Pages

October 09, 2009

கமல்ஹாசனும் தெளிவற்ற தமிழ் ரசிகர்களும்

மிழ் சினிமா ரசிகர்களுக்கென்றுமே நிழலையும் நிஜத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. உன்னைப் போல் ஒருவன் படத்தைப் பார்த்துவிட்டு பல பேர், (நிறைய வலைத்தளங்களில் கூட) கம்ல்ஹாசன் வன்முறையைத் தூண்டும் விதமாக படமெடுத்திருக்கிறார், ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவோருக்கெதிராகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது, வன்முறைக்கு வன்முறக்கு தான் பதிலா, அப்படியென்றால் ஹே ராம், அன்பே சிவம் போன்ற படங்கள் எடுத்த கமல்ஹாசனின் சமூக நிலைப்பாடு மாறி விட்டதா, அப்படி இப்படி என்று காமா சோமா என்று கேள்விகள். இத்தனைக்கும் உ.போ ஒ. உண்மையிலேயே ஒரு தமிழ்ப் படம் கூட இல்லை. வெட்னெஸ்டே என்ற ஹிந்திப் படத்தின் ரீ-மேக்.

சினிமா பார்ப்பவர்கள் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பார்ப்பது ஒரு கதையை. அதில் வரும் நடிகர்கள் கதாபாத்திரங்கள். அவர்கள் அதில் செய்யும் காரியம் எல்லாமே அந்தந்த கதாபாத்திரங்களின் செயல்கள். கமல்ஹாசன் போன்ற சினிமாக்காரர்கள், என்றுமே தனது சொந்தக் கருத்தை முன் வைக்க சினிமா என்னும் ஊடகத்தைப் பயன்படுத்தியதில்லை. நிஜ வாழ்க்கையில் கமல்ஹாசன் என்ற நிஜ மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் தனது நாத்திக வாதத்தை என்றைக்குமே முழு மூச்சாக சினிமா மூலமாகப் பரப்பியதில்லை. தசாவதாரத்தில் கோவிந்த் பேசும் சில வசனங்கள் நாத்திகத் தன்மையுடையது என்று வாதிட்டால், என்னால் கடவுளைக் காப்பாற்ற வேண்டி உயிரையே கொடுத்த அந்த நம்பியைச் சொல்ல முடியும். தேவர் மகன் படத்தில் தனது பகுத்தறிவைப் பரப்பும் விதமாக, கல்யாணக் காட்சிகளை ரெஜிஸ்டர் ஆபிஸிலே வைத்து நடப்பது போல் காட்டியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. ஒரு கதாபாத்திரத்திற்கு என்னென்ன அம்சங்கள் இருக்கின்றனவோ, அதைத்தான் காட்டிருப்பார்.

அவருக்கு திருமணத்திலே கூட நம்பிக்கை கிடையாது என்று எங்கோ படித்ததாக ஞாபகம். ஆனால் எந்தப் படத்திலும் திருமணத்திற்கெதிராகப் பகிரங்கமாக பிரசாரம் செய்ததில்லை. பி.கே.எஸ்’இல் கூட கடைசியில் திருமணம் கொள்வார். எல்லாமே ஒரு கதையில் வரும் நிழல் கதாபாத்திரங்கள்.

உ.போ.ஒ. படத்தில் அவர் உருவாக்கியது ஒரு கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்திற்கு நாட்டில் மந்தமாக நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையைப் பார்த்து ஆத்திரம் வருகிறது. அவன் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறான். அதை அத்தோடு நிறுத்தி விட வேண்டும். அதை விட்டுவிட்டு கமல்ஹாசன் வன்முறைக்கு வன்முறை தான் பதில். கண்ணுக்கு கண் ரத்தத்திற்கு ரத்தம் என்னும் தனது கருத்தைத்தான் உ.போ.ஒ. மூலம் சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் குதிப்பதில் அர்த்தமில்லை. கமல்ஹாசன் ஏற்கனவே ஒரு பேட்டியில், “என் படங்கள் மூலம் நான் யாருக்கும் எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னிடம் இந்தப் படத்தில் என்ன செய்தி சொல்லியிருக்கீங்க என்று கேட்கிறார்கள். செய்தி சொல்ல நான் என்ன போஸ்ட்மேனா” என்று அவரே சொல்லியிருக்கிறார்.

உண்மையில் தமிழ் ரசிகர்கள் இன்னும் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து மீளவில்லையென்று தான் சொல்ல வேண்டும். படத்தில் எம்.ஜி.ஆர் ரஜினி என்ன பேசுகிறார்களோ, அப்படியே, நிஜத்திலும் நிகழ வேண்டும் என்ற மனப்பான்மை இன்னும் நீங்கவில்லை. “நான் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வேன்” என்று ஆடிப்பாடி வசனம் பேசிய எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களைப் பார்த்து பார்த்தே பழகிவிட்ட நம் மக்களுக்கு (அதிலே நானும் அடக்கம்) கமல் போன்றவர்கள் செய்யும் நிழல் படத்தையும் நிஜம் என்றே நம்புகிறார்கள்(றோம்). அதனால் தானோ என்னவோ ரஜினி, விஜய் போன்றவர்களும் மாஸ் ஹீரோயிசம் என்ற ஸ்டேடஸ்ஸிற்க்காக பன்ச் டயலாக் பேசுகிறார்கள். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களான சிம்பு, தனுஷ், விஷால் வரை இந்த பன்ச் டயலாக் கலாசாரம் பரவி விட்டது.

கமல்ஹாசன் என்ற தனி மனிதனின் கருத்துக்கள் அவருடையது. (Thankfully) அதை அவர் ஒரு சினிமா கதாபாத்திரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு அதைச் சொன்னதில்லை. அந்தத் தனி மனித கருத்துக்களோடு பேதம் இருப்பின் அதை விவாதிக்கலாம், ஏன் குற்றம் கூட சொல்லலாம். அவரது நிறைய கருத்துகள் எனக்குப் பிடிக்காது. அதற்காக அவர் படைக்கும் கதாபாத்திரங்களோடு அதை ஒப்பிட்டுப் பார்ப்பது முட்டாள்த்தனம்.

“கமல்ஹாசன் போன்ற celebrity திரையில் என்ன சொன்னாலும் செய்தாலும், அதை தமிழ் நாட்டு மக்கள் அதை அவரே நிஜ வாழ்க்கையிலும் சொல்வார் செய்வார் என்று தான் நம்புவோம்” என்று வாதிட்டால், மக்களுக்கு எது நிழல் எது நிஜம் என்று educate செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு அடிப்பிடிடா பாரதவட்டா என்று மீண்டும் பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தால், நல்ல படைப்புகளைப் பார்ப்பது அரிதாகி விடும்.

பி.கு. நான் மேலேயெழுதியிருப்பது உ.போ.ஒ’வின் விமர்சனம் இல்லை.

October 08, 2009

தந்தை மகனுக்காற்றும் உதவி

நல்ல நாளிலேயே பெங்களூருவிற்கு டிக்கட் கிடைக்காது. அதுவும், பண்டிகை விடுமு்றைக்குப் பிறகு நெல்லையிலிருந்து பெங்களூரு வருவதென்றால் குதிரைக் கொம்பு தான். ஆயிரம் கோ்டி புண்ணியம் செய்திருந்தால் தான் தூத்துக்குடி எக்ஸ்பிரஸில் இடம் கிடைக்கும். சரி் எப்படியாவது தத்காலிலாவது டிக்கட் கிடைக்காதா என்ற எண்ணத்தில் காலை 6.30 மணிக்கே முன் பதிவு செய்யும் இடத்திற்கு போய் விட்டேன். ஊரில் என்னை விடக் கடமைக் கனவான்கள் ஜாஸ்தி போலிருக்கு. ஏற்கனவே ஒரு சிறு கும்பல் கூடியிருந்தது. எல்லோருமே அங்கேயிருந்த திண்ணையில் (அல்லது திண்ணை மாதிரியிருந்த மேடை) தான் உட்கார்ந்திருந்தோம். எப்படியும் 1.30 மணி நேரம் காக்க வேண்டியிருக்கும் என்பதால் கையில் ஒரு புத்தகத்தையும் எடுத்துப் போயிருந்தேன்.

நான் போயமர்ந்து ஒரு 10 நிமிடங்களில் அவர் வந்தார். வயது 55'ஐத்தாண்டியிருக்கும். மாநிறத்தை விட சற்றே கறுத்த உடல், நிறைய நிரைத்த முடி, 80களில் இருந்த ஸ்டைலுக்கேற்ப தைக்கப்பட்டிருந்த சட்டை, கையில் ஒரு துணிப்பை, ஹவாய்ச் சப்பல். இது தான் அவருடைய தோற்றம்.


“தம்பி நீங்க தான் வரிசையில கடைசியீங்களா?” முகத்தில் சற்றே கவலையுடன் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி. “ஆமாங்க” என்றேன்.

“நான் ஒரு 10 நிமிஷத்துல காபி குடிச்சுட்டு வந்துதேன், என் எடத்தை பாத்துக்கிடுதீகளா” என்றார்.

“தப்பா எடுத்துக்காதீங்க. அடுத்து வர ஆள், நீங்க போய்ட்டு திரும்பி வரும்போது எடம் கொடுக்க மாட்டேன்னு சண்டை போட்டா என்னால ஒண்ணும் பண்ண முடியாது” என்றேன். எனக்கு முன்னால் இருந்த கனவான்களில் ஒருவர், “காலங்கார்த்தாலேர்ந்து நாங்கள்லாம் ஒக்காந்திருக்கோம்லா” என்று குரல் கொடுத்தார்.

“மவனுக்கு அர்ஜெண்டா மெட்ராஸ் போயாவணும். எங்கிட்டும் டிக்கடே இல்லன்னுட்டாவோ” என்றார் இன்னும் கவலையுடன்.

“எல்லாருக்குமே இங்கிட்டு அர்ஜெண்டுதான்” என்றார் அந்த கனவான் சிரித்த படியே.

“நான் என் பையை வச்சிட்டுப் போறேன்” என்று சொல்லியவர், என்ன நினைத்தாரோ, “செருப்பு இருக்கட்டும்”என்று சொல்லிவிட்டு பையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்.

பத்து நிமிடங்கள் கழித்து வந்தார். அடிக்கடி கையில் கட்டியிருந்த பழைய கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார்.

“சென்னைக்கு ஏதாச்சும் ரயில்ல நல்லாயிருக்கும்” என்றார் என்னப் பார்த்து. என் பதிலுக்குக் காத்திராமல், “கவுண்டர் கரெக்டா 8 மணிக்குத் தொறந்திருவாங்கள்லா. 10 நிமிஷத்துலயே அம்புட்டு டிக்கட்டும் போயிருமாம்லா. அப்படியா தம்பி” என்றார் என்னிடம்.

“சொல்ல முடியாதுங்க. இந்தியா பூராவும் டிக்கட் கொடுக்கறாங்க. எங்கிருந்தும் வாங்கலாம்” என்று பொதுவாகச் சொல்லிவைத்தேன்.

“இந்தக் கம்பியூட்டர் கறுமாந்திரம் வந்தப்புறம் தான்யா டிக்கட்டுக்கு இம்புட்டு கிராக்கி. கம்பியூட்டர் வச்சிருக்க பயபுள்ளேல்லாம், வூட்டுலேந்தே ஒக்காந்து புக் பண்ணிப்புடுதானுங்க. இங்கிட்டு வந்து கால் கடுக்க நின்னாலும், ஒண்ணும் கிடைக்க மாட்டேங்குது” என்று அங்கலாய்த்தார் இன்னொரு பெரிசு.

“கம்பியூட்டருக்கு எல்லா தகவலும் ஊட்டி விட்டு, யப்பா ராசா டிக்கட் கொடு மவராசான்னு காத்திருந்தாலும், கரெக்டா 8 மணிக்கு ரயில்வேஸ் சைட் மக்கர் பண்ணும் கொடுமை எனக்குத் தான் தெரியும்” என்று மனதுக்குள்ளே சொல்லி சிரித்துக் கொண்டேன்.

“அதை விட இந்த ஏஜெண்டுங்க தான் நிறைய டிக்கட்டை புக் பண்ணிப்புடிதானுங்க” என்றார் இன்னொரு பெரிசு.

“உங்களுக்கு ஏதாச்சும் ஏஜண்டைத் தெரியுமா” என்று என்னிடம் கேட்டார்.

“இல்லீங்க. தெரியாது”

கண்களில் ஒரு மாதிரியான ஏமாற்றம். “மவன் மெட்றாசுக்குக் கண்டிப்பா நாளன்னிக்கிப் போயே ஆவணும்” என்று மீண்டும் அதே பல்லவி. குட்டி போட்ட பூனை மாதிரி இங்கும் அங்கும் நடந்தார். சில நேரம் கழித்து எனக்குப் பின்னால் ஒருவர் உட்கார, “அந்தத் தம்பிக்கப்புறம் நான் தான். சப்பல் வச்சிருக்கேன்” என்று தள்ளியிருந்து சொன்னார்.

8 மணிக்கு கவுண்டர் திறந்ததும், எல்லோருக்கும் முன்னாலே போய் நின்று கொண்டவரை சிலர் மறித்தனர். “தப்பா எடுத்துக்கிடாதீங்க. உங்களுக்கு முன்னால டிக்கட் வாங்கிற மாட்டேன். எந்தெந்த ரயில்’ல டிக்கட் இருக்குன்னு தெரியும். அதத்தான் பாக்கேன்” என்றார். டிக்கட் வங்கிக் கொண்டு போகும் ஒவ்வொருவரிடமும், “கிடைச்சுட்டுதா, எம்புட்டு சீட் இருந்துச்சு” என்று ஏதோ பரீட்சை எழுதி ரிசல்டுக்குக் காத்திருக்கும் ஒரு அப்பாவி மாணாவனைப் போல் காத்திருந்தார். எனக்கு முன்னால் நின்றிருந்தவர்களுக்கே சென்னைக்கு டிக்கட் இல்லையென்று சொல்லிவிட்டார்கள். பின்னால் நின்றிருந்தவர்களும் புலம்பிக் கொண்டே வெளியேறிவிட்டார்கள். எப்படியும் டிக்கட் கிடைக்காது எனத்தெரிந்திருந்தும், அவர் போகவில்லை. நான் கவுண்டரை அடந்ததும் என் பின்னால் வந்து நின்று கொண்டார்.

எப்படியும் அவருக்காகப் பிரத்யேகமாக ரயிலில் சீட் உருவாக்கப் போவதில்லை. கண்டிப்பாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். இருந்தாலும், அவருடைய ஏமாற்றம் தோய்ந்த முகத்தைப் பார்க்க எனக்கு மனத்துணிவு இல்லை.

தன் மகனுக்காக அதிகாலையிலேயே ரயில் முன்பதிவு செய்ய வந்த மனிதரோடு ஓரு மணிநேரப் பழக்கமென்றாலும், இன்னும் அவருடைய கவலை தோய்ந்த இன்னும் அகக் கண் முன்னே நிழலாடுகிறது. அவர் மகனுக்காக எதிலாவது டிக்கட் கிடைத்ததா இல்லையா தெரியவில்லை.

“இவன் தந்தை என்னோற்றான்” என்று பிறர் சொல்ல அவர் மகன் இருக்கிறானா இல்லையா தெரியவில்லை, ஆனால், “இவன் மகன் என்னோற்றான்” என்று தான் சொல்ல வேண்டும்.

October 06, 2009

குந்தவையின் கட்டளை

கொஞ்ச காலம் பிளாகுலகிலிருந்து அஞ்ஞாதவாசம் இருந்தாலும், நம்ம ரசிகப்பெருமக்கள் விடமாட்டேன்றாங்க (டேய் டேய் அடங்குடா! வேற யாராவது சொல்வதற்கு முன், நானே சொல்லிக் கொள்கிறேன்)
குந்தவை அக்கா, திடீர்னு ஒரு கட்டளை இட்டிருக்காங்க. இந்த நாலுக்கும் என்ன சம்பந்தம்’னு தெரியலை. ஆனால் எல்லாமே கொஞ்சம் விவகாரமான விஷயமாத்தான் இருக்கு. ஏதோ என் மனசுல பட்டதை எழுதியிருக்கேன். நீ என்னடா சொல்லுறதுன்னு, நீ பெரிய *()$%*(#$(%(#’ங்கியா’ன்னு கேட்டு ஆட்டோ கீட்டொ அனுப்பிடாதீங்க.

காதல்

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த வார்த்தைக்கான அர்த்தம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது. பள்ளிப்ப்ருவத்தில், ஒரு ஆணும் பெண்ணும் கட்டிக்கொண்டு ஆடிப்பாடி கல்யாணம் செய்து கொள்வதற்குப் பெயர் தான் காதல் என்றிருந்தது. விடலைப் பருவத்தில் ஒரு தலைக் காதல். ஸ்டெஃபி கிராஃப், மாதுரி தீக்ஷித், ஸ்ரீ தேவி இப்படியாக என் ஒரு தலை ராகத்தின் ஆலாபனை ரொம்பவே நீளம். விவரம் தெரிந்த பிறகு, எதன் / யார் மீதாவது பற்று அல்லது ஈர்ப்பு அதிகமாகி அதோடு / அவரோடு ஏற்படும் உறவு தான் காதல் என்று புலப்பட்டது. அப்படிப் பார்க்கையில், வாழ்வின் எந்நாளிலும் குறுக்கிடாமல் இருந்ததில்லை. கிரிக்கெட், தாய் நாடு, தாய் மொழி, புத்தகம், வேலை, தாய், மனைவி இப்படியாக நான் காதலிக்கும் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

எலேய் கேட்ட கேள்விக்கு டகால்டி வேலையெல்லாம் காட்டாமல் ஒழுங்கா பதில் சொல்லுனு என் மனசாட்சி உள்ளேயிருந்து கத்துவதால், எல்லோருக்கும் தெரிந்த காதல் பற்றியே இரண்டு வரி போனால் போகுது, எழுதித் தொலைக்கிறேன்.

கல்யாணத்திற்கு முன்பே காதல் வயப்பட்டிருக்கேன். அவளை நினைத்து உருகாத நாளில்லை. அவளைக் காண வேண்டும் என்று ஏங்காத தருணங்கள் இல்லை. அவளையே நினைத்து அவளோடு வாழ்வதாக கற்பனை செய்து கொண்ட தினங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. பார்க்கும பெண்களில்லாம் அவள் ஒளிந்திருக்கிறாளா என்று நோட்டம் விட்ட அந்த தினங்கள் மறக்க முடியாதவை. என்னை ஆட்கொண்ட அந்த உணர்வை காதல் என்று தான் சொல்ல வேண்டுமானால் ஆம், நானும் காதல் வயப்பட்டேன். என்ன நான் காதலிச்ச பொண்ணு 1000 வருஷத்துக்கு முன்னால் வாழ்ந்தவள். நான் காதல் வயப்பட்டவளைப் பற்றி இதொ நான் ஏற்கனவே எழுதியது.

கடவுள்

ஆம் இருக்கிறது. என்னடா இப்படி மரியாதையில்லாமல் சொல்கிறானே என்று வெகுண்டு எழ வேண்டாம். அண்ட சராசரத்தையும் கட்டிக் காத்து, அந்த உருவமற்ற, பிறப்பு இறப்பு எதுவுமில்லாத, கால நேரமில்லாத, எங்கும் வியாபித்திருக்கும் சக்தியை வேறெப்படி அழைப்பது?? கடவுள், என்ற வார்த்தைக்கு காஞ்சி பெரியவர் ஒரு முறை கொடுத்த விளக்கம் தான் ஞாபகம் வருகிறது. ஒவ்வொரு உயிருக்கும் உள்ளே கிடக்கும் சக்தியே, ‘கடவுள்’. மனிதன் தன்னை மீறி எதுவும் இல்லை, யாரும் இல்லை என்ற கர்வம் கொள்ளாமலிருக்கவே கடவுள் என்றொரு சக்தி இருக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போ பிரம்மா, விஷ்ணு, சிவன், பிள்ளையார், லக்ஷ்மி சரஸ்வதி, முருகன், அல்லாஹ், இயேசு இவங்கள்’லாம்?? எல்லோரும் ஒரே பரம்பொருளுக்குள் ஐக்கியமாகியிருக்கின்றனர் என்று தான் நம்புகிறேன். கஷ்டகாலம் வரும் போதெல்லாம், கடவுளிடம் முறையிடுவேன். கஷ்டம் நீங்குகிறதோ இல்லையோ, அதைத் தாங்கும் மனப்பக்குவம் ஏற்பட்டிருக்கிறது, மனது இதமாயிருந்திருக்கிறது. கடவுளைக் கண்டதில்லை, ஆனால், அப்படியொரு சக்தி இருப்பதை பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

பணம்

பணம் பத்தும் செய்யும்
பணம் பாதாளம் வரை பாயும்
சமீபத்தில் படித்த புதினத்தில் இவ்வரிகளைக் கண்டேன்.
Money is Freedom
Money is Power
முற்றிலும் உண்மையான வார்த்தைகள். வசதியான வாழ்க்கைக்கும், பிறர்க்கு உதவுவதற்கும், பணம் மிக மிக அவசியம். ஆனால் பணம் மட்டுமே எல்லாம் இல்லை. பணத்தால் எப்போதும் எல்லாவற்றையும் சாதித்து விட முடியாது என்பதும் மனதில் இருக்க வேண்டும்.

அழகு

அழகைப் பற்றி கவிப்பேரரசு, பாட்டே எழுதியிருக்கார். எதோ, எனக்குத்தெரிந்த அழகைப் பற்றிச் சொல்கிறேன்.
அழகு என்றால் நினைவுக்கு வருவது, ஐஷ்வர்யா ராய், அசின், மாதுரி தீக்ஷித், தீபிகா படுகோன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். (காயத்ரி அவள் பெயரைச் சேர்த்துக் கொள்ளுமாறு கண்களால் ஆணையிடுகிறாள்) ஆனால் இந்த புற அழகெல்லாம் சில காலத்துக்குத்தான். என்னைப் பொறுத்தவரை அழகு என்பது பார்ப்பவர் கண்களிலும் இல்லை, பார்க்கப்படுபவர் உடலிலும் இல்லை. அது பார்ப்பவர் எண்ணத்திலும், பார்க்கப்படுபவரின் மனதிலும் தான் இருக்கிறது. எனக்கு நெல்சன் மண்டேலா கூட அழகாகத்தான் தெரிகிறார்.
அதற்காக அழகாகத் தோற்றமளிக்கக் கூடாது என்பது என் கருத்தல்ல. ஆள் பாதி ஆடை பாதி என்பது போல் பார்ப்பவர் கண்கள் கூசாமலும், நெளியாமலும் இருந்தாலே அழகாகத் தான் இருக்கும்.
அப்பாடா!! கொடுத்த வேலையை ஒரு வழியா செய்து முடிச்சாச்சு. யார் யாருக்கு இந்த நாலு மேட்டர் பற்றியும் எழுதணும்’னு தோணுதோ, எழுதலாம். நான் யாரையும் வம்புக்கு இழுக்கலை!!