நண்பனின் கல்யாணத்திற்காகச் சென்னைக்குக் காரிலே செல்லலாம் என்று முடிவு செய்து, சனிக்கிழமை அதிகாலையிலேயே பெங்களுரிலிருந்து புறப்பட்டோம். போகும் வழியில் வேலூரில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் தங்கக்கோயிலையும் தரிசித்துவிட்டுப் போகலாம் என்றும் முடிவானது. உறவினர் ஒருவர் கோயிலைப்பற்றி ஆஹா ஓஹோவென்று சொன்னது கோயிலுக்குப் போகும் ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தியது. பெங்களுரிலிருந்து மூன்று மணி நேரத்தில் வேலூர் வந்தாயிற்று. வேலூர் ஊருக்குள் சென்று இந்தக்கோயிலை வந்தடைய இன்னொரு மணி நேரமாகிவிட்டது.
சரியாக 11 மணிக்கு காரை பார்க் செய்து விட்டு வரும் பொழுது தான் கவனித்தேன், "தரிசன நேரம் 4" என்று போடப்பட்டிருந்தது. சில கௌன்டர்களும் அருகில் இருந்தன. விசாரித்த போது, ஃரீ தரிசனம் பெற 4 மணி நேரம் காக்க வேண்டியிருக்கும் என்றார்கள். "அப்போ சீக்கிரம் தரிசனம் செய்யணும்னா என்ன செய்யணும் என்று கேட்டதற்கு", ஆளுக்கு 100 ரூபாய் டிக்கட் வாங்கினால் ஸ்பெஷல் தரிசனம் கிடைக்கும். அதற்கு காக்க நேரிடாது என்று பதில் வந்தது. எனக்கு இந்த மாதிரி காசு கொடுத்து இறவனைக் காணும் பழக்கம் ஏனோ பிடிக்காது. இருந்தாலும் 4 மணி நேரம் பொறுத்திருக்க யாருக்கும் பொறுமை இல்லை. கேட்ட தொகையைக்கட்டி விட்டு உள்ளே செல்லலானோம்.
இந்தக் கோயிலை, நாராயணி பீடத்தைச் சேர்ந்தவர்கள் கட்டியிருக்கிறார்கள். 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரீஈஈய தோட்டத்தை அமைத்து, அதற்கு நடுவில் ஓர் குளத்தையும் அமைத்து, அதற்கு நடுவில் பொன் தகடுகளால் நாராயணி(லக்ஷ்மிக்கு இன்னொரு பெயர்)சன்னதி அமத்திருக்கிறார்கள். உள்ளே சென்ற பிறகு தான் தெரிந்தது, எல்லோருமே 100 டிக்கட் வங்கித்தான் உள்ளே வந்திருக்கிறார்கள் என்று. உள்ளே வரும் எல்லோரையும் ஒரு கிலோமீட்டர் தூரமாவது வளைந்து வளைந்து போகும் படி செய்திருக்கிறார்கள். ஏனோ தெரியவில்லை. ஃரீ என்ட்ரி வழியாக வரும் பக்தர்களுக்கான பாதை, டிக்கட் கொடுத்து வரும் பக்தர்களுக்கான பாதையைவிட நன்றாகவே இருக்கிறது. கோயில் முழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகள்ளல் செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள். சன்னதிக்குச் சென்றதும். பிரஹாரத்தை முதலில் சுற்றிவிட்டுத்தான் தேவியை தரிசிக்க முடியும். ஆனால் பிரதக்ஷிணம் செய்யும் வழியை மாற்றி வைத்திருக்கிறார்கள். கோயில் ஆகம விதிப்படி இது தவறானது. டிக்கட் வாங்கியவர்களுக்கு மட்டும் பிரசாதம் உண்டு. மற்றவர்கள் விலை கொடுத்து வாங்க வேண்டும்.
கோயிலுக்கு வரும் அத்தனை பேரும், கோயிலில் ஜொலிக்கும் தங்கத்தைப் பார்த்தவண்ணம் தான் இருக்கிறார்களே தவிர யாரும் பக்தி சிரத்தையோடு சாமி கும்பிட்டார்களா என்பது சந்தேகமே. (என்னையும் சேர்த்துத்தான்). எனக்கென்னவோ பணம் பண்ணுவதற்குத்தான் இப்படி கோயிலைக் கட்டியிருக்கிறர்களோ என்று தோன்றுகிறது. இம்மாதிரியான ஹை-டெக் கோயில்களைவிட இறை வழிபாட்டிற்காகவே கறுங்கற்களாலான தொன்மையான கோயில்களில் மனமொருமித்து, இறவனை தியானிக்க முடிகிறது என்பது எனது தாழ்மையான கருத்து.
பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்துவோம் என்று பாரதி சொன்னார். பணம் செய்வதற்காகப் பள்ளிகள் திறக்கப்படும் போது, கோயில்களை மட்டும் ஏன் விட்டுவைப்பானேன் என்று நினைத்து விட்டார்கள் போலும்!!
3 comments:
ஹை-டெக் கோயில்களைவிட இறை வழிபாட்டிற்காகவே கறுங்கற்களாலான தொன்மையான கோயில்களில் மனமொருமித்து, இறைவனை தியானிக்க முடிகிறது என்பது எனது தாழ்மையான கருத்து.
எனது கருத்தும் அதுவே.
//இம்மாதிரியான ஹை-டெக் கோயில்களைவிட இறை வழிபாட்டிற்காகவே கறுங்கற்களாலான தொன்மையான கோயில்களில் மனமொருமித்து, இறவனை தியானிக்க முடிகிறது என்பது எனது தாழ்மையான கருத்து.
//
கோவில் என்பது மனதிற்கு அமைதி அளிக்கவேண்டிய இடம் வியாபாரம் செய்யும் இடம் அல்ல! என்பது எனது கருத்து
i agree with what u say vijay.the feel and vibration in ancient temples is priceless.these new hype temples are purely for business.
Post a Comment