Pages

June 30, 2010

ஆதலினால் தாய் மொழியும் பயிற்றுவீர்

சென்ற வாரம் உணவருந்த வெளியே சென்றிருந்த போது, நான் அமர்ந்திருந்த மேசைக்கருகில் ஒரு சிறிய குடும்பம். கணவன் மனைவி, 10 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க அவர்களது பெண். மிக அருகில் உட்கார்ந்திருந்ததால் அவர்கள் பேசிக்கொள்வது காதில் நன்றாகவே விழுந்தது. ஒட்டுக் கேட்கவில்லை :)

அவர்கள் தமிழர்கள் தான் என்பது அந்தக் கணவன் மனைவி பேசுவதிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. தன் மனைவியோடு பேசும் போது தமிழிலே பேசும் அவர், தன் மகளோடு பேசும் போது ஆங்கிலத்துக்கு மாறி விடுகிறார். மனைவியும் அப்படியே. ஏதேது மகளிடம் தமிழில் பேசினால் கௌரவக்குறைச்சல் என்று நினைத்தாரா, அல்லது தன் மகள் தப்பித் தவறிக் கூட தமிழ் பேசிவிட வேண்டாம் என்று நினைத்தாரா? “சார் போதும். ரொம்ப பீட்டர் விடாதீங்க” என்று சொல்லணும் போலிருந்தது. அவர்கள் மகளும் தப்பித் தவறிக் கூட தமிழில் ஒரு வார்த்தை பேசவில்லை. அம்மா அப்பா தவிற வேறெதுவும் அதன் வாயிலிருந்து தமிழ் வார்த்தைகள் வேறெதுவும் வரவில்லை.

அவர்களது நிலைமை என்னவோ, நானறியேன். சமீபத்தில் தான் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்திருக்கலாம். திடீரென்று தமிழில் பேசுவது அக்குழந்தைக்கு கஷ்டமாக இருந்திருக்கலாம்.

ஆனால் இந்தக் குடும்பம் ஒரு பானை சோத்துக்கு ஒரு பதம் தான். பல குடும்பங்களில் இன்று குழந்தைகளிடம் தமிழில் (அல்லது தாய் மொழியில் பேசுவதில்லை). தமிழ்க்குடும்பங்களில் தான் இது அதிகம் என்று நினைக்கிறேன்.
பெங்களூரில் பல வட இந்திய நண்பர்கள் அவர்கள் குழந்தைகளிடம் ஹிந்தியிலோ அல்லது அவர்கள் தாய்மொழியிலோ பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.

நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் தமிழ் அழியாதிருக்க, “முடிந்த வரை தமிழிலேயே பேசுங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பல இல்லங்களில் இன்று குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் உரையாடுகின்றனர். ஏதோ, நம்ம தளத்தை நாலு படிக்கிறார்களே(!!!!?????) என்ற ஆர்வத்தில் (அறிவுரை சொல்ல அருகதை இல்லாவிட்டாலும் ஆதங்கத்தைச் சொல்லலாமே என்ற எண்ணத்தில் தான்), சில வருடங்களுக்கு முன் ஏற்கனவே எழுதிய பதிவை இங்கு மீண்டும் பதிவிடுகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தாய்க்கு நிகராக தாய் நாட்டையும் தாய்மொழியையும் குறிப்பிடுகின்றோம். வேறெதற்கும் தாய் என்ற அடைமொழி கிடையாது. தாய் நாட்டைப் பிரிந்திருக்கையிலே, நம் நாட்டவனைக் கண்டால் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு முறை நான் அயல் நாட்டிற்கு சென்ற போது, தனிமை என்னை வெகுவாக வாட்டியது. என் நாட்டவன் யாரையாவது காண மாட்டேனா என்ற ஏக்கம் என்னுள்ளே எழுந்தது. ஆனால் என் தாய்மொழி பேசும் அண்டை நாட்டவனைக் கண்ட போது, எனது மகிழ்ச்சி அளவிடமுடியா உயரத்தை எட்டியது. என் தாய் மொழி பேசும் ஒருவனை சந்தித்ததில் தாயையே சந்தித்த மகிழ்ச்சி.

ஆனால், இன்று வெகுவான பெற்றோர்கள், தமது குழந்தைகளுக்கு தாய்மொழியை போதிக்க மறந்துவிட்டனர். தாய் மொழியிலே பேசினால் கூட அது ஒரு கௌரவக் குறைச்சல் என்று எண்ணுகிறார்கள். A for Apple , B for Ball என்று கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் அம்மா, ஆடு, இலை, என்று சொல்லிக்கொடுப்பதில்லை. ஒரு குழந்தையிடம் யானையின் படத்தைக்காட்டி, இது என்ன என்று கேட்டால், elephant என்று பதில் வருகிறதே தவிர, யானை என்று சொல்லத் தெரியவில்லை. One two three four என்று நூறு வரை சொல்லும் குழந்தைக்கு ஒன்று இரண்டு மூன்று என்று சொல்லத் தெரியவில்லை. என் பிள்ளை mummy daddy என்று தான் கூப்பிடுவான் என்று சில பெற்றோர்கள் பெருமை பட்டுக்கொள்கிறார்கள். பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சங்களிலே தாய்மொழி ஏதோ தவறான மொழி என்ற ஒரு மாயை ஏற்படுத்திவ்விட்டார்கள். நான் சில அரசியல் வாதிகளைப்போல, தாய் மொழியிலே தான் கல்வி கற்க வேண்டும் என்று சொல்ல வில்லை. சத்தியமாக இல்லை. போட்டி மிகுந்த இன்றைய உலகத்தில் எதிர் நீச்சல் போட வேண்டும் என்றால், ஆங்கிலத்திலே பயில்வது அவசியமாகிவிட்டது. இது ஒரு மறுக்க முடியா உண்மை. தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது என் வாதம் அல்ல. தாய்மொழியைப் புறக்கணிக்காமல் கல்வி கற்ப்பிப்போம் என்பதே என் வேண்டுகோள்.

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு Ba Ba Black Sheep சொல்லிக்கொடுக்கும் போது, அம்மா இங்கே வா வா என்ற பாட்டும் சொல்லிக்கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு Tinkle comics வாங்கும் போது, அம்புலிமாமாவும் சிறுவர்மலரும் வாங்கிக்கொடுங்கள். நெபோலியனையும், கார்ல் மார்க்ஸையும் பற்றிச் சொல்லிக்கொடுக்கும் போது, நம் சேர சோழ பாண்டியர் பற்றியும் சொல்லிக்கொடுங்கள். Harry Potter புத்தகங்கள் வாங்கும் போது, ஒரு பொன்னியின் செல்வனையும் வாங்குங்கள். குறைந்த பட்சம், பத்து குறளாவது கற்றுக்கொடுங்கள். At least திருவள்ளுவர் யார் என்று கேட்க வைக்காதீர்கள். ஔவ்வையாரும், பாரதியாரும், கம்பரும் எழுதாததை, மில்டனும், டென்னிசனும் வேர்ட்ஸ்வொர்தும் எழுதிவிடவில்லை. முடிந்தவரை வீட்டிலே, தாய் மொழியில் உறையாடுங்கள். சச்சின் டெண்டுல்கரே, வீட்டில் மராட்டியில் பேசுகிறார். தம் குழந்தைகள் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்.

பிற மொழி கற்பது பாபமல்ல. தாய்மொழியைப் புறக்கணிப்பது புண்ணியமுமல்ல.

பெற்றோர்களே, ஆதலினால் உங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழியும் பயிற்றுவீர்!!!!!!!

June 26, 2010

கொடிது கொடிது மானிடராய் இந்நாட்டில் பிறத்தல் கொடிது

ஔவையார் இருந்திருந்தால் இப்படித் தான் கொடியது எது என்ற கேள்விக்குப் பதிலளித்திருப்பார். இப்படித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற வெவஸ்தையே இல்லாமல் மாநில அரசும் மத்திய அரசும் நடந்து கொள்கின்றன. இவர்கள் நடத்துவது ஆட்சி அல்ல அராஜகம். 1984’ல் நடந்த போபால் விஷவாயுக் கசிவில் 15000 பேர் உயிரிழந்தார்கள். உலகிலேயே தொழிற்சாலை விபத்துக்களிலேயே பெரிய அளவில் மக்கள் உயிரை வாங்கியது இது தான் என்ற அவப்பெயரை வாங்கியிருக்கி்றது. 26 ஆண்டுகளுக்கு மு்ன்னர் நடந்த இவ்விபத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும், எவ்வளவு நச்டஷ் ஈடு வழங்கவேண்டும் என்று இப்போது தான் துப்பு துலக்குகிறார்கள். அன்றே யூனியன் கார்பைடு முதலாளியை பத்திரமாக அரசு மரியாதையுடன் விமானமேற்றிவிட்டு விட்டு, இப்போது அதை யார் செய்தது என்று சண்டை. ஒரு பெரிய நிறுவனத்தின் அதிபரை அரசு செலவில் வழியனுப்பு வைக்கிறார்கள், ஆனால் அது பிரதம மந்திரிக்குக் கூட தெரியாதாம். இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கிறது, அந்த நிறுவனத்தின் முதலாளி முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு நஷ்ட ஈடு தராமல் சொந்த நாட்டுக்குத் திரும்பி செல்கிறார், ஆனால் இது எதுவுமே அன்றைய பிரதம மந்திரி ராஜீவுக்குத் தெரியாதாம். சரி நடந்தது நடந்து விட்டது. தப்பிச் சென்ற வாரன் ஆண்டர்சன் இனி வரப்போவதில்லை. ஆனால் இன்னார் தான் குற்றவாளி, நஷ்ட ஈடாக இவ்வளவு தர வேண்டும் என்று ஒரு நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு 26 ஆண்டுகளா?? Justice delayed in Justice Denied. அன்றே வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்க விட்டுவிட்டு இப்போது அவருக்கு 94 வயசான பிறகு அவரை திரும்ப இந்திய நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவார்களாம். அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறாராம், வெளியுறவுத்துறை அமைச்சர். நம் நாட்டின் கையாலாகாத்தனத்தை நினைத்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள், அமெரிக்கர்கள்.
சரி மத்திய அரசுதான் சரியில்லை என்றால், மாநில அரசு செய்யும் படாடோபங்களுக்கு ஒரு அளவே இல்லை. ஒரு மனிதனால் எப்படித்தான் இவ்வளவு புகழ்ச்சியை வாங்கிக் கொள்ள முடியும், தெரியவில்லை. தன்னை விட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு வேறு கதியில்லை என்று 90களில் எப்படி ஜெயலலிதா நடந்துகொண்டாரோ, அப்படியிருக்கிறது, கருணாநிதியின் இப்போதைய நடத்தை. சென்னையில் ஒரு தெரு, சுவர் விடாமல் அனைத்திலும் ஏதாவதொரு அரசியல்வாதியாவது சி்ரித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலையோரங்களில் விளம்பரப்பலகைகள் வைத்தால் வாகனவோட்டுவோரின் கவனத்தைக் குலைத்து விபத்துகள் பல ஏற்படுகின்றன என்பதால் பல விளம்பரப் பலகைகளை நீக்க நீதிமன்றம் ஆணையிட்டது. அரசியல் விளம்பரங்களுக்கு இந்தத் தீர்ப்பு செல்லாது போலும்.
பொழுது போகவில்லையென்றால் கருணாநிதிக்கு ஏதாவது விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். அவர் புகழ் பாட ஒரு புலவர் படையையே அரசு செலவில் வைத்திருப்பார் போலும். எல்லாத்திலும் ஜெகத்ரக்ஷகன் வாலி வைரமுத்து போன்ற அடிபொடிகள் ஆஜர்.
800 கோடி செலி்ல் புதிய சட்டசபை. ஏதேது, பழைய சட்டசபயில் வாஸ்த்து சரியில்லை என்று புதிய கட்டிடம் கட்டினார்களா? அல்லது 300 வருட பழைய கட்டிட இருக்கையில் கருணாநிதியின் பிருஷ்டபாகம் அமர மறுக்கின்றதா? இந்தச் செலவில் பல கிராமங்களில் சாலைகள் அமைத்துக் கொடுத்திருக்கலாம், எத்தனையோ அரசு பள்ளிகள் கட்டியி்ருக்கலாம், மருத்துவமனை கட்டியிருக்கலாம். ஆனால் இது பற்றியெல்லாம் கேள்வி கேட்க ஒரு நாதி கூட நாட்டில் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
ஆங்கிலேயருக்கு எதிராகத் தைரியமாகக் குரல் கொடுத்த ஹிந்து போன்ற பத்திரிகைகள் கூட கண்டுகொள்ள மறுக்கின்றன. “பெரிசு” கடைசி காலத்தில் ஏதோ சௌகர்யம் செய்து கொள்கிறார், போனால் போகட்டும் என்று விட்டுவிட்டார்களோ, தெரியவில்லை. அட அரசுக்கெதிராக ஆசிரியருக்கு வரும் கடிதங்கள் கூட பிரசுரிக்கப் படுவதில்லை.
இவ்வளவு கொட்டம் அடித்தது போதாது என்று இப்போது மீண்டும் பல கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாடாம். தமிழை வாழ வைக்க வேண்டுமென்றால் தமிழ் மக்கள் சௌகர்யமாக வாழ் வேண்டும். தமிழ் தான் இந்திய மொழிகளுக்கனைத்தும் தாய். 5000 வருடம் பழமையானது. சும்மா பழங்காலப் பெருமை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதில் இவர்களைப் போல் யாருமே இருக்க முடியாது.
இந்த மாநாட்டில் பேசப் படும் விஷயங்களைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. கவிஞர் (??) கனிமொழியின் கவிதைத் தொகுப்பை ஒரு ஆர்வக்கோளாறர் ஆய்வு செய்திருக்கிறாராம். இலக்கியம் என்ற பெயரில் கருணாநிதி அண்ணா பெரியார் எழுதிய குப்பைகளையெல்லாம் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கிறார்களாம். இன்று சானல் மாற்றிக் கொண்டிருக்கும் போது சன் நியூஸில் மாநாட்டு நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பில் வாலி கருணாநிதியைப் பாராட்டி ஏதோ உளறிக் கொட்டிக்கொண்டிருக்கிருந்தார். போறபோக்கைப் பார்த்தால் இந்தியாவிலிருந்து கருணாநிதியின் குப்பைகளை நோபல் பரி்சுக்குகூட பரிந்துரை செய்வார்கள் போலிருக்கு.

இம்மாநாட்டிற்காக கோவையே விழாக்கோலமாய் இருக்கிறது என்று கொலைஞர் டிவியும் சன் டிவியிலும் சொல்கிறார்கள். ஆனால் உண்மையென்னவோ, கடந்த 3 மாதங்களில் காணாத மதுபான விற்பனை கடந்த மூன்று நாட்களில் நடந்திருக்கிறது.
இந்த மாநாட்டினால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இருக்கப் போவதில்லை. டாஸ்மாக் விற்பனையால் அரசுக்கு சில கோடிகள் கிடைக்கலாம். செம்மொழி ஆராய்ச்சி என்ற பெயரில் சில கோடிகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திலிருந்து வாங்க முடியும். அதுவும் சில கழகக் கண்மணிகளின் பாக்கெட்டுக்குத்தான் போகப் போகின்றன. கருணாநிதியை வாழ்த்தி ஆய்வறிக்கைகள் சமர்ர்ப்பிப்பவர்களுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கலாம்.
அப்படியே தமிழின் தொன்மையைக் கொண்டாட வேண்டுமென்றால சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டத்தில் கொண்டாட வேண்டியது தானே. இந்தக் கட்டிடத்தை மறந்தே போன மக்களுக்கு இந்த மாநாடு வள்ளுவர் கோட்டத்துக்கு ஒரு விளம்பரமாகவாவது அமையும். அவிநாசி ரோட்டில் 100க்கும் மேற்பட்ட மரங்களை மாநாடு ஊர்வலம் நடத்துவதற்காக கொஞ்சம் கூட மூளையே இல்லாமல் வெட்டித் தள்ளியி்ருக்கிறார்கள்.
மாநாட்டில் பேசப்போகும் விஷயங்களைப் பாத்தால் தலையில் தான் அடித்துக் கொள்ள வேண்டும். ஔவையார் ஒரு பௌத்தத் துறவியா என்ற பெயரில் ஒருவர் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப் போகிறாராம். யாரப்பா அந்த அறிவுக்களஞ்சியம். தனது ஹிந்து தர்மக் காழ்ப்புணற்சியைக் காட்டிக் கொள்ள இப்படியெல்லாமா பேச வேண்டும்? விநாயகர் அகவல் எழுதிய ஔவையார் பாவம் நொந்து போயிருப்பார்.
தமிழ் இலக்கியத்திற்கே பெருமை சேர்ப்பது ஆழ்வார்களும் நாயன்மார்களும் எழுதிய பதிகங்களும் சைவத் திருமறைகள் தான். அவைகளுக்கெல்லாம் ஒரு நாளாவது ஒதுக்கி்யிருக்கிறார்களா? சித்தர்கள் எழுதியுள்ள பதிகங்களை ஆய்வு செய்தால் இன்றைய ஆங்கிலேய மருந்துக்களை தூக்கிப் போட்டு்விடும் தன்மையுடையவை. அவை பற்றி ஒரு நாயாவது பேசப் போகிறதா? இல்லை. கருணாநிதியும் திராவிட இயக்கமும் தமிழ் தமிழ் என்று அடித்துக் கொண்டதைப் பற்றித்தான் எல்லோரும் உளரப் போகிறார்கள்.
அப்படியே தமிழ் மீது தீராப் பற்றிருந்தால் கட்சி நிதியிலிருந்தோ அல்லது சொந்த நிதியிலிருந்து பணம் எடுத்து செலவழிக்க வேண்டியது தானே? நாம் கொடுக்கும் வரிப்பணத்தை இப்படி விரயம் செய்வது எப்படி நியாயமாகும்? கேள்விகேட்பாரில்லை. மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டிய சிலரை திருச்சியில் கைது செய்திருக்கிறார்கள். எவ்வளவு அராஜகம். ஜனநாயகத்தில் இதற்குக் கூடவா உரிமையில்லை.
மாநாட்டிற்காக சென்னையில் ஓடும் பல குளிர்சாதனை பேர்ருந்துக்களை கோவைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். சில நாட்களாக ஒரு ஏசி பேரூந்தைக் கூடக் காணமுடியவில்லை.

ஆனால் இந்த மாநாட்டிற்காக நான் பல நாட்களாகக் காத்துக் கிடந்ததென்னவோ உண்மை. “இந்த மாநாட்டோடு நான் அரசுப் பணியிலிருந்து விடைபெறப் போகிறேன். கட்சிக்கும் தமிழுக்கும் என் மீதி ஆயுளை அற்பணிக்கப் போகிறேன்” என்று சில மாதங்களுக்கு முன்னர் கருணாநிதி அறிக்கை விடுத்தார். நி்ஜமாக செய்து காட்டப் போகிறாரா, அல்லது இதுவும் “சும்மா லுலுயாயிக்குத்தான் சொன்னேன்” என்று மழுப்பப் போகிறாரா, அடித்த சில நாட்களில் நடக்கப்போகும் அரசியல் மாற்றங்களைப் பார்க்க ஆவலாயுள்ளது.

ஒன்று மட்டும் உண்மையாகிறது. “பேய்கள் ஆட்சி செய்தால், சாத்திரங்கள் பிணம் தின்னும்” என்று பாரதி (பாரதி தானே??) சொன்னது மெய்யாகிக் கொண்டிருக்கிறது. மகான்களின் வாக்கு பொய்க்காது என்று சும்மாவா சொன்னார்கள்?

June 12, 2010

ஃபுட்பால்

என்னதான் கிரிக்கெட் பிடித்த விளையாட்டாக இருந்தாலும், பள்ளியில் அதிகமாக விளையாடியது கால்பந்தாட்டம் தான். வாரம் இரு முறை பி.டி. வகுப்பு இருக்கும். ஐம்பது நிமிடத்தில் ஒரு அணி கூட பேட்டிங் செய்ய முடியாது. தொடர்ச்சியாக வைட் பாலாகப் போட்டுப் போட்டு 5 ஓவர்கள் போட்டு முடிப்பதற்குள் அந்த வகுப்பு முடிந்து விடும். அதனால் எல்லோரும் ஒரு மனதாக ஃபுட்பால் விளையாடலாம் என்று முடிவெடுத்து விடுவோம்.

ஒரு அணியில் பதினோறு பேர் தான் இருக்க வேண்டியது ஆட்ட விதி. ஆனால் எவனையும் விட்டு விட்டு விளையாட்டை ஆரம்பிக்க முடியாது. பாதி ஆட்டத்தில் சப்ஸ்டிட்யூட்டாகப் போடுகிறேன் என்றாலும் யாரும் கேட்க மாட்டார்கள். சில சமயம் ஒரு அணியில் 20 பேரெல்லாம் வைத்து விளையாடியிருக்கோம்.

என்னதான் வியூகம் வகுத்து விளையாட நினைத்தாலும், எவனும் சொன்ன இடத்தில் நிற்க மாட்டான். அனைவரும் ஒரே பந்தைத் துரத்துவோம். தன் காலில் பந்து மிதிபட வேண்டும். எதிர் அணியின் திசையை நோக்கி எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ, அவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டும். "டேய் பாஸ் பண்ணு" என்று என்ன கூச்சல் போட்டாலும் யாரும் காதில் வாங்கிக் கொள்வது கிடையாது. அடுத்த முறை பந்து என் காலுக்கு வரும் போது, நானும் அதே தான் செய்வேன். எனக்கு யாரும் பாஸ் கொடுக்கலியே நானும் யாருக்கும் பாஸ் கொடுக்க மாட்டேன். இது தான் எல்லோருடைய லாஜிக். அதெல்லாம் ஒரு காலம்.

எனக்கு ஃபுட்பால் விதிகளை முதன் முதலில் அப்பா தான் கற்றுக் கொடுத்தார். 1986'ஆம் ஆண்டு உலகக் கோப்பை, பிரான்ஸும் பிரேஸிலும் மோதிக்கொண்ட போட்டி தான் முதலில் பார்த்த ஆட்டம். பிரான்ஸின் மிஷேல் பிளாடினி தான் நான் தெரிந்து கொண்ட முதல் கால் பந்தாட்ட வீரர். அந்த ஆண்டு மெக்ஸிகோவில் உலகக் கோப்பை நடந்ததால் எல்லா ஆட்டமும் நடு இரவிற்குப் பின் தான் தொடங்கும். அம்மா முணுமுணுத்துக் கொண்டே தூங்கிவிடுவாள். அடுத்த ஆட்டத்தில் மரடோனாவின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து அவரின் பரம விசிறியாகிவிட்டேன். இதற்கும் நான் பார்த்து அவர் அடித்த முதல் கோல் கையால் போட்டது (அதற்கு அவர் ஹேன் ஆஃப் காட் என்று பிற்பாடு விளக்கம் வேறு கொடுத்தார்). அப்பா கூட அவரை தகாத வார்த்தைகள் சொல்லித் திட்டிக்கொண்டிருந்தார். 1994 வரை ஒவ்வொரு உலகக்கோப்பையையும் அப்பாவும் நானும் கண் விழித்துப் பார்ப்போம்.

ஒவ்வொரு உலகக் கோப்பையின் போதும் ஊர் பேர் தெரியாத ஒரு அணி வரும். ஒரு கலக்கு கலக்கி விட்டுப் போகும். 1986'ல் ரோமானியா, 90'ல் கேமரூன். அர்ஜன்டினாவோடு நடந்த முதல் ஆட்டத்தில் எக்கச்செக்க ஃபவுல்கள். 2 ரெட் கார்டும் வாங்கி, அர்ஜன்டினாவைத் தோற்கடித்தது. மரடோனாவின் அணி கொஞ்சம் கிலியடைந்ததென்னவோ உண்மை. 94'ல் பல்கேரியா. உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த ஜெர்மனியையே வீழ்த்தியது. 98'ல் குரொயேஷியா. 2002'ச் செனேகல் மற்றும் தென் கொரியா, 20006'ல் ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலீ. யாருமே எதிர்பார்க்கவில்லை, இத்தாலி கோப்பையை வெல்லும் என்று. இந்த வருடமும் ஒரு கறுப்பு ஆடு அணி இருக்கிறது. அது தான் தென் ஆப்பிரிக்கா. முதல் ஆட்டத்திலேயே வலுவான மெக்ஸிகோவோடு சரிசமமாக மோதி டிரா செய்திருக்கிறார்கள். பார்ப்பொம் இவர்கள் எவ்வளவு தூரம் பயணிக்கிறார்கள் என்று?

ஏனோ மற்ற விளையாட்டுகளைப் போலல்லாமல், நாட்டுக்காக நிறைய விளையாடுவதை விட, கிளப்புக்காகத்தான் நிறைய ஆட்டங்கள் நடைபெறுகிறன. அதனாலேயே எந்த நாடு உலகக் கோப்பையை வெல்லும் என்று கணிப்பது சற்று கடினமான விஷயமாகத்தான் இருக்கிறது. இந்த வருடம் இங்கிலாந்திற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக ஆரூடம் சொல்கிறார்கள். எனக்கென்னவோ, மரடோனா போன பிறகு, ஜெர்மனி தான் பிடித்த அணி. அவர்களது விளையாட்டு முறையே வித்தியாசமாக இருக்கும். முதலில் பதுங்கி, பின் பாய்ந்து ஆடுவதில் வல்லவர்கள். அவர்களது டிஃபன்ஸ் பிரமாதமாக இருக்கும். ஆனால் கொடுமை, இந்த வருடம், மைக்கேல் பாலக் விளையாட முடியவில்லை. என்ன கொடுமை சார் இது?

ஒவ்வொரு ஃபுட்பால் உலகக்கோப்பை ஆட்டங்கள் நடைபெறும் போதும், "இப்படி கண் முழிக்கறியே"ன்னு அம்மா திட்டுவாள். இந்த வருடம், அந்த பொறுப்பை காயத்ரி எடுத்துக் கொண்டிருக்கிறாள்.

உலக வரை படத்தில் கண்டு பிடிக்கவே முடியாத, துக்கடா நாடான ஐவரி கோஸ்டெல்லாம் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று விட்டன. இந்தியா என்று தகுதி பெறுமோ?

June 05, 2010

சிங்கம்

சில வருடங்களுக்கு முன், “விஜய், அஜீத், விக்ரம்” இவர்களில் யாருடைய எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு “எனக்கென்னவோ குனிந்து கொண்டே ஒருவர் இவர்கள் எல்லோரையும் முந்தி விடுவார்” என்று மதன் ஆனந்தவிகடனில் பதிலளித்தார். அப்போது பேரழகன் ரிலி்ஸாகியிருந்தது. படத்துக்குப் படம் கெட்-அப் மாற்றம், பாடி லாங்குவேஜ் மாற்றம் என்று வித்தியாசம் காட்டிய சூர்யாவுக்கு யார் கண் பட்டதோ, சன் பிக்சர்ஸ் என்ற சனி திசை பிடித்ததா தெரியவில்லை, சிங்கம் படம் சூர்யாவின் கேரியி்ரில் ஒரு கரும்புள்ளி என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

ஏனோ எல்லாத் தமிழ் ஹீரோக்களுக்கும் காக்கிச்சட்டை தரித்து ஒரு படமேனும் பண்ணிவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களது சினிமா வாழ்க்கை முழுமையடையாது. ஏற்கனவே காக்க காக்க செய்திருந்தாலும், தமிழ் நாட்டின் அதுவும் தென் தமிழ்நாட்டின் மக்களுக்குச் சென்றடையவில்லை என்று யோசித்தார்களா தெரியவில்லை, ஒரு சூ்ப்பர் டூப்பர் மசாலா கொடுத்திருக்கிறார்.

நல்ல தரமான படம் எடுக்கவே மாட்டோம் என்று சன் பிக்சர்ஸ் முடிவெடுத்திருக்கி்றார்களா தெரியவில்லை. குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று சூப்பர் ஃப்ளாப் கொடுத்துக் கொண்டிருக்கும் விஜயின் ரசிகர்கள் / நண்பர்கள், தொடர்ச்சியாக ஹிட் கொடுத்துக் கொண்டி்ருக்கும் சூர்யாவின் மார்க்கெட்டும் சரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களோ என்னவோ. யாமறியோம். சூர்யா, இத்தோடு ஹரி போன்ற இயக்குனர்களின் சகவாசத்தை முடித்துக் கொள்வது அவர் எதிர்காலத்துக்கு நல்லது.

படம் முழுவதையும் சூர்யாதான் தாங்குகிறார். எத்தனை நாட்களுக்குத் தான் ஃபார்முலாப் படங்களையே எடுப்பார்களோ? அனுஷ்கா இப்படியே இன்னும் இரண்டு படம் செய்தால் நமீதா லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள். அம்மணி, கவர்ச்சியா நடிக்கலாம் தப்பில்லை. ஆனால் அது ஆபாசாமாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

விவேக் - I think your days are over buddy. வேறெதுவும் சொல்லத் தெரியவில்லை. எதற்காக இந்த வடிவேல் வேலை உமக்கு? இரட்டை அர்த்த வசனங்களாக உமிழும் உமக்கு பத்மஸ்ரீ பட்டம் வேறு.

என்ன தான் ஹைதர் அலி காலத்துக் கதையாக இருந்தாலும் ஓரிரண்டு திருப்பங்களாவது வைத்திருக்கலாம். போலீஸ் என்றாலே அடிதடியில் தான் இறங்கி ரவுடிகளை அழிக்கவேண்டும் என்றில்லையே. கொஞ்சம் ஸ்ட்ராடஜிஸ்டிக்கா யோசித்து எடுத்திருக்கலாம்.

நல்ல வேளை ஹரி இந்தப் படத்தை விஜய்காந்த் விஷால் போன்றவர்களை வைத்து எடுக்கவில்லை. அப்படியிருந்தால் அரை மணிநேரம் கூட உட்கார்ந்திருக்க மு்டியாது.

மொத்தத்தில் சிங்கம் - உருமல் ஜாஸ்தி!

பி.கு: வேட்டைக்காரன், சுறா, சிங்கம் - இவைகள் தான் சன்பிக்சர்ஸின் சமீபத்திய படங்கள். கலாநிதி மாறன் அடுத்து டிஸ்கவரி சானலை வாங்காமல் இருக்க வேண்டும்.