ரஜினி படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு பரபரப்பு எல்லாம் இருந்த காலம் மலையேறிப்போய்விட்டதா என்று எண்ணும் அளவிற்கு அமைதியாக வெளிவந்து அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறாள் சந்திரமுகி. மன்னன் திரைப்படத்திற்குப் பிறகு, படத்தில் வரும் தன் பெயரையே, படத்தின் பெயராக வைக்காமல் செய்திருக்கிறார் ரஜினி. என்ன தான் வலுவான கதை இருந்தாலும் ஒரு திரைப்படத்தை நகர்த்திச் செல்வது திரைக்கதை மட்டுமே. ஆனால் முதல் பாதியில் திரைக்கதையில் நன்றாகவே கோட்டை விட்டிருக்கிறார் பி.வாசு. முதல் பாதியில் கதை நகரவே மறுக்கிறது.
கதைப்படி எல்லோருமே பணக்காரர்கள் தான். அதற்காக சாதாரணமாக இருக்கும் போது கூட பட்டுச் சேலை தான் உடுத்த வேண்டுமா?? வடிவேலு மனைவியை வைத்து ரஜினி அடிப்பது காமெடி அல்ல, காமநெடி. வடிவேலு செய்யும் நகைச்சுவை, பார்த்துப் பார்த்து புளித்துப் போன அதே நடிப்பு. இதை நகைச்சுவை என்று ஒத்துக்கொள்ளக் கூட முடியவில்லை. ப்ச் கொட்டச் செய்கிறது.
ரஜினியிடம் ஒரு வேண்டுகோள். தயவு செய்து, உங்கள் படங்களுக்கு தேவாவை மட்டுமே இசையமைக்கச் செய்யுங்கள். நீங்கள் நடந்து வரும் போது அந்த "ஹே ஹே" சத்தம் இல்லாதது ஒரு பெரிய குறையாகவே தோன்றுகிறது. வெகு நாட்களுக்குப் பிறகு பன்ச் டயலாக் இல்லாமல் ரஜினி படம் வந்திருக்கிறது. ஒரு பெரிய ஆறுதல். தளபதிக்கு பிறகு அறிவுரை இல்லாத படம். இயக்குனரின் தைரியத்திற்குப் பாராட்டுக்கள்.
ரஜினியின் குறல் ஒரு மாதிரியாக இருக்கிறது. பிளாஸ்டிக் ஸர்ஜரி செய்து கொண்டதன் விளைவோ??
ஜோதிகா பற்றி எழுதவில்லையென்றால், தமிழ் கூறும் நல்லுலகம் என்னை எப்பிறவியிலும் மன்னிக்காது. Stupendous Performance Jyothika. You outclassed every one. அதென்ன ஜோதிகாவுக்கு மட்டும் ஆங்கில பாராட்டு என்று எண்ணுபவர்களுக்கு என் விளக்கம், "ஜோதிகாவால் தமிழ் படிக்க முடியாதே. அதனால் தான் அங்கிலத்தில் எழுதினேன்". முதல் பாதியில் கூட்டத்தோடு கூட்டமாக இருந்தாலும், பின் பாதியில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதிலும் சந்திரமுகியாக மாறும் காட்சியில் மிரட்டுகிறார்.
ரஜினிக்கு ஜோடி இல்லாமல் டூயட் இல்லாமல் படம் எடுக்க முடியுமா?? அதற்காக நயந்தாரா வந்து போகிறார். அய்யாவை விட இதில் கொஞ்சம் உப்பியிருக்கிறார்.
இளைய திலகம் இளைக்கவே மாட்டாரோ?? பிரபு ஸார், கொஞ்சம் உங்க உடம்பை இளைக்க வைக்க ஏதாவது பண்ணக் கூடாதா? பார்க்கவே சகிக்கலை. எல்லோரும் மூக்காலேயே பேசுவது போல் ஒரு ஆடியோ எஃபெக்ட். எக்கச்செக்க கதா பாத்திரங்கள். மாளவிகா, நாசர், செம்மீன் ஷீலா etc. எதற்காக இவ்வளவு பேர் என்று தெரியவில்லை. ஆஹா ஓஹோ என்று மற்ற விமர்சனங்கள் கூறுவது போல் அப்படி ஒன்றும் இல்லை. I wouldn't say it is an 100% entertainer. Nevertheless, it aint boring.
சரி, தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைக்கிறீர்களா? படத்தில் எழுத்து போடும் போது, SUPER STAR என்று கிரஃபிக்ஸில் போடாமல் "இவர்களுடன் ரஜினி" என்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கு.
டெயில் பீஸ்:
எப்படியெல்லாம் ரஜினியை கடவுளுக்கு நிகராக சித்தரித்து படம் எடுத்தார்கள். ஆனால் இப்போது என்ன ஆயிற்று?? தமிழ் நாட்டையே ஆட்டி வைத்திருந்த ஒரு மாமனிதருக்கே இந்த நிலைமையென்றால், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களெல்லாம் எம்மாத்திரம். இனியாவது தலையும் மலையும், தனது படங்களில் பன்ச் டயலாக் அடிக்காமல், தன்னை ஒரு super Man'ஆக சித்தரித்துக் கொள்ளாமலிருந்தால் நல்லது.
ரஜினியின் இந்த நிலையை பார்க்கும் போது, விவேக்கின் ஒரு டயலாக் தான் நினைவிற்கு வருகிறது. இனியும் நான் இந்த கட்டுரையை தொடர்ந்தேனானால், சிலர் என்னை ஆள் வைத்து அடிக்க கூடும். அதனால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
Mr. Rajini, I think its time for you to pad up for the second innings. You may have to change your playing style. Remember your are made to follow on.
April 29, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment