Pages

April 25, 2009

நிறைய ஞாபகம்.. கொஞ்சம் மறதி

என்னை சில சமயங்களில் ரொம்ப கோபமூட்டுவது எனக்குள் இருக்கும் ஒரு சிறு வியாதி. அது மற்றவர்களுக்கும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டதில் கொஞ்சம் ஆனந்தம். மனித மனம் தான் எவ்வளவு மேன்மையானது. ஒரு சக மனிதனுக்கும் தன் வியாதியிருப்பதைக் கண்டு மகிழ்கிறது.

அது என்ன வியாதின்னா, அசாதாரண விஷயங்களையெல்லாம் ஞாபகம் வைத்திருப்பேன். ஆனா சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் மறந்துடுவேன்.

எந்தெந்த அணிக்கெதிராக இந்தியா எவ்வளவு ரன் எடுத்தது. ஒரு கிரிக்கெட் மாட்சிலிருந்து ஒரு காட்சி பார்த்தாலே, யாருக்கெதிராக, எங்கு எப்போது நடந்தது, இந்தியா எவ்வளவு எடுத்தது, ஆட்ட நாயகன் யார், இப்படி சகட்டு மேனிக்கு ஞாபகம் இருக்கும். 

இது மட்டுமல்ல, ஸ்டெஃபி கிராஃப் எத்தனை முறை கிராண்ட் ஸ்லாம் வென்றார், யாரை தோற்கடித்தார், எந்த மேட்சில் எந்த நிற ஸ்கர்ட் அணிந்திருந்தார், அவரது முதல் பாய் ஃப்ரெண்ட் யார், பிறந்த நாள் என்ன, சொந்த ஊர் என்ன இப்படி இன்னும் பல.  “ஆஹா, நம்ம புருஷனுக்குத்தான் எவ்வளவு ஞாபக சக்தி இருக்கு” என்று ஒரு நாள் கூட காயத்ரி பிரமித்தது கிடையாது என்பது என் துரதிர்ஷ்டம்.

ஆனால் ரொம்ப அற்பமான விஷயங்கள் மறந்து போய்விடும். ஆஃபீஸ் கிளம்பும் அவசரத்தில் சில நாள் கைபேசி எடுத்துக்கொள்ள மறந்துவிடுவேன். அடையாள அட்டையை மறந்து விட்டு, ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்டிடம் தலைச் சொறிந்து கொண்டு நிற்க வேண்டும். ரிசப்ஷனிஸ்ட் கொஞ்சம் பார்க்கும் படி இருந்தால், நிதமும் அடையாள அட்டையை மறக்கலாம். உட்கார்ந்திருப்பதென்னவோ, முறுக்கிய மீசையுடன் ஒரு காவலாளி. 

கார் சாவியை எடுத்து எங்காவது வைத்திருப்பேன் ஆனால், எங்கே வைத்தேன் என்று சமயத்துக்கு ஞாபகம் வந்து தொலைக்காது. காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டது போல் குதி குதியென்று குதிப்பேன். ஆனால் இது எதற்கும் காயத்ரி அசங்க மாட்டாள் என்பது கொஞ்சம் கசப்பான உண்மை. அதென்னவோ, அவள் தேட ஆரம்பித்தவுடனேயே, “இதோ இருக்கிறேன்” என்று சாவியே கூவிக் கொண்டு அவள் கைக்கு வந்து விடுவது போலிருக்கும். 

இது கூடப் பரவாயில்லை. ஒரு நாள் காயத்ரி கட்டிக் கொடுத்த சாப்பாடு கொண்டு வந்திருப்பது கூட  ஞாபகமில்லாமல், ஆஃபீஸ் கேண்டீனில் சாப்பிட்டு விட்டு இரவு காயத்ரி டிஃபன் பாக்ஸைத் திறந்து பார்த்த பின் தான் தெரிந்தது அன்று நான் வீட்டிலிருந்து கொண்டு போன சாப்பாடைச் சாப்பிடவில்லை என்று. நாகரீகம் கருதி, அதற்குப் பின் என்ன நடந்ததென்பதை நான் சொல்ல மாட்டேன். இந்த மாதிரியெல்லாம் நடக்கும் போது, ரொம்ப வயதாகிவிட்டதோ என்ற கவலை வந்து விடுகிறது. 

இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களாவது பரவாயில்லை. ஒரு தடவை சிம்ரன் பிறந்த நாள் ஞாபகம் வைத்திருந்து பிள்ளையார் கோவிலில் சிம்ரனின் நலனுக்காக வேண்டிக்கொண்டு விட்டு, இரண்டு வாரங்கள் கழித்து வந்த காயத்ரியின் பிறந்த நாளை மறந்தே போய் விட்டேன். அம்மணி காலையிலிருந்து ஒன்றுமெ பேசவில்லை. ஆஃபீஸ் கிளம்பும் போது தான் என் அம்மா வாங்கிக் கொடுத்திருந்த புதுத் துணியை அணிந்திருந்தபோது தான் ஞாபகம் வந்தது, அன்று அவள் பிறந்த நாள் என்று. புயலுக்கு முன் வரும் நிசப்தத்தைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம், அம்மணியின் நிசப்தம் ரொம்பவுமே அபாயகரமானது. பர்ஸ் ரொம்ப இளைத்த பிறகே, புயல் கரையைக் கடக்காமல் கரைந்து போனது. 

இந்த வருடமும், சிம்ரன் பிறந்த நாள் ஞாபகம் வந்தது. அன்றே ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். இம்முறை காயத்ரியின் பிறந்த நாளை மறக்கக் கூடாதென்று. அதற்காக சமயோசிதமாக ஒரு நல்ல காரியமும் செய்தேன். ஆனால் நான் செய்த காரியம், எனக்கு அனுகூலமாய் இருப்பதை விட்டுவிட்டு, மீண்டும் என் காலை வாரி விட்டது. காயத்ரியின் பிறந்த நாளன்று காலை எழுந்ததுமே வாழ்த்து சொல்லிவிட்டேன். ஆனாலும் காலையில் புயல் சின்னம்.

பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. காயத்ரி பிறந்தநாள் அன்று சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு எனக்கு ஞாபகம் வரவழைப்பதற்காக கைபேசியில் ரிமைண்டர் வைத்துக் கொண்டேன். அந்த பாழாப்போற கைபேசியும் இரவு பன்னிரண்டு மணிக்கு ஒலித்திருக்கிறது. ஆனால் என் காதில் தான் அந்த ஒலி விழ வில்லை. போன ஜன்மத்தில் கும்பகர்ணனாகப் பிறந்திருப்பேனோ என்னவோ? ஆனால் கயத்ரி எழுந்துவிட்டாள். நல்ல வேளை, நித்ரா தேவியின் ஆதிக்கத்தில் நான் இருந்தால் , காயத்ரியின் முகம் போன போக்கை நான் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அம்மணிக்கு முதலில் நான் அவள் பிறந்த நாளுக்காக கைப்பேசியில் ரிமைண்டர் வைத்திருப்பதைப் பார்த்து நொந்து போய்விட்டாள். இரவு 12 மணிக்கு கைபேசியின் ஒலி கேட்டு அவளுக்கு தூக்கமும் போய்விட்டது. ஆனாலும் காலையில் எழுந்தவுடன் வாழ்த்து சொன்னதால் ஏதோ கொஞ்சம் பிழைத்தேன். இருந்தாலும் புயல் காற்று வீசத்தான் செய்தது. நல்ல வேளை அவ்வளவாக சேதம் ஏதும் இல்லை. 

ஏங்க மனைவியின் பிறந்த நாளுக்கு கைபேசியில் ரிமைண்டர் வைத்துக் கொள்வது அவ்வளவு பெரிய தவறா? இந்த பெண்களைப் புரிஞ்சுக்கவே முடியலையேப்பா?என்ன அபாரமான ஞாபக சக்தி இருந்து என்ன செய்ய? இந்த மாதிரி சின்ன விஷயங்கள் அப்பப்போ காலை வாரி விடத்தான் செய்கின்றன.

19 comments:

sakthi said...

இந்த மாதிரி சின்ன விஷயங்கள் அப்பப்போ காலை வாரி விடத்தான் செய்கின்றன.
hahahhaha

tats life vijay

Arun Kumar said...

Same Blood :)
நம்ம ஆபிஸ் receptionist அப்படி ஒன்றும் மோசம் இல்லையே !!

மேவி... said...

நான் single யான சிங்கம் ; அதனால் மனைவியின் கோவம் பற்றி எல்லாம் தெரியாது ; வேண்டுமானால் என் அண்ணனை கேட்டு சொல்லுறேன்....

மற்றபடி நானும் same blood தான் 9th படிக்கும் போது social எக்ஸாம் க்கு science படிச்சுட்டு போனேன்.....
என்ன mistake என்று பார்த்தால் social science என்று டைம் டேபிள்யில் எழுதி இருந்ததை science யை மட்டும் பார்த்துவிட்டு படித்திருக்கேன்....

மேவி... said...

ஏன் என் ப்லோக் பக்கம் வரல ?

kanagu said...

/*இந்த மாதிரியெல்லாம் நடக்கும் போது, ரொம்ப வயதாகிவிட்டதோ என்ற கவலை வந்து விடுகிறது.
*/

அதில் என்ன சந்தேகம் :D

/*ஏங்க மனைவியின் பிறந்த நாளுக்கு கைபேசியில் ரிமைண்டர் வைத்துக் கொள்வது அவ்வளவு பெரிய தவறா?*/

அது தப்பு இல்லனா.... ஆனா சிம்ரன் பிறந்த நாள ஞாபகம் வச்சிகிட்டு மனைவியின் பிறந்த நாளை மறப்பது தான் குற்றம் :)

Karthik said...

//புயலுக்கு முன் வரும் நிசப்தத்தைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம், அம்மணியின் நிசப்தம் ரொம்பவுமே அபாயகரமானது. பர்ஸ் ரொம்ப இளைத்த பிறகே, புயல் கரையைக் கடக்காமல் கரைந்து போனது. //

LMAO.. Vijay at his best again!! :)

அன்புடன் அருணா said...

நல்ல கலகலகல!!!
அன்புடன் அருணா

Ramya Ramani said...

ha ha neenga reminder vechadhu kooda thapilla correct 12.00 ku vecheengale.. oru 1 hour munnadiye vechu muzhchirundhu wish pannirundeenganna semma kavanippu irundhirukkum.. Note this point indha dharam muyarchi pannunga [:)]

Anonymous said...

எப்படியோ உங்களுக்கும் ஞாபக மராத்தி இருக்குங்கறத தெரிஞ்சுக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

Divya said...

\\பர்ஸ் ரொம்ப இளைத்த பிறகே, புயல் கரையைக் கடக்காமல் கரைந்து போனது. \\

\\இருந்தாலும் புயல் காற்று வீசத்தான் செய்தது. நல்ல வேளை அவ்வளவாக சேதம் ஏதும் இல்லை. \\

LOL:))

asusuall kalakkals flow of writing Vijay:)))

Vijay said...

\\ வித்யா said...
:)\\
நானும் இனிமேல் உங்க பதிவுல இப்படி :) மட்டும் தான் போடுவேன் :-)

\\ sakthi said...
இந்த மாதிரி சின்ன விஷயங்கள் அப்பப்போ காலை வாரி விடத்தான் செய்கின்றன.
hahahhaha

tats life vijay\\
வருகைக்கு நொம்ப நன்றி சக்தி. நான் எழுதினது உங்களுக்கு சின்ன விஷயமமா? :(

\\ Arun Kumar said...
Same Blood :)
நம்ம ஆபிஸ் receptionist அப்படி ஒன்றும் மோசம் இல்லையே !!\\
அப்படியா? அப்ப என் கண்ணுல தான் கோளாறா?? :-)

\\ MayVee said...
மற்றபடி நானும் same blood தான் 9th படிக்கும் போது social எக்ஸாம் க்கு science படிச்சுட்டு போனேன்.....
என்ன mistake என்று பார்த்தால் social science என்று டைம் டேபிள்யில் எழுதி இருந்ததை science யை மட்டும் பார்த்துவிட்டு படித்திருக்கேன்....\\

ஆஹா. அப்புறம், சோஷியல் கேள்விகளுக்கு சயின்ஸ் பதில் எழுதினீங்களா??? :-)

\\ kanagu said...
/*இந்த மாதிரியெல்லாம் நடக்கும் போது, ரொம்ப வயதாகிவிட்டதோ என்ற கவலை வந்து விடுகிறது.
*/

அதில் என்ன சந்தேகம் :D\\

அடப்பாவி :-)

\\Karthik said...
LMAO.. Vijay at his best again!! :)\\
LMAO'ன்னா என்ன?

\\அன்புடன் அருணா said...
நல்ல கலகலகல!!!
அன்புடன் அருணா\\
ரொம்ப நன்றி அருணா?

\\ Ramya Ramani said...
ha ha neenga reminder vechadhu kooda thapilla correct 12.00 ku vecheengale.. oru 1 hour munnadiye vechu muzhchirundhu wish pannirundeenganna semma kavanippu irundhirukkum.. Note this point indha dharam muyarchi pannunga [:)]\\

அடுத்த வருஷமும் மறந்து தான் போகப் பொபோறேன். கண்டிப்பா உங்க ஐடியாவை முயற்சி செய்து பார்க்கிறேன்.

\\Sriram said...
எப்படியோ உங்களுக்கும் ஞாபக மராத்தி இருக்குங்கறத தெரிஞ்சுக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.\\
ஆஹா!! நமக்கு இப்படி ஒரு எதிரி கும்பல் வேற இருக்கா??

\\ Divya said...
LOL:))

asusuall kalakkals flow of writing Vijay:)))\\

ரொம்ப நன்றி:-)

Karthik said...

ஹா..ஹா. கலக்கல் விஜய்! :)))

//LMAO'ன்னா என்ன?

are u asking seriously? he is laughing his a** off. :))

Divyapriya said...

rotfl vijay :D
nallaa rendu kudukka sollanum gayathri kitta..appa thaan thirundhuveenga...

Rajalakshmi Pakkirisamy said...

he he he .... btw, Superb writing...

Unknown said...

உங்களுடைய பாட்டி மருந்து பதிவினை தொடர்ந்திருக்கலாமே விஜய்.. நல்ல விஷயம் பாதியில் நிறுத்திவிட்டீர்களே.

கலாட்டா அம்மணி said...

பதிவு நல்லா காமடியா இருக்கு...

மனைவியுடைய பிறந்தநாளை மறப்பது சின்ன விஷயமா சார் உங்களுக்கு???

Vijay said...

\\Divyapriya said...
rotfl vijay :D
nallaa rendu kudukka sollanum gayathri kitta..appa thaan thirundhuveenga...\\
ஆஹா இப்படி கூட நாட்டுல எதிரிங்க திரியறாங்களா?? :-)

\\ இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
he he he .... btw, Superb writing...\\
ரொம்ப தான்க்ஸ்ங்கோ :-)

\\ Krishna Prabhu said...
உங்களுடைய பாட்டி மருந்து பதிவினை தொடர்ந்திருக்கலாமே விஜய்.. நல்ல விஷயம் பாதியில் நிறுத்திவிட்டீர்க\\

ஆமாம். எங்க அம்மாவை ரொம்பவே தொந்தரவு பண்ணணும். அம்மா இப்போ கொஞ்ச நாள் வெகேஷனுக்கு ஊருக்குப் போயிருக்காங்க. வந்ததும், தொடர்ந்துட வேண்டியது தான்.
ஆதரவுக்கு ரொம்ப நன்றி கிருஷ்ணா.

\\ கலாட்டா அம்மணி said...
பதிவு நல்லா காமடியா இருக்கு... \\
சந்தோஷம் :-)

\\மனைவியுடைய பிறந்தநாளை மறப்பது சின்ன விஷயமா சார் உங்களுக்கு???\\
நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் புயல் வீசிய பிறகு தான் அதன் தாக்கம் தெரிந்தது. என்ன செய்யறது, நான் பட்டுத் தெரிந்துக் கொள்ளும் கேஸ் :-)

மேடேஸ்வரன் said...

i too have this sort of experience,yar...pathivai paditha pin anichaiyaaga en udhattil punnagai..

வாழவந்தான் said...

//
ஏங்க மனைவியின் பிறந்த நாளுக்கு கைபேசியில் ரிமைண்டர் வைத்துக் கொள்வது அவ்வளவு பெரிய தவறா?
//
ரொம்ப சரியே. நானும் என் இஷ்டமித்ரபந்துக்களின் பிறந்தநாட்களை ரிமைண்டரில் வைத்து வாழ்த்தி வந்தேன்(2 வருடமாக இதற்க்கு நல்ல ரெஸ்பான்ஸ்)ஆனால் சில வாரங்களுக்கு முன் மொபைல் ரீசேலுக்கு எல்லாத்தையும் டிலீட் செய்யும் போது ரிமைண்டர்சும் போச்சு, அதனால இப்ப எனக்கு தெரிஞ்ச ஒரே பிறந்தநாள் எனது மட்டும் தான், மீதியெல்லாம்(அப்பா அம்மா உட்பட)மாசம் தான் ஞாபகம் இருக்கு. அதை வெச்சு தான் அட்ஜஸ்ட் பண்ணனும்