Pages

August 30, 2008

மூட நம்பிக்கையும் பட்டர்ஃப்ளை எஃபக்டும்

பி.கு. நான் பெரிய பகுத்தறிவாளருமல்ல, எல்லா நம்பிக்கிகளையும் நம்பும் முட்டாளுமல்ல. நமது முன்னோர்கள் மீது அதீத பக்தியும் மதிப்பும் வைத்திருப்பவன். அவர்கள் எது செய்திருந்தாலும், அதில் ஓர் அர்த்தம் இருக்ககூடும் என்று நம்புபவன்.

சக நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு உண்டு. இது தசாவதாரம் படத்தின் அடித்தளம். மேற்கத்தியச் சிந்தனையில், இதை கேயாஸ் தியரி என்று சொல்கிறார்கள். ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்புக்கும், ஒரு புயல் வழித்தடம் மாறிப் போவதற்கோ, தாமதமாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்ககூடும் என்கிறார்கள்.
மேற்கத்திய விஞ்ஞானிகளான எட்வர்ட் லோரென்ஸ் என்பவர் தான் இந்த பட்டர்ஃப்ளை எஃபக்டின் காரணகர்த்தா. இந்த தத்துவத்திற்கு அவர் mathematical equation சொல்லிவிட்டதால் அது விஞ்ஞானம் ஆனது.

இந்த பட்டர்ஃப்
ளை எஃபடோடு நமது நாட்டில் பரவலாக இருந்து வரும், நம்பிக்கைகளிலும் அப்படியென்ன வித்தியாசம் இருந்து விட்டது.
எங்கள் வீட்டில் வெளியே கிளம்பும் போது, பூனை குறுக்கே சென்றால், சகுனம் சரியாக இல்லை, கொஞ்சம் உட்கார்ந்து தண்ணீர் குடித்து விட்டுப் போ என்று பாட்டி சொல்லக் கேட்டிருக்கேன். பாவம் பூனை, அதற்கென்னவோ அவசரமான வேலை போலிருக்கு, அது பாட்டுக்கு போறது. போயிட்டுப் போகட்டும். அதுக்காக நாம ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கேன். அதே மாதிரி தான் கிளம்பும் போது கால் தடுக்கும் போது. ஆனால் இந்த பட்டர்ஃப்ளை எஃபக்ட் பற்றித் தெரிந்தவுடன், பூனை குறுக்கே செல்வதற்கும் நான் வெளியே செல்வதற்கும் ஏதோ தொடர்பு இருக்கலாமோ? சாரி சாரி தொடர்பு இருக்கச் சாத்தியம் இருக்கலாமோ?

மீண்டும் பட்டர்ஃப்ளை எஃபக்டுக்கே போவொம். ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்பு ஒரு புயலின் வழித்தடத்தையோ அல்லது அதை தாமதப்படுத்தவோ சாத்தியக்கூறு இருக்கிறது என்று தான் சொல்கிறது. இவ்விரண்டிற்கும் சம்பந்தம் இருக்கிறதென்று சொல்லவில்லை. அப்படியிருக்க ஒரு பூனை நம் குறுக்கே செல்வதற்கும், ஒரு கெட்ட காரியம் நம் முன்னே நிகழ்வதற்கும் சாத்தியக்கூறுகள் இருக்ககூடாதா? அந்த கெட்ட காரியம் நம் முன்னே நடக்க வேண்டாம் என்ற காரணத்திற்க்காகத்தான், உட்கார்ந்து தண்ணீர் குடித்து விட்டுப் போகும் படி நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்களோ? ஏன் இதுவும் ஒரு பட்டர்ஃப்ளை எஃபக்டாக இருக்க முடியாது.
மேற்கத்தியச் சிந்தனையாளர் சொன்னால் அது விஞ்ஞானம், அதையே நம் முன்னோர்கள் சொல்லிருந்தால் அது மூட நம்பிக்கையா?
இந்திய கணித மேதைகள் தான் பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தனர் என்று மார் தட்டிக் கொள்ளும் நாம், ஏன் அன்றே இந்த பட்டர்ஃப்ளை எஃபக்டையும் கண்டு பிடித்திருக்க முடியாது? என்ன அதற்கொரு mathematical equation கொடுத்திருந்தால், நமது பகுத்தறிவு பகலர்கள் அதையும் பாராட்டியிருப்பார்கள்.

ஜோசியம் கூட அது மாதிரி தானே. இப்படியெல்லாம் நிகழும் என்று ஜோசிய சாஸ்திரம் சொல்வதில்லை. இப்படியெல்லாம் நிகழச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றது என்று தானே சொல்கிறது. இந்த ஜோசிய சாஸ்திரம் தானே, எந்த செயற்கைக் கோளும் இல்லாமல், இந்த வருடம் எவ்வளவு மழை பொழியும், என்றைக்கு சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம், அம்மாவாசை, பௌர்ணமியென்றெல்லாம் தகவல் கொடுக்கிறது?

ஆக நம் முன்னோர்கள் ஏதோ காரணத்திற்காகவே சில நம்பிக்கைகளை வைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கை என்னும் இன்னும் வலுப்பெற்றிருக்கிறது.

டிஸ்கி: அப்பாடா, வெட்டிவம்பில் ரொம்ப நாட்களுக்குப் பிறகு எனது ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தாச்சுப் பா. நிம்மதியா தூங்கலாம்.


August 28, 2008

மீசை அரும்பிய பருவம்

மூக்கின் கீழே, வாய்க்கு மேலே இருந்த பொரம்போக்கு நிலத்தை ஓரிரண்டு அரும்பு முடிகள் ஆக்கிரமித்டிருந்த பருவம். வயசுப் பசங்க "மச்சி மீசை மொளச்சிடுச்சுல்ல" என்று வெட்கத்துடன் புன்னகைத்துக் கொள்ள ஆரம்பித்த காலம். நேற்று வரை இவர்களும் எங்கள் வகுப்பில் தான் படிக்கிறார்கள், என்று சொல்லிக் கொண்டிருந்த சில பெண்கள் திடீரென தேவதைகளாகத் தெரிய ஆரம்பித்த பருவம். ஐந்து நாட்களுக்கு வரும் அப்பாக்களின் ஷேவிங்க் பிளேட் மூன்றாகக் குறைக்கப்பட்ட தினங்கள். நெற்கதிர்களை மட்டுமே பயிரிட்டுப் பார்த்த நாங்கள், திடீர் விவசாயிகளாக அவதாரமெடுத்து, காலையில் கடலை சாகுபடி செய்து, மாலை நேரங்களில் அதை வறுத்து விற்பனை செய்ய ஆரம்பித்த பருவம். வைரமுத்துவாகவோ வாலியாகவோ மாறி கவிதைகள் பல புனையும் பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட வயது.
விளக்கமெல்லாம் போதும்லே, விசயத்தைச் சொல்லுலே, செத்த மூதி!!

எங்கள் ஊரில் மாவட்ட அறிவியல் மையம் (District Science Centre) ஒன்றிருக்கிறது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் (Ministry of Human Resources) கீழ் இதற்காக நிதி ஒதுக்கி, இதை நடத்தி வருகிறார்கள். நெல்லையில் சினிமாவையும் நெல்லையப்பரையும் விட்டால், பொழுது போக்க ஒரே இடம். பள்ளி மாணவர்களிடையே அறிவியல் பசியை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் வினாடி வினாப் போட்டி(Quiz Competition), அறிவியல் கண்காட்சிப்போட்டி (Science exhibition) என்று நிறைய போட்டிகள் வைப்பார்கள். இந்தப்போட்டிகளில் வெற்றிபெறுவது ஒவ்வொரு பள்ளிக்கும் பெரிய கௌரவ பிரச்சனை.

ஃபிஸிக்ஸ் கெமிஸ்ட்ரி வகுப்புகளில் நிறைய கேள்விகள் கேட்கிறேன், என்னுள் அறிவுப்பசி, கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிகிறது என்று வாத்தியார் நினைத்தாரோ என்னவோ, "நீ இந்த வருடம் அறிவியல் கண்காட்ச்சியில் ஏதாவது புதிதாக ஒரு இயந்திரம் செய்து வைக்கிறாய்" என்று பள்ளியில் ஆணையிட்டுவிட்டார்கள். "அப்பாடா இவன் தொல்லை ஒரு நாலு நாளைக்கு இருக்கக்கூடாது" என்று ஃபிஸிக்ஸ் கெமிஸ்ட்ரி வாத்தியார்கள் சதி செய்தனரோ தெரியவில்லை.

"புதுசா என்னத்தச் செய்ய? ஆஹா நாம தான் அடுத்த நெல்லை நகர எடிசன் என்ற கணக்கில்", ஸ்கூல் லைப்ரரியிலுள்ள Electronics For You'ஐ புகட்டலானோம். எல்லாம் எந்த நூற்றாண்டிலோ வாங்கிப்போட்டிருந்தார்கள் போல. எல்லாம் பழைய காகிதங்கள். ஒரு வழியாக, ஒரு circuit'ஐ தேர்ந்தெடுத்து, இதைச் செய்யலாம் என்று முடிவெடுத்து, அப்பாவையும் நச்சரித்து, ஒரு printed circuit board அளவிற்கு கொண்டு வந்து விட்டோம். நாங்களும் ஏதோ வைக்கிறோம் பேர்வழி என்ற பெயரில் இதையும் வைத்தாகி விட்டது.

அறிவியல் கண்காட்சியும் இனிதே ஆரம்பமானது. நெல்லை மட்டுமல்லாது மற்ற நகரத்துக்குப் பள்ளிகளிலிருந்தெல்லாம் நிறைய செய்து கொண்டு வைத்திருந்தார்கள். (சமையல் சாப்பாடு அல்ல, அறிவியல் சார்ந்த புதிது புதிதாக இயந்திரங்கள்)

இந்த அறிவியல் கண்காட்சி பற்றி ஒரு மினிதகவல். இதற்கு அனுமதி இலவசம். மாணவர்கள் சீருடையிலோ, அல்லது கல்லூரி அடையாள அட்டையைக் காண்பித்தாலோ கேள்வியெதுவும் கேட்காமல் உள்ளே செல்ல அனுமதித்து விடுவார்கள். பெரும்பான்மையான கூட்டம் பெண்கள் பள்ளி வைத்திருக்கும் ஸ்டாலில் தான் இருக்கும். அல்லது பெண்கள் வைத்திருக்கும் கருவிகளை மட்டும் பார்த்து விட்டு, எங்களையெல்லாம் ஒரு நக்கல் லுக் விட்டு விட்டு போய்விடுவார்கள்.

முதல் நாளே நடுவர்களெல்லாம் வந்து விட்டு, எங்களிடம் கேட்கக்கூடாத out of syllabus கேள்வியெல்லாம் கேட்டுக் குடைந்து விட்டு, சென்று விட்டார்கள். அவர்கள் போனவுடனேயே தெரிந்து விட்டது, நான் வைத்திருந்த இயந்திரத்திற்கு ஆறுதல் பரிசு கூடக் கிடைக்கப் போவதில்லையென்று. பின்ன வெறும் theory மட்டும் சொல்லிவிட்டு, வேலையே செய்யாத இயந்திரத்திற்கு யார் தான் பரிசு கொடுப்பா??

நாங்களும் மற்ற பள்ளியிலிருந்து அப்படியென்ன தான் இயந்திரங்கள் செய்து கொண்டு வைத்திருக்கிறார்கள் பார்ப்போம் என்று ஒரு ரவுன்ட்ஸ் போகப் புறப்பட்டோம். சில குட்டிச்சாத்தான்களை எங்கள் ஸ்டாலில் விட்டு விட்டு மற்ற பள்ளிகளின் ஸ்டால் நோக்கி வீரு கொண்டு நடக்கலானோம்.
"டேய் மாப்ள, அங்க பாரு டா, Girls School ஸ்டால்" என்றான் ஒருவன்.
"வாங்கடா, அங்கிட்டு போவோம்" என்றான் இன்னொருவன்.
அங்கே ஒரு பெண் ஏற்கனவே தான் செய்து வைத்திருந்த ஏதோ எலக்ட்ரானிக்ஸ் கருவியைப் பற்றி வர்ணித்துக்கொண்டிருந்தாள். கேட்பவர்களை விட, அவளைப் பார்ப்பவர்கள் தான் அதிகம் என்ற உண்மை தெரியாமல். நானும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டேன். அவளது வர்ணனை முடிந்தவுடன், கூட்டத்தில் சற்று முன்னேறி, "எக்ஸ்யூஸ்மீ, இந்த device பற்றிச் சொல்ல முடியுமா" என்று கேட்டேன்.
என்ன நினைத்தாளோ, என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "இப்போதானே எல்லோருக்கும் சொல்லி முடித்தேன். உங்க காதுல விழலியா" என்றாள்.
"நான் பாதியிலிருந்து தான் கேட்டேன். முதலிலிருந்து சொன்னால் கொஞ்சம் நல்லா இருக்கும்".
என்னோடு இரண்டு மூன்று பேர்கள் சேர்ந்து கொள்ள மீண்டும் முதலிலிருந்து விளக்கிச் சொன்னாள். கிளாஸ்ல வாத்தியார் நடத்துற பாடத்தையே கவனிக்காத நான் , என்னையும் அறியாமல் அவள் விளக்குவதை நான் கூர்ந்து கேட்பது எனக்கே விந்தையாக இருந்தது

"அவள் சொன்னது தேவகானமாகவோ வீணை மீட்டுவது போலவோ இருந்தது" என்று சொல்லப்போகிறேன் என்று நினைக்கிறீர்களா. அதான் இல்லை. ஸ்கூல்லயே அவ்வளவு கெட்டுப் போகலை.
தொண்டைத் தண்ணிர் வற்ற அவள் விளக்கியதற்கு இரண்டு மூன்று சந்தேகங்களும் கேட்டேன்.
"நீங்க எந்த ஸ்கூல்" என்றாள் என்னிடம்.
என் பள்ளியைச் சொல்லிவிட்டு, நானும் இங்கே ஒரு device செய்து கொண்டு வந்திருக்கேன், நீங்க எங்க ஸ்டாலுக்கு வந்து பாருங்க என்று அச்சடிக்கப்படாத அழைப்பிதழையும் வைத்து விட்டு, நகரலானேன்.

அங்கிருந்து வாந்தாலும், மீண்டும் அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் குறையவில்லை. என்ன காரணத்திற்காக மீண்டும் அங்கே செல்வது? கண்காட்சி இன்னும் ஒரு நாள் இருக்கிறது. எப்போதாவது போய் பார்த்துக் கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.

மறு நாள் என் அழைப்பிற்கு மரியாதை வைத்து வந்தாளா, இல்லை எங்களை மாதிரி அவளும் ரவுண்ட்ஸ் வந்தாளா தெரியவில்லை. தோழிகள் புடை சூழ எங்கள் ஸ்டாலுக்கு வந்தவள் ஒவ்வொன்றாக நோட்டம் விட்டவள் என்னை நோக்கியும் வந்தாள். நான் என்னவோ, நானே கண்டு பிடித்த கருவி மாதிரி அவ்வளவு பெருமையுடன் அதை விளக்கிக் கூறினேன்.

"என்ன வெறும் circuit diagram மட்டும் காட்டறீங்க. அதை இயக்கிக் காட்டுங்க" என்றாளே பார்க்கலாம்.
"ஆஹா பொட்டப் பிள்ளைங்கள கூட்டியாந்து மானத்தை வாங்கிட்டாளே"ன்னு நொந்து கொண்டாலும், "Current leakage உள்ள கருவியைக் கொண்டாங்க, இது கண்டு பிடிச்சுடும்" என்று சொல்லி சமாளித்தேன்.
எனக்கு பரிசு கிடைக்க "All the Best" சொல்லி விட்டு அவளும் சென்றாள். கண்காட்சி முடிந்து, ஆறுதல் பரிசு கூட கிடையாது என்று தெரிந்து கொண்ட பின்பு, ஸ்கூல் டியூஷன் ரிவிஷன் என்று பழைய வாழ்க்கைக்குத் திரும்பலானேன்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, எஞ்சினியரிங்க் காலேஜில் நுழைந்த முதல் நாள். ராகிங்கிலிருந்து தப்பிக்க ஆட்டு மந்தைபோல் முதலாமாண்டு மாணவர்கள் அனைவரும் ஒன்றாகச் சென்று கொண்டிருந்தோம். என்ன ஆச்சர்யம், இரண்டு வருடங்களுக்கு முன் அறிவியல் கண்காட்சியில் பார்த்த அதே முகம்.
"ஓ, இவளும் இதே கல்லூரி தானா. விட்ட குறை தொட்ட குறையாக பள்ளியிலே விட்ட உறவை, கல்லூரியில் தொடரலாமே என்று அவளிடம் சென்று, "ஹலோ, எப்படி இருக்கீங்க. என்னை தெரியுதா? Science Exhibition'
பார்த்தோமே, ஞாபகம் இல்லையா" என்று நான் பேசிக்கொண்டே போக, அவள் சரியாகவே பதில் சொல்லலை. நான் போகும் பஸ்ஸும் வந்து விடவே, "ஒகே, அப்பறம் பார்க்கலாம்" என்று வந்து விட்டேன். இங்க தானே படிக்கறா, நாளைக்கு பார்த்துக் கொண்டால் போச்சு.

"எங்கடா போயிட்ட" என்று நண்பன் ஒருவன் கேட்க, "இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஊர்ல பார்த்த ஒரு மயில் மச்சி" என்றேன்.
"யாருடா?" என்று அவனும் வினவ, "அதோ பச்சை கலர் சுடிதார்லே இருக்காளே அவள் தான்டா" என்றேன்.

"டேய் வெண்ணை அது சீனியர் டா"


August 24, 2008

Blogging Friends forever Award


நான் எழுதும் சுயபுராணக்கிறுக்கல்களையும் படித்து, முதல் ஆளாக பின்னுட்டம் எழுதி, எனக்கு இந்த விருதும் கொடுத்த முகுந்தனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.

நாமளும் இந்த விருதைக் கொடுப்போம்

திவ்யா - என் வலைப்பதிவை இவர் பதிவ்வாகப் படித்து, தவறாமல் பின்னூட்டமும் போடுகிறார் என்பதில் பெருமை கொள்கிறேன்.


ஜி - மண் மாறாத நெல்லைச் சீமையிலிருந்து வந்து, அந்த மண்ணிற்கு மேலும் பெருமை சேர்ப்பவர்

டுபுக்கு - இவர் என் வலைப்பதிவைப் படித்து வெகு நாட்களாகியும், இவரை பெர்சனலாகத் தெரியும் என்பதில் பெருமை கொள்கிறேன்.

திவ்யப்ரியா
ஆயனர், கலை வண்ணம் பல கண்டார் கல்லிலே
இவள், கலை வெள்ளம் பல கொண்டுவந்தாள் தன் பென்சிலாலே

ரம்யா ரமணி - எப்போதுமே எனது புலம்பல்களுக்கு, "Me the First" என்று குதூகலத்துடன் மறுமொழி எழுதுபவர்.

முகுந்தன் - என்னை வெகுவாகவே பாராட்டும் ஜீவன்.

சரவண குமார் - பொட்டி தட்டிக் கொண்டே கவிதைகள் பல புனைபவர்

மங்களூர் சிவா - கலந்து கட்டி பல்சுவையாக எழுதுபவர்

பரிசல்காரன் - புகைப்படங்களாலேயே கவிதையெழுதும் கிருஷ்ண குமார்

கார்த்திகா - நாலைந்து வரிக் கவிதைகளானாலும் மழையை இவர்போல் யாரும் வர்ணிக்க முடியாது


டிஸ்கி: யாரையாவது விட்டுவிட்டேனென்றால் மன்னித்துக் கொள்ளவும். மணி இரவு 2 மணி. என் மூளை சற்றே மழுங்கி போயிருக்கும் நேரம்.

August 22, 2008

ப்ளீஸ் சார்.....

கமல்ஹாசன் மர்மயோகி என்று ஆறாம் நூற்றாண்டைப் (திருத்தம் சொன்ன ஜிக்கு ஆயிரம் கோடி நன்றிகள்) பின்னணியாகக் கொண்ட படத்தை எடுக்கப்போவதுப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். படத்தை நல்லபடியாக எடுத்து, தயாரிப்பளர் தலையில் துண்டு விழாமலும், என் போலல்லாத ரசிகர்களையும் கமல் ஏமாற்றமாட்டார் என்றே நம்புவோம். ஆனால், கமல் இப்படியொரு கதையைப் படமாக எடுக்கப்போகிறார் என்றவுடன், எனக்கு சற்றே ஏம்மாற்றமாக இருந்தது.

தமிழார்வலர்கள் நிறைய பேர் படிக்க மறக்காத காவியம் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். தமிழ் நாவல் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்படித்திய ஒன்று (அய்ய தோடா அப்படியே இவரு பெரிய சுஜாதாவாகிட்டாரு). வலைப்பாதிவாளர்கள் நிறைய பேரது ஃபேவரிட் புத்தகங்களில் பொன்னியின் செல்வன் மறக்காமல் இடம் பெற்றிருக்கிறது. கமல்ஹாசனும் "பொன்னியின் செல்வனைப் படித்திருக்கிறேன்" என்று பேட்டியில் சொன்னதாக ஞாபகம். அப்படியிருக்க இந்தக் காவியத்தை, ஏன் இது வரை எவரும் படமாக எடுக்க முன் வரவில்லை.

பொன்னியின் செல்வனில் இல்லாத கதையா? அதில் இல்லாத சூழ்ச்சியா? அதில் இல்லாத ராஜ தந்திரமா? அதில் இல்லாத காதலா? அதில் இல்லாத சோகமா? பாட்டுக்களுக்கூட பஞ்சமில்லாமல் கல்கியே நிறைய பாட்டு எழுதிக்கொடுத்து விட்டுப் போயிருக்கிறாரே. ஓர் படமெடுக்க என்னென்ன அம்சங்கள் வேண்டுமோ அத்தனையும் நிரம்பியிருக்கிறது. அப்படியிருக்க கமல்ஹாசனோ, மணிரத்னமோ ஏன் அதை படமாக்க முன் வரவில்லை என்று தெரியவில்லை.

எம்.ஜி.ஆர் தயவில் பொன்னியின் செல்வனை பொதுவுடமை ஆகி விட்டது. அதனால் அதன் மீது யாரும் உரிமை கொண்டாடவும் முடியாது.

உலகத்தரம் உலகத்தரம் என்று அடித்துகொள்கிறார்களே ஒரு ராஜா காலத்துக் கதையை உலகத்தரத்தில் வழங்க முடியாதா? ஓர் ராஜா காலத்துக் கதையைக் கொண்ட பென்ஹர் தானே இன்று வரை நிறைய ஆஸ்கர் வென்ற படமாக இருக்கிறது. Lord of the Rings ஓர் ராஜா காலத்து விட்டலாச்சாரியார் படம் தானே. Gladiator'உம் ராஜா காலத்து படம் தானே? இவையெல்லாம் வெற்றி பெற வில்லையா? அட, தசாவதாரத்திலேயே கூட முதல் 15 நிமிடங்கள் தான் நன்றாக இருக்கிறது, என்று எல்லோரும் சொல்லவில்லையா? இப்படி ஊக்கமூட்டும் நிறைய சாட்சிகளிருந்தும், பொன்னியின் செல்வனை யாரும் கண்டு கொள்ளவில்லையே என்று மனம் ஆதங்கப் படுகிறது.

சரி இந்தப் படத்தை ஏன் நான் கமல்ஹாசனோ மணிரத்னமோ எடுக்க வேண்டும் என்று சொல்கிறேன். பொன்னியின் செல்வன் என்பது ஏதோ ஓர் சாதாரண கதையல்ல. பலதரப்பட்ட புனைக்கதைகளை அதனுள் அடக்கி வைத்திருக்கிறது. சோழர்களின் உன்னதமான காலத்தைகுறிக்கும் பொன்னியின் செல்வன் மிகப் பிரம்மாண்டமான முறையில் திரை வடிவில் வழங்கப் பட வேண்டும். உதாரணத்திற்கு, முதல் காட்சியிலேயே பழுவேட்டறையரின் அணிவகுப்பைக் காட்டவேண்டுமானால், அதற்கு ஏற்றார் போல் தொழில் நுட்பத்தை பயன் படுத்த வேண்டும். அதற்கேற்றார் போல் காட்சி வடிவமைப்பது கமலையும் மணி ரத்னத்தையும் தவிற வேறெவரால் முடியும் என்று தெரியவில்லை? (ஷங்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்) ஒப்பனையிலும் மிக நுட்பமான நுணுக்கங்கள் தேவை.

சோழர் காலத்து மாளிகைகளையும், ஈழத்துப் போரையும், வந்தியதேவனும் அருள் மொழி வர்மனும் புயலில் சிக்கிக் கொள்ளும் காட்சி, கடற்கொள்ளையரிடமிருந்து வந்தியத்தேவன் தப்பிக்கும் காட்சி, நாகை புயல்(இது கூட சுனாமி தானோ, கல்கி கடல் பொங்கிற்று என்று எழுதியிருந்ததாக ஞாபகம்), மற்றும் வெள்ளம், இவையனைத்தும் தொழில் நுட்பத்திற்கே சவால் விடும் காட்சிகள். ஏதாவது கத்துக்குட்டி இயக்குனர், ஆர்வ மிகுதியில் இக்கதையை படமாக்குகிறேன் பேர்வழி என்று கெடுப்பதற்குள், திரைத்துறையில் கோலோச்சும் கமல் மணி ரத்னம், ஷங்கர் இவர்களில் யாராவது இக்கதையை படமாக்கினால் நல்லது. பொன்னியின் செல்வனை இன்னும் அதைப் படிக்காத மக்களுக்கு, அதை எடுத்து செல்ல இது அற்புதமான வழி.

அப்படி பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக எடுக்கும் பட்சத்தில், எந்தெந்த கதாபத்திரத்துக்கு யாரைப் போடலாம்? என் பதிவைப் படிப்பவர்கள் அதையும் சொன்னால் நல்லதாக இருக்கும்.

என்னைக்கவர்ந்த சில கதாபாத்திரங்களுக்குஇது தான் என் சாய்ஸ்:

வந்தியத்தேவன் : சூர்யா
குந்தவை : சிம்ரன்
அருள் மொழி வர்மன் : விக்ரம்
வானதி : அசின்
ஆதித்த கரிகாலன் : மாதவன்

நந்தினி : ஜோதிகா
ஆழ்வார்க்கடியான் : விவேக் (கொஞ்சம் தொப்பை வேண்டும்)
அனிருத்தப்பிரம்மராயர் : கமல்ஹாசன்(சாரி அருள் மொழி வர்மனாக உங்களை என்னால் பாவிக்க முடியவில்லை)

சேந்தன் அமுதன் : சித்தார்த்
பூங்குழலி : ஸ்நேஹா
வைத்தியர் மகன் பினாகபாணி அல்லது ரவிதாசன் : ஜே.கே ரித்தீஷ் :-)

கமல் சார், மணிரத்னம் சார், ஷங்கர் சார், ப்ளீஸ் சார்.....

டிஸ்கி:

இதையே மெகா சீரியலாக யாரோ எடுக்க முயற்சிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படி ஏதாவது பண்ணி இந்தக் காவியத்துக்கு களங்கம் ஏற்படுத்திடாதீங்கப்பா

பொன்னியின் செல்வன் எனப்பெயரிட்டு சில வருடங்களுக்கு முன் வந்த தமிழ்ப் படம், நல்ல வேளை கல்கியின் கதையை படமாக எடுக்க வில்லை.

August 20, 2008

மகிழ்ச்சிகரமான இல் வாழ்க்கைக்கு...

தலைப்பைப் பார்த்து விட்டு நான் ஏதாவது உபன்யாசம் செய்யப் போகிறேனோ என்று நினைத்து விட வேண்டாம். இந்த வருட பிறந்த நாள் பரிசாக எனக்கு வந்த ஒரு பரிசு, "மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு 10 கட்டளைகள்" என்ற புத்தகம்.
Too late!!! திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் கழிந்தாலும், திருமண வாழ்க்கையில் பெற்றது சில, கற்றது பல. "புத்தகத்தை எழுதியிருப்பவர் என்ன தான் சொல்கிறார் என்று பார்ப்போமே" என்ற யோசனையில் தான் படித்தேன்.

என்ன எழுதியிருக்கிறார் என்று சொல்லப் போவதில்லை. ஆனால், சொன்ன நிறைய வழிகள் கணவன்மார்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் தான் நிறைய இருக்கிறது. பெண்கள் மீது ஏனோ இவ்வளவு பாரபட்சம். அவர்களை மாற்ற முடியாது, அதனால் ஆண்களுக்குத்தான் நிறைய உபதேசம் செய்ய வேண்டும் ஆசிரியர் நினைத்து விட்டாரோ என்னவோ?
இந்தப் புத்தகத்தை திருமணம் செய்து கொள்ளப் போகும் எல்லா ஆண்களும் படிக்க வேண்டிய ஒன்று என்று சொல்ல மாட்டேன். ஆனால், படித்துப் பார்த்தால், மண வாழ்க்கையில் எவ்வளவு மணம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலம். குறைந்த பட்சம், மண வாழ்விலுள்ள எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொள்ளலாம். இந்தப் புத்தகத்தை நிச்சயதார்த்தன்றே மணமகனின் கையில் கொடுத்து படிக்கச் சொல்வது இன்னும் சாலச் சிறந்தது.

ஆனால் பத்து வழிகளையும் படித்து மனப்பாடாம் செய்து அதன்படி வாழ்வது சற்றே சிரமமான விஷயம். அதனால், மகிழ்ச்சியான இல் வாழ்க்கைக்கு ஒரே தாரக மந்திரம் ஒன்றிருக்கிறது. அந்தத் தாரக மந்திரத்தை எல்லா கணவன்மார்களும் தினந்தோறும் சொல்ல வேண்டும். அதைப் பற்றி நான் ஏற்கனவே திருமணமான புதிதிலேயே எழுதிவிட்டேன். அதைத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்

August 18, 2008

இன்னாள் அவ்வருடம்

பொழுதுபோக்கிற்காக சென்னையிலே மார்கெட்டிங்க் வேலை செய்துகொண்டிருந்த எனக்கு மும்பைக்கு வந்து நேர்காணலில் பங்கேற்குமாறு ஒரு மடல் வந்தது. அது இ-கொசு மெயில் இல்லாக்காலம். தபாலில் தான் கடிதம் வந்தது. நேர்காணல் நடத்தும் கம்பெனியின் பெயர் வோல்டாஸ் (Voltas). அன்றைய காலகட்டத்தில் வோல்டாஸின் ஃப்ரிட்ஜைத்தவிர வேறெதுவும் கேள்விப்பட்டிராத நான் மும்பை வரை செல்ல ரொம்பவே தயங்கினேன். அதற்கு முன் நடந்த ஓரிரண்டு நேர்காணல்களில் அவ்வளவாக சாதிக்காத நான் மும்பை வரை சென்று என்னத்தைச் சாதித்துவிடப் போகிறேன்? ஒரு வேளை வேலை கிடைக்காவிட்டால் தற்சமயம் வேலைபார்க்கும் கம்பெனியில் விடுமுறை எடுத்ததற்காக சம்பளைத்தைக் குறைத்து விடுவார்கள்.
கிடைத்தால் நல்ல வேலை போனால் 5 நாள் சம்பளம். போனால் போகிறது என்று ஒரு முடிவிற்கு வந்து மும்பைச் செல்ல ரயில் பயணச்சீட்டெல்லாம் வாங்கியாச்சு. என்னை மும்பைக்கு வழியனுப்ப அம்மா ஊரிலிருந்து வந்திருந்தாள். என் மாமா ஒருவர் அப்போது பணியில் மாற்றலாகி மும்பைக்குச் சென்றிருந்தார். அவரே ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துச் சென்றார்.
நேர்காணலுக்கு முந்தைய தினமே மும்பைக்குச் சென்றதால், ஒரு நாள் முழுக்க வீட்டிலிருந்த படியே கொஞ்சம் படித்துக் கொண்டேன். என்ன கேடுத்தொலைக்கப் போகிறார்களோ? எதிலிருந்து கேட்கப்போகிறார்களோ, ஒன்றும் தெரியவில்லை.எதற்கும் இருக்கட்டும் என்று R.S.Aggarwal'இன் Aptitutude வினாக்கள் அடங்கிய புத்தமும் B.L.Theraja எழுதியிருக்கும் Electrical Engineering புத்தகத்தையும் கொஞ்சம் புரட்டிப் பார்த்துக்கொண்டேன். குளிர் சாதனம் தயாரிக்கும் நிறுவனத்தில் என் திறமையைச் சோதிக்க என்ன கேட்டு தொலைப்பார்களோ என்று பெரும் குழப்பம். ஒரு வேளை thermal engineering'லிருந்து கேட்பார்களோ? ஐயையோ கல்லூரி நாட்களில் thermal நடத்தும் லெக்சரர் மீதிருந்த கோபத்தால் அதை ஒழுங்காகப் படிக்காமப் போயிட்டோமே. மூன்றாம் செமஸ்டரில் வந்த thermal engineering பற்றி இப்போது என்ன செய்தாலும் மண்டையில் ஏறப் போவதில்லை. ஆஹா இந்த யோசனை முன்னமேயே வந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டாம். சரி, இவ்வளவு பணம் செய்து வந்தது ஒரு காரியத்துக்கும் ஆகப்போறதில்லை.
மறு நாள் மாமாவே வோல்டாஸ் ஆபீஸில் இறக்கி விட்டுச் சென்றார். சரி இவ்வளவு தூரம் வந்தாயிட்டது. என்ன தான் நடக்குதுன்னு ஒரு கை பார்ப்போம் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே போனேன். என்னையும் சேர்த்து 7-8 பேர் வந்திருந்தனர். நான் மட்டும் தான் ஃப்ரெஷர். மற்ற எல்லோரும் 2-3 வருட அனுபவஸ்தர்கள். அவர்களுக்கு என்ன கேட்கப்போகிறார்கள் என்ற உதறல் இருந்ததாகத் தெரியவில்லை. என்னையும் இன்னொரு பெங்காலி பையனையும் மட்டும் ஓர் அறைக்குக் கூட்டிச் சென்று ஒரு வினாத்தாள் கொடுத்தார்கள். எந்த நூற்றாண்டிலோ அச்சடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. நிறைய electronics பற்றித்தான் கேள்விகள் இருந்தன. டிரான்ஸிஸ்டர் பற்றித் தான் நிறைய கேள்விகள். "டிரான்ஸிஸ்டரா, யார் sister?" என்று நக்கல் அடிக்காமல் ஒழுங்காகப் பதில் எழுதினேன். அது முடித்து பத்தே நிமிடங்களில் நேர்காணல் ஆரம்பித்தது.
பிரமாதமாக ஒன்றும் கேட்கவில்லை. என்ன படித்திருக்கிறாய், என்ன செய்ய விரும்புகிறாய் இப்படிப்பட்ட general கேள்விகள் தான். "உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது" என்று சொல்லத்தான் தோன்றியது. இருந்தாலும், "ரொம்ப சவாலான வேலைகள் செய்ய ஆசை" என்றேன்.
"சரி, நீ வேலை செய்யப் போகும் இடம் கொல்கத்தா. என்ன O.K.வா" என்றார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என்னது கொல்கத்தாவா? நான் சென்னையல்லவா கேட்கலாம் என்றிருந்தேன். அப்போதைக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. சரி என்று என்னையும் அறியாமல் சொல்லிவிட்டேன்."நல்லது. நீ வேலை பார்க்கப் போவது வோல்டாஸின் Mining Equipment டிவிஷனில் என்று மேலும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். "என்னது mining'ஆ. மண்டையில் டார்ச் லைட் மாட்டிக்கோண்டு சுரங்கத்தில் அழுக்கு ஷூவும் அழுக்குச் சட்டையும் போட்டுக் கோண்டு போவார்களே, அப்படிப்ப் பட்ட வேலையா. ஆண்டவா, இதுக்கா என்னை இவ்வளவு தூரம் கூட்டிக்கொண்டு வந்தாய்?". இவ்வளவும் மனதில் ஓடினாலும் தலை மட்டும் Y-Axis'இலேயே O.K O.K என்று மேலும் கீழுமாக ஆடியது.
"You are selected. கொஞ்சம் பொறுத்திருந்து offer லெட்டரை வாங்கிக் கொண்டு போ" என்று சொன்னார். என் தலையெழுத்தை நொந்து கொண்டு வெளியே வந்தேன். 15 நிமிடங்களில் ஆஃபர் லெட்டரும் கையில் தந்து சென்னையிலிருந்து மும்பைக்கு வந்து போக 2nd A.C டிக்கட்டுக்கான பணமும் கொடுத்தார்கள். "அடப்பாவிங்களா, இதை முதலிலேயே சொல்லியிருந்தால் நான் A.C.யிலேயே வந்திருப்பேனேடா. இப்போ திரும்பிப் போவதற்குகூட second class ஸ்லீப்பரில் தானே முன் பதிவு செய்திருக்கிறேன்" என்று நொந்து கொண்டேன்.
சம்பளத்தைப் பார்த்ததும் தான் கொஞ்சம் தெம்பு வந்தது. மாதம் 7500 ரூபாய். இதை வைத்துக்கொண்டு கொல்கத்தாவில் காலம் தள்ளி விடலாம். "என்றைக்கு கொல்கத்தாவெல்லாம் பார்க்க? அதும் தான் எப்படியிருக்கிறதென்று பார்த்துவிடுவோமென்ற உத்வேகம் மனதிற்குள் வந்து சேர, குதூகலத்துடன் அம்மாவிற்கு ஃபோன் போட்டு எனக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை அம்மாவிடம் கூறினேன். வேலையில் சேர 30 நாட்கள் அவகாசம் கேட்டுக் கொண்டு, கொல்கத்தா கனவுகளுடன் சென்னை நோக்கிப் பயணப்பட்டேன்.
டிஸ்கி: இன்றைய தேதியில் என் வாழ்க்கையில் ஏதாவது நடந்திருக்கிறதா என்ற எண்ணம் சில தினங்கள் தோன்றும். இன்று (Aug 18)அதிகாலையும் அந்த எண்ணம் உதிக்க யோசித்துப் பார்க்கையில், 9 வருடங்களுக்கு முன் (August 18 1999) எனக்கு இதே நாளில் Voltas வேலை கிடைத்தது ஞாபகம் வந்தது.

August 10, 2008

பிறப்பின் கைதி


இது என்னவோ ராஜேஷ் குமார் நாவலோ என்று நினைத்து விட்டு ஆல்ட்+F4 செய்து விட வேண்டாம். இது ஜெஃப்ரி ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகம். ஆங்கிலத்தில் "The Prisoner of Birth".
இரண்டு வாரங்களாக வீட்டில் ஒரு வேலை கூட செய்யாமல் இந்தியாவின் சொதப்பல் கிரிக்கெட்டைக்கூடப் பார்க்காமல், படித்து முடித்தேன்."தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்; ஆனால் தர்மம் வெல்லும்" இது தான் கதையின் மையக் கரு.

செய்யாத கொலைக்காக டேனியல் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. கொலையுண்டது அவன் காதலியின் தமையன். சட்டம் என் கையில் என்று சொல்லிக்கொண்டு, வில்லன் கோஷ்டி அவன் மீது பழி சுமத்துகிறது. சட்டம் ஓர் இருட்டறை என்றதால் அவனை 20 ஆண்டுகள் சிறைச்சாலையில் அடைக்க தண்டனை விதிக்கப்படுகிறது. சிறையில் நிகோலஸ் மற்றும் பிக் அல் என்பவர்களோடு நட்பு ஏற்படுகிறது. ஆ! என்னைப் போல் ஒருவன் இருக்கிறானே என்று நிக்கோலஸும் டேனியலும் ஆச்சர்யப் படுகிறார்கள். 6 வாரங்களில் பரோலில் வெளியே வரப்போகும் நிகோலஸை டேனியல் என்று நினைத்து இன்னோர் கைதி போட்டுத்தள்ளுகிறான். சிறைக் காவலர்கள் கொலையுண்டது டேனியல் தான் என்று நினைத்துக் கோண்டு அவனது இறுதிச் சடங்கை முடித்து விட்டு, டேனியலை நிகோலஸ் என்று நினைத்து பரோலில் வெளியே விட்டுவிடுகின்றனர். நான் அவனில்லை என்று சொல்லாமல், டேனியலும் வெளியே வந்து விடுகிறான்.

வெளியே வந்த டேனியல், டேனியல் மாதிரி சிந்திக்கவும், நிகோலஸ் மாதிரியும் நடந்து கொள்கிறான்.
தனது சித்தப்பாவிடமிருந்து தனது பூர்வீக சொத்தைக் கைப்பற்றுகிறான். பிறகு தனக்கெதிராகச் சதி செய்தவர்களை பழி வாங்கப் புறப்படுகிறான். இவன் நிகோலஸ் இல்லை, டேனியல் தான் என்று போலீஸுக்குத் தெரியவந்து மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறான். இம்முறை, நிகோலஸின் சொத்துக்களையும் கொள்ளையடித்ததற்காக நிறைய பழி அவன் மீது. இந்த எல்லாப் பழிகளையும் எதிர்கொண்டு எப்படி வெளியே வருகிறான் என்பது மீதிக்க் கதை.

கதையில் திருப்பங்களோ சஸ்பென்ஸொ எதுவும் இல்லாவிட்டாலும் பயங்கர விறுவிறுப்பான கதை. எந்தவொரு மசாலா ஐட்டங்களும் இல்லை. எல்லோருமே உண்மையைச் சொல்பவர்கள். வில்லனைத் தவிர. இவன் தான் வில்லன். இவன் தான் கொலை செய்கிறான் என்று முதல் அத்தியாயத்திலேயே ஆசிரியர் சொல்லி விடுகிறார். இருந்தாலும் அதை எப்படி டேனியலும் அவனுக்காக வாதாடும் வக்கிலும் அதை நிரூபிக்கிறார்கள் என்பது தான் கதையின் ஹைலைட். டேனியலுக்காக அவனது வக்கீலின் அப்பா கடைசியில் வில்லனைப் போட்டு குறுக்கு விசாரணை செய்வார். அந்த அத்தியாயங்களை இன்னொரு முறை படிக்க வேண்டும். வில்லனும் ஒரு தேர்ந்த வக்கீல். அவனை உண்டு இல்லை என்று பண்ணி விடுகிறார்.

நிகோலஸாக இருந்து அவனது சொத்தை அபகரிக்க முயன்ற குற்றத்திற்காக டேனியலை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் போது, அவனது பழைய கதைகளெல்லாம் நோண்டக்கூடாது என்று நீதிபதி முதலிலேயே சொல்லிவிடுவார். இதை நினைத்து வில்லன் கோஷ்டி பூரிப்படைய, பழைய குற்றத்தைப் பற்றி பேசாமல் இந்த வழக்கில் எப்படி வாதாடுவது என்று டேனியலின் வக்கீல் முழிக்க அப்போது தனது வாத சாதுர்யத்தால் வக்கீலின் அப்பா, பழைய வழக்கை இந்த வழக்கோடு சம்பந்தப்படுத்தும் இடம் அவ்வளவு அழகு.

மொத்த கதையிலும் எல்லோரும் ஒரு மாதிரியான Mind Game விளையாடுகிறார்கள். எந்த வித ஆக்ஷனோ கார் சேஸிங்கோ இல்லாமல் கதை தெளிந்த நீரோட்டமாகப் பயணிக்கிறது.

கதையில் எனக்கு இன்னும் பிடித்த ஒரு பாத்திரம், ஸ்டாம்ப் கலெக்டராக வரும் ஒரு அமெரிக்கர். மனிதர் இரண்டு அத்தியாங்களே வந்தாலும் பிச்சு உதறுகிறார். இவரின் பாத்திரப் படைப்புக்காக ஆர்ச்சர் செய்திருக்கும் ஆராய்ச்சி வியக்க வைக்கிறது. ஆர்ச்சரின் முந்தைய படைப்புகளான Sons of Fortune, Prison Diary எல்லாவற்றையும் விட இது ரொம்பவே ஸ்வாரஸ்யமானதொரு கதை. புத்தகப் பிரியர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டியதொன்று.

August 04, 2008

எங்கே என் ஜீவனே

அவளை முதன்முதலில் சுனிதாவோடு உடுப்பி கார்டனில் தான் பார்த்தேன். கண்டதும் காதல் என்பார்களே அது இது தானோ? அவள் முகம் என் அகக்கண்ணிலிருந்து மறையவே இல்லை. உறக்கத்திலும் அவள் முகம் தான்.

சுனிதா, என் நண்பனின் கிளாஸ்மேட். பெங்களூரில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறாள். நண்பனின் கிளாஸ்மேட்டாக இருந்தாலும் எல்லோரிடமும் ரொம்ப சகஜமாகப் பேசும் குணம். BTM Layout'ல் 2-3 பெண்களாக ஒரு வீட்டில் இருக்கிறார்கள். என்னைப் பற்றி இன்னும் சொல்லவே இல்லையே. நான் ராஹுல், மென்பொருள் நிறுவனம் ஒன்றில், வேலை பார்ப்பது என்ற போர்வையில் வலைத்தளங்கள் பல மேய்பவன். நானும் BTM Layout'ல் எனது நண்பர்களோடு தான் இருக்கிறேன்.

ஓர் மாலை நேர மழைப்பொழுதில் BTM'ல் உள்ள உடுப்பி கார்டன் ஹோட்டலில் ஒதுங்க நேர்ந்தது. அப்போது தான் சுனிதாவும் அவளும் அங்கே உணவருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

"ஹாய் சுனிதா. சும்மாவா இடியும் மழையுமா பெய்யுது? என்ன தான் வாய்க்கு வைக்க முடியாட்டாலும் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவே? என்ன இது இந்த மாதிரியெல்லாம் ஹோட்டலில் சாப்பிடறே?"

"ஹாய் ராஹுல். இங்க ராகே கூடா கோயிலுக்குப் போயிட்டு திரும்பி வரதுக்கு இவ்வளவு நேரம் ஆயிடிச்சு. மழையும் நல்லா பெய்யுத. எப்போதும் நாங்களே சமைத்துச் சாப்பிட்டு போர் அடிச்சுடிச்சு. அதான்
, ஒரு சேங்ஜ்சுக்கு வெளியில சாப்பிடலாம்னு வந்தோம். நீயும் ஜாயின் பண்ணிக்கிறயா?"
"இல்லைப்பா. You carry on"

நாங்கள் இருவரும் இவ்வளவு பேசும் போது கூட அவள் எங்கள் பக்கம் திரும்ப வில்லை.
"ஆங்க் சொல்ல மறந்துட்டேனே. இவள் எங்க ரூம்ல நியூ என்ட்ரி"
சுனிதா அவளை எனக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது தான் முகத்தை உயர்த்தி ஒரு புன்னகை புரிந்தாள். அப்போது நானும் அவளைப் பார்த்தேன். என் முகத்தின் முன்னே ஓர் மின்னல் வெட்டியது போன்ற உணர்வு.

"விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி

இவ்வுலகம் இருண்ட பின்னும், இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி" என்று வைரமுத்து இவளை வைத்துத்தான் பாடினாரோ?

நேர்த்தியான முகம். நீளமும் அடர்த்தியான கூந்தலைப் பின்னி முன்னால் போட்டிருந்தாள். கடுகளவு சிறியதாகவும் துவரம் பருப்பளவு பெரிதாகவும் இல்லாத ஒரு பொட்டு. அதற்கு மேல் குங்குமமும் விபூதியும் இட்டுக்கொண்டிருந்தாள். கோவிலில் இட்டுக்கொண்டிருப்பாள். வலது மூக்கில் சிறியதாக ஒரு மூக்குத்தி.

நான் அவளிடம் "ஹாய்" என்று சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் என்னை நோக்கி ஒரு புன்னகை புரிந்து விட்டாள். என்னால் அவள் மீது வைத்த பார்வையை விலக்க மனமில்லாமல் சுனிதாவிடமிருந்து விடை பெற்றுச் சென்றேன்.

உன்னைப் பார்த்த பின்பு தான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று இது நாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்

எனக்கென ஏற்கனவே பிறந்தவளிவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
உயிர் சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் இரு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
என்ற பாடல் வரிகள் என்னையறியாமலேயே என் உதடுகள் முணுமுணுத்தன.

இரவு படுத்த பிறகும் அவள் என்னை நோக்கி புன்னகை புரிந்த காட்சி என் அகத்திரையில் ரிபீட் டெலிகாஸ்ட் ஆகிக்கொண்டேயிருந்தது. "சுனிதா அவளை அறிமுகம் செய்யும் போது "எங்கள் ரூமுக்கு நியூ என்ட்ரி" என்று தானே சொன்னாள். அதைத்தவிர வேறெதுவும் சொல்லவில்லையே. அவள் பெயர் கூடச் சொல்லவில்லையே. நானே அவளிடம் ஃபோன் போட்டுக் கேட்கட்டுமா? அது அவ்வளவு நல்லா இருக்காது. அவளைப் பற்றி எப்படித்தான் தெரிந்து கொள்வது?" அவளைப் பற்றிய நினைவிலேயே எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.

மறு நாள் அலுவலத்தில் என்னிக்குமே இல்லாத அளவிற்கு வேலை. முந்தைய நாள் நடந்த எதுவுமே நினைவில் இல்லை. மதியத்திற்கு மேல் சுனிதாவிடமிருந்து மெயில். தங்கிலீஷில் எழுதியிருந்தாள். நண்பர்கள் எல்லோருக்கும் பொதுவாக எழுதியிருந்தாள்.

Hai Friends,
We have a new room mate, who has come to Bangalore in search of a job.
unga company'la vacancy iruntha sollunga.
avaloda resume attach pannirukkeen.
Please forward pannunga.

Sunitha

ஆஹா கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுன்னு சொல்லறது இது தானா என்று மனதிற்குள்ளே சிறித்துக் கொண்டு படிக்கலானேன். மெயிலில் வந்த ரெஸ்யுமைத் திறந்து பார்த்தேன். அவள் பெயர் ஷாந்தி. "அமைதிக்குப்பெயர் தான் ஷாந்தி" என்று பழைய சிவாஜி படப் பாடல் ஞாபகம் வந்தது. பெயருக்கேற்றார் போல் எவ்வளவு அமைதி அவள் முகத்தில்? சொந்த ஊர் மதுரை. OCPM'ல் பள்ளிப் படிப்பு முடித்து விட்டு, M.Sc Computer Science படித்திருக்கிறாள்.

எதற்கும் சுனிதாவைக் கூப்பிட்டு நேற்று பார்த்தவள் தானா என்று கன்ஃபர்ம் பண்ணிக்கோடா கண்ணா என்று மூளை உத்தரவு கொடுக்க, சுழற்றினேன், சுனிதாவின் கைபேசி எண்ணை.
"ஹாய் சுனிதா. இந்த ரெஸ்யூம் நேற்று உடுப்பி கார்டன்'ல உன் கூட இருந்தாளே. அவளோட ரெஸ்யூமா?"
"ஆமாம் ராஹுல். அவளோடது தான். உங்க கம்பனிலதான் நிறைய recruit பண்ணறாங்களே. கொஞ்சம் பார்த்து ஏதாவது செய்யேன்" என்றாள்.
"பண்ணிட்டாப் போச்சு" என்று அவளிடம் சொல்லாமல், "ஓகே. பார்க்கறேன்" என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்து விட்டேன். மீண்டும் ரெஸ்யூமைப் படிக்கலானேன். அதில் அவளுடைய மெயில் ஐ.டி கைப்பேசி எண் எல்லாமே இருந்தது. இருந்தாலும் ஒரு முறை புன்னகைத்த பெண்ணிற்கு எப்படி மெயில் அனுப்புவது. ஐடியா, அவள் ரெஸ்யூமை கம்பனி இன்ட்ரா நெட்டில் upload செய்தேன். ரெஸ்யூமை உள்வாங்கிக்கொண்ட கம்பனி database, "Thank you for referring Miss. Shanthi. Please note down the referral ID and the login password. In case you want to modify your resume in future, you can login using this ID and password" என்றொரு உபரித்தகவல் வேறு கொடுத்தது. எனக்கும் ஷாந்தியின் மெயில் ஐ.டி.க்கும் ஒரு மெயிலும் அனுப்பியது.
அவளுக்கும் மெயில் போயிருக்கிறதென்பது எனக்குத்தெரிந்திருந்தாலும், அவள் மெயில் ஐ.டி.க்கு இந்தத் தகவலை ஃபார்வார்ட் செய்தேன், அவளிடமிருந்து ஒரு தாங்க்ஸ் மெயில் ஒன்று வரும் என்ற எதிர்பார்ப்பில்.
அன்று மாலை தான் அவளிடமிருந்து மெயில் வந்தது. எழுதியிருந்தது நாலே நாலு வார்த்தை தான்.

Thanks for referring

Shanthi
அவ்வளவு தான்.

ச என்னடா இது. "நம்மளை இவ்வளவு பெரிய கம்பனியில் ரெஃபர் பண்ணியிருக்கானே. எக்ஸ்ட்ராவா ஒரு நாலு வார்த்தை எழுதலாமே"ன்னு இந்தப் பொண்ணுக்கு நினைப்பு வந்திருக்கா. இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான்பா என்று பொறுமிக்கொண்டேன். அவளைக் கூப்பிடலாமா வேண்டாமா. சுனிதாவிற்குத் தெரிந்து விட்டால் என்னை ஓட்ட ஆரம்பித்துவிடுவாள். அவளிடம் எப்படிப் பேசத் தொடங்குவது? இந்த எழவெடுத்த கம்பனில ஷாந்தி ரெஸ்யூம் மாதிரி ஓராயிரம் ரெஸ்யூம் இருக்கும். இவளுக்கு எப்போது இன்டர்வியூ வந்து எப்போது இவளிடம் மறுபடியும் பேச?

அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
மறந்திருக்க மனமும் ஒத்து வரவில்லை.
என் ஜீவனையே அவளோடு எடுத்துச் சென்று விட்டாள் அவள்.
"எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னைத் தந்தேனே"
என்ற உயர்ந்த உள்ளம் பாடல் தான் ஞாபகம் வந்தது.

சில நாட்கள் அவள் ஞாபகம் இருந்தது. இன்னொரு நாள், சுனிதாவை மீண்டும் சந்திக்கலானேன். இப்போது ஷாந்தி அவள் கூட வந்திருக்கவில்லை. ஷாந்தியைப் பற்றிக் கேட்கலாமா வேண்டாமா என்று மனதிற்குள் ஒரு பட்டி மன்றமே நடந்தது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹே உன் ஃப்ரண்டு வேலை தேட்டிட்டு இருந்தாளே, ஏதாவது கிடைத்ததா?" என்றேன்.
"அவள் போன வாரம் தான் சென்னையில் வேலை கிடைத்துப் போய் விட்டாள்" என்று பதில் சொன்னாள் சுனிதா.
என் மனதிற்குள் வெடித்த எரிமலையை யாராலும் பார்த்திருக்க முடியாது. அது ஏற்படுத்திய தாக்கத்தை என்னைத்தவிற யாரும் உணர்ந்திருக்க முடியாது. ஏமாற்றத்தை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் அங்கேயிருந்து நகர்ந்து விட்டேன்.

சில நாட்கள் என் மனதினுள்ளே வாடகைக்கு இருந்து விட்டு,
இன்று இதயத்தையும் திருடிச் சென்று விட்டாள்

"சரி, நமக்குக் கொடுத்து வச்சது அவ்வளவு தான்" என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.

சில மாதங்களுக்குப் பிறகு, அம்மாவிடமிருந்து ஃபோன். "ராஹுல், உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கோம்"
"அம்மா ஆரம்பிச்சுட்டியா, அதே பல்லவியைப் பாட?"
"டேய், இந்தப் பொண்ணை பார்த்தே, நீ உடனே சரின்னு சொல்லிடுவே"
"அம்மா! ஏம்மா படுத்தறே. இப்போ எனக்கெதுக்கு கல்யாணம்?"
"நீ எவளையாவது இழுத்துட்டு வரதுக்கு முன்னாடி நாங்க உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறது better. பொண்ணுக்கு சொந்த ஊர் மதுரை. இப்போ சென்னையில் வேலை பார்க்கறாளாம். பொண்ணு பெயர் ஷாந்தி"

"என்னது??"