Pages

March 26, 2006

விடியலின் மறுபக்கம்

இன்றைக்கு உலகே நம்மைப் பார்த்து பிரமித்து நிற்கிறது. எல்லா சௌகர்யமும் கொண்ட அமெரிக்க மக்களே இந்தியாவை நினைத்தால் கதி கலங்கிப் போய் நிற்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கையா? இல்லை! மற்ற பிற தேசங்களிலிருந்து நம் நாட்டில் இறக்குமதியாகும் வேலை வாய்ப்புகள் தான் இதற்குக் காரணம். மென் பொருள் மற்றும் மென் பொருளை உபயோகித்து செயல் படும் துறைகளில் வரலாறு காணாத அளவிற்கு இன்று வேலை வெடித்துத் தான் போயிருக்கிறது. உங்களுக்கு C C++, ஜாவா இதில் ஏதாவதொன்றில் இருநூறு வரிகள் எழுதத் தெரிந்து அதை கணினியிலும் செலுத்திவிட்டால் போதும் ஏதாவது ஒரு கம்பெனியில் குறைந்தது பத்தாயிரம் ரூபாய்க்கு வேலை நிச்சயம். நுனி நாக்கால் அங்கிலமும் பேசத் தெரிந்து மின்னஞ்சல் அனுப்பத் தெரிந்தால் போதும். ஏதாவது கால் சென்டரில் ஏழாயிரம் ரூபாய்க்கு வேலை நிச்சயம்.

இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத முன்னேற்றம் அடந்துள்ளது. பங்குச்சந்தையின் சென்செக்ஸ் எகிறிக்கொண்டே போகிறது. உலகின் அத்தனை தேசங்களின் பார்வையையும் இன்று நம் பக்கம் திருப்பியிருக்கிறோம். அத்தனை வியாபார ஸ்தாபனக்களும் இந்தியாவில் ஒரு மென்பொருள் உருவாக்கும் கிளை வைத்திருந்தால் அது கௌரவத்தின் சின்னமாக மதிக்கபடுகிறது. ஒவ்வொரு கம்பெனியும் தனது வாடிக்கையாளர் உதவி (customer support) மற்றும் தகவல் மையத்தையும் (Information Center)இந்தியாவிற்கு மாற்றுகின்றன. எங்கு திரும்பினாலும் வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரங்கள். கை நிறைய சம்பளம், எல்லோர் கையிலும் மொபைல் ஃபோன், விலையுயர்ந்த ஆடைகள் என (இந்தத் துறைகளிலுள்ள) இளைஞர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. "ஆஹா இந்தியாவின் வேலை வாய்ப்புத் திண்டாட்டம் ஒழிந்து விட்டது. நமது பிள்ளைகளின் எதிர்காலம் விடிந்து விட்டது" என்று எத்தனையோ பெற்றோர்கள் நிம்மதிப் பெருமுச்சு விடுகின்றனர்.

ஆனால் எத்தனை பேர் இந்த விடியலின் மறுபக்கத்தை அறிவர்? இந்த விடியலின் மறுபக்கம் எவ்வளவு கொடூரமானது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த விடியலுக்கு இன்றைய இளைஞர்கள் கொடுக்கும் விலை எவ்வளவு தெரியுமா?
பணம் அழிந்தால், ஒன்றும் ஆகிடாது. ஆனால் ஆரோக்கியமும் ஒழுக்கமும் ஒழிந்தால் எல்லாம் போய்விட்டதென்று காந்தி சொன்னார். ஆனால் இன்று பணத்திற்காக உடல் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் கலாசாரத்தையும் மொத்தமாக குழி தோண்டிப் புதைத்து வருகிறோம்.

மென் பொருள் தயாரிக்கும் வேலை பார்ப்பவர்களாவது காலை நேரத்தில் தான் வேலை பார்க்கின்றனர். எப்போதாவது தான் வேலைப் பளு அதிகமாகிறது. இது எல்லா துறையிலுமுள்ளது தான். அதிலும் ஒரு சிறு பகுதியினர் தான் நாள் பகல் பாராமல் வேலை பார்க்கின்றனர். அதுவும் சில வாரங்களுக்குத்தான். அப்புறம் மீண்டும் ஒன்பதிலிருந்து ஆறு மணி வரையிலுள்ள வேலை தான். இதையே தமிழில் உள்ள பிரபல வாரப் பத்திரிகை மென் பொருள் துறையில் எல்லோரும் இரவு பகல் பாராமல் வேலை பார்க்கின்றனர் என்று ஒரு தவறான தகவலைக் கொடுக்கிறது. மென் பொருள் தயாரிப்பில் ஆறு வருடம் வேலை பார்க்கிறேன் என்பதால் எனக்கு இந்த கருத்தைச் சொல்ல உரிமையுண்டு என நினைக்கிறேன்.

ஆனால் மென் பொருளை உபயோகித்து, புற அலுவலக வேலைத் துறைகளில் (Business Process Outsourcing)உள்ளவர்கள் தான் மிகவும் பாவப்பட்டவர்கள். அதிலும் வாடிக்கையாளர்களுக்கு பதில் கூறும் கால் சென்டரில் வேலை பார்ப்பவர்களின் வேலை இன்னும் மோசமானது.

எப்போது நாம் கால் சென்டரைக் கூப்பிடுகிறோம். வாடிக்கையாளர் மையத்தை நாம் எப்போது அணுகுகிறோம். நமக்கு ஏதாவது ஒழுங்காக நடக்கவில்லை என்ற போது தானே. நமது கோபத்தையெல்லாம் நம்மிடம் பேசும் ஒரு வாடிக்கையாளர் உதவி அலுவலரிடம் கொட்டித் தீர்க்கிறோம். அப்படிப் பார்க்கும் போது இந்த அலுவலர் எதிர்கொள்ளும் ஓவ்வொரு வாடிக்கையாளரும் தனது கோபத்தை இவர் மேல் கொட்டுகிறார்கள். ஒரு சிலர் அவதூறான வார்த்தைகளை பிரயோகிக்கின்றனர். இதில் வேடிக்கையென்னவென்றால் இவரால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. தகவலைக் கொடுப்பது மட்டுமே இவரது வேலை.

தொலைபேசி நிறுவனம் அதிகமாக கட்டணம் கேட்கின்றதா? கூப்பிடு கால் சென்டரை. பாவம் ஏதோ இளைஞரோ இளைஞியோ நமது கோபத்திற்கு ஆளாகின்றனர். இவர்கள் பணி நேரம் என்னவோ எட்டு மணி நேரம் தான். ஆனாலும் வேலையிலுள்ள வரை வாடிக்கையாளரிடமிருந்து அவதூறு வார்த்தைகள் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? இதனால் உண்டாவது; மன அழுத்தம். அதைப் போக்கிகொள்ள இவர்கள் புகைப் பழக்கத்தை நாட வேண்டியிருக்கிறது. பெங்களூரிலுள்ள ஒரு பிரபல கால் சென்டர் வாசலில் நிறைய பேர் (பெண்கள் கூட!!!) புகை பிடித்த வண்ணம் இருக்கின்றனர். புகைபிடிக்கும் பழக்கத்தோடு நின்றுவிடாமல், தவறான உறவிலும் சிலர் ஈடுபடுகிறார்கள் என்பது தான் திடுக்கிடும் உண்மை. சில நாட்களுக்கு முன் ஒரு கால் சென்டரிலுள்ள கழிப்பறை அடைப்பை அகற்றும் போது நிறைய ஆணுறைகளை எடுத்திருக்கிறார்கள். எங்கே போகிறது இந்திய கலாசாரம்??

சரி, இவர்களது பணி நேரம் எட்டு மணிநேரம் தான் என்றாலும், எப்போது வேலை பார்க்கிறார்கள். வேலை ஆரம்பிப்பதே மாலை ஐந்து மணி முதல் தான். அப்போது தான் மேலை நாடுகள் இயங்க ஆரம்பிக்கின்றன. இவர்கள் ஒழுங்காக உறங்குவதுமில்லை. ஐந்து மணி முதல் இரவு ஒரு மணி வரை ஒரு பாட்ச். அடுத்த பாட்ச் ஒரு மணி முதல் ஒன்பது மணி வரை. வீடு வரை கார் வந்து அழைத்துப் போகிறது, காரிலேயே வீடு வரை விட்டுப் போகிறார்கள். இருந்தாலும் காலை ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தால் எப்படி உறங்க முடியும். ஆண்களாவது ஒரு வாரு சரி செய்து கொள்வார்கள். ஆனால் இந்தத் துறையில் முக்கால்வாசி, பெண்கள் தான் வேலை பார்க்கிறார்கள். அவர்களது நிலை இன்னும் மோசம். திருமணத்திற்குப் பெண் தேடும் போது கால் சென்டரில் வேலை பார்க்கும் வேண்டாம் என்றளவிற்கு பெற்றோர்கள் வந்துள்ளனர்.
இவர்களுக்கு தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் எதற்கும் விடுமுறை கிடையாது. இவர்களது வாடிக்கையாளர்கள் எந்த தேசத்தைச் சார்ந்தவர்களோ அவர்களது விடுமுறைகள் தான் இவர்களுக்கு விடுமுறை.

இப்படி உடலையும் வருத்தி கலாசாரத்தையும் மறந்து ஒழுக்கத்தையும் விட்டு சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு நமது இளைஞர்கள் எங்கே போகின்றனர். இவர்களது நிலமையை மாற்ற கால் சென்டர் நிறுவனங்கள் என்ன வேணாலும் செய்து தொலைக்கட்டும். நம்மால் இவர்களது நிலை மாற என்ன செய்ய முடியும். முடிந்த வரையில் எந்த ஒரு கால் சென்டர் அலுவலரிடமும் கடுமையாக பேசுவதை தவிர்ப்போம். அவதூறு வார்த்தைகளால் அவர்களது மனம் உளைச்சலுக்குள்ளாக்குவதை தடுப்போம். இவர்களும் மனிதர்கள் தான். நம் நாடு அடைந்திருக்கும் பொருளாதார விடியலிற்கு முழு அர்த்தம் கொடுப்போம்.

March 09, 2006

அனுபவம் புதுமை

எத்தனை பேர் இந்த பாடலைக் கேட்டிருப்பீர்கள்? காதலிக்க நேரமில்லை படத்தைப் பார்த்த யாரும் இந்தப் பாடலை ரசிக்காமல் இருந்ததில்லை. சரி சரி, ரொம்பவும் கற்பனைக் குதிரையை அவிழ்த்து விட வேண்டாம். இந்த வாரம் ஒரு புதுமையான அனுபவம் கிட்டியது. அது தான் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை நேர்காணும் வைபவம். கொஞ்சம் எல்லோருக்கும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் campus interview.
எங்கள் கம்பெனி தேர்ந்தெடுத்தது பெங்களூரிலுள்ள கல்லூரியை. நான், எனது மேலாளர் மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறையைச் சார்ந்த அதிகாரி (Human Resource Manager) என்று மூன்று பேர் போயிருந்தோம்.

நிறைய மாணவவர்களைக் காண நேரிட்டது. அதுவும் பெங்களூர் கல்லூரி, கேட்கவா வேணும். ச, காலேஜுன்னா!!!, இப்படி இருக்கணும். நாமளும் படிச்சோமே என்ற ஆதங்கமும் மதில் எழுந்தது. (சில பேருக்குத்தான் இந்த ஆதங்கத்தின் உண்மையான அர்த்தம் புரியும்!!)

எங்களது முந்நேர்காணல் உறையைக் (Preplacement Talk) கேட்க ஒரு பெருங்கூட்டமே கூடிற்று. நானும் எனது கம்பெனி பற்றி ஒரு சில வார்த்தைகள் அவிழ்த்து விட்டேன். (மைக்கை கையில புடிச்சா அரசியல்வாதி மாதிரி பேசிட்டே இருப்பியேடா!!!).

ஒவ்வொரு மாணவனின் கண்களிலும் ஒரு மாதிரியான எதிர்பார்ப்பு, ஏக்கம், ஒளி என பல வகையான அர்த்தங்கள். அவர்களது கண்களே ஆயிரம் கதைகள் சொல்லின. எவ்வளவு பேர் வீம்புக்கு எங்களது நேர்காணலில் பங்கு கொண்டார்களோ, எவ்வளவு பேர் இந்த கம்பெனியாவது நமக்கு ஒரு வேலை போட்டுத்தருவார்களோ என்று எண்ணியவை எத்தனை மனங்கள், ஈசன் தான் அறிவார். ஒரு மாதிரியாக எழுத்து தேர்வு ஆரம்பமானது. அந்த 45 நிமிட இடைவேளையில் என மனக்கடலில் உதித்து மறைந்தன ஆயிராமாயிரம் எண்ண அலைகள்.

இதே போன்று தானே ஒரு காலத்தில் நாநும் எத்தனை கம்பெனி படியேறி விண்ணப்பம் செய்திருப்பேன். எவ்வளவு முறை எழுத்துத் தேர்விலேயே நிராகரிக்கப் பட்டு அவமானம் அடைந்திருப்பேன். ஒவ்வொரு முறை நான் ஏதாவது தேர்வு எழுதும் போது என் அம்மா எத்தனை சாமிக்கு எவ்வளவு வேண்டியிருப்பாள். எனது தேர்வு முடிவை எதிர்பார்த்து ஆவலாய் இருந்திருப்பாள். ஒவ்வொரு முறை தோல்வி அடைந்த போதும் எவ்வளவு மனக்கஷ்டத்தையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் எனக்கு ஆறுதல் சொல்லியிருப்பாள். எனது மகனும் ஒரு நாள் கை நிறைய என்று சம்பாத்திக்க மாட்டானா என்று எவ்வளவு ஏங்கியிருப்பாள். "அம்மா!!! நான் செலக்ட் ஆகிட்டேன்" என்று சொன்னபோது எவ்வளவு மகிழ்ந்திருப்பாள். அந்த மாகிழ்ச்சியை என் தாயோடு பகிர்ந்துகொள்ள எனக்கு 15 நாள் ஆயிற்று.

இன்று இந்த மாணவர்களில் எத்தனை பேர் என்னைப் போன்று இருக்கிறார்களோ? எவ்வளவு அம்மாக்கள் தனது மகன்(ள்) இந்த கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என்று எத்தனை சாமிகளுக்கு நேர்ந்து கொண்டார்களோ? எவ்வளவு பேர் நிராசை அடைந்தார்களோ?
நானறியாத அம்மாக்களே, உங்கள் மகனுக்கு என்னால் இந்த கம்பெனியில் வேலை கொடுக்க முடியவில்லை. ஆனால் உங்கள் மகனுக்கு வேறொரு நல்ல கம்பெனியில் கண்டிப்பாக வேலை கிடைக்கும், என்னை மன்னித்துவிடுங்கள், என்று மானசீகமாக மன்னிப்பு கோரிவிட்டு வெறும் மூன்று பேரை மற்றும் தேர்வு செய்தேன்.

March 07, 2006

விவஸ்தை கெட்ட அரசியல்

தமிழ் நாட்டில் இப்போது எங்கு பார்த்தாலும், தேர்தல் பற்றித் தான் பேச்சு. யார் யாருடன் கூட்டணி, யார் யாருக்கு எத்தனை சீட்டு, யார் யாருக்கு போட்டியிட இடம் கிடைக்கும் கிடைக்காது, இதை பற்றித்தான் எந்த நாளிதழ், மாத இதழ், வார இதழை புரட்டினாலும் வெளிப்படும் முதல் செய்தி. அதிலும் சென்ற வாரம் எந்த செய்தி முதல் இடத்தைப் பிடித்தது என்று ஒரு டாப் டென் நிகழ்ச்சி நடத்தினால், அது கண்டிப்பாக மதிமுக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பற்றித்தான்.
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை எதிரியும் இல்லை என்று ஒரு புதுமொழியுண்டு. ஆனால் விவஸ்தை, தன்மானம் இது எதுவுமே இல்லையா?? அப்புறம் என்ன இக்கட்சியின் தலைவரை தன் மானச்சிங்கம் என்று வர்ணிப்பது. போயும் போயும் 12 சீட்டு அதிகமா கிடைக்கிறது என்பதற்க்காகவா கூட்டணியை மாற்றுவது? சட்ட மன்றத்தில் வெறும் 36 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு என்ன சாதித்து விட முடியும்??

இதே ஜெயலலிதாவை காதால் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்கள் இந்த மதிமுக கட்சியினர். இப்போது அதையெல்லாம் மறந்துவிட்டு எப்படி இவர்களால் நட்பு பாராட்ட முடியும்?

சரி இதே வைகோவை திட்டித்தீர்த்தவர் தானே ஜெயலலிதா, இவரை ஒண்ணரை ஆண்டுகள் சிறையில் அடைத்து மகிழ்ந்தாரே. இப்போது வோட்டு வேண்டும் என்பதற்காக இவரை அழைத்துக் கொள்வாரா?

பதவிக்காக கொள்கையையும் காசுக்காக சகோதரியைக் கூட்டி கொடுக்கும் நயவஞ்சகற்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. கூட்டிக் கொடுப்பவர்களுக்காவது தான் செய்வது தவறு என்பது தெரியும். அதை நியாயப் படுத்த மாட்டார்கள். ஆனால் இந்த மானங்கெட்ட அரசியல் வாதிகள் விவஸ்தை கெட்ட நடத்தையை என்னவென்று சொல்வது??

இப்படி ஒரு ஜனனாயகம் தேவை தானா??