என்ன கிறுக்கினாலும், "இவன் ரொம்ப நல்லா எழுதறான்டா" என எப்போதும் ஊக்குவிக்கும் எனதருமை வாசகப்பெருமக்களுக்கு இப்பதிவினை காணிக்கையாக்குகிறேன்.
சென்னையிலிருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பிடித்து கொல்கத்தா வந்திறங்கிய தினம், ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. என்னடா நமக்குத்தான் இவ்வளவு பெரிய வரவேற்பா? "ரொம்ப அலட்டிக்காதேடா விஜய் என்னவென்று விசாரி" என எச்சரித்த மனதின் சொற்படி, அருகிலிருக்கும் பெங்காலி மனிதரிடம் என்னவென்று விசாரித்தேன். "ஆஜ் பிஷ்பகர்மா பூஜா ஆஷ்சே" என்றார் வாயில் பான் அடக்கியபடியே. என்ன கருமாந்திர பூஜையோ, இதற்கு மேல் விசாரித்தால் அவர் வாயில் இருந்த பான் என் மேல் அபிஷேகம் ஆகிடும் என்பதால் மேற்கொண்டு கேட்கவில்லை.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பிளாட்ஃபாரத்திற்குள் தன்னை முழுதாகப் புகுத்திப்பதற்குள் சாமான் தூக்கும் கூலியாட்கள் ரயிலுக்குள் முகமூடிக்கொள்ளையர் மாதிரி உள்ளே புகுந்தனர். எனது பெரியப்பா மகன் கொல்கத்தாவில் இருந்ததால் எனக்குப் போயிறங்க ஓர் இடம் இருந்தது. அவர் அனுப்பிய டிரைவர் என்னை அழைத்துச்செல்ல ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். விமான நிலையத்தில் பெரிய பெரிய VIP'க்களுக்காக placard எல்லாம் வைத்திருப்பார்களே, அந்த மாதிரி எனக்காக placard எல்லாம் கொண்டு வந்து, காத்திருந்து என்னை அழைத்துப் போனார். ஒர் வாரம் அண்ணா வீட்டிலிருந்து தான் ஆஃபீஸ் போனேன். மன்னியும் திருநெல்வேலி ஊராக இருந்ததால் home sickness அவ்வளவாகத் தெரியவில்லை.
நான் வேலை பார்த்த ஆஃபீஸ் பற்றி ஒரு சிறு விளக்கம். கம்பெனியின் பெயர் வோல்டாஸ் (Voltas). குளிர் சாதனப் பெட்டிகள் மட்டுமே தயாரிக்கிறார்கள் என்று நினைத்திருந்த நான், பலதரப்பட்ட வியாபாரம் செய்கிறார்கள் எனத் தெரியவந்தது கல்கத்தா போன பிறகு தான். ஆஃபீஸ் வீற்றிருந்த கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. எங்கள் ஆஃபீஸ் நாலாவது மாடியில். பக்கத்து கட்டிடம் 7 மாடிகள் கொண்டது. எங்கள் ஆஃபீஸ் ஜன்னலிலிருந்து எட்டிப்பார்த்தால் பக்கத்து கட்டிடத்தின் மொட்டைமாடி தெரியும். ஒவ்வொரு தளமும் சுமார் 35-40 அடி உயரமாவது இருக்கும். ஆஃபீஸில் கிட்டத்தட்ட எல்லோருமே நாற்பதைக் கடந்தவர்கள். பெண்களைத்தவிர அநேகமாக எல்லோருமே புகைப்பிடிப்பார்கள். எங்கே வேணுமானாலும் புகை பிடிக்கலாம். பான் போட்டு ஜன்னலிலிருந்து எங்கே வேணுமானாலும் துப்பலாம். அவ்வளவு சுதந்திரம்.
குளிர் சாதனப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தின் பிராந்தீய ஆஃபீஸில் குளிர் சாதனப் பெட்டிகள் கிடையாது. "ஆஃபீஸ் முழுவதையும் குளிரூட்டப் பணம் இருக்கு. எங்களுக்குச் சம்பளம் கூட்ட மட்டும் பணமில்லையா" என யூனியன் கேட்டதால், வேண்டாம், ஆஃபீஸில் குளிர் சாதனங்களே பொறுத்த வேண்டாம் என முடிவெடுத்து விட்டார்களாம். எவ்வளவு உயர்ந்த சிந்தனை?
ஆஃபீஸ் கட்டிடத்தில் ஒரே ஒரு லிஃப்ட் தான். அதை இயக்குவதற்கு ஒரு தனி ஆள். அவனைத் தவிர அதை யாராலும் இயக்க முடியாது. அப்படியொரு ஹைதர் அலி காலத்து லிஃப்ட். இடியே விழுந்தாலும் காலையில் 9.30 முன்னால் லிஃப்டை இயக்க மாட்டான். 9.28 க்கு லிஃப்டுக்குப்பக்கத்திலேயே நின்று கொண்டு உள்ளங்கையினுள் புகையிலையோ என்ன எழவோ அதைப் போட்டு மற்ற கையின் கட்டை விரலால் போட்டு தேய் தேய் என்று தேய்த்துக் கொண்டிருப்பான், ஆனால் லிஃப்டை இயக்க மாட்டான். எல்லா அலுவகங்களும் 9.30 மணியிலிருந்து 5.30 வரை சரியாக 8 மணி நேரம் இயங்கும். 5.20க்கே மக்கள் மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு வீட்டுக்குப் போக ஆயுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் லிஃப்ட் இயக்குபவனும் 5.30க்கே லிஃப்டை ஆஃப் செய்து விட்டு, அதை ஒரு பெரிய சங்கிலி போட்டு கட்டி விட்டுச் சென்று விடுவான். அதற்குப் பிறகு 4 மாடிகள் லொங்கு லொங்குவென்று நடக்க வேண்டியது தான். வெளியே எங்கு சென்றாலும் 5.30க்குள் வந்து விட வேண்டும். இல்லையேல் 4 மாடிகள் ஏறுவதற்குள் (இந்தக்கால கட்டிடத்தில் சுமார் 7 மாடிகள்) டங்குவார் அருந்துடும்.
அந்த லிஃடில் போக ஒரு பெரிய கூட்டமே கியூவில் நின்று கொண்டிருக்கும். வங்காளத்தில் இதுவொரு நல்ல பழக்கம். எங்கும் எதிலும் கியூ தான். பஸ் நிறுத்ததிலிருந்து, சினிமா தியேட்டர், கோவில், ஹோட்டல், ரயில் நிறுத்தமென அனைத்து இடங்களிலும் கியூ.
கொல்கத்தா விசித்திரமான ஒரு ஊர். இந்தியாவின் கிழக்குப்பகுதியில் இருப்பதால், சூரியன் 4.45க்கெல்லாம் கண் விழித்துவிடுவார். மாலை 5.30 அலுவலகங்களிலிருந்து எல்லோரும் விடு திரும்பும் போது அவரும் இன்றைய duty முடிந்தது என உரங்கப் போயிடுவார். எதற்கெடுத்தாலும் பந்த் நடத்துவார்கள். உப்புச் சப்பில்லாத விஷயத்திற்கெல்லாம் ஊர்வலம் போவார்கள். காலையில் டீயுடன் ரசகுல்லா இரண்டை உள்ளே தள்ளிவிட்டுத் தான் வயிற்றிலுள்ளதை வெளியே தள்ளுவார்கள். 2 ரூபாய் டிராம் டிக்கட் எடுத்து பாதி ஊரைச் சுற்றிப்பார்க்கலாம். 3 ரூபாய்க்கெல்லாம் ரிக்ஷா காரன் 2 கிலோமீட்டர் தூரம் மிதிப்பான். சில குண்டு மாமிகள் கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் நோஞ்சானாக இருப்பவனின் கை ரிக்ஷாவில் போவார்கள். நிறைய மக்கள் ரோட்டிலேயே குளிப்பார்கள். அடுக்கு மாடிக் கட்டிடங்களின் படிக்கட்டுத் திருப்பங்களில் தவறாமல் பான் போட்டுத் துப்புவார்கள்.
கொல்கத்தாவில் எது நன்றாக இருக்கோ இல்லையோ இனிப்பு வகைகள் ரொம்ப நன்றாக இருக்கும். திருப்பதி லட்டுவில் பாதியளவு இருக்கும் குலாப் ஜாமுன் வெறும் 1 ரூபாய் தான். தைரியமாக வாங்கிச் சாப்பிடலாம். நல்ல நெய்யில் செய்திருப்பார்கள். இன்னொன்று பெங்காலிப் பெண்கள். நானும் என் நண்பனும், "என்ன போட்டுடி உங்க அம்மா உன்னை வளர்த்தா" என்போம், அந்தப் பெண் அருகிலியே. புரியவாபோகிறது என்ற தெனாவட்டு தான்! ஸ்கூல் படிக்கும் பெண்கள் கூட 20 மதிக்கத்தக்கவர்கள் மாதிரி இருப்பார்கள். எல்லாம் ரசகுல்லா தின்ன எஃபக்ட் போலிருக்கு.
வேலையில் சேர்ந்து 4-5 நாட்களில் அவன் எனக்கு அறிமுகம் ஆனான். அறிமுகப்படுத்திக் கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும். அவன் பெயர் ரகுராமன். பாலக்காடு சொந்த ஊர். என் ஊரைக் கேட்டவுடன், "ஆ நீ திருநெல்வேலியாடா. எனக்கும் தமிழ் தெரியும்" என்றான். அப்பாடா ஒரு வழியா ஒரு தமிழ் முகம் இருக்கிறதே என்று மனம் நிம்மதி அடைந்தது. "நான் தனியாத்தான் இருக்கேன். நீ என் கூட ஜாயின் பண்ணிக்கோயேன். அது வோல்டாஸின் வீடு தான். Company Accomodation. மாதச் சம்பளத்திலிருந்து HRA வைப் பிடித்துக் கொண்டு விடுவார்கள்" என்றான். அன்று சாயங்காலமே அவன் தங்கியிருக்கும் விட்டிற்குப் போனேன்.அதை வீடு என்று சொல்வதை விட பெரிய பங்களா என்று தான் சொல்ல வேண்டும். பிரம்மாண்டமான அரைகள். கட்டில்கள் மேஜைகள், நாற்காலிகள், பெரீஈய டைனிங்க் டேபிள் என சகல வசதியுடன் கூடிய ஒரு வீடு. ஆனால் ரொம்பப் பழைய வீடு. ஆஃபீஸில் அதை பூத் பங்களா என்று தான் சொல்லுவார்கள். அதுவும் கொல்கத்தாவின் மையப் பகுதியான பார்க் ஸ்ட்ரீட் என்னும் இடத்தில். கரும்பு தின்ன கூலியா? அந்த வார இறுதியிலேயே அண்ணா வீட்டிலிருந்து மூட்டை முடிச்சுகளெல்லாம் தூக்கிக் கொண்டு இங்கு வந்து விட்டேன். அன்று முதல் அவனுடன் கொல்கத்தாவில் அடிக்க ஆரம்பித்த லூட்டி, யப்பா சொல்லி மாளாது.
September 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
/திருப்பதி லட்டுவில் பாதியளவு இருக்கும் குலாப் ஜாமுன் வெறும் 1 ரூபாய் தான். தைரியமாக வாங்கிச் சாப்பிடலாம். நல்ல நெய்யில் செய்திருப்பார்கள். இன்னொன்று பெங்காலிப் பெண்கள்.//
இதில் பெங்காலி பெண்களை பற்றி என்ன சொல்ல வரீங்க ?
/என்ன கிறுக்கினாலும், "இவன் ரொம்ப நல்லா எழுதறான்டா" //
அவ்வ்வ்வ்.....
//நிறைய மக்கள் ரோட்டிலேயே குளிப்பார்கள்.//
சீ. ரொம்ப மோசம் ...
//அன்று முதல் அவனுடன் கொல்கத்தாவில் அடிக்க ஆரம்பித்த லூட்டி, யப்பா சொல்லி மாளாது.
//
சீக்கரம் சொல்லுங்க........
இந்த expirence ரொம்ப நல்லா இருக்கு விஜய்...சீக்கரம் அடுத்த அடுத்த பகுதிகள போடுங்க...
Rasagulla Rasagulla-than
\\ முகுந்தன் said...
இதில் பெங்காலி பெண்களை பற்றி என்ன சொல்ல வரீங்க ?\\
முதலில் சொன்னதற்கும் பிறகு சொன்னதற்கும் சம்பந்தம் படுத்திப் பார்க்கப்படாது. :-)
\\ முகுந்தன் said...
அன்று முதல் அவனுடன் கொல்கத்தாவில் அடிக்க ஆரம்பித்த லூட்டி, யப்பா சொல்லி மாளாது.
சீக்கரம் சொல்லுங்க........\\
ரொம்ப ஓவரா எதிர்பார்க்காதீங்க :-)
\\Blogger Divyapriya said...
இந்த expirence ரொம்ப நல்லா இருக்கு விஜய்...சீக்கரம் அடுத்த அடுத்த பகுதிகள போடுங்க...\\
சீக்கிரமே எழுதிடுவோம் !!
\\Subbu said...
Rasagulla Rasagulla-than\\
இதை அடுத்த பதிவுல போடலாம்னு நினைச்சிருந்தேனே. அதுக்குள்ளே நீங்க முந்திக்கிட்டீங்களா!!
நல்லாதாங்க இருக்கு உண்மைலேயே தமிழ் நாட்டை தண்டிட்டலே பான் துப்பல்தான் . நம்ம மேல விழாம இருந்த அது நம்ம அதிர்ஷ்டம்
\\முஹம்மது ,ஹாரிஸ் said...
நல்லாதாங்க இருக்கு உண்மைலேயே தமிழ் நாட்டை தண்டிட்டலே பான் துப்பல்தான் . நம்ம மேல விழாம இருந்த \\
வருகைக்கு மிக்க நன்றி ஹாரிஸ் முஹம்மது. ஒரு தடவை என் மேலேயே துப்பியிருக்காங்க.
கலக்கலுங்க்னா..
;)
Intresting:-)
Flash back galattas nerya stock irukkum poliruku:))
Post a Comment