Pages

April 16, 2008

அழிக்கப்பட்டு வரும் காலச்சுவடுகள்

சென்ற வாரம், ஹோசூரில் இருக்கும் சந்திரசூடேஸ்வரர் கோயிலுக்குப் போயிருந்தேன். ஒரு சிறிய மலையின் மீது மிகப்பழமையான கோயில். ஹோசூர் ஊரையே இந்த மலைமீதிருந்து பார்க்கலாம். மாலை வேளைகளில் காற்று பிய்த்துக்கொண்டு போகும். என் மனைவிக்கு பெங்களுர் அருகிலுள்ள இடங்களிலேயே மிகவும் பிடித்தது. இங்குள்ள சந்திரசூடேஸ்வரர் ஆலயம் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கோயில் குருக்கள் சொல்கிறார். விஜயநகரை ஆண்ட கிருஷ்ண தேவராயரின் முப்பாட்டனாருக்கு முப்பாட்டன் கட்டியது என்று நம்பப்படுகிறது. ஆலயத்தின் பிரதான மூர்த்தி சிவன். சுயம்பு ரூபத்தில் காட்சி அளிக்கிறார்.

ஆர்பாட்டமும் புதுமையும் நிறைந்த கோயில்களை விட, அமைதியும் பழமையாகவும் இருக்கும் கோயில்களில், மனது ஒருமித்து இறைவனை நினைத்து தியானிக்க முடியும் என்பது என் கருத்து. அதை விட பழமையான ஆலயங்களின் பின்னால் இருக்கும் சரித்திரம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் பிடித்த விஷயம். நான் சொல்வது, கோயில் அமையப்பெற்ற ஸ்தல வரலாறு அல்ல. கோயில் எந்தக் காலத்தில், யாரால் கட்டப்பட்டது. எவ்வளவு நாட்களில் கோயில் கட்டப்பெற்றது. யார் யார் இந்தக் கோயிலை நிர்மாணித்தனர்? அக்கால கட்டத்தில், மக்களின் வாழ்வு எப்படி இருந்தது? இதெல்லாம் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் அதிகம். இந்த விஷயங்களெல்லாம், கோயில் சுவர்களிலே செதுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களில் புதைந்திருக்கும். கவனமாக அதை படித்தோமேயானால், இதிலிருந்து பற்பல ஸ்வாரஸ்யமான விஷயங்கள் புலப்படும். இம்மாதிரி கல்வெட்டுக்களில், என்ன எழுதியிரிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம்.ஆர்வம் என்று சொல்வதை விட ஆசைக்கோளாறு என்றும் சொல்லலாம்.
என்னைப் பொறுத்தவரை, கல்வெட்டுக்கள் எதோ கதை சொல்லும் விஷயங்கள் மட்டுமல்ல. அக்காலத்து மனிதர்கள் தன்னைத் தொடர்ந்து வரும் தலைமுறைக்குச் சொல்ல நினைத்த சில முக்கியமான விஷயங்கள். இப்போ ஆஃபிஸிலே நாம் செய்யும் ப்ரோஜெக்ட்டை, நம்மைத்தொடர்ந்து, அதை மெயின்டெய்ன் பண்ணுபவர்களுக்கு வசதியாக இருக்க டாகுமெண்ட் செய்வதில்லையா? அது போலத்தான், ஏதோ ஒரு முக்கியமான செய்தியை தலைமுறை தலைமுறையாக பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் செதுக்கப்பட்டவை தான் கல்வெட்டுக்கள். இன்றும் வரலாற்றுச் சான்றாக விளங்குவது, கோயில்களில் காணப்படும் எண்ணிலடங்கா கல்வெட்டுக்கள் தான்.


இங்குள்ள ஹோசூர் கோயிலிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் இருக்கின்றன. என்ன தான், விஜயநகர மன்னர்கள் கட்டியிருந்தாலும் கல்வெட்டுக்கள் எல்லாம் 900 வருடங்களுக்கு முன்னமே இருந்த வட்டெழுத்துத் தமிழில் இருந்தது வியக்கத்தக்கது. இந்த லிபியிலிருந்துதான், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள எழுத்துக்கள் உருவாகியிருக்கின்றன. (என்ன சொன்னாலும், என் மனைவி ஒத்துக்கொள்ள மாட்டாள். வட்டாள் நாகராஜ் இதைப் படித்தால் என் வீட்டிற்கு ஆட்டோவில் அடியாள் அனுப்புவார்.)
சென்ற வாரம் ஹோசூர் கோயிலுக்குச் சென்றிருந்த போதுதான் கவனித்தேன், கோயில் சுவர்களை, செப்பனிடுகிறோம் வெள்ளையடிக்கிறோம் பேர்வழியென்று, அக்கெல்வெட்டுக்கள் அழியும் வண்ணம் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கோவிலில் திருப்பணி மேற்கொள்ளும் மனிதர்கள் இது கூடவா தெரியாமலிருப்பர்கள்? கல்வெட்டுக்கள், எவ்வளவோ அந்நிய படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்களைத் தாண்டி காலத்தினால் அழிக்க முடியாத காலச்சுவடுகளை, இப்படியா, பொறுப்பில்லாமல் அதன் மேல் வெள்ளை பூசி, சிமெண்ட் பூசி நம் மனிதர்களே அழிக்கப் புறப்படுவார்கள்?

ஆஃபீஸ் விஷயமாக ஒரு முரை இத்தாலி நட்டிலுள்ள மிலான் நகரம் சென்றிருந்தேன். அங்கு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டுஓமா என்ற சர்ச் உள்ளது. அங்கு மைகேல் ஏஞ்சலோவின் வண்ண ஓவியங்கள் இருக்கின்றன. சர்ச்சின் சில பாகங்கள் காலப்போக்கில் பழுதடைந்ததால், அதை புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் சொன்ன தகவல், வியக்க வைக்கிறது. 17ஆம் நூற்றாண்டில் இந்த சர்ச் எப்படிக் கட்டப்பட்டதோ, அதே போல், அதன் பழமை கெடாத வாறு அதை, புதுப்பித்துக் கொண்டிறுந்தார்கள். இப்படி பழைய கட்டிடங்களை புதுப்பிப்பதற்கென்றே சில நிபுணர்கள் இருக்கிறார்களாம். வெறும் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கட்டிடத்தையே அவர்கள் அப்படி பாதுகாக்கும் போது, அதை விட பழமையான, பல நூற்றாண்டுகளாக அழியாதிருக்கும் காலச்சுவடுகளை, க்ஷண நேரத்தில் அழித்திடுதல் நியாயமாகுமா? போதாக்குறைக்கு, இந்தியாவில் கலாசாரத்துறைக்கென்றே ப்ரத்தியேகமாக ஒரு அமைச்சகம், ஒரு மத்திய மந்திரி, அவர் கீழ் சில அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அமைச்சகம், அதற்கு ஒரு மாநில மந்திரி, இவர்களெல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நல்ல கெட்ட வார்த்தையில் திட்டணும் போல இருக்கு!!

No comments: