Pages

July 20, 2005

செம லாஸு!!!!

சிறு வயதில், கணக்கு பரீட்சைபோதெல்லாம், அப்பா எனக்கு கணக்கு சொல்லித் தருவார். சொல்லிக் கொடுக்கறேன் பேர்வழின்னு கஷ்டமான கணக்கெல்லாம் கொடுத்து நொங்கெடுப்பார் என்று தான் சொல்லணும். எந்த ஒரு கணக்குக்குமே முழுமையான ஒரு பதில் வராத மாதிரி தான் கொடுப்பார். எதுக்குமே, பின்ன (decimal) வகையில் பதில் வரும். என் தங்கை கொஞ்சம் அப்பா செல்லம். அப்பா கூப்பிட்டால் கூட வர மாட்டாள். ஓடி விடுவாள். நான் தான் பலி ஆடாக அகப்படுவதுண்டு. என் கூட படிப்பதற்காக எனது சக வகுப்பாளினியும் வருவாள். (ரொம்ப குழம்ப வேண்டாம், classmateஐ தான் அப்படி சொன்னேன். தமிழ் குடிமகன் ஆத்மா சாந்தி அடிந்திருக்கும். இனிமேல் இவளை ச.வ. என்றே விளிப்போம்.) என் வயித்தெறிச்சலைக் கொட்டிக்கொள்ள வேண்டாமா??

இதில் வேதனை என்னவென்றால், என்னைவிட நன்றாகவே கணக்கு செய்வாள். பொண் குழந்தை நன்னா கணக்கு போடறா, உனக்கென்னட குறைச்சல்னு அப்பப்போ ரெண்டு குட்டு வேறு விழும்.
ஒரு கணக்கு பரீட்சை அன்றைய தினம் லாப நஷ்ட கணக்கு கொடுத்தார். ஒரு முட்டை வியாபாரி சில பல டஜன் முட்டை வாங்கி வருகிறான். அதில் சில முட்டைகள் அழுகியும் உடைந்தும் விட்டன. மீதியை ஒரு குறிப்பிட்ட ரூபாய்க்கு விறகிறான். விற்பனையில் அவனுக்கு லாபமா நஷ்டமா என்பது தான் கணக்கு.
இது என்ன பிரமாதமான கணக்கு என்று எண்ணுபவர்கள், இக்கணக்கில் கொடுக்கப்பட்ட எண்களைப் பார்க்க வேண்டும். 97 டஜன் முட்டை 83 அழுகி விட்டது. ஒரு முட்டையின் விலை 1.54 ரூபாய். இப்படியாகத்தான் எல்லாமே இருக்கும். இப்படிப் பட்ட எண்களை கொடுத்தால் கணிப்பொறியே நம்மைத் திட்டும். அப்பாவைத் திட்ட முடியுமா? என் தலையெழுத்தை நொந்து கொண்டு கணக்கு போட ஆரம்பித்தேன். ஒரு 10 நிமிடம் கழித்து என்னிடம் கேட்டார், "என்னடா, இன்னும் போடலியா. நீ போட்டுட்டியாம்மா. என்ன பதில். லாபமா நஷ்டமா" என்றார். அவர் எதிர்பார்த்தது லாபமா நஷ்டமா என்பது தான். எவ்வளவு லாபம் என்று அவரே கூட கணக்கு போட்டு பார்த்தால் பிழை வரக் கூடும். ச.வ. லாபம் என்றாள். லாபமா!!!!ஐயையோ நமக்கு நஷ்டம்னா வந்திருக்கு. என் வயிற்றிற்குள் புளியைக் கறைக்க ஆரம்பித்தது.
"என்னடா உனக்கென்ன வந்திருக்கு" என்று ஒரு அதட்டல் வேறு.
என்ன சொல்வதென்று தெரியாமல் மரியாதையாக முழித்தேன்.
"ஏண்டா, இப்படி இஞ்சி தின்ன குரங்காட்டம் ஒக்காந்திருக்கே. ஏதாவது சொல்லித் தொலையேன்".
"லாபமெல்லாம் இல்லை. செம லாஸு" என்றேன்.
"லாஸா, கொண்டா இப்படி நோட்டை" என்று என்னிடமிருந்து பிடிங்கினார். எதைப் பார்த்தாரோ தெரியாது, என் இடுப்புக்கு மேல் எல்லா பாகமும் வலிக்கத் தொடங்கியது. அவர் விளாசாத இடமே இல்லை. எப்போதுமே அப்பா அடித்தால் அம்மா சமாதானப் படுத்துவாள். அன்று அவளும் கட்சி மாறி விட்டாள்.
ஒரு வழியாக அழுது முடிந்த பின் அப்பா கேட்டார், "எந்த லக்ஷணத்துல குடுத்த கணக்கை எழுதியிருக்கே பாரு. 83 முட்டை அழுகியிருக்குன்னு கொடுத்திருக்கேன். நீ 83 டஜன் அழுகியிருக்குன்னு எழுதியிருக்கே. ம்ம் பரவாயில்லை. நீ எழுதியிருக்கும் கணக்குக்கு வந்த பதில் சரி தான் என்றார்".
"ஏம்பா, இதெல்லாம் அடிக்கறதுக்கு முன்னாலேயே பார்த்திருக்கக் கூடாதா??" இப்படி மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். யாருக்கு அவரிடம் இப்படி பேச தைரியம்.

பல வருடங்களுக்குப்பின், நிறைய பேருக்கு லாப நஷ்ட கணக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறேன். எப்போதுமே எனக்கு அப்பாவிடம் சொன்ன "செம லாஸு" தான் ஞாபகம் வரும்.

பி.கு. அன்றைய தின கணக்கு பரீட்சையில் நான் வாங்கிய மார்க் 100/100. அது தான் என் வாழ்க்கையில் கடைசியாக நூறு மார்க் வாங்கியது என்பது ஒரு பெரிய சோகக் கதை ;-))

July 15, 2005

இல்லறம் சிறக்க.....

இல்லறம் சிறக்க என்ற தலைப்பிலே,
விவாதம் நடக்கிறது.

ஒருவர் சொன்னார், எல்லா
கணவர்களும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை
அறிய வேண்டும்; அன்பு
இன்னொருவர் சொன்னார்,
வேண்டாம் வேண்டாம். இரண்டெழுத்து
வார்த்தை அறிந்தால் போதும்; சரி

July 13, 2005

கேக்கறவன் கேனையன்னா, கேழ் வெரகுல நெய் வடியுதும்பாங்க


டுபாகூர் வுடறதுல நம்ம பயலுவள அடிச்சுக்கறதுக்கு ஆளே இல்லை. லேட்டஸ்ட் டுபாகூர் அஹமதாபாதுல நடந்திருக்கு. அஞ்சுல் பாண்டியான்ற பதினெட்டு வயசு பையன், மைக்ரொஸாஃப்ட்ல (Microsoft) வேலை பாக்கறதா ஒரு பெரிய கதை கட்டி அத மத்தவங்க நம்பும்படியா பண்ணியிருக்கான். ஐயா கூட பில் கேட்ஸ் அப்பப்போ சட் (chat) பண்ணுவாராம். இவரு microsoft நடத்துன நிறைய கோர்ஸ்ல உலகத்துலயே நம்பர் ஒண் ரங்க் வாங்கியிருக்காராம். இவரு தான் மைக்ரொசாஃப்டோட டெக்னாலஜி டிபார்ட்மென்டையே அட்மினிச்டர் பண்ணுறாராம். இவருக்கு ஒரு வாரத்துக்கு 5000 $ சம்பளம் தரேன்னு பில் சொன்னாராம். ஆனா இவர் அதுக்கு ஒத்துக்கிடலையாம். இவரு B.E கம்பியூடர் சயின்ஸ் படிக்கிறாராம். Harvard Universityல M.Phil பண்ணுறாராம்.

ஐயா சொவத்துல நிறைய சான்றிதழெல்லாம் மாட்டி வச்சிருக்காறாம். இத பத்தி இன்னும் நிறைய படிக்கணூம்னா, http://timesofindia.indiatimes.com/articleshow/1169345.cms



இது தான் இப்படின்னா, இதே ஊர்ல ஹர்ஷில் பாரீக்ன்ற 19 வயசு பையன் ஒரு படி மேல போயிட்டான். இவரு ISROல வேலை பாக்குறாராம். இவரு தான் ISRO Moon Mission இயக்குனராம். இப்படி ஒரு டுபாகூர சொல்லி ஒரு பொண்ணோட அப்பாவ ஏமாத்தி அந்த பொண்ண கல்யாணம் பண்ணியிருக்கான். ஐயா ரொம்ப பேஸுறாரேன்னு யாரோ சந்தேகப்பட, போலீஸு வந்து வெசாரிச்சப்போ தான் குட்டு வெளிப்பட்டிருக்கு. இவரு 10th படிக்கும் போதே ஒரு பொண்ணுக்கு நூலு வுட்டாறாம். அது நீ வாழ்க்கைல செட்டில் ஆனப்பறம் பாப்போம்னுட்டுதான். (பொண்ணுங்கல்லாம் இப்போ ரொம்ப உஷார்மா) அதை வளைக்க தான் ஐயா இப்படி ஒரு டுபாகூர் நாடகத்த நடத்துனாராம். இந்த டுபாகூர்ல அந்த பொண்ணும் பொண்ணப்பெத்த அப்பனும் மயங்கிட்டானுவ. இதோட நிறுத்திக்கிட்டாலாவது சரி. இப்பவே கல்யாணமும் பண்ணீக்கிடணும். இல்லைன்னா 20 வருஷத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட முடியாதுன்னு வேற அளந்து வுட்டிருக்காரு. இதுக்கு அப்துல் கலாம் உதாரணம்னு சொல்லவும், கல்யாணமும் முடிஞ்சாச்சு. இப்போ மாமியாரு வூட்டுல ஒக்காந்து களி தின்னுக்கிட்டுருக்காரு.

கேக்கறவன் கேனையன்னா, கேழ் வெரகுல நெய் வடியுதுன்னும் சொல்லுவானுங்கன்றது எவ்வளவு உண்மையாப் போச்சு???

July 08, 2005

வழக்கு போடறதுக்கு ஒரு வெவஸ்தையே இல்லையாடா??

இந்திரா காந்தி பத்தி நிக்ஸனும் கிஸ்ஸிங்கரும் 30 வருஷத்துக்கு முன்னாடி பேசிக்கிட்டத அமெரிக்க இப்போ வெளியிட்டிருக்கு. அதுல இவனுங்க ரெண்டு பேரும் இந்திரா காந்திய காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி இருக்கானுங்க. யம்மா தாயே, பாகிஸ்தான் மேல போர் தொடுக்காதன்னு அண்ணாச்சி மன்னாடி கேட்டுக்கிட்டாராம். நம்ம அம்மணி போடா வெண்ண, ஒனக்கும் பெப்பே, ஒங்கப்பனுக்கும் பெப்பேனு, ரஷ்யா துணைக்கு இருக்குதுன்ற தைரியத்துல பாகிஸ்தான் மேல போர் எவுச்சு. இதுக்கப்பறம் நடந்தது தான் இந்த காய்ச்சும் படலம். என்னத்த பேசிக்கிட்டானுங்களோ ஒரு எளவும் தெரியாது. ஆனா, நல்ல கெட்ட வார்த்தைல வைஞ்சிருக்கானுங்கன்னு அரசல் புரசலா பேசிக்கிடறானுங்க.

ஒவ்வொரு வருஷமும் அமெரிக்காவுல அந்த நாட்டுல கமுக்கமா வச்சிட்டிருந்த ஆவணங்கள பொது மக்கள் பார்வைக்கு வப்பானுங்க (ரொம்ப முக்கியம். You can't find more Idiots in the world, than what you can find in the US of A என்பது என்னுடைய தாழ்மையான கருத்து) இதுல ஏதோ ஒரு புண்ணியவான், இந்திராவ பத்தி இந்த ரெண்டு பெரிய மனுஷங்களும் என்ன பேசிக்கிட்டாங்கன்னு எப்படியோ தோண்டி எடுத்திருக்கான்.

சரி பேசிக்கிட்டது தான் பேசிக்கிட்டாங்க. ரெக்கார்ட் டேப்பையெல்லாம் அணைச்சிட்டு பேசியிருக்கலாம்ல. சரி, அதுவும் நடந்த்து கிட்டத்தட்ட 30 வருஷமாச்சு. இது நம்மூர் காங்கரெஸ் காரனுங்களுக்கு பொறுக்கல. இவனுங்க தான் நேரு குடும்பத்துக்கு எப்பவும் விசுவாசியா இருப்போம்னு சிலாசாசனம் எளுதி கொடுத்திருக்கானுவளே. அவன் அவன் அறிக்கை வுடறான். அமெரிக்கா பகிரங்கமா மன்னிப்பு கேக்கணூமாம்.

இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. ஒரு அதீத இந்திரா விசுவாசி, இந்தூர் கோர்ட்ல அமெரிக்கா மேல 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு போட்டிருக்கான். இந்த பணத்த குஜராத் வெள்ள நிவாரண நிதிக்கு பயன் படுத்திக்கிடணுமாம். எப்படி போகுது கதை???

சரி இந்தாளு ஏதோ கோட்டி புடிச்சு வழக்கு போட்டிருக்கான்னா, அதையும் இந்தூர் கோர்ட் ஏத்துக்கிட்டு ஜூலை 11 இந்த விசாரிக்கப் போறாங்களாம். அப்படியே, இந்த வழக்குல இந்தாளுக்கு சாதகமா, தீர்ப்பு வந்திருச்சின்னா, யாருல ரூபாய் கொடுப்பா? நிக்ஸனும் கிஸ்ஸிங்கரும் என்ன நம்மூர் அரசியல்வாதியா? கீழ் கோர்ட் தண்டன கொடுத்திச்சின்னா மேல் கோர்ட்ல அப்பீல் பண்ண??? இதுல என்ன வேடிக்கைன்னா, நிக்ஸன் மண்டயப்போட்டு, அவன பொதச்ச எடத்துல புல்லு முளச்சாச்சு. கிஸ்ஸிங்கரும் போற வழிக்கு புண்ணியம் தேடிக்கிட்டிருக்காரு. இந்த லக்ஷணத்துல 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரணுமாம். அதை அப்படியே வெள்ள நிவாரண நிதியா பயன் படுத்திக்கிடணுமாம்.

எதெதுக்கு வழக்கு போடணும்னு ஒரு வெவஸ்த இல்லையால? ஏற்கெனவே நம்மூர் கோர்டெல்லாம் சூப்பர் ஸ்பீடா இயங்கிட்டு கடக்கு. இதுல இந்த கோட்டிக்காரப் பயலுங்க வேற இந்த மாதிரி வழக்கு போடறாங்க. கலி காலமடா இது.


இது ஒரு மட்டரு, இத்த பத்தி இவ்வளவு எளுதியிருக்கியேல. ஒனக்கு கூட தான் வெவஸ்தையே இல்லங்கியேளா??? :-)

July 07, 2005

இசையே உன் பெயர் இளையராஜாவா???



தமிழ் பாடங்களில் அருஞ்சொற்பொருள் என்றொரு பகுதி உண்டு. இசை என்பது அருஞ்சொல் ஆகி விட்ட நிலையில் (இப்போதுள்ள இசையில் இசையை விட ஓசை தான் மிகுதி), அதற்கு இளையராஜா என்பது பொருத்தமான பொருள். நேற்று மழையையும் பொருட்படுத்தாது 2 கடைகள் ஏறியும் இளையராஜவின் சிம்ஃபனி இசையில் திருவாசகத்தை வெளியிட்டுள்ள ஒலிப்பேழை ( CD ரொம்ப மண்டையைப்போட்டு உடைத்துக்கொள்ள வேண்டாம்) கிடைக்கவில்லை. நானும் என் முயற்சி விடாது மூன்றாவது கடையில் இந்த ஒலிப்பேழையை ஒரு வழியாக வாங்கி ஆகி விட்டது. வீட்டுக்கு விரைந்து வந்து அதைப்போட்டுக்கேட்கலாம் என்றால், கோலங்களும் ரோஜாவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் கூறும் நல்லுலகில் திருவாசகத்துக்கு ஏது இடம். கொஞ்சம் பொறுத்திருக்க நேர்ந்தது. அப்பப்போ இடையில் சிறிது சிறிது பாகமாக கேட்க அனுமதி கிடைத்தது. முதலில் கேட்கும் போது அவ்வளவாக மனம் லயிக்கவில்லை. வீட்டில் எல்லோரும் ஒரே கேலி, எக்காளம். 150 ரூ. தண்டம் என்றெல்லாம். ஏதுடா, சுஜாதா பாலமுரளிகிருஷ்ணா போன்ற மேதைகள் இவ்வளவு சிலாகித்து கூறியதா இந்த லக்ஷ்ணத்தில் இருக்கிறது ஒரே மன வருத்தம். இருந்தாலும் எப்படியாவது, இதை ரசித்தே ஆக வேண்டும் என்ற வரட்டு பிடிவாதத்தில் ஆஃபீஸுக்கு வந்து ஹெட் ஃபோன்ஸ் வைத்து எனக்கு மட்டும் கேட்குமாறு கேட்டேன். நம்பினால் நம்புங்கள், I was in for a different kind of a feeling. இது வரை கேட்டறியாத ஆனால் வினோதமான சப்தங்களை கேட்க நேரிட்டது.
இதே ஒலிப்பேழையைத்தான் வீட்டில் போட்டு கேட்டேன். ஆனால் இப்போது உண்டாகும் அனுபம் ஏன் வீட்டில் உண்டாக வில்லை என்று எண்ணிய போது, சில காரணங்களை உணர்ந்தேன்.
1. இதை மற்ற ஒலிப்பேழை மாதிரி எப்போதும் கேட்க முடியாது. மனது அமைதியாக இருக்க வேண்டும்.
2. ஒரு புதிய இசை ஆராய்ச்சியை வரவேற்கும் அளவிற்கு மனது பக்குவப்பட்டிருக்க வேண்டும். பக்தி பாடல்களையெல்லாம் மிருந்தங்கம் தப்லா கடம் போன்ற பக்க வாத்தியங்களுடனே கேட்ட நமக்கு சிம்ஃபனி ஆர்கெஸ்ட்ரா போன்ற மேல் நாட்டு சங்கீதத்தோடு கேட்பது முதலில் ஏற்றுக்கொள்வது சற்று கடினம்.
3. இதை music surround system வைத்துக் கேட்பது உசிதம். வீட்டில் உள்ள music system'இல் இந்த வசதி இல்லை. சில ஹெட் ஃபோன்ஸில் இந்த உண்டு.
4. இதை தனிமையிலே மட்டுமே சரிக்க முடிகிறது.

மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. எனக்கு மிகவும் பிடித்தது 'பூவேரு கோனும் புரந்தரனும்' என்று பவதாரிணி பாடும் பாடல். இந்த சிம்ஃபனி திருவாசகத்தை விமர்சனம் தகுதி எனக்கில்லை. அதனால் இதில் உள்ள நிறை குறைகளை நான் அலசப்போவதில்லை.

இந்த ஒரு மாபெரும் சாதனையைச்செய்ய இளயராஜா செய்வதற்கு நிறைய பணம் தேவைப்பட்டிருக்கிறது.
எவ்வளவு ஒலிப்பேழை விற்கிறதோ அந்தளவிற்கு இதை வெளியிட்டுள்ள நிறுவனம் பயன் அடையும். அதனால் இதை காசு கொடுத்து வாங்குவோம். தயவு செய்து இதை MP3'ஆக மாற்றி இணையத்தில் ஏற்றி விடாதீர்கள். MP3 முறையில் இதைக்கேட்டால் இதில் கேட்கும் சில அற்புதமான இசை கேட்பதில்லை. நான் ஏற்கனவே மாற்றிக் கேட்டுப்பார்த்து விட்டேன்.

இளையராஜனே, நீ இன்னும் பல இமயங்கள் கடக்க எங்களது வாழ்த்துக்கள்.

July 06, 2005

கிரிக்கெட்டும் மாறுது

(Deccan Chronicle Ad ராகத்தில் வாசிக்கவும்)
வந்தாச்சு வந்தாச்சு புதிய ரூல்ஸு வந்தாச்சு
பின்ச் ஹிட்டருக்கு ஆப்பு வக்க
புதிய ரூல்ஸு வந்தாச்சு


"ஸ்ரீ லங்காவுல நடக்கப்போகற திரிகோண போட்டிகள்லேர்ந்து தான் புதிய ஒரு நாள் ஆட்டத்துக்கான விதிமுறைகள் நடைமுறல வரும்னு முதல்ல சொன்னாங்க. ஆனா, நம்மூர் ஆடி தள்ளுபடிய ஆனி மாசத்துலயே ஆரம்பிச்சுட்ட மாதிரி இங்கிலாந்துல நடக்குற Natwest challenger series'லேர்ந்தே ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க."
எலேய் எலேய் கொஞ்சம் நிறுத்து. என்ன நீ பாட்டுக்கு சொல்லிட்டே போற. என்ன விதிமுறைங்க. என்ன மாறிச்சு. யாரு என்னத்த சொன்னாங்க. ஒரு முன்னுரையே கொடுக்காம நீ பாட்டுக்கு இப்படி டாப் கியர்ல போனா யாருக்கு என்னல புரியும்னு நினைக்கிறீயேளா??

கொஞ்ச நாளாகவே ஒரு நாள் சர்வதேச ஆட்டத்துல யாரு ஜெயிப்பா யாரு தோப்பான்றது கொஞ்சம் predictive'ஆ அகிட்டுது. நம்ம தமிழ் சினிமா மாதிரி. அதனால ஆட்டத்துல என்ன மாறியான மாற்றம் கொண்டுட்டு வரலாம்னு கிரிக்கெட் வாரியம் யோசிச்சு. எலேய் இது நம்மூரு தண்ணீரு வாரியம் மாதிரி இல்ல. யோசிச்சுட்டே இருக்கறதுக்கு. கொஞ்சம் ரோசன பண்ணி அத செயல் படுத்தவும் செய்யப் போறாங்க. அந்த யோசனையின் முடிவுதான் இந்த மாற்றங்கள்.

ஒரு நாள் ஆட்டம் ஒவ்வொரு அணியும், தலா 50 ஓவர் வரைக்கும் வெளாடலாம். இதுல மொத 15 ஓவருக்கு 2 பயலுவ தான் வெளி வட்டத்துல நிக்கலாம். மத்த பயலுவளெல்லாம் உள் வட்டத்துக்குள்ள தான் நின்னாகணும் (என்னல ஏதோ தேர்தல்ல நிக்க வட்டம் மாவட்டம்'னு சட்டு புட்டுனு விஷயத்துக்கு வா)

சரி ரூல் நம்பர் 1:
இனிமே மொத பத்து ஓவருக்குத்தான் 2 பேரு வெளிய நிப்பானுவ. அப்புறம் மீதி 40 ஓவருல ஃபீல்டிங் கப்டன் எப்போ வேணாலும் இந்த மாதிரி ரெண்டு பேத்த மட்டும் வெளிய நிப்பாட்டலாம். ஆனா, இந்த மாதிரி நிப்பாட்டும் போது 5 ஓவருக்கு கொறயாம நிப்பாட்டணும். அதுவும் ரெண்டு வாட்டி இந்த மாதிரி நிப்பாட்டணும்.

ரூல் நம்பர் 2:
ஸப்ஸ்டிட்யூட் ஆளு இனிமே பேட்டும் டிரிங்ஸும் மட்டும் கொண்டு வந்துட்டு பந்து பொறுக்கிப்போட்டுட்டிருக்க வேண்டாம். அவனுங்களும் பேட்டிங்கும் பவுலிங்கும் செய்யலாம். எப்ப வேணாலும் இந்தாளுங்கள உள்ள கொண்டாந்துக்கலாம்.

ரூல் நம்பர் 3:
ரன் அவுட்டுக்கு மட்டுமில்லாம, இனிமே எல்லா விதமான அவுட்டுக்கும் மூணாவது அம்பயர கேட்டுக்கலாம்.
ஆனா, மூணாவது அம்பயர் மொத ரெண்டு அம்பயரின் முடிவுல தலையிட முடியாது.

Test rules are Partial to bowlers.
One Day rules are Partial to batsmen.
Cricket rules are always partial to Umpires

சரி இதுனால அப்படி என்ன மாற்றம் வரும்னு கேக்கியேளா???
ஆட்டத்துக்கு முன்னாலேயே ரெண்டு அணியும் தங்கள நல்லா தயார் படுத்திக்கணும். ஒவ்வொரு கட்டத்துக்கு தகுந்த மாதிரி வியூகம் அமைச்சக்கணும். இங்கே தான் கப்டனும் கோச்சும் நல்லா யோசிக்கணும். More than a coach every team would need a strategeist.
நம்மாளுங்க பிட்ச்ல, ஸ்பின் எடுக்கும்னு நினச்சு முரளி கார்த்திக் மாதிரி ஒரு ஸ்பின்னர டீம்ல வச்சிருப்பானுங்க. ஆனா, பந்து சுழலவே செய்யாது. கில்கிரிஸ்டு மாதிரி ஆளு விளாசு விளாசுன்னு விளாசரான்னா, முரளிய தூக்கிப் போட்டுட்டு வேற ஒரு ஃபாஸ்ட் பவுலர கொண்டாரலாம். திடீர்னு லக்ஷ்மணன் நடுவுல ரன் எடுக்காம கட்ட போட்டான்னா அவன தூக்கிட்டு அதிரடியா ஆடுற தோனிய கொண்டாரலாம். இதுனால விளையாடரவனுங்களும் உஷாரா இருப்பானுங்க. ஒழுங்கா ஆடல, "ஆப்பு என்பது எல்லோர் முன்னிலயிலும் வைக்கப்படும்"

அதே மாதிரி தான் ரெண்டு பேத்த வெளிய நிக்க வைக்கற விதியும். மொத பத்து ஓவரிலேயே பட்டிங் டீம் 3 விக்கட்ட எழந்திரிச்சின்னா, இன்னும் அஞ்சு ஓவருக்கு 2 பேத்த வெளிய நிக்க வக்கலாம். எதிராளி இன்னும் தடுத்தாடுற மூடுல தான் இருப்பான். இல்ல மொத 10 ஓவரிலேயே 100 ரன் அடிச்சுப்புட்டானுங்களா? ஃபீல்டிங்க கொஞ்சம் தளர்த்தி ஸ்பின் கொண்டாரலாம். அடிச்சு ஆடுறவனுக்கு திடீர்னு தடுத்தாடுறது கொஞ்சம் கஷ்டம். எப்படியும் தூக்கி அடிப்பான். எல்லா பந்தும் பவுண்டரிய எகிறாது. ஆக இந்த மாதிரி ஆட்டம் இன்னும் பரவசமா இருக்கலாம்னு நம்புறாங்க. இது வெற்றி அடைஞ்சா, இதையே தொடர்றதா உத்தேசம்.

பாப்போம். இந்த மாற்றங்கள் எந்தளவுக்கு கிரிக்கெட்ட இன்னும் எந்தளவுக்கு பரவசமாக்குத்துன்னு??

July 04, 2005

தேவை ஒரு அந்நியன்

போன வாரம் முழுக்க ரேஷன் கார்டு கொடுக்காங்க ரேஷன் கார்டு கொடுக்காங்கன்னு அம்மா டி.வியும் தாத்தா டி.வியும் போட்டி போட்டு கூவிக்கிட்டு கெடந்தாங்க. நானும், நம்ம வூட்டு ரேஷன் கார்டு வாங்கறதுக்காக நம்மூருக்கு போனேன். அவங்க அவங்க வட்டாரத்து ரேஷன் கடைகள்லயே ரேஷன் கார்டு வாங்கிக்கிடலாம்னு தான் சொன்னாங்க. நானும் நேர ரேஷன் கடைக்கு போனேன். அங்கே ஈ காக்கா கூட இல்லை. என்னடான்னு விசாரிச்சா, அரசு பள்ளிகூடத்துல தான் ரேஷன் கார்டு குடுக்கறாங்கன்னுட்டாங்க.
சரின்னுட்டு அரசு பள்ளிகூடத்த தேடி கண்டுபுடிச்சு அங்கிட்டு போனேன். யம்மாடியோவ், ஏதோ தேர்தல் நடக்க மாதிரி அம்புட்டு கூட்டம். இதுல கொடுமை என்னன்னா, கூட்டம் நகளவே மாட்டிக்கி. வெசாரிச்சு பாத்தா, ஒவ்வொருத்தருக்கும் கார்டு கொடுக்கறதுக்கு கொறஞ்சது பத்து நிமிஷம் ஆவுது. ஒரு அறை மணி நேரம் கழிச்சு பக்கத்துல இருக்க ஒரு ஆள் கிட்ட இன்னொரு ஆள் சொல்லுறாரு, போன தடவை கார்டு புதுப்பிக்கயில ஒரு சீட்டு குடுத்தானுவளாம். அத்த கொண்ணாந்தாத்தான் கார்டு தருவானுங்களாம். இல்லைன்னா, வட்ட வழங்கல் அலுவலகம் போவணுமாம். அதென்னய்யா வட்ட வழங்கல் அலுவலகம்'ன்னா, தாலுகா ஆபீஸ்ன்றாங்க ;-)))

இதேதுடா கொடுமன்னு, வூட்டுக்கு வந்து, இருக்க எல்லா அலமாரியும் தேடி பாத்து, ஒரு வழியா அந்த
சீட்ட கண்டு புடிச்சு மறுபடியும் அங்கிட்டு போனேன். இப்பவும் அதே அளவு கூட்டம் இருந்திச்சு. நல்ல வேளை, இந்த தடவை படிக்க பொஸ்தகமும், கேக்க நடை மனிதனும் (அதாங்க walk-man) கொண்டுட்டு போயிருந்தேன். ஒரு 3 மணி நேரம் கால் கடுக்க நின்னிருப்பேன். ஒரு வழியா நானும் ரேஷன் கார்டு குடுக்கும் அதிகாரி பக்கம் வந்தேன். என் காதுலேர்ந்து hear phone 'ஐ கழட்டிட்டு முன்னால நிக்க ஆளு கிட்ட என்ன கேக்கார்ன்னு கவனிச்சேன். அப்போத்தான் தெரிஞ்சது, ஏன் ஒவ்வொருத்தருக்கும் 10 நிமிஷம் ஆகுது. இந்த அதிகாரிங்க கையில ஒரு லிஸ்ட் இருக்குது. அந்த லிஸ்டுல, நம்ம பேரை தேடி பாப்பானுங்க. பேரு இருந்தாத்தான், கார்டு. இல்லைன்னா அப்பீட் ஆயிக்க வேண்டியது தான். அந்த லீஸ்ட, விண்ணப்பம் எண்ண வெச்சோ, ஆளுங்க பேர வச்சோ அடுக்கி வச்சிருக்கலாம்ல. அதுவும் இல்ல. ஒரு 30 பக்கத்துக்கு பேரு இருக்குது. நம்ம பேர கேட்டதும் ஒவ்வொரு பக்கமா தேடி பாப்பாரு. அவரு எந்த லக்ஷணத்துல தேடுறாருங்கறது கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஏன்யா, இதுக்கெல்லாம் தான் இப்போ கம்ப்யூட்டர் வந்துட்டுதே, ஒரு சின்ன sort n search ப்ரோகிராம் எழுதி, இந்த வேலையை பார்க்க தெரியாதா? ஒலகத்துக்கே நம்ம பயலுவ சாஃப்ட்வேர் எழுதி தரானுங்க. இந்த பிஸ்கோத்து வேலைக்கா சாஃப்ட்வேர் எழுத தெரியாது. பன்னண்டாம் கிளாஸ் படிக்க பய கூட இத்த எழுதிப்புடுவானே. ஹ்ஹ்ம்ம்ம் யார குத்தம் சொல்ல. சரி நம்ம கதைக்கி வருவோம்.
நான் அந்தாளுகிட்ட போனதும் என் சீட்ட வாங்கிட்டு, மறுபடியும் கூகிள் (தேடல்) செய்ய ஆரம்பிச்சாரு. ஒரு பக்கத்துல எங்கம்மாவின் பேரு இருக்கறத, நான் தான் காட்டினேன் அந்தாளுக்கு. (எத்தன பேரைஅந்தாளு ஒங்க பேரு இல்லன்னு திருப்பி அனுப்பிச்சாரோ???) எங்க வூட்டு முகவரியும் சரியா இருக்கான்னு பாத்துட்டு, கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு அடுத்த ஆளோட சீட்ட வாங்கிக்கிட்டாரு. நானும் ஒரு பத்து நிமிஷம் பொறுத்து பாத்தேன். அந்தாளு கிட்ட போயி, "சார் கார்டு என்னாச்சுன்னு கேட்டேன்". அதுக்கு அந்தாளு கொஞ்சம் கூட சலனமே இல்லாம, "ஒங்க வூட்டு கார்டு இங்குட்டு இல்ல. போய்ட்டு அடுத்த வாரம் வா"ங்கறான். (இந்த மாதிரி ஆளுங்கக்கெல்லா மருவாத ஒண்ணு தான் கொறச்சல் !!!!!)
"சார், இப்போ தானே, எங்க வூட்டு விலாசம் எல்லாம் இந்த லிஸ்டுல இருந்துச்சு. நீங்க கூட ஒரு ரெஃபரென்ஸ் நம்பர் குடுத்தீயளே"ன்னு கேட்டேன்.

"சார், லிஸ்டுல பேரு இருக்கு. ஆனா, கார்டு இல்ல. என்ன செய்ய. பேரு இருக்க எல்லாருக்கும் கார்டு இருக்குன்னு சொல்ல முடியாது. சில பேருக்கு இருக்கும், சில பேருக்கு இருக்காது.
நிறய பேரு லீஸ்டுலயே இல்ல. அதுக்கு என்ன பண்ணறது. ஏதுன்னா கேக்கணும்னா தாலுகா ஆபீஸ்ல போயி கேளுங்க. எங்களுக்கு ஒண்ணும் தெரியாது"ன்னான். ஏற்கனவே மணி நாலே முக்கால். அதுவும் சனிக்கெளம. தாலுகா ஆபீஸ்ல ஒரு பயலும் இருக்க மாட்டானுங்க. இதுல யாரு கிட்ட போயி கேக்கறது.

அந்தாளு கிட்ட மறுபடியும் போயி, " சார், இந்த ரேஷன் கார்டு வாங்கறதுக்காக நான் பெங்களுர்லேந்து வந்திருக்கேன். அடுத்த வாரமும் என்னால மறுபடியும் வரது கஷ்டம். இப்போ என்ன பண்ணறதுன்னு கேட்டேன்."

"இந்த மாசம் முழுக்க கார்டு கொடுப்போம். நீங்க கடைசி வாரம் கூட வந்து வாங்கிக்கலாம்."

"கடைசி வாரமும் எங்க கார்டு இல்லன்னா என்ன பண்ணறது"

"ஒன்ணும் பண்ண முடியாது. தாலுகா ஆபீஸுக்கு போயி அங்கே விசாரிக்கணும். எங்களால ஒன்ணும் பண்ண முடியாது"

இது எனக்கு மட்டும் நடந்தது இல்ல. கார்டு வாங்கறதுக்காக வந்த முக்காவாசி பேருக்கு இந்த கதி தான். இது திருநெல்வேலியில் மட்டுமில்ல. கிட்டத்தட்ட எல்லா ஊரிலயும் இது தான் நடந்திருக்கு.

எவனுக்குமே ஒரு பொறுப்புணற்சின்றது இல்ல. இதுல கொடுமை என்னன்னா, இத மேற்பார்வை பார்க்குர கலெக்டர், ஏதோ ஆளுங்கட்சி தீத்தாலாண்டி வரான்னுட்டு, அவன வரவேற்க போயிட்டாரு. எம்.எல்.ஏ வோ எம்.பி யோ, வட்டாட்சியாளரோ, ஒரு பய கூட கையில கெடக்கலை. நாடு இந்த மாதிரி இருந்தா, எந்த நூற்றாண்டுல உருப்படறது??

இந்த மாதிரி, பொது மக்கள மூணு நாலு மணி நேரம் வேகாத வெயில்ல காக்க வெச்சு, கடைசில கார்டு இல்ல, அடுத்த வாரம் வான்னு சொன்னா, இந்த மாதிரி அதிகாரிங்கள என்ன செய்யறது. இவனுங்களுக்கெல்லாம் அந்குபதமோ கும்பீபாகமோ குடுக்க வேண்டியது தான். அதனால் நம்ம ஒடனடி தேவ, ஒரு அந்நியன்!!!!