December 07, 2009
போய் வருகிறேன் பெங்களூரு
November 30, 2009
பிராம்மணனின் இன்றைய கடமை
October 09, 2009
கமல்ஹாசனும் தெளிவற்ற தமிழ் ரசிகர்களும்
October 08, 2009
தந்தை மகனுக்காற்றும் உதவி
October 06, 2009
குந்தவையின் கட்டளை
August 03, 2009
காய்ச்சல் கொண்டேன்
சனி மதியம் சாப்பிட்டு விட்டு, டி.வி பார்த்துக் கொண்டிருந்த போதே காய்ச்சல் ஏறி விட்டது. ”என்ன உடம்போப்பா. எப்படித் தான் இப்படி திடீர்னு காய்ச்சல் வருதோ” என்று காயத்ரி கவலை கொண்டாள். “உடம்புன்னு ஒண்ணு இருந்தா, காய்ச்சல் வரத்தான் செய்யும். பாவம் அதுக்கும் போய் இருக்க ஒரு இடம் வேண்டாமா!!” என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
சரி டாக்டரிடம் போகலாம் என்றாள். சிறு வயதிலிருந்தே டாக்டரிடம் போவது எனக்குப் பிடிக்காத விஷயம். எனக்கு மட்டுமில்லை, என் அப்பா தாத்தா என்று யாருக்குமே பிடிக்காது. “ஒண்ணும் வேண்டாம். ஒரு பாராசிடமாலும் எரித்ரோமைசினும் போட்டுக் கொண்டால் போதும்” என்று சொல்லிவிட்டேன். பொதுவாகவே ஒரு மாத்திரைக்கே உடம்பிலுள்ள வைரஸ்களெல்லாம் காலி பண்ணிப் போய்விடும். இது கொஞ்சம் விடாப்பிடியான வைரஸ் போலிருக்கு. ஞாயிறு காலையிலும் காய்ச்சல் குறைய வில்லை. இனிமேலும் சும்மா இருக்கக் கூடாது, கண்டிப்பாக டாக்டரிடம் போயே ஆக வேண்டும் என இப்போது மேலிடத்திலிருந்து உத்தரவு பிறந்தது.
“இங்க பார் டாக்டரிடம் போனாலும் ஒரு டோலோவோ, இல்லை காம்பிஃப்ளேமோ தான் எழுதித் தரப் போறார். அதை நாமே வாங்கிப் போட்டுண்டாப் போச்சு. இதென்ன அமெரிக்காவா? Presciption இல்லாமல் மாத்திரை தரம்மாட்டேன்னு மெடிக்கல் ஸ்டோர்ஸ் காரன் சொல்ல” என்று என்ன சொல்லியும் எடுபடவில்லை.
“இல்லை இல்லை, ஒரு ஊசி போட்டுண்டு, அப்படியே பிளட் டெஸ்ட் எதுவும் எடுக்கச் சொன்னால் அதையும் எடுத்துடலாம்” என்று அதட்டலான ஒரு சமாதானம் பிறப்பிக்கப் பட்டது.
“சரி, எந்த ஆஸ்பத்திரியில் இப்போது டாக்டர் இருக்கிறார் என்று விசாரி” என்றேன். என்ன ஆச்சர்யம்!ப் ஞாயிறென்றால், பெங்களூரில் ஆஸ்பத்திரிக்கும் விடுமுறை போலிருக்கு. ஒரு ஆஸ்பத்திரியிலும் ஒரு டியூடி டாக்டர் கூட இல்லை என்று சொல்லிவிட்டு, ஃபோனையும் உடனே வைத்து விட்டார்கள். “என்னடா இது பெங்களூருக்கு வந்த சோதனை. ஏதேது பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமைன்னா யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போகக்கூடாதா?! இழுத்துண்டிருக்கற கேஸுன்னாக் கூட திங்கள் வரை பொறுக்கணும் போலிருக்கே!!
“சரி கவலையை விடு. டாக்டர் கிட்ட போனாலும், டோலோ, காம்பிஃப்ளேம் ஏதாவது தான் எழுதித் தரப் போறார். அதை நாமளே வாங்கிக்கலாம். டாக்டருக்கு தண்டம் அழுது தான் இதைச் சாப்பிடணும்’னு இல்லை” என்று சொல்லியும், காயத்ரி இசையவில்லை. எங்கேயெல்லாமோ விசாரித்து, ஒரு வழியாக ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டர் இருக்கிறார். அவரும் 12 மணி வரை தான் இருப்பார் என்று தெரிந்து கொண்டு, அவரைப் பார்க்கப் புறப்பட்டோம்.
இந்தப் பாழாப்போற ஊர்’ல உள்ள ஒரு கொடுமை என்னவென்றால், எந்தவொரு ஆஸ்பத்திரியாகட்டும், அங்கே நாம் முதலில் ரெஜிஸ்டர் கொள்ள வேண்டும். அதற்கென்று தனியாகப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலில் இந்த துவாரபாலகர்களைக் கவனித்தால் தான் உள்ளே அனுமதி. “நீ டாக்டரைப் பாரு இல்லை, எக்கேடு கெட்டுப் போ. எங்களை முதலில் கவனி” என்று சொல்லாமல் நாசூக்காகக் காசு பிடுங்கும் தந்திரத்திற்குப் பெயர் தான் ரெஜிஸ்ட்ரேஷன். சரி துவாரபாலகர்களைக் கவனித்தாயிற்று. டாக்டர் இருக்கும் அறை எங்கே என்று தேடிக் கொண்டு போனால், ஒரு அறைக்குள் உட்காரச் சொன்னார்கள்.
எனக்கா காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருக்கிறது. இவர்களென்னன்னா, ஏ.ஸியை, எவ்வலவு குறவான தட்பவெப்பத்தில் வைக்க முடியுமோ, அவ்வளவு குறைவாக வைத்திருந்தார்கள். என் பற்கள் ஒரு ஜலதரங்கக் கச்சேரியே நடத்தின. இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து வெள்ளை அங்கி அணிந்த ஒரு பெண்மணி உள்ளே நுழைந்தாள். ஸ்டெதஸ்கோப் வைத்திருப்பவர் தான் டாக்டர் என்று எனக்குத் தெரியாதா. எம்புட்டு தமிழ் சினிமா பார்த்திருக்கோம். பொய் சொல்லப் போறோம் படத்துல “நீங்க புரோக்கரா பார்டியா”ன்னு கேப்பாங்களே, அது மாதிரி, “நீங்க டாக்டரா நர்ஸா”ன்னு கேக்கணும் போல இருந்தது. கேட்கவில்லை. “டாக்டரை இருக்காறா இல்லையா” என்றேன். முதலில் நான் செக்கப் செய்வேன். பிறகு தான் டாக்டர் பார்ப்பார் என்றாள். சரி தான் முதலில் துவாரபாலகர்கள், அப்புறம் இந்த உபதெய்வங்கள், அப்புறம் தான் சந்நிதிக்குள்ளேயே விடுவார்கள் போலிருக்கு.
ரத்த அழுத்தம், பல்ஸ் எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டாள். “ஹலோ, நான் வந்திருப்பது காய்ச்சலுக்காக. நீங்க ஆள் மாற்றி இதெல்லாம் பார்க்கறீங்களா” என்றேன். ஒரு புன்னகையுடன், “உங்களை முழுசா செக்கப் செய்வதற்குத்தான் இதெல்லாம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
10 நிமிடக் காத்திருத்தலுக்குப் பின், திரை போடப்பட்டிருந்த சந்நிதி திறந்தது. ஐ மீன் டாக்டரைப் பார்க்க அனுமதிக்கப் பட்டேன். ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டுக் கொண்டு சாஃப்ட்வேர் எஞ்சினியர் போல், இளமையான டாக்டர். ஒரு வேளை ஹவுஸ் சர்ஜன் எனப்படும் அப்ரெசிந்தியாகக் கூட இருக்கலாம். இவரிடம் ஸ்டெதஸ்கோப் இருக்கு. டாக்டர் தான் என்பது ஊர்ஜிதம் ஆனது. வக்கீலிடமும் வாத்தியாரிடமும் உண்மையை மறைக் கூடாதே. அதனால் எனக்கு எப்போது காய்ச்சல் வந்தத்து, என்னென்ன மாத்திரை எடுத்துக் கொண்டேன் , இதற்கு முன் காய்ச்சல் வந்த போதெல்லாம் என்னென்ன மாத்திரை எடுத்துக் கொண்டேன், என்னென்ன சாப்பிட்டேன் என்று ஒன்று விடாமல் அனைத்தும் ஒரே மூச்சில், எதோ கேள்விக்கு பதில் சொல்வது போல் ஒப்பித்துத் தள்ளினேன்.
நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டாரா இல்லையா தெரியவில்லை. மீண்டும் ரத்த அழுத்தம், பல்ஸ், உடல் உஷ்ணம் என எல்லாம் செக்-அப் செய்தார். நர்ஸ் மீது அவ்வளவு நம்பிக்கை போலிருக்கு. “உங்களுக்கு வந்திருப்பது வைரல் ஃபீவர் தான்” என்றார்.
“இது எங்களுக்குத் தெரியாதா!! இத்தக் கேக்கவா அம்புட்டு தூரத்துலேர்ந்து வந்திருக்கோம்” என்று என் மனம் சொல்வதை காயத்ரி என் கண்களைப் பார்த்தே தெரிந்து கொண்டவள் வேறொரு புறம் திரும்பிக்க் கொண்டாள்.
“உங்கள் காய்ச்சலுக்கு டோலோ எடுத்துக் கொள்ளுங்கள். அதை ப்ரிஸ்கிரைப் செய்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் சரியாகி விடும்” என்று சொல்லிவிட்டு மருந்துசீட்டில் எழுதிக் கொடுத்தார். மீண்டும் காயத்ரியை நான் பார்க்க யத்தனிக்க , அவள் முகம் என் பக்கம் திரும்பவே இல்லை.
“அப்போ எனக்கு ஊசியெல்லாம் எதுவும் போடப்போறதில்லையா” என்றேன்.
“தேவையில்லை” என்றார்.
“ஒரு பிளட் டெஸ்ட் வேணா எடுத்துப் பார்த்துடுங்களேன். ”
“No need. This is just a viral infection"
மீண்டும் காயத்ரி பக்கம் திரும்பியிருந்தால் அவள் எழுந்து போயிருப்பாள்.
“நான் ஏற்கனவே எடுத்த்துக் கொண்ட அதே மருந்தைத் தான் டாக்டரும் எழுதிக் கொடுத்திருக்கார், இதுக்கெல்லாமாவா ஃபீஸ் வாங்குவீங்க” என்ற என் விண்ணபத்தை துவாரபாலகர்கள் ஏற்க மறுத்து விட்டனர். வலுக்கட்டாயமாக அர்ச்சனைக்கான காசைப் பிடுங்கிக் கொண்டார்கள். வாத்தியாருக்கும் வைத்தியருக்கும் கடன் வைத்தால் படிப்பும் வராது, நோயும் போகாது’ன்னு எங்கேயோ கேட்டிருந்ததால், போனாப் போறது என்று நினைத்துக் கொண்டு அவர்கள் கேட்ட தொகையைச் செலுத்திவிட்டு வீடு வந்தோம்.
பி.கு. இன்று ஓரளவு உடம்பு பரவாயில்லை. நாளை ஆஃபீஸ் போய்விடலாம் என்று நினைக்கிறேன்.
“ஏண்டா வெண்ணை, ஒரு சாதாரண காய்ச்சல் வந்ததை இப்படியொரு மொக்கைப் பதிவாப் போட்டு, எங்க நேரத்தை வீணடிக்கிறியேடா” என்று யாரும் பின்னூட்டத்தில் கேட்க வேண்டாம்.
July 29, 2009
ரீமேக் கலாசாரம்
July 20, 2009
வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை
May 28, 2009
படித்ததில் ரசித்தது
இப்போது படித்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தகம்:
இப்போது மூன்று புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். விவேகானந்தரின் வாழ்க்கை சரித்திரம், சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள், ஜிம் கரி எழுதிய, Men are From Mars, Women Are From Venus. ஏற்கனவே சென்ற பதிவில் இதைப் பற்றி எழுதிவிட்டதால் மறு ஒளிபரப்பு செய்ய விரும்ப வில்லை.
One book you have been meaning to read:
நான் படிக்க விரும்பும் ஒரு புத்தகம்:
இரண்டு முறை படிக்க ஆரம்பித்து, 50 பக்கங்களோடு நின்று விட்ட, Fountain Head. ரொம்ப நாளாக காயத்ரி இதைப் படிக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். அவள் புதினம் படிக்க ஆரம்பித்த காலத்தில் முதலில் படித்த புதினமாம். அதே புத்தகத்தை, அட்டை பைண்ட் செய்யாத குறையாக பாதுகாத்து வைத்திருக்கிறாள்.
One book you’ll recommend
நான் பரிந்துரைக்கும் ஒரு புத்தகம்
எதைச் சொல்ல எதை விட? இது வரை பொன்னியின் செல்வன் படிக்கவில்லையென்றால் இனியாவது படியுங்கள். இல்லையென்றால் புத்தகம் படிப்பதில் அர்த்தமே இல்லை. ஆங்கிலத்தில் Irving Wallace எழுதிய The Man கண்டிப்பாகப் படிக்கச் சொல்வேன்.
சரி, கொடுத்த வேலையை செவ்வன செய்து முடிச்சாச்சு. யாரை கோர்த்து விட? அரிதான சில சினிமாக்கள் பற்றி அமோகமான தகவல்கள் பல கொடுக்கும் சரவண குமாரை, இந்தத் தொடருக்கு அன்புடன் அழைக்கிறேன்.
May 27, 2009
என்னைப் பற்றி இது வரை தெரியாதவை...
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எங்க அம்மா அமிதாப் பச்சனின் விசிறி. அவர் நடித்த அநேக படங்களில் அவர் பெயர் விஜய். என் தாத்தா, முருக பக்தர். அதனால், குமாரும் சேர்ந்து கொண்டு விஜய் குமார் ஆனது.
Of Course எனக்கு என் பெயர் ரொம்பவே பிடிக்கும்.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
நான் அவ்வளவு எளிதாகக் கண்ணீர் விடும் ரகம் இல்லை. ரொம்ப யோசித்துப் பார்க்கையில் கடைசியாக அழுதது, இந்தியா T20 உலகக் கோப்பையை வென்ற போது, உணற்சி மிகுதியில் அழுதேன்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கையெழுத்து என்றால் Signature'ஆ. அது கொஞ்சம் பிடிக்கும். ஆனால் கையால் எழுதும் எழுத்து அவ்வளவாகப் பிடிக்காது. எவ்வளவு முயன்றும் திருந்தவே இல்லை. என் எழுத்தை எங்கம்மா கொக்கு பறப்பது மாதிரி இருக்கு என்பாள்.
4.பிடித்த மதிய உணவு என்ன?
சைவத்தில் எது வேணாலும் பிடிக்கும். இருந்தாலும், சாம்பார், உருளைக்கிழங்கு / அவியல்/ முட்டைக் கோஸ் கரி, தயிர் சாதம் தான் எப்போதுமே என் சாய்ஸ்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஒரு ஆளிடம் உடனே என்னால் நட்பாகப் பேச முடியும். மேற்கொண்டு அவருடன் நட்பைத் தொடர்வது, அவருடைய குணாதிசையங்களைப் பொறுத்தது. என் வேவ்லெங்திற்கு இல்லையென்றால், முறைத்துக் கொள்ள மாட்டேன். கேட்ட கேள்விக்கு பதில்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
எந்த நீர் நிலையிலும் குளிக்கப் பிடிக்கும். இருந்தால் கடல் அருவியில், இரண்டிலும் பிடித்தது, கடலே. நிந்திக் குளிப்பதென்றால் இன்னும் பிடிக்கும்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள்.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் எல்லோரையும் நல்லவர் என்று நம்புவது. பிடிக்காததும் அதுவே.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
ஆஹா, பொடி வச்சு கேக்கறாங்கப்பா. பிடித்த விஷயம், எப்பவுமே சுத்தமாக இருக்கணும் என்று நினைப்பாள்.
இந்த சுத்தம் தான் பிடிக்காத விஷயமும் கூட. வெளியில் போய்ட்டு உள்ளே வந்தால், முதல் வேலையாக கை கால் கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னால், (ஏற்கனவே கழுவிய) தட்டு ஸ்பூன், டம்ளர், எல்லாம் மீண்டும் ஒரு முறை கழுவ வேண்டும். கழுவாமல் பழங்கள் எதுவும் சாப்பிடக் கூடாது. வாழைப் பழத்தைக் கூட கழுவித்தான் சாப்பிட வேண்டும் என்று கண்டிஷன் போடுவாள். கொசு அடித்தால் கூட கையை சோப் போட்டுக் கழுவணும் :)
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் தந்தை. கல்லூரியில் காலெடுத்து வைத்த அதே தினம், கிட்டத்தட்ட அதே நேரத்தில் அவர் உயிரிழந்தார். வாழ்வின் முக்கியமான காலகட்டத்தில் அவர் என்னோடு இல்லாதது பேரிழப்பு.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வேஷ்டி, முண்டா பனியன்.
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என்னங்க இது, பிரவுசரைப் பார்த்துக் கொண்டு தான் இதை எழுதுகிறேன். கேட்பது, எஸ்.வி.ஷேகரின், தத்துப் பிள்ளை நாடகம். சும்மா கலந்து கட்டிக் கலாய்க்கிறார்.
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பிங்க்.
14.பிடித்த மணம் ?
சாம்பார் / ரசம் கொதிக்கும் போது வரும் மணம். இந்த மணத்தை முகர்ந்தாலே பசி வந்துடும்.
மழைக்கு முன் வரும் மண் வாசமும் பிடிக்கு :)
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
நான் எவ்வளவு மொக்கை போட்டாலும், அது நல்லா இருக்கு என்பார்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அவரது, கற்பனையில் உருவான, வடிவேல், விவேக் காமெடிப் பதிவுகள். அவர் சகோதரி பட்ட உடல் நல அவஸ்தைகளைப் படித்து விட்டு, ஒன்றுமே செய்ய முடியாமல் சில நேரம் ஸ்தம்பித்துப் போய் விட்டேன். சில நாட்களுக்கு முன் அவர் இப்போது உடல் நலம் தேறி விட்டார் என்றதும் ரொம்ப சந்தோஷப் பட்டேன்.
17. பிடித்த விளையாட்டு?
என்றென்றும் கிரிக்கெட். 16 வயதுக்குட்பட்ட பிரிவில், நெல்லை மாநகருக்காக விளையாடியிருக்கிறேன். ஓபனிங்க் ஃபாஸ்ட் பவுலர்.
விப்ரோ, எல்.எஸ்.ஐ’க்காகவும் விளையாடியிருக்கிறேன். இப்போது தொப்பை போட்ட பின் 10 பந்து வீசினாலே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது.
ஸ்டெஃபி கிராஃப் விளையாடும் வரை டென்னிஸும் பிடித்தது.
இப்போது அன்னா இவாநோவிச், ஷரபோவா, சானியா மிர்சா, ஃபெடரர் விளையாடும் டென்னிஸ் ஆட்டங்களை மட்டும் பார்க்கிறேன்.
18.கண்ணாடி அணிபவரா?
அணிய ரொம்பப் பிடிக்கும். ஆனால் இது வரை கண்ணாடி அணியும் பாக்கியம் கிட்ட வில்லை. அலுவலகத்தில் கண்ணாடிக்காக வருஷத்திற்கு 3000 ரூபாய் சலுகை தருகிறார்கள். இது வரை 30000 ரூபாய் சலுகையை பெறவே இல்லை.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நகைச்சுவைப் படங்கள் ரொம்ப பிடிக்கும். ஆங்கில அக்ஷன் படங்களும் பிடிக்கும். தமிழில் சூர்யா, விக்ரம், கமல், படங்கள் பிடிக்கும்.
மனதை நெருடும் படியான சமூகப்படங்களும் எப்போதாவது பார்ப்பேன்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
ம்ம்ம் திரையரங்கத்தில், ஹரிஹர் நகர் - பாகம் 2.
கல்யாணமாகி 4 வருஷமாகியும் மலையாளப் படம் பார்க்கவில்லை என்று காயத்ரிக்கு ஆதங்கம். என்ன பண்ண? பார்த்துத் தொலைக்க வேண்டியதாப்போச்சு.
21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம். பெங்களூரில் இக்காலத்தில் ஊரெங்கும் பூக்கள் பூத்துக் குலுங்குவது கண் கொள்ளாக் காட்சியாயிருக்கு.
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஒரு புத்தகம் இல்லை. 3 புத்தகங்கள் படிக்கிறேன். ரம்யா அனுப்பிய விவேகானந்தரின் வாழ்க்கை சரித்திரம், சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள், Men Are From Mars, Women Are From Venus. காயத்ரி செய்யும் சேஷ்டைகள் இப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த பிறகு விளங்குவது போலிருக்கிறது.
23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
பார்த்துப் பார்த்து ரொம்ப போரடித்து விட்டால் மாற்றிவிடுவேன். மாதத்திற்கொரு முறை மாற்றுவேன் என்று வைத்துக் கொள்ளலாம்.
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
எந்த இசை வாத்திய ஓசையும் பிடிக்கும். குறிப்பாக வயலின், கிடார், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம்.
அலையின் ஓசையும், மரங்கள் காற்றில் ஏற்படுத்தும் சத்தமும் பிடிக்கும். நான் வளர்த்த தாந்தூ (நாய் என்றால் எனக்குக் கோபம் வந்துடும்) குறைக்கும் சத்தமும் பிடிக்கும்.
காது ஜவ்வு கிழியற மாதிரி டங்கு டக்கற டங்கு டக்கற’ங்கற குத்துப் பாட்டுச் சத்தம், சுத்தமாப் பிடிக்காது.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா. முதன் முதலில் வீட்டை விட்டு ரொம்ப நாட்களுக்கு நெடுந்தூரம் போனது, கொல்கத்தா.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
கல்லூரி காலத்தில் புரோட்டா கடைகளில் 25’க்குக் குறையாமல் தின்பேன். அந்தத் திறமை இப்போது அந்தத் திறமை மங்கி விட்டது என்று நினைக்கிறேன்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல், அடுத்தவர் தயவில், ஒரு காரியத்தை செய்து கொள்வது.
சிகப்பு சிக்னல் இருந்தாலும், அதை மதியாமல் எகிரிச்செல்வது, சாலையில் துப்புவது, குப்பை போடுவது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். வெளிநாட்டுக்குப் போனால், அங்கே தண்டனை கொடுத்து விடுவார்களே என்று பயந்து அவ்வாறு செய்யாத மக்கள், நம்மூர் மண்ணை மிதித்ததும், “நம்ம ஊர் தானே, எவன் கண்டுக்கப்போறான்” என்ற போக்கை என்னா ஏற்றுக் கொள்ளவே முடியாது.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எனக்கு வரும் கோபம். கோபம் வந்தால், என்ன செய்கிறேன் என்றே தெரியாது.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
போக நினைப்பது, இமய மலை. இது வரையில் போனதில், கோவா.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்படி இருக்கணும்’னா? நல்ல சூர்யா மாதிரி உடற்கட்டு, கமல்ஹாசன் மாதிரி கண்கள், மாதவன் மாதிரி சிரிப்பு, இப்படியெல்லாம் இருக்கணும்’னு தான் ஆசை. என்ன பண்ண முடியலியே :(
விஜய்’ஐ (என்னத் தான்) நம்பி ஒரு காரியத்தை ஒப்படைக்கலாம் என்று மற்றவர்கள் நம்பும் படியாக இருக்கணும்.
31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
இந்தக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கொள்கிறேன். கணவனாக என்ன செய்ய விரும்பணும், என்று. என் மனைவி அடைய விரும்பும் வெற்றிகளில் அவளுக்கு ஊக்கமும் உறுதுணையும் கொடுக்க வேண்டும். (காயத்ரி படித்துத் தொலைத்து விடக்கூடாது :( )
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்வு ஒரு ரோஜாச்செடி மாதிரி. அதில் முள்ளும் இருக்கும், அழகான பூக்களும் இருக்கும். முட்களை மட்டுமே பார்த்து பயந்தோமானால், அதிலிருக்கும் ரோஜாவை ரசிக்க முடியாமல் போயிடும். கொஞ்சம் பெரீஈஈய வரியாகவே சொல்லிட்டேன்.
அப்பாடா, கொடுத்த வேலையை ஒழுங்கா செய்துட்டேன். இனி, இந்த விளையாட்டுல யாரை இழுத்து விடலாம். வேலை வேலை’ன்னு ரொம்ப உழைக்கற திவ்யாவையும், முகுந்தனையும் இந்தத் தொடருக்கு அழைக்கிறேன்.
May 24, 2009
பிரபாகரன் - என் பார்வையில்
இலங்கைத் தமிழரின் நலனுக்காக போராடும் ஒரு இயக்கத்தை வழி நடத்தி, இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும், சம உரிமை பெற்று அந்த நாட்டின் மற்ற குடிமக்களின் உரிமைகளோடு வாழ வேண்டும் என்றெண்ணி ஒரு இயக்கத்தை வழி நடத்தியவர். அற வழியில் சென்றால் நியாயம் கிடைக்காது என்று போராளியாக உருவெடுத்தவர். இது வரை அவர் செய்ததில் எதிலுமே குற்றம் காண முடியாது. ஆனால், தன் இன மக்களுக்கு தான் மட்டுமே ஒரே தலைவனாக இருக்க வேண்டும். போராடிப் பெற்ற சுதந்திரத்தின் காப்பாளனாக தான் மட்டுமே இருக்க வேண்டும் என்றெண்ணியது தான் அவர் செய்த முதல் குற்றம். ஆனால் அந்த முதல் குற்றத்தினால் விளைந்த செயல்கள் அவரை ஒரு பயங்கரவாதியாகத்தான் சித்தரிக்கிறது.
இலங்கை அரசோடு போராடிப் பெற்ற சுதந்திரத்தை தாமே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு போலித்தனமான உணர்வு. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய காந்திக்கும் சுபாஷ் சந்திரபோசுக்கும் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், பெறும் சுதந்திரத்தில் யாருக்கு அதிக உரிமை உண்டு இருவரும் எண்ணியதில்லை. தன்னால் மட்டுமே சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணியதில்லை. இருவரும் எடுத்துக் கொண்ட பாதை வெவ்வேறாக இருந்தாலும், எண்ணம் ஒன்றாக இருந்தது. ஒருவரையொருவர் ஒழித்துக் கட்ட முயலவில்லை.
ஆனால் பிரபாகரன் விஷயத்தில் நடந்ததென்ன? “நான் தொடங்கிய போராட்டம் என்னால் மட்டுமே முடிய வேண்டும். போராடி பெறும் சுதந்திரத்தை நான் முன்னின்று மக்களுக்கு வழங்க வேண்டும். அப்படி யாராவது என்னை எதிர்க்க முயன்றால், அவர்கள் வாழ அறுகதையற்றவர்கள். இலங்கைத் தமிழர்களின் பாதுகாவலன் நான் ஒருவன் மட்டுமாகத் தான் இருக்க வேண்டும்” இது தான் அவர் சிந்தனை. இதனாலேயே பத்மநாபா, அமிர்தலிங்கம் போன்றவர்களை கருணையேயில்லாமல் கொலை செய்தார். விடுதலைப் புலிகளை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க முக்கிய காரணமாக இருந்தது, ராஜீவ் காந்தியைக் கொன்றது தான். அவரைக் கொல்வதற்கு முன்னால் கூட விடுதலைப் புலிகள் மீது இந்திய அரசாங்கத்துக்கு கொஞ்சம் கருணை இருந்தது. ராஜீவ் கொலை, உள்ளது போனதடா நொள்ளகண்ணா கதையாகிவிட்டது.
இப்படி பிற தேசத்துத் தலைவர்களை கொலைபுரிந்ததனால், பாதகம் யருக்கு. அப்பாவி இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு. பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை தான். வேறு வழியில்லாமல், பிரபாகரன் பின் இவர்கள் நின்றதால், அவர்களும் இலங்கை அரசால் மேற்கொள்ளப் பட்ட வன்முறையில் பலியானார்கள். அப்பாவி மக்களை கேடையங்களாக வைத்து, விடுதலைப் புலிகள் குளிர் காய்ந்தார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த ஒரே ஆள் இவர் தானென்றாலாவது, இவரைக் கொண்டாடுவதில் அர்த்தமுண்டு. தன்னைத் தவிர வேறு யாரும் தமது மக்களின் நலன் மீது அக்கரை இருக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு சர்வாதிகாரியை எப்படிப் பாராட்டுவது? இவரது சர்வாதிகாரத்தனப் போக்கால், இலங்கைத் தமிழர்களின் வரப்பிரசாதமாக இருந்திருக்க வேண்டியவர், அவர்களுக்கு ஒரு சாபமாகவே தான் இருந்தார் என்று தான் சொல்வேன்.
அமைதி நிலவரம் திரும்ப நார்வே அரசு எடுத்துக் கொண்ட முயற்சியும், இவரது தனித் தமிழ் ஈழம் மட்டுமே வேண்டும் என்ற அவரது பிடிவாதத்தால்(அதற்கும் தானே தலைவனாக இருக்க வேண்டும் என்ற பேராசை வேறு) இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமாகவே விளைந்தது.
இலங்கையில் தமிழர்களின் மக்கள் தொகை 5 கோடி இருக்குமா? இவ்வளவு பேரை வைத்துக் கொண்டு எந்தவிதமான அரசாங்கத்தை அமைத்து விட முடியும்?ஒரு சர்வாதிகாரத்தனமான மனிதனால் மக்களுக்கு இன்னல் மட்டுமே கொடுக்க முடியும் என்பது சரித்திரம் நமக்குப் புகட்டும் பாடம். அப்படியே பிரபகரன் தலைமையில் அரசு அமைந்தால், அவர்களுக்கு இந்திய அரசாங்கம் எந்த வித உதவியும் புரிந்திருக்கப் போவதில்லை. அவர்களுக்கு உதவ பாகிஸ்தானும் சீனாவும் தான் வருவர்கள். பொருளதவியிலிருந்து ராணுவத்தளவாடங்கள் வரை எல்லாம் கொடுப்பார்கள். இந்தியாவிற்குப் பெறும் பாதுகாப்புப் பிரச்னை ஏற்படும். தனித் தமிழ் ஈழம் என்று முழங்குபவர்கள் இதை யோசித்துப் பார்த்தார்களா? இந்தியா எக்கேடுகெட்டாவது போகட்டும் என்பது தான் அவர்களது நிலைப்பாடா?
ஆக மொத்தத்தில் பிரபாகரன் தலைமையில் ஏற்பட்டிருக்கும் ஈழத்தால் ஒன்றும் பெரிதாக ஒன்றும் சாதகமாக முடிந்திருக்காது. இலங்கை அரசுக்கு பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதை விட வேறு வழியில்லை.
ஆனால், இனியாவது ராஜபக்க்ஷே அரசு, தமிழர்களுக்கு அவர்களுக்கு மறுக்கப் பட்ட உரிமைகளைக் கொடுக்க வேண்டும். சிங்களவர்களுக்கு இருக்கும் உரிமைகள் அனைத்தும் தரப்பட வேண்டும்.அதற்கு இந்தியா முழுவதுமாக டிப்ளோமேடிக் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். முடிந்தால் ஐ.நா. தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்து மேற்பார்வையிட வலியுறுத்த வேண்டும்.
ஒரு இனத்தை அடிமையாக்குவதனால் கிளர்ச்சி தான் ஏற்படும் என்று மீண்டும் காலம் பாடம் புகட்டியிருக்கிறது.
டிஸ்கி 1: பிரபாகரன் இறந்துவிட்டார் என்று இலங்கை அரசு வெளியிடும் செய்தி நம்பும் படியாகவும் இருக்கிறது, அனால் வீடியோவில் அவரது கண்கள் முழித்துப் பார்ப்பதைப் பார்த்தால் மார்ஃபிங்க் செய்திருக்கிறார்களோ என்று சந்தேகமும் வருகிறது. ஆனால் நக்கீரன் வெளியிட்டிருக்கும் பிரபாகரனே அவர் இறந்தமாதிரிக் காட்டும் காட்சிகளைப் பார்த்துப் புன்னகைக்கும் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு.
டிஸ்கி 2: தமிழ் மக்களிடமிருந்து உரிமைகளைப் பறிக்கப்பட்டது இலங்கை அரசு செய்தது கொடுமையிலும் கொடுமை. இந்தியா போன்ற நாடுகள் இலங்கை மேல் டிப்ளோமேடிக் அழுத்தம் கொடுத்திருக்கணும். இந்தியாவிலேயே தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்டவர்கள் இந்தத் தமிழர்கள், இவர்களது இனத்திற்கு ஏன் பரிந்து போக வேண்டும் என்று இந்திய அரசு நினைத்ததோ தெரியவில்லை.
டிஸ்கி 3: ஆனால் புலிகளுக்கெதிராகப் போர் நடத்துகிறோம் பேர்வழி என்று இலங்கை அரசு அப்பாவிப் பொது மக்களை கொன்று குவித்ததை மன்னிக்க முடியாது. இதற்காக இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றத்தில் வைத்து தண்டனை கொடுத்தால் கூடத்தகும்.
May 16, 2009
ஐ.பி.எல்'இன் உச்ச கட்டம்
இன்னும் முன்னணி முடிவுகள் தான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கூட்டணி தான் மீண்டும் அரசு அமைக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்திய மக்கள் இந்த தடவை தொங்கு பாராளுமன்றத்துக்கு ஓட்டளிக்கவில்லை என்றெண்ணும் போது சற்று நிம்மதி. அரசியல்வாதிகள் தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள மட்டுமே யோசித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். நாடு என்றொன்று இருக்கிறது, அதில் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் சில நேரம் செலவிடுவோமே என்று சிந்திக்கத்தோன்றுவார்கள்.
தேர்தல் முடிவுகளில் சில சந்தோஷங்கள் சில ஏமாற்றங்கள். ஷஷி தாரூர் போன்று படித்த நல்ல பண்புள்ளவர்கள் தேர்தலில் வென்று பாராளுமன்றத்துக்கு வருவது வரவேற்க்கத்தக்க விஷயமாக இருந்தாலும், அழகிரி போன்ற ரவுடிகளும் கூடவே வருகிறார்கள் என்று எண்ணும் போது, சற்று பயமாகவே இருக்கிறது.
மதுரை மக்களுக்கு அழகிரி போன்ற ரவுடிகளுக்கு ஒரு பாடம் புகட்ட நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதைக் கோட்டை விட்டுவிட்டார்கள் என்று தான் எண்ணுகிறேன்.அழகிரி வென்றது ஒருவகையில் நல்லது தான். ஆனந்த விகடனில் வந்த ஜோக் ஒன்று தான் ஞாபகம் வருகிறது. இரண்டு பேர் பேசிக்க் கொள்வார்கள்.
"என்ன டா, இப்போ உங்க ஏரியா ரவுடி பக்கிரி தொல்லை குறைஞ்சிடிச்சாமே"
"ஆமாம் டா. நாங்க அவனுக்கு சரியான தண்டனை கொடுத்திட்டோம். வந்த இடைத்தேர்தல்'லெ அவனை எம்.எல்.ஏ ஆக்கி சென்னைக்கு அனுப்பிட்டோம்"
அழகிரிக்கும் இது மதுரை மக்கள் கொடுத்திருக்கும் தண்டனை மாதிரி தான் இருக்கிறது. மதுரையிலேயே இருந்து நமக்குத் தொல்லை கொடுப்பதை விட, இவரை டில்லிக்கு அனுப்பிவிட்டால், விட்டது பீடை என்று சில நாட்கள் நிம்மதியாக இருக்கலாம் என்றெண்ணியிருப்பார்கள் போல. தான் ஒரு எம்.பி.'யாக கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் செலவழித்திருக்கும் ஒருவர், அதை விட பல மடங்கு சொத்து சேர்க்கத்தான் முனைவார். என்னவேணாலும் பண்ணித்தொலையட்டும். மக்களுக்கு நாலு நல்லது பண்ணினால் சரி தான்.
லாலு, ராம்தாஸ், வைகோ, ராம் விலாஸ் பஸ்வான் போன்ற சந்தர்ப்ப வாதிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். பதவி சுகத்துக்காக மட்டுமே கூட்டணி வைத்துக் கொள்ளும் இம்மாதிரியான அரசியல்வாதிகளுக்கு இது சரியான சாட்டையடி. இனிமேலாவது நல்ல புத்தி வந்து திருந்தினால் சரி.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கருணாநிதியே எதிர்பாராத முடிவுகள். என்னைக்கேட்டால், விஜய்காந்துக்குத் தான் கருணாநிதி நன்றி சொல்ல வேண்டும். ஆன்டி-இன்கும்பென்ஸி (Anti-Incumbency)வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்குப் போகாமல் இருக்கு, விஜயகாந்தே ஒரு பெரும் காரணம் என நினைக்கிறேன்.
அப்பாடா, தேர்தல் முடிந்தது, இனி நம்ம ராஜ்யம் தான் என்று காங்கிரஸ் மார் தட்டிக் கொள்ளாமல், இனி நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்யலாம் என்று நினைக்கவேண்டும். பி.ஜே.பி தங்களுக்குள் தோல்வியை ஒப்புக் கொண்டாலும், வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு ஒரு நல்ல எதிர் கட்சியாகப் பணியாற்ற வேண்டும். சும்மா எல்லாவற்றிற்கும், பாராளுமன்றத்தின் நடுவுக்கு வந்து, வெளிநடப்பு செய்வது என்றிருக்காமல், உருப்படியாக ஏதாவது செய்தால், மாநிலத் தேர்தல்களில் ஏதாவது சாதிக்க முடியும்.
ஏதோ எழுத நினைத்து, ஆனந்த விகடன் தலையங்கம் போலாகிவிட்டது.
பாவம் அத்வானி தான். வாழ்நாளில் ஒரு நாளாவது பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து விடலாம் என்றெண்ணியவரின் மனக்கோட்டை சுக்கு நூறாக உடைந்து விட்டது. இனிமேலாவது தனிமனித தாக்குதலை நிறுத்தி விட்டு, உருப்படியான எதிர்க் கட்சியாத் தலைவராக நடந்து கொள்வார் என்றெதிர்பார்ப்போம்.
கடைசியாக மன்மோகன் சின்ங்குக்கு. ஆய் போய்ட்டு அலம்பிக்கறதுக்கு கூட சோனியாகாந்தியின் கட்டளைக்குக் காத்திருக்காமல், தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க வேண்டும். மன்மோகன் சார், நீங்க 2004'ல நாடு உங்களிடத்தில் ஒப்படைக்கப் பட்டபோது நல்ல நிலைமையில் இருந்தது. இன்று நிலைமை தலைகீழ். உங்க அரசு உருப்படியாக பெரிதும் சாதிக்க வில்லை. இனிமேலாவது நாட்டை முன்னேற்றப் பாருங்கள். எல்லோரையும் எப்போதும், ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது.
May 05, 2009
இயல் இசை நாடகம்
ஊரில் என்ன தான் நடக்கிறது என்று பார்த்ததில் கிரேஸி மோஹனின் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்துக்கான விளம்பரம் ஹிண்டுவில் தென்பட்டது. நல்ல வேளை டைம்ஸ் ஆஃப் இந்தியா வாங்கியிருந்தால் அதுவும் தெரிந்திருக்காது. ரொம்ப நாளாகவே நாடகம் பார்க்க வேண்டும் என்று ஆசை. இப்போது தான் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. நான் கிரேஸி மோகனின் பரம விசிறி நான். சிறு வயதிலேயே, அவருடைய சில நாடக காஸெட்டுகளை வாங்கி, டேப் கிழியும் வரை மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்டதுண்டு. நிஜமாகவே மாது மிரண்டால் நாடக டேப் கிழிந்தே போய் விட்டது. ஏன் கமல்ஹாசனின் காமெடிப் படங்களின் வெற்றிக்கு கிரேஸி மோஹன் வசனங்களே காரணம் என்று சொல்லலாம்.
டிக்கட் வாங்க போன் செய்தால் வீட்டுக்கே வந்து கொடுக்கிறார்கள். பெங்களூர் பசவங்குடியிலுள்ள ஒரு சபாவில் நாடகம். நான்கு மணி காட்சிக்கு 3.30 மணிக்கெல்லாம் போயாகிட்டது. கார் பார்க்கிங் செய்யக்கூட இடமில்லை. ரோட்டில் தான் பார்க் செய்தேன். அவ்வளவு கூட்டம். 15 வருடங்கள் கழித்து இப்போது தான் பெங்களூரில் நாடகம் போடுகிறாரார்களாம். அரங்கம் நிறைந்திருந்தது. இவ்வளவு தமிழ் மக்களை ஒரு இடத்தில் பார்க்க ரொம்பவே சந்தோஷமாயிருந்தது. சென்னை திருவல்லிக்கேணியே நாடகத்துக்கு வந்திருந்தது போலிருந்தது.
போன வாரம் மலையாளப் படம் ஒன்றை காயத்ரி பார்த்துக் கொண்டிருந்த போது, அதை அவ்வளவு கேலி செய்தோமே, இந்த நாடகத்தில் சும்மா அச்சுப் பிச்சுத்தனமான ஜோக்கெல்லாம் இருந்தால் காயத்ரி நம்மை கொமைத்து எடுத்துவிடுவாளே என்று சிறிதளவு உதறல் இருக்கத்தான் செய்தது.
நாடகம் என்றால் பள்ளிக்கூட ஆண்டு விழாவில் போட்ட நாடகங்கள் தான் ஞாபகம் வந்தது. ஒவ்வொரு காட்சி மாறும் போதும், திரையைப் போட்டு, செட்டை மாற்றிப் போடுவதற்குள், போன காட்சியில் என்ன நடந்தது என்று நாடகம் போடும் எங்களுக்கே மறந்து போகும் அளவிற்கு நாடகம் போடுவோம். பார்வையாளர்கள் பொறூமையிழந்து போய்விடுவார்கள். இது எப்படியிருக்கப் போகிறதோ, மேடையில் இருப்பவர்கள் தெரிவார்களா மாட்டார்களா என்று பலதரப்பட்ட உதறல்கள்.
ஆனால் ராக்கெட் பறப்பது போல் எடுத்தவுடனேயே காமெடியில் கலந்து கட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார் மாது பாலாஜி. ஒரு ஜோக்குக்கு சிரித்து முடிப்பதற்குள் அடுத்து சில ஜோக்குகள் வந்து போய்விடும். ஒரு கட்டத்தில் என்னால் சிரிக்கவே முடியவில்லை. வயிறு வலிக்க ஆரம்பித்து விட்டது. இதற்கும் முதல் 15 நிமிடங்களுக்கு கிரேஸி மோஹன் எந்தக் காட்சியிலும் தோன்றவில்லை. அவர் வந்ததும் இன்னமும் களைகட்டிவிட்டது. எல்லாமே டைமிங் ஜோக்குகள் தான். வாழ்க்கையில் ரொம்பவே விரக்தி அடைந்திருக்கும் ஒருவனுக்கு கிருஷ்ணரே நேரில் வந்து அவன்
பிரச்னைகளைத் தீர்த்து, கடவுளை மட்டுமே நம்பாதே, உன்னையும் நம்பு என்பது தான் நாடகத்தின் கரு. இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. சில மாயாஜால மேஜிக் வித்தைகளெல்லாம் வேற காட்டி அசத்திவிட்டார்கள். நடிகர் ரமேஷ் அரவிந்த் சிறப்பு விருந்தினர்.
எல்லாம் சரி தான், ஆனால் எதற்காக இன்னும் அந்தக் காலத்து ஸ்டைலிலே மேடையில் நான்கு மைக் வைத்து, அதற்கு முன் நின்று கொண்டு இன்னும் வசனம் பேசுகிறார்களோ? தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டதே, ஒரு வயர்லெஸ் காலர் மைக் வைத்துக் கொண்டு பேசப்படாதா? அதை மட்டும் கொஞ்சம் மாத்துங்க மோஹன் சார். மீண்டும் கிரேஸி மோஹன் எப்போது அடுத்த நாடகம் போடுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கடந்த ஞாயிறன்று ஸ்ரீ ராமநவமி கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஸ்ரீ ராம் சேவா மண்டலி ஏற்பாடு செய்திருந்த சுதா ரகுனாதன் கச்சேரி. இரண்டு வாரங்களாகவே நிதமும் கச்சேரி நடந்து கொண்டிருந்திருக்கின்றன. எனக்குத் தான் தெரிந்திருக்கவில்லை. மாண்டலின் ஸ்ரீநிவாஸ் கச்சேரியெல்லாம் கூட இருந்திக்கிறது. ரொம்பவே வருத்தப்பட்டேன்.
கச்சேரிக்கும் நல்ல கூட்டம். பெரும் பாலும் எல்லாம் ரிடையர்ட் கேஸ்கள் தான். கர்நாடக முன்னாள் முதல்வர் திரு.எஸ்.எம்.கிருஷ்ணாவும் வந்திருந்தார். கர்நாடகத்தில் தேர்தல் முடிந்துவிட்டது, மஹாராஷ்டிர ஆளுனர் பதவியிலிருந்தும் கல்தா கொடுத்தாகிவிட்டது, வீட்டிலிருந்து பாயைப் பிராண்டிக் கொண்டிருந்தவரை, விழாவுக்குத் தலைமை தாங்கக் கூட்டி வந்திருப்பார்கள் போல. ஆனால், என்ன ஆச்சர்யம், ஒரு முன்னாள் முதல்வருக்கு எந்த வித பாதுகாப்பும் இருந்த மாதிரி தெரியவில்லை. மருந்துக்கு கூட ஒரு போலீஸையும் காணவில்லை.
ஆனாலும் ஐயாவுக்கு தெனாவட்டு ஜாஸ்தி தான். பின்ன காங்கிரஸில் இருந்து கொண்டு, ராமநவமி கொண்டாட்டங்களுக்கு வந்திருக்காரே, சோனியா காந்தியிடம் அனுமதி வாங்கினாரா என்று தெரியவில்லை!! தேர்தலோ முடிந்துவிட்டது என்று எண்ணியிருப்பார் போல.
முதலில் ஒரு ஏழெட்டுப் பேர் கன்னடத்தில் மாத்தாடினார்கள். குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு தான் கச்சேரி ஆரம்பமானது. கச்சேரியின் ஹைலெட்டே எங்களுக்கு இரு வரிசைகள் முன்
அமர்ந்திருந்த ஒரு பெண்மணி தான். 35 வயது மதிக்கத்தக்க நடுத்தர வயதுப் பெண்மணி. யப்பா என்னமா தலையை ஆட்டி, தாளம் போட்டு ரசிக்கிறார். அவர் காட்டிய சேஷ்டைகளில் நிறைய பேர் அவரையே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் வீட்டில் மூவோ, ஜண்டு பாமோ இருந்தால் நல்லது. இவ்வளவு ஆட்டியும் அவருக்கு கழுத்து வலி வரவில்லையென்றால், அது பெரிய சாதனை தான். வாயும் அசைந்ததைப் பார்த்தால், அவரும் கூடவே பாடுகிறார் என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது, அம்மணி வெறும் தாளமும் தலையை
மட்டும் தான் ஆட்டுகிறார் என்று. ஏதோ அவர் வாயசைக்க சுதாரகுநாதன் பிளேபேக் பாடுவது போல் இருந்தது.
சுமார் மூன்று மணிநேரக் கச்சேரி. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் வேறொரு உலகில் சஞ்சாரிக்கும் சுகானுபவம். வயலின் திரு.ரகு, மிருதங்கம் திரு.சதீஷ், மோர்சிங் திரு. ராமன் என்று ஆளாளுக்கு விருந்து படைத்தார்கள்.
பாட்டெல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் பாடுவதற்கு முன், இது இன்ன ராகம், இன்ன தாளம், இவர் இயற்றிருக்கிறார் என்று ஓரிரு வார்த்தைகள் அறிமுகம் கொடுத்தால் என்னைப் போலுள்ள அரைவேக்காடுகள் முக்காவேக்காடுகளாகும் வாய்ப்புண்டு. ஏன் சொல்கிறேனென்றால், பாடகர் ஆலாபனை செய்யும் போது, இது கல்யாணியா காம்போதியா என்று தெரியாது. அட்டானா போலிருக்கும், ஆனந்த பைரவியும் எட்டிப் பார்க்கும். இப்படிப் பார்வையாளர்கள் குழம்பாமலிருக்க பாடல் பற்றிய ஒரு அறிமுகம் அவசியம் என்பது அடியேனின் தாழ்ந்த விண்ணப்பம். கச்சேரி முடிய இரவு 10.30 ஆகிவிட்டது.
இரண்டு வாரங்களில் இசையும் நாடகமும் பார்த்தாச்சு. இந்த இயல் மட்டும் தான் பாக்கி. அப்பாடா, தலைப்புக்கு ஏற்ற மாதிரி ஒரு வழியா கொண்டு வந்தாச்சு. இந்த வார வெள்ளிக்கிழமை நித்யஸ்ரீ கச்சேரி இருக்கிறதாம். ஆஃபீஸுக்கு அரை நாள் விடுப்பு விடசொல்லியிருக்கிறாள் காயத்ரி. பார்ப்போம் என்றிருக்கிறேன். உங்களுக்கு மட்டும் சொல்கிறேன், அன்னிக்கு எனக்கு ஆஃபீஸில் வேலை நிறைய இருக்கும். இப்பவே சொன்னால், குதிப்பாள்.
April 25, 2009
நிறைய ஞாபகம்.. கொஞ்சம் மறதி
April 24, 2009
சுய விளம்பரம்
April 15, 2009
சட்டத்துக்கு அறிவுமா இல்லை??
இதை விட கேவலம் என்னவென்றால், இவனுக்காக ஆஜராக நீதிமன்றமே ஒரு வழக்குறைஞரை நியமிக்கிறது. இன்று அந்த வழக்குறைஞரையும் நீக்கி விட்டது. என்னவோ, அவர் Spirit of the Law படி நடக்க வில்லையாம். ஒரு வழியாக கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழித்து ஆரம்பமான விசாரணை, அடியப்பிடிடா பாரத வட்டா என்று மீண்டும் அதே நிலைமைக்குப் போய் விட்டது. இதிலுள்ள கேலிக் கூத்தென்னவென்றால், இப்போது கஸாப் ஒரு பாகிஸ்தான் வழக்குறைஞரை நாடுகிறாராம்.
ஒன்று எனக்குப் புரியவில்லை. கஸாப் போன்ற தீவிரவாதிகள் செய்தது சாதாரண குற்றமில்லை. அது நமது நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர். இவர்களை எப்படி போலீஸ் பிடித்து, நீதிமன்றம் இவர்களை விசாரிக்கலாம். பிடிபட்ட தீவிரவாதிகளை ராணுவமல்லவா அவர்களை நீதிமன்றமத்தில் வைத்து விசாரிக்க வேண்டும். காஷ்மீரில் பிடிபடும் தீவிரவாதிகளையெல்லாம், ராணுவம் தானே விசாரித்து, அவர்களுக்கான தண்டனையை வழங்குகிறது. அவர்கள் எடுக்கும் முடிவை, எந்த நீதிமன்றமோ, மனித உரிமைக் கழகமோ ஒன்று புடுங்க முடியாது. பேசாமல் கஸாபையும் ராணுவத்திடம் ஒப்படைத்து விடலாம்.
கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு தேச துரோகி மிருகத்துக்கு இவ்வளவு சலுகைகளா? கேட்டால் சட்டமாம், நியாயமாம். தீவிரவாதிகளை இப்படி அன்பாக நடத்தினால், ”எம்புட்டு பேரைக் கொன்னாலும், இவனுங்க ஒண்ணுமே பண்ண மாட்டாங்க, இவனுங்க ரொம்ப நல்லவனுங்கடா”ன்னு நினைத்து, அடுத்த தாக்குதலுக்கு தேதி குறிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
கஸாபின் குற்றத்தை இன்னும் யார் வந்து நிரூபிக்க வேண்டும். நீதிபதி முன்னால் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டால், இவனுக்கு ஆயுள் தண்டனை கூட கொடுத்து விடுவார்கள். இல்லையென்றால், சுப்ரீம் கோர்டில் மேல் மனு கூட முலாயம் சிங் மாதிரி ஆட்கள் போடுவார்கள். சட்டம் தன் கண்களின் மீது கறுப்புத்துணி கட்டியிருப்பதால், சட்டம் குருடு என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது, அதற்கு மூளையும் கிடையாது என்று.
தான் உயிரைக் கொடுத்துப் பிடித்த தீவிரவாதிக்கு இவ்வளவு மரியாதை கிடைப்பது தெரிந்தால், அவனைப் பிடித்த, கான்ஸ்டபிள் துக்காராம் ஆத்மா சாந்தி அடைந்திருக்குமா என்று சந்தேகம் வருகிறது. கஸாபுக்கு மரண தண்டனை விதித்து, அதை கூடிய சீக்கிரமே நிறைவேற்றுவது தான் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதிமன்றம் வழங்கும் நியாயமாகும். இவ்வளவு நாளாக நியாயம் கிடைக்காமல் செய்வதிருப்பதே பெரிய தவறாகும். Justice Delayed is Justice Denied. சட்டம் இப்படித்தான் முட்டாள்த் தனமாக செயல் படுமென்றால், அந்தச் சட்டத்தையே மாற்ற வேண்டியது தான்.
கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு தீவிரவாதிக்கே, இவ்வளவு மரியாதை என்றால், கோடி கோடியாக மக்களை ஏமாற்றி பணம் செய்த அரசியல்வாதிகளையா, இந்த நீதிமன்றங்கள் தண்டிக்கப் போகின்றன?
April 08, 2009
பொண்ணுப் பார்க்க போவோமா?!
ஊர்ப்பக்கம் போயி ரொம்ப நாளாச்சா, நம்மூர் ஆளுங்க கிட்ட பேசியும் ரொம்ப நாளாயிருச்சு. திருநெல்வேலியில பேசுத தமிளே மறந்து போயிருவனோன்னு பயம் வந்திருச்சின்னா பாத்துக்கிடுங்க. வீட்டம்மாகிட்ட இந்த மாறி பேசினா, அதுக்கு ஒரு எளவும் புரியலை. யார் கிட்டயோ பேசுதேன்னு நினைச்சுக்கிட்டு பேந்தப் பேந்த முளிக்கா. சில சமயம் முளிக்காளா மொறக்காளான்னே தெரியலை. யார்கிட்டயும் எங்கூர் தமிளுல பேச முடியல. அதனால தான் உங்களையெல்லாம் நெல்லைத் தமிளுல குளிப்பாட்டலாம்னு கிளம்பிட்டேன். நம்புங்க மக்கா, நெல்லைத் தமிழ், வெல்லத் தமிழ்.
சரி மேட்டருக்கு வருதேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி, திவ்யா ஒரு பதிவு எளுதியிருந்தாங்க. அதாவது, பொண்ணு பார்க்க வருத ஆளுகிட்ட என்ன பேசுறதுன்னு. நல்லாத்தேன் எளுதியிருந்தாங்க. அப்பவே, இதுக்கு நாமளும் ஒரு எசைப் பாட்டு, சீ, எசைப்பதிவு எளுதிறணும் முடிவு பண்ணேன். ஆனாப் பாருங்க இந்த எளவெடுத்த ஆஃபீஸுல “கொடுக்க காசுக்கு கொஞ்சம் வேலையைப் பாருல”ன்னு சொல்லி உசுர வாங்கிப்புட்டானுங்க. இப்போத்தேன் எளுத முடியுது.
எல்லா வீட்டுலயும், சும்மாத் திரியுற பசங்களுக்கு, இந்த கல்யாணம்’ற கருமாதியப் பண்ணிருவாங்க. இதுலேர்ந்து தப்பிக்க வளி ரொம்ப கொறவு. “நீ என்னல குளியில தள்ளுது, நானே விளுந்துக்கிடுதேன்னு” சொல்லி சில பசங்க ஏதாச்சும் ஒரு பொண்ணைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிடுவாங்க. அவங்களைப் பத்தி நமக்கென்ன கவலை.
ஆனா, இந்த வீட்டுல பாத்து கல்யாணம் பண்ணி வைக்காங்க பார்த்தீயெளா, அந்தப் பசங்களுக்குத் தான் இந்தப் பொண்ணு பார்க்கற வைபவமெல்லாம். இந்த சடங்குலயும் ஒரு ‘இது’ இருக்குது’ங்கறத ஒத்துக்கிடணும்.
அப்புறம், இந்த சொஜ்ஜி பஜ்ஜி, ஸ்வீட் காரம் காஃபி இதெல்லாம் கொடுப்பாங்க. நமக்குத்தான் எப்பவுமே அன்லிமிடட் மீல்ஸ் ஃபுல் கட்டு கட்டியே பளக்கம்’னுட்டு, இன்னும் கொஞ்சம் கேசரி போடுங்க, ரெண்டு பஜ்ஜி வைங்க, அது இதுன்னு கேட்டுத் தொலையாத. நாமளும் டீஜண்டுன்னு காட்டிக்கிடணும்.
அப்புறம் ஒரு முக்கியமான் விஷயம்டே. பொண்ணு பாக்கப் போறதுக்கு முன்னாடி, பொண்ணோட ஃபோடோவெல்லாம் வூட்டுல காட்டுவாய்ங்க. அதுல பொண்ணு புடிச்சிருந்தா மட்டும், இந்த பொண்ணு பார்க்கப் புறப்புடுங்க. குடும்பத்தோட போய் பொண்ணயும் பார்த்துட்டு, நாங்க அப்புறமா சொல்லியனுப்பறோம்னு சொல்லிப்புட்டு வராதீங்க. ஒரு பொண்ண பார்த்தோமா, அதையே கட்டினமான்னு இருக்கணும். அத விட்டுப்புட்டு, நாலஞ்சு பொண்ண பார்த்துப்புட்டு நல்லா சொஜ்ஜி பஜ்ஜியெல்லாம் தின்னுப்புட்டு, இருக்கறதுல எது தேருதுன்னு யோசிக்காதீங்க. எங்கூரு பக்கத்துலயெல்லாம், கல்யாணம் கட்டுதேன்னு சொன்னாத்தேன், பொண்ணெயே காட்டுவாங்க . பொண்ணையும் பார்த்துப்புட்டு, பிடிக்கலைன்னா, பெறவு உங்க உசுருக்கு நாங்க உத்தரவாதம் கிடையாது’ன்னுடுவாங்க.
“ஆமாம், இம்புட்டுச் சொல்லுதியே, பொண்ணப் பார்க்கயில, என்னாத்த பேசுறதுன்னு, ஒண்ணுமே சொல்லலியேல்ல, திவ்யா, எம்புட்டு சொல்லியிருக்காங்க”ன்னு கேக்குதீயேளா?
“எலேய் முட்டாப்பயலே, கெடைக்க பத்து நிமிஷத்துல என்னத்தலே பேச முடிவு செய்ய முடியும்? தலைக்குமேல ஆண்டவன் எதையோ கிறுக்கி அனுப்பியிருக்கான். எல்லாம் அதுபடி தான் நடக்கும். சும்மாவா சொன்னாங்க, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”னு. அமையலைன்னா, தலைவிதிய நொந்துகிட்டு, டஸ்மாக்’ல ஒரு கட்டிங்க் அடிச்சிக்கிட வேண்டியது தான்”.
வாழ்க்கைத் துணை தேடுறது, ரொம்ப ஸ்வாரஸ்யமானது, ஆனா கவனமா இருக்கணும். வாழ்த்துக்கள்.
டிஸ்கி: மேலே எழுதினதுல என்னென்ன நான் பண்ணேன்னெல்லாம் பின்னூட்டத்துல கேக்கப்படாது. அதெல்லாம் தொளில் ரகசியம்.
March 26, 2009
பயணப்பட்டோம்
ஒரு மாதமாக கோவா போகப் போகிறோம் என்று கனாக் கண்டு கொண்டிருந்த நாளும் வந்தது. வெள்ளிக் கிழமை அதிகாலை 6.15 மணிக்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமானம். பழைய விமான நிலையமாக இருந்தால் 5 மணிக்குக் கிளம்பினால் கூட 5.20க்குப் போய் விடலாம். தேவனஹள்ளி விமான நிலையம் வரை போக வேண்டும் என்பதால் வீட்டிலிருந்து 3.50’க்கெல்லாம் கிளம்பியாயிற்று. ஏர்-டெக்கனிடமிருந்து வாங்கிய Turbo Propeller பொறுத்திய விமானத்தைத் தான் கோவா வழித்தடத்தில் ஓட்டுகிறார்கள். “கல்யாணமாகி முதன் முதலில் விமானத்தில் போகிறோம், இப்படி டப்பா விமானத்திலா போவது” என்று காயத்ரி அங்கலாய்க்கவில்லை, மனதிற்குள் திட்டியிருப்பாள். என்ன செய்வது, 1.30 மணிநேரப் பயணத்திற்கு A-380’ஆ விடுவார்கள்?? சொன்ன நேரத்துக்கு வண்டியைக் கிளப்பி 7.30’க்கெல்லாம் கோவா போய் சேர்ந்தாயியுற்று.
கோவா என்றதுமே, நண்பர்களெல்லோரும், மனைவியுடனா கோவா செல்வது என்று கேலி செய்தார்கள். அவர்கள் சொன்னது, விமானம் ஏறியவுடனேயே பலித்து விட்டது. விமானத்தில் பயணிக்கும் பாதிப் பேர் பாதி உடை தான் அணிந்திருந்தார்கள். அதிலும் விமானப் பணிப் பெண் வேறு அநியாயத்துக்கு கையை உரசிக் கொண்டு அங்குமிங்கும் நடக்கிறாள். காயத்ரி முகத்தில் கொஞ்சம் கடுகைப் போட்டு தாளித்து விடலாம், அப்படி சிவந்திருந்தது.
கோவாவில் நாங்கள் போய்ச் சேர வேண்டிய இடம், கோல்வா பீச். விமான நிலையத்திலிருந்து 40 நிமிட பயணத்திலிருக்கிறடு. சாலைகளெல்லாம் வெகு ஜோர். நல்ல பராமரிப்பு. தெற்கு கோவாவில் அவ்வளவாக மக்கள் கூட்டம் இருக்காது என்று நண்பன் சொன்னதால், இந்த கடற்கரையைத் தேர்ந்தெடுத்தேன். இணையதளத்தில் ரொம்பவும் தேடி ஒரு ஹோட்டலில் அறையும் முன் பதிவு செய்தாயிற்று. போய் இறங்கிய தான் தெரிந்தது, இணையதளத்தில் காட்டிய படங்களை எவ்வளவு மாற்றியிருக்கிறார்களென்று. இணைய தளத்தில் காட்டப்பட்ட அறைக்கும் நிஜத்திலும் நிறைய வித்தியாசம். புலம்பி என்ன செய்ய? ஒரு நாள் இங்கே இருப்போம் என்று தேற்றிக் கொண்டு, பக்கத்திலிருக்கும் கொஞ்சம் விலை கூடுதலான ஹோட்டலில் மறு நாளைக்கு மாறினோம்.
கோல்வா பீச்சின் அழகே அங்கிருக்கும் வெள்ளை நிறத்திலுள்ள மணல் தான். வேறெங்கும் இந்த நிறத்தில் மணலைப் பார்த்ததில்லை. 19 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டிருக்கும் நீஈஈஈஈஈளமான கடற்கரை. கூட்டம் அவ்வளவாக இல்லை. Bare Minimum உடையில் அயல்நாட்டவர் மட்டுமில்லை, இந்திய நங்கைகளும் பார்க்க முடிந்தது. காயத்ரி கூட இருந்ததனால், மனதில் தான் படப் பிடிக்க முடிந்தது.
மற்ற கடற்கரைகளில் காணப்படும் கூட்டத்தில் பத்தில் ஒரு பங்கு தான் இங்கு இருக்கிறது. அங்கேயே parasailing என்ற படகோடு கட்டை விடப்பட்ட பராசூட் பயணம், Jet Skiing என்ற தண்ணீரில் பயணிக்கும் வேகமான ஸ்கூட்டர், வாழைப் பழம் போலுள்ள தோணியில் பயணிக்கும் Banana Ride வேகமாகக் கடலில் போகும் ஸ்பீட் போட் ஆகியவை இருக்கிறது. கடற்கரைக்குள்ளே போகும் போதே நம்மை வந்து அது பண்ணணுமா இது பண்ணனுமா என்று மொய்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் சொன்ன விலைக்கும், கால் பங்கிலிருந்து பேரம் பேசலாம். கொஞ்சம் அசந்தாலும் நன்றாக மசாலா அறைத்து விடுவார்கள். நான் பராசெய்லிங்க், ஸ்கூட்டர் ரைட், மற்றும் ஸ்பீட் போட் மட்டும் போதும், எவ்வளவு ஆகும் என்று கேட்டதற்கு, முதலில் 3000 ரூபாய் ஆகும் என்றான். 500 தான் கொடுப்பேன், முடிந்தால் வா, இல்லையென்றால் வேண்டாம் என்று சொன்ன பிறகு பேரம் பேசிப் பேசி, 900 ரூபாயில் வந்து நின்றான். எல்லாமே, பத்து நிமிடம் தான். ஆனால் அந்த பத்து நிமிடத்தில் ஏற்பதும் அந்த த்ரில், விவரிக்க வார்த்தைகளில்லை. நான் மட்டும் தான் பராசெய்லிங்க் போனேன். காயத்ரிக்கு உயரத்தைக் கண்டால் பயம். அதுவும் கடல் மீது பறப்பதற்கு இன்னும் பயம். 100 அடி உயரத்திலிருந்து கோவா கடற்கரையையும் கீழே நீல நிறக் கடலையும் பார்க்கும் அனுபவம் வாழ்க்கையில் மறக்க முடியாதது. நல்ல வெயில் அடித்தாலும், கடற்கரையில் காற்று அடித்ததால் அவ்வளவாகத் தெரியவில்லை. மாலையில் கொஞ்சம் கூட்டம் கூடியிருந்தது. ஒரு மணி நேரம் கடலில் குளித்தேன். அலைகள், திருச்செந்தூரில் இருப்பது போல் அவ்வளவு வீரியம் இல்லை. காலை நக்கி விட்டுத்தான் செல்கின்றன. காயத்ரி கால் மட்டும் நனைத்துக் கொண்டாள்.
மறு நாள் வடக்கு கோவாவிலுள்ள பீச்களுக்குப் போகலாம் என்று முடிவெடுத்தோம். வடக்கே பணாஜி (கோவாவின் தலைநகரம்) தாண்டி 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கோவாவின் பிரசித்தி பெற்ற கலாங்குடே பீச். இங்கு தான் தன்ஹா தன்ஹா பாட்டு படமாக்கப் பட்டது என்று நினைக்கிறேன். பிரசித்தி பெற்றதால் கூட்டமும் நிறைய. எனக்கென்னவோ, இதை விட கோல்வா மிகவும் பிடித்திருந்தது. இரு சக்கர வாகனங்கள் வாடகைக்குக் கிடைக்கிறது. ஒரு நாளுக்கு 250 ரூபாய் வாடகை. பெட்ரோல் செலவு நமது. ஒரு ஹோண்டா ஆக்டிவா எடுத்துக் கொண்டு அஞ்சுனா, மிராமர் வெகேடர் பீச்சுகளுக்குப் போனோம்.
மிராமர் பீச் பணாஜி ஊருக்குள்ளேயே இருக்கிறது. இங்கு கடலில் எங்கும் நீந்தவோ, கால் நனைக்கவோ முடியாது. எடுத்தவுடனேயே ஆழம் தான். கரைக்கு வெகு அருகில் கப்பலைப் பார்க்கலாம். அஞ்சுனா பீச் வெறும் பாறை. அடுத்து வெகேடர் பீச்சுக்குப் போனொம். இயற்கை எழில் கொஞ்சும் அழகான பீச். சுற்றிலும் மலை. மலைக்கு மேலே சபோரா கோட்டை. இங்கு தான் தில் சாஹ்தா ஹை படத்தில் ஒரு காட்சி இங்கு தான் எடுத்தார்கள். கோட்டைக்கு ஏறிச் செல்வதற்கு தனி வழி. அங்கிருந்து பார்த்தால் கீழேயுள்ள கடற்கரை. மறு புறத்தில் தென்னை மரங்கள் அடர்ந்த நிலப்பரப்பு. இன்னொரு புறம் கடல். ஆஹா, அங்கேயே நாள் முழுக்க உட்கார்ந்திருக்கலாம். அப்படியொரு அழகு இடம். அந்த இடத்தில் ஒரு அரை மணி நேரத்தில் இருந்தோம். கோட்டை வரை மேலேறிப் போவதற்குள் காயத்ரி ரொம்பவே களைத்துப் போய் விட்டாள்.
மீண்டும் கோல்வாவிற்கு பயணத்தைத் துவங்கினோம். திரும்பும் போது நெடுஞ்சாலையில் வராமல், சில இண்டீரியர் பாதைகளிலெல்லாம் வண்டியைச் செலுத்தினேன். அற்புதமான சாலைகள். மக்கள் தான் எவ்வளவு பண்புள்ளவர்களாக இருக்கிறார்கள்? ஒரு முச்சந்தியை கடக்கும் போது, அவர்கள் நின்று நமக்கு வழி விடுகிறார்கள். நிறைய பழங்காலத்து வீடுகளைப் பார்க்க முடிந்தது. ரொம்பவே வித்தியாசமான கட்டமைப்பு, கலாசரம். மக்கள் எவ்வளவு செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள் என்று எண்ணத் தோன்றியது. ஒரு வழியாக 7 மணிக்கு கோல்வா வந்து சேர்ந்தோம். உடலிலுள்ள அனைத்து தசைகளும் எலும்புகளும் நரம்புகளும் செயலிழந்து போயிருந்தது.
மறு நாள் ஷாப்பிங்க் ஏதாவது செய்யலாம் என்று அருகிலிருக்கும் ஊரான மர்காவுன் போனோம். என்ன ஆச்சர்யம், ஒரு கடை கூட திறக்கவில்லை. ஞாயிறன்று கடைகள் கிடையாதாம். ஒன்றுமே வாங்காமல் ஹோட்டலுக்கு வந்து காலி செய்து கொண்டு, விமான நிலையம் வந்து ஊர் திரும்பினோம்.
கோவாவில் எனக்கு இன்னொரு பிடித்த விஷயம், எந்த பீச்சருகில் இருக்கும் கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் கிடையாது. கடற்கரையெல்லாம் ரொம்ப சுத்தமாக இருக்கிறது. அவ்வளவு நன்றாகப் பராமரிக்கிறார்கள்? மெரீனா எந்த லக்ஷணத்தில் இருக்கோ?
இன்னொரு அம்சம், இங்குள்ள ஹோட்டல்கள். சுத்த சைவமாக இருந்தாலும் சாப்பாட்டுப் பிரச்னையே இல்லை. கோவா சாப்பாடு என்றாலே மீன் தான் என்று நினைத்திருந்தது எவ்வளவு தவறு? கோல்வாவில் ஒரு ஹோட்டலில் சைவ கோவா சாப்பாடு கிடைத்தது. வெகு ஜோர். மது பானமில்லாத ஹோட்டலே கிடையாது.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், எல்லோரும் ஆங்கிலம் பேசுகிறார்கள். நாம் ஹிந்தியில் பேசினால் கூட ஆங்கிலத்தில் பதிலளிக்கிறார்கள். டாக்ஸி டிரைவர், ஸ்கூட்டர் வாடகைக்கு விடுபவர், ஹோட்டல் ரிஷப்ஷெனிஸ்டு என எல்லோரும் ஆங்கிலம் சரளமாகப் பேசுகிறார்கள். அதே போல் பெயர்ப் பலகைகள் ஒன்றுமே ஹிந்தியிலோ, மராத்தியிலோ எழுதப் படவில்லை. எல்லாமே ஆங்கிலம் தான்.
மனதே இல்லாமல் முன்று நாட்கள் போனதே தெரியாமல் கனத்த மனதுடன், மீண்டும் வர வேண்டும் என்ற எண்ணத்துடன் ஊர் திரும்பினோம். வாழ்வில் மறக்க முடியாத மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை.
வாசகப் பெருமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தப் பக்கம் புதிதாக சேர்க்கப்பட்டது:
வெட்டிவம்பு பக்கத்திலேயே புகைப்படங்களின் ஸ்லைட் ஷோவை சேர்த்துள்ளேன். க்ளிக்கினால் பெரிதாகக் காணலாம். பார்க்க முடியவில்லையென்றால், இது தான் புகைப் படங்கள் இருக்கும் இணையதள முகவரி:
http://picasaweb.google.com/vksankaran/GoaTrip
கோவாவில் எங்கு தங்கலாம், எந்த இடம் போகலாம் என்று இணையதளத்தில் நிறைய எழுதித் தள்ளியிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, கோவா என்றாலே பீச் என்றாகிவிட்ட பிறகு, பீச் அருகில் இருக்கும் ஒரு விடுதியில் தங்குவது நல்லது. டிசம்பரிலிருந்து மே மாதம் இறுதி வரை தான் கோவா செல்ல முடியும். பிப்ரவரி மாதம் வரை நல்ல சீசன். மார்சிலேயே வெப்பம் 32 டிகிரி. மூன்று நாட்களில் நானே கறுத்து விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் :-)
கோடை காலத்தில் வெயில் பின்னியெடுத்து விடும். ஜுன் முதல் நவம்பர் வரை மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி விடும். அப்போது கோவா போவது நல்லதில்லை. புயலுடன் மழை வருவதால், கடலிலும் போக முடியாது. தங்கும் வசதி நிறையவே இருக்கின்றன. ஆனால் இணையதளத்தில் போட்டிருக்கும் விளம்பரங்கள் நம்மை ரொம்பவே ஏமாற்றுகின்றன. 2500 ரூபாய்க்கு மேல் தான் நல்ல தரமான விடுதிகள் கிடைக்கின்றன. பேச்சுலர்களாகப் போனால் எப்படியும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். இந்தத் தங்கமணிகளைக் கூட்டிச் செல்லும் போது தான் இந்த பாராமீட்டரையெல்லாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. கோல்வா பீச்சில் நாங்கள் தங்கின விடுதி, Silver Sands Beach Resort". ஒரு நாளைக்கு 3000 ரூபாய் (ஏ.ஸி வசதி கொண்டது, இரண்டு பேருக்கான காலை சிற்றுண்டியும் இதில் அடக்கம்)
பீச்சிலிருந்து 150 மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது. அருகிலேயே கோல்வா பீச் ரெஸிடென்ஸி (இது கோவா சுற்றுலாத்துறை நடத்தும் விடுதி), ஸ்டார் பீச் ரிசார்ட், கோல்பார் பீச் ரிசார்ட், வின்ஸிஸ் பீச் ரிசார்ட் என்று நிறைய இருக்கின்றன. அவையெல்லாம் எப்படியென்று தெரியவில்லை.
கலங்குடே பீச் அருகில் கலங்குடே பீச் ரிசார்ட் இருக்கிறது. இதுவும் கோவா சுற்றுலாத் துறையினர் நடத்தும் விடுதி. வெளியிலிருந்து பார்க்க நன்றாக இருக்கிறது. பாகா பீச்சிலும் நிறைய விடுதிகள் உள்ளன. இந்த மூன்றும் தான் பிரசித்தி பெற்ற பீச்சுகள். இது போக நிறைய தனியார் வீடுகளும் வாடகைக்குக் கிடைக்கின்றன. இணையதளத்தில் அதற்கான விளம்பரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பெங்களூரிலிருந்து நிறைய தனியார் பேரூங்துக்கள் போகின்றன. 16 மணி நேரம் ஆகும். விமானத்தில் பயணிக்க 1.15 மணி நேரம் தான்.
மது அருந்துபவர்களுக்கு சுவர்க லோகம். எல்லா ஹோட்டலிலும் மது உண்டு. புகை பிடிக்க முடியாது.
வாழ்வில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம்.