Pages

February 26, 2009

ஒரு கால் செண்டரின் இரவு நேரத்தில்..

வெகு நாட்கள் கழித்து ஒரே நாளில் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்திருக்கிறேன். எனக்கு ஞாபகமிருந்து, டான் பிரௌணின் டிஜிடல் ஃபோர்ட்ரெஸ்ஸும், பொன்னியின் செல்வனின் கடைசி பாகத்தையும் தான் ஒரே நாளில் படித்து முடித்தது. அதெல்லாம் பேச்சுலர் தினங்கள். ரொம்ப நாளாக சேதன் பகத்தின் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றிருந்த ஆர்வம் இந்த வாரம் தான் நிறைவேறியது.

ஒரு ரயில் பயணத்தில் ஒரு அழகான பெண்ணைச் சந்திக்கும் போது, தனது முதல் புதினம் பற்றிப் பேச்செழுகிறது. “அப்படியொன்றும் ஆஹா ஓஹோ கதையில்லை”அது என்று அந்தப் பெண் சொல்கிறாள். “தன்னிடம் ஒரு கதை இருப்பதாகவும், அது நிஜமாகவே நடந்ததென்றும், அதை அடுத்த புதினமாக எழுதுவதாக வாக்களித்தால், அந்தக் கதையைச் சொல்கிறேன்”என்கிறாள். முதலில் தயங்கும் சேதன் பகத், ஒரு மாதிரி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “சரி, எழுதுகிறேன், கதையைச் சொல்லுங்கள்” என்கிறார். இப்படித் தான் ஆரம்பிக்கிறது 290 பக்கங்கள் கொண்ட குறுநாவல்.

ஷ்யாம், வினோத் என்ற வ்ரூம், ப்ரியாங்கா, ராதிகா, இஷா மற்றும் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, இவர்கள் ஆறு பேரும் குர்காவுனிலுள்ள ஒரு கால் செண்டரில் இரவு நேர ஷிஃடில் பணி புரிகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ஆங்கிலேயப் பெயர். அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் பேசும் பொழுது இந்த ஆங்கிலப் பெயரைத்தான் உபயோகப்படுத்த வேண்டும்.

எல்லோரும் ஒரே டீம். அமெரிக்க வாடிக்கையாளர்களிடமிருந்து அழைப்புகள் நிறைய வராததால், கால் செண்டர் மூடும் நிலமைக்கு வந்துள்ளது. எல்லோரும் இதற்கு தங்கள் மேனேஜர் பக்க்ஷி தான் காரணம் என்று அவரை எல்லோரும் வெறுக்கிறார்கள். மேலும் ஷ்யாமும் வ்ரூமும் செய்த வேலையை தான் செய்ததாக மேலிடத்தில் (தனது தங்கமணி இல்லை, அமெரிக்க மேலிடம்) சொல்லி நல்ல பெயர் வாங்கப் பார்க்கிறான். எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் வேலையில் விரக்தி, அதிருப்தி.

ஷ்யாம் ப்ரியாங்காவைக் காதலித்து, சம்பாத்தியம் போததால் அவனை ப்ரியாங்காவின் அம்மா ஏற்றுக்கொள்ளாத நிலையில்,ப்ரியாங்காவும் அவனை கைவிட, தான் வாழ்வில் எதற்குமே தான் லாயக்கில்லாதவன் என்ற எண்ணம்.

வ்ரூம்முக்கு நிதமும் அமெரிக்கர்களிடம் பல்லை இளித்துக் கொண்டு, அவர்கள் பேசும் அவதூரான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கப் பிடிக்கவில்லை.

இஷா சண்டிகாரிலிருந்து தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக டில்லிக்குக் குடிபெயர்ந்து, ஒரு விளம்பர மாடலாக விரும்பும் ஒரு பெண். இதுவரையிலும் உருப்படியாக ஒன்றும் அமையாததால், பகுதி நேரமாக கால் செண்டரில் வேலை பார்க்கிறாள். இஷா மீது வ்ரூம் தனது காதலைச் சொன்னாலும் இஷா அதை ஏற்க மறுக்கிறாள்.

ராணுவ அதிகாரியை அவரது மகன் வீட்டை விட்டே துரத்தி விட்டான்.

ராதிகா காதல் கல்யாணம் செய்திருந்தாலும், அவளது மாமியாருக்கு இவர் மேல் பெரிய அபிப்பிராயம் ஒன்றும் கிடையாது இருந்தாலும் காதல் கணவனுக்காக மாமியார் சொல்லும் சொல்லைக் கேட்டுக் கொண்டு வாழ்க்கை ஓட்டுகிறார்.

ஒரே இரவில் எல்லோருக்கும் ஒரு விதமான பிரச்னை வருகிறது. ராணுவ அதிகாரிக்கு, “இனிமேல் எங்களுடன் எந்தத் தொடர்பு வைக்காதீர்கள்”என்று அவர் மகன் எழுதுகிறான்.

இஷா மாடலிங்கில் ஒரு வாய்ப்பு கிடைப்பதற்காக ஒரு ஏஜண்டின் காம விளையாட்டுக்கு ஆளாகிறாள். ராதிகாவின் கணவன் இன்னொரு பெண்ணுடன் நட்பு வைத்திருக்கிறான் என்று தெரிய வந்து துவண்டு போகிறாள். ப்ரியாங்கா ஷ்யாமை வெறுப்பேற்றுவதற்கு அவளது அமெரிக்க மாப்பிள்ளையுடன் ஃபோனில் தேனிலவு பற்றி பேசுகிறாள். என்ன தான் பேசுகிறாள் என்று தெரிந்து கொள்ள அவளது ஃபோனை டேப் செய்து ஒட்டுக் கேட்கிறான் ஷ்யாம். இது ப்ரியாங்காவுக்குத் தெரியவர, அவள் மனமுடைகிறாள். வ்ரூமை ஒரு அமெரிக்க வாடிக்கையாளர் தகாத வார்த்தைகள் கொண்டு திட்டுகிறான். இதனால் மனமுடைந்த வ்ரூம், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஆறுதல் சொல்ல வந்த இஷாவை அவள் இன்னொருவனோடு படுத்தவள் தானே என்று ஏசி விடுகிறான். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களது மேனேஜர், கால் செண்டரின் நிலைமை சரியில்லை. நிறைய பேருக்கு வேலை போகப் போகிறது. எதற்கும் தயாராக இருங்கள் என்று சொல்லிவிட்டு, தான் மட்டும் அமெரிக்காவுக்கு மாற்றலாகிப் போகிறேன் என்று இன்னும் எரிச்சலைக் கிளப்புகிறான். இந்த சம்பவங்களால் ரொம்பவே குழப்பமடைந்த அனைவரும் அருகிலிருக்கும் டிஸ்கோத்தெக்குச் சென்று, புண்பட்ட நெஞ்சை போதை போட்டு ஆற்றுகிறார்கள்.

போதையில் வ்ரூம் காரை ஒரு கட்டிடம் கட்டுவதற்காகத் தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் ஓட்டி விட, எல்லோருமே, சாகப் போகிறோம் என்ற நிலைக்கு வந்து விடுகிறார்கள். யாருக்காவது ஃபோன் செய்து உதவி நாடலாம் என்றால், சிக்னல் இல்லை. அப்போது ஷ்யாமின் ஃபோன் ஒலிக்கிறது. கடவுளிடமிருந்து அழைப்பு. தாங்கள் எல்லோரும் சாகப் போகிறோமென்றும், தாங்களைக் காப்பாற்றக் கோரியும் கேட்கிறார்கள். இவர்களது கோரிக்கைக்கு பதிலளிக்கும் ஆண்டவன், “இந்த மரணத்திலிருந்து நான் உங்களைக் காப்பாற்றுகிறேன், ஆனால் தினமும் செத்துப் பிழைக்கும் மரணத்திலிருந்து எப்படிப் பிழைக்கப் போகிறீர்கள்? உங்கள் பிரச்னைகள் அனைத்துக்கும் உங்களுக்குள்ளே இருக்கும் குரலிடம் கேள்விகேட்டுப் பாருங்கள். அந்த ஒலியிடம் பேசிப் பாருங்கள். அப்போது உங்களுக்கு பிழைக்க வழி கிடைக்கும். எல்லோருக்கும் மூன்று நிமிடம் கொடுக்கிறேன். உங்களுக்குள் இருக்கும் அந்த அந்தராத்மாவிடம் பேசுங்கள். அது சொல்லும் நீங்கள் வாழ்வில் என்னவாக வேண்டுமென்று” என்கிறார்.

“நான் ஒரு சிறு பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்றிருந்தேன். ஆனால் என் அம்மா எனக்கு அமெரிக்க மாப்பிள்ளையைப் பார்த்து அடுத்த மாதமே என்னை அமெரிக்கா அனுப்பப் பார்க்கிறார். நான் எப்படியாவது ஒரு பள்ளி ஆரம்பிக்கவேண்டும் இது தான் எனது ஆசை” என்கிறாள் ப்ரியாங்கா.

“நான் என் கணவனை எவ்வளவோ காதலித்தேன். அந்தக் காதலுக்காக என் மாமியார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டேன். ஆனால் இன்னொருவளோடு தொடர்பு வைத்திருக்கிறான் என்று தெரிந்ததும் என் வாழ்வே முடிந்து விட்டது என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது, அவனுக்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டும்” என்று ராதிகா சொல்கிறாள்.

“ஒரு மாடலாக வேண்டும் என்ற வேகத்தில் தகாத காரியமெல்லாம் செய்து விட்டேன். ஆனால் இனி எனக்கு வாய்க்காத ஒரு வாழ்விற்கு ஏங்காமல் இருக்கும் வேலையில் மும்முரமாக இருப்பேன்” என்கிறாள் இஷா.

“என் மகனுக்குக் கல்யாணமான பிறகு, என் மருமகள் வேலைக்குப் போவது எனக்குப் பிடித்திருக்கவில்லை. இதனால் அவர்களிடம் அடிக்கடி சண்டை போட்டேன். ஆனால் இப்போது தான் புரிகிறது, இது அவர்களுடைய வாழ்க்கை. அதை எப்படி நடத்த வேண்டுமோ, அப்படிக் கொண்டு செல்வது, அவர்களது இஷ்டம். இதில் நான் குறுக்கிட்டது, என் தவறு. என் பிள்ளையோடு நான் திரும்பிப் போய் வாழ வேண்டும்” என்கிறார் ராணுவ அதிகாரி.

“நான் ஒரு இணையதள வடிவமைப்பு நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தேன். ஆனால், இது நாள் இது வரை அது கனவாகவே இருந்து வந்துள்ளது. எனது மற்ற நண்பர்களிடம் நிறைய பணம் இருக்கும் போது, நான் மட்டும் ஏழையாய் இருப்பது பிடிக்கவில்லை. அதனால் தான் வேண்டா வெறுப்பாக இந்த வேலையில் இருக்கிறேன். ஆனால், இந்த வேலையை உதறிவிட்டு, எனது லட்சியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்” என்கிறான் வினோத் என்கிற வ்ரூம்.

கடைசியாக பேச ஆரம்பிக்கும் ஷ்யாம், “இது நாள் வரையில் நான் எதற்கும் பயனற்ற ஒரு மனிதனாகவே இருந்திருக்கிறேன். எனது அம்மா முதல் உறவினர் வரை எல்லோரும் என்னை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. என்னை ப்ரியாங்காவின் அம்மா இப்படிச் சொன்ன போது எனக்கு அவர் மேல் கோபம் வந்தது. ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கையில், அவர் சொன்னதிலும் நியாயம் இருந்திருக்கிறது. வாழ்வில் பெரிதாக எதுவும் சாதிக்காவிட்டாலும், ப்ரியாங்கா மாதிரி ஒரு பெண்ணின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக இருக்க வேண்டும்” என்கிறான்.

இவர்களது கோரிக்கைகளைக் கேட்ட ஆண்டவன், உங்கள் உள்ளுணர்வுகள் சொன்னதைக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் உள்ளுணர்வாக இருந்து உங்களிடம் பேசியது நான் தான். உங்கள் ஒவ்வொருக்குள்ளும் நான் இருக்கிறேன். இப்போது இந்த மரண விளிம்பிலிருந்து தப்பிப்பதற்கும் உங்கள் உள்ளுணர்விடமிருந்தே பதிலைப் பெறுங்கள்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டிக்கிறார்.

இந்த ஆறு பேரும் தங்கள் உள்ளுணர்விடம் பேசி, பிழைத்தார்களா, கால் செண்டர் வேலை என்னவானது, ராதிகா, இஷா, ராணுவ அதிகாரி என்ன ஆனார்கள், பக்க்ஷி என்ன ஆனான், ப்ரியாங்கா ஷ்யாம் காதல் கை கூடியதா, இது மீதி 30 பக்கங்கள்.

கடவுள் பேசுவதெல்லாம் கொஞ்சம் நம்பக் கூடியதாக இல்லாவிட்டாலும், கடைசியில் அதைப் பற்றி சேதன் பகத்தே விளக்கம் கொடுத்திருப்பது சுவாரஸ்யம். ப்ரியாங்கா ஷ்யாம் காதல் ஃப்ளாஷ் பேக் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த கதையையே ஷ்யாமின் கோணத்திலிருந்து சேதன் கூறியிருப்பது இன்னும் சுவாரஸ்யம். இதற்கு முன் இந்தியக் கதாபாத்திரங்கள் கொண்ட ஆங்கிலப் புதினங்கள் அவ்வளவாகப் படித்ததில்லை. சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய் போன்றவர்கள் எழுதிய ஒன்றிரண்டு புதினங்களைக் கஷ்டப்பட்டு 100 பக்கங்கள் படித்தும் ஒன்றும் மண்டையில் ஏறாததால் தூக்கிப் போட்டிருக்கிறேன். ஆர்.கே.நாராயணனின் “சுவாமி அண்டு ஃப்ரண்ட்ஸ் ” படித்தாலும் இந்திய கதாபாத்திரங்களை ஆங்கிலத்தில் படிக்கும் போது மனதில் நிலைக்க வில்லை.

ஆனால் இந்தக் கதையில் வருபவர்கள் எல்லோருமே இருபத்தியோறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இன்றைய இளைஞர்கள் சகஜமாக இவ்வளவு ஆங்கிலம் பேசுவார்கள் என்று உணரும் போது, ஒரு விதமான செயற்கைத் தனம் தெரியல்லை. ஒவ்வொருக்கும் ஒரு விதமான பிரச்னை இருந்த போதிலும் அதை கையாண்ட விதம் ரசிக்கும் படி இருக்கிறது.

பெண்கள் கூட சகஜமாக டிஸ்கோதே சென்று மது அருந்துகிறார்கள், பாய் ஃப்ரெண்டோடு உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள் போன்ற பக்கங்களைப் படிக்கும் போது மட்டும், இப்படிப்பட்டவர்களை ராம் சேனா தாக்குவதில் தப்பில்லை என்று தோன்றுகிறது. ஆண்கள் மட்டும் மப்பு ஏத்திக்கலாமான்னு கேக்கப்படாது. :-)

கால் செண்டரில் வேலை பார்ப்பவர்கள் பற்றி நான் ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன் எழுதிய விடியலின் மறுபக்கம் ஞாபகம் வந்தது. இருந்த போதிலும், நல்ல நகைச்சுவை இழையோடும், தரமான நாவல். Timing Jokes நிறைய. முதலில் படிக்கும் போதே ரசித்தால் தான் உண்டு. கடைசி 10 பக்கத்தில் கொஞ்சம் ஹிந்தி சினிமா போலிருந்தாலும், பரபரப்பாகவே இருந்தது. சேதன் பகத் முதலில் எழுதின Five Point Some One படிக்க ஆரம்பித்து விட்டேன்.

February 16, 2009

நான்(உம்) கடவுள்

ஒரு வழியா நானும், “நான் கடவுள்” பார்த்தாச்சு. ஆரம்பிச்சுட்டான்யா இவனும் ஒரு விமர்சனத்தை என்று நினைத்து, மூடிவிட வேண்டாம். படம் எப்படி இருந்தது, என்று சொல்வதை விட, படம் பார்த்த போதும் பார்த்த பிறகும் நான் எப்படி இருந்தேன் என்பதைத் தான் சொல்லப் போகிறேன். அதனால், தைரியமாகப் படிக்கலாம். எனக்கொரு சந்தேகம், வேதத்தில் அஹம் பிரஹ்மாஸ்மி, அதாவது நான் கடவுள் என்று சொல்லப் பட்டிருக்கா, அல்ல்து, பிரம்மைவா அஹமஸ்மி, அதாவது நானும் கடவுள் என்று சொல்லப் பட்டிருக்கா?


“அசாவாதித்யோ பிரஹ்மா

பிரஹ்மைவா அஹமஸ்மி

பிரஹ்மைவா சத்யம்”

என்று தான் சந்தியா வந்தனத்தின் போது மந்திரம் வரும். அதாவது,
“எனக்குள் கடவுள் இருக்கிறான்;
நானும் ஒரு கடவுள்,
அதுவே சத்யம்”
இது தான் இந்த மந்திரத்தின் பொருள். அஹம் பிரஹ்ம்மாஸ்மி என்பதால் நான் கடவுள் என்று பெயர் வைத்தார்களா, இல்லை நான் கடவுள் என்ற பொருள் வர வேண்டும் என்பதற்காக மந்திரத்தையே மாற்றிவிட்டார்களா?? விஷயம் தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் நல்லது.
ஒகே ஒகே, ரொம்ப philosophical’ஆ போறேனா? என்ன பண்ணறது, படம் பார்த்த பாதிப்பு இன்னும் தீரவில்லை.

படத்தில் வரும் பிச்சைக் காரர்களின் உலகம் இப்படித்தான் நிஜ வாழ்க்கையிலும் இப்படித் தான் இருக்குமா என்ற அச்சம் ஏற்படுகிறது. பிச்சை எடுப்பவர்களில் எத்தனை பேர் கட்டாயத்தின் பேரிலும் பயத்தாலும் பிச்சையெடுக்கிறார்களோ யாமறியேன். அதிலும் அந்த விஹாரமான முகம் கொண்ட ஆள், அப்பப்பா நினைத்தாலே குலை நடுங்குகிறது. நல்ல வேளை காயத்ரியைக் கூட்டிக் கொண்டு போகவில்லை.
அப்படி அவர்களை யாராவது கட்டாயப் படுத்தினாலோ, அவர்களுக்கு காவல்துறையும் உடந்தையாயிருப்பின், இவர்களை என்ன செய்தால் தகும். தர்மத்தைக் கட்டிக் காப்பவனே அதைத் தெரிந்தே அழித்தால், அவனுக்கு மரண தணடனை வழங்கவேண்டும், என்று மஹாபாரதத்தில் தருமர் சொல்கிறார். ஒரு போலீஸ்காரரே இப்படத்தில் காண்பிப்பது போல் நடந்து கொண்டால், அவனை கல்லாலேயே அடித்துக் கொன்று விட வேண்டும் என்று ஆத்திரம் வருகிறது. பிச்சைக் காரர்கள் மேல் பரிதாபப் பட்டு ஒன்றோ இரண்டோ கொடுப்பது கூட, இந்த மாதிரி தாதாக்களுக்குத் தான் போகிறது என்று எண்ணும் போது, பிச்சை போடும் எண்ணமே போய்விடுகிறது.
நேற்று மதியம் Fox History'யில் கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் காண்பித்தார்கள். ஒரு இளவரசன் மக்களின் கஷ்டங்களுக்குக் கான காரணத்தைத் தேடியலைந்து தவம் செய்து, கடைசியில் இதுவே வாழ்க்கை என்ற தெளிவு பெறுகிறார். அப்படிப் பட்ட கௌதம புத்தரையே நிலை குலைய வைத்துவிடும், இப்படத்தில் பிச்சைக் காரர்கள் படும் அவஸ்தைக் காட்சிகள்.

படத்தின் கதாநாயகன் என்னைப் பொறுத்வரை இளையராஜா தான். ஏ.ஆர். ரஹ்மான் கோல்டன் குளோப் விருது வாங்கினால் என்ன? ராஜாவுக்கு முன்னால் நிறக் முடியாது. பாட்டானாலும் சரி, பின்னணி இசையானாலும் சரி, கலக்கியிருக்கிறார் மனுஷன். இந்தப் பாழாப்போற ஆங்கிலத் திரையுலகுக்கு இந்த மாதிரியான் இசையெல்லாம் காதில் விழாது. நல்ல வேளை, இந்தப் படத்தில் பாடல் எதையும் இளையராஜா உணற்சி மிகுதியால் தாமே பாடவில்லை. இசையமைப்பதோடு நிறுத்திக் கொண்டது பாராட்டத்தக்கது.
இரண்டு மணி நேரத்துக்கு மேலாக ஆடாமல் அசையாமல் முதல் முறையாகப் படம் பார்த்திருக்கிறேன். தியேட்டரை விட்டு வெளியே வந்தும், மனம் ரொம்ப கனமாக இருந்தது, இன்னும் இருக்கிறது.

February 14, 2009

வேற ஏதாவது எழுதுங்கப்பா

காலையிலிருந்து எந்தப் பக்கத்துக்குப் போனாலும் காதலர் தினம் பற்றித்தான் எழுதித் தள்ளியிருக்காங்க. சரி இணையதளத்துல இப்படி எழுதியருக்காங்கன்னா, நம்ம பதிவுலக நண்பர்களும் ஆளாளுக்க ஒரே காதல் கவிதையா எழுதி தள்ளியிருக்காங்க. எல்லாம் சூப்பராகீதுப்பா. கவிதை தவிர, காதலர் தினத்தைக் கொண்டாடலாமா வேண்டாமா, யார் யார் காதலர் தினத்தைக் கொண்டாடலாம், கல்யாணமவர்களெல்லாம் காதலர் தி்னத்தை எப்படிக் கொண்டாடணும், அவர்களுக்கும் காதலர் தினம் சொந்தமானதா, காதலர்கள் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ளணும், காதலர் தினம் நம்ம கலாசாரமா இல்லையா, கலாசாரப் பாதுகாவலர்கள் செய்வது சரியா தவறா, கலாசாரப் பாதுகாவலர்களின் நோக்கம் சரியானதாக இருந்தாலும், அவர்கள் மேற்கொண்ட விதம் தப்பு, கலாசாரப் பாதுகாவலர்களை எப்படி எதிர்கொள்ளணும், பின்க் ஜ...... விவகாரக் காம்பெயின், யப்பப்பா,எத்தனை பதிவுகளடா, அதில் தான் எத்தனை சுவாரஸ்யமடா. ஒரு கட்டத்தில் அலுத்தே போய் விட்டேன். அடேய் வேறெதாவது எழுதுங்கடான்னு கத்தணும் போலிருந்தது.
ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடியே இந்த பிளாகெல்லாம் தெரிஞ்சிருந்தா, இந்தக் கவிதையில் ஏதாவது சுட்டு, ஏதாவது ஃபிகரைத் தேத்தியிருக்கலாம். திருநெல்வேலி கோவில்பட்டியில் ஏதாவது பொண்ணு கிட்ட பொது இடத்துல நின்னு சிரி்ச்சு பேசினாலே அவங்கப்பனோ அண்ணனோ அரிவாள தூக்கியாந்துருவானுங்க. இந்த லக்ஷணத்துல காதலர் தினமெல்லாம் ம்ஹும், அதெல்லாம் எங்க அகராதியில கெட்ட வார்த்தை. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தான் காதலர் தினம் பிப்ரவரி 14 அன்று என்று தெரியவந்தது. முதலாம் ஆண்டில் ஏதோ காதலர் தினம் வந்து போனது, ஆனால் என்று என்ற ஞாபகம் இல்லை. மூன்றாம் ஆண்டு காதலர் தினத்தன்று மாரியம்மன் கோவி்லுக்குச் செல்லும் கூட்டம் மாதிரி நிறைய சிகப்புச் சட்டைகள். ஆனால் அன்றைய தினம் மறக்க முடியாதது. அன்று தான் கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்து நாட்டையே உலுக்கி எடுத்தது. எத்தனை காதலர்கள் இதனால் பாதிகப்பட்டார்களோ, யாமறியேன்.
பெங்களூர் வந்த பிறகு காதலர் தினமென்றால் ப்ரிகேட் ரோட் போய்விடுவது. காதல் ஜோடிகளைப் பார்ப்பதுமே ஒரு தனி கிக் தான். பெங்களூரில் காதல் செய்வது சற்றே காஸ்ட்லியான சமாசாரமானதால், யாருக்கும் பூ கொடுக்கவில்லை. (அப்படியே கொடுத்துட்டாலும், இவரு பின்னாடியே வந்துருவாங்க’ன்னு பி்ன்னாலிருந்து காயத்ரி குரல் கொடு்க்கிறாள்)
சரி சரி, நானும் இந்தக் காதலர் தினம் பற்றி ஏதாவது சொல்லிட்டுப் போறேன். காதலிப்பது தப்பா இல்லையான்னெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், காதல் என்பது நம் வாழ்க்கையில் பிராக்டிகலான ஒரு விஷயமா என்ற தெளிவு இருக்க வேண்டும். அம்புட்டுத்தேன்.

February 09, 2009

கோவில் சினிமா நாவல் கிரிக்கெட்

என்னடா இது, சம்பந்தமில்லாத நாலு வார்த்தை எழுதியிருக்கானே என்று பார்க்கறீங்களா? இந்த வீக்கெண்ட் இந்த நாலும் தான் என்னை ஆக்கிரமித்திருந்தன.

சனிக்கிழமை பிரதோஷம். சனி பிரதோஷம் ரொம்ப விசேஷமாம். பிரதோஷம் பற்றி ஒரு சிறு தகவல். அமுதத்தைத் தேடி, தேவர்களும் அசுரர்களும் பார்க்கடலைக் கடைந்த போது, முதலில் ஆலகால விஷமே வந்தது. அந்த சூட்டைத் தாங்க முடியாமல், தேவர்கள் சிவபெருமானை வேண்டி நிற்க, சிவபெருமான் அந்த விஷத்தை விழுங்கினார். இது நடந்தது, துவாதேசி நாளன்று. அம்மாவாசை / பௌர்ணமியிலிருந்து பன்னிர்ண்டாவது நாள். விஷம் தாக்காமலிருக்க, பராசக்தி, சிவனின் கழுத்திலேயே விஷத்தை நிறுத்த, அவரது கழுத்து மட்டும் நீல நிறமானதும், அவருக்கு நீலகண்டன் என்ற பெயர் வரக்காரணமானதும் ஒரு தனிக்கதை. மீண்டும், பார்க்கடலுக்கே வருவோம். தேவர்களும் அசுரர்களும் மீண்டும் வாசுகியென்ற பாம்பை மத்தாக உபயோகித்து, பார்க்கடலைக் கடைய, திரயோதசியன்று அமுதம் கிடைத்தது. சிவபெருமான் மட்டும் விஷத்தை உண்டிரா விட்டால், தேவர்கள் எல்லோரும் எரிந்து சாம்பலாகிப் போயிருப்பார்கள். ஆனால், சிவபெருமானின் உதவியை மறந்து, அமுதம் கிடைத்த திகைப்பில் அவர்கள் கூத்தாட, சிவபெருமான் வெகுண்டெழுந்தார். தங்களது, தவறை உணர்ந்த தேவர்கள், தங்களை மன்னித்தருளுமாறு, சிவபெருமானை வேண்டி நின்றனர். தவறை உணர்ந்ததனால், சாந்தம் அடைந்த சிவபெருமான், இனி எல்லா திரயோதசி நாளன்று, மாலை 4.30 மணிக்கு மேல், 6 மணிக்குள் தன்னை வழிபடும்படி சொன்னார். இந்த நேரமே பிரதோஷ காலம். சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பக்கத்திலிருந்த சிவன் கோயில்க்கு போனோம். பெங்களூரில் கூட மக்கள் பிரதோஷம் என்று தெரிந்து கொண்டு நிறைய பேர் வந்திருந்தனர். இந்த சிவன் கோயில் மிகவும் புராதனமானதொன்று. 600-700 வருடங்களாக இருக்கிறது. கோரமங்களாவிலிருந்து சர்ஜாபூர் செல்லும் சாலையில் அகரா என்ற சிறு ஊரில்(இப்போது, இது பெங்களூருக்குள் வந்து விட்டது) தான் இந்த சிவன் கோவில் உள்ளது.


இந்த வார இறுதியில் மூன்று படம் பார்த்தேன். தமிழ், ஹிந்தி ஆங்கிலம் என தலா ஒவ்வொரு மொழிக்கும் ஒரு படம். முதலில் ஏற்கனவே பார்த்த அபியும் நானும் படத்தை அம்மாவுடன் சேர்ந்து, பிறகு காயத்ரியுடன் சேர்ந்து ஹிந்தி படம் தோஸ்தானா (இந்தப் படத்தை மீண்டும் தனியாகப் பார்க்க வேண்டும்), அப்புறம் தன்னந்தனியாக "Twelve Angry Men" என்ற ஆங்கிலப் படம்.

அபியும் நானும் பற்றி நான் புதிதாக ஏதும் சொல்வத்ற்கில்லை. ஆனா மற்ற இரண்டு படங்கள் பற்றி சொல்லியே ஆகணும். முதலில் தோஸ்தானா. ப்ரியாங்கா சோப்ரா, அபிஷேக் பச்சன், ஜான் அப்ரஹம், மற்றும் பாபி தியோல் இடம் பெற்ற படம். இப்படியும் கூட திரைக் கதை அமைக்க முடியுமா? வடநாட்டில் எப்படியோ தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த மாதிரி படமெல்லாம் எடுத்தால் கலாசார பாதுகாவலர்கள் உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க. ஒரு அழகான பெண் வசிக்கும் வீட்டின் இன்னொரு அறையில் வாடகைக்கு வருவதற்கு, தாங்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையைச் சார்ந்தவர்கள் என்றும், பெண்கள் அவ்வளவு ஈர்ப்பு கிடையாது என்று புளுகோ புளுகென்று புளுகித்தள்ளி அவளையே கரெக்ட் செய்ய மேற்கொண்டு, கடைசியில் பாப் தியோல் தட்டிக் கொண்டு போகிறார். படத்திற்கு இவ்வளவு செலவு செய்திருப்பவர்கள் ப்ரியாங்கா சோப்ரா உடை விஷயத்தில் ஏன் இவ்வளவு சிக்கனம் காடியிருக்காங்களோ. இப்ப புரியுதா, இந்தப் படத்தை இன்னொரு தடவை தனியாக ஏன் பார்க்கணும்னு ஏன் ஆசைப்படறேன்னு.

நான் பார்த்த இன்னொரு படம், 1957’ல் வெளிவந்த Twelve Angry Men என்ற ஆங்கிலப் படம். ஒரு கொலைக் குற்றவாளி நிஜமாகவே கொலை செய்திருப்பானா என்று 12 பேர் விவாதிக்கிறார். முதலில் ஒருவர் மட்டும், இவன் கொலை செய்திருக்க மாட்டான் என்று நம்புகிறார். எப்படி மற்ற 11 பேரையும், கொலைக் குற்றவாளி கொலை செய்திருக்க மாட்டான் என்ற தீர்மானத்திற்குக் கொண்டு வருகிறார் என்பதே கதை. ஆஃபீஸில் ஒரு Personal Effective Program என்ற பயிற்சி முகாமில் இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கணும் என்று சொன்னார்கள். ரொம்ப நாள் இணையத்தில் தேடி, பதிவிறக்கம் செய்து பார்த்தேன். படத்தின் முக்கியமான கதாபாத்திரமான ஹென்ரி ஃபோண்டவின் நடிப்பு அபாரம். அதை நடிப்பு என்று கூட சொல்ல முடியாது. ரொம்ப ரொம்ப யதார்த்தமானதொரு performance. Why don't Indian film makers at least make an attempt to give such movies.மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டச்செய்யும் படம்.

இவ்வளவு படம் பார்த்தும் கொஞ்சம் நேரம் கிடைத்ததில் போன மாதம் வாங்கின நாவலில் ஒரு 100 பக்கம் படிக்க முடிந்தது. எனக்குப் பொதுவகவே ஒரு எழுத்தாளரின் படைப்புகளைத் தொடர்ந்து படிக்கும் பழக்கமுண்டு. அப்படித்தான், சிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர், சுஜாதா, கல்கி, டான் பிரௌன், என்று ஒரு தொடர். இப்போது சில நாட்களாக இர்விங்க் வேலஸின் நாவல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். போன மாதம், ஜெய நகர் போயிருந்தபோது, “The Plot" என்ற நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக விருவிருப்பாக எழுதும் இர்விங்க், இந்த நாவலில் கொஞ்சம் மந்தமான போக்கைக் கடைபிடித்திருக்கிறார். 900 பக்கங்கள் அட்னகிய புத்தகத்தில், 200 பக்கங்கள் தான் முடித்திருக்கிறேன். இன்னும் கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் அறிமுகமான பாடில்லை. இவரது, “The Second Lady", "Fan Club", "The R Document", "Guest of Honour" "The Man" போன்ற நாவலகள் நல்ல விருவிருப்பானவை. அதிலும், “The Man" is a real master piece. ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாகியிருக்கும் இந்தத் தருணத்தில் 20 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் ஒரு கறுப்பு இனத்தவர் ஜனாதிபதியானால், வெள்ளைக்காரர்கள் எப்படி நடந்து கொண்டு, அவரை எப்படி ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்க திரை மறைவில் காய் நகர்த்துகிறார்கள் என்பது தான் கதை.
200 பக்கங்கள் படித்து முடிக்க ஒரு மாதம் ஆகியிருக்கு. இன்னும் மீதமுள்ள 700 பக்கங்களை இந்த வருடத்திற்குள் படித்து முடித்து விடுவேன் என நம்புகிறேன்.

நேற்று தைப்பூசத் திருநாள். காலையிலேயே அல்சூரிலுள்ள முருகன் கோவிலுக்குப் போய், முருகனை தரிசித்து விட்டு, 9 மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடலாம் என்பது பிளான். அல்சூருக்குப் போய் கிட்டத்தட்ட 7 வருடங்களாகிவிட்டன. எல்லா சாலைகளும் ஒரு வழிப்பாதையாகி விட்டன. மேலும் நம்ம மெட்ரொவின் தயவல் சாலைகள் முழுவதையும் தோண்டிப் போட்டிருக்கிறார்கள். போய்ச்சேரவே 8.30 ஆகிவிட்டது. சுமாரான கூட்டம். முருகனுக்கு கும்பிடு போட்டு விட்டு, அடையார் ஆனந்த பவனில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வருவதற்கு 10.30 மணியாகிவிட்டது. ஏன் இவ்வளவு அவசரமென்றால், நேற்று ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மற்றும் இந்தியா - இலங்கை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள். ஆஸ்திரேலியா தோற்கணுமே, இந்தியா இலங்கைக்கு மீண்டும் ஆப்பு வைக்கணும் என்பது தான் முருகனிடம் இடப்பட்ட முக்கிய பிரார்த்தனை. இரண்டும் நிறைவேறவில்லை. இந்தியா இவ்வளவு சொதப்பலாக விளையாடும் என்றூ எதிர்பார்க்கவே இல்லை.

இந்தச் சொதப்பல் மேட்சைப் பார்க்கணும்னு தான் ஒழுங்கா சுவாமி கும்பிடாமல் இவ்வளவு அவசரப்படுத்தலா என்று அம்மாவும் காயத்ரியும் கடிந்து கொண்டார்கள், ஒரு மஹா கிரிக்கெட் ரசிகனின் ரசனையைப் புரிந்து கொள்ளாதவர்கள்.




February 07, 2009

ரயில் பயணங்களில்.... தொடர்கிறது

ரயில் பயணங்களில்

பீஹாரில் இருந்த 10 நாட்களில் ஒரு தமிழ்காரருடன் பழக்கம் ஏற்பட்டது. சென்னைக்காரர், பொறியியல் படித்தவர். அவருடைய போறாத வேளை, இங்கு வந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அங்கி்ருந்து கிளம்பும் போது, ஸ்டேஷனுக்கு வந்து வண்டி்யேற்றிவிட்டார்.

இந்த மாதிரி டூர் போகும் போது, எப்போது கிளம்ப வேண்டும் என்று தெரியும். ஆனால் எப்போது திரும்புவோம் என்று தெரியாது. அதனால் எப்போதுமே ரிடர்ன் டிக்கட் கையில் இருக்காது. இதைப் பற்றி ஆஃபீஸில் கேட்டதற்கு, “வேலை முடிந்து கிளம்ப வேண்டிய நாளன்று, ஸ்டேஷன் வந்து ஒரு ஹௌரா என்று டிக்கட் எடுத்துக் கொள், ஏதாவது ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்டில் ஏறிக் கொள்; டிக்கட் பரிசோதகர் வந்தவுடன், ரிசர்வேஷன் டிக்கட்டாக மாற்றிக் கொள். பெரும்பாலும் இரண்டாவது ஏ.ஸி. வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள். ஏ.ஸி. கிடைக்கவிட்டால் இரண்டாம் கிளாஸ் ஸ்லீப்பர் வாங்கிக்கோ” என்று ஞானோபதேசம் செய்தார்கள்.

ஆஹா, இப்படியெல்லாம் கூட செய்யலாமா என்று வியப்பாக இருந்தது. “சரி, அப்படி எதிலுமே ரிசர்வேஷன் கிடைக்காவிட்டால் என்ன செய்வது” என்று கேட்டால், அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்று கூலாக பதில் சொன்னார்கள். நாங்கள் பயணித்த வழித்தடம் அப்படி. ரயிலில் கண்டிப்பாக சில இருக்கைகள் காலியாக இருக்கும் என்ற ஒரு அசட்டு நம்பிக்கை தான்.

பிப்பர்வார் ஊர் மார்க்கட்டிலேயே கொஞ்சம் பிஸ்கட் பாக்கெட் பாக்கெட்களும், தண்ணீர் பாட்டில்களும் சில வாழைப்பழங்களும் வாங்கிக் கொண்டேன். அடுத்த 5 மணி நேரத்துக்கு ஒன்றும் கிடைக்காது என்பதால். ரயிலில் ஏறி இரண்டு ஸ்டேஷன் கழித்தே டிக்கட் பரிசோதகரிடம் பேசி, இரண்டாம் ஏ.ஸி. கிடைத்துவிட்டது.

கையிலிருந்த பிஸ்கட்டையும் பழத்தையும் எவ்வளவு தான் சாப்பிடுவது. பர்காகானா என்ற இடத்தில் வண்டி ஒரு 20 நிமிஷம் நிற்கும், அங்கு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்று காத்திருந்தேன். அந்த ஸ்டேஷனும் வந்தது. இறங்கிப் பார்த்தால் கும்மிருட்டு. ஒரு தள்ளுவண்டியில் ஒருத்தன் சப்பாத்தியும் சன்னா சப்ஜியும் விற்றுக் கொண்டிருந்தான். 7 சப்பாத்தியும் சப்ஜியும் 5 ரூபாய். என்ன கணக்கோ, ஆண்டவனுக்கே வெளிச்சம். இதாவது கிடைக்கிறதே என்று வாங்கி வாயில் போட்டால், ஐயோ கொடுமையிலும் கொடுமை. உப்பு உவர்ப்பு புளிப்பு கசப்பு இனிப்பு காரம் என்ற எந்தவித சுவையிலும் அடங்காத அப்படி ஒரு ருசி. ஒரு வாய்க்கு மேல் உள்ளே போக வில்லை. அப்படியே தூக்கிப் போட்டு விட்டேன். இதைப்பார்த்து ஒரு நாய் நாக்கில் எச்சிலூற ஓடிவந்தது, நான் தூக்கியெறிந்ததை ஸ்வாஹா செய்ய. அந்தப் பொட்டலத்தை முகர்ந்து பார்த்து விட்டு, ஒரு வாய் கூட வைக்காமல் ஓடி விட்டது. மனதுக்குள் என்னை என்ன திட்டிக் கொண்டதோ. ம்ஹூம் இங்கு கிடைக்கும் சாப்பாட்டை நாய் கூட உண்ண மறுக்கிறது. மக்கள் எப்படித் தான் அதை உண்ணுகிறார்களோ??!!

பெங்களூர் வந்த பிறகு அவ்வளவாக ரயிலில் பயணிக்கும் தருணங்கள் வாய்க்கவில்லை. திருநெல்வேலிக்கு உருப்படியாக ரயில் இல்லாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஊருக்குப் போவதென்றால் பேரூந்து தான். மாலை 7.30 மணி வாக்கில் பேரூந்தில் ஏறி உட்கார்ந்தால் காலை 6.30 மணிக்குப் போய் விடலாம். ஏதாவது உறவினர் வீட்டிற்கு சென்னைக்குப் போகணும் என்றால் தான் ரயில் பயணம் என்றாகிவிட்டது. அப்படி வாய்த்தது தான் போன வாரம் சென்னைக்குச் சென்றது.

ஞாயிறு மாலை எனது கசினின் கல்யாண நிச்சயதார்த்தம் என்பதால், காலை ரயில் பிடித்து, சீட்டர் கிளாசில் சென்னைக்குப் பயணம் செய்தோம். வீட்டருகில் தான் கிருஷ்ணராஜபுரம் ஸ்டேஷன் இருப்பதால், அங்கேயே ஏறிக்கொள்ளலாம். ரயிலும் 6.50’க்கு வந்து விட்டது. என்ன கொடுமை பெட்டிக்குள்ளேயே போக முடியவில்லை, அவ்வளவு கூட்டம். கதவைக் கூடத் திறக்க முடியவில்லை, அவ்வளவு நெரிசல். அடித்துப் பிடித்து, முதலில் அம்மாவை உள்ளே அனுப்பி விட்டு, பிறகு ஏறிக் கொண்டேன். எங்களுடைய சீட்டிற்குப் போனால், அங்கே இருவர் உட்காரும் இடத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருக்கின்றனர். “எங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட சீட், தயவு செய்து வேறு இடத்திற்குப் போங்கள்” என்று கெஞ்சாத குறை.

அப்படியும் நான் சொல்வதை நம்பாமல், என் டிக்கட்டையெல்லாம் பார்த்த பிறகு வேண்டா வெறுப்பாக நகர்ந்து கொண்டனர். எங்கள் பெட்டியில் மட்டும் தான் இந்த நிலை என்றில்லை. எல்லா ரிசர்வேஷன் பெட்டிகளுமே இதே நிலமை தான். ரிசர்வேஷன் செய்யாத டிக்கட் எடுத்துக் கொண்டு, ரிசர்வ்ட் பெட்டியில் ஏறிக் கொண்டு, கீழே நடக்கும் வழிகளில், ஏன் இரண்டு பெட்டிகளை இணைக்கும் வெஸ்டிபியூலிலும் உட்கார்ந்து கொண்டு அவ்வளவு பேர் பயணிக்கிறார்கள். காலைக் கூடே எங்கும் நீட்ட முடியாத நிலமை. அம்மா ரொம்பவே கஷ்டப் பட்டுப் போய்விட்டாள்.

ரிசர்வேஷன் செய்யப்படாத பெட்டிகளின் நிலை இன்னும் போசம். எங்களைச் சுற்றி ஒரே சல புல சல புலவென்று ஒரே சத்தம். சித்த நேரம் தூங்கக் கூட முடியவில்லை. டிக்கட் பரிசோதகர் வந்தார். முன் பதிவு செய்யாதவர்களெல்லாம் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விட வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். யாரும் அவர் சொன்னதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ரயிலில் முன் பதிவு செய்யாதவர்களெல்லாம் இப்படி அநாகரீகமாக ஏன் நடந்து கொள்கிறார்கள் என்று எனக்கு முதலில் கோபம் வந்தது. பிறகு சற்று நேரம் கழித்து, பாவம், அவரவருக்கு என்னென்ன அவசரமோ, என்ன வேலையோ? இந்தப் பாழாப்போற பெங்களூர் சென்னை மார்க்கத்தில் எப்போதுமே முன் பதிவு டிக்கட் கிடைக்காது. அப்படியிருக்க, இந்த மார்க்கத்தில் இன்னும் அதிக ரயில் விட்டால் தான் என்ன என்று ரயில்வே அதிகாரிகள் மீது கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இனி, பெங்களூர் சென்னை மார்க்கத்தில் பகல் நேரப் பயணம் கூடவே கூடாதடா சாமி என்று நினைத்துக் கொண்டேன்.



February 02, 2009

ரயில் பயணங்களில்

சில பேருக்கு ரயிலில் பயணிப்பது மிகவும் பிடித்தமான விஷயம். முதல் நெடுந்தொலைவுப் பயணம், நெல்லையிலிருந்து பம்பாய் போய், அங்கிருந்து அஹமதாபாத் போய்விட்டு வந்தது தான். இன்னும் சிறிது நேரம் ரயில் பயணம் நீடிக்காதா என்று நானும் என் தங்கையும் ஏங்கியதுண்டு. விற்பதெல்லாவற்றையும் வாங்கித் தின்ன ஆசையாயிருக்கும், ஆனால் அப்பா எல்லாத்தையும் வாங்கித் தரமாட்டார். முக்கியமாக எண்ணெய் பலகாரங்கள், ம்ஹும், கிடையவே கிடையாது.

பட்டம் பெற்று சென்னையிலிருந்து பம்பாய்க்கு (சாரி, இப்போது அது மும்பை) தனியாகப் பயணித்தது தான் முதன் முதலில் இவ்வளவு தூரம், தனியாகப் பயணித்தது. தனியாகப் பயணித்தாலும் பக்கத்தில் இருந்தவர்களிடம் பேசிக் கொண்டே போனது, சுவையானதொரு அனுபவம். அவர் சௌதியில் வேலையில் இருப்பவர். குடும்பம், இங்கே இந்தியாவில் அரக்கோணத்தில். தனது குழந்தை பிறந்த பிறகு 1 வருடம் கழித்துத் தான் பார்க்க விடுமுறை கொடுத்தார்களாம். ரொம்பவே பாவமாக இருந்தது. பம்பாயிலிருந்து திரும்பும் போது, சற்று போர் அடித்தது. எல்லோரும் வாயில் பான் போட்டு, மென்று முழுங்காமல் வெளியே உமிழும் ஜாதி. அவர்களைப் பார்த்தாலே இரண்டு வேளை குளிக்கணும், அவ்வளவு அழுக்கு. அதனால் பேச்சும் கொடுக்கவில்லை. எனது பல ரயில் பயணங்களில் மிகவும் போர் அடித்த பயணமென்றாலும், கையில் வேலையுடன் அம்மாவைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் இருந்ததால், அவ்வளவு கஷ்டமாக இல்லை.

அடுத்த நீண்ட பயணம், சென்னையிலிருந்து கொல்கத்தா. இப்போதும், கூட வந்தவர்களில் பெறும் பாலும் ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர்கள் தான். ஆங்கிலத்தில் பேச்சையெடுத்தாலும், “கீ ஆஷ்சே”, “எந்துக்கு, ஆய்ப்பெயந்தி” என்று அவர்கள் பாஷையிலேயே பதிலளிக்க, நம்மால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கொல்கத்தா வரை மௌன விரதம் தான். சாப்பிடாமல் வேணுமானாலும் இருந்து விடலாம், ஆனால் பேசாமல் இருப்பது மிகக் கொடுமை. நல்ல வேளை, சிட்னி ஷெல்டன் கையோடு இருந்ததால் பிழைத்தேன். ஆனால் முதன் முதலில் ஒரு புதிய பயணத்தை மேற்கொண்டதால், அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. வழியில் திருநங்கையர் தொல்லை தான் தாங்க முடியவில்லை. பத்து ரூபாய்க்கு குறைவாக வாங்க மறுத்துவிட்டனர்.

ஆனால் ஒரு பயங்கரமான ரயில் பயணம் மேற்கொண்டது, கொல்கத்தாவிலிருந்து, அப்போதைய பீஹாரிலிருந்த ராஞ்சி வரை சென்றது தான். கொல்கத்தாவில் என்னுடைய வேலை, நிலக்கரிச்சுரங்களில் உபயோகப்படுத்தப்படும் மஷின்களைப் பழுது பார்ப்பதும், உபரி பாகங்கள் விற்பனை செய்யும் வேலை. எல்லா கஸ்டமர்களும் இந்திய அரசாங்க கம்பெனிகள் தான். கோல் இந்தியா லிமிடட்டின் சப்சிடியரி கம்பனிகள். அவர்களது சுரங்கங்கள் எல்லாம், பீஹார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களில் தான்.

ஒரு முறை ராஞ்சி அருகிலுள்ள பிப்பர்வார் என்ற இடத்திற்கு போகவேண்டும். கொல்கத்தாவிலிருந்து இரவு ரயில் பிடித்து காலையில் ராஞ்சி போய் விடலாம். ராஞ்சியிலிருந்து இன்னொரு பஸ் அல்லது டாக்ஸி பிடித்து பிப்பர்வார் போய்விடலாம். இந்த பிப்பர்வார் பற்றி ஒரு சிறு முன்னோட்டம். இது இந்தியாவில் மிகவும் பின் தங்கிய டாப் 5 மாவட்டங்களில் ஒன்று. சாலை, கிடையாது, பஸ் வசதி உண்டு ஆனால் பாதுகாப்பானதில்லை, மறு நாள் காலையில் நியூஸ் பேப்பர் வேண்டுமானால் முந்தைய நாளே சொல்லி வைக்க வேண்டும், சட்டம் ஒழுங்கு கிடையவே கிடையாது, மின்சார வசதி ஒரு நாளில் குறைந்தபட்சம் 5 மணி நேரம் கிடைத்தால் பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம். இவ்வளவு க்ஷேத்திர மஹிமையுள்ள புண்ணியஸ்தலத்திற்குப் போய்வா என்று நெற்றியில் திலகமெதுவும் இடாமல் விடை கொடுத்தனிப்பினார் எனது பாஸ். அதுவும் எதற்காக? மூன்று வருடங்களாக 20 லட்சம் கொடுக்காமல் டபாய்க்கும் ஒரு கஸ்டமரிடமிருந்து பணம் வாங்கி வருவதற்காக. இவர் கஸ்டமர் இல்லை, கஷ்டமர் என்று தான் சொல்லவேண்டும்.

எப்போதும் கம்பனியில் இரண்டாம் கிளாஸ் ஏ.ஸி தான் முன் பதிவு செய்து தருவார்கள். என் போதாத காலம், ஏ.ஸி கிடைக்கவில்லை. ஸ்லீப்பர் தான் கிடைத்தது. “இளம் கன்று பயமறியாது” என்ற பழமொழிக்கேற்ப, பரவாயில்லை, நான் இதிலேயே போகிறேன் என்று வீர வசனம் முழங்கக் கிளம்பினேன். புறப்படுவதற்கு முன், ஆஃபீஸிலுள்ள ஒரு பிஹாரி என்ன நினைத்தானோ, என்னிடம் வந்து ராஞ்சி வரை போக வேண்டாம், அதற்கு முன்னாலே ஒரு ஸ்டேஷனில் (பெயர் ஞாபகம் இல்லை) இறங்கிக் கொண்டு அங்கிருந்து போனால், பிப்பர்வாருக்குச் சீக்கிரம் போய் விடலாம் என்று ஐடியா கொடுத்தான்.

ரயிலிலும் ஏறி உட்கார்ந்தாயிற்று. ரயில் பெட்டிக்குள் கழிப்பறையிருக்கிறதா அல்லது இந்த ரயில் பெட்டியே ஒரு பெரிய கழிப்பறையா என்று சந்தேகம் வரும் அளவிற்கு அவ்வளவு துர்நாற்றம். சீட்டில் உட்கார்ந்த படியே கீழே வெற்றிலையைத் துப்பியிருக்கிறார்கள், நிலக்கடலை மற்றும் வாழைப்பழதொலிகள் கீழே இரந்திருக்கின்றன, மின் விசிறியிலிருந்து காற்றை விட சத்தம் தான் அதிகம் வருகிறது. மின் விளக்கு ஏதோ ஜீரோ வாட்ஸ் பல்ப் போல் எரிகிறது, என் எதிரே உட்கார்ந்திருப்பவன், பிச்சைக் காரனோ என்று எண்ணும் அளவிற்கு அவ்வளவு அழுக்காக இருக்கிறான். கழிப்பறை, சொல்லவேண்டாம், வாந்தியெடுத்து விடுவீர்கள். இந்த நிலையில் ஒரு ரயில் பெட்டியில் இன்னும் 9 மனி நேரப் பயணம் என்று நினைத்தாலே கதி கலங்கிற்று.
நல்ல வேளை ஹௌரா ஸ்டேஷனிலேயே சாப்பிட்டு விட்டதால் இந்த சூழ்நிலையில் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நீட்டி நிமிர்ந்து படுத்துவிட்டேன்.

டிக்கட் பரிசோதகரிடம், நான் இறங்க வேண்டிய இடம் எப்போது வரும் என்று ஆங்கிலத்தில் கேட்டதற்கு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, “எங்கிருந்து வருகிறாய்” என்றார்.
“கொல்கத்தா” என்றேன்.
“யூஹ் டோண்ட் லுக் லைக் அ பென்ஹ்காலிஹ். ஆர் யூ நியு டு த பிளேஸ். (You don't like a Bengali. Are you new to the place)” என்று பெங்காலியில் கடைந்தெடுத்த ஆங்கிலத்தில் கேட்டார்.
“ஐ ஆம் ஃப்ரம் சென்னை ” என்றேன்.
“இஃப் யூ ப்ஹாண்ட் டு கோ அலைப்ஹ் டு சென்னை, டோண்ட் கெட் டவுன்ஹ் இன் தாட் பிளேஸ். கோ டு ராஞ்சி. (If you want to go alive to Chennai, don't get down in that place. Go to Ranchi)” என்றார்.

ஆஹா, இதென்னடாயிது, இப்படி கிலியைக் கிளப்புறாரே என்று நினைத்துக் கொண்டு, ராஞ்சி வரை போகலாம் என்று நினைத்துக் கொண்டு படுத்துரங்கினேன். சில நேரம் கழித்து, என்னை யாரோ நகர்த்துவது போலிருந்தது. காலில் ஏதோ பட்டது போல் இருந்தது. என்னடாயிது என்று பார்த்தால், என்னை சுற்றி மக்கள், நான் படுத்திருந்த லோவர் பெர்த்தில் இரண்டு பேர், மேல் பெர்த்தில் ஓருத்தன், மிடில் பெர்த் விளிம்பில் இன்னொருத்தன், எல்லா விளக்கும் எரிகிறது. என்னடாயிது என்று பார்த்தால், தான்பாத் ஸ்டேஷனில் இவர்கள் எல்லோரும் ஏறியிருக்கிறார்கள். அடேய் சண்டாளா, இறங்குடா என்று சொல்ல மனம் துடிக்கிறது. ஆனால் ஆஃபீஸில் எனக்கு நூறு முறை புத்திமதி சொல்லியனுப்பியிருந்தார்கள், “யாரிடமும் வம்பு செய்யாதே” என்று. அதனால் என்னுள் உயிர்த்தெழுந்த அந்நியன், அப்படியே அம்பி அவதாரமெடுத்து, “ப்ஹையா, யே, மேரா பெர்த் ஹை. ஆப் கஹீன் ஔர் ஜாயியே (அண்ணேன், இது என் பெர்த், நீங்க வேறெங்காவது போங்களேன்)” என்று கெஞ்சாத குறையாகச் சொன்னேன். அதற்கு அந்தாள், “ஹம் நே ப்ஹீ டிக்கட் கரீதி ஹை. ஹம் கோ ப்ஹி யஹான் பைட்னெ கா ஹக் ஹை. (நாங்களும் டிக்கட் வாங்கியிருக்கோம், எங்களுக்கும் இங்கே உட்கார்ந்து போவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது)” என்றான். எதிரே பிச்சைக் காரன் போலிருந்தவன் சொன்னான், “யேஹ் பீஹார் ஹை. குச் மத் போல்னா. (இது பீஹார், இங்கே ஒண்ணும் சொல்லக் கூடாது)”.

அடப்பாவிகளா, உங்க ஊர்லெ ரிசர்வேஷன் என்றொரு கான்செப்டே கிடையாதா என்று நொந்து கொண்டேன். டிக்கட் பரிசோதகரிடம் போய் முறையிடலாமா என்று பார்த்தால், அவர் இந்த மாதிரி ஏறின ஒரு ஆளுடன் சகஜமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். நல்ல வேளை அடுத்த ஓரிரண்டு மணி நேரத்திலேயே எல்லாக் கூட்டமும் இறங்கி விட்டது.

அப்புறம் எனக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை. விடியும் வரை புரண்டு புரண்டு படுத்த படியே, ராஞ்சி வரை சென்றேன். வாழ்வில் இந்த ரயில் பயணம் என்னால் மறக்கவே முடியாதது. திரும்பி வரும் போது, நல்ல வேளை, ஏ.ஸி கோச் கிடைத்ததோ, நான் பிழைத்தேனோ. அதிலும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி நடந்தது. அது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.