Pages

October 08, 2009

தந்தை மகனுக்காற்றும் உதவி

நல்ல நாளிலேயே பெங்களூருவிற்கு டிக்கட் கிடைக்காது. அதுவும், பண்டிகை விடுமு்றைக்குப் பிறகு நெல்லையிலிருந்து பெங்களூரு வருவதென்றால் குதிரைக் கொம்பு தான். ஆயிரம் கோ்டி புண்ணியம் செய்திருந்தால் தான் தூத்துக்குடி எக்ஸ்பிரஸில் இடம் கிடைக்கும். சரி் எப்படியாவது தத்காலிலாவது டிக்கட் கிடைக்காதா என்ற எண்ணத்தில் காலை 6.30 மணிக்கே முன் பதிவு செய்யும் இடத்திற்கு போய் விட்டேன். ஊரில் என்னை விடக் கடமைக் கனவான்கள் ஜாஸ்தி போலிருக்கு. ஏற்கனவே ஒரு சிறு கும்பல் கூடியிருந்தது. எல்லோருமே அங்கேயிருந்த திண்ணையில் (அல்லது திண்ணை மாதிரியிருந்த மேடை) தான் உட்கார்ந்திருந்தோம். எப்படியும் 1.30 மணி நேரம் காக்க வேண்டியிருக்கும் என்பதால் கையில் ஒரு புத்தகத்தையும் எடுத்துப் போயிருந்தேன்.

நான் போயமர்ந்து ஒரு 10 நிமிடங்களில் அவர் வந்தார். வயது 55'ஐத்தாண்டியிருக்கும். மாநிறத்தை விட சற்றே கறுத்த உடல், நிறைய நிரைத்த முடி, 80களில் இருந்த ஸ்டைலுக்கேற்ப தைக்கப்பட்டிருந்த சட்டை, கையில் ஒரு துணிப்பை, ஹவாய்ச் சப்பல். இது தான் அவருடைய தோற்றம்.


“தம்பி நீங்க தான் வரிசையில கடைசியீங்களா?” முகத்தில் சற்றே கவலையுடன் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி. “ஆமாங்க” என்றேன்.

“நான் ஒரு 10 நிமிஷத்துல காபி குடிச்சுட்டு வந்துதேன், என் எடத்தை பாத்துக்கிடுதீகளா” என்றார்.

“தப்பா எடுத்துக்காதீங்க. அடுத்து வர ஆள், நீங்க போய்ட்டு திரும்பி வரும்போது எடம் கொடுக்க மாட்டேன்னு சண்டை போட்டா என்னால ஒண்ணும் பண்ண முடியாது” என்றேன். எனக்கு முன்னால் இருந்த கனவான்களில் ஒருவர், “காலங்கார்த்தாலேர்ந்து நாங்கள்லாம் ஒக்காந்திருக்கோம்லா” என்று குரல் கொடுத்தார்.

“மவனுக்கு அர்ஜெண்டா மெட்ராஸ் போயாவணும். எங்கிட்டும் டிக்கடே இல்லன்னுட்டாவோ” என்றார் இன்னும் கவலையுடன்.

“எல்லாருக்குமே இங்கிட்டு அர்ஜெண்டுதான்” என்றார் அந்த கனவான் சிரித்த படியே.

“நான் என் பையை வச்சிட்டுப் போறேன்” என்று சொல்லியவர், என்ன நினைத்தாரோ, “செருப்பு இருக்கட்டும்”என்று சொல்லிவிட்டு பையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்.

பத்து நிமிடங்கள் கழித்து வந்தார். அடிக்கடி கையில் கட்டியிருந்த பழைய கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார்.

“சென்னைக்கு ஏதாச்சும் ரயில்ல நல்லாயிருக்கும்” என்றார் என்னப் பார்த்து. என் பதிலுக்குக் காத்திராமல், “கவுண்டர் கரெக்டா 8 மணிக்குத் தொறந்திருவாங்கள்லா. 10 நிமிஷத்துலயே அம்புட்டு டிக்கட்டும் போயிருமாம்லா. அப்படியா தம்பி” என்றார் என்னிடம்.

“சொல்ல முடியாதுங்க. இந்தியா பூராவும் டிக்கட் கொடுக்கறாங்க. எங்கிருந்தும் வாங்கலாம்” என்று பொதுவாகச் சொல்லிவைத்தேன்.

“இந்தக் கம்பியூட்டர் கறுமாந்திரம் வந்தப்புறம் தான்யா டிக்கட்டுக்கு இம்புட்டு கிராக்கி. கம்பியூட்டர் வச்சிருக்க பயபுள்ளேல்லாம், வூட்டுலேந்தே ஒக்காந்து புக் பண்ணிப்புடுதானுங்க. இங்கிட்டு வந்து கால் கடுக்க நின்னாலும், ஒண்ணும் கிடைக்க மாட்டேங்குது” என்று அங்கலாய்த்தார் இன்னொரு பெரிசு.

“கம்பியூட்டருக்கு எல்லா தகவலும் ஊட்டி விட்டு, யப்பா ராசா டிக்கட் கொடு மவராசான்னு காத்திருந்தாலும், கரெக்டா 8 மணிக்கு ரயில்வேஸ் சைட் மக்கர் பண்ணும் கொடுமை எனக்குத் தான் தெரியும்” என்று மனதுக்குள்ளே சொல்லி சிரித்துக் கொண்டேன்.

“அதை விட இந்த ஏஜெண்டுங்க தான் நிறைய டிக்கட்டை புக் பண்ணிப்புடிதானுங்க” என்றார் இன்னொரு பெரிசு.

“உங்களுக்கு ஏதாச்சும் ஏஜண்டைத் தெரியுமா” என்று என்னிடம் கேட்டார்.

“இல்லீங்க. தெரியாது”

கண்களில் ஒரு மாதிரியான ஏமாற்றம். “மவன் மெட்றாசுக்குக் கண்டிப்பா நாளன்னிக்கிப் போயே ஆவணும்” என்று மீண்டும் அதே பல்லவி. குட்டி போட்ட பூனை மாதிரி இங்கும் அங்கும் நடந்தார். சில நேரம் கழித்து எனக்குப் பின்னால் ஒருவர் உட்கார, “அந்தத் தம்பிக்கப்புறம் நான் தான். சப்பல் வச்சிருக்கேன்” என்று தள்ளியிருந்து சொன்னார்.

8 மணிக்கு கவுண்டர் திறந்ததும், எல்லோருக்கும் முன்னாலே போய் நின்று கொண்டவரை சிலர் மறித்தனர். “தப்பா எடுத்துக்கிடாதீங்க. உங்களுக்கு முன்னால டிக்கட் வாங்கிற மாட்டேன். எந்தெந்த ரயில்’ல டிக்கட் இருக்குன்னு தெரியும். அதத்தான் பாக்கேன்” என்றார். டிக்கட் வங்கிக் கொண்டு போகும் ஒவ்வொருவரிடமும், “கிடைச்சுட்டுதா, எம்புட்டு சீட் இருந்துச்சு” என்று ஏதோ பரீட்சை எழுதி ரிசல்டுக்குக் காத்திருக்கும் ஒரு அப்பாவி மாணாவனைப் போல் காத்திருந்தார். எனக்கு முன்னால் நின்றிருந்தவர்களுக்கே சென்னைக்கு டிக்கட் இல்லையென்று சொல்லிவிட்டார்கள். பின்னால் நின்றிருந்தவர்களும் புலம்பிக் கொண்டே வெளியேறிவிட்டார்கள். எப்படியும் டிக்கட் கிடைக்காது எனத்தெரிந்திருந்தும், அவர் போகவில்லை. நான் கவுண்டரை அடந்ததும் என் பின்னால் வந்து நின்று கொண்டார்.

எப்படியும் அவருக்காகப் பிரத்யேகமாக ரயிலில் சீட் உருவாக்கப் போவதில்லை. கண்டிப்பாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். இருந்தாலும், அவருடைய ஏமாற்றம் தோய்ந்த முகத்தைப் பார்க்க எனக்கு மனத்துணிவு இல்லை.

தன் மகனுக்காக அதிகாலையிலேயே ரயில் முன்பதிவு செய்ய வந்த மனிதரோடு ஓரு மணிநேரப் பழக்கமென்றாலும், இன்னும் அவருடைய கவலை தோய்ந்த இன்னும் அகக் கண் முன்னே நிழலாடுகிறது. அவர் மகனுக்காக எதிலாவது டிக்கட் கிடைத்ததா இல்லையா தெரியவில்லை.

“இவன் தந்தை என்னோற்றான்” என்று பிறர் சொல்ல அவர் மகன் இருக்கிறானா இல்லையா தெரியவில்லை, ஆனால், “இவன் மகன் என்னோற்றான்” என்று தான் சொல்ல வேண்டும்.

14 comments:

Divya said...

அப்பானா......அப்பாதான்!!!

நெகிழவைக்கும் அப்பாவின் நேசத்துடன்......பதிவு அருமை!!!

பதிவு படிச்சு முடிக்கிறப்போ....ஒரு டிக்கட் அவருடைய பையனுக்கு புக் பண்ணிட வாய்ப்பு கிடைச்சுடாதா அந்த பெரியவருக்கு ன்னு நினைக்க வைத்தது உங்க எழுத்து நடை:)

RAMYA said...

ஒரு தந்தையின் நேசம் நெகிழ வைத்தது விஜய்!

உங்களின் எழுத்து திறமை அபாரம்.

கண் எதிரே நடந்து முடிந்த நிகழ்வுகள்!

தந்தையின் சோகம், மனது கனத்துப் போச்சு படிக்க!

இப்படி ஒரு அப்பா எத்தனை பேருக்கு கிடைச்சிருப்பாங்க?

கொடுத்து வச்சவங்க!

அந்த தந்தையை ஏமாற்றாமல் ரயில்வே நிர்வாகம் டிக்கெட்டுடன் அனுப்பி இருக்கலாம்:((

நாடோடிப் பையன் said...

This reminded me of my father getting us train tickets for our trips and cancel those tickets because we did not feel like it.
I never got to appreciate him for it.

Thanks for the great article.

பின்னோக்கி said...

தட்கால்ல டிக்கெட் வாங்குறத கண்முன்னாடி நிறுத்திட்டீங்க.

//உங்களுக்கு முன்னாடி டிக்கெட் புக் பண்ணமாட்டேன்..

நல்ல வரிகள் இவை.

Karthik said...

செம பதிவு..!

மேவி... said...

romba feelings agiruchu ....

unmaiyana vaarthaigal

மேவி... said...

"Divya said...
அப்பானா......அப்பாதான்!!!

நெகிழவைக்கும் அப்பாவின் நேசத்துடன்......பதிவு அருமை!!!

பதிவு படிச்சு முடிக்கிறப்போ....ஒரு டிக்கட் அவருடைய பையனுக்கு புக் பண்ணிட வாய்ப்பு கிடைச்சுடாதா அந்த பெரியவருக்கு ன்னு நினைக்க வைத்தது உங்க எழுத்து நடை:)"


naanum appadi than unarnthenunga

மேவி... said...

sema post..... arumaiyaa eluthi irukkinga...

u alaways rock

கல்யாணி சுரேஷ் said...

RAMYA said
//இப்படி ஒரு அப்பா எத்தனை பேருக்கு கிடைச்சிருப்பாங்க?

கொடுத்து வச்சவங்க!//

Repeat.

Vijay said...

\\ Divya said...
அப்பானா......அப்பாதான்!!!

நெகிழவைக்கும் அப்பாவின் நேசத்துடன்......பதிவு அருமை!!!\\

நன்றி திவ்யா!! எனக்கு அவரைப் பார்க்க ரொம்ப பாவமா இருந்தது.

\\ RAMYA said...
அந்த தந்தையை ஏமாற்றாமல் ரயில்வே நிர்வாகம் டிக்கெட்டுடன் அனுப்பி இருக்கலாம்:((\\
ஹாஹா!! அப்பூறம் எல்லோரும் பாவமா மூஞ்சியை வச்சுக்கிட்டு டிக்கட் வாங்கிட்டுப் போயிருவாங்க :-))

\\நாடோடிப் பையன் said...
Thanks for the great article.\\
படித்ததற்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

\\ பின்னோக்கி said...
தட்கால்ல டிக்கெட் வாங்குறத கண்முன்னாடி நிறுத்திட்டீங்க.\\
ஐயோ தத்கால்ல வாஙறது பெரிய சோகம்’ங்க :-)

\\ Karthik said...
செம பதிவு..!\\
நன்றி கார்த்திக் :-)

\\டம்பி மேவீ said...
romba feelings agiruchu ....\\
அப்படியா :-)

\\ கல்யாணி சுரேஷ் said...
RAMYA said
//இப்படி ஒரு அப்பா எத்தனை பேருக்கு கிடைச்சிருப்பாங்க?

கொடுத்து வச்சவங்க!//

Repeat\\
நெஜமாவே அந்தப் பையன் கொடுத்து வச்சவன் தான் :-)

Divyapriya said...

எனக்கு அழுகையே வருது :’(
எங்கப்பா இப்படி தான் எனக்கு s.e.t.c ticket book பண்ணார், இந்த திபாவளிக்கு...ஆனா நான் trip extend ஆகி, இன்னும் இங்கையே உக்காந்திருக்கேன் :((

அம்மா போன வருஷம் இப்படி தான் 6 மணிக்கே போய், ட்ரெய்ன்ல புக் பண்ணாங்க, ஆனா அதுவும் வெயிட்டிங் லிஸ்ட் கிடைச்சு WL 2 வரைக்கும் வந்து நின்னுடுச்சு :(

i hate diwali tickets!!! முன்னாடியே ஒழுங்கா plan பண்ணி எல்லாருக்கும் ticket கிடைக்கற மாதிரி ஏன் செய்ய மாட்டேங்குறாங்க? bulk booking not allowed on festive seasons னு ஏன் rules கொண்டு வர மாட்டேங்குறாங்க?

இந்த பதிவ படிக்கும் போது, போன வருஷம் எங்க அம்மா சோகமா டிக்கெட் கிடைக்கலைன்னு சொன்னது தான் ஞாபகம் வருது :(

Rajalakshmi Pakkirisamy said...

நெகிழவைக்கும் பதிவு

kanagu said...

ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துது அண்ணா...

(Mis)Chief Editor said...

Good one!

You can also come and read my experiences with my father...

http://katha-kelu.blogspot.com/2009/10/blog-post_16.html

http://katha-kelu.blogspot.com/2009/12/blog-post.html

'Appa's always 'Appa'thaan!

-MCE