளின் மிருகங்கள் மேலுள்ள பரிவை என்னவென்று புகழ?

ஆஃபீஸிலிருந்து லேட்டாப் போனால் என்ன காரணம் சொன்னாலும், காயத்ரி “நியான் இதை விஷ்வசிக்கணுமா” என்கிறாள். குப்பையாக ஒரு இடம் இருந்தால், அவள் அதிகாரியில், அது, ”ஒரு விருத்தி கெட்ட ஸ்தலம்”. ஏதாவது கேலி செய்தால், “களியாக்க வேண்டா” என்பாள். இண்டரஸ்டிங்காக கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தால், “களி தீர்ந்ததா” என்பாள். முந்தைய களிக்கும் இந்த களிக்கும் என்ன வித்தியாசமோ?

தனது மலையாளத் தோழியிடம் பேசும் போது, “நாட்டில் எல்லோரும் சுகம் தன்னே” என்று வினவுவாள். “ஆஹா வீட்டிலுள்ளவர்கள் மட்டும் சுகமா என்று கேட்காமல் நாட்டிலுள்ளவர்கள் பற்றி விசாரிப்பதைப் பார்க்கும் போது, “எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா” என்ற அழகன் பாட்டுத் தான் ஞாபகம் வருகிறது.

ஆக இப்படியாக நியானும் மலையாளத்தோடு உறவாடிக் கொண்டிருக்கிறேன். My Tryst with Malayalam continues.

டிஸ்கி: யப்பா யாரும் வுட்டுக்கு போன் போட்டு நான் இப்படியெல்லாம் எளுதியிருக்கேன்னு சொல்லிப்புடாதீங்க. பயமெல்லாம் ஒண்ணும் இல்ல, இருந்தாலும்...... ஒரு முன்னெச்சரிக்கை அறிக்கை.

December 22, 2008

பட பட பட்டாம்பூச்சி



பட்டாம்பூச்சி விருது கொடுத்த திவ்யப்ரியாவிற்கு கோடானு கோடி நன்றிகள். எனக்கு புக்கர் ப்ரைஸ் கிடைத்த உணர்வு. இந்த விருதை மூன்று பேருக்கு கொடுக்கலாம் என்று தேர்வு செய்திருக்கேன். புதிய பிளாகர்களை ஊக்குவிக்கும் வகையாக (நேரம், இவனெல்லாம் நம்மளை ஊக்குவிக்கணும் என்கிறது நம்ம தலையழுத்து நினைத்தாலும் நினைக்கலாம்) இதோ நான் தேர்ந்தெடுத்திருக்கும் மூன்று பேர் இதோ:


பூர்ணி்மா சரண் - சாரல் என்ற பெயரில் வலைப்பூ எழுதுபவர். ரொமாண்டிக் கவிதைகள் எழுதி அசத்துபவர்.

வானவில் வீதி கார்த்திக் - சென்னை வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு மாணவர்.

கொஞ்சம் லொள்ளு நிறைய ஜொள்ளு சிந்தும் கார்த்திக் - ஆங்கிலததிலும் பட்டையைக் கிளப்பும் இவரது வலைப்பதிவு.

ஏண்டா வெண்ணை, எங்களுக்கெல்லாம் கிடையாதா என்று போன தடவை அவார்ட் வாங்கினவர்கள் தப்பாக நினைக்க வேண்டாம்.

December 18, 2008

என்று முடியும் இந்த....

எப்படித் தான் இந்த மெகா சீரியல்களைக் கண் கொட்டாமல் பார்க்கிறார்களோ, என்று நினைத்துக் கொண்டிருந்த நான், இப்போது வேறு வழியில்லாமல் அந்த கருமாந்திரத்தையும் பார்த்துத் தொலைக்க ஆரம்பித்து விட்டேன்.

ஆஃபீஸ் முடிந்து 7 மணிக்கு மேல் வந்தால் ஆனந்தம் என்ற பெயரில் சோகமே உருவான முகங்களுடன் ஓடுகிறது ஒரு மெகா சீரியல். எத்தனை வருடங்களாக ஓடுகிறதென்று தெரியவில்லை. முடிவு கண்ணில் தெரிவதாக இல்லை. சுகன்யாவிற்கு இரண்டாவது இன்னிங்க்ஸ். ரிடையர்ட் ஹர்ட் ஆனால் நன்றாக இருக்கும்.

எட்டு மணிக்கு மேல் வந்தால் ”திருமதி.செல்வம்” ஓடுகிறது. ஒரு வருடத்திற்கு முன்னால் ஒரு நாள் இந்த சீரியலைப் பார்த்த போது (வேண்டாம் என்று போனாலும் அதுவாக வந்து காதில் விழுந்த ஒரு மாலைப் பொழுது) திருமதி.செல்வமாகப் போகும் பெண்ணை பெண் பார்க்கும் எபிசோட். அந்தப் பெண் பாவம், வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு மாங்கு மாங்கு என்று வேலை செய்வாள். முகத்தை பாவமாக வைத்துக் கொள்வாள். அவள் அம்மா அப்பாவைத் தவிர வீட்டிலுள்ள அனைவருக்கும் இவள் ஒரு பெரிய பாரம்.

இவள் கல்யாணம் செய்து கொண்டு இன்னும் எத்துணை கஷ்டங்களை அனுபவக்கிறாள் என்பது மீதி இரண்டு வருடங்களுக்கு ஜவ் மிட்டாய் போல் இழுக்கப் போகிறார்கள் என்று அன்றே தெரிந்து விட்டது. அன்றுள்ள எபிசோடில் அவளைப் பெண் பார்க்க வரும் பையன் இவளை நிராகரிக்கப் போகிறான் என்று ஆரூடம் சொன்னேன். பின்ன, அவளைப் பெண் பார்க்க வந்த பையன் பெயர் செல்வம் இல்லையே! அதன் பின் அவளை எவ்வளவு பேர் வந்து நிராகரித்தார்களோ, தெரியவில்லை. இப்போது தான் கல்யாணம் ஆகியிருக்கிறது. இன்னும் இவள் படப் போகும் அல்லல்கள் வரவில்லை. அதெல்லாம் முடிவதற்குள் 2011 உலகக் கோப்பை முடிந்து விடும்.

8 மணிக்கு மேல் கிளம்பி, டிராஃபிக்கில் சிக்கி சின்னாபின்னமாகி வீட்டுக்கு 8.30 மணிக்கு வந்தால் கலசம். ரம்யா கிருஷ்ணன், சீரியல் உலகத்திற்கு சினிமாவிலிருந்து வந்த லேட்டஸ்ட் வரவு. சுதா சந்திரனை காண சகிக்கலை. யாராவது அவர் வீட்டு முகவரி தெரிந்தால் அந்தப் பக்கமே போகாமல் இருக்கலாம்.

ஆஃபீஸில் வேலை அதிகமாயிருந்து 9 மணிக்கு வந்தால் கோலங்கள். இதற்கு பேசாம ஓலங்கள் என்று பெயர் வைத்திருக்கலாம். யாராவது அழுது கொண்டே இருக்கிறார்கள். ”ஐயோ பாவமே. ஒரு பொண்ணுக்கு இவ்வளவு கஷ்டங்களா”ன்னு பார்ப்பவர்கள் எல்லோரும் சொல்லணும் என்பது தான் இயக்குனரின் திட்டமோ என்னவோ. தேவ்யானிக்கு பேரக் குழந்தை பிறந்தாலும் கோலங்கள் முடிவடைவதாகத் தெரியவில்லை.

ஆஃபீஸில் பிழிந்தெடுத்து அப்பாடா என்று வீட்டுக்கு 9.30 மணிக்கு மேல் வந்தால் முறைத்து முறைத்துப் பார்க்கும் அரசி். 9.30 மணி ஸ்லாட்டை ராதிகாவிற்கு சன் டி.வி நிறுவனம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. தொண தொணன்னு ஏதாவது பேசிக்கொண்டே இருக்கும் சிங்கபெருமாளைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. ராதிகாவின் எல்லா படைப்புகளிலும் தலை காட்டிவிடும் அஜய் ரத்னம் எப்போதும் ஒரு மஞ்சளோ பிங்கோ, சிகப்பு கலரில் சட்டையும் சம்பந்தா சம்பந்தம் இல்லாத டையும் கட்டிக் கொண்டு முகத்தை இருக்க வைத்துக் கொண்டு, யப்பா, எப்படித் தான் முடிகி்றதோ!!??

சினிமா போதாதென்று இப்போது சீரியலிலும் டபுள் ஆக்ட் கொண்டு வந்ததெல்லாம் கொஞ்சம் ஓவர். அதிலும் இரண்டு ராதிகாவையும் ஒரே ஷாட்டில் காட்டி விட மாட்டார்கள்.

இந்த சீரியல்களை விட அதற்கு பின்னணி இசை தான் ரொம்ப கொடூரம். ”பாங்க ப்பாங்க்” என்று டிரம்பெட்டை காதில் ஊதுவது தலைவலியைத் தான் ஏற்படுத்துகிறது. ஒரு சில சீரியல்களை அம்ருதாஞ்சன் தான் ஸ்பான்ஸர் செய்கிறார்கள். என்ன பொருத்தம்!!

ஏதோ விஜய் டி.வி.யில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 9-10 மணிக்கு வருவதால் கொஞ்ச நாட்களாக இந்த சீரியல் தொல்லை ஒரு மணி நேரம் குறைந்திருக்கிறது அதுவும் இப்போது கடைசி்க் கட்டத்தை நெருங்கி விட்டது. இரண்டு வாரங்களில் முடிந்து விடும். இந்நிகழ்ச்சியைத் திரையிடும் விஜய் டி.வி.யிடம் ஒரு வேண்டுகோள். முடிந்த வரைக்கும் இதற்கு முந்தைய எபிசோடுகளை மீண்டும் ஒளிபரப்புங்கள். திரைக்குப் பின்னால் நடந்த காட்சிகள், ரீ-டேக்குகள், சின்மயி காம்பியர் செய்த போது செய்த பிழைகள், லைட்டர் மொமெண்ட்ஸ் அது இதுன்னு ஒரு இரண்டு மூன்று மாசத்திற்கு இழுத்தடிக்கவும். அதற்குள்ளாகவே அடுத்த சூப்பர் சிங்கர் போட்டி ஆரம்பித்து விடலாம். முடிந்தால் அடுத்து ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டி வைக்கவும். விக்னேஷும் கி்ருஷ்ணமூர்த்தியும் பாடிய பாட்டுக்கள் இன்னும் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கின்றன.

அதற்குள் இந்த சீரியல் கருமாந்திரஙகளெல்லாம் முடிந்து விட்டால் நிம்மதியாக இருக்கும்.

லஷ்கர்-ஏ-தொய்பா, ஜம்மாத்-உத்-தாவா, .எல்.டி.டி.ஈ போன்ற அமைப்புகளை தடை செய்த மாதிரி இந்த சீரியல்களைத் தடை செய்தால் நாடு சுபிட்சம் அடையும்.

என்று முடியும் இந்த மக்களின் சீரியல் மோஹம்!!

டிஸ்கி1: விஜய் டி.வி. ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளும் எனக்குப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.

டிஸ்கி2: சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்ததற்கு பதிலாக ஏதாவது மெகா சீரியல் இயக்குனர் கை காலில் விழுந்து சான்ஸ் வாங்கியிருந்தால் சந்தோஷியுடனோ ப்ரீதியுடனோ ஜோடி நம்பர் 1 ஆடிக்கொண்டிருக்கலாம்.

December 08, 2008

வாரணம் ஆயிரம்

ரொம்ப நாளா இதோ வரேன் அதோ வரேன், வரப்போகிறேன் என்று ஜூட் விட்டுக் கொண்டிருந்த வாரணம் ஆயிரம் படத்தை பார்க்க நானும் காயத்ரியிடம், இந்த வாரம் போகலாம் அடுத்த வாரம் போகலாம் என்று தாக்காட்டிக் கொண்டிருந்தது நேற்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இன்று படம் பார்க்கலைன்னா காலவரையற்ற போராட்டம் என்று அறிவித்தபின் என்ன தான் செய்ய முடியும்.

காலையிலேயே போராட்டம் ஆரம்பிக்கும் கிரக நிலைகள் தெரிந்ததால், பிருந்தாவனில் சாப்பிட்டுவிட்டு , லிடோவில் படம் பார்க்கலாம் என்று முடிவானது. 12.45 மணி ஷோவுக்கு 12.44 மணிக்குத் தான் பிருந்தாவனிலிருந்து புறப்பட்டோம். முன்னோரு நூற்றாண்டில் பிருந்தாவனிலிருந்து லிடோ போவதற்கு 5 நிமிஷம் தான் ஆகும். ஆனால் இப்போது பெங்களூரில் பூகோளமே மாறிய பிறகு தியேட்டரைப் போய்ச் சேர 15 நிமிடங்கள் ஆகிவிட்டது.

போறாக் குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்றொரு பழமொழியுண்டு. அதற்கேற்ப ஒரே ஒரு டிக்கட் தான் இருக்கிறது என்று தெரிய வந்தது. அம்மணிக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைத் தணிக்க வேறென்ன செய்ய முடியும். அங்கிருந்து 10 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் Innovative Multiplex'க்கு சென்றோம். 1.30’க்கு ஷோ. இவ்வளவு rash'ஆக கார் ஓட்டினதில்லை. நல்ல வேளை அங்கே டிக்கட் கிடைக்க முதலிலிருந்து படம் பார்க்க முடிந்தது.

உலகமே பார்த்து முடித்து விட்ட பிறகு படத்தின் கதையைச் சொல்ல நான் என்ன கேனையனா? தசாவதாரத்தை விட இப்படத்தில் சூர்யா அதிக கெட்-அப் களில் வருகிறார். அதிலும் பள்ளி மாணவனாக வரும் இடத்தில் அவர் உழைப்பு தெரிகிறது. ஒரு 35 வயது நிரம்பிய மனிதரை 15-16 வயது மாணவனாக மாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இந்த ரோலுக்கு டூப் கேட்டிருந்தால், நானே போயிருக்கலாம் என்று சொன்னால் காயத்ரி முறைக்கிறாள்.

சமீரா ரெட்டி சுடிதாரில் ஏமாற்றினாலும் ஜீன்ஸில் நன்றாகவே இருக்கிறார். என்ன உயரம் தான் கொஞ்சம் ஜாஸ்தி. அசினைப் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அசினுக்கும் சூர்யாவிற்கும் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி நன்றாக ஒத்துப் போவதால் இனி அவர் சூர்யாவுடன் ஜோடி சேர ஜோ தடை விதித்திருப்பதாக உளவுத்துறை செய்தித் துறை தெரிவிக்கிறது. (தீவிரவதிகள் பற்றி சரியாக உளவு செய்யாத துறை, இனி இது போல் செய்திகள் வெளியிட்டாலாவது உருப்படியாக இருக்கும்.)

படத்தில் நிறைய ஸ்வாரஸ்யமான வசனங்கள். சூர்யா அமெரிக்கன் கன்சுலேட்டில் விசா இண்டர்வியூவில் பேசுவது, சமீரா ரெட்டி வீட்டுக்குப் போய், ”இந்த ஊர்ல படிச்சு, இங்கேயே வேலை பார்த்து, இங்க டேக்ஸ் கட்டினால், நம்ம ஊரு நல்லா இருக்கும். நானும் நல்லா இருப்பேன்ல” என்று வழிகிற காட்சி, ரயிலில் சமீராவைப் பார்த்ததும் கிடார் எடுத்துக் கொண்டு என் இனிய பொன் நிலாவே பாட்டு பாடுவது, இப்படி ஸ்வாரஸ்யமான விஷயங்கள் நிறைய.

சூர்யா தங்கையை சற்று Out of Focus'லேயே காட்டியிருந்தாலும் நன்றாகவே இருக்கிறார். சீரியலில் ரொம்ப கண்ணைக் கசக்காமல் இருந்தால் நாலு பேர் இவரைக் கவனிக்கலாம்.

ரம்யாவோ, திவ்யாவோ, என்ன பெயராக இருந்தாலென்ன, நல்ல தேர்வு. படத்தில் தொய்வு ஏற்படும் போது, பாலைவனத்து ரோஜாவகப் பூத்து, என்னைப் போன்ற இளந்நெஞ்ஜங்களில் T20 ஆடுகிறார். ஒரு நல்ல பாட்டு கொடுத்திருக்கலாம்.

சிம்ரன் பற்றி சொல்லவில்லையென்றால் தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்கவே மன்னிக்காது. தனது பாத்திரத்தை அறிந்து செய்திருக்கிறார். முன்னாள் கனவுக்கன்னியாக இருந்தோமே, இப்படி ஒப்பனை போட்டு கிழவியாக மாற்றிவிட்டார்களே என்று அவர் நினைக்கக்கூடும். ஆனால் பாத்திரத்திக்கேற்ப கலைஞர்களை மாற்றுவதில் தான் ஒரு இயக்குனரின் வெற்றி ஒளிந்திருக்கிறது. அந்த வகையில் கௌதம் மேனன் வெற்றியடைந்திருக்கிறார். ஆனானப் பட்ட கமல்ஹாசனையே தன்னிஷ்டம் போல் இயக்கிவராச்சே.

படத்தின் பெரும் பலம் இசை. சூர்யாவை கிடாரிஸ்டாகக் காட்டுவதால் கிடாரை நன்கு உபயோகப்ப்டுத்தியிறார் ஹாரிஸ் ஜெயராஜ். பாட்டுக்களும் படத்தோடு பயணிக்கின்றன. எடுத்து விட்டோம் இங்கே சொருகி விடுவோம் என்ற ரகத்தில் எந்தப் பாட்டும் இல்லை. கௌதமுக்கும் ஹாரீசுக்கும் சண்டையாம். பிரிந்து விட்டார்களாம். அடுத்த படட்தில் ரஹ்மான் தான் இசையமைக்க்ப் போகிறாராம். Why would all beautiful things in the world come to an end? மீண்டும் இருவரும் இணை சேர பிரார்த்திப்போம். This pair complements each other very well. ரஹ்மான் ஷங்கர் மணிரத்னம் தவிர யாருக்கும் உருப்படியாக இசையமைத்ததில்லை. கௌதம் தவிர யாரும் ஹாரீசுக்கு Operating Freedom கொடுத்ததில்லை. இதை இருவரும் உணர்ந்தால் நல்லது.

படம் ரொம்ப மெதுவாகப் போகிறது. தவமாய் தவமிருந்து போலிருக்கிறது என்று பல விமர்சனங்கள். இருக்கலாம். இரண்டுமே தந்தைகளுக்காக அர்ப்பணிக்கப் பட்ட படம். ஆனால் எந்தவொரு இடத்திலும் கூட ஒன்றில் மேல் இன்னொன்றின் சாயல் இல்லை. ஆங்கிலத்தில் நிறைய உரயாடல்கள், இந்தப் படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு கொடுக்கக் கூடாது என்று கூச்சல் போடும் ஆட்டு மந்தைகளுக்கு நல்ல ரசனை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அருமையான ஆஹா ஓஹோ படமாக இல்லாவிட்டாலும், சூர்யாவின் உழைப்பிற்காகவும், ஜீன்ஸ் போட்ட சமீராவிற்காகவும், திவ்யாவிற்காகவும், முன் பாதி சிம்ரனுக்காகவும், இன்னொரு முறை இப்படத்தை low cost budget’ல் பார்க்கலாம் என முடிவு செய்திருக்கிறாள் காயத்ரி. எதற்காக இன்னொரு அறிவிக்கப்படாத காலவரையற்றப் போராட்டத்தை சந்திக்க வேண்டும். போனால் போகிறது. முடிந்தால் அடுத்த வாரம் பார்த்துத் தொலைப்போம்.

December 01, 2008

ஜொள்ளெனப் பெய்யும் மழை

இரண்டு மூன்று நாட்களாக தீவிரவாதிகள் மேல் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த ராணுவத்தினரையும், தீப்பிடித்தெரியும் தாஜ் மஹல் ஹோட்டலையும் பார்த்து, இரவில் படுத்தால் தூக்கமே வரவில்லை. கண்ணை மூடினாலே துப்பாக்கிச் சத்தமும், ஸ்ரீநிவாசன் ஜெயினும் பர்கா தத்தும் தான் கண் முன் நிற்கிறார்கள். சரி, இந்த வயிற்றெரிச்சல் சமாசாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தால், குருதிக்கொதிப்பு தான் அதிகமாகிறது. அதைக் குறைப்பதற்கான வழியைத் தேடலாமென, அருகிலிருக்கும் டி.வி.டி கடைக்குப் போய், ஏதாவது உருப்படியாக இருக்கிறதா என நோட்டம் விட்டேன்.

வீட்டம்மா வெகு நாட்கள் நச்சரித்து மௌன விரதமிருந்து பிடிவாதம் பல பிடித்தும் "போக முடியாது” என்று மறுத்த "பச்னா ஏ ஹஸீனோ"
என்ற ஹிந்தி படம் கண்ணில் பட்டது. (ஹிந்தியே கூடாது, தமிழ் வாழ்க என்று கோஷம் போடுபவனல்ல நான். ஏனோ, ரன்பீர் கபூரை பிடிக்கவில்லை. தீபிகா படுகோன் போயும் போயும் இவனுக்கு கெர்ள் ஃப்ரெண்டாக இருக்கிறாளே என்ற காண்டாகக் கூட இருக்கலாம்) போனால் போகிறது, வேறொன்றும் உருப்படியாக இல்லையே என்ற ஆதங்கத்தோடு அதை எடுத்துப் போனேன்.

புத்தம் புது படம், நல்ல ப்ரிண்டாகவும் இருந்தது இரட்டிப்பு சந்தோஷம். அதுவும் சப்-டைடிலோடு இருந்ததனால் என்ன பேசறாங்க என்ன சொல்லறாங்க என்ற வீட்டம்மாவின் நச்சரிப்பு இல்லை.

நாயகனுக்கு இந்தப் படத்தில் செம ப்ளே பாய் ரோல். படத்தில் மூன்று நாயகிகள். எடுத்தவுடன் ஜில்லென்ற சுவிட்ஜர்லாண்டில் ஆரம்பிக்கிறது கதை. இரண்டு பெண்களை காதலிப்பது போல் நடித்து, பிறகு அவர்களிடமிருந்து தப்பித்து விடுகிறார் இந்த ப்ளே பாய் நாயகன். ஆஸ்திரேலியா போய் அங்கே, நிஜமாகவே ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு, அவளிடம் காதலைத் தெரிவிக்கையில்,
அவள் காதலை நிராகரிக்கிறாள். அப்போது தன்னால் புண்பட்ட மனங்களின் வேதனையை அறிந்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்க அவர்களைத் தேடிப் போய் படத்தின் இரண்டாம் பாதி தொடர்கிறது.

படத்தில் அங்கங்கே தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே வாடை அடிக்கிறது. படத்திலேயே நாயகன் DDLJ ஷாருக் கான் போல் சேஷ்டை செய்கிறேன் என்று சொல்வது ரசிக்கத்தக்கது. படம் கடைசி வரை போரடிக்காமல் இருக்கிறது. ரன்பீர் கபூர் கொஞ்சம் ஷாருக் கான் போல் செய்ய பிரயத்தனப் பட்டிருக்கிறார்.

ஆனால் படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருப்பது தீபிகா படுகோன். (Note the Point, அவர் கதாபாத்திரம் பிடித்திருக்கிறது என்று சொல்லவில்லை)

சில நடிகைகள் அழகு சொட்டுவார்கள், ஆனால் திரைப்படத்தின் கதா பாத்திரத்தோடு ஒத்துப் போக மாட்டார்கள். ஐஷ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், தியா மிர்ஜா இந்த ரகம் தான். நல்ல வசீகரிக்கும் அழகு, ஆனால் திரையில் தோன்றினால் எதிலுமே ஒட்டாத ஒரு celluloid முகம். அசின் கூட பாலிவுட் போன பின் இந்த லிஸ்டில் சேர்ந்து விடுவாரோ என்று அச்சமாக இருக்கிறது. சில
நடிகைகள் இருக்கிறார்கள், அவ்வளவு அழகு என்று சொல்ல முடியாது. ஆனால் திரையில் தோன்றினால், பார்ப்பவர்களையெல்லாம் தன் பக்கம் பார்க்கும் படி செய்யும் திறன். காஜோல் மற்றும் சிம்ரன் ஏன் அந்தக் காலத்து சாவித்திரி சரிதா கூட இந்த ரகம் தான்.

இவர்களுக்கு இருக்கும் screen presence முதலில் குறிப்பிட்ட நடிகைகளுக்குக் கிடையாது. இன்னொரு ரகம் உண்டு. நல்ல வசீகரிக்கும் அழகு மற்றும் படம் பார்ப்பவரையும் தன் பக்கம் ஈர்க்கும் திறன். ஸ்ரீதேவி, பத்மினி, ஜெயலலிதா, வைஜெயந்தி மாலா, மாதுரி தீக்‌ஷித் போன்றவர்கள் இந்த ரகம். ’கஜினி’ அசின் கூட இந்த ரகம் என்று சொல்லலாம். தீபிகா படுகோனும் இந்த ரகம் தான்.

சிங்காரவேலன் கமல் மாதிரி சொல்ல வேண்டுமானால், “அது... அது வந்து ... நல்லாவே இருக்காம்மா!. ஓஒஹோ” என்று பெரிய ஓ

போடலாம். தீபிகாவிற்காகவே அவர் வரும் காட்சிகளை இன்னொரு முறை பார்த்தேன். அதற்கு மேல் வீட்டம்மா பார்க்க விடவில்லை.

ஆனால் எனக்கும் எனக்குப் பிடித்த நடிகைகளுக்கும் ஒரு ஏழாம் பொறுத்தமுண்டு. முதலில் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத போது,
அவர்கள் மார்க்கெட் ஆஹா ஓஹோ வென்று இருக்கும். நடிப்பதென்னவோ, கேவலமான படங்களென்பதால், நான் அவற்றை பார்க்க மாட்டேன். திடீரென ஒரு நல்ல படத்தில் தோன்றி, என்னை அவர்களது முழுமுதல் விசிறியாக மாற்றிய பின் அவர்களது அடுத்த படத்தை எதிர் நோக்கினால், மார்க்கெட் இழந்து போவார்கள், இல்லை ஏதாவது கிசு கிசுவில் சிக்கி சின்னாபின்னமாவார்கள், இல்லை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிடுவார்கள்.

இப்படித் தான் சுகன்யாவை முதலில் எனக்குப் பிடிக்கவில்லை. (ஹலோ என்ன என் ரசனை இவ்வளவு மட்டமான்னா பார்க்கறீங்க. சுகன்யாவுக்கு கமலே உம்மா கொடுத்தவராக்கும்) மஹாநதி பார்த்த பிறகு சுகன்யாவை ரொம்பவே பிடித்த்ப் போனது. அவரது பேட்டி, நடனம் என்று எது எந்தப் பத்திரிகையில் வந்தாலும், தேடித் தேடிப் படித்தேன், பார்த்தேன் ரசித்தேன். அவரது அடுத்த படத்தை எதிர் நோக்கினால், அந்நாள் அமைச்சருடன் கிசுகிசுக்கப்பட்டு மார்க்கட் இழந்து போனார்.

ஹம் ஆப்கே ஹைன் கௌன் வந்த பிறகு தான் மாதுரி எனக்குப் பிடிக்கலானார். ஆனால் அதுவே அவரது கடைசி வெற்றிப் படமானது.

சிம்ரன் ஃபீல்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் கழித்துத் தான் எனக்குப் பிடிக்கலானார். வாலி வார்த்து விட்டு சிம்ரன் பைத்தியமாகி விட்டேன். இன்றளவும் சிம்ரன் என்றால் ஒரு தனி இது தான். கமலோடு இரண்டு படங்கள் செய்து உச்சாணிக் கொம்பில் இருந்த போதே கல்யாணம் செய்து கொண்டு ஓடிப் போய்விட்டார்.

கஜினி பார்த்து விட்டு அசின் விசிறியானேன். எவ்வளவு அட்டுப் படமாக இருந்தாலும் பரவாகயில்லை என்று ஆழ்வார் முதற்கொண்டு
பார்த்தேன். அசினுக்காக எம்.குமரனில் ஜெயம் ரவியின் காட்டுக் கூச்சலைப் பொறுத்துக் கொண்டேன். தசவதாரம் எப்போதடா ரிலீஸாகும் என்று ஆஸ்கர் ரவியைவிட நான் டென்ஷன் ஆனேன். ஆனால் பாருங்கள், எல்லாருக்கும் டாடா காட்டிவிட்டு, இந்திக்குப் போய் விட்டார்.

ஆனாலும் God is Great. வெற்று நிலமாய்க் கிடந்த என் மனத்தில் தீபிகா படுகோன் என்ற பூந்தோட்டத்தையே உருவாக்கியிருக்கிறார். முதல் படமான ஓம் ஷாந்தி ஓமில் ஷாருக் கான் செய்த கொடுமையால் தீபிகாவையும் பிடிக்காமல் போயிற்று. ஆனால் பச்னா ஏ ஹஸீனோ பார்த்த பிறகு இவருக்கு பரம விசிறியாகி விட்டேன். என்ன ஒரே கொடுமையென்றால் நான் இவருக்கு விசிறியாவதற்கு முன்னாலேயே இவர் ரன்பீர் கபூரோடு கிசு கிசுக்கப்படுகிறார். பார்ப்போம், தீபிகா என் மன வானில் எத்தனை நாள் வட்டமடிக்கிறார் என்று.

டிஸ்கி: கன்னடத்திலும் ஓரிரு படங்கள் செய்திருக்கிறார் என்று கேள்விப் பட்டேன். அது எவ்வளவு பெரிய ஈத்தர படமானாலும் பார்த்துடணும் என்ற முடிவிற்கு வந்து விட்டேன்.

November 29, 2008

சிரம் தாழ்த்தி வணங்குவோம்

நெஞ்சை உறுக்கும் 60 மணிநேர தாக்குதலுக்குப் பிறகு, அனைத்து தீவிரவாதிகளையும், தேசிய பாதுகாப்புப் படையினர் கொன்று விட்டனர். நூற்றுக்கணக்கான அப்பாவி ஜனங்களின் உயிரைக் குடித்த இந்த மிருகங்களை வீழ்த்துவதில், தனது உயிரைப் பணயம் வைத்த அதிகாரிகளுக்கு சிரம் தாழ்த்தி வணங்குவோம். இது போன்ற தன்னலமற்ற வீரர்களைப் பெற்ற தாய்மார்கள்
புண்ணியவதிகள். இவர்களது இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது.

தனது அலுவலகத்தில் உட்கார்ண்ந்து கொண்டு ஆணைகள் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்காது, களத்தில் உயிர் நீத்த ஹேமந்த் கார்கரே


களத்தில் உயிர் நீத்த போலீஸ் அதிகாரி திரு. விஜய் சாலஸ்கர்
காயமுற்ற காவலரைப் பாதுகாத்து, தீவிரவாதிகளோடு ஒத்தையாளாகப் போரிட்டு இனினயிர் நீத்த சந்தீப் உன்னிகிருஷ்ணன்.





களத்தில் விஜய் சாலஸ்கர் மற்றும் ஹேமந்த கார்கரேயொயோடு உயிர் நீத்த போலீஸ் கமிஷ்னர், அஷோக் காம்தே.



இவர்களைப் போல் இன்னும் உயிர் நீத்த் காவலர்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குவோம். இவர்களது குடும்பங்களின் சோகத்தில் நாமும் பங்கு பெறுவோம். இது போல் இனியொரு சம்பவம் நடக்காமலிருக்க அரசாங்கத்தில் பதவி வகிப்பவர்கள் ஓட்டு வங்கிகளைப் பார்க்காமல் மக்களின் பாதுகாப்பு பற்றி யோசிக்க முனைய வேண்டும்.

இவர்களோடு இன்னும் முகம் தெரியாத 10 காவலர்கள் உயிர் நீத்துள்ளனர். அவர்களைப் பற்றி எந்தவொரு மீடியா சானலுக்கும் அக்கறை இல்லை. இன்று காலை NDTV'யில் அவர்கள் பெயர் ஸ்க்ரோல் செய்தனர். அவர்களது குடும்பங்கள் இவர்களது இழப்பிலிருந்து மீண்டு வர ஆண்டவன் அவர்களுக்கு சக்தி வேண்டிக்கொள்வோம்.

தீவிரவாத முயற்சியில் யார் ஈடுபட்டிரிந்தாலும், அவன் / ள் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், அவன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கையெடுக்க வேண்டும். கல்வியறிவு இல்லாததால் தான் தீவிரவாதிகள் உருவாகிறார்கள் ஒரு சிலர் கூறுகிறார்கள். மும்பை மீது தாக்குதல் நடத்தியவர்களைப் பார்த்தால் கல்வியறிவு இல்லாதவர்கள் மாதிரியா இருக்கிறார்கள்? ஸ்காட்லேண்டில் ஒரு எரியும் ஜீப்பை விமான நிலையத்தில் மீது மோதியவன் கல்வியறிவு இல்லாதவனா?

இலங்கைத் தமிழர்களை இலங்கை அரசு தாக்கக் கூடாது என உண்ணாவிரத நாடம் நடத்தும் கேடு கெட்ட கூத்தாடி கூட்டங்கள் இது போல் இன்னொரு சம்பவ்ம் நடக்காதிருக்க அரசாங்கம் சட்டங்கள் கொண்டு வரவேண்டி வலியுறுத்தி ஒரு அரைமணி நேர உண்ணாவிரதமாவது மேற்கொள்வார்களா?
இந்த போராட்டத்தில் உயிர் நீத்த வீரர்கள் குடும்பங்களுக்கு ஆதரவு குரல்கள் கொடுப்பார்களா?

யார் எப்படியேனும் போகட்டும். நாம் இன்று பாதுகாப்பாக வாழ்வதற்கு, தனது உயிர்களை துச்சமென மதித்து உயிர் விட்டவர்களுக்கு ஒரு நிமிட மௌன் னஅஞ்சலி செலுத்துவோம்.

ஜெய் ஹிந்த்!!

November 27, 2008



என்ன நடக்கிறது இந்த திருநாட்டில்

மீண்டும் ஒரு பயங்கரவாதச் செயல். ஒரு நாட்டையே நிலைகுலைய வைத்திருக்கிறது. இது நாள் வரை ஏதோ ஐந்தாறு வெடிகுண்டுகள் வைத்து மிரட்டி வந்தவர்கள். இன்று நூற்றுக்கும் மேலானவர்களை கொன்று குவித்து விட்டு, 300 பேரை காயப்படுத்தி இருக்கிறார்கள். மும்பையில் 24 மணிநேரத்துக்கு மேலாக நடந்து வரும் இந்த தீவிரவாதச் செயலை நினைத்தாலே மனம் பதறுகிறது. காலையிலிருந்து எந்த ஒரு செயலிலு்மே கவனம் செலுத்த முடியவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நினைத்தாலே மனம் பதறுகிறது.

இந்தத் தீவிரவாதிகள், கராசியிலிருந்து மும்பைக்கு படகில் வந்தார்கள் என்று மஹாராஷ்டிர முதல் ந்ணரியே கூறுகிறார். நம் நாட்டு கடற்படை என்ன மீன் பிடித்துக் கொண்டி்ருந்ததா? அவ்வளவு கவனக்குறைவாக இருந்தி்ருக்கிறது, நமது அரசு இயந்திரம். இதை எழுதிக்கொண்டிருக்கு்ம் போது கூட அனைத்து தீவி்ரவாத்களையும் பிடித்த பாடிலலை. எவ்வளவு தீவிரவாதிகள் என்ற கணக்குக் கூட தெரியவில்லை.

இதில் நம் பிரதம மந்திரி தொலைகாட்சியில் நாட்டு மக்களை அமைதி காக்கும் படி கேட்டுக் கொள்கிறார். இவர் வீட்டிலுள்ள யாராவது தீவிரவாதத் தாக்குதலில் பலியானால் இப்படி பேசுவாரா? இந்தத் தீவிரவாதச் செயலைப் பொறுத்துக் கொள்ளாது இந்தியா என்கிறார். ஐயா, இது நம் நாடு தொடுக்கப் பட்ட முதல் தாக்குதல் இல்லையே. இதற்கு முன்னரும் நீங்க இதே மாதிரி தானே சொன்னீர்கள். இது நாள் வரையிலும் என்ன ம.....த்த புடுங்க முடிந்தது??

எல்லா தீ்விரவாதிகளுக்கும் அண்டை நாடு அடைக்கலமும் பயிற்சியும் கொடுக்கிறது என்பது இனி்மேல் பிறக்கப் போகும் குழந்திக்குக் கூட்த் தெரியும். உங்களுக்குத் தெரிந்து என்ன் கிழித்து வி்ட்டீர்? அந்த நாட்டோடு எப்படி உறவாடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? மெய்யாலுமே உங்களுக்கு நாட்டு நலன் மீது அக்கறை இருந்தாலும் உங்களை ஆட்டுவிக்கும் அம்மையார் உங்களை தன்னி்ச்சையாக இயங்க விட மாட்டார். அதிலும் உங்களுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள், ஆஹா அவர்கள் போல் நாட்டுப்பற்று உள்ளவர்கள் யாரும் கிடையாது.

”எந்த ஊரி்லும் எந்த இடத்திலும் எங்களாlல் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடமுடியும்” என்று மார் தட்டுகிறார்கள் இந்த தீவிராதிகள். இவர்கள் எல்லோரும் ஒரு தாய்க்குப் பிறந்தவர்கள் தானா? இவர்களை ஒழித்துக் கட்ட என்ன செய்யப் போகிறது இந்த் அரசாங்கம்? இந்நேரம் இவர்களது பயிற்சிக் கூடாரங்கள் மீது ஏவு கணைகள் பாய்ந்திருக்க வேண்டாமா? பாகிஸ்தான் கைப்பற்றியிருக்கும் காஷ்மீரத்தில் ஒரு சில பயிற்சி முகாம்களாவது எரிந்து சாம்பலாகியிருக்க வேண்டாமா?

ஒரே ஒரு தடவை அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. தனது ராணுவததையே ஆஃப்கானிஸ்தான் மீது பாய்ச்சினார் புஷ். இரண்டே இரண்டு இஸ்ரேல் ராணுவ வீரர்களை ஜோர்டான் நாடு கொன்றது. அந்த நாட்டையே uஉண்டு இல்லையெனச் செய்துவிட்டடு இஸ்ரேல். அவர்கள் செயல் வீரர்கள். பதவி சுகதிற்காகத் தன் நாட்டு மக்களையே காப்பாற்றத ஒரு தலைவன், வாழ்வதற்கே தகுதியற்றவன்.

அடுத்த 7 நாட்களில் இந்தியா இந்த தீவிரவாத சக்திகளுக்குத் துணை போபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லையென்றால், பிரதமர் என்பவர் தூக்கு் மாட்டிக் கொண்டு சாகலாம்.

தீவிரவாதிகளை எதிர்த்துப் போர் புரிந்து உயிர் நீத்த வீரர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோ்ம்.

ஜெய் ஹிந்த்

November 21, 2008



மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 5

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 4

குழந்தைக்குக் கூட கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் பற்றி விபரம் தெரிந்தாயிற்று. இந்த கார்ட் நம்முடைய வங்கிக் கணக்கை ஒரு அட்டையில் எப்படி பதிய வைத்திருக்கின்றதோ அப்படியே, நமது செட்-டாப்-பாக்ஸ் கணக்கை ஒரு கார்டில் போட்டு வைத்திருப்பார்கள். அதற்குப் பெயர் தான் ஸ்மார்ட் கார்ட் (Smart Card). சரி இதற்குப் பெயர் ஏன் ஸ்மார்ட் கார்ட். அப்படியென்ன ஸ்மார்ட்டா இது பண்ணுகிறது?
மாதச் சந்தா கணக்கை சேமித்து வைப்பது ஒன்றும் இன்றைய தேதியில் பெரிய ராக்கெட் விஞ்ஞானம் இல்லையே? ஒரு காந்த ஸ்ட்ரிப்பில் கூட இந்த விபரங்களை அடக்கி வைக்கலாமே? பின் எதற்காக இதற்குப் பெயர் ஸ்மார்ட் கார்ட்? அப்படி ஸ்மார்டாக என்ன இருக்கிறது இதில்?

இந்தக் கார்டில் ஒரு சிறு மைக்ரொ பிராஸஸர் (Micro Processor) இருக்கிறது. இதற்குத் தான் செட்-டாப்-பாக்ஸிற்கு வரும் சிக்னல்களை டிக்ரிப்ட் செய்யும் தில்லாலங்கடி விஷயம் தெரியும். இந்த கார்டே ஒரு சிறு கம்பியூடர் போலத்தான். இதில் ஓடும் மென்பொருள் தான் என்க்ரிப்ட் ஆகியிருக்கும் சிக்னல்களை டிக்ரிப்ட் செய்யும் தந்திரம் அறிந்திருக்கும்.

ஒவ்வொரு பிராட்காஸ்டருக்கும் இந்த என்க்ரிப்ஷன் தான் அவர்களது உயிர்நாடி. டிக்ரிப்ஷன் தவிர சந்தா தாரரின் மற்ற பல விபரங்களையும் இது தெரிந்து வைத்திருக்கும். இந்த மாதம் சந்தா செலுத்தியாயிற்றா போன்ற விபரங்கள் முதற்கொண்டு இந்த கார்டில் பதிந்து வைத்திருக்கும். ஒவ்வொரு செட்-டாப்-பாக்ஸிற்கும் ஒரு அடையாள எண்ணும் உண்டு. இன்னாரிடம் இந்த செட்-டாப்-பாக்ஸ் இருக்கிறது என்ற டேடா பேஸ் (database) பிராட்காஸ்டரிடம் (டாடா ஸ்கை போன்றவர்கள்) இருக்கும்.
அதே போல் ஒவ்வொரு ஸ்மார்ட் கார்டுக்கும் ஒரு அடையாள எண் உண்டு. இந்த ஸ்மார்ட் கார்ட் இந்த செட்-டாப்-பாக்ஸில் இருக்கிறது என்ற விபரமும் இருக்கும். மேலும் அந்த ஸ்மார்ட் கார்டை வேறொரு செட்-டாப்-பாக்ஸில் போட முடியாது. இதை பாக்ஸ் - கார்ட் பேரிங் (Box Card Pairing) என்று சொல்லுவார்கள்.
"லேய், கிளாஸ்ல வாத்தியார் லொள்ளு தாங்க முடியலையேன்னு பார்த்தா, நீ அதுக்கு மேல ராவுதியே"ல நினைக்கீயளா? இருங்க இருங்க. இந்த மாதிரி ஸ்மார்ட் கார்ட், சாஃப்ட்வேர் அது இதுன்னு யாருக்கும் ஒண்ணும் புரியாம இந்த பிராட்காஸ்டர்கள் மக்களை ஏமாற்றுவது எப்படியென்று பார்ப்போம்.
ஒரு பிராட்காஸ்டரிடமிருந்து செட்-டாப்-பாக்ஸ் வாங்கிவிட்டால், அவர்கள் கொடுக்கும் ஸ்மார்ட் கார்ட் வைத்துத் தான், நம்மால் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். இந்த செட்-டாப்-பாக்ஸிற்கு ஆயிரக்கணக்கில் ரூபாய் கொடுப்பதால் அவ்வளவு எளிதாக இன்னொரு செட்-டாப்-பாக்ஸ் வாங்கிட முடியாது. அதாவது ஒரு சன் -டைரக்ட் செட்-டாப்-பாக்ஸில் டாடா ஸ்கை ஸ்மார்ட் கார்டை உபயோகிக்க முடியாது. அதே போல் ஒரு செட்-டாப்-பாக்ஸோடு பேர் செய்து விட்ட ஸ்மார்ட் கார்டை அதே பிராட்காஸ்டரின் இன்னொரு செட்-டாப்-பாக்ஸில் போட முடியாது. இதற்கு Interoperability என்று சொல்வார்கள். எப்படி மைக்ரோசாஃப்ட் தயாரிக்கும் மென்பொருளை விண்டோஸ் இயங்காத வேறெந்த கணினியிலும் எப்படி செலுத்த முடியாதோ அப்படித்தான் இதுவும்.
அது ஏன் இப்படி? எல்லாம் பணம் பண்ணும் யுக்தி தான். இப்போது நிறைய வீடுகளில் ஒன்றிற்கு மேலாக டி.வி.க்கள் வந்து விட்டன. ஒரே கேபிள் இணைப்பு மட்டும் கொடுத்து, அதையே வெவ்வேறு டி.வி.க்களுக்குக் கொடுக்கலாம்.
ஆனால் செட்-டாப்-பாக்ஸில் இந்த சங்கதியெல்லாம் செல்லுபடியாகாது. ஒரே டிஷ் வேணுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இரண்டு செட்-டாப்-பாக்ஸ் வாங்கியே ஆகணும். ஒவ்வொரு செட்-டாப்-பாக்ஸிற்கும் தனித்தனியாக சந்தா கட்டியாகணும். இப்போது உங்கள் வீட்டில் கீழே ஹாலில் ஒரு டி.வி.யும் மாடியில் இன்னொரு டி.வி.யும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு டி.வி.க்கும் தனித்தனியாக செட்-டாப்-பாக்ஸ் வாங்கியாகணும். சரி பாக்ஸாவது போனால் போகிறது, ஒரு சந்தா மட்டும் செலுத்தினால போதுமென்று நினைத்தீர்களானால், அதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு பாக்ஸிற்கும் ஒரு தனிப்பட்ட கார்டைத் தான் உபயோகப்படுத்தியாகணும். ஒரு பாக்ஸிலுள்ள கார்டை இன்னொரு பாக்ஸில் உபயோகப்படுத்த முடியாது என்பதற்கு தொழில் நுட்ப ரீதியான எந்தவொரு காரணமும் இல்லை. எல்லாம் துட்டு செய்யும் வழிமுறைகள்.
இந்தத் தில்லு முல்லு பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாமால் அரசாங்கமும், வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் தகவல் ஒளிபரப்பு தொழில் நுட்பத்தை கண்காணிக்கும் ஒரு நிறுவனம் உள்ளது. அது, Telecom Regulatory Authority of India, சுருக்கமாக TRAI. இந்த நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் தான் இன்று செல் ஃபோன் இணைப்புகள் இவ்வளவு மலிவாக இருக்கிறது. ஆனால் இவர்களுக்கு இது வரை பிராட்காஸ்டர்கள் செய்யும் தில்லு முல்லு அவ்வளவாக தெரியவில்லை. வெளிநாடுகளில் என்ன செய்கிறார்களோ, குறிப்பாக இங்கிலாந்தில் என்ன தொழில் நுட்பம் இருக்கிறதோ அதையே ஈயடிச்சான் காப்பி அடிக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த பிராட்காஸ்டர்கள் செய்யும் தில்லு முல்லுகளுக்கு ஆப்பு வைக்கும் படி அடுத்த கட்ட தொழில் நுட்பத்திற்கு மலையேறி விட்டார்கள். இதிலுள்ள கூத்து என்னவென்றால், இந்த தொழில் நுட்பத்திற்கான மென்பொருளை பெரும்பாலும் இந்தியாவில்தான் எழுதுகிறோம். அம்மாதிரி நாடுகளில் இந்த பிராட் காஸ்டர்களில் பருப்பு இனிமேலும் வேகாததால் இந்தியா மாதிரி தொழில் நுட்பம் அவ்வளவாக முன்னேறாத நாடுகளைக் குறி வைத்துப் பண்ணுகிறார்கள்ள்.
அப்படி பிராட்காஸ்டர்களுக்கு ஆப்பு தொழில் நுட்பம் தான் என்ன? இந்த இடைத்தரகர்களான பிராட்காஸ்டர்கள் இல்லாமல், நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் சானல்களே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு சிக்னல்களை அவர்கள் இல்லத்திற்குக் கொண்டு செல்லும் தொழில் நுட்பம் தான். அதெப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா? ஏன் முடியாது? 20 வருடங்களுக்கு முன்னால் எல்லோர் வீட்டு மொட்டை மாடியில் ஆண்டென்னா வைத்து தூர்தர்ஷன் மட்டுமே பார்க்கலியா? (இதற்கு Terrestrial Transmission என்று பெயர்). அது போலவே தான். என்னடா இது "அடியப்பிடிடா பாரதவட்டா"ன்னு இருக்கே. டிஜிடல் சிக்னல்களைப் பார்க்கத் தானே செயற்கைக்கோள் உதவி கொண்டு, செட்-டாப்-பாக்ஸ் மூலமாக டிஜிடல் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது மீண்டும் ஆண்டெனா யுகத்துக்கே போகணுமா என்று நினைக்கிறீர்களா? என்ன செய்வது, ஃபேஷன் மாடிரி தொழில் நுட்பமும் ஒரு யு-டர்ண் அடிக்கிறது, சில மாற்றங்களுடன். இந்த Terrestrial Transmission இப்போது வளற்சியடைந்து விட்ட நாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஆனால் இந்த தொழில் நுட்பம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப் படுமா? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

November 15, 2008



இப்போ நல்லா இருக்கா?

நேயர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்க்ள் படிக்கும் படி அகலத்தைக் குறைத்துப் பார்த்தேன். HTML code'ல் எங்கேயோ தப்பு நேர்ந்து விட்டது. "உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா" என்ற கதையாகிவிட்டது. எல்லா விட்ஜெட்டும் எக்குத்தப்பாக காட்சியளிக்க ஆரம்பித்து விட்டன. அதை சரி செய்யவும் முடியவில்லை.
சரி, வேற டெம்பிளேட் போட்டுவிடுவோம் என்று இந்த டெம்பிளேட்டைப் போட்டுவிட்டேன் . சுண்டெலியை (அதான் Mouse) இடவலமாக நகர்த்தி படிக்கும் கஷ்டம் இப்போதிருக்காது என நம்புகிறேன்.
Customer satisfaction is key to success!! Happy Reading!!

November 10, 2008

இவளா என் மனைவி

இந்த வார இறுதிக்கு திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி ஆம்பூர், குல தெய்வம் கோயில் என்று ரொம்பவே ஊர் சுற்றித் திரிந்தாயிற்று. திருநெல்வேலியில் நெல்லையப்பரை விட்டால் போவதற்கு வேறேங்கும் இடம் இல்லை. நம்ம டமேஜ் நாள், சாரி மரேஜ் நாள் வேற வருதே, இப்பவே அட்வான்ஸா ஏதாவது வாங்கிடலாம் என்று காயத்ரியைக் கூட்டிக்கொண்டு வண்ணாரப்பேட்டையில் புதிதாக திறந்திருக்கும் ஆரெம்கேவி சென்றேன்.

கொஞ்சம் உங்கள் ஆள் காட்டி விரலால் முகத்திற்கு முன் சுற்றிக் கொள்ளுங்கள். ஒரு சிறு ஃபிளாஷ் பேக். அப்படியே ஒரு 4 வருடங்கள் பின்னோக்கிச் சென்றால், (கல்யாணம் ஆவதற்கு முன், நிச்சயம் ஆனதற்குப்பின்) தீபாவளிக்கு புடவை எடுத்து தருகிறேன் என்று, சென்னை ஆரெம்கேவிக்கு கூட்டிச் சென்றிருந்தேன். என்னிடம், "உங்க பட்ஜெட் என்ன" என்றாள். முதல் தடவையாக கடைக்குக் கூட்டி வந்திருக்கிறேன். பட்ஜெட்டெல்லாம் சொல்லி இமேஜைக் கெடுத்துக் கொள்ளவேண்டாமென்று, "அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. உனக்கு எது பிடிச்சிருக்கோ அதியே வாங்கிடலாம்" என்றேன். எனக்கு வாழ்க்கையில் பிடிக்காததில் ஒன்று, துணிக்கடைகளில் நேரம் கழிப்பது. போனோமா, எது முதலில் பிடிக்கிறதோ, அது நம் பட்ஜெட்டுக்குள் அடங்கி விட்டால் உடனே "பேக் செய்யுங்கள்" என்று சொல்லி விடுவேன்.


என் அம்மாவும் தங்கையும் துணி செலக்ட் செய்து முடிப்பதற்குள் என் பொறுமையே போய் விடும். நான் பாட்டுக்கு ஒரு ஓரத்துக்குப் போய் இ.தி.கு போல் முகத்தை உர்'ரென்று வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுவேன். முதல் முறையாக கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை துணிக்கடைக்கு கூட்டி வந்திருக்கிறேன், ஆண்டவா நிறைய பொறுமையைக் கொடு என்று வேண்டிக்கொண்டேன்.

புடவைக் கடைக்குள் நுழைந்தவள், சில்க் காட்டன் எந்த செக்ஷன் என்று கேட்டுக்கொண்டு அந்த இடத்திற்குச் சென்றாள். "காஞ்சி காட்டன், பியூர் காட்டன் தெரியும், இதென்ன சில்க் காட்டன். புது ஃபேஷனா" என்று கேட்டுத் தொலைத்தேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவள், "இல்லையே, இதெல்லாம் ரொம்ப பழைய ஃபேஷன் தான்" சொல்லிவிட்டாள். "சரி, நமக்கு தெரியலை போலும்" என்று நினைத்துக் கொண்டு, அவள் என்ன தான் செலக்ட் செய்கிறாள் பார்ப்போம் என்று அவள் நின்ற செக்க்ஷனுக்குப் போனேன். இவள் எந்த ரேஞ்சுக்குப் புடவை எடுக்கப் போறாளோ என்ற உதறல் கொஞ்சம் இருக்கத் தான் செய்தது.

சில புடவைகளைப் பார்த்தாள். விரித்துக் காட்டச் சொன்னள். நானும் என் பங்கிற்கு, அந்தப் புடவையை எடுத்துப் போடுங்க, இந்தப் புடவயை எடுத்துப் போடுங்க்கன்னு கொஞ்சம் ஷோ காட்டினேன். பின்ன, எனக்கு புடவையெடுப்பதில் இஷ்டமே இல்லையென்று நினைத்து விட்டால்?? ஒரு புடவையை எடுத்துக் காட்டி, "இது நல்லா இருக்கா" என்றாள். எனக்கும் அது பிடித்திருக்கவே "நல்லா இருக்கு" என்று தலையாட்டினேன். ("அன்று ஆட்டத்தொடங்கியது, இன்னும் நின்ற பாடில்லையா"ன்னெல்லாம் பின்னூட்டத்தில் கேட்கப்படாது!!)

"இதை பில் போட்டுடுங்க சார்", என்று சொல்லிவிட்டாள். புடவையும் 1500 சொச்சம் தான். "இதற்கு பிளௌஸ் எடுக்க வேண்டாமா" என்றதற்கு, "இந்தப் புடவை பிளௌஸ் அட்டாச்ட் தான். அதனால் வேண்டாம்" என்று சொல்லி விட்டாள். அப்பாடா, பிளௌஸ் செலவும் மிச்சம் என்று சொல்லிக் கொண்டேன். அன்றைய தினம் என் மனைவியாகப் போகிறவள் புடவை செலக்ட் செய்ய எடுத்துக் கொண்டது வெறும் எட்டே நிமிடம் தான். என் கஸின் அக்காவிடம், இந்த விஷயத்தை சொன்னதற்கு, "இப்படி ஒரு அதிசயப் பிறவியா? நீ கொடுத்து வச்சிருக்கடா" என்று வாழ்த்தினாள்.

மீண்டும் உங்கள் ஆள் காட்டி விரலால் முகத்திற்கு முன் சுற்றிக் கொள்ளுங்கள்.


ஃபிளாஷ் பாக் முடிந்தது.

மீண்டும் ஆரெம்கேவி, ஆனால் திநெல்வேலியில். நான் உள்ளே போனதும், "சார், சில்க் காட்டன் புடவை செக்ஷன் எங்க இருக்கு" என்றேன். "என்னை ஒரு முறை முறைத்து விட்டு, "கொஞ்சம் சும்மா இருக்க முடியுமா" என்று சொல்லிவிட்டு, "இல்ல சார், சில்க் புடவை செக்ஷன் எங்க இருக்கு" என்று கேட்டாள். என்னிடம் பட்ஜட் எதுவும் கேட்கவில்லை. "சார், 3000-4000 ரேஞ்சுல உள்ள புடவை எடுத்துக் காட்டுங்க" என்றாள். நிறைய புடவைகளை அலசினாள். நிறைய புடவைகளை தன் மீது வைத்துப் பார்த்தாள். போதாதற்கு கண்ணாடியிலும் பார்த்துக் கொண்டாள்.

எவ்வளவோ புடவைகளை நான் நல்லா இருக்கு என்று சொல்லியும் திருப்தி அடையவில்லை. "இங்க ஒண்ணும் சரியா இல்லை. நல்லியில் போய் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டாள். ஆட்டோ பிடித்து 6 கிலோமீட்டர் தள்ளியுள்ள நல்லிக்குப் போனோன். அங்கேயும் இதே கதை தான். மீண்டும் நிறைய புடவைகள், நிறைய விரித்துப்பார்த்தல், அதே முகம் சுளிப்பு, எதையுமே பேக் செய்யவில்லை.

"எல்லா நல்ல புடவைகளும் தீபாவளிக்கே விற்றுப் போயிருக்கலாம். இருக்கறதுல நல்லதா பார்த்து எடுத்துக்கோ" என்று நான் சொன்னதற்கு எந்த வித ரியாக்ஷனும் இல்லை. பக்கத்துல தானே போத்தீஸ் இருக்கு, அங்கே போகலாம் என்றாள். என் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இ.தி.கு.போல் மாற ஆரம்பித்தது. ஆனால் காட்டிக்கொள்ள வில்லை.

போத்தீஸில் மட்டுமென்ன பார்த்தவுடனேயே புடவையை எடுக்கப் போகிறாளா ? "அம்மா, 3000-4000 ரூபாய்க்கெல்லாம் நீங்க எதிர்பார்க்கும் டிசைன் கிடைக்காது. அதெல்லாம் 5000'க்கு மேல" என்று கடைக்காரரும் சேர்ந்து அவர் பங்குக்கு என் குருதிக்கொதிப்பை இரட்டிப்பு செய்தார். "அப்படின்னா, அந்த ரேஞ்சுலயே எடுத்துப் போடுங்க'என்று சொல்லிவிட்டாள். என் முகம் முற்றிலும் இ.தி.கு. போல் மாறி விட்டத்தை ஒரு வாறாகப் புரிந்து கொண்டவள், மள மளவென புடவைகளைக் களைந்து 5-6 புடவைகளை அதிலிருந்து ஃபில்டர் செய்து, முக்கால் மணி நேர அலசலுக்குப் பிறகு ஒன்றை மனதே இல்லாமல் பேக் செய்யச் சொன்னாள்.

அப்போது தான் எனக்கு இந்த எண்ணம் உதித்தது. செகண்ட் லேடி என்ற ஆங்கில நாவலில், அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியின் உருவம் கொண்ட ஒரு பெண்ணை பக்காவாக தயார் செய்து, ஜனாதிபதியின் மனைவியைக் கடத்தி விட்டு, இவளை அந்த இடத்தில் மாற்றி விடுவார்கள், ரஷ்ய உளவுக்துறையான கே.ஜி.பி. காரர்கள். எனக்கும் அது போல் நேர்ந்து விட்டதா? எட்டே நிமிடத்தில் புடவை செலக்ட் செய்யும் காயத்ரியை கடத்திவிட்டு அவள் போலுள்ள வேறொரு பெண்ணை என் மனைவியாக இருக்கும் படி செய்து விட்டார்களோ? எட்டு நிமிடத்தில் புடவை செலக்ட் செய்த காயத்ரி எங்கே? 3 கடைகள் ஏறி இரண்டு மணி நேரம் செலவு செய்து, மனமே இல்லாமல், என் பர்ஸுக்கு வேட்டு வைத்து புடவை வாங்கும் இவள் யார். இவளா(?!) என் மனைவி?!

டிஸ்கி 1: புடவை வாங்கி கொண்டு சுடிதார் வேறு. யப்பா இப்பவே கண்ணக் கட்டுதேன்னு நான் ஒரு ஓரத்துல உட்கார்ந்து விட்டேன். அரை மணி நேரம் கழித்து போகலாம் என்று சொன்னது தான் ஞாபகம் இருக்கு.

டிஸ்கி 2: இ.தி.கு என்று 3-4 இடங்களில் குறிப்பிட்டிருக்கேன். அப்படின்னா என்னன்னு கண்டுபிடித்தால் சொல்லிவிடாதீர்கள்.

November 04, 2008

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 4

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 1
மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 2
மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 3


எனக்கு வேணும் சன் டைரக்ட், இஸ்கோ லகா டாலா தோ லைஃப் ஜிங்காலாலா, பாக்ஸ் ஃப்ரீ டிஷ் ஃப்ரீ, விஷ் கரோ டிஷ் கரோ ! "ஏ ஏ நிறுத்து நிறுத்து என்னல்லாமோ சொல்லிக்கொண்டு போறே" என்று முழி பிதுங்குகிறீர்களா? இதெல்லாம் DTH செட்-டாப்-பாக்ஸிற்கான விளம்பர வாசகங்கள். இந்தியாவில் சற்றே தாமதமாக வந்தாலும், செட்-டாப்-பாக்ஸின் விற்பனை விண்ணை முட்டுகிறது. அப்படி இந்த DTH என்றால் என்ன? செயற்கைக் கோளிலிருந்து நேராக நம் வீட்டின் வரவேற்பறைக்கே வருவதால் இதற்குப் பெயர் Direct To Home. சரி இந்த DTH இனால் அப்படியென்ன லாபம்?

கேபிள்காரர்களின் தயவில் தயவில் டி.வி நிகழ்ச்சிகள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. துல்லியமான டிஜிடல் சிக்னலினால் நல்ல தொரு தரமான வீடியோ பார்க்கலாம். கேபிள் சென்டரில் மின்சாரம் தடைப் பட்டால் நம் வீட்டில் டி.வி பார்க்க முடியாது. செயற்கைக் கோளில் மின்சாரத்தடை ஏற்படாதலால் தடையில்லாமல் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். இதனாலெல்லாம் DTH ரொம்ப சௌகர்யமானதும் லாபகரமானதா என்றால், அவ்வளவு லாபகரமானது இல்லை என்று தான் நான் பதிலளிப்பேன்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சென்ற பதிவில் பார்த்த MSO என்பவர்களுக்குப் பதிலாக டாடா ஸ்கை, டிஷ் டி.வி போன்றவர்கள், இடைத்தரகர்களாக இருக்கின்றனர். இவர்களை Broadcaster'கள் என்று சொல்லலாம். இவர்கள் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் சன் டி.வி ஸ்டார் டி.வி (இவர்களை Content Producer என்று சொல்லலாம்), போன்றவர்களிடமிருந்து சிக்னல்களைப் பெற்று செயற்கைகோளுக்கு அனுப்புகிறார்கள். செயற்கைக் கோளிலிருந்து செட்-டாப்-பாக்ஸ் மற்றும் மினி-டிஷ் கொண்டு நாம் வீட்டில் பார்க்கிறோம். நாம் consumer'கள்.

ஆக Content Producer'களிடமிருந்து consumer'க்கு சிக்னல்கள் சென்றடைய ஒரு Broadcaster தேவைப் படுகிறார். இந்த Broadcaster, content producer' இடமிருந்து சிக்னல்களைப் பெற்று அதை வேறு யாருக்கும் புரியாத வண்ணம் என்க்ரிப்ட் செய்து செயற்கைக்கோளுக்கு அனுப்புகின்றனர். இந்த சிக்னல்களை நமது செட்-டாப்-பாக்ஸிலுள்ள ஸ்மார்ட் கார்டிற்கு எப்படி டிக்ரிப்ட் செய்ய வேண்டும் என்று தெரியும். இந்த என்க்ரிப்ஷன் டிக்ரிப்ஷன் தான் இந்த பிராட்காஸ்டர் செய்யும் பெரிய தில்லாலங்கடி வேலை.

இந்த என்க்ரிப்ஷன் மட்டும் இல்லையென்றால், செயற்கைக்கோளிலிருந்து எந்த அலைவரிசையில் சிக்னல்கள் வருகிறது என்று தெரிந்து விட்டால் யார் வேணாலும் ஒரு டிஷ் போட்டு, செயற்கைக்கோளிலிருந்து வரும் அலைவரிசையை பதிவிறக்கம் செய்து, சிக்னலகளைப் பார்க்க முடியும். மாதச் சந்தா செலுத்தாமலேயே நம்மால் டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். மாதச் சந்தா செலுத்தவில்லையென்றால் கேபிள் காரன் கேபிள் இணைப்பைத் துண்டித்து விடமுடியும். ஆனால், இந்த DTH முறையில் யார் யார் எங்கெங்கு டிஷ் பொறுத்தியிருக்கிறார்கள் என்று பிராட்காஸ்டருக்கு எப்படித் தெரியும்? இந்த மாதிரி ஹாக் செய்வதற்க்காகவே நிறைய பேர் இருக்கிறார்கள்.

இந்தியாவில் Content Producer'க்கென சில விதிமுறைகள் இருக்கின்றன. அவர்கள் எல்லோரும் எல்லா DTH பிராட்காஸ்டர்களுடன் தங்களுடைய சிக்னல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். முதலில் இலவசமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தான் விதிமுறை கொண்டு வந்தார்கள். பின்னர், எவ்வளவு சந்தாதாரர்கள் இருக்கிறார்களோ அதற்கேற்றாற்போல் பணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று மாற்றியமைத்தார்கள்.

இங்குதான் இந்த DTH பிராட்காஸ்டர்கள் லாபம் பார்க்க ஆரம்பித்தனர். கேபிள் காரகள் எப்படி தங்களுடைய சந்தாதாரர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பித்தனரோ, அதே தில்லு முல்லுவை இவர்களும் செய்ய ஆரம்பித்தனர். சில நாட்களுக்கு முன், டாடா ஸ்கை வைத்கிருப்போர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ESPN பார்க்க முடியாமற்போனதற்கு இப்படி நடந்த தில்லு முல்லு தான் காரணம்.

இந்த DTH பிராட்காஸ்டர்கள் கொண்டு வந்திருக்கும் ஒரு வரவேற்கத்தக்க ஒரு தொழில் நுட்பம், "Pay Per View". அதாவது நாம் பார்க்கும் சானல்களுக்கு மட்டும் சந்தா கட்டினல் போதும் என்ற தொழில் நுட்பம். ஆனால் இவர்கள் சானல்களை பகேஜ் செய்யும் முறையைப் பார்த்தால், அதில் எள்ளளவும் Consumer'க்கு லாபம் இல்லை என்பது தான்.

பொதுவாக, தமிழ் குடும்பங்களில் விரும்பிப் பார்க்கும் சானல்கள் சன் டி.வி, கே.டி.வி, ராஜ் டி.வி, விஜய் டி.வி, (நான் பார்க்கா விட்டாலும்)கலைஞர் டி.வி, சன் மியூஸிக், இசையருவி, பொதிகை, மற்றும் இன்ன பிற தமிழ் சானல்கள். வீட்டம்மாக்கள் போனால் போகிறதென்று விட்டால், இ.எஸ்.பி.என், ஸ்டார் கிரிக்கேட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ். குழந்தைகள் இருந்தால் கார்டூன் நெட்வொர்க், சுட்டி டி.வி, ஜெடிக்ஸ். என்னைப்போல் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அறிவுப்பசியுள்ளவர்கள் (ரொம்ப ஓவர்'ன்னு காயத்ரி சொல்கிறாள்) டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிரஃபி, இவ்வளவு தான்.

நமது விருப்பம் இப்படியிருக்க, அவர்கள் தங்களது சானல் பொக்கேக்கயை, தமிழ் பொக்கே, விளையாட்டு பொக்கே, குழந்தைகள் பொக்கே, கல்வி பொக்கே என்று பாகேஜ் செய்திருக்கணும். ஆனால், அவர்கள் அப்படி செய்திருக்க மாட்டார்கள். சன் பொக்கே, ராஜ் பொக்கே, கலைஞர் பொக்கே, ஸ்டார் பொக்கே, விளையாட்டு பொக்கே, என்று தனித்தனியாக பாக்கேஜ் செய்து வைத்திருப்பார்கள். அது என்ன பொக்கே என்று நீங்கள் கேட்கக்கூடும். நான் ஏற்கனவே சொன்னது போல், ஒரே அலைவரிசையில் நிறைய சானல்களைப் பார்க்க முடியும். எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், இப்படி ஒரே அலைவரிசையில் அனைத்து சானல்களும் ஒரு பொக்கேக்குள் அடங்கும் என்று குறிப்பிடலாம். அதாவது சன் நிறுவனம், தான் தயாரிக்கும் அனைத்து சானல்களையும், ஒரே அலைவரிசையில் கொடுக்கும். இதனால் அதனை சன் பொக்கே என்று சொல்லலாம். ஒவ்வொரு பொக்கேவிற்கும் ஒரு அயாயாள எண் உண்டு. தனது அடையாள எண்ணையும் அலைவரிசையையும் சன் நிறுவனம், பிராட்காஸ்டர்களோடு பகிர்ந்து கொள்ளும். இதைத் தொழில் நுட்ப ரீதியாக சொல்லவேண்டுமானால், "Feed Sharing" என்று சொல்லலாம்.

இதே போல் எல்லா Content Producer'களும் தனது சிக்னல்களை பிராட் காஸ்டர்ரோடு பகிர்ந்து கொள்கிறார்கள். இப்படியாக எல்லா Content Producer'களிடமிருந்து வாங்கிய பொக்கேக்களை ரி-பாக்கேஜ் செய்து என்க்ரிப்ட் செய்து மீண்டும் செயற்கைக்கோளுக்கு அனுப்புகிறார்கள். எதற்காக இந்த ரி-பாகேஜ்? இதில் தொழில் நுட்ப ரீதியான காரணம் எதுவும் இல்லை. எல்லாமே வியாபார நோக்கம் தான். உதாரணத்திற்கு, சன் மற்றும் விஜய் டி.வி வேண்டுமானால், தமிழ் பொக்கே வாங்க வேண்டும். ஆனால் இந்த தமிழ் பொக்கேக்கு இவர்கள் வைத்திருக்கும் கட்டணம் சன் பொக்கேக்கும் ஸ்டார் பொக்கேக்கும் இவர்கள் எவ்வளவு கட்டணம் செலுத்துகிறார்களோ, அவ்வளவாகும். மேலும் விளையாட்டு பொக்கே வேண்டுமெனில், அதற்கு இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து அந்த பொக்கேயும் வாங்க வேண்டும். இங்கு தான் இந்த பிராட்காஸ்டர்கள் பணம் பண்ணுகிறார்கள். இவர்கள் ஸ்டார் பொக்கே வாங்கும் போதே விஜய் டி.வி.யுடன் இவர்களுக்கு ஸ்டார் இ.எஸ்.பி.என் வந்து விடும். ஆனால், எப்படி மக்கள் விளையாட்டுக்காக இவ்வளவு பைத்தியமாக அலையும் போது அதில் ஏன் காசு பண்ணக்கூடாது என்ற பேராசை தான். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், இந்தியா கிரிக்கெட் பைத்தியம் பிடித்த நாடு. ஸ்டார் பொக்கேயோடு ஸ்டார் கிரிக்கெட்டும் பிராட்காஸ்டருக்கு வந்து விடும். ஆனால், இவர்கள் ஸ்டார் கிரிக்கெட்டை விளையாட்டு பொக்கேயோடு வழங்காமல் அதை தனியாக விற்று காசு பண்ணுவார்கள்.

இந்த DTH ஆபரேடர்கள், நிகழ்ச்சி தயாரிப்பதில்லை, ஆனால் நிகழ்ச்சி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து சிக்னல்களை வாங்கி, அதை வேறு யாரும் பார்க்காத வண்ணம் மாற்றியமைத்து, consumer'க்கு வழங்குகிறார்கள். இவர்கள் சொந்தமாகச் செலவு செய்வது,
சிக்னல்களை என்க்ரிப்ட் செய்வது (அதுவும் தனது சொந்த லாபத்திற்காகத்தான்), செட்-டாப்-பாக்ஸ் மற்றும் அதன் மென்பொருள் வடிவமைப்பது தான். செட்-டாப்-பாக்ஸ் மற்றும் விற்றதால் இவர்களுக்கு நிறைய லாபம் இல்லை. மாதாமாதம் நாம் செலுத்தும் சந்தாப் பணம் தான் இவர்களுக்கு தங்க முட்டை போடும் வாத்து. அதனால் தான் தனது வியாபாரத்தைப் பெறுக்க இப்போது பாக்ஸ் மற்றும் டிஷ் இலவசம் என்று கூவிக்கூவி விற்கிறார்கள். எப்படி ஒரு இடத்தில் இரண்டு கேபிள் ஆபரேடர்கள் இணைப்பு கொடுப்பதில்லையோ அதே போல், ஒரு DTH ஆபரேடரிடமிருந்து வாங்கிய செட்-டாப்-பாக்ஸை வைத்து இன்னொரு பிராட்காஸ்டருக்குத் தாவ முடியாது. இதுவும் இவர்கள் பணம் பண்ண இன்னொரு யுக்தி?

அது ஏன்? அடுத்த பதிவில் சொல்கிறேன்.


November 02, 2008

சினிமா சினிமா

என்னடா இது, மதுரைக்கு வந்த சோதனை? நம்மளை யாருமே பிரத்தியேகமா அழைக்கலியே, அழைக்காமலேயே அழை விருந்தாளியாக இந்தத் தலைப்பில் எழுதிடலாமான்னு நிறைய யோசித்திருக்கிறேன். போனாப் போகட்டும், இவன் எழுதுவதையும் தமிழ் பேசும் நல்லுலகம் படித்துத் தொலைக்கட்டும் என்று அழைப்பு பிச்சை விடுத முகுந்தனுக்கு கோடானு கோடி நன்றிகள்.

1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயதில் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. "இன்று போய் நாளை வா" என்ற பாக்கியராஜ் படத்தை பார்க்க விடாமல் அழுது கொண்டிருந்ததையும், அப்பா என்னை வெளியிலேயே வைத்துக் கொண்டிருந்ததையும் அம்மா சொல்லியிருக்கிறாள். சித்தப்பாவோடு "அலைகள் ஓய்வதில்லை" போய் வாடி என் கப்பக்கழங்கே பாட்டு கேட்டது மட்டும் நினைவில் நிற்கிறது. முழுதாக விவரம் தெரிந்து பார்த்த படம், காக்கிச் சட்டை. சிங்காரி சரக்கு நல்ல சரக்கு பாட்டுக்கு ஆட்டம் போட்டு, வீட்டுக்கு வந்த பின் அம்மாவிடம் வாங்கிக் கொண்டது நன்றாக ஞாபகம் இருக்கிறது.
சிறு வயதில் படங்களில் வரும் சண்டைகளைப் பார்க்கும் போது, இப்படி குதிப்பவர்களை ஒலிம்பிக்ஸிற்கு அனுப்பினால் இரண்டு மெடலாவது தேரும் என்று உணர்ந்தேன்.

2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
இணையத்திலுள்ள விமர்சனத்தை படித்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது என்று ஏமார்ந்து போய் நேற்று ஏகன் போனோம். படம் பார்த்து விட்டு என் மனைவி காயத்ரிக்கு வந்த தலைவலி இன்னும் போக வில்லை. அமர்ந்து என்று சொல்வதை விட கொட்டாவி விட்டுக்கொண்டே பார்த்தேன் என்று சொல்லலம். எப்போடா படம் முடியும், வீட்டுக்கு கிளம்பலாம் என்று On a march என்று ரெடியாக இருந்தோம். படம் விட்டதும், ஓடியே வந்து விட்டோம்.

3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ்ப் படம், "ராமன் தேடிய சீதை". எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நாம் தான் ஒரே பெண்ணைப் பார்த்து விட்டு, அவளைக் கட்டிக் கொண்டோம். ஆனால், சேரன் இப்படி ரவுண்டு கட்டி பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிடுவதைப் பார்த்து காதில் கொஞ்சம் புகை வந்தது. அதெப்படி சேரன் படத்திற்கு மட்டும் இப்படி அம்சமாக கதாநயகிகள் கிடைக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
அரங்கிலன்றிப் பார்த்த தமிழல்லாத படம், "The Punisher". தன் குடும்பத்தை கொன்றவர்களை கொன்று குவிக்கிறான். வீட்டில் ஹோம் தியேடர் வாங்கி பார்த்த முதல் படமும் இது தான்.

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
இரண்டு படங்கள். மகாநதி மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால். இரண்டு படங்களையும் 6 முறை அரங்கில் போய்ப் பார்த்தேன்.
மகாநதியை இப்போது சமீபத்தில் பார்த்தபோது, ஷோபனா தூக்கத்தில் புலம்பும் காட்சியை காண முடியவில்லை. என்னையும் அறியாமல் கண்களில் உதிரமே கொட்டுகிறதோ என நினைத்தேன்.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
எப்போது சினிமாக்காரர்கள் அரசியலில் புகுந்தார்களோ அப்போதே சினிமாவிலும் அரசியல் புகுந்து விட்டது. என்னைத் தாக்கிய சம்பவம் என்பதை விட எரிச்சலூட்டிய சம்பவம் என்று தான் சொல்ல வேண்டும். கமல்ஹாசன் இயக்கிய சண்டியர் படத்திற்கு சாதிச் சாயம் பூசி படப்பிடிப்புக்கு நிறைய நெருக்கடி கொடுத்த அரசியல் சம்பவம் ரொம்பவே எரிச்சலூட்டியது. அதனால் படத்தின் பெயரையே விருமாண்டி என மாற்ற வேண்டியிருந்தது. எங்கள் ஊரில் சண்டியரென்பது தெனாவட்டா திரிபவர்களைத் தான் சொல்லுவோம். இதற்கு எந்த சாதியும் விதிவிலக்கல்ல.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
I feel that we live in an era, where technology has reached its zenith.
அப்படியிருக்க சமீபத்தில் வெளிவந்துள்ள சிவாஜி, தசாவதாரம் மற்றும் ஏனைய சினிமாக்களில் வெளிக்காட்டப்படும் தொழில் நுட்பம் அவ்வளவாக பிரமிக்க வைப்பதில்லை. இன்ரைய சினிமாக்காரர்களுக்கு மென்பொருள் துறை ரொம்பவே உதவுகிறது.
ஆனால் எந்த வித தொழில் நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் எடுக்கப்பட்ட விட்டலாச்சாரியார் படங்கள் தான் என்னை மிகவும் கவருகின்றன. அதிலும் சந்திரலேகா, ஔவையார், பாதாள பைரவி , மாயா பஜார் போன்ற படங்களில் வந்த தொழில் நுட்பத்தை ரொமவே மதிக்கிறேன். பேச்சுக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே சொல்கிறேன்.

6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இணையதளத்தில் சினிமா பற்றிய செய்திகள் வாசிப்பதுண்டு. வீட்டில் ஆனந்த விகடன் வாங்கிய காலத்தில் சினிமா செய்திகள் அதில் படிப்பதுண்டு.

7)தமிழ்ச்சினிமா இசை?
என்றென்றும் இளையரஜா. அதிலும் S.P.பாலசுப்பிரமணியம் ஜானகி கூட்டணியில் வந்த டூயட் பட்டுக்கள் ரொம்பவே பிடிக்கும்.
சில ஏ.ஆர்.ராஹமான், வித்யாசாகர் பாட்டுக்கள் பிடிக்கும்.

8)தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
கொல்கத்தாவில் இருந்த போது வாராவாரம் ஹிந்தி படத்துக்குப் போய் விடுவேன். என்னல்லாமோ ஹிந்தி படம் பார்த்தேன்.
கல்யாணம் ஆவதற்கு முன் ஏதாவது நல்ல ஆங்கிலப் படம் பார்ப்பதுண்டு. கல்யாணம் ஆன பிறகு, எப்போதும் கிரிக்கட்டே பார்க்கிறேன் என்பதற்கு தண்டனையாக அவ்வப்போது களியுஞாலு, ஸ்வப்பனக்கூடு கிளாஸ்மேட் போன்ற மலையாளப் படங்களும் பார்க்க நேரிடுகிறது. வெருதே ஒரு பார்யா என்ற மலையாளப் படத்தை எப்படியாவது பார்க்க வைத்து விடவேண்டும் என்ற சபதத்தை காயத்ரி எடுத்துக்கொண்டிருக்கிறாள்.
சிறு வயதில் தூர்தர்ஷனில் போடும் மாநில மொழித் திரைப்பட வரிசையில் சில தெலுங்கு படம் பார்த்த ஞாபகம். குறிப்பிட்டுச் சொன்னால் தியாகையா, சங்கராபரணம், தான வீர சூர கர்ணா.
சத்யஜிட் ராய் எடுத்த பதேர் பாஞ்சாலி என்னை மிகவும் பாதித்தது என்று சொல்ல ஆசை தான். ஆனால் பார்க்கமலேயே எப்படி பாதித்தது என்று சொல்ல?

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

கள்ளத் தொடர்பு கூட கிடையாது. கமல்ஹாசன் சிம்ரன் ரம்யாகிருஷ்ணன் தவிர வேறெந்த திரைத் துரையினரையும் பார்த்ததில்லை. முடிந்தால் அசினைப் பார்த்து அடோகிரஃப் வாங்க வேண்டும்.

என் தந்தையின் ஒண்ணு விட்ட மாமா தியாகராஜனுக்கு (பிரஷாந்த் அப்பா) உதவியாளராக இருந்திருக்கிறார். கொம்பேரி மூக்கன், மலையூர் மம்புட்டியான் போன்ற படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிறு வயதில் அவரை பார்த்திருக்கிறேன். மற்றபடி வேறெந்தத் தொடர்பும் கிடையாது.
என்னோடு தொடர்பு வைத்துக் கொள்வதால் தமிழ் சினிமாவில் எப்படிப் பட்ட படங்கள் எடுக்கக்கூடாது என்று அறிவுறை வேணாலும் வழங்கலாம்.

10)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்ச் சினிமாவை அரசியலிலிருந்து அகற்றிவிட்டால் கொஞ்சமேனும் உருப்பட வாய்ப்புண்டு. இந்த மாஸ் ஹீரோயிசம், ஹீரொவை கடவுள் போல் காண்பிப்பது நின்றால் எதிர்காலம் நன்றாக இருக்கும். ஆனால் தமிழ் சினிமா கதாநாயகர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று தெரிகிறது. இவர்களே சென்ற தலைமுறையின் வாரிசுகள் தான். அடுத்த 10 வருடத்தில் இவர்களின் வாரிசுகளைத் தான் சினிமாவில் பார்க்க முடியும்.

11) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள்,செய்திகள் எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட
ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்?
தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஏற்கனவே சப்-ப்ரைம் க்ரைஸிஸால் பொருளாதாரம் தில்லானா மோஹனாம்பாள் ரேஞ்சுக்கு ததிகிணத்தோம் போடுகிறது. எவ்வளவு பேர் வேலையில்லாமல் ஆகப்போகிறார்கள் என தெரியவில்லை. இப்போது சினிமாவும் ஒரு இன்டஸ்ட்ரியகிவிட்டது. ஒரு வருடத்திற்கு தமிழ் சினிமாவே இல்லையென்றால் இதனால் சினிமாவையே நம்பியிருக்கும் நிறைய தொழிலாளிகள் பாதிப்பார்கள். விளைவு ரொம்பவே விபரீதமாக இருக்கும். நடிகர்கள், நடிகைகள் எங்காவது போய் கலைவிழா நடத்தி சம்பாதித்துக் கொள்வார்கள். ஆனால் பாவம் இந்த டெக்னீஷியன்கள், ஒப்பனைக்காரர்கள், லைட்மேன் இவர்களெல்லாம் என்ன செய்வார்கள். கிசு கிசு எழுதும் நிருபர்கள் அவர்கள் மென்ன அவல் கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்வார்கள்.

வேண்டாம் இது பற்றிப் பேச மட்டுமல்ல, நினைக்கவே வேண்டாம்.


இந்தத் தொடர் என்னோடு நின்றுவிடாமலிருக்க தற்போது பிளாகுலகிலிருந்து அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருக்கும் ரம்யா ரமணியையும் குந்தவையும் அன்புடன் அழைக்கிறேன்.

October 31, 2008

தொடர் பதிவுக்கு நடுவில் ஒரு கொசுவர்த்திச் சுருள்

நான் பிளாகுலகில் பெயர் வாங்கக் காரணமே கொசுவர்த்திச் சுருள் சுற்றித்தான். (ஆமா, நீ பேரு போனவனாச்சே!) அதாவது என் வாழ்க்கையில் நடந்த ஸ்வாரஸ்யமான சில சம்பவங்களை எழுதித்தான். சில சமயம் அச்சம்பவங்கள் ரொம்பவும் கிறுக்குத்தனமாக இருக்கும். கிறுக்குத்தனமும் ஒரு விதத்தில் நகைச்சுவை தானே. அதனால் அதை எழுதித் தமிழ் கூறும் நல்லுலகத்தை மகிழ்வித்தேன். (அதாவது நினைப்புத்தேன் பொளப்ப கெடுக்கும்பாங்க!!!) அதான் வெட்டிவம்பு துவங்கி நூறாவது பதிவாக ஒரு கொசுவர்த்திச் சுறுளையே மீண்டும் ஏற்றுகிறேன். அதான் இந்த பதிவுக்குக் கூட இப்படியொரு தலைப்பு. என்னப்பா, எல்லாரும் ஜோரா கைதட்டி ஒரு ஓ போடுங்கப்பா. (எலேய், ஒன்னியெல்லாம் வீடு தேடி வந்து முதுகுல தட்டணும்லே)

நான் படித்தது கோவில்பட்டி அருகிலுள்ள நேஷனல் பொறியியல் கல்லூரி. வீட்டிலிருந்து 60 கிலோமீட்டர் தூரம் இருந்தாலும், ஒரு மணி நேரத்தில் போய் விடலாம். மதுரை செல்லும் பேரூந்துக்களில் செல்லலாம். காலேஜுக்கென்று தனியாக நிறுத்தமெல்லாம் கிடையாது. ஓட்டுனரை நிற்கச் சொன்னால் நம்மைத் திட்டிக் கொண்டே பிரேக் பிடிப்பது போல் பிடிப்பார். தனியாளாக மாட்டிக்கொண்டால், ஓடும் பொதே அவர் பிரேக் போடும் சமயத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். நிமிஷத்திற்கு ஒரு பேரூந்து இருப்பதால் அவ்வளவாகக் காத்திருக்கத் தேவயில்லை.

நான் கல்லுரியில் படித்தது (இன்றைக்கு அவ்வளவாக நலிந்து போய் விட்ட) ராகிங்க் நிறைந்த காலம். இன்றைய கல்லூரி மாணவர்களிடம் ராகிங்க் என்றாலே பயங்கரமான கொடூரமானதொன்று என்று நினைக்கிறார்கள். ஆனால், நான் ராகிங்கை ரொம்பவே ரசித்தேன்.

எங்கள் கல்லூரியில் அதிகார பூர்வமாக ராகிங்க் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் காலேஜ் ஹாஸ்டலில் அவ்வளவாக ராகிங்க் கிடையாது. அப்படியே இருந்தாலும் பாட்டுப் பாடு, டான்ஸ் ஆடு ரகம் தான். சில மாணவர்கள் கோவில்பட்டியில் வாடகை அறைகளில் தங்கியிருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் காலேஜ் பஸ்சிலேயே வந்து போவார்கள். காலேஜ் லெக்சரர்களும் அந்த பஸ்சிலேயே போவதால் அவர்களும் ராகிங்கில் அகப்பட மாட்டார்கள். ஒரு மணி நேரம் எந்த எஸ்கார்டும் இல்லாமல் திருநெல்வேலியிலிருந்து வந்து போகும் என் போன்ற டே ஸ்காலர்கள் தான் சீனியர்களுக்குக் கிடைக்கும் பலியாடுகள்.

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயைப் போல் இருக்குமாம். அந்த மாதிரி பஸ் நிறுத்தத்தில் எந்த கல்லூரி மாணவனாக இருந்தாலும், இவன் சீனியரோ என்று தோன்றும். அதில் முதலாமாண்டு பசங்க தான்னு தெரியாம நிறைய பேருக்கு Good Morning wish சொல்லியிருக்கேன். Wish அடிப்பதிலும் ஒரு procedure உண்டும். மகளிர் மன்னிக்கவும். எல்லாவற்றையும் மூடிக்கொண்டு எம்பிக் குதித்து விஷ் அடிக்கணும். அப்படி சீனியரைக் கண்டு விஷ் அடிக்க வில்லையென்றால், தொலைந்தோம். அதனால் தான் எதற்கு வம்பு என்று யாரைப் பார்த்தாலும் விஷ் அடித்துவிடுவது better.

இன்னும் ராகிங்க் வகைகள் பற்றி சொல்லவே இல்லையே. முதலாமாண்டு மாணவன் யாராவது மினி-டிராஃப்டர் வைத்திருப்பார்கள். அதை மஷின் கன் மாதிரி வைத்துக்கொண்டு சத்தம் போட்டுக் கொண்டே சுட வேண்டும். மக்களும் நாங்க செய்யற சேட்டைகளைப் பார்த்து ரசிப்பார்கள். சீனியர்களுக்குப் பயந்து எல்லோரும் காலை
ஏழு மணிக்கு முன்னரே பஸ் பிடித்து காலேஜ் போய் விடுவோம்.

ஒரு முறை நான் ராகிங்கில் அகப்பட்ட போது, என்னை சீனியர் பெண்ணிடம் "நீ ஜெயலலிதா மாதிரி இருக்கேன்னு சொல்லு" என்றார்கள். நானும் பயந்து கொண்டே அந்தப் பெண்ணிடம் போய், "மேடம், நீங்க சி.எம் மாதிரி இருக்கீங்களாம்"னு சொன்னதற்கு, அந்தப் பெண் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே இல்லை.

இன்னொரு முறை பஸ் நடத்துனரிடம் போய், "கொஞ்ச நேரம் நான் உங்க வேலையைப்பாக்கறேன்னு சொல்லி அவர் பையை வாங்கிக்கோ "என்பார்கள். இன்னொரு முறை, டிரைவர் ரொம்ப மெதுவாக பஸ் ஓட்டுறார். அவரைப் போய் இந்த மினி டிராஃப்டர் வைத்து சுட்டு விட்டு வா என்று உத்தரவு. இந்த மாதிரியெல்லாம் என்ன கோமாளித்தனம் செய்தாலும் பஸ்ஸில் பயணிக்கும் சக பயணிகளும் ரொம்பவே ரசிப்பார்கள்.

கோவில்பட்டிக்கும் திருநெல்வேலிக்கும் நடுவில் கயத்தாறில் தான் பஸ் நிற்கும். "சிங்கப்பூர் வந்துடுச்சு இறங்கறவங்கள்லாம் இறங்குங்க. லண்டன் போறவங்கள்லாம் ஏறுங்கன்னு பஸ்ஸ சுற்றி இரண்டு பிரதட்சிணம் வைக்கச் சொல்லி உத்தரவு வரும். வேறு வழி, உத்தரவைக் கேட்டுத் தான் ஆகணும்.

என்ன தான் இருந்தாலும் எஞ்சினியரிங்க் படிக்கற பசங்க இல்லையா? அதனால அப்பப்போ கொஞ்சம் அறிவு பூர்வமான கேள்வியெல்லாம் கேட்டு கொடைவானுங்க. ஒரு 50 பைசாவைக் கொடுத்து, அதை integrate பண்ணுன்னு சொல்லுவாங்க. என்னடா இது, 50 பைசாவை எப்படி integrate பண்ண்றதுன்னு பேந்தப் பேந்த முழிப்போம். புடனியில் ஒரு போடு போட்டு, இது 50 காசு இப்போ integrate பண்ணு என்பார்கள். அதாவது 50 cos. cos 50. அதை integrate செய்தால் sin 50. இது தான் பதில். இதைச் சொன்னாலும் இது சரியான பதில் இல்லை என்பார்கள். -sin 50 என்றால், கன்னத்தில் ஒன்று விழும். Cos differentiate செய்தால் தான் -Sin. Integrate செய்தால் -Sin வருமா என்று நம்மையே குழப்புவார்கள். என்னடா இது, இப்படி குடையறானே என்று மனதில் எண்ணிக்கொண்டிருக்கையில், "Integrate செய்தால் +C சேர்த்துக்கணும்'னு தெரியாது என்று கேட்டு புடனியில் இன்னொன்று விழும்.

ஐயோ தாங்கலியேன்னு கத்தறீங்களா? உங்களுக்கே இப்படி இருக்குதுன்னா, பூனை கிட்ட அகப்ப ட்ட எலியாட்டம் இருக்கற எங்களுக்கு எப்படி இருக்கும்? சிரிக்கவும் முடியாது, அழவும் முடியாது. சிரிச்சா, "ஏம்ல, ஒரு integration ஒழுங்கா பண்ணத்தெரியலை. இதுல இளிப்பு வேறயோல" என்று இன்னொன்று புடனியில் விழும்.

ஆனால் ஒரு முறை கூட சிகரெட் பிடிக்கச் சொல்லியோ, பெண்களிடம் அநாகரீகமாக நடக்கச் சொல்லியோ சொன்னதில்லை. அந்த மட்டுக்கு பிழைத்தோமடா சாமி. ஒரு மாதம் இப்படி எங்களையெல்லாம் வதைத்து விட்டு ஒரு welcome party வைத்து எங்களுக்கு நடத்திய ராகிங்கை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். பெரும்பாலும், இரண்டாம் ஆண்டு சீனியர்கள் ரொம்பவே வதைப்பார்கள்.

எப்போடா, நாமும் செகண்ட் இயர் போவோம், நாலு பசங்களை ராக் பண்ணுவோம் காத்திருந்து காத்திருந்து, ஒரு வழியாக நாங்களும் ஒரு நாள் சீனியர் ஆனோம். ஆனால், அந்த வருடம் தான், அண்ணாமலை பல்கலைகழகத்தில் நாவரசு என்ற பையனை ராகிங்க் செய்து, அந்தப் பையன் இறக்க, ராகிங்கையே மக்கள் ஏதோ பாவச் செயல் போல் பார்க்கலானார்கள். நாங்க ஏதாவது பையனை புடிச்சு விசாரித்தாலே, ராகிங்க் செய்கிறோம் என்று பஸ் பயணிகளை எங்களுக்கெதிராக திரள ஆரம்பித்து விட்டார்கள். கடைசி வரை ஒரு பையனை கூட ராகிங்க் செய்யாமலேயே கல்லூரிப் படிப்பு முடித்தாயிற்று.

பி.கு: ஒரு சீனியர் என்னிடம் ராகிங்க் செய்யும் போது, அடுத்த வருடம், என்ன சப்ஜெக்ட் எடுக்கப்போகிறாய் என்றான். நான் Electrical & Electronics என்று பதிலளித்தேன். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டான். ஒரு கண்ம் யோசித்து விட்டுச் சொன்னேன், "Electrical என்றால் conductor, Electronics என்றால் Semi-conductor என்றேன். ரொம்பவே புல்லரித்துப் போய் விட்டான்.

October 25, 2008

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 3

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 1

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 2

மஹான்கள் என்னப்படுபவர்கள் ரொம்பவும் மேன்மை பொருந்தியவர்கள் என்பதால், மக்களைச் சுரண்டுபவர்களை மஹான்கள் என்றழைக்க முடியாது. அதனால் இப்பதிவிற்கான தலைப்பை மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் என்று மாற்றப்பட்டுள்ளது.

ந்த செட்-டாப்-பாக்ஸ் செட்-டாப்-பாக்ஸ் என்கிறார்களே அது என்ன? ஒளி ஒலி அலைகள் அனலாக் அலைகளாகத்தான் முதன் முதலில் நம் தொலைக்காட்சிப்பெட்டிகளை வந்தடைந்து கொண்டிருந்தன. அனலாக் அலைகள் ஒவ்வொன்றிற்கும் ஓர் அலைவரிசை உண்டு. அதாவது Frequency. ஒவ்வொரு சானலுக்கும் இந்த அலைவரிசை எண் மாறுபடும். ஒரே அலைவரிசையில் இரண்டு சானல்களை ஒளிபரப்ப முடியாது. நூறு சானல்களை ஒளிபரப்ப வேண்டுமென்றால் நூறு அலைவரிசைகள் தேவை. அது மட்டுமல்லாமல், இரண்டு சானல்களுக்கு நடுவில் இவ்வளவு அலைவரிசை வித்தியாசம் இருந்தாக வேண்டும். ஆக நூறு சானல்களை ஒளிபரப்ப நிறைய அலைவரிசைகள் தேவை. இதைத் தான் ஆங்கிலத்தில் Bandwidth என்கிறார்கள். அதாவது அனலாக் சானல்களை ஒளிபரப்ப Bandwidth நிறைய தேவை.
சானல் ஒளிபரப்பாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு அலைவரிசையைத் தேர்ந்தெடுத்து, ஒளிபரப்ப முடியாது. அவர்கள் அரசாங்கத்திடம் முறைப்படி விண்ணப்பம் செய்து, வேறு எவரும் உபயோகிக்காத அலைவரிசையை இவர்களுக்கு ஒதுக்குவார்கள். இதை ஆங்கிலத்தில் Spectrum Allocation என்பார்கள். இந்தியாவில் இந்தச் சேவையை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் செய்கிறது(Ministry of Information and Broadcasting). ஒரு அலைவரிசையை தங்களுக்கென உபயோகம் செய்வதற்கு இவர்கள் கோடிக்கணக்கில் அரசாங்கத்திற்கு உரிமத் தொகையாக செலுத்தாகியாக வேண்டும்.
ஆக சன் டி.வி போன்ற ஒரு நிறுவனம், 10 சானல்களை ஒளிபரப்ப வேண்டுமெனில், அவர்கள் பத்து அலைவரிசைகளை தங்களுக்கென ஒதுக்கித்தர அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதற்கேற்ற வாறு உரிமத்தொகையும் அத்துணை மடங்கு கூடும். இதெல்லாம் போக, அனலாக் அலைகளில் சிக்னல் நஷ்டம் நிறைய. அதனால் நம் தொலைக்காட்சிக்கு வரும் அலைகளை படமாகப் பார்க்கும் போது துல்லியமாகத் தெரியாது. சரி இதற்கும் செட்-டாப்-பாக்ஸிற்கும் என்ன சம்பந்தம்?
அதற்குத்தான் வருகிறேன். அதற்கு முன்னால் இந்த டிஜிடல் அலைகள் பற்றி சொல்லிடட்டுமா? ஒளி ஒலி அலைகளை டிஜிடைஸ் செய்து அவைகளை எண்களாக மாற்றிடலாம். பயப்பட வேண்டாம். அந்த தொழில் நுட்பமெல்லாம் சொல்லவில்லை. இப்படி டிஜிடைஸ் செய்த எண்களை மாடுலேஷன் செய்து அலைகளாக மாற்றி ஒளிபரப்பலாம். இதற்கும் ஒரு அலைவரிசை உண்டு. அவைகளை ஒரு ஆன்டென்னா கொண்டு டி-மாடுலேட் செய்து மீண்டும் எண்களாக மாற்றிட முடியும். சரி இதனால் என்ன பயன் என்கிறீர்களா? ஒரு சானலில் உள்ள ஒளி மற்றும் ஒலியை இப்படி எண்களாக மாற்றி அலைபரப்ப முடியும். இதிலுள்ள விஷயம் என்னவென்றால், ஒன்றிற்கு மேலாக உள்ள சானல்களின் ஒளி ஒலியை டிஜிடைஸ் செய்து, ஒரே அலைவரிசையில் அலைபரப்பலாம். ஒவ்வொரு சானலுக்கும் ஒரு அலைவரிசை என்ற நிலமை போய் ஒன்றிற்கு மேலாக நிறைய சானல்களை ஒரே அலைவரிசையில் அலைபரப்பலாம் என்றால் லாபம் தானே? அதனால் டிஜிடல் சிக்னல்களை அலைபரப்பத் தேவையான Bandwidth'உம் அனலாகை விட சிறியது தான். மேலும் டிஜிடல் சிக்னலில் சிக்னல் நஷ்டம் குறைவு. அதனால் துல்லியமான படங்களைப் பார்க்கலாம்.
நம் வீட்டிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் அனலாக் சிக்னல்களைத்தான் டிகோட் செய்ய முடியும். இந்த டிஜிடல் அலைகளை டிகோட் செய்யும் திறன் செட்-டாப்-பாக்ஸிற்குத்தான் உண்டு. டி.வி செட்டிற்கு மேல் இதை சுலபமாக வைக்கலாம் என்பதால் இதற்குப் பெயர் செட்-டாப்-பாக்ஸ் என்றமைந்தது. இதுவே இதன் பெயர்க்காரணம்.
எல வெண்ணெய், "செட் டாப் பாக்ஸ் வச்சிருந்தாலும் ஏன் எல்லா எளவு சானலும் வருதுன்னு" இந்தப் பதிவுல சொல்லுதேன் சொல்லிப்புட்டு என்னமோ பாடம் எடுக்குதியேல்லா, வெண்ண?
அந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்து கொள்ளத்தான் இவ்வளவு தொண்டைத் தண்ணி வற்ற சொல்லவேண்டியதாப்போச்சு?
டிஜிடல் சிக்னல்களை கேபிள் ஆபரேடர் இந்த இந்த வீட்டுக்கு இந்த இந்த சானல்களை கொடுக்க முடியும். இந்த மாதிரி, நமக்கு வேண்டிய சானல்களுக்கு மட்டும் செலுத்த வேண்டிய தவணையை செலுத்திப் பார்ப்பதற்குப் பெயர், Pay Per View.
ஆனால், பெரும்பாலான கேபிள் ஆபரேடர்கள் இந்த செட்-டாப்-பாக்ஸை மட்டும் கொடுத்து விட்டு, எல்லா சானல்களையும் சப்ளை செய்து விட்டு, நாம் பார்க்காமலிருக்கும் சானல்களுக்கும் சேர்த்தே சந்தா வசூலிக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யக் காரணமென்ன? இந்த Pay Per View என்ற தொழில் நுட்பத்தை நடைமுறைப் படுத்த இவர்கள் கணிசமான அளவு மென்பொருளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த மென்பொருளை வழங்கும் நிறுவனங்கள் நிறைய ஆய்வு செய்து, இந்த மென்பொருளை கொடுக்கிறார்கள். அதனால் இந்த மென்பொருளின் விலையும் சற்றே அதிகம். இந்தக் காசை மிச்சப் படுத்தத்தான் இவர்கள் நமக்கென்ன வந்தது என்று எல்லா சானல்களையும் கொடுத்து விட்டு, எவ்வளவு செட்-டாப்-பாக்ஸ் விற்றிருக்கிறதோ அவ்வளவு சந்தா தாரர்கள் என்ற கணக்கில் கட்டண சானல்காரர்களுக்கு சந்தா செலுத்துகிறார்கள். அரசாங்கமும் கேபிள் ஆபரேடர்களின் இந்தத் தில்லு முல்லு தெரியாமல் CAS நடைமுறையாக்கப்பட்டுவிட்டது என்று நம்பிக் கொண்டிருக்கிறது? ஆனால் உண்மையில் கேபிள் ஆபரேடர்கள் மக்களை சுரண்டுவதை இதன் மூலம் நிறுத்தவில்லை.
இதனாலெல்லாம், கேபிள் ஆபரேடர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட மக்களின் பரிதாமான நிலை மாறி விட்டதா என்றால், அதான் இல்லை. இதை ஓரளவு போக்கத்தான் புதிதாக வந்திருக்கிறது, DTH முறை. அதாவது Direct To Home. சாடிலைட் வழியாக நேராக வீட்டுக்கே சிக்னல்களை கொண்டு வரும் தொழில் நுட்பம். அது பற்றி அடுத்த பதிவில்.

[தொடரும்]

October 24, 2008

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்



எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பட்டாசெல்லாம் வாங்கிப்புட்டியளா? பார்த்து கொளுத்தங்கப்பா. நாளைக்குத்தான் வெடி வாங்கப்போகணும்!!!