Pages

August 25, 2005

கால வெள்ளோட்டம் கொண்டு சென்றவை

போன வெள்ளிக்கிழமை ஆவணி அவிட்டம். வயசு பசங்க கல்லூரிக்குக் கல்தா கொடுக்கும் நாள். பொண்ணுங்கள்லாம் ராக்கிய எடுத்துண்டு வந்துட்டாங்கன்னா. அதுக்காக எஸ்கேப் ;-))
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஆவணி அவிட்டத்திற்கு என் அப்பாவின் சொந்த ஊரான கல்லிடைக்குறிச்சிக்குப் போவது வழக்கம். என் தாத்தா வீடு அங்கிருந்ததால் ஒவ்வொரு விசேஷத்திற்கும் அங்கு சென்று விடுவோம். அதற்கு முன் கல்லிடைக்குறிச்சி பற்றி ஒரு சிறு விளக்கம். மேற்குத் தொடற்சி மலையின் அடியில், அம்பாசமுத்திரத்திற்கருகில் தாமிரபரணி கொஞ்சி விளையாடியோடும் ஒரு பெரிய கிராமம். ஒரு காலத்தில் பெரும்பாலும் அந்தணர்களே வசித்து வந்தனர். பதினெட்டு அக்கிரஹாரங்கள். இங்கு தான் சாமி மற்றும் Gentleman படங்களின் பல காட்சிகள் எடுக்கப்பட்டன. அண்ணாமலை சீரியலும் தான். எங்கள்
வீட்டிற்கு முன்பாக ஒரு பெரிய வாய்க்கல் போகும். அதில் தான் நீச்சல் கற்றுக் கொண்டேன். இப்படியாக, எழில் மிகுந்த ஊரில் ஆவணி அவிட்டம் படு ஜோராக நடக்கும்.
பிராமணனாகப் பொறந்தவன் தினமும் மூன்று வேளையும் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும் என்பது
ஐதீகம். ஆனால் இன்று 99 விழுக்காடு மக்கள் அதைச் செய்வதில்லை. (என்னையும் சேர்த்துத்தான்). பூணூல் போடும் போதே, "நித்ய கர்ம அனுஷ்டான யோக்யதா சித்யர்த்தம்" என்று சொல்லித் தான் போடுகிறார்கள். இன்று நாமெல்லாம் நித்ய கர்மங்களையும் செய்வதில்லை, யோக்கியமாகவும் இருக்கிறோமா என்றும் தெரியவில்லை. அதனால் ஆவணி அவிட்டம் ஒரு நாளாவது எல்லாம் செய்வோமே என்று தவறாது எல்லோரும் பட்டு வேஷ்டி கட்டிக் கொண்டு கையில் பஞ்ச பாத்திரம் எடுத்துக்கொண்டு எங்கள் தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு வந்து விடுவர்.
முதலில் காமோகாரிஷீது மந்திரத்தில் ஆரம்பிக்கும். வாத்தியார் 1008 சொல்லச் சொல்லுவார். ஆனால் அலுவலகம் செல்லுவோர், 108 போதுமே மாமா என்று சொல்லி விட்டு அதையும் சொல்லாமல் நழுவி விடுவர். சில பிரம்மச்சாரி பிள்ளைகள் சமிதாதானம் செய்வார்கள். தினமும் செய்ய வேண்டிய எல்லாம், அன்று ஒரு நாள் மட்டும் கிரமமாக நடக்கும். அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு break. வாத்தியார் மற்ற தெருக்களுக்கெல்லாம் போய் விடுவார். பிறகு 11 மணியளவில் திரும்பி வருவார். வந்த பிறகு பிரம்ம யக்ஞம். "என்னப்பா எல்லோரும் மாத்தியாந்நிகம் பண்ணியாச்சா" என்பார். முக்கால் வாசி பேர் பண்ணியிருக்க மாட்டார்கள். ஆனால் எல்லோரும் "ஓ பண்ணியாச்சே" என்று தலையாட்டிவிடுவார்கள். என் அப்பாவிற்கு நான் தான் மாத்தியாந்நிகம் கற்றுத் தருவேன். "பிள்ளை சொல்லித் தந்து மந்திரம் சொல்லறேளே; வெக்கமா இல்லையா" என்று அம்மா கிண்டல் செய்வாள். அப்பா இதற்கெல்லாம் அசரும் ஆசாமி இல்லை. "நீண பாட்டுக்கு மந்திரத்தை சொல்லிண்டே போ. நான் சொல்லற வரைக்கும் வெயிட் பண்ணாதே" என்று instruction கொடுத்து விடுவார்.
பிறகு மஹா சங்கல்பம் நடக்கும். இது ஒரு அரை மணிண நேரம். எங்கள் வீட்டு கொட்டடியில் (அக்கிரஹாரங்களில் உள்ள வீடுகளின் முதல் அறையை இப்படித் தான் அழைப்பார்கள்) தான் இது நடக்கும்.
பிறகு வாய்க்காலில் சென்று ஸ்னானம் செய்து மீண்டும் பட்டாடை உடுத்தி பூணூல் மாற்ற வேண்டும். 10 நிமிடத்தில் எல்லாரும் வந்துடணும் என்று வாத்தியார் கட்டளையிடுவார். நாங்க வயசுப் பசங்க அப்போத் தான், தண்ணீரில் தொட்டுப்பிடிச்சு விளையாடுவோம்.
குளித்து முடித்து காண்டரிஷித் தர்ப்பணம் முடிந்து கோவிலில் கூடுவோம். கோவிலில் இன்னும் பல மந்திரங்கள் சொல்லி, சுவாமிக்கு தீபாரதனை நிவைத்தியம் எல்லாம் முடிந்து வீட்டிற்கு வரும் போது 2.30 ஆகிடும். வீட்டிற்கு வந்து பெரியவா காலிலெல்லாம் விழுந்து ரூபாய் வாங்குவோம். தெருவில் நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று அவர்கள் அம்மா அப்பா காலிலெல்லாம் விழுந்து ஒரு 10-15 ரூபாய் சேர்த்து விடுவேன். என் தங்கைக்கு காதிலிருந்து புகையா வரும். நமக்கும் இந்த மாதிரி ஆவணி அவிட்டம் இல்லையே என்று. அப்புறம் தான் சாப்பாடு.

ஆவணி அவிட்டத்திற்கும் கோமணத்திற்கும் என்ன சம்பந்தமோ தெரியாது. எங்கள் ஊரில் ஆவணி அவிட்ட தினத்தன்று ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று கோமணத்துணி வாங்குவோம். அதுவும் எப்படி, ஒரு பாடுப்பாடி.
ஆவணி அவிட்டம் கோமணம்
அம்பி பொறந்தா சோபனம்
அங்கிச்சி பொறந்தா கல்யாணம்
அக்கா பொறந்தா சீமந்தம்
தம்பி பொறந்தா பூணல்.

இந்த பாட்டை இப்போ நினைத்துப்பார்த்தால் சிரிப்பு தான் வருது. அக்கா எப்படி இனிமேல் பிறக்க முடியும். ஆனாலும் பாட்டில் ஒரு வீச்சு இருக்க வேண்டும் என்பதற்காக வைத்தார்களோ தெரியாது. இப்படி பாடினால் தான் சில மாமாக்கள் கோமணத் துணி தருவார்கள். இந்தத் துணி எங்கள் தெருவிலிருக்கும் பிள்ளையார் கோவில் சதுர்த்தி விசேஷத்தின் போது தீவட்டி கொளுத்துவதற்காக. பிள்ளையாருக்கு ஏன் தான் இப்படி அழுக்கு துணியில் தீவட்டி கொளுத்துகிறார்களோ???? இப்படி ஒரு சிறு விசேஷம் கூட மிக விமர்சையாக நடக்கும்.

மறு நாள் காயத்திரி ஜபம். பிரம்மச்சாரி பிள்ளைகள் ஹோமம் வளர்த்து 1008 சமித்துகளை காயத்திரி மந்திரம் ஜபித்து ஒவ்வொன்றாக நெய்யில் முக்கி போட வேண்டும். இப்படிச் செய்தால் விசேஷம். நான் ஒழுங்காக செய்கிறேனா என்று பார்ப்பதற்கு என் தாத்தாவும் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வார். இதில் ஒரு பெரிய கூத்தே நடக்கும். யாருக்கு 1008 சமித்துகளை ஒவ்வொன்றாக போடுவதற்கு பொறுமை. அவர் அந்தப் பக்கம் எங்காவது நகரும் போது ஒரு பெரிய கட்டை, அப்படியே நெய்யில் முக்கி போட்டு விடுவேன். (எனக்கு காயத்திரி என்று பெயர் கொண்டவளே மனைவியாக வந்தது இதன் பலன் தானோ என்னவோ. இந்த வருடம் காயத்திரி காயத்திரி என்று ஜபித்தாயா என்று அம்மா கிண்டல் செய்தாள்)

இப்போது திரவியம் தேடி பெங்களூர் வந்த பிறகு 1 மணி நேரத்திற்குள் ஆவணி அவிட்டம் முடிந்து விடுகிறது. வீட்டிலேயே மந்திரம் சொல்லி பூணூல் மாற்றிக்கொள்கிறேன். அப்படியே கோவில்லுக்குச் சென்றாலும் 1 மணி நேரத்தில் மந்திரம் சொல்லி வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். சென்னையிலிருந்து ஆவணி அவிட்ட மந்திர புத்தகத்தை அனுப்புமாறு என் தங்கையிடம் சொல்லியிருந்தேன். ஆனால் வந்ததோ இரண்டே பக்கத்தில் அடக்கமாக இருந்த சில மந்திரங்கள். பிரம்ம யக்ஞத்தை விழுங்கி விட்டார்கள். மஹா சங்கல்பத்தில் பாதி மந்திரத்தைக் காணோம். சமிதாதானம் பற்றி ஒன்றுமே போட வில்லை. வருடத்திற்கொரு நாள் அனுஷ்டானங்களை முழுதாக செய்யலாம் என்றால், நகரத்தில் இருக்கும் வாத்தியார்களே பாதி மந்திரத்தை விழுங்கி விடுகிறார்கள். "ஆதித்யம் தர்ப்பயாமி" என்று உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒருவன் அர்க்க்யம் விடுவதால் தான் காலையில் ஆதவன் உதயாமாகிறான், மாலையில் மங்குகிறான் என்று வேதங்கள் கூறுகின்றன. அனுஷ்டானங்களையும் பழக்கங்களையும் நாளுக்கு நாள் மறந்து வருவதால் கலியவதாரம் சீக்கிரத்திலேயே நடந்துவிடும் போலிருக்கிறதே.

August 22, 2005

நூலுக்குள் நுழைந்தேன் - 2

எனது முந்தைய பதிப்பான "நூலுக்குள் நுழைந்தேன்" பதிப்பைப் படிக்க வில்லையென்றால், அதை முதலில் படித்து விட்டு பிறகு இதைப் படிக்கவும்.

ஒரு புத்தகத்தைப் பெருவாரியான மக்களைப் படிக்க வைப்பதென்பது சாமன்னியப்பட்ட விஷயமல்ல. (அது ஒரு சாதாரண விஷயமாக இருப்பின் நான் எவ்வளவோ பெரிய கதாசிரியனாகியிருப்பேன் ;-))) )
ஆனால் ஒரு புத்தகத்தில் தன்னையே ஐக்கியப் படுத்திக் கொள்ளச் செய்தலென்பது அதை விடவும் மிக கடுமையானது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அப்படி ஒரு மாபெரும் சாதனையைத்தான் அமரர் கல்கி தனது சில கதைகள் மூலம் செய்துள்ளார். அதிலும் பொன்னியின் செல்வன் புத்தகம் எவரையும் கதையினுள் இழுத்துக் கொள்ளும் வல்லமை பெற்றது. ஒவ்வொரு கதா பாத்திரமும் நம் முன் பேசுவது போல் தோன்றும்.
இதைப் படித்த எவருமே தன்னையும் அதில் ஒரு கதாபத்திரத்தோடு இணைத்துப் பார்க்காமல் இருந்ததில்லை. "நான்லாம் அப்படி இல்லப்பா" என்று யாராவது சொன்னால் அவர்கள், ஒரு மிக அற்புதமான வினோதமான அனுபவத்தை இழந்துவிட்டார்கள் என்று தான் சொல்லக் கூடும்.
என்னை மிகவும் கவர்ந்த கதாபத்திரம், குந்தவை. நான் வந்தியத்தேவனாக மாறியதால், அவன் காதல் வயப்பட்டவள் மேல் எனக்கும் காதல் ஏற்பட்டது. அந்த கதை நடந்த இடத்துக்கெல்லாம் செல்ல வேண்டும் போன்றிருந்தது. கதையில் வரும் கதாபத்திரங்களோடு நாமும் பேச மாட்டோமா என்ற ஆவல் ஏற்பட்டது.
ஒரு முறை கும்பகோணம் செல்லும் வழியில் தஞ்சாவூரைக் கடக்க நேரிட்டது. அப்போது காவேரியாற்றங்கரையைக் கடிக்கையிலே, எனது குந்தவையும் இவ்விடத்தில் நீராடியிருப்பாளோ. இந்த நீராழி மண்டபத்துக்கு வந்திருப்பாளோ என்றெல்லாம் என்னை எண்ண வைத்தது. குந்தவையைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுபவர்கள் "காதல் கொண்டேன்" பதிப்பினைப் படிக்கவும்.


கும்பகோணம் சென்ற பிறகு பேருந்துவில் பயணம் செய்கையிலே அங்கு பழையாறை என்ற ஊர் இருக்கிறதா என்று வினவினேன். (பழையாறையை சுந்தரபாண்டியன் 1600ல் இடித்து தரைமண்ணாக்கிவிட்டான் என்று பிற்பாடு தெரிய வந்தது) இப்படி ஒவ்வொரு இடத்தையும் பார்க்கையிலே பொன்னியின் செல்வன் கதையில் இந்த இடங்களில்லாம் என்ன நடந்திருக்கும் என்று எண்ண வைத்தது.

புத்தகம் படித்து முடித்த பிறகு என்னுள் நடந்திருக்கிறதென்றால், புத்தகம் படிக்கும் போது எவ்வளவு பித்து பிடித்தவன் போல் இருந்திருப்பேன். (நீ இப்பவும் அப்படித் தான் இருக்கேடா!!!)
புத்தகத்தின் கடைசி பாகத்தை ஒரே இரவில் படித்து முடித்தேன். அதுவும் இப்புதகத்தை படிக்கணினியில் (லப் டாப்) வைத்து pdf முறையில் படித்தேன்.

படித்த பிற்பாடு யாருடானாவது இதைப் பற்றி பேச முடியாதா? இதில் வரும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பை யாருடனாவது பகிர்ந்துகொள்ள முடியாதா என்றெல்லாம் ஏங்கியதுண்டு. அப்போது தான் வலைதளத்தில் பொன்னியின் செல்வனுக்கென்றே ஒரு யாஹூ குழுமம் இருப்பது தெரியவந்தது. இக்குழுவில் தற்போது 500 மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் என்னைப் போல் பொன்னியின் செல்வனைப் படித்து பித்து பிடித்தவர்கள்.

உங்களுக்கும் இப்புதகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறதா? எனக்கு ஒரு மினஞ்சல் அனுப்புங்கள். நான் எல்லா பாகங்களையும் pdf முறையில் அனுப்பித்தருகிறேன். நீங்களும் அந்நூலுக்குள் நுழையுங்கள்.

August 17, 2005

நூலுக்குள் நுழைந்தேன்

சிந்து பைரவி படத்தில் சுஹாசினி பேசும் ஒரு வசனம் இது.
"நாமளா பாடறது ஒரு சுகம். நாமளா கேக்குறது ஒரு சுகம். ஆனா, சங்கீதத்தப் பத்தி நாமளா பேசுறது இன்னோரு விதமான ஒரு சுகம்."
அது மாதிரி நாம் விரும்பி படிக்கும் நூல்கள் பற்றி யாருடனாவது விவாதம் செய்வது ம் ஓர் இனிமையான அனுபவம். நான் மிகவும் ரசித்துப் படித்த சில புத்தகங்கள்:

எனக்கு ஞாபகம் வந்து நான் படித்த முதல் நாவல் சிட்னி ஷெல்டன் எழுதிய "த ரேஜ் ஆஃ ஏஞ்சல்ஸ்" (The Rage of Angels) படிக்கும் போதே இது தமிழில் மக்கள் என் பக்கம் கதை தான் என்று புரிந்து விட்டது. ஸாரி,மக்கள் என் பக்கம் படம், இந்த கதையின் அடிப்படையில் தான் எடுக்கப் பட்டது என்று தெரிந்து போய் விட்டது. நான் படித்ததிலேயே இது தான் சிறந்தது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் எனக்கு நாவல்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியதில் சிட்னி ஷெல்டனின் பங்கு அதிகம் என்பதாலும் இது என்னுடைய கன்னி நாவல் என்பதாலும் இதைச் சொல்கிறேன். சிட்னி ஷெல்டன் பற்றி இரண்டொரு வாக்கியம் எழுதாவிடில் நாவல் படிக்கும் நல்லுலகம் என்னை எந்த ஜென்மத்திலும் மன்னிக்காது. கதை சொல்லும் விதத்திலும் கதையைக் கொண்டு செல்லும் விதத்திலும் இவருக்கு இணை வேறொருவர் கிடையாது என்றால் அது மிகையாகாது. அதன் பின் இவர் எழுதிய பெரும்பாலும் எல்லா புத்தகங்களும் படித்துவிட்டேன். அதில் நான் மிகவும் ரசித்துப் படித்தது "இஃ டுமாறோ கம்ஸ்" (If Tomorrow Comes) குங்குமம் விளம்பரத்தில் வருவது போல் "பக்கத்துக்கு பக்கம் வித்தியாசம்; படிக்கப் படிக்க ஸ்வாரஸ்யம்" என்று. அப்படித் தான் இதுவும் இருக்கும்.

இவருக்குப் பிறகு நான் விரும்பிப் படித்த நாவலாசிரியர் ஜெஃப்ரி ஆர்ச்சர். இவரது நாவலான் "கேன் அண்டு ஏபல் (Kane And Abel)" தான் என்னை மிகவும் கவர்ந்தது. முதல் பாகம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாகம் முதல் கியர் மாறிவிடும். இதன் தொடர்ச்சியாக "புராடிகல் டாட்டர் (Prodigal Daughter)" மற்றும் "ஷல் வி டெல் த பிரஸிடென்ட் (Shall We tell the President)" என்ற இரண்டு நாவல்கள் வந்தாலும் கேன் அண்டு ஏபல் போல் இல்லை.

இதன் பின் நிறைய எழுத்தாளர்கள் நாவல்கள் படித்தாலும் சமீபத்தில் இர்விங் வாலேஸ் மாதிரி யாராலும் குஜாலாக எழுத முடியவில்லை. குஜால் நாவல்கள் படிக்கணுமா? த செகண்டு லேடி(The Second Lady) மற்றும் த ஃபேன் கிளப் (The Fan Club) படிக்க வேண்டும். ஃபேன் கிளப்பில் ஸ்வாரஸ்யம் கிடையாது. நூறு சதவிகீதம் குஜால் மட்டர் தான். (பெண்கள் இதைப் படிக்க வேண்டாம் என அறிவுறைக்கப் படுகிறார்கள்).

சொல்ல மறந்து விட்டேனே, டான் பிரவிணின் ஒவ்வொரு நாவலையும் மூன்றே நாட்களில் படித்திருக்கிறேன். மனுஷன் இஷ்டத்துக்கு காதுல பூ சுத்தினாலும் நல்லாத்தான் சுத்துறாரு. அதுவும் ஏஞ்சல்ஸ் அன்டு டெமன்ஸ் ரொம்ப ஓவர். இந்தாளு பத்தி பேசுறதுக்கு இந்த தமிழ் போதும்.

என்ன தான் புத்தகங்கள் படித்தாலும், அவையனைத்தும் ஒரு முறை படித்து விட்டு தூக்கிப் போட்டு விடும்படியானவை தான். எதுவுமே என்னை அதில் ஐக்கியப்படுத்தியதில்லை. இம்மதிரியான புத்தகங்களைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் ஒற் அழகான வார்த்தை உண்டு.
"Books of the Hour" அந்த நேரத்தைக் கழிப்பதற்காக இவை உதவுகின்றன.
மீண்டும் மீண்டும் அந்த புத்தகத்தைப் படிப்பதற்கான உந்துதல் இருந்ததில்லை. அதில் நாமே ஒரு கதா பாத்திரமாக மாறியதில்லை. ஆனால் அந்த அதியசமும் நிகழ்ந்தது.
அந்த கதையில் நானும் ஒரு கதாபாத்திரமாக என்னை நினைத்துக் கொண்டேன். சந்திரமுகி மாதிரி. ஒவ்வொரு முறை அந்த கதாபாத்திரம் வரும் போதும், அதில் என் பிரதிபிம்பத்தைப் பார்த்தேன். அவன் பேசினால், நான் பேசுவது போலிருக்கும். அவன் சண்டை போட்டால் நானும் சண்டை போடுவடு போலிருக்கும். பெண்களிடம் நூலு விட்டால், நான் கடலை போடுவது போலிருக்கும். அந்த நாவல்.......

August 11, 2005

பரிணாம வளர்ச்சியினால் வழக்கொழிந்த சொற்கள்

என் மனைவிக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்பதாலும், இதைப் படிக்கும் எவருக்கும் என் மனைவியின் மின்னஞ்சலோ நடமாடும் முண்டக்கூவி (mobile phone) எண் தெரியாது என்ற தைரியத்தால் தான் இதை எழுதுகிறேன். இதை படித்துவிட்டு என் மனைவியிடம் என்னைப் போட்டுக் கொடுப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

எனது பழைய அலுவலகத்தில் தோழியொருத்தி எனக்கு சாபமிட்டாள். "தமிழே தெரியாத ஒரு பொண்ணோடத் தான் மாரடிக்கப் போறே" என்று. என்ன நினைத்து சாபமிட்டாளோ, அவளது சாபம் பாடி பலித்து விட்டது. என் மனைவியின் சொந்த ஊர், கடவுளுக்கு சொந்த ஊரான கேரளவிலுள்ள ஆலைப்புழை நகரம். பெண் பார்க்கச் சென்ற தினத்தன்று அவளிடம் கேட்ட முதல் கேள்வியே, தமிழ் தெரியுமா அன்பது தான். அதுவும் ஆங்கிலத்தில் தான் கேட்டேன். தெரியுமென்று தமிழில் விடை வந்த பிறகு தான் நிம்மதி பெருமூச்சு வந்தது. இதற்கு முன்னமே ஒரு வருடம் ஒரு பாலக்காட்டுவாசி என் சக அறையாளனாக இருந்தான். (எலேய், இதே ரேஞ்சுல புரியாத வார்த்தையெல்லாம் உபயோகப் படுத்தினே அரப்படப்போர"ன்னு யாரோ சொல்லுவது எனக்கு கேட்கிறது. ரூம் மேட் என்பதைத்தான் அப்படி விளித்தேன்(இது மெய்யாலுமே தமிழ் வார்த்தை தான். ஆனால், இதை மலையாளத்தில் தான் உபயோகிக்கிறார்கள்). அவன் பேசும் தமிழை நிறைய கேலி செய்ததுண்டு. வீடு மாற்றும் போது அவன் என்னிடம் கேட்டான், "இந்த சாமானையெல்லாம் எப்படி கடத்தப் போறாய்" என்றானே பார்க்கலாம். நானும் எனது இன்னொரு கோவை நண்பனும் விழுந்து விழுந்து சிரித்தோம். ஆனால், பெண் பார்த்த தினத்தன்று எனக்கு மனைவியாக வரப்போகிறவள் பேசிய தமிழ் அப்படியெல்லாம் எந்த ஒரு மலையாள சாயலுமே இல்லை. (மலையாள சாயலில் தமிழ் பேசினால் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்பதற்காக special training எடுத்துக்கொண்டாளா என்று தெரியவில்லை).

ஒரு வழியாக திருமணமும் இனிதே அரங்கேறியது. திருமணம் கழிந்து மறுவீடு சென்ற போது தான் மொழிப்பிரச்சினை ஆரம்பித்தது. நான் ஏதோ சொல்லப் போக, என் மனைவி, "அது அப்படி அல்லா" என்றாள். எதற்காக அல்லாவை அழைக்கிறாள் என்று திருதிருவென முழித்தேன். பிறகு தான் தெரியவந்தது, "அது அப்படி இல்லை" என்பதைத்தான் "அல்லா" என்றிருக்கிறாள்.
பிறகு அவளது தங்கைகளிடம் பேசிக்கொண்டிருக்கையில், "ஒன்றும் சாரமில்லை" என்றாள். "சாரமா", நமக்கு தெரிந்த வரை சாரம் என்றால் லுங்கி தானே, இங்கு யாரும் லுங்கி யாரும் அணியவில்லையே, எதற்காக இவள் சாரமில்லை என்கிறால் என்று எனக்கும் ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது பரவாயில்லை என்பதை சாரமில்லை என்றிருக்கிறாள். இது மலையாளம் இல்லை, தமிழ் தானென்றும் சொன்னாள். இன்னும் இப்படி எவ்வளவு புரியாத தமிழை கேட்டுக் குழம்பபோகிறோம் என்று நொந்து கொண்டேன்.

காரை எடுக்கச் சென்ற போது சாவியைக் கொடுக்குமாறு கேட்டேன். ஏதோ சேட்டனை கூப்பிட்டு, "கார் தார்க்கோல் கொண்டா" என்றதும் அதிர்ந்தே போய் விட்டேன். எது காருக்கு தார்க்கோலா???? எங்கள் ஊரிலெல்லாம், பெரிய பிரம்மாண்ட தேரோடு வடத்தை இணைப்பதற்கு ஒரு பெரிய கம்பி உபயகப்படுத்துவார்கள். இல்லை மாட்டு வண்டியில் சக்கரத்தில் இருக்குமே, அதற்குத்தான் தார்க்கோல் என்பார்கள். இவளென்னடா, கார் சாவியைக் கேட்டால் தார்க்கோல் கொண்டு வரச்சொல்கிறாளே, எதைக் கொண்டு வரப்போகிறார்களோ, என்று நினைக்கையில், நல்ல வேளையாக சாவியை கொடுத்தார்கள். இப்படியாக பல புதிய வார்த்தைகள் உபயோகத்திலிருப்பதைக் கண்டு நான் அவ்வப்போது என் மனைவியை கிண்டல் செய்வதுமுண்டு.
தரையில் புழுதி / தூசி இருக்கிறது என்று சொல்ல மாட்டார்கள் - பொடி இருக்கிறது என்பார்கள். நூலாம்படை என்பது அவள் அகராதியிலேயே கிடையாது.அதை வலை என்பாள். துண்டை தோர்த்து என்பாள். போர்வையை பொதப்பு என்பாள்.

தோழி விட்ட சாபம் ஞாபகம் அவ்வப்போது வரும். முழுவதாக பலிக்காவிட்டாலும் கொஞ்சமாவது பலித்துவிட்டது.

சில நாட்களுக்கு நான் அவளது தமிழை கேலி செய்ததுண்டு. என்னடீ தமிழ் பேசுகிறீர்கள். பாதி புரியவில்லை.
பிறகு ஒரு நாள் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய விகடன் ஒன்றை படிக்கும் போது, அதில் சில வார்த்தைகள் என் மனைவி ஊரில் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் இருந்தன. தமிழ் நாட்டில் நாம் பேசும் தமிழ், பரிணாம வளர்ச்சியினால் பிற மொழிகளிலிருந்தும் சில வார்த்தைகளைக் கடன் வாங்கியிருக்கிறது.
பண்டைய தமிழில் "இல்லை" என்ற ஒரு வார்த்தையே கிடையாது. "அல்ல" என்று தான் இருந்திருக்கிறது. பரவாயில்லை என்ற வார்த்தை பாரசீக மொழியிலுள்ள பாதி வார்த்தை. பாரசீக வார்த்தையான பர்வாஹ்+இல்லை (இது தமிழ்) என்பதைச் சேர்த்து தான் பரவயில்லை என்கிறோம். பாதி என்ற வார்த்தையே தவறு. பகுதி என்பது தான் சரி. பகுதி என்ற வார்த்தை தான் மறுவி பாதி என்றாகிவிட்டது.
சாவி என்ற சொல்லும் வட மொழிச் சொல். அக்காலத் தமிழர்கள் சாவிக்கு பதிலாக தார்க் கோலைத்தான் உபயோகித்திருக்கிறார்கள்.

தமிழின் இந்த பரிணாம வளர்ச்சியினால் எத்தனை வார்த்தைகள் வழக்கொழிந்து விட்டன. இந்த உண்மை அறிந்த பின் என் மனைவி பேசும் தமிழை கேலி செய்வதை நிறுத்தி விட்டேன். இப்போதெல்லாம் என் நாவிலும் அவ்வப்போது அல்லா எட்டிப்பார்க்கிறார். ;-)

August 09, 2005

இசை ஓவியம்

கடந்த வார இறுதியில் ஊருக்குப் போகும் போது, பேருந்துவில் காதல் ஓவியம் படம் பார்க்க நேரிட்டது. (வி.சி.டி.க்கெல்லாம் அம்மா ஆப்பு வச்சப்பறம் இந்த மாதிரி ஹைதர் அலி காலத்து படத்த தான் பஸ்ஸுல போடுறானுங்க). பாரதிராஜா, இளையராஜா வைரமுத்து கூட்டணியில் வந்த படம். படம் என்னவோ தோல்வியிலும் தோல்வி அப்படி ஒரு தோல்வி. ஊர் பேரு தெரியாத ஒரு கதாநாயகன். ஓரிரண்டு படங்கள் மட்டுமே செய்திருந்த ராதா, இது தவிர படத்தில் நிறைய வந்திருப்பது ஜனகராஜ். இவர் எப்போ வந்தாலும் எரிச்சல் தான் வருது. ஹீரோ மொகரக்கட்டையைக் கண் கொண்டு பார்க்க முடியாது. (குருடனாக வரும் காட்சியில் மட்டும் அச்சு அசல் கண் இல்லாதவர் போலவே பண்ணியிருக்கார்). இவரின் குரலுக்காகவே கதாநாயகிக்கு இவர் மேல் காதல் வருகிறதாம். கதாநாயகி தனது பாட்டின் ரசிகை என்பதற்காகவே நாயகனுக்கு அவள் மேல் காதல் வருகிறதாம். அவளைப் பார்த்தது கூட கிடையாது, ஆனால் அவள் கால் கொலுசு சத்தம் மட்டும் தனியாக கேட்குமா. கொலுசை மாற்றினாலும் கிளைமாக்ஸில் அவளது கொலுசு சத்தம் கேட்கிறது. இருந்தாலும் இப்படத்தை முழுதாக பார்த்தேன். (உனக்கு வேற விவஸ்தையே இல்லைடா என்று நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது). இந்த படத்தை 2 மணி நேரம் ஓட்டியிருப்பது இளையராஜாவும் வைரமுத்துவும், எஸ்.பி.பாலசுப்புரமணியம் ஜானகியும் மற்ற பிற பின்னணியில் வாத்தியங்களை இசைத்திருக்கும் கலைஞர்கள்.

சில பாடல்களை legendary என்பார்களே, இப்படத்தில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்தும் அவ்வகையைத் தான் சேரும். பாடல் வரிகளுக்கு வைரமுத்து கொடுத்திருக்கும் அத்தானை உவமைகளும் அதீத கற்பனை வளம். உதாரணத்துக்கு,

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்


என்று ஆரம்பிக்கும் பாடல் செவிகளுக்கு ஓர் இசை விருந்து. காம்போதியில் ஆரம்பித்து, ஆனத்த பைரவியில் சில நேரம் சஞ்சாரம் செய்துவிட்டு மறுபடியும் காம்போதிக்கு வரும் இப்பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு ஃபிகரை வர்ணிப்பது போல் பாடியிருப்பார்.

மற்றொரு பாடல், இளையராஜா, சௌந்தர்ய லஹரியின் முதல் சுலோகத்தோடு ஆரம்பிப்பார்.
அவிஞானாம் அந்தஸ்திமிர மிஹிர ரீப நஹரி
ஜடானாம் சைதன்யஸ்தபஹ மஹரந்த ஸ்ருதிஜரி
என்று இப்பாடல் ஆரம்பிக்கும். இது ஆதி சங்கரர் அம்பிகையின் அழகை வர்ணிக்கும் பாடல்.
ஸ்ருங்கார ரஸத்தை ஆதிசங்கரர் என்னடா, நான் வர்ணிக்கிறேன் பார், என்று வைரமுத்து போட்டி போட்டுக்கொண்டு இவ்வரிகளை எழுதியிருக்கிறார் போல.

நதியில் ஆடும் பூவனம், அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
ஸ்ருங்கார ரஸத்தில் வரிகள் மட்டும் அமைந்தால் போதுமா, அதற்கேற்ப ராகம் வேண்டாமா, தேவகாந்தாரியும் ஹிந்தோளத்தையும் குழைத்துக்கொண்டு இசைஞானி இசை அமைத்திருப்பார். இசை மட்டும் அமைத்தால் போதுமா, என் மாதிரி ஆட்கள் இதைப் பாடினால் எப்படி இருக்கும். அப்படி இருக்கச் செய்யாமல், எஸ்.பி.பியும் ஜானகியும் தனது குரல் வளத்தால் இப்பாடலுக்கு இன்னும் மெருகூட்டியிருக்கிறார்கள். எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காத பாடல். பாடலைக் கேட்டாலே மனம் இதமாகிவிடும்.

ஸ்ருங்கார ரஸம் மட்டும் தானா. அம்மா அழகே உலகின் ஒளியே என்ற பாடலில் பக்தி பெருக்கெடுத்து ஓடுகிறது.

பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ என்ற பாடலில் கடவுளின் மீதே குரோதத்தை வெளிப்படுத்துகிறார் இசைஞானி.
குயிலே எந்தன் கீதங்கள் கேளாயோ என்ற பாடலில் பிரிவும், உச்சகட்டமாக, சங்கீதஜாதிமுல்லை பாடலில் ஆற்றாமையும் வெளிப்படுகிறது. இப்படி ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரஸத்திக்கேற்ப இசையமைத்ததற்கு இசை ஓவியம் என்று பெயரிட்டிருந்தால், இசைக்காகவாவது இன்னும் சில நாட்கள் படம் ஓடியிருக்கும்.

படம் ஃபிளாப் ஆனதால் படத்துடன் பாடல்களும் இன்றைய தலைமுறையினர் நிறைய பேருக்கு தெரியாமல் போனது அவர்களின் துரதிர்ஷ்டம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

பி.கு. ராகங்கள் பற்றிய தகவல்களெல்லாம் என்னுடைய இடைச்செருகல்கள். அவையெல்லாம் எந்தெந்த ராகங்களோ, இளையராஜவுக்கே வெளிச்சம். ;-)

August 04, 2005

மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

முதல் முதலாக அயல் நாட்டுப் பயணம் மறக்க முடியவில்லை
விமானப் பணிப்பெண்ணிடம் வழிந்த வழிசல் மறக்க முடியவில்லை
அருகிலிருந்த சிங்கி பெண்ணிடம் கடலை வறுத்தது மறக்க முடியவில்லை
அவளுக்கு ஆங்கிலம் புரியாமலிருந்தது மறக்க முடியவில்லை
அறைமணிக்கூர் விமானப் பணிப்பெண்ணிடம் பசிக்கிறதென்றது மறக்க முடியவில்லை
ஒரே நாளில் இரண்டு சூர்யோதயம் மறக்க முடியவில்லை
அமெரிக்காவில் கால் வைத்த தருணம் மறக்க முடியவில்லை
ஏர்போர்ட்டில் நண்பனை தொலைந்தது மறக்க முடியவில்லை

5 சென்டுக்கு எவ்வளவு ரூபாய் என்று கணக்கு பார்த்தது மறக்க முடியவில்லை
இலவசமாக காலை உணவு உண்டது மறக்க முடியவில்லை
வீரா தின்ற மாமிசமும் கூட மறக்க முடியவில்லை
பேஸ் பால் விளையாடிய பசங்களை விரட்டிவிட்டு கிரிக்கெட் விளையாடியது மறக்க முடியவில்லை
காரசாரமாக சமைத்த உணவு மறக்க முடியவில்லை
ஆஃபீஸில் அடித்த லூட்டி மறக்க முடியவில்லை
ஐஸ்கிரீம் பார்டி கூட மறக்க முடியவில்லை
மேலாளர் செய்த சாட்டும்(!!!!!) கூட மறக்க முடியவில்லை

அயல் நாட்டு ஃபிகரை பார்க்காதது மறக்க முடியவில்லை
லாஸ் ஏஞ்சல்ஸ் பயணம் மறக்க முடியவில்லை
கப்பிள்ஸ் டிக்கட்டில் இரண்டு ஆண்கள் சென்றது மறக்க முடியவில்லை
ரோலர் கோஸ்டர் ரைடுக்குப் பிறகு நண்பன் எடுத்த வாந்தி மறக்க முடியவில்லை
ஹாலிவுட் பயணம் மறக்க முடியவில்லை
ஜுரஸ்ஸிக் பார்க் ரைடு மறக்க முடியவில்லை
பிச்சைக் காரன் கேட்ட பிச்சை மறக்க முடியவில்லை
என்னடா ஊரு இது, நம்ப ஊரு மேலு என்று பாடிய தினங்கள் மறக்க முடியவில்லை

களையாடிய எங்கள் நெஞ்சில் விளையாடிய தினங்கள் மறக்க முடியவில்லை
ஊருக்கு கிளம்பிய அன்றைய தினமும் மறக்க முடியவில்லை
பசுமை நிறைந்த அந்த நாட்களை என்றுமே மறக்க முடியவில்லை

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா...

நேற்று ஆடிப்பெறுக்கு. அதனால் என்ன என்கிறீர்களா?? பள்ளிக்கூடம் சென்ற காலங்களில் ஆடிப்பெறுக்கு என்றால், மூன்று மணிக்கெல்லாம் பள்ளியை மூடி விடுவார்கள். அன்றைய தினம் அம்மா பல தரப்பட்ட சமையல் செய்வாள். சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சம்பழம் சாதம், எள்ளுஞ்சாதம், புளியோதரை, தக்காளிச்சாதம், தயிர் சாதம், வடகம், அப்பளம், மோர் மிளகாய், ஊர்காய் (இப்போ தான் புரியுது, நீ ஏன் இப்படி இருக்கேன்னு) எல்லாம் செய்திருப்பாள். எல்ல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஆற்றங்கரை மணலில் அமர்ந்தவாறு சாப்பிடுவோம். எங்கள் ஊரில் குறுக்குத்துறை என்ற இடத்திற்குச் செல்வோம். அங்கு தாமிரபரணி சாந்த ஸ்வரூபிணியாக இருப்பாள். அவ்வளவு எழில் மிகு ஆற்றங்கரை. படிக்கட்டெல்லாம், நிறைய இருக்கும். ஏதோ நூற்றாண்டில் ஏதோ புண்ணியவான் கட்டியது. எங்கள் குடும்பம் மட்டுமல்லாது ஊரே திரண்டு வந்திருக்கும்.
மங்கையர் பாவாடை தாவணியெல்லாம் அணிந்து, கூந்தலில் தாழம்பூ குஞ்சலம் வைத்து பின்னியிருப்பர் (இப்போ எவளும் பாவாடை தாவணிகூட போடுறதில்லை, இதுல குஞ்சலம் வேறயா!!!!) அன்னாளில் சைட் அடிப்பதை ஒரு பாவச்சஎயலாக நினைத்திருந்தலால், எவளையும் லுக்கு விட வில்லை. ( நீ சரியான மாங்காட விஜய்)

கால வெள்ளோட்டத்தில் நகரத்துக்கு குடி பெயர்ந்த பிறகு ஆடியாவது பெறுக்காவது. எல்லாம் வீட்டில் தான். நேற்றும் அம்மா வீட்டில் எல்லாம் பண்ணியிருந்தாள், ஆனால் .....

August 03, 2005

சொர்க்கமே என்றாலும் நம்மூரப் போல வருமா!!!!

எத்தனையோ பாடல்களை கேட்டிருக்கோம், ரசித்திருக்கோம் ஆனால் எத்தனை பாடல்களை அனுபவித்திருக்கோம்.

சொர்க்கமே என்றாலும் நம்மூரப் போல வருமா!!!!
அட எ ந் நாடு என்றாலும் அது நம் நாட்ட போல வருமா!!
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா?

இந்த பாடலை ராம ராஜன் நடித்த ஒரு படத்தில் இடம் பெற்ற பாடல். இந்த படத்தை பார்த்த காலத்தில் (டேய், ராம ராஜன் படமெல்லாம் பாப்பியாடான்னெல்லாம் கேக்கப்படாது) எவனாவது சிங்கப்பூர்ல போயி இப்படி பாடுவானான்னு" கேலி செய்ததுண்டு. ஆனால், நிஜமாகவே என் வாழ்க்கையில் இப்பாடல் வரிகளை என் வாழ்வில் அனுபவித்த கணங்களும் உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன் முதன் முறையாக அயல் நாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதுவும் அமெரிக்கா. மேலாளர் சொன்ன நாள்லேர்ந்து, அமெரிக்கா பற்றிய கனவு தான். நான் மட்டுமல்லாது, என்னுடன் என் உற்ற நண்பர்களும் வருகிறார்கள் என்றதும் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆனது.
அமெரிக்கா செல்லும் அந்த நாளும் வந்தது. ஒரு வழியாக எல்லோரும் அமெரிக்கா வந்து சேர்ந்தோம். எல்லோரும் ஒரே விமானத்தில் வர முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. விமானப்பணிப் பெண்களுடன் ஜல்சா செய்து கொண்டே போகலாம் என்ற எண்ணம் மட்டும் நிறைவேற வில்லை.
ஒரு வழியாக எல்லோரும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். ஆளாளுக்கு ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கொண்டோம்.
மறு நாள் அமெரிக்காவில் இருக்கும் நாட்கள் நீட்டிக்கப்பட்டன. 4 வாரங்கள் ஆறாக மாறின. எல்லோருக்கும் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன. (எத்தன நாட்களுக்குத்தான் இதே உவமையை குடுப்பிங்கடா. கொஞ்சம் மாற்றக்கூடாதா??)
ஒரு வாரம் ஒரு வழியாக ஓடிக் கழிந்தது. பிறகு கஷ்டங்கள் ஆரம்பித்தன.

பெங்களுரில் ஹோட்டலிலேயே சாப்பிட்டு சாப்பிட்டு பழகிய எங்களுக்கு இரவு வந்து சமைத்துச் சாப்பிட வேண்டிய அவசியம். எல்லோரும் சைவம். அதுவும் அக்கம் பக்கத்தில் கடைகளே கிடையாது. அப்படி ஒன்று இரண்டு இருந்தாலும் அதில் நாம் சாப்பிடும் பொருள் எதுவுமே கிடைக்காது. ஒரு வாரத்துக்கு வேண்டிய பொருட்களை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். எதுவுமே குறைந்தது 2 கிலோ கணக்கில் தான் கிடைக்கும். உப்பு முதல் காரப்பொடி வரை எல்லாமே கிலோ கணக்கில் தான் ;-)) மளிகைச் சாமான்களுக்கு யார் பணம் தர வேண்டும் என்று ஒரு சண்டையே நடக்கும். மளிகைக் கடையிலிருந்து விடுதிக்கு வருவதற்கு போக்கு வரத்து வசதி கிடையாது. அரை மணிக்கு ஒரு பேருந்து வந்தால் ஆச்சர்யம். அதையெல்லாம் மா-பேரூந்து என்று தான் அழிக்க வேண்டும். எப்போதுமே சக ஊழியனின் போக்குவரக்தை நம்பியிருக்க வேண்டும்.
அலுவலகத்தில் யாராவது நீண்ட நேரம் இருக்க வேண்டியதாக இருந்தால், இன்னொருத்தன் அவனுக்கு துணை இருக்க வேண்டும். இரவு நேரத்தில் தனியாக வருவது அவ்வளவு நல்லதல்ல என்று மேலாளர் கூறியிருந்தார். எங்கு செல்ல வேண்டுமானாலும் டக்ஸிதான். வேறு வழியே கிடையாது. ஷாப்பிங் மால் அப்படி இப்படி ஏதாவது ஒரு ஃபிகர் கண்ணில் பட்டால் கூட அது நம்மூர் பொண்ணாகத்தான் இருக்கும். முக்கால்வாசி கல்யாணமான பெண்ணாக இருக்கும். கடைசி வரை அமெரிக்க ஃபிகரைப் பார்க்கவே இல்லை. (யப்பா, இது முற்றிலும் உண்மை). எந்த கடைக்குச் சென்றாலும் சுய உதவி தான். ஒரு பொருள் வேண்டும், அதை எப்படி உபயோகிக்க வேண்டும், அதன் விலை என்ன, அதற்கு கியாரண்டீ உண்டா, இப்படியெல்லாம் ஒன்றும் தெரியாது. பிடிக்கவில்லையா, திருப்பிக் கொடுத்து விடலாம். டாலர் திருப்பி தந்து விடுவார்கள். ஒரு முறை எலக்ட்ரானிக்ஸ் அங்காடிக்கு சென்றிருந்தோம். டிஜிடல் கமெரா வாங்க. எந்த மாடலை எடுத்தாலும் அதை எப்படி உபயோகிப்பது என்று செயல் முறை விளக்கம் கொடுக்க ஒருவர் கூட இல்லை.

இரண்டு முன்று வாரங்களுக்குள்ளாகவே எல்லோருக்கும் எப்போடா ஊருக்கு போகப் போகிறோம், என்ற எண்ணம் வந்து விட்டது. நானும் என் நண்பனும் அடிக்கடி சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா என்ற பாடலை முணுமுணுப்போம். எங்கள் எல்லோராலும் மறக்க முடியாத அனுபவம் எல்லோரும் லாஸ் ஏஞ்சல்ஸ் போனது தான். அது பற்றி இன்னொரு நாள்.