Pages

March 26, 2008

வெயிலோடு உறவாடி

ஏப்ரல் மாதம் என்றாலே இரண்டு ஸ்வாரஸ்யமான விஷயங்கள். ஒன்று முட்டாள்கள் தினம், இன்னொன்று ஸ்கூலில் விடுமுறை விட்டு விடுவார்கள். பள்ளியின் இறுதி நாளன்றே ஒரு தினுசாகத்தான் வீட்டுக்குள் வருவேன். வாசலிலேயே ஷூ சாக்ஸஸை அவிழ்த்து வீசி எரிந்து விட்டு, விளையாட ஓடி விடுவேன். பள்ளி இறுதியாண்டு பரீட்சையில் ஒரு சௌகர்யம் என்னவென்றால், எந்தெந்த பாடங்களில் எவ்வளவு மார்க் வாங்கினேன் என்று தெரியாது. யார் முதல் ரேங்க், என் ரேங்க் என்ன, எதுவும் தெரியாது. அதனால் அம்மாவிடம், வினாத்தாளிலுள்ளவற்றுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்காது. (அப்படியும் சில சமயம் அம்மா, ஏதாவது CID வேலை பார்த்து என் மர்க்கைக்கண்டு பிடித்து, என்னைப் போட்டு வதைப்பதுண்டு)

எங்கள் ஊர் வெயிலுக்கு பெயர் போன ஊர். வருஷத்திலுள்ள அனைத்து மாதங்களிலும் எங்கள் ஊர் மீது ஆதவனின் பார்வை உக்கிரமாகவே இருக்கும். கோடை விடுமுறையில் பெரும்பாலும் என் தாத்தா ஊருக்குச் சென்றுவிடுவோம். அங்கு சென்று விட்டால், என்னை கையிலே பிடிக்க முடியாது. அம்மாவின் ஜம்பமும் அங்கு பலிக்காது. தாத்தா முன் என்னைத் திட்டினால் அவருக்குக் கோபம் வந்து விடும்.

எப்போதும் நண்பர்கள் படை சூழ பேட்டும் பாலுமாகத் தான் திரிவோம்.
சாப்பிடுவதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே வீட்டிற்கு வருவேன். காலையிலே குளிப்பதற்கு ஆற்றிற்குச் சென்றால், திரும்பி வருவதற்கு 11 மணியாகிவிடும். வரும்போதே குளித்தது போக, களைத்துத்தான் திரும்பி வருவோம். அதிலும், எங்கள் நண்பர்கள் பட்டாளத்தில் எல்லோருமே சற்று கறுத்த நிறமுடையவர்கள். திரும்பி வந்த பத்தாவது நிமிடம், மீண்டும் விளையாட ஓடி விடுவேன். விளையாட்டென்றால், வீட்டில் அமர்ந்தபடி சீட்டோ, கேரம் போர்டோ அல்ல. எப்போதுமே கோடை காலங்களில் கிரிக்கெட் தான். அதுவும் பெரும் பாலும் ஏனைய தெருக்களின் டீம்களொடு மேட்ச். கொளுத்தும் மத்தியான நேர வெயிலில் தான் எங்கள் மேட்ச் ஆரம்பமாகும். தினமும் தெரு டீமோடு மேட்ச் இருக்கும்.
தாத்தாவிற்கு நான் வெயிலிலே விளையாடப் போவது பிடிக்காது. இருந்தாலும் திட்ட மாட்டார். "கோந்தே இந்த வெயில்ல விளையாடப்போகவேண்டாம். சாயங்காலமா போகலாம்" என்பார். பாட்டிக்கு என் மேல் இன்னும் வாஞ்சை அதிகம். "இந்த வெயில்ல வெளியில போனா கறுத்துப் போயிடுவே!!" என்பாள். அப்படியும் எல்லோர் கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டு நான் வெளியிலே ஓடிவிடுவேன். அந்த நாட்களில் வெயில் ஒன்று இருக்கிறதா என்றே நான் நினைத்ததில்லை.

வெயிலிலே அலைந்து திரிந்து வரும் என்னை என் அம்மா கறி வண்டிச்சூலன் என்று அழைப்பாள்.
வெயில் எனக்கு ஒரு தோழன் போல், என் கூடவே இருந்திக்கிறான். இந்நாள் வரை, என்னையோ என் நண்பர்கள் பட்டாளத்தையோ ஒன்றுமே செய்ததில்லை. நாங்கள் எல்லோருமே வெயிலோடு கிட்டத்தட்ட உறவாடி வளர்ந்திருக்கிறோம்.
வெயில் என்ற ஒன்று கூடவே இருந்தும், அதைப் பற்றி சட்டை செய்யாமல் வளர்ந்த நான், திரவியம் தேடி பெண்களுர் வந்த பிறகு, முகிலினங்களின் போர்வையை நீக்கி, ஆதவன் சற்றே கண் சிமிட்டினால் கூட, அலுவலகத்தின் குளிர்சாதன அறையிலிருந்தவாறே, "அப்பப்பா, என்ன வெயில!! எப்படித்தான் மக்கள் இந்த வெயிலில் வெளியில் செல்கிறார்களோ??" என அங்கலாய்க்கிறேன்.

March 23, 2008

எனக்குள் ஒரு கலைஞன்

எங்கள் குடும்பம் பெரிய சங்கீதக் குடும்பம் என்று சொல்ல முடியாது. இருந்தாலும், அநேகமாக எல்லோருக்கும் சங்கீத ஆர்வம் மிகுதியாகவே இருந்தது. என் அத்தைகள், பாட்டி, பெரியப்பா, சித்தப்பா எல்லோரும் நன்றாகவே பாடுவார்கள். என் தங்கை கூட பரதநாட்டியத்தில் கை தேர்ந்தவள். இப்படி எல்லோரும் தனக்குள் ஒரு கலையை வளர்த்துக்கொள்ள, என்னக்கும் ஏதாவது ஒரு கலையை கற்றுத்தர வேண்டும் என்று என் அம்மா எண்ணினாள்.

கொண்டு போய் சேர்க்கப்பட்டேன் ஓர் அதிகாலை வேளையில், மிருதங்கம் பயில. "டேய், மிருந்தங்க கிளாஸ் போகிறாயா?" என்றெல்லாம் அம்மா கேட்கவில்லை. அம்மா எது செய்யச் சொன்னாலும் செய்யணும்; செய்வேன். குரு தக்ஷணையாக வெற்றிலை பாக்கு, பழம், நூற்றி ஓர் ரூபாய் எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றேன்; மிருதங்க கிளாஸ் இனிதே ஆரம்பமானது.
என் குருவிற்கு மிருதங்கம் தவிர கராதே குங்ஃபூ எல்லாம் தெரியும். நான் அறிந்து அவர் மிருதங்க பாடத்தை விட குங்ஃபூ பற்றித்தான் நிறைய பேசுவார். அடிக்கடி அதட்டி திட்டவும் செய்வார். அவரிடம் பேசவே பயமாக இருக்கும். அவர் முன்னிலையில் மிருதங்கத் தாளங்கள் தப்புத்தாளங்களாகவே இருக்கும். "என்னடா இது, மிளகாய் வத்தல் டின் தட்டற மாதிரி வாசிக்கிறியே" என்று அம்மா கேலி செய்வாள்.


ஓராண்டு அவரிடம் ஆரம்பப்பாடங்கள் கற்ற பிறகு, அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டேன், வேறொரு குருவிடம். வீட்டிற்கே வந்து பாடம் சொல்லிக் கொடுப்பார். வருவேன் என்று சொன்ன நாளன்று வரமாட்டார். எதிர்பாராமல் ஒரு நாள் வந்து நிற்பார். அதுவும் விளையாடச் சென்ற நேரமாக. என்னைவிட அவர் தான் நிறைய வாசிப்பார். நானும் வாத்தியார் வரும் நாளில் தான் மிருதங்கத்தையே தொடுவேன். அம்மா அடிக்கடி திட்டுவாள், "எழுநூறு ரூபாய் கொடுத்து வாங்கி ஒரு நாளாவது அதை தொடறியா" என்று வைவாள்.
" எங்கே எனக்கு பேட் பிடிக்கவே நேரத்தைக் காணும், இதிலெங்கே மிருதங்கம் வாசிக்க?". இதைச் சொன்னால் வகுந்துவிடுவாளென்று, "எங்க? எப்போ ப்ராக்டீஸ் செஞ்சாலும் மிளகாய் வத்தல் டின் தட்டற மாதிரி இருக்குன்னு சொன்னா, எப்படி வாசிக்க முடியும்" என்று என்னை டிஃபெண்ட் செய்துகொள்வேன்.

ஆனால், நான் வசிப்பதை என் தாத்தா வெகுவாகவே ரசிப்பார். நான் எது செய்தாலும், என்னை ஒன்றும் சொல்ல மாட்டார். கோடை விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்குச் சென்றாலும், மிருதங்க வாத்தியாரை, தன் ஊருக்கே வரவழைத்து எனக்கு கிளாஸ் எடுக்க வைப்பார். என் பக்கத்திலேயே அமர்ந்து கொள்வார். என்ன தான் மிளகாய் வத்தல் டின் மாதிரி தட்டினாலும், அவருக்கு நான் வாசிப்பதென்னவோ தேவ நாதமாக இருக்கும்.

என்னையும் ஒரு நாள் மேடையேற்றி விட்டார் (துணிச்சல் மிகுந்த!) என் குரு. பாடுவது என் தங்கையின் நடன குரு. நடனத்தில் மட்டுமின்றி பாட்டும் வெகு சிறப்பாகவே பாடுவார். என் தங்கையின் நடனம் நன்றாக இருக்கிறதென்றால் அதில் 50% பங்கு இவர் பாடுவதால்.

பயிற்சிகள் பல செய்து மேடையேறினேன் ஒரு மாலை வேளையில். தனது பேரன் மேடையேறி மிருதங்கம் வாசிக்கிறான் என்று புளகாங்கிதம் அடைந்தார் என் தாத்தா. எனது கச்சேரியைப் பார்க்க தாத்தா பாட்டி, அம்மா, அப்பா, அத்தை எல்லோரும் வந்திருந்தனர். வீடியோ(!!) வேறு எடுக்க ஏற்பாடு செய்திருந்தார்.

கச்சேரியும் இனிதே ஆரம்பமானது. எனக்கென்னவோ சிறு வயதிலிருந்தே எதிலுமே ஒரு அவசரம். நிதானம் என்பது என் அகராதியில் கிடையாது. என் வாத்தியார் கூட அடிக்கடி சொல்வார், "விஜய், நன்னா வசிக்கற. ஆனா, தாளத்துக்கு முன்னாலே ஓடற. இப்படி ஓடாதே" என்பார். தாளத்திக்கேற்ப வாசிக்க பயிற்சிகள் பல செய்திருந்த போதிலும், பிறவிக்குணம் போகுமா?? "தாளம் வரும் பின்னே, எனது வாசிப்பு போகும் முன்னே", என்று வீரு கொண்டு நடை போட்டேன். அதே மேடையில் கடத்துடன், என் வாத்தியாரும் அமர்ந்திருந்தார். அவ்வப்போது கண்ணால் என்னைப் பார்த்து "ஓடாதே ஓடாதே" என்று சொல்லிக் கொண்டே இருந்தார். என் கைகள் என்னவோ கட்டுக்கடங்காத காளையைப்போல் தறி கெட்டு ஓடின.

ஒவ்வொரு பாட்டு முடிந்த பிறகும் அம்மா என்னைப்பார்த்து முறைப்பாள். நான் அவள் பக்கம் திரும்பவே மாட்டேன். கடைசி பாட்டில் தனியாவர்தனம்!! இங்கு தான் கச்சேரியின் உச்ச கட்டம். என்னைத் தவிர பக்க வாத்தியங்களாக, கடம், கஞ்சிரா, மோர்சிங் வாசிப்பவர்கள் இருந்தனர். இவர்கள் எல்லோரும் தேர்ந்த வல்லுனர்கள். ஆனால் மிருதங்கம் தான் பிரதான வாத்தியம் என்பதால், என்னைப் பின்பற்றித்தான் பிறர் வாசிக்க வேண்டும்.

தனியாவர்தனத்தை முடிக்கும் போது, எல்லோரும் சேர்ந்து, மிருதங்கத்தில் என்ன நடை வாசிக்கிறார்களோ, அதையே அவரவர் வாத்தியத்தில் வாசிப்பது வழக்கம். ஆனால் யாருக்கும் என் வேகத்துக்கு ஈடு கொடுத்து வாசிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் பாடுபவர், தாளம் போடுவதையே நிறுத்தி விட்டார். ஏதோ நான் முன்னாடி ஓடுவதும், மற்ற வாத்தியக்காரர்கள், என்னைப்பிடிக்க முயற்சி செய்வது போலும் இருந்தது. கச்சேரி முடிந்த பிறகு, என் அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் என் தாத்தா, "ரொம்ப நன்னா வாசிச்ச கோந்தே" என்றார்.

இதுவே நான் என் வாழ்க்கையில் வாசித்த முதலும் கடைசியுமான கச்சேரி. அதன் பின் எனக்குள் இருந்த கலைஞன் உறங்கி விட்டான். ஒவ்வொரு விஜய தசமி அன்றும் அவனை எழுப்பி, மிருதங்கத்தில் இரண்டு நடை வாசித்து விட்டு மூட்டை கட்டி வைத்து விடுவேன். "நீ இப்பவும் மிளகாய் வத்தல் டின் மாதிரி தான் தட்டற" என்கிறாள் என் அம்மா.

எனக்குள் உறங்கும் கலைஞனை எழுப்பி, அவனை மீண்டும் தயார் செய்ய வேண்டும். ஒரு தடவையாவது, "பரவாக இல்லை. இப்போ கொஞ்சம் தேறி விட்டாய்" என்று அம்மா சொல்லணும்.
பெங்களுரில், நல்ல மிருதங்க வாத்தியார் இருக்கிறாரா??