Pages

April 17, 2010

அளவுக்கு மீறினால் அமிர்தமும் ....

உண்ண மறுத்து உரக்கம் மறந்து ஒரு செயல் என்னால் செய்ய முடியும் என்றால், அது கிரிக்கெட் பார்ப்பது தான். அதென்னவோ, எந்த தீத்தாலாண்டி அணி விளையாடினாலும் கண்கொட்டாமல் பார்ப்பேன். எனக்கு யார் விளையாடுகிறார்கள் என்பது முக்கியமல்ல. விளையாடப்படும் கிரிக்கெட் தான் முக்கியம். ஒரு கையால் கேசரியும் மற்றொரு கையால் குலாப் ஜாமூனும் சாப்பிட்டுக் கொண்டே முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டு ஜேசுதாஸ் கச்சேரி கேட்பது எவ்வளவு பெரிய பேரானந்தம். அப்படித்தான், கிரிக்கெட் பார்ப்பதும்.

எந்த ஹைதர் அலிகாலத்து மாட்ச்னாலும் சரி, டோனி க்ரெயிக், சோபர்ஸ் விளையாடிய ஆட்டங்களின் மறு ஒளிபரப்பைக் கூட விட்டு வைப்பதில்லை. பார்த்த ஆட்டங்களையே கூடத்திரும்பப் பார்ப்பதில் சலிப்பு கிடையாது. கேட்ட பாடல்களையே திரும்பக் கேட்பதில்லையா. இந்தப் பாழாப்போற கிரிக்கெட் மாட்சை எத்தனை முறை பார்ப்பது என்று காயத்ரி கேட்பதெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை.

இப்படி கிரிக்கெட் பித்துப் பிடித்தவனுக்கு ஐ.பி.எல் என்ற பெயரில் தினமும் 3 மணிநேர சுறு சுறு துரு துரு கிரிக்கெட் ஆட்டங்கள், கரும்பு தின்னக் கூலி கொடுப்பது போல் தான். ஏதோ மூண்ரு மணி நேர சினிமா பார்ப்பது போல் தான். யார் ஜெயித்தாலும் ஆனந்தமில்லை, தோற்றாலும் கவலையில்லை.

முதல் சீஸனில் யார் யாரை வீழ்த்தினார்கள், யார் எவ்வளவு ரன் எடுத்தார்கள் போன்ற புள்ளி விவரங்களெல்லாம் கை விரல் நுனியில். எந்த மாட்சையும் விட்டு வைக்கவில்லை. இரண்டாவது சீஸனில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்தது. இப்போது மூன்றாவது சீஸன் நடந்து கொண்டிருக்கிறது. சில மாட்சுகள் மட்டுமே பார்க்கிறேன். அதுவும் பிடித்த ஆட்டக்காரர்கள் அடினால் மட்டுமே. அதிலும் ஹைதராபாத் கொல்கத்தா ம்ஹூம்.

கிரிக்கெட்டை விட பணம் தான் பெரிதாக விளையாடுகிறதோ என்ற எண்ணம் சில சமயம் எழுகிறது. சச்சின் இவ்வளவு கோடி, தோனி அத்தனை கோடி, புதிதாக முளைத்திருக்கும் கொச்சி அணி 1500 கோடி. ஆக யார் எவ்வளவு ரன் எடுத்தார்கள், எவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள் என்பதை விட்டு விட்டு, யார் எத்தனை டாலருக்கு விலை போனார்கள் என்பது பற்றித்தான் பேச்சு.

இவ்வளவு கோடிகளில் பணம் புரளும் நாட்டிலா மனிதர்கள் பட்டினியால் வாடுகிறார்கள்? பணத்தை வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பண முதலைகள் இன்னும் நிறைய பணம் செய்ய கிரிக்கெட் ஒரு சாக்கு அவ்வளவு தான். இந்தப் பண முதலைகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற ஐ.பி.எல் ஒரு நல்ல வழி. அதனால் தான் கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்கிறார்கள் போலும். இல்லையென்றால், கிரிக்கெட்டின் அரிச்சுவடி கூடத் தெரிந்திராத ப்ரீதா ஜிந்தாவுக்கும் ஷாருக்கானுக்கும் ஏன் இவ்வளவு அக்கறை?

கிரிக்கெட் உலகையே உலுக்கிய சூதாட்ட விவகாரம், இன்று லீகலைஸ் செய்யப்பட்டு விட்டது மாதிரி தான் இருக்கிறது, இந்த ஐ.பி.எல் விளையாட்டு. கோடிகளை கொட்டியிறைத்து, அணிகளை வாங்கியிருக்கும் ஃரான்சைஸிகள், தமது அணிகள் வெற்றி பெறுவதற்காகக் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

எந்தப் பக்கம் திரும்பினாலும் ஐ.பி.எல் பற்றிய விளம்பரம். எல்லா வியாபாரங்களும் ஐ.பி.எல்’ஐ ஒரு சாக்காக வைத்து பணம் செய்கிறார்கள். பிடித்த அணியின் சீறுடையா, 600 ரூபாய். ஐந்து நட்சத்திர ஹோட்டல்காரர்கள் முதல் தெரு முனை வியாபாரி வரை ஐ.பி.எல்’ஐ வைத்து பணம் பண்ணுகிறார்கள். எந்த எஃப்.எம் சானலைத்திருப்பினாலும் ஐ.பி.எல் விளம்பரம். மைதானத்தில் வீரர்களுக்கருகில் உட்கார்ந்து மாட்ச் பார்க்க வேண்டுமா, ஒரு எஸ்.எம்.எஸ் தட்டுங்கள் என்று கூவுகிறார்கள். மெய்யாகவே யாருக்காவது டிக்கெட் கிடைத்ததா, தெரியவில்லை. நமது கிரிக்கெட் ரசிப்புத்தன்மையை நன்றாகவே பயன் படுத்துகிறார்கள். இது போதாதென்று, எஸ்.எம்.எஸ் போட்டி வேறு. ஹேடன் பயன் படுத்தும் பேட்டின் பெயர் என்ன? 1. மங்கூஸ் 2. தர்பூஸ்; சரியான விடை அனுப்புபவர்களுக்கு ஹேடனுடன் சேர்ந்து மூச்சா போகலாம் என்று சொல்லாத குரையாக போட்டிகள்.

ஒவ்வொரு ஃபோருக்கும், சிக்ஸருக்கும் ஆபாச உடையணிந்த மங்கையரின் நாட்டியம். விளையாட்டு வீரர்களுடன் அமர்ந்து மாட்ச் பார்ப்பதற்கு 40000 ரூபாய். அது போக அன்றிரவு நடக்கும் பார்டிக்கும் இலவச அனுமதி. இரவு பார்ட்டியில் நவ நாகரீக மங்கைகளின் ஃபேஷன் மாடல்களின் அணிவகுப்பு. அதற்குப் பிறகு என்னென்னவோ. நடப்பது கிரிக்கெட் போட்டி தானா?

மும்பைக்காக சச்சின் விளையாடுகிறார் என்பதால், சென்னைக்கெதிராக அவர் விளாசும் ஒவ்வொரு ஃபோரும் சிக்ஸரையும் ரசிக்க முடியவில்லை. இவன் எப்போது ஒழிவான் என்று ஹேடனை வெறுத்த மனம், யப்பா ஹேடா, சென்னை மானமே உன் கையில் தானப்பா இருக்கு என்று வேண்டுகிறது. ஐய்யையோ நான் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை, என் மனம் இப்படி மாறும் என்று.

சரி யார் எவ்வளவு பணம் பண்ணினால் நமக்கென்ன? கிரிக்கெட் தானே நமக்கு முக்கியம் என்று பார்க உட்கார்ந்தால், 8 அணிகள், 60 மாட்சுகள், தினமும் இடைவிடாது கிரிக்கெட். கொஞ்சம் திகட்டத் தான் செய்கிறது. இது போட்தாதென்று அடுத்த வருடத்திலிருந்து இன்னும் இரண்டு அணிகள் களத்தில் இறங்கப் போகின்றன. 94 மாட்சுகளை. இப்பவே கண்னக் கட்டுதே என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

இதோ அடுத்த வாரம் டி20 உலகக்கோப்பை ஆரம்பிக்க போகிறது. நம் வீரர்கள் ஐ.பி.எல்’இல் ஆடி ஓய்ந்து ஏற்கனவே போன வருடம் மண்ணைக் கவ்வி விட்டார்கள். இந்த வருடமும் அதே நிலைமை வராமலிருக்க வேண்டும். ஐ.பி.எல் விளையாட்டினால் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு வித ஒற்றுமையில்லா நிலைமை உண்டாகிடுமோ என்ற அச்சம் உண்டாகிறது.

இந்தக் கோமாளித்தனம் போதுமே. ஏதோ மூன்றாண்டுகள் நடத்தினோம், கொஞ்சம் பணம் பார்த்தோம் என்று இந்த ஆண்டோடு இந்த கோலாகலத்தை நிறுத்திக் கொண்டால் நல்லது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சும்மாவா சொன்னார்கள்.

“அப்பாடா, அப்போ இன்னிலேர்ந்து கிரிக்கெட் கிடையாதா. சீரியல் ஏர்டெல் சூப்பர் சிங்கரெல்லாம் பார்க்கலாம்! ஹப்பா” என்று காயத்ரி கூதூகலிக்கிறாள்.

“இல்லை இல்லை, இன்னிக்கு சென்னை அணிக்கு வாழ்வா சாவா மாட்ச். பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து விட்டால் அரை இறுதிக்குப் போய் விடலாம். நேற்று பெங்களூர் அணி தோற்றுப் போய் விட்டதால், சென்னை அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகிவிட்டது. + 0.270 ரன் ரேட் இருக்கு. ஒரு வெற்றி ஒரேயொரு வெற்றி தான் வேண்டும்” என்று நான் சொல்ல, சரி தான் ஏதோ நல்ல புத்தி வந்துடுத்து நான் நினைச்சது தப்புத்தான். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிடுத்தா என்று முகத்தை வெட்டிக் கொண்டு போய்விட்டாள்.

8 comments:

Karthik said...

Firsttt!! :)

Karthik said...

பழைய மேட்ச் பார்க்கிறது சேன் பின்ச். ஹாஸ்டல்ல ஜூனியர்ஸ் நாலு பேர் நெளிஞ்சுகிட்டே உக்காந்திருந்தானுங்க ஒருநாள். நான் கங்குலி ட்ராவிட்டோட முதல் டெஸ்ட் பாத்திட்டிருந்தேன். :))

உண்மைதான் விஜய். சீரியஸா எடுத்துக்காம ஜாலியா பாக்கலாம். அப்பப்போ க்ளாஸியான இன்னிங்க்ஸ் பாக்க முடியறதே அந்த வகையில் சந்தோஷம். :)

Vidhya Chandrasekaran said...

எங்கப்பாவும் இப்படியே. பிளாக் அண்ட் வொயிட் மேட்செல்லாம் விடாமப் பார்த்து வெறுப்பேத்துவார்.

குந்தவை said...

//கிரிக்கெட்டை விட பணம் தான் பெரிதாக விளையாடுகிறதோ என்ற எண்ணம் சில சமயம் எழுகிறது.

tooooo late.

//சரி தான் ஏதோ நல்ல புத்தி வந்துடுத்து நான் நினைச்சது தப்புத்தான். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிடுத்தா என்று முகத்தை வெட்டிக் கொண்டு போய்விட்டாள்.

:)

Rajalakshmi Pakkirisamy said...

ithai pathi pathivu podanumnu naanum romba naala ninaichite irukken... :)))))))))))))))))))

தாரணி பிரியா said...

//சரி தான் ஏதோ நல்ல புத்தி வந்துடுத்து நான் நினைச்சது தப்புத்தான். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிடுத்தா என்று முகத்தை வெட்டிக் கொண்டு போய்விட்டாள். //

:) ithu super :)

முகுந்தன் said...

// ஹேடன் பயன் படுத்தும் பேட்டின் பெயர் என்ன? 1. மங்கூஸ் 2. தர்பூஸ்; சரியான விடை அனுப்புபவர்களுக்கு ஹேடனுடன் சேர்ந்து மூச்சா போகலாம் என்று சொல்லாத குரையாக போட்டிகள். //

சான்சே இல்ல, பிரிச்சு மேஞ்சிட்டீங்க :))

Vijay said...

\\ Karthik said...
பழைய மேட்ச் பார்க்கிறது சேன் பின்ச். ஹாஸ்டல்ல ஜூனியர்ஸ் நாலு பேர் நெளிஞ்சுகிட்டே உக்காந்திருந்தானுங்க ஒருநாள். நான் கங்குலி ட்ராவிட்டோட முதல் டெஸ்ட் பாத்திட்டிருந்தேன். :))\\
கங்குலி திராவிடெல்லாம் புது ஆளுங்க :) நான் சொல்வது இன்னும் பழைய ஆளுங்களை :)

\\வித்யா said...
எங்கப்பாவும் இப்படியே. பிளாக் அண்ட் வொயிட் மேட்செல்லாம் விடாமப் பார்த்து வெறுப்பேத்துவார்.\\

Old is Always Gold, Vidhya :)

\\ குந்தவை said...
tooooo late.\\
என்ன பண்ணறது எல்லாமே லேட்டாத் தான் புரியுது :)

\\Rajalakshmi Pakkirisamy said...
ithai pathi pathivu podanumnu naanum romba naala ninaichite irukken... :)))))))))))))))))))\\
ஆஹா பெண்கள் கூட ஐ.பி.எல் பார்க்கறாங்க :)

\\ தாரணி பிரியா said...
:) ithu super :)\\
ரங்கமணிங்கள்’லா ஒண்ணாத்தான் யோசிப்பாங்க போலிருக்கே :)

\\ முகுந்தன் said...
// ஹேடன் பயன் படுத்தும் பேட்டின் பெயர் என்ன? 1. மங்கூஸ் 2. தர்பூஸ்; சரியான விடை அனுப்புபவர்களுக்கு ஹேடனுடன் சேர்ந்து மூச்சா போகலாம் என்று சொல்லாத குரையாக போட்டிகள். //

சான்சே இல்ல, பிரிச்சு மேஞ்சிட்டீங்க :))\\
நீங்க வேணா பாருங்க, ஒரு நாள் இப்படிக் கூட அறிவிப்பு வரலாம் :)

கமெண்டிய அனைவருக்கும் நன்றி :)