இன்று காலையிலிருந்தே என் நேரமே சரியில்லை என்று நினைக்கிறேன். லன்ச் கட்டிக்கொடுக்க மனைவி லேட் ஆக்கியதால் கம்பெனி பஸ்ஸை விட்டாச்சு. என் மைத்துனர் ஆஃபீஸும் பக்கத்திலிருப்பதால் அவரோடு தொற்றிக்கொண்டு வந்து விடலாம் என்றெண்ணி அவரோடு கிளம்பி வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் கூட கடந்திருக்கவில்லை, அநியாயமாக எல்லா வண்டிகளும் நகராமல் இருந்த இடத்திலேயெ நிற்கின்றன. என்ன ஏது ஒன்றும் புரியவில்லை.
பெங்களூர், டிரஃபிக் ஜாமுக்கு பேர் போனது தான். இருந்தாலும் அஃபீஸ் போகும் நேரத்திலா? கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் முன்னால் சென்றோம். இரு சக்கர வாகனமாக இருந்ததால் இண்டு இடுகிலெல்லாம் நுழைந்து நுழைந்து போனோம். இதே நான் காரோட்டும் போது யாராவது போனால், அந்நியன் ஸ்டைலில் இறங்கிப்போய் நாலு சாத்து சாத்தணும் போல் இருக்கும். என் போறாத வேளை, இப்படி போனால் தான் இன்று காரியம் நடக்கும். ஒரு கட்டத்துக்கு மேல் ஒரு வாகனமுமே போக முடியவில்லை. சரி வண்டியைத் திருப்புவோம் என்று ரோட்டிற்கு நடுவிலுள்ள மீடியன் மேல் பைக்கை தூக்கி, ஒரு ஒத்தையடிப்பாதை வழியாக செலுத்தலானோம். நல்ல வேளை, பெங்களூரில் நிறைய பேருக்கு இந்த வழி தெரிந்திருக்கவில்லை. அதனால் நாங்கள் வந்த பாதையில் அவ்வளவாக வாகனங்கள் இல்லை. இந்தப் பாதையில் வந்தால் பெங்களூரிலுள்ள வயல் வெளியெல்லாம் பார்க்கலாம். இன்று அதையெல்லாம் பார்த்து ரசிக்கும் ஆர்வம் இல்லை. உடைந்து போன சாலையில் முட்டி மோதி கியர்கள் பல மாற்றி ஒரு வழியாக ஆஃபீஸ் வந்து சேர்ந்தேன். 30 நிமிடம் கடக்க வேண்டிய பாதையை 1.30 மணி நேரத்தில் கடந்து வந்தோம்.
ஒரே தலைவலி. வேலை செய்யும் எண்ணமே இல்லை. ஒரு காஃபி குடித்த பிறகு தான் தெம்பு வந்தது. எனக்கு பின்னால் தான் என் மனேஜர் உட்கார்ந்திருக்கிறார். இன்னும் ப்ளொகிக்கொண்டிருந்தால் புடனியைச் சேர்த்து ஒன்று விட்டாலும் விடுவார். கொஞ்சம் வேலையும் பார்ப்போம்.
தினமும் என் மனைவி தான் எழுப்புவாள். அவள் முகத்தில் தான் தினம் விழிப்பு என்றாகிவிட்ட பிறகு, யார் மூஞ்சியில் முழித்தேன் என்று தலைப்பு போட முடியுமா. அதனால் தான் "எந்த வேளையில் முழித்தேனோ" என்று தலைப்பு :)
நான் இப்படியெல்லாம் எழுதறதை பார்த்துட்டு நான் மனைவிக்கு பயந்தவன் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம். ஐயா வீட்டுல பயங்கர ஸ்ட்ரிக்ட் :)
4 comments:
\\நான் இப்படியெல்லாம் எழுதறதை பார்த்துட்டு நான் மனைவிக்கு பயந்தவன் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம். ஐயா வீட்டுல பயங்கர ஸ்ட்ரிக்ட் :)\\
சரி ரைட்டு...நம்பிட்டோம்:))
\\இன்னும் ப்ளொகிக்கொண்டிருந்தால் புடனியைச் சேர்த்து ஒன்று விட்டாலும் விடுவார்.\\
புடனி னா...தலையின் பின் பகுதியா???
\\புடனி னா...தலையின் பின் பகுதியா???\\
அதே தான். இதெல்லாம் திருநெல்வேலித் தமிழ். எங்கேயாவது பார்த்துக்கொண்டு எங்கேயாவது மோதிண்டா ,"என்ன கண்ணு புடனிலயா இருக்கு"ன்னு எங்க ஊர் பக்கத்துல பேசிக்குவோம்.
Post a Comment