வைகுண்டத்திலே பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஆழ்வார்க்கடியானிடம், யாரோ தசாவதாரம் பற்றி ஏதொ சொல்லித் தொலைக்க, மஹாவிஷ்ணுவிடம்கூட சொல்லிக்கொள்ளாமல் பூலோகம் வந்து விடுகிறான், தசாவதாரம் பார்க்க. (யாரிந்த ஆழ்வார்க்கடியான் என்று கேட்பவர்கள் முதலில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வனைப் படித்து விட்டு இதைப் படிப்பது நல்லது)
நமது கதையின் நாயகன், "ஆழ்வார்க்கடியான்", பூலோகத்தில் தரையிறங்கிய இடம், சிங்காரச் சென்னை. நேரே தசாவதாரம் திரையிடப்பட்டிருக்கும் அரங்கம் நோக்கி விரைகிறாரன். சென்னை வாழ் மக்களுக்கெல்லாம் இவனைப் பார்த்தால் ஏதோ வேறொரு கிரகத்திலிருந்து வந்திருப்பவன் போல் எண்ணம். குட்டையாக தொந்தியுடன், முன் குடுமியும் கையில் தடியும் ஏந்தி நடந்தால் சென்னையில் யாருக்குத்தான் வியப்பு வராது?அதிலும் உடம்பு முழுக்க திருநாமப்பட்டை வேறு.
"ஓம் நமோ நாராயணாய!"
படம் ஆரம்பித்தவுடனேயே பெருமாளை பெயர்த்தெடுக்கும் பொழுது, "அடேய் பாதகர்களா! நாராயாணனைப் பெயர்த்தெடுக்கிறீர்களே! உங்கள் குலம் நாசமைடையும். நாராயாணனைக்காக்க பூலோகத்தில் எவருமே இல்லையா" வைணவத்தைக் காக்க ரங்கராஜன் நம்பி தோன்றியதும், "ஆஹா ஓர் மாவீரன் உதித்து விட்டான். அன்று இந்த திருமலை நம்பி இருந்தான். இன்று ரங்கராஜன் நம்பி. பெருமாளின் மஹிமையே மஹிமை"
குலோத்துங்கன் சோழன், "ரங்கராஜன் நம்பி, சிவனே முழு முதற்கடவுள் என்று ஏற்றுக்கொண்டு ஓம் நமச்சிவாய என்று சொல் உன்னை விட்டுவிடுகிறேன்"
"அடேய் குலோத்துங்கா, உன் முப்பாட்டனாருக்கு முப்பாட்டன், மஹாசமுத்திரம்போல் அலையெழுப்பும் ஏரிக்கு வீரநாராயண ஏறி என்று பெயர் வைத்தாரே. சைவமும் வைணவமும் தழைக்க வேண்டும் இத்தவத்திருநாட்டிலே என்று ஆசைப்பாட்டரே. அவர் கீர்த்திக்குத் தீங்கு விளைவிக்காதேடா. உன் குலம் நாசமடையும். இது ஒரு வீர வைஷ்ணவனின் சாபம். ரங்க ராஜன் நம்பி எக்காலத்திலும் சைவத்திற்கு துணை போகாதே"
"யோ யாருய்யா அது படம் பாக்க வுடாம நொய் நொய்னு கத்திகினு. கம்முனு குந்துயா"
"பூலோகத்தில் வைணவம் அழிந்து விட்டதா? சைவர்களை எதிர்க்க ஒருவர் கூட இல்லையா? இப்படி வைணவத்தை எதிர்க்கும் இச்சித்திரத்தைப் பார்க்க வேண்டுமா?அடேய்! நாராயணனைப் பெயர்த்தெடுத்து கடலில் சேர்க்கிறார்கள். நீங்கள் என்னை இதெல்லாம் பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கச் சொல்கிறீர்களா?" என்று சண்டைக்குச் செல்ல, அருகிலிருப்பவர்கள் அவனை சமாதனம் செய்து படத்தை பார்க்க வைக்கின்றனர்.
ஆழ்வார்க்கடியானுக்கு ஆங்கிலம் புரியாதலால் அருகிலிருப்பவரிடம், அர்த்தம் கேட்க அவன் அமெரிக்காவில் நடப்பதின் சாராம்சம் சொல்கிறான். "இத்த பாருய்யா இந்தாருக்காருல்லா விஞ்ஞானி கோவிந்து, இந்தாளு தான் உலகத்தையே காப்பாற்றதுக்கொசரம், இவ்வளவு ஓட்டம் ஓடுதாரு"
"என்ன இந்தப் பையனின் பெயர் கோவிந்தனா? ஆஹா என் பெருமாள் காக்கும் கடவுள் அல்லவா. அதனால் தான் இந்தப் பையனும், காக்கும் தெய்வமைய்யா"
முகுந்தா முகுந்தா என்று அசின் உருகும் போது ஆழ்வார்க்கடியானின் மனமும் சேர்ந்து உருகுகிறது. பக்திப் பரவசத்தில் மூழ்கித் திளைக்கிறான். "யாரிந்தக் குமரி, கண்ணனை நினைத்து என்னமாய் உருகுகிறாள்! ஒரு சாயலில் குந்தவைபிராட்டியார் போலவே இருக்கிறாளே"
கிருஷ்ணவேணிப்பாட்டி கிறுமி டப்பாவை பெருமாள் சிலைக்குள் போடுவதைப்பார்த்து, "பெருமாளே நீர் தான் உலகை ரட்சிக்க வேண்டும்" என்று வேண்டுகிறான். கிறுமி டப்பாவை அபகரிக்க வரும் க்ரிஸ் ஃப்லெட்சர் குறி தவறி யானையின் காலிலே சுட, யானை மதம் பிடித்தோடுகிறது. ஆழ்வார்க்கடியானுக்கு இதைப்பார்த்து தன்னை ஈழத்திலே துரத்திய யானை நினைவுக்கு வர, "அய்யோ யானைக்கு மதம் பிடித்து விட்டது. ஓடுங்கள் ஓடுங்கள்" என்று அலறுகிறான். "அய்ய. இது படம்யா. தொண தொணங்காம குந்துய்யா.
பெருமாளைத் தூக்கிக்கொண்டு அசினும் கமலும் ஓடும் போது, "ஆண்டாளே பெருமாளைக் காப்பாற்று. உனக்குக் கோடி புண்ணியமுண்டாகும்"
அசினை மானபங்கப்படும் காட்சியில், "கிருஷ்ணா. திரௌபதியின் மானம் காத்த ரக்ஷகா, உன் திருவுருவச்சிலையைக் காப்பாற்ற முனையும் இந்த அபலயை நீ தான் காக்க வேண்டும்" என்று ஓலமிட, அங்கே காட்சி தரும் வின்சென்ட் பூவராகனைப் பார்த்ததும், "ஆஹா, எம்பெருமானின் லீலையே லீலை. ஷ்யாமள வர்ண கிருஷ்ணனல்லவா மார்வேடத்தில் வந்து இப்பெண்ணின் மானம் காத்த கடவுள்"
அவ்வப்போது கடவுள் பற்றி விஞ்ஞானி கமலுக்கு சந்தேகம் வரும் பொழுது, "கோவிந்தனென்று நாராயணனின் பெயர் வைத்துக்கொண்டு, பெருமாள் இருக்கிறாரா என்று கேட்கிறாயே"
இறுதிக்காட்சியில் உலகை கிறுமி ஆயுத்தத்திலிருந்து காப்பாற்ற ஷிங்கன் நரஹஷி அமெரிக்க வில்லனிடம் மோதும் போது, "ஹிரண்யகஷிப்பை வதம் செய்த நரசிம்மர் அல்லவா அவதாரம் எடுத்து வந்திருக்கிறார்".
"அவ்வப்போது கடவுள் இருக்கிறாரா இருக்கிறாரா என்று கேட்டாலும், நடக்கும் காட்சிகள் எல்லாமே எம்பெருமானின் லீலைகள் போன்றே இருக்கிறதே. கோவிந்தன் ஓட்டிச் சென்ற வாகனம் மட்டும் விபத்துக்குள்ளாகாவிட்டால், இந்த அசுரனிடம் அகப்பட்டிருப்பார்களே. உலகை அழிவிக்கும் ஆயுத்தத்திலிருந்து காப்பாற்ற உப்பு நிறைய தேவைப்படும் சமயத்தில், கடலே பொங்கியெழுந்து கிறுமிகளனைத்தையும் அழித்து, ஆஹா இதுவல்லவோ பெருமாளின் செயல். ஆஹா இதோ அவரும் மேலே வந்து விட்டாரே. பெருமாளே ஜகத்ரட்சகா, உன்னை கடலுக்குள் தள்ளியவர்களை தண்டித்து, முப்பிறவியில் உன் திருநாமத்தை ஜபித்தே மாண்ட ரங்கராஜனையும் அவன் மனைவியையும் இப்பிறவியில் உன் திருவடிகளிலேயே மீண்டும் இணைத்து விட்டாயே. உன் லீலைகள் எல்லாம் சாமான்னிய மனிதனுக்கு புரிவதில்லையப்பா. உலகம் பிழைக்க நீ மீண்டும் பத்து அவதாரங்களெடுத்து மக்களைக் காப்பாற்றினாயே. நீயல்லவோ வாழும் தெய்வம்.
ஓம் நமோ நாராயணாய!.
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது.
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக்கண்ணில் பார்த்தால் யாதும் சுற்றம் தான்
"ஹலோ என்ன இது, இன்னம் பாட்டை முணுமுணுக்கறத நிறுத்தலியா?என்னால தூங்கவே முடியலை. உங்களத் தான்"
"யாரடா அவன்? முட சைவனா. என்னை ஏன் இப்படி ஆட்டுகிறீர்கள்?"
"ஹ்ம்ம் யாரும் இங்க மூடனும் இல்லை சைவனும் இல்லை. தசாவதாரம் பார்த்துட்டு வந்து இப்படியா தூக்கத்துல புலம்பறது. எழுந்திருங்க. எழுந்திருங்க"
"நான் எங்கே இருக்கேன்? ஆழ்வார்க்கடியான் எங்கே?வைகுண்டம் போயிட்டானா"
"ஹ்ம்ம் நீங்க இப்படி பேசிண்டிருந்தா கீழ்ப்பாக்கம் போக வேண்டியது தான்.போதும் இந்த தசாவதாரப் பிராதபத்தை தூக்கத்திலும் புலம்பணுமா. பேசாம தூங்குங்க"
ஓ! நான் கண்டது கனவா. சரி சரி தூங்கு"
"ஆமாம், என் தூக்கத்தை கலச்சுட்டு இப்ப குரட்டை விடறதைப் பாரு"
"புலம்பாதே தூங்கு. நாளைக்கு மீண்டும் இன்னொரு தடவை பார்க்கணும்"
இன்னொரு தடவையா....