சோனி டி.வி’யில் போன வாரம், நியூ யார்க் படம் காட்டினார்கள். ஏற்கனவே பார்த்த படமென்றாலும் காத்ரினா கைஃபுக்காக இன்னொரு முறை பார்ப்பது என்று முடிவு செய்து, மீண்டும் ஒரு முறை பார்த்தேன். படத்தின் ஒரு கட்டத்தில் எஃப்.பி.ஐ அதிகாரியாக வரும் இர்ஃபான் கானுக்கும் நீல் நிதின் முகேஷுக்கும் இடையே நடக்கும் சூடான விவாதம் என்னை மிகவும் பாதித்தது. என்னை மிகவும் சிந்திக்க வைத்த விஷயமும் இது தான்.
“என் நண்பனை தீவிரவாதியாக்கியது உங்கள் இயக்கம் தானே” என்று இர்ஃபானைப் பார்த்து நீல் கோபாவேசமாக கேட்கும் போது, இர்ஃபான் மிகவும் சாந்தமாக பதில் சொல்வார்.
“நான் ஒரு முஸல்மான். ஒரு சில முஸல்மான்கள் செய்யும் தீவிரவாதச் செயல்களால் இன்று என்னுடைய ஜாதியைச் சேர்ந்தவர்கள் அனைவரையுமே இன்று தீவிரவாதிகள் என்று நினைத்து விடக்கூடிய அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எவ்வளவோ நற்செய்திகளைச் சொல்லும் இஸ்லாத்தைப் பாராமல், ஒரு சில விஷமிகள் செய்யும் செயல் இன்று அந்த மதத்தையே களங்கப்படுத்தி விட்டது. இந்தக் களங்கத்தைப் போக்குவது ஒவ்வொரு முஸல்மானின் கடமை. அதைத்தான் நான் செய்கிறேன்” இப்படியாக வசனம் இருக்கும்.
இந்த வசனம் என்னை கொஞ்சம் சிந்திக்கச் செய்தது. மேல் சாதிக்காரர்கள் என்று தங்களைத் தாங்களே வர்ணித்துக் கொண்டு சில மனிதர்களைத் தீண்டத் தகாதவர்களாக்கி, அவர்களுக்குப் படிக்கும் உரிமை மறுக்கப்பட்டு, அவர்கள் மீது அடக்குமுறை கொண்டுவந்து, அவர்களின் வாழ்க்கையையே நாசமாக்கியிருக்கும் எல்லோருமே தீவிரவாதிகள் தான். தங்களின் இந்த கீழ்த்தரமான் செயலுக்கு மதத்தைக் காரணம் காட்டியது இன்னும் இழிவான செயல். எனக்குத் தெரிந்த வரை ஹிந்து தர்மத்தில் ஒரு சாரார் மேல் ஜாதிக்காரர்கள் என்றோ கீழ்ஜாதிக்காரர்கள் என்றோ சொல்வதில்லை.
மஹாபாரத்திலே கூட ஒரு பகுதியுண்டு. உத்தங்கர் என்னும் மஹரிஷி, பாலைவனத்தில் அலைந்து திரியும் தனக்கு, நினைத்த மாத்திரத்திலே தண்ணீர் வேண்டும் என்ற வரத்தினைப் பெற்றிருப்பார். அவர் தாகமாக் உணர்ந்த போது, ஒரு வேட்டைக் காரன் ஒருவன் அவருக்குத் தண்ணீர் அளிப்பான். அவனிடம் தண்ணீர் வாங்க மறுத்து அவனை விரட்டிவிடுவார். அப்போது வானத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலிக்கக் கேட்கும். “உத்தங்கரே உமக்கு இந்திரனல்லவா அமிர்த்தத்தை அளிக்க வந்தான். நீரோ, ஜாதி வித்தியாசம் பார்த்து அவனைத் துரத்தி விட்டீர். இனி உமக்கு அமிர்தமும் கிடைக்கப் போவதில்லை. உமக்கு நான் கொடுத்த வரமும் பலிக்கப் போவதில்லை” என்று கூறி விட்டு அசரீரி மறைந்து விடும். தான் செய்த இழி செயலினால் நினைத்து உத்தங்கர் மனம் திருந்துவார்.
ஆக ஜாதிகள் இருந்த போதிலும், அதனுள் வேற்றுமைகளை உண்டுபண்ணியது ஹிந்து தர்மம் அல்ல. (இதுவே ஆங்கிலேயர்கள் கொடுத்த பெயர். இயற்பெயர் சனாதன தர்மம்) தர்மம் என்ற பேரில் பஞ்சாயத்து செய்தவர்கள் தான். அதிலும் பிராம்மணர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டவர்கள் தான். (அப்படிக் கூறிக்கொள்பவர்களின் பரம்பரையில் தான் நானும் பிறந்துள்ளேன் என்று இங்கே கூறிக்கொள்கிறேன்) பிராம்மணன் என்ற வார்த்தைக்கு முற்றும் கற்றறிந்தவன் என்று பொருள். சக மனிதர்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டவன் எப்படி பிராம்மணன் ஆவான் தெரிய்வில்லை. அதே சனாதன தர்மம் பிறப்பால் ஒருவன் பிராம்மணன் ஆகிவிட முடியாது என்றும் கூறுகிறது. இப்படிச் சொல்லும் தர்மமா, தீண்டாமையையும் புகட்டியிருக்க முடியும். பிற்காலத்தில் வந்த சில (பல) மனிதர்களால் செய்த தவறுக்கு தர்மத்தைக் குறை கூறி பலனில்லை. அப்படியே ஒரு சில பிராம்மணர்கள் செய்த தவறுக்காக இன்று பிராம்மணர்கள் என்று பூணல் அணிந்த அனைவரையும் காரணம் காட்டுவதிலும் அர்த்தமில்லை.
பிராம்மணர்கள் என்றாலே உயர்ஜாதிகாரன் என்ற திமிர் உண்டு என்று சிலர் எண்ணுவதை யாரால் போக்க வேண்டும், முடியும்? தங்களை பிராம்மணர்கள் என்று கூறிக் கொள்ளும் மனிதர்கள் தான் அதைச் செய்ய வேண்டும். மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பாகுபாடற்ற சமுதாயம் மலர்வதை பிராம்மண ஜாதியில் பிறந்தவன் என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். இறைவனின் படைப்பில் அனைத்து மனிதரும் சமம் என்ற உணர்வு உண்டானாலே இந்த எண்ணம் நீங்கி விடும் என்பது எனது தாழ்மையான கருத்து. பல நூற்றாண்டுகளாக கீழ்ஜாதி என்று வர்ணித்து சில மனிதர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறக்கு இப்போதாவது பிராயச்சித்த்தம் தேடுவது பிராம்மண ஜாதிக்காரன் என்று சொல்லும் ஒவ்வொருவனின் கடமையாகும்.