தமிழ் சினிமா ரசிகர்களுக்கென்றுமே நிழலையும் நிஜத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. உன்னைப் போல் ஒருவன் படத்தைப் பார்த்துவிட்டு பல பேர், (நிறைய வலைத்தளங்களில் கூட) கம்ல்ஹாசன் வன்முறையைத் தூண்டும் விதமாக படமெடுத்திருக்கிறார், ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவோருக்கெதிராகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது, வன்முறைக்கு வன்முறக்கு தான் பதிலா, அப்படியென்றால் ஹே ராம், அன்பே சிவம் போன்ற படங்கள் எடுத்த கமல்ஹாசனின் சமூக நிலைப்பாடு மாறி விட்டதா, அப்படி இப்படி என்று காமா சோமா என்று கேள்விகள். இத்தனைக்கும் உ.போ ஒ. உண்மையிலேயே ஒரு தமிழ்ப் படம் கூட இல்லை. வெட்னெஸ்டே என்ற ஹிந்திப் படத்தின் ரீ-மேக்.
சினிமா பார்ப்பவர்கள் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பார்ப்பது ஒரு கதையை. அதில் வரும் நடிகர்கள் கதாபாத்திரங்கள். அவர்கள் அதில் செய்யும் காரியம் எல்லாமே அந்தந்த கதாபாத்திரங்களின் செயல்கள். கமல்ஹாசன் போன்ற சினிமாக்காரர்கள், என்றுமே தனது சொந்தக் கருத்தை முன் வைக்க சினிமா என்னும் ஊடகத்தைப் பயன்படுத்தியதில்லை. நிஜ வாழ்க்கையில் கமல்ஹாசன் என்ற நிஜ மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் தனது நாத்திக வாதத்தை என்றைக்குமே முழு மூச்சாக சினிமா மூலமாகப் பரப்பியதில்லை. தசாவதாரத்தில் கோவிந்த் பேசும் சில வசனங்கள் நாத்திகத் தன்மையுடையது என்று வாதிட்டால், என்னால் கடவுளைக் காப்பாற்ற வேண்டி உயிரையே கொடுத்த அந்த நம்பியைச் சொல்ல முடியும். தேவர் மகன் படத்தில் தனது பகுத்தறிவைப் பரப்பும் விதமாக, கல்யாணக் காட்சிகளை ரெஜிஸ்டர் ஆபிஸிலே வைத்து நடப்பது போல் காட்டியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. ஒரு கதாபாத்திரத்திற்கு என்னென்ன அம்சங்கள் இருக்கின்றனவோ, அதைத்தான் காட்டிருப்பார்.
அவருக்கு திருமணத்திலே கூட நம்பிக்கை கிடையாது என்று எங்கோ படித்ததாக ஞாபகம். ஆனால் எந்தப் படத்திலும் திருமணத்திற்கெதிராகப் பகிரங்கமாக பிரசாரம் செய்ததில்லை. பி.கே.எஸ்’இல் கூட கடைசியில் திருமணம் கொள்வார். எல்லாமே ஒரு கதையில் வரும் நிழல் கதாபாத்திரங்கள்.
உ.போ.ஒ. படத்தில் அவர் உருவாக்கியது ஒரு கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்திற்கு நாட்டில் மந்தமாக நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையைப் பார்த்து ஆத்திரம் வருகிறது. அவன் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறான். அதை அத்தோடு நிறுத்தி விட வேண்டும். அதை விட்டுவிட்டு கமல்ஹாசன் வன்முறைக்கு வன்முறை தான் பதில். கண்ணுக்கு கண் ரத்தத்திற்கு ரத்தம் என்னும் தனது கருத்தைத்தான் உ.போ.ஒ. மூலம் சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் குதிப்பதில் அர்த்தமில்லை. கமல்ஹாசன் ஏற்கனவே ஒரு பேட்டியில், “என் படங்கள் மூலம் நான் யாருக்கும் எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னிடம் இந்தப் படத்தில் என்ன செய்தி சொல்லியிருக்கீங்க என்று கேட்கிறார்கள். செய்தி சொல்ல நான் என்ன போஸ்ட்மேனா” என்று அவரே சொல்லியிருக்கிறார்.
உண்மையில் தமிழ் ரசிகர்கள் இன்னும் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து மீளவில்லையென்று தான் சொல்ல வேண்டும். படத்தில் எம்.ஜி.ஆர் ரஜினி என்ன பேசுகிறார்களோ, அப்படியே, நிஜத்திலும் நிகழ வேண்டும் என்ற மனப்பான்மை இன்னும் நீங்கவில்லை. “நான் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வேன்” என்று ஆடிப்பாடி வசனம் பேசிய எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களைப் பார்த்து பார்த்தே பழகிவிட்ட நம் மக்களுக்கு (அதிலே நானும் அடக்கம்) கமல் போன்றவர்கள் செய்யும் நிழல் படத்தையும் நிஜம் என்றே நம்புகிறார்கள்(றோம்). அதனால் தானோ என்னவோ ரஜினி, விஜய் போன்றவர்களும் மாஸ் ஹீரோயிசம் என்ற ஸ்டேடஸ்ஸிற்க்காக பன்ச் டயலாக் பேசுகிறார்கள். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களான சிம்பு, தனுஷ், விஷால் வரை இந்த பன்ச் டயலாக் கலாசாரம் பரவி விட்டது.
கமல்ஹாசன் என்ற தனி மனிதனின் கருத்துக்கள் அவருடையது. (Thankfully) அதை அவர் ஒரு சினிமா கதாபாத்திரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு அதைச் சொன்னதில்லை. அந்தத் தனி மனித கருத்துக்களோடு பேதம் இருப்பின் அதை விவாதிக்கலாம், ஏன் குற்றம் கூட சொல்லலாம். அவரது நிறைய கருத்துகள் எனக்குப் பிடிக்காது. அதற்காக அவர் படைக்கும் கதாபாத்திரங்களோடு அதை ஒப்பிட்டுப் பார்ப்பது முட்டாள்த்தனம்.
“கமல்ஹாசன் போன்ற celebrity திரையில் என்ன சொன்னாலும் செய்தாலும், அதை தமிழ் நாட்டு மக்கள் அதை அவரே நிஜ வாழ்க்கையிலும் சொல்வார் செய்வார் என்று தான் நம்புவோம்” என்று வாதிட்டால், மக்களுக்கு எது நிழல் எது நிஜம் என்று educate செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு அடிப்பிடிடா பாரதவட்டா என்று மீண்டும் பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தால், நல்ல படைப்புகளைப் பார்ப்பது அரிதாகி விடும்.
பி.கு. நான் மேலேயெழுதியிருப்பது உ.போ.ஒ’வின் விமர்சனம் இல்லை.