Pages

May 13, 2008

உனக்கு மட்டுமா தம்பி?!

எங்க அப்பா கடைக்கு பக்கத்தில் ஆர்ய பவன் ஹோட்டல் இருக்கிறது. நெல்லை சைவ பிள்ளைமார் ஹோட்டல். டிஃபன் வகைகள் வெகு ஜோராக இருக்கும். அப்பா கடைக்கு எப்போ போனாலும் அநேகமாக இங்கு ஒரு விசிட் அடித்து விடுவேன். அப்பாவை ஒரு பத்து நிமிஷம் நச்சரிக்க வேண்டும். "சந்தைக்குப் போணும்; ஆத்தா வையும் காசு கொடு" என்று 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசன் ரஜினியை நச்சரிப்பதுபோல் கேட்டுக்கொண்டே இருந்தால் "போய்த் தொலை" என்று ஐந்தோ பத்தோ கொடுப்பார். நேரே இந்த ஹோட்டலுக்குத்தான் விஜயம்.
ஒரு முறை (ஆறோ ஏழோ படிக்கும் போது) சில முக்கியமான கஸ்டமர் வந்திருக்கும் போது, நான் கடைக்குள்ளே என்ட்ரி கொடுத்தேன். எப்போதும் போல தலைச் சொரிந்து கொண்டே "அப்பா" என்றேன். ஒண்ணுமே கேட்காமல் பத்து(!) ரூபாய் எடுத்துக் கொடுத்துவிட்டார். "கஸ்டமர் வந்திருக்கும் போது, இவன் மானத்தை வாங்க வேண்டாம்" என்று நினைத்தாரோ என்னவோ? "ஆஹா! இப்படி கஸ்டமர் வந்திருக்கும் போது அப்பாவிடம் பணம் கேட்காமலேயே கரந்துவிடலாம் போலிருக்கே" என்ற உண்மை வெகு நாட்களுக்குப் பிறகு தான் தெரிந்தது.
பத்து ரூபாய் கிடைத்தது பெரிய பொக்கிஷம் மாதிரி. நேரே ஆர்ய பவன் போனேன். இதற்கு முன் சாப்பிடாதது என்னென்ன என்று பட்டியலிட்டேன். ஒவ்வொண்ணா ஆர்டர் செய்தேன். ஒவ்வொன்றையும் ஆர்டர் செய்யும் முன் சர்வரிடம், இதன் விலை எத்தனை? விலைப்பட்டியலில் போட்டிருக்கும் விலையும் இவன் சொல்லும் விலையும் ஒன்றுதானா என்று வெரிஃபை பண்ணிக்கொள்வேன். பில் அமௌண்ட் பத்து ரூபாயைத் தாண்டிவிடக்கூடாதே என்ற கவனம் வேறு. (என்னென்ன சாப்பிட்டேன் என்று சொல்ல மாட்டேன். நீங்க அப்புறம் கண்ணு போட்டுட்டீங்கன்னா?) அப்பப்போ அப்பா கொடுத்த பணம் பாக்கெட்டில் இருக்கா என்றும் பார்த்துக்கொள்வேன். (பணம் இல்லாம மாவாட்டணுமே என்ற பயம்!)
ஒரு வழியா சாப்பிட்டு முடித்தபின் பில் பத்து ரூபாய்க்குள்தான் வந்திருப்பதைப் பார்த்து நிம்மதி. அப்பாடா! மாவாட்ட வேண்டாம்! பில்லை எடுத்துக்கொண்டு கௌன்டருக்கு பணம் செலுத்தச் சென்றேன். பில்லை வாங்கிகொண்டவர் பில்லைப்பார்த்தார், என்னைப்பார்த்தார். என்ன நினைத்தாரோ, "உனக்கு மட்டுமா தம்பி?" என்று கேட்டார்.
அவர் ஏன் அப்படிக் கேட்டார் என்று புரியவில்லை. ரொம்ப ஜரூரா "ஆமாண்ணே" என்று வெள்ளந்தியாக தலையாட்டினேன். கடைக்குத் திரும்பி வந்ததும் அப்பாவிடம் மீதி சில்லரைக் காசைக் கொடுக்க (அப்போதெல்லாம் பாக்கெட் மணி கிடையாது), "என்னடா இவ்வளவு தானா?" என்றார். "ஆமாம்பா. அந்த ஹோட்டல்ல கூட உனக்கு மட்டுமா தம்பின்னு கேட்டான்" என்று சொல்லித் தொலைத்தேன். அவ்வளவு தான். கடையில் இருந்தவர்களெல்லாம் ஒரே சிரிப்பு. அப்பவும் எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. ஆனால் அப்பா மட்டும் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக பையில் மீதிக்காசைப் போட்டுக்கொண்டார்.
வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம், " உன் பிள்ளை, கஸ்டமருக்கு முன்னால என் மானத்தையே வாங்கிட்டான். கொடுத்த காசு அம்புட்டையும் செலவழிச்சு தின்னுபுட்டு, ஹோட்டல்காரன் கேலியா பேசினதைக் கூட பெருமையா சொல்லிக்கிறான்" என்று தலையயிலடித்துக் கொண்டார். "ஏண்டா, என்னடா பண்ணின? எதுக்கு அப்பா கோபமா இருக்கார்?", என்று அம்மா கேட்டதற்கு, நான் நடந்ததைச் சொன்னேன். அம்மாவும் சிரித்துக் கொண்டே "நல்ல பிள்ளை டா போ" என்றாள்.
இன்றும் எனக்கு ஹோட்டல் காரன் சொன்னது பிடிபடவில்லை. அப்படியென்ன கேட்டுவிட்டான். "உனக்கு மட்டுமா தம்பி?" என்று தானே கேட்டான். என்னைக் கேலியா செய்தான்? இல்லை எல்லோர் முன்னாலும் அவன் சொன்னதை அப்பாவிடம் சொன்னேனே? அது தவறா? ஒண்ணும் விளங்கலைடா சாமி.

4 comments:

சகாதேவன் said...

ஜனகராஜ் இப்படித்தான் ஒரு படத்தில்(கேளடி கண்மணி) ஹோட்டலில் சாப்பிடுக்கொண்டே பாக்கெட்டில் பர்ஸ் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே பர்ஸை தொலைத்துவிட்டு மாவாட்டுவார். நல்லவேளை நீங்கள் தப்பித்தீர்கள். ஆமாம் எந்த வருஷம்? இப்பல்லாம் 10 ரூபாய்க்கு இரண்டு இட்லி தான் சாப்பிட முடியும்.
சகாதேவன்

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் 1967-ல் மூன்றாம் ஆண்டுக்கான பரீட்சையில் 11 பேப்பர்களையும் ஒன்றாக க்ளியர் செய்ததற்காக என் 6 நண்பர்களுக்கு ட்ரீட் தர வேண்டியிருந்தது. அண்ணாசாலையில் வெலிங்டன் சினிமா அருகில் இருந்த ஒரு உடுப்பி ஹோட்டலுக்கு சென்றோம். நான் கையில் பத்து ரூபாய் இருந்த தைரியத்தில் நண்பர்களை எது வேண்டுமானாலும் ஆர்டர் செய்ய சொன்னேன். அவர்களும் முனைந்து ஆர்டர் செய்து நாங்கள் ஒவ்வொருவரும் சாப்பிட்டது: ஸ்வீட் ஒன்று (50 பைசா), இரண்டு இட்டலிகள் (16 பைசா), மசால் தோசை (35 பைசா), மைசூர் போண்டா செட் (20 பைசா). அதுவே எல்லார் வயிற்றையும் நிரப்பி விட்டது. பிறகு காப்பி (15 பைசா). மொத்த பில் 9.42. தப்பித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Divya said...

நகைச்சுவையுடன் உங்கள் மலரும் நினைவுகள் சுவாரஸியமாக இருந்தது படிக்க:))

Divya said...

\\(என்னென்ன சாப்பிட்டேன் என்று சொல்ல மாட்டேன். நீங்க அப்புறம் கண்ணு போட்டுட்டீங்கன்னா?) \\

அது சரி:))