Pages

January 13, 2011

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை

பொங்கல் நல்வாழ்த்துக்கள். மூன்று மாதங்களுக்கு முன்பே தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

இந்த ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் வந்ததும் வந்தது, வெட்டிவம்பை கவனிப்பதற்கு நேரமே இல்லை. நேரம் இல்லை என்று சொல்வதை விட பொறுமை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 10 ஒரு மார்க் கேள்விகள் அல்லது ஒரு 10 மார்க் கேள்வி என்று வினாத்தாளில் இருந்தால், நாம் எதைத் தேர்ந்தெடுப்போம். அப்படித் தான் இருக்கிறது பிளாக் Vs. ஃபேஸ்புக் /ட்விட்டர். ஹேமநாதர் பாகவதர் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால், “என்னடா இது மதுரைக்கு, சாரி, பிளாகுக்கு வந்த சோதனை” என்று தான் சொல்ல வேண்டும். சும்மா மாஞ்சு மாஞ்சு பத்தி பத்தியா எழுதறதுக்குப் பதிலா, ஓரிரு வரிகளில் ட்விட்டுவது வசதியாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் எனது வாசகக் கண்மணிகள் (!!!!????) கேட்டுக்கொண்டதற்கிணங்க அவ்வப்போது வெட்டிவம்பையும் கவனிக்கலாம் என்று தீர்மானம் செய்திருக்கிறேன். :)

ட்விட்டரால் ரொம்பவே பாதித்திருப்பதால், அதே ஸ்டைலில் இந்த மொக்கைப் பதிவும்:

போன வருடம் கடைசி ஒரு வாரம் முழுக்க கம்பெனி அடைப்பு. 9 நாட்கள் வீட்டிலேயே இருந்து, உண்டு உரங்கியதில் 2 சுற்று பெருத்துவிட்டேன் என்று காயத்ரி பொரும ஆரம்பித்துவிட்டாள்.

பத்து நாள் விடுமுறையில் இரண்டு மூன்று புத்தகங்கள் படிக்க முடிந்தது. மிகவும் கவர்ந்தது, ஆண்ட்ரூ சோர்கின் எழுதிய “Too Big to Fail" என்ற புத்தகம். சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் பொருளாதாரப் பற்றாக்குறையை அந்த அரசு எப்படி எதிர்கொண்டது என்பது பற்றிய புத்தகம். ஒரு நாவல் போல திகிலுடனே ஆசிரியர் கொண்டுசென்றது அவ்வளவு நேர்த்தி. லேண்ட்மார்கில் கிடைக்கிறது. இந்தியாவில் இது போன்றதொரு பற்றாக்குறை ஏற்படாமலிருக்க ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியிருக்கும் நெறிமுறைகள் பாராட்டுக்குறியது.


போன வாரம் சென்னைப் புத்தகக் கண்காட்சி போயிருந்தேன். நல்ல கூட்டம். புத்தகம் படிப்பதில் இவ்வளவு பேர் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாயிருக்கிறது!

டெஸ்ட் தொடரைத் தட்டித் தடுமாறி ஒரு மாதிரி சமன் செய்து விட்டோம். கடைசிப் போட்டியில் தெனாப்பிரிக்காவை தோற்கடித்திருக்கலாம். ஏனோ கோட்டை விட்டுவிட்டோம்.

துக்ளக் ஆண்டு விழாவுக்குப் போகணும் என்று ஆவலாயிருந்தேன். சில வேலைகள் வந்ததால் போகமுடியவில்லை. கலாகேந்திரா சார்பாக இணையத்தில் வெப்காஸ்ட் செய்கிறார்கள் என்று தெரிந்ததும், வீட்டிலேயே உட்கார்ந்து திரு. சோ மற்றும் திரு.குருமூர்த்தி அவர்களது உரைகளைக் கேட்க முடிந்தது. திரு. சோவுக்கு இருக்கும் தில்லும் தைரியமும் வேறெந்த பத்திரிகையிடம் இருக்கிறது எனத் தெரியவில்லை. காலை 11 மணியிரிருந்தே மக்கள் வந்திருந்தார்களாம். கூட்டத்தில் எஸ்.வி.சேகரும் இருந்தார். கருணாநிதியை வாரும் போது என்ன நினைத்துக் கொண்டாரோ? வரும் தேர்தலில், எந்தக் கட்சியிலிருந்து போட்டியிடுவார், தெரியவில்லை.

பல கசமுசாக்களுக்குப் பிறகு இந்த வருடம் ஐ.பி.எல் நடக்குமா என்பதே சந்தேகமாயிருந்தது. நடுவில் என்ன நடந்ததோ தெரியவில்ல, போன வாரம் 10 அணிகள் வீரர்களை குதிரைகளுக்கு நிகராக பேரம் பேசினார்கள். கௌதம் கம்பீர் தான் இந்த வருடத்திய விலையுயர்ந்த வீரர். இவரை விலை பேசிய ஷாருக்கான் அணிக்கு இன்னும் சனிதிசை விட்ட பாடில்லை போலிருக்கு. அவருக்குக் கைக்கட்டில் அடிபட்டு தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி விட்டார்.

நாளையோடு (ஜனவரி 16) சென்னைக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. காலம் தான் எவ்வளவு விரைவாகப் பறக்கிறது?

October 26, 2010

எந்திரன் சொதப்பல்கள்

நீங்கள் ஒரு தீவிர ரஜினி ரசிகர் எனில் மேற்கொண்டு படிக்க வேண்டாம். இந்தப் பதிவு உங்களைப் புண்படுத்தும். ஏன் என் மீது பயங்கர கோபமும் வரும். வரலாம் என்று ஆரூடம் கூறவில்லை. வரும் என்றே கூறுகிறேன். எந்திரன் என்ற சொதப்பல் படத்தைப் பார்த்து விட்டு இந்தப் பதிவை எழுதுகிறேன். படத்தில் பல லாஜிக்கல் ஓட்டைகள். அப்படியும் படித்தே தீருவேன் நீங்கள் எண்ணினால், ஒரு டிஸ்கி. எனது ஆற்றாமை எந்திரத்தின் படம் மீது தானே தவிர ரஜினியோ அவரது நடிப்பு மீதோ அல்ல.

சொதப்பல் # 1:
என்னதான் கண்ணிலேயே ஸ்கானர் இருந்தாலும் ஒரு புத்தகத்தின் அட்டையைக் கூடப் பிரிக்காமல் ஒரு ஆட்டு ஆட்டி விட்டு அதையெல்லாம் கிரகித்துக் கொள்ள முடியவே முடியாது. இல்லை புத்தகத்தின் பெயரை மட்டும் படித்து விட்டு அந்த புத்தகத்தை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளப்பட்டதா? அதையும் சொல்லவில்லை. சொதப்பணும் என்று முடிவெடுத்தாச்சு, அப்புறம் எப்படிச் செய்தால் என்ன?

சொதப்பல் # 2:
பறக்கவேண்டுமென்றால் இறக்கைகள் அவசியம். அவையில்லாமல் பறக்கவே முடியாது. இல்லை கற்றை கீழே அழுத்த தலைக்கு மேல் ஒரு காற்றாடியாவது வேண்டும். இவையெதுவும் இல்லாமல் பறக்கவே முடியாது. ஆனால் இது எதுவுமே இல்லாமல் சிட்டி பறந்து பறந்து தீயில் அகப்பட்டவர்களை காப்பாற்றுகிறது.

சொதப்பல் # 3:
ஒரு இயந்திரத்திற்கு அறிவு புகட்டப்பட வேண்டுமெனில் அதற்கு மென்பொருள் தான் அறிவு புகட்டப் பட முடியும். மனித உணர்வுகளை அறிந்து கொள்வதற்கு ஸைகாலஜியை ஒரு மாதிரி பென்பொருளாக்கி விட முடியும். கொஞ்சம் சிரமம் இருந்தாலும் செய்யலாம். ஆனால் ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவது போல் செய்வது ரஜினி / ஷங்கரால் மட்டுமே முடியும்.

சொதப்பல் # 4:
வில்லனான பிறகு சிட்டியே, Upgraded version 2.0 என்று கூறுகிறது. அப்படியெனில் உண்ர்வுகளற்ற சிட்டி version 1.0. உணர்வுகளுள்ள சிட்டி ver 1.1. உணர்வுகள் வந்த சிட்டியை வசீகரனுக்குப் பிடிக்கவில்லையா, உணர்வுகளற்ற சிட்டியின் வெர்ஷனுக்கு டவுன்கிரேட் செய்திருக்கலாம். அதை விடுத்து அதை அழித்திருக்க வேண்டாம். அதன் பிறகு வில்லன் கோஷ்டியோ சந்தானம் / கருணாஸ் கோஷ்டியோ மீண்டும் வெர்ஷன் அப்கிரேட் அஎய்வது போல் காட்டியிருக்கலாம். முன் வரிசையில் உட்கார்ந்து விசிலடிக்கும் மக்களுக்கு இதெல்லாம் புரியாதே என்ற நினைப்பை கூட ஒரு மாதிரி வசனம் எழுதி சரி செய்து விடலாம்.

சொதப்பல் # 5:
ஹாலிவுட்டில் வேலை பார்த்த வல்லுனர்கள் தான் இந்தப் படத்தில் கிராஃபிக்ஸ் செய்திருக்கிறார்களாம். டாம் & ஜெர்ரி கூட இதை விட நன்றாக இருக்கும். கிராஃபிக்ஸ் கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை.

சொதப்பல் # 6:
க்ளைமாக்ஸில் எந்திரங்களெல்லாம் கை கோர்த்துக் கொண்டு பல ஸ்வரூபங்கள் எடுக்கின்றன. ஏதோ விட்டலாசாரியார் படம் பார்ப்பது போன்ற உணர்வு தான் ஏற்படுகிறது.

சொதப்பல் # 7:
மாச்சு பிச்சு என்ற அருமையான இடத்தில், ரசனையற்ற ஒப்பனையோடு ரஜினி / ஐஷ்வர்யாவை ஆடவிட்டது இன்னொரு பெரிய சொதப்பல். அந்த இடத்தில் ஒரு சண்டைக் காட்சியாவது வைத்திருக்கலாம்.

சுஜாதா இல்லாத குறைகள் படம் நெடுக தொடர்ந்து கொண்டே இருந்தன. அவர் இருந்தால் இம்மாதிரியான சொதப்பல்கள் நேர்ந்திருக்க விட மாட்டார் என்று நம்புகிறேன். ஏற்கனவே ராவணன் படத்தில் அவர் இல்லாததால் சுஹாசினியின் வசனங்கள் பல் இளித்தன. மணிரத்னம் திரைக்கதையில் ஓட்டை எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

நல்ல வேளை கமல்ஹாசனும் ஷாருக் கானும் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இவ்வளவு (டெக்னா)லாஜிகல் சொதப்பல்கள் நிறைந்த படத்தில் அவர்கள் நடிக்காமல் இருந்ததே நல்லது. ஆனால் எல்லா சொதப்பல்களையும் தாண்டி படம் நகர்வது, அல்லது நகர்த்திச் செல்லும் விசை, என்றால் அந்த விசையின் பெயர்ரஜினி. பல படங்களுக்குப் பிறகு மனிதர் பின்னி பெடலெத்திருக்கிறார். டயலாக் டெலிவரி அவ்வளவு நேர்த்தி. வசீகரனாகட்டும், சிட்டி 1.0 ,வில்லன் சிட்டி, எல்லா இடத்திலும் அவரது வசங்களும் பாடி லாங்குவேஜும் தான் “படத்தை எப்போடா முடிக்கப் போறாங்க” என்ற எண்ணம் ஏற்படாமல் காப்பாற்றுகிறது.

ஆனால் கதை திரைக்கதையை நம்பாமல் ஒரு தனிமனிதரின் கரிஸ்மாவை மட்டுமே நம்பிப் படம் எடுப்பது தமிழ் சினிமாவின் போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். இது சினிமாவுக்கு ஆரோக்கியமானதுமல்ல. இதனால் சிம்பு, விஜய் விஷால் போன்ற துக்கடாக்கள், தாங்கள் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற மமதையில், கதை திரைக்கதையை நம்பாமல் தம் மீது ஓவர் கான்ஃபிடெண்ட் ஆகி, கேவலமான படங்கள் தருகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் ஏன் எந்திரனின் வசன குறுந்தகடு ரிலீஸ் செய்யவில்லை? அதை மட்டும் போட்டுக் கேட்டால் பாடல்களை விட அவை நன்றாயிருக்கும்.

July 31, 2010

கணவன் மனைவி கணினி

சக்தியில்லையேல் சிவமில்லை; சிவமில்லையேல் சக்தியில்லை.
ஆபரேடிங்க் சிஸ்டம் இல்லையேல், அப்ளிகேஷன் இல்லை.
அப்ளிகேஷன் இல்லையேல், ஆபரேடிங்க் சிஸ்டத்துக்குப் பயனில்லை.
ஆபரேடிங்க் சிஸ்டம் சிவம். அப்ளிகேஷன் சக்தி.

அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் புல்லரித்துப் போவது நிச்சயம்
பக்கத்தில் அரிப்பு மாத்திரை வைத்துக் கொள்வது உசிதம்.

அப்பா, எதுகையும் மோனையும் போட்டுத் தாக்கும் புல்லரிக்குதே !!

புல்லரிக்கும் அனுபவம் ஏற்படுவதற்கு, கணினியும் அது சார்ந்த சில கலைச் சொற்கள் பற்றி ஒரு சிறு பாடம் நடத்தி விடுகிறேன்.

எந்த கணினியிலும் ஹார்ட்வேர் சாஃப்ட்வேர் என்று இரண்டு வேர்கள் இருக்கும் என்பது கருவில் இருக்கும் குழந்தைக்குக் கூட தெரிந்து விட்டது. அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. இந்த சாஃப்ட்வேர் பற்றி மட்டும் பார்ப்போம்.

கணினியை வாஞ்சையோடு அழுத்தினால், விண்டோஸ் (Windows) என்று ஒன்று ஓடுகிறதே, அதன் பெயர் ஆபரேடிங்க் சிஸ்டம்(Operating System OS) (இயக்கு தளம்). இந்த சாஃப்ட்வேர் தான், கணினியின் அஸ்திவாரம். இது ஆட்டம் கண்டுவிட்டால், கணினியே ஆட்டம் கண்டு விடும்.

ஆனால் இந்த ஆபரேடிங்க் சிஸ்டம் மட்டுமே இருந்தால், அந்தக் கணினி காலணா காசுக்குப் பிரயோசனப் படாது. அதன் மீது செலுத்தப்படும் வோர்ட், எக்ஸல், பவர் பாயிண்டு, பிரௌசர், மீடியா பிளேயர் இவையெல்லாம் தான் கணினிக்கு கண் காது மூக்கு நாக்கு போன்றவை. இவைகளுக்கு அப்ளிகேஷன் (செயலி) என்று பெயர். இந்தச் செயலிகள் இல்லாத இயக்கு தளம், உயிரற்ற பிரேதம் மாதிரி. ஆனால், இயக்கு தளம் இல்லாத செயலிகளை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அவை உடலற்ற பேய்கள் மாதிரி.

ஆக ஒரு கணினி சீராகச் செயல் பட வேண்டுமென்றால், பிரேதம் போன்ற இயக்குதளமும், பேய்கள் போன்ற செயலிகளும் அவசியம் வேண்டும். இது வரை ஓரளவு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இந்த ஆபரேடிங்க் சிஸ்டம் (இயக்கு தளம்) இருக்கிறதே, அது ஒரு வீட்டுல கணவன் மாதிரி. இந்த அப்ளிகேஷன் (செயலிகள்) எல்லாம் இருக்கே, அதெல்லாம் மனைவி மாதிரி. கணினி ஒரு குடும்பம் மாதிரி.

ஒரு செயலி இயங்குவதற்கு விண்டோஸ், லினக்ஸ் (Linux) போன்ற இயக்கு தளம் தேவை. இந்தச் செயலிகளெல்லாம் ஓடுவதற்கு, முக்கியமானது மெமொரி (RAM). அதைக் கொடுப்பது இந்த இயக்கு தளங்கள் தான். மனைவிகள் சந்தோஷமாக இயங்குவதற்கு முக்கிய தேவை, பணம். “கதவைச்சாத்தடி. கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி” என்று சிறு வயதிலிருந்தே பெண்கள் புத்தியில் புகுத்தப் பட்டிருக்கிறது. இந்த கணவன் என்ற இயக்கு தளம் தான், செயலி என்ற மனைவியின் மெமொரி தேவையை பூர்த்தி செய்யும். எப்போ கேட்டாலும் கொடுக்கணும்.

சில இயக்கு தளங்கள் ரொம்ப கெட்டிகாரத்தனமாக இருக்கும். இந்தச் செயலிகள் அப்பப்போ வந்து நொய் நொய்யென்று இன்னும் கொஞ்சம் மெமொரி தா, என்று கேட்டுக் கொண்டே இருக்கும். அதனால் முதல் முறை கேட்கும் போதே, “சும்மா
வந்து வந்து தொந்தரவு பண்ணாதே. இந்தாப் பிடி. தொலை” என்று சொல்லி கேட்டதை விட நிறையவே கொடுத்து விடும். சில கணவன்மார்களும் இப்படித்தான். சும்மா சும்மா அவர்களிடம் பணம் கேட்டால் பிடிக்காது. முதல் முறை கேட்கும் போதே, கேட்பதை விட அதிகமாகக் கொடுத்து தன்னை தொந்தரவு செய்யாத படி பார்த்துக் கொள்வார்கள்.

சில சமயம் கணினி அப்படியே ஸ்தம்பித்துப் போனதொரு நிலைமையைப் பார்த்திருப்பீர்கள். அது வேறொன்றுமில்லை. கணவன் என்ற இயக்குதளம் இயங்குவதை சற்று நேரம் நிறுத்தியிருக்கும். இயக்கு தளம் நின்று போதற்கு எல்லோரும் அதைத்தான் குற்றம் சொல்வார்கள். ஆனால், இயங்காமல் நின்றதற்கு பெறும் காரணம், மனைவி என்ற இந்தச் செய்லிகள் தான் என்று நிறைய பேருக்குத் தெரிவதில்லை.

கணவன் என்ற இயக்கு தளம் சில விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இயங்குகிறது. இந்த விதிமுறைகள் மனைவிகளான செயலிகளுக்கும் தெரிந்து தான் இருக்கின்றது. “இப்படிச் செய்யாதே” என்று கணவன், சாரி இயக்குதளம் உத்தரவு போட்டால், “நீ என்ன எனக்குச் சொல்வது. நான் இப்படித்தான் செய்வேன்” என்று மனைவியென்ற செயலிகள் அகம்பாவத்துடன் நடந்துகொள்ளும் போது பாவம் கணவன், ஐ மீன் இயக்குதளம் என்ன தான் செய்ய முடியும்? தன் வேலையையும் செய்யாமல் செயலியின் தேவையையும் பூர்த்தி செய்யாமல் சும்மா இருந்துவிடுகின்றன. அதனால் குடும்பம் என்ற கணினியும் ஸ்தம்பித்து விடுகிறது.

பல நேரங்களில் இந்தச் செயலிகளின் தேவை பணம் போன்ற மெமொரி. பாவம் இயக்கு தளத்தினால் எவ்வளவு தான் தர முடியும். ”உன்னுடையது பேராசை”, என்று மனைவி என்ற செயலியிடம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் மேலும் மேலும் கேட்டால், இல்லாத மெமொரியை (பணத்தை) எங்கிருந்து கொண்டு வர முடியும். செயலி இயக்குதளத்தின் விதிகளை மீற, இயக்குதளம் ஸ்தம்பிக்கிறது.

இது யார் குற்றம்? இது தான் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று சொல்வது. செயலியின் பேராசை தான் காரணமென்றாலும், தான் ஸ்தம்பித்ததற்கு செயலிதான் காரணம் என்று காட்டிக் கொடுக்கமாட்டான். பெருந்தன்மையுடையவன், தன் மீது தான் பழி, இயக்குதளம் தான் ஏதோ தவறு செய்துவிடடது என்று வெளியுலகிடம் பிரகடனப் படுத்திக் கொள்வான்.

கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும், நிலமை மோசமாயிருப்பது மனைவி என்ற செயலியால் தான் என்று. பல நேரங்களில் மனைவிமார்கள் ரெஸ்பான்ஸ் எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இந்த கணவன் என்ற இயக்குதளமும் விடாக்கொண்டன் தான். மனைவி என்ற செயலி மூட் அவுட் ஆகியிருந்தாலும், ஒன்றுமே நடக்காதது மாதிரி ஆளேயில்லாத கடையில் டீ ஆற்றுவது மாதிரி தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

இருந்தாலும் இந்த லினக்ஸ் போன்ற இயக்குதளங்கள் கொஞ்சம் சாமர்த்தியமான கணவர்கள். செயலி என்ன தில்லு முல்லு செய்தாலும், அவர்கள் போக்குக்கே போய் அவர்களை சந்தோஷப் படுத்துவார்கள். வெளியுலகிற்கு அந்தக் குடும்பம், ஐ மீன், அந்தக் கணினி சீராக இயங்குவது போல் இருக்கும். ஆனால் அம்மாதிரியான குடும்பங்களைக் காண்பதரிது.

மனைவிக்கு தீடீரென்று ஒரு ஆசை வரும். ஆகாசத்தையே ஏட்டிப் பிடிக்கணும் என்பாள். கணவனுக்கு வேறு வழியே இல்லை. அவளது ஆசையை பூர்த்தி செய்தேயாக வேண்டும். பாவம் தன் ஆசையை கணவன் எப்படி நிறைவேற்றுவான் என்பது பற்றியெல்லாம் மனைவிக்கு அக்கறையில்லை. தன் ஆசை நிறைவேறணும். அவ்வளவு தான்.

இந்த இயக்கு தளமும் ஒரு கணவனைப் போல் தான் இப்போது செயல் படும். செயலி என்ற மனைவி திடீரென்று தான் இயங்க வேண்டும் என்று ஆசை வைப்பாள். “மனைவியின் ஆசையை எப்படி நிறைவேற்றினேன் என்று கணவன் சொல்ல மாட்டானோ (மனைவிக்கும் அது பற்றி அக்கரையில்லை என்பது வேறு விஷயம்)” அது மாதிரி தான் இயக்குதளமும் relocatable address என்ற விதியின் மூலம் செயலி இயங்க வழி வகுப்பான்.

சில சமயம், குடும்பத்தில் பணம் நிறைய இருக்காது. மனைவிக்கோ கணவன் சம்பாதிப்பதை விட அதிகம் தேவை. எந்தக் கணவனுக்குத்தான் மனைவியிடம் போய், “என்னிடம் பணம் இல்லை. சிக்கனமாக இரு” என்று சொல்ல தைரியம்?

பணம் இல்லாவிட்டாலும் இருப்பது போல் ஒரு பாவலா காட்டுவார்கள். அது மாதிரி தான் இந்த இயக்கு தளங்களும். என்ன தான் வைப்பு நிதி என்ற மெமொரி இருந்தாலும் விர்ச்சுவல் மெமொரி (virtual memory) என்ற இல்லாத மெமொரியை இருப்பது போல் காட்டி, செயலிகள் எவ்வளவு கேட்டாலும் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

”அப்ப கணினியை வைரஸ் அடிக்கறதெல்லாம்?”

இந்த வைரஸ் சமாசாரமெல்லாம் கில்மா பார்டி மாதிரி. தொட்டா சுடும்னு தெரிந்தும் அதைத் தொட்டுத் தவிக்கறதில்லையா? அது மாதிரி, கில்மா பார்டியிடம் போனால் ஆபத்து என்று தெரிந்தும் விண்டோஸ் போன்ற இயக்குதளங்கள், வைரஸ்களை அணைத்துக் கொள்கின்றன. தானும் கெட்டு குடும்பத்தையும் கெடுத்துவிடுகின்றன இந்த கில்மா பார்டி. ஆனாலும் லினக்ஸ் போன்ற ஸ்டெடி இயக்குதளங்கள் இந்த கில்மா பார்டிகளிடம் மாட்டிக் கொள்வதில்லை.

July 25, 2010

பாத்திரங்களுக்காக ஒரு கதை

கதையை விட சில கதாபாத்திரங்கள் நம் மனதில் வேறூன்றி நிற்பார்கள். வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன், குந்தவை போன்ற பாத்திரங்கள் அப்படிப்பட்டவை தான். அந்தப் பாத்திரங்களே கதையை நடத்திச் செல்வார்கள். கதையைவிட அந்தப் பாத்திரங்களுக்காகவே கதையைப் படிப்போம். அப்படிப்பட்ட பாத்திரம் தான் ஹோவார்ட் ரோர்க் (Howard Roark). அய்ன் ராண்ட் (Ayn Rand) 1930’களில் எழுதிய ஃபவுன்டெய்ன் ஹெட் (The Fountain Head) கதையின் நாயகன்.

“தான் செய்வது சரிதான்” என்ற எண்ணம் படைத்த மனிதன் ஹோவர்ட். அவன் ஒரு ஆர்கிடெக்ட். ஒவ்வொரு கட்டிடத்துக்கும் ஒரு உபயோகம் (purpose) உண்டு. அந்தக் கட்டிடம் அந்த உபயோகத்துக்காகத்தான் நிர்மாணிக்கப் (designed to achieve a purpose) பட வேண்டுமே தவிர, சும்மா ஒரு நிர்மாணியின் கலைத்திறனைக் காட்டுவதற்காக அல்ல என்று நம்புபவன். இவனது கொள்கையை ஏற்காமல், அவனைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றுகிறார்கள். சிறிதும் கவலைப் படாமல், தன்னைப் போல் எண்ணம் கொண்ட இன்னொரு நிர்மாணியிடம் போய் வேலைக்குச் சேர்கிறான். பெருவாரியான கட்டிட நிர்மாணிகள், இவர்களை வெறுக்கிறார்கள். இவர்களையும் நம்பி சில வாடிக்கையாளர்கள் இவர்களிடம் வருகிறார்கள். சிலருக்குப் பிடிக்கிறது, சில பேருக்குப் பிடிப்பதில்லை.

ஹோவார்டின் கொள்கைகளிலும் கட்டிடங்களையும் அங்கீகரிக்கும் ஒருவர், சாரி! ஒருத்தி இருக்கிறாள். டொமினிக் ஃப்ராங்கன் (Dominique Francon). எங்கே தான் மிகவும் விரும்பும் பொருளுக்கு அடிமையாகிவிடுமோ என்ற எண்ணத்தில், தான் விரும்பும் பொருளிடமிருந்தே தன்னை தூரப்படுத்திக்கொள்ளுபவள். கொஞ்சம் வினோதமான பாத்திரப் படைப்பு தான் ஹோவார்ட் ரோர்கின் கட்டிடங்கள் மீதும், அவன் கொள்கைகள் மீதும் ஈர்பு ஏற்பட்டவளுக்கு, அவன் மீதும் ஈர்ப்பு ஏற்படுகிறது. இருந்தும் தான் விரும்பும் பொருள்களிலிருந்து தன்னை அன்னியப்படுத்திக் கொள்ளும் டொமினிக், ஹோவர்டின் எதிரியையே மணக்கிறாள். கொஞ்சம் வினோதமாக இருந்தாலும், அவள் அப்படிச் செய்வது, ஹோவார்டின் எதிரியை வீழ்த்தத்தான் என்பது பிற்பாடு தெரிகிறது.

பிறரின் தயவிலேயே பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆவலுடன் இன்னொரு பாத்திரம், பீடர் கீடிங். ஹோவர்டின் நண்பனாக இருந்தாலும், அவனை தொழில் ரீதியாக, ஹோவார்டை தோற்கடிக்க வேண்டும் என்று எண்ணுபவன். இவனைத்தான் டொமினிக் மணக்கிறாள்.

தனது கொள்கைகளிலிருந்து இம்மியளவும் நகராமல் ஹோவார்ட் எப்படி வெற்றி காண்கிறான் என்பது தான் மீதிக்கதை.

கீழே போட முடியாமல் ஒரே மூச்சில் பல புத்தகங்கள் படித்திருந்தாலும், அடுத்த புத்தகத்தை எடுத்ததுமே, பழைய புத்தகத்தில் வந்த பாத்திரங்கள் மனதிலிருந்து மறைந்துவிடுகிறார்கள். ஃபவுண்டெய்ன் ஹெட் படித்து பல நாட்களாகியும், ஹோவார்ட் ரோர்க், டொமினிக் ஃப்ராங்கன் மனதில் நிற்பதற்கு, கதையை விட அந்தப் பாத்திரங்களின் படைப்பு தான் காரணம் என்று நம்புகிறேன்.

ஓரிரு முறை சில பக்கங்கள் படித்துவிட்டு, “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று இந்தப் புத்தகத்தைத் தூக்கிப் போட்டுவிட்டேன். அவ்வளவு மெதுவாக நகரும் கதை. கதை என்பதை விட பாத்திரங்களின் கொள்கைப் பிரசாரம் தான் நிறைய இருக்கும். கொஞ்சம் கொட்டாவி விட வைக்கவும் செய்யும். ஆனால் கதையே, 150 பக்கங்களுக்குப் பிறகு தான் சிறிது நகர்வது போல் இருக்கும். “இவன் சொன்னானேன்னு இதைப் போய்ப் படிக்க ஆரம்பித்தேனே, என்னை செருப்பால அடிக்கணும்” என்று மனதிற்குள் நீங்கள் என்னைத் திட்ட நிறைய வாய்ப்புகள் உணடு. புத்தகத்தைப் படிக்க கொஞ்சம் எக்ஸ்ட்ரா பொறுமை தேவை. இது மற்ற நாவல்களைப் போல் இல்லை என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.

ஹோவார்ட் ரோர்க் தனக்காக கோர்டில் வைக்கும் வாதங்களே 30 பக்கங்களுக்கு மேல் இருக்கும். கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். புரியவில்லை என்றால் மீண்டுமொருமுறை படிக்கவேண்டாம். புத்தி பேதலித்து விடும்.

சூப்பர்ஸ்டார் ஆங்கிலப் படம் நடிப்பதாக இருந்தால், இந்தப் புத்தகத்திலிருந்து நிறைய பன்ச் டயலாக்குகள் சுட்டுக் கொள்ளலாம். அவ்வளவு கொட்டிக் கிடக்கின்றன. இவ்வளவு இருந்தாலும் இப்புதகத்தைப் படிக்க வைத்தது ஒவ்வொரு பாத்திரத்தின் படைப்பும், அவர்கள் தனது கொள்கையில் நின்றதுமே தான்.

டிஸ்கி: “ஏண்டா வெண்ணெய், காந்தி செத்துட்டார்’ன்ற மாதிரி, இம்புட்டு பழைய புத்தகத்தைப் பத்தி இப்போ எழுதியிருக்கே? புத்தகம் படிக்கற யாரும் தவறாது படிக்கற புத்தகம் ஃபவுண்டெய்ன் ஹெட். இதப் பத்தி இப்ப சொல்ல வந்துட்டியே” என்று நீங்கள் நினைத்தால், ரொம்ப மன்னிக்கணும்.

July 23, 2010

நான் யார்? நான் யார்?

“நான் யார் தெரியுமா! நான் யார் தெரியுமா”

“அண்ணன் யார் தெரியுமா?? அண்ணன் யார் தெரியுமா??”

“டேய் சும்மா இப்படியே சௌண்டு விட்டுக்கிட்டு இருக்கீங்கடே, அண்ணனைப் பத்தி எடுத்துசொல்லுங்களேண்டா”

“அண்ணன் பொட்டி தட்டற வேலை செய்யறேன்னு சொல்லிகிட்டு வெட்டியா ஒக்காந்து ஈ ஓட்டிக்கினு இருக்கச்சொல, மொக்கையா யாருக்குமே உபயோகம் இல்லாம ஏதாவது யோசிப்பாரு. யோசிச்சதோட இல்லாம எளுதித் தள்ளுவார். அண்ணனை உசுப்பத்தவே ஒரு பட்டாளம் திரியுது”

அடப்பாவிப் பயபுள்ளேளா, கூட இருந்தே குழி பறிக்கானுவளே.
ஐயா, தற்புகழ்ச்சி நமக்குப் புடிக்காதுங்க. இருந்தாலும் கொலைஞர், சாரி கலைஞர் மாரி நானே சில கேள்வி கேட்டுக்கிட்டு அதுக்கு பதிலும் சொல்லிருக்கேன். உங்க தலையெழுத்து இம்புட்டு தூரம் படிச்சுப்புட்டீக. இன்னும் ஒரு பத்து நிமிஷம் செலவழிச்சு மிச்சத்தையும் படிச்சிருங்க.

“எலேய், சொல்ல வந்தத, சொல்லித் தொலைல்ல..”

இனிமேலும் மொக்கையைப் போடாம, மேட்டருக்கு வாரேன்.

வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
என் நெசப் பேரப் போட்டுத் தான் எழுதுதேன். விஜய்ன்ற பேருல தான் எழுதுதேன். முழுப் பேரு, “விஜய் குமார்”.
என்ன, என் பேர கெடுக்க ஒரு நடிகனும் பொறப்புட்டிருக்கான்னு கேக்கைல தான் வருத்தமா இருக்கு.

அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
எல என்ன எழவு கேள்வி கேக்க? என் பேருல தான் எழுதுதேன். இந்தப் பேரு அம்புட்டு பிரபலம் ஆவாட்டி, பிறவால பொஞ்சாதி பேரப்போட்டு எழுதலாம்’னு இருக்கேன். என்ன சொல்லுதீய?

நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
எல நீ கேக்க கேள்வியே சரியா இல்லை. நான் என்ன கண்ணாணம் கட்டின புதுப் பொண்ணா, காலடி எடுத்து வைக்கறதுக்கு? எல்லாம் தமிழ் படிக்கத் தெரிஞ்ச மக்கா செஞ்ச பாவந்தேன். நான் எழுததையும் படிக்கணும்’னு, சில பேர் தலையில எழுதியிருக்கு.
என்னத்தச் சொல்ல? எதோ மனசுல உள்ளத எளுதணும்’னு தோணிச்சு. காசு கொடுத்து இணையதளமெல்லாம் வாங்க, நமக்கு சரிப்பட்டு வராது. மவராசன், “இனாமாத்தேன் கொடுக்கேன், இங்கிட்டு வந்து எழுது”ன்னு இவனுங்க சொன்னானுங்க. அட, மனசுல உள்ளத எளுதிப் பாப்புமேன்னு, தோணிச்சு, எழுத ஆரம்பிச்சுட்டேன்.


உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எலேய், வாழைப் பழத்துல ஊசி ஏத்துத மாதிரியே, கேள்வி கேக்க்கிதியே?
“எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்”னு ஏதோ படத்துல ஒரு கிறுக்குபய கத்திகிட்டு ஒடுவானே, அது மாதிரி, “நான் பதிவு போட்டிருக்கேன், நான் பதிவு போட்டிருக்கேன்”னு கூவச் சொல்லுதியா??
எதுக்குலே, ஆர்குட்டு, ஃபேஸ்புக்கு, ட்விட்டரெல்லாம் இருக்கு? இங்கிட்டு போடுற மொக்கையெல்லாம், அங்கிட்டு போட்டுருவேன். ஏதோ நாமளும் ஏதோ உருப்படியாச் சொல்லுதோம்’னு நினைச்சு நாலு பயலுவ வந்துட்டுப் போறானுவ.

இன்னும் நிறைய கூட்டம் வரணுமா? தொறந்த வீட்டுல நாய் நொழயற மாதிரி, யார் எதுன்னே தெரியாத ஆள் பதிவுல போயி ஆஹா ஓஹோ’னு எழுத வேண்டியது. முடிஞ்சா அந்தாளு பதிவ ஃபாலோ பண்ணறது. பத்து பேர் கிட்ட இப்படி பண்ணினா, ரண்டாவது தேரும். இப்படித் தான் நாம வாசக வட்டத்த உண்டாக்கறது.
எலேய், இத நான் சொன்னேன்னு, யார்ட்டயும் சொல்லிப்புடாத. பொளப்பு நாறிரும்.வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நாம எழுதறதே சொந்தக் கதை சோகக் கதை தான? நாம பண்ணுன கோமாளித்தனத்தயெல்லாம் எழுதித்தானே பொழப்பே ஓடுது. கற்பனை பண்ணி எழுதினேன்னா, இந்நேரம் 21’ஆம் நூற்றாண்டின் சுஜாதா’வாய்ருக்க மாட்டமா? “நினப்பு தான் பொளப்புக் கெடுக்கும்”னு நினைக்கீயளோ?

நாமும் கதை எழுதலாம்’னு ஒண்ணு ரண்டு கதை எழுதினேன். பாத்துக்க ஒண்ணும் சரிப்பட்டு வரல. எல அதுக்கெல்லாம் ஒரு இது வேணும்’ல சொல்லிக்கிட்டு, மறுபடியும் சொந்தக் கதைக்கே போய்ட்டேன்.நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
நான் வச்சிருக்க பேரைப் பாத்துட்டு நீ இப்படி ஒரு கேள்வி கேக்கலாமா? சொல்லுல கேக்கலாமா? பொழுதே போகாததுனால தானே நான் எழுதுதேன்’ற பேருல மொக்கையைப் போடுதேன்.

நாலு பேத்துக்கு நல்லது பண்ணி அதுனால நாலு காசு வந்தா நல்லாத்தேன் இருக்கும். ஆனா நாம எழுததப் பாத்துப்புட்டு, “அடப் பாவிபயபுள்ளேளா, நாம் இவன் பதிவ படிக்கதுனால, இவன் நாலு காசு பாக்கறாண்டா”ன்னு வவுத்தெரிஞ்சா, அந்தக் காசு நம்மட்ட தங்குமா? வேணாண்டே, வேணாம். பதிவெழுதி நமக்கு காசு வேண்டாம்.


நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
உருப்படியா இது ஒண்ணு தான் போகுது. கிரிக்கெட் ஆர்வக்கோளாறு கொஞ்சம் ஜாஸ்தியகிடுச்சுன்னாலோ, அல்லது நம்ம கிரிக்கெட் ஆட்டக்காரங்களை காய்ச்சணும்னாலோ, சில்லி போயிண்டுன்னு ஒரு பதிவு ஆரம்பிச்சேன். அது அப்படியே போட்டது போட்ட படியே கெடக்கு. ஒரு நா அதுக்கு மறுபடியும் புத்துயிர் கொடுக்கணும்.


மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
ச, நம்மால இவன(ள)ப் போல எழுத முடியலியேன்னு நிறைய பொறாமை உண்டு. இப்படி என்ன தம்பட்டம் அடிக்க வச்ச வித்யா எழுதுதக் கூட பார்த்து பொறாமயா இருக்கும். இவங்கள்’லாம் எழுததப் படிக்கசொல, “வாடி என் கப்பக்கெழங்கே” பாட்டுல ஒரு வரி வருமே, “அதுக்கு ஞானம் வேணும் ஞானம் வேணும்டோய்யா”ன்னு, அது தான் ஞாபகம் வரும்.

சில பேர் பகுத்தறிவு, பைத்தியக்கார அறிவுன்னு சொல்லிகிட்டு, என்ன ஏதுன்னு முழுசா எதையுமே தெரிஞ்சிகிடாம ஏதாவது தத்துப் பித்துன்னு உளறும் போது, அவங்களைப் போய் நாலு சாத்து சாத்தணும்’னும் தோணும்


உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
நாம எழுததப் படிச்சுப்புட்டு இது வரைக்கும் வீட்டுக்கு ஆடோ வராம இருக்கே, அதுவே பெரிய விஷயம் தான். நான் என்ன எழுதினாலும் மொதல்ல என் பொஞ்சாதிக்குப் படிச்சுக் காட்டிருவேன். மொத மொதல்ல நான் காதலிச்ச பொண்ணு பத்தி எழுதிட்டு அவ கிட்ட படிச்சுக் காட்டினேன். அம்மணிக்கு அப்போ இருந்த தமிழறிவுல எம்புட்டு புரிஞ்சதுன்னு தெரியலை. என்னவோ, எழுதியிருக்க, பரவால்ல’ன்னுட்டா.

எங்கம்மாவும் படிப்பாங்க. நல்ல சுருதி சேர்த்து பாடினாக்கூட, சில வித்வான்கள் வாயத் தொறந்து பாராட்டிற மாட்டாங்க. ஒரு தலையாட்டு தான் இருக்கும். இத விட நல்லா சாதகம் பண்ணி, உன்னால இன்னும் முடியும்’னு மறைமுகமா கொடுக்கற ஊக்கம் அது. அம்மாவும் அப்படித்தான். ஒரு சிரிப்பு மட்டும் தான் வரும்.

தங்கமணியைக் கலாய்ச்சு எழுததை அவுக அப்பாரும் படிக்காராம். என்ன நினச்சுக்கிடுவாகளோ? இவனுக்குப் போயி......., வேண்டாம், விட்ருங்க.


கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.
என்னப் பத்தி நானே.... எப்படி புகழ்ந்துக்கறது? இருந்தாலும் கேக்கீங்களே’ன்னு சொல்லுதேன். நிறைய படிக்கணும்’னு ஆசை. முடிஞ்ச வரைக்கும் கையில ஏதுனாச்சும் பொஸ்தகம் எடுத்துட்டுப் போகறது வழக்கமுங்க.

கஷ்டம் வரும் போதெல்லாம், இது வரைக்கும் வழிகாட்டிய ஆண்டவன் இனிமேல் கைவிட்டுடுவானான்னு, என்னை நானே தேத்திக்குவேன்.

ஓயாம பேசுவேன். எதைப் பத்தினாலும். எல்லாத்துக்கும் அபிப்ராயம் இருக்கும். வேற நம்பளப் பத்தி சொல்லுறதுக்கு ஒண்ணும் இல்லை.

டிஸ்கி: இந்த தொடர் சங்கிலி அருந்துடக் கூடாதாம். அப்படி என்னால அருந்திச்சுன்னா, என் பதிவு தளத்துக்கு மால்வேர் வந்துரும்’னு ஜெர்மனியின் பால் ஆடோபஸ் சொல்லியிருக்காம். அதுனால, இதைப் படிக்கறவங்க எல்லாரும், இதே கேள்விகளை நீங்களே கேட்டுக்கிட்டு பதிலும் போட்டுருங்கய்யா. மவராசனாயிருப்பீய.

நான் பாட்டுக்கு சிவனேன்னு தானே இருந்தேன். ஏதோ ஊருல இருக்க ஹோட்டல் பத்தியெல்லாம் இவுக எழுதறாங்களே’ன்னு இவங்க பதிவ படிச்சா, என்னைப் பத்தி நானே கேள்வி கேட்டுக்கிட்டு பதிலும் நானே எழுதணுமாம். அதான் எழுதிருக்கேன். அவங்களும் அவங்களப் பத்தி எழுதிருக்காங்க. வரட்டா......

July 05, 2010

இவங்களுக்கெல்லாம் ராவணன் பிடிக்காது

இரண்டு மெகா ஹிட் படங்கள் கொடுத்தால் ஒரு சொதப்பல் படம் கொடுப்பது மணிரத்னத்தின் குணம். டிரய்லரைப் பார்த்ததிலிருந்து ராவணன் ஒரு சொதப்பலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதுவும் பாட்டு ஒன்றும் மனதில் ஒட்டவே இல்லை. படத்தின் விஷுவல்ஸைப் பார்த்தபோதே இது ஊத்திக்கும் என்று தான் நினைத்தேன். இணையத்திலும் பத்திரிகைகளிலும் வந்த விமர்சனங்களும் அப்படியே இருந்ததா, "பார்த்தியா நான் சொன்னது சரியாப் போய்விட்டது பார்" என்று காயத்ரியிடம் சொன்னதை அவள் ஏற்க மறுத்துவிட்டாள். புருஷன் சொல்வதை மனைவி கேட்டுட்டாத்தான் நாடு உருப்புட்டுருமே.

படத்தைப் பார்த்தே ஆகணும் என்று ஒற்றைக்காலில் நின்று, சனிக்கிழமை மத்தியான காட்சிக்குப் போனோம். அடுத்த இரண்டே கால் மணி நேரம் என்னை மணிரத்னம் இருக்கையிலேயே கட்டிப் போட்டுவிட்டார் என்று தான் சொல்லணும். இப்படியொரு அருமையான படத்தையா, ஊடகங்களில் கிழி கிழியென்று கிழிக்கிறார்கள் என்று நொந்து கொண்டேன். உண்மை தான் ராவாணன் எல்லா தரப்பு மக்களையும் திருப்தி படுத்தும் என்று எண்ண முடியாது.

கதாநாயகனை அறிமுகப்படுத்தும் போது அவன் கை கால்கள் கண்கள் மூக்கு நாக்கு என்று பிட் பிட்டாகக் காட்டாமல், ஒரு பில்ட்-அப்பும் கொடுக்காமல் படம் எடுத்தால் சில பேருக்குப் பிடிக்காது.

கதா நாயகன் தோன்றி அடுத்த காட்சியிலேயே 100 பேரோடு ஆடிப் பாடாமல் படம் நகர்ந்தால், பல பேருக்கு இது தமிழ்ப் படம் என்றே ஒத்துக் கொள்ள முடியாது.

கதாநாயகன் எதிராளியைப் பார்த்து பன்ச் டயலக் என்ற பெயரில் காதைப் பஞ்சராக்கும் வசனங்கள் இல்லாமல் இருந்தால், பல பேருக்குப் படம் புரியாது.

இவ்வளவு மழை பெய்தும் அதிலே ஐஷ்வர்யா ராயை நனைய விடாமல், கதாநாயகியின் சதைகளைக் காட்டாமல் படம் எடுத்தல் பல பேருக்கு எரிச்சல் வரும்

கதையோடு ஒட்டாமல் தனியே ஒரு காமெடி கோஷ்டி, காமெடி என்ற பெயரில் காமநெடி வீசும் வசனங்கள் இல்லாமல் கதையமைத்தால் அந்தப் படம் காலணாவுக்கு பெறாது என்பது எழுதப்படாத விதி

ஒப்பனை என்ற பெயரில் முகத்தில் மாவு ஏதும் அப்பிக் கொள்ளாமல் இருக்கும் முகத்தைக் காட்டியே நடிகர்களைக் காட்டினால் யார் தான் பார்ப்பார்கள்?

இதோ பாட்டு வருகிறது பார் என்று ஒவ்வொரு பாட்டுக்கும் ஐரோபா அமெரிக்கா என்று சுற்றாமல், படத்தோடே பயணிக்கும் படி பாட்டுக்களை வைத்தால், கிழித்து குதறாமல் படம் எடுத்தால் யாருக்குப் பிடிக்கும்?

ஃப்ளாஷ் பேக் என்ற பெயரில் இரண்டு ரீல்களுக்கு அழுகுனி காட்சிகள் வைக்கவில்லையென்றால், அது ஃப்ளேஷ் பேக் இலக்கணத்தை மீறுவதாகாதா? ப்ரியாமணியை கற்பழித்து அவர் கதறும் காட்சியைக் காட்டினால் தானே தமிழ் ரசிகர்களுக்கு, வீராவின் கோபம் புரியும். ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டால் போதுமா?

ராவணன் என்று பெயர் வைத்து விட்டு, ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் ராமாயணத்தை நினைத்துப் பார்க்காமல் எப்படிப் படம் பார்ப்பது? அப்படிப் பார்க்கும் போது இது ராமாயணத்தை இழிவு படுத்தும் கதை என்று தான் தோன்றுகிறது.

ராவணனைப் பிடிக்காது என்று சொல்லும் மக்கள் எடுத்து வைக்கும் வாதம் இவை தான். இதெல்லாம் எதிர்பர்த்துப் போகும் மக்களுக்கு ராவணன் பிடிக்காது தான். எப்போதுமே அதி அற்புதமான படைப்புகள் மக்களை மகிழ்விக்க மறுக்கின்றன. ஹே ராம், ராவணன் எல்லாம் அந்த ரகம் தான்.

June 30, 2010

ஆதலினால் தாய் மொழியும் பயிற்றுவீர்

சென்ற வாரம் உணவருந்த வெளியே சென்றிருந்த போது, நான் அமர்ந்திருந்த மேசைக்கருகில் ஒரு சிறிய குடும்பம். கணவன் மனைவி, 10 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க அவர்களது பெண். மிக அருகில் உட்கார்ந்திருந்ததால் அவர்கள் பேசிக்கொள்வது காதில் நன்றாகவே விழுந்தது. ஒட்டுக் கேட்கவில்லை :)

அவர்கள் தமிழர்கள் தான் என்பது அந்தக் கணவன் மனைவி பேசுவதிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. தன் மனைவியோடு பேசும் போது தமிழிலே பேசும் அவர், தன் மகளோடு பேசும் போது ஆங்கிலத்துக்கு மாறி விடுகிறார். மனைவியும் அப்படியே. ஏதேது மகளிடம் தமிழில் பேசினால் கௌரவக்குறைச்சல் என்று நினைத்தாரா, அல்லது தன் மகள் தப்பித் தவறிக் கூட தமிழ் பேசிவிட வேண்டாம் என்று நினைத்தாரா? “சார் போதும். ரொம்ப பீட்டர் விடாதீங்க” என்று சொல்லணும் போலிருந்தது. அவர்கள் மகளும் தப்பித் தவறிக் கூட தமிழில் ஒரு வார்த்தை பேசவில்லை. அம்மா அப்பா தவிற வேறெதுவும் அதன் வாயிலிருந்து தமிழ் வார்த்தைகள் வேறெதுவும் வரவில்லை.

அவர்களது நிலைமை என்னவோ, நானறியேன். சமீபத்தில் தான் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்திருக்கலாம். திடீரென்று தமிழில் பேசுவது அக்குழந்தைக்கு கஷ்டமாக இருந்திருக்கலாம்.

ஆனால் இந்தக் குடும்பம் ஒரு பானை சோத்துக்கு ஒரு பதம் தான். பல குடும்பங்களில் இன்று குழந்தைகளிடம் தமிழில் (அல்லது தாய் மொழியில் பேசுவதில்லை). தமிழ்க்குடும்பங்களில் தான் இது அதிகம் என்று நினைக்கிறேன்.
பெங்களூரில் பல வட இந்திய நண்பர்கள் அவர்கள் குழந்தைகளிடம் ஹிந்தியிலோ அல்லது அவர்கள் தாய்மொழியிலோ பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.

நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் தமிழ் அழியாதிருக்க, “முடிந்த வரை தமிழிலேயே பேசுங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பல இல்லங்களில் இன்று குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் உரையாடுகின்றனர். ஏதோ, நம்ம தளத்தை நாலு படிக்கிறார்களே(!!!!?????) என்ற ஆர்வத்தில் (அறிவுரை சொல்ல அருகதை இல்லாவிட்டாலும் ஆதங்கத்தைச் சொல்லலாமே என்ற எண்ணத்தில் தான்), சில வருடங்களுக்கு முன் ஏற்கனவே எழுதிய பதிவை இங்கு மீண்டும் பதிவிடுகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தாய்க்கு நிகராக தாய் நாட்டையும் தாய்மொழியையும் குறிப்பிடுகின்றோம். வேறெதற்கும் தாய் என்ற அடைமொழி கிடையாது. தாய் நாட்டைப் பிரிந்திருக்கையிலே, நம் நாட்டவனைக் கண்டால் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு முறை நான் அயல் நாட்டிற்கு சென்ற போது, தனிமை என்னை வெகுவாக வாட்டியது. என் நாட்டவன் யாரையாவது காண மாட்டேனா என்ற ஏக்கம் என்னுள்ளே எழுந்தது. ஆனால் என் தாய்மொழி பேசும் அண்டை நாட்டவனைக் கண்ட போது, எனது மகிழ்ச்சி அளவிடமுடியா உயரத்தை எட்டியது. என் தாய் மொழி பேசும் ஒருவனை சந்தித்ததில் தாயையே சந்தித்த மகிழ்ச்சி.

ஆனால், இன்று வெகுவான பெற்றோர்கள், தமது குழந்தைகளுக்கு தாய்மொழியை போதிக்க மறந்துவிட்டனர். தாய் மொழியிலே பேசினால் கூட அது ஒரு கௌரவக் குறைச்சல் என்று எண்ணுகிறார்கள். A for Apple , B for Ball என்று கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் அம்மா, ஆடு, இலை, என்று சொல்லிக்கொடுப்பதில்லை. ஒரு குழந்தையிடம் யானையின் படத்தைக்காட்டி, இது என்ன என்று கேட்டால், elephant என்று பதில் வருகிறதே தவிர, யானை என்று சொல்லத் தெரியவில்லை. One two three four என்று நூறு வரை சொல்லும் குழந்தைக்கு ஒன்று இரண்டு மூன்று என்று சொல்லத் தெரியவில்லை. என் பிள்ளை mummy daddy என்று தான் கூப்பிடுவான் என்று சில பெற்றோர்கள் பெருமை பட்டுக்கொள்கிறார்கள். பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சங்களிலே தாய்மொழி ஏதோ தவறான மொழி என்ற ஒரு மாயை ஏற்படுத்திவ்விட்டார்கள். நான் சில அரசியல் வாதிகளைப்போல, தாய் மொழியிலே தான் கல்வி கற்க வேண்டும் என்று சொல்ல வில்லை. சத்தியமாக இல்லை. போட்டி மிகுந்த இன்றைய உலகத்தில் எதிர் நீச்சல் போட வேண்டும் என்றால், ஆங்கிலத்திலே பயில்வது அவசியமாகிவிட்டது. இது ஒரு மறுக்க முடியா உண்மை. தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது என் வாதம் அல்ல. தாய்மொழியைப் புறக்கணிக்காமல் கல்வி கற்ப்பிப்போம் என்பதே என் வேண்டுகோள்.

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு Ba Ba Black Sheep சொல்லிக்கொடுக்கும் போது, அம்மா இங்கே வா வா என்ற பாட்டும் சொல்லிக்கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு Tinkle comics வாங்கும் போது, அம்புலிமாமாவும் சிறுவர்மலரும் வாங்கிக்கொடுங்கள். நெபோலியனையும், கார்ல் மார்க்ஸையும் பற்றிச் சொல்லிக்கொடுக்கும் போது, நம் சேர சோழ பாண்டியர் பற்றியும் சொல்லிக்கொடுங்கள். Harry Potter புத்தகங்கள் வாங்கும் போது, ஒரு பொன்னியின் செல்வனையும் வாங்குங்கள். குறைந்த பட்சம், பத்து குறளாவது கற்றுக்கொடுங்கள். At least திருவள்ளுவர் யார் என்று கேட்க வைக்காதீர்கள். ஔவ்வையாரும், பாரதியாரும், கம்பரும் எழுதாததை, மில்டனும், டென்னிசனும் வேர்ட்ஸ்வொர்தும் எழுதிவிடவில்லை. முடிந்தவரை வீட்டிலே, தாய் மொழியில் உறையாடுங்கள். சச்சின் டெண்டுல்கரே, வீட்டில் மராட்டியில் பேசுகிறார். தம் குழந்தைகள் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்.

பிற மொழி கற்பது பாபமல்ல. தாய்மொழியைப் புறக்கணிப்பது புண்ணியமுமல்ல.

பெற்றோர்களே, ஆதலினால் உங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழியும் பயிற்றுவீர்!!!!!!!

June 26, 2010

கொடிது கொடிது மானிடராய் இந்நாட்டில் பிறத்தல் கொடிது

ஔவையார் இருந்திருந்தால் இப்படித் தான் கொடியது எது என்ற கேள்விக்குப் பதிலளித்திருப்பார். இப்படித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற வெவஸ்தையே இல்லாமல் மாநில அரசும் மத்திய அரசும் நடந்து கொள்கின்றன. இவர்கள் நடத்துவது ஆட்சி அல்ல அராஜகம். 1984’ல் நடந்த போபால் விஷவாயுக் கசிவில் 15000 பேர் உயிரிழந்தார்கள். உலகிலேயே தொழிற்சாலை விபத்துக்களிலேயே பெரிய அளவில் மக்கள் உயிரை வாங்கியது இது தான் என்ற அவப்பெயரை வாங்கியிருக்கி்றது. 26 ஆண்டுகளுக்கு மு்ன்னர் நடந்த இவ்விபத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும், எவ்வளவு நச்டஷ் ஈடு வழங்கவேண்டும் என்று இப்போது தான் துப்பு துலக்குகிறார்கள். அன்றே யூனியன் கார்பைடு முதலாளியை பத்திரமாக அரசு மரியாதையுடன் விமானமேற்றிவிட்டு விட்டு, இப்போது அதை யார் செய்தது என்று சண்டை. ஒரு பெரிய நிறுவனத்தின் அதிபரை அரசு செலவில் வழியனுப்பு வைக்கிறார்கள், ஆனால் அது பிரதம மந்திரிக்குக் கூட தெரியாதாம். இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கிறது, அந்த நிறுவனத்தின் முதலாளி முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு நஷ்ட ஈடு தராமல் சொந்த நாட்டுக்குத் திரும்பி செல்கிறார், ஆனால் இது எதுவுமே அன்றைய பிரதம மந்திரி ராஜீவுக்குத் தெரியாதாம். சரி நடந்தது நடந்து விட்டது. தப்பிச் சென்ற வாரன் ஆண்டர்சன் இனி வரப்போவதில்லை. ஆனால் இன்னார் தான் குற்றவாளி, நஷ்ட ஈடாக இவ்வளவு தர வேண்டும் என்று ஒரு நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு 26 ஆண்டுகளா?? Justice delayed in Justice Denied. அன்றே வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்க விட்டுவிட்டு இப்போது அவருக்கு 94 வயசான பிறகு அவரை திரும்ப இந்திய நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவார்களாம். அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறாராம், வெளியுறவுத்துறை அமைச்சர். நம் நாட்டின் கையாலாகாத்தனத்தை நினைத்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள், அமெரிக்கர்கள்.
சரி மத்திய அரசுதான் சரியில்லை என்றால், மாநில அரசு செய்யும் படாடோபங்களுக்கு ஒரு அளவே இல்லை. ஒரு மனிதனால் எப்படித்தான் இவ்வளவு புகழ்ச்சியை வாங்கிக் கொள்ள முடியும், தெரியவில்லை. தன்னை விட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு வேறு கதியில்லை என்று 90களில் எப்படி ஜெயலலிதா நடந்துகொண்டாரோ, அப்படியிருக்கிறது, கருணாநிதியின் இப்போதைய நடத்தை. சென்னையில் ஒரு தெரு, சுவர் விடாமல் அனைத்திலும் ஏதாவதொரு அரசியல்வாதியாவது சி்ரித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலையோரங்களில் விளம்பரப்பலகைகள் வைத்தால் வாகனவோட்டுவோரின் கவனத்தைக் குலைத்து விபத்துகள் பல ஏற்படுகின்றன என்பதால் பல விளம்பரப் பலகைகளை நீக்க நீதிமன்றம் ஆணையிட்டது. அரசியல் விளம்பரங்களுக்கு இந்தத் தீர்ப்பு செல்லாது போலும்.
பொழுது போகவில்லையென்றால் கருணாநிதிக்கு ஏதாவது விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். அவர் புகழ் பாட ஒரு புலவர் படையையே அரசு செலவில் வைத்திருப்பார் போலும். எல்லாத்திலும் ஜெகத்ரக்ஷகன் வாலி வைரமுத்து போன்ற அடிபொடிகள் ஆஜர்.
800 கோடி செலி்ல் புதிய சட்டசபை. ஏதேது, பழைய சட்டசபயில் வாஸ்த்து சரியில்லை என்று புதிய கட்டிடம் கட்டினார்களா? அல்லது 300 வருட பழைய கட்டிட இருக்கையில் கருணாநிதியின் பிருஷ்டபாகம் அமர மறுக்கின்றதா? இந்தச் செலவில் பல கிராமங்களில் சாலைகள் அமைத்துக் கொடுத்திருக்கலாம், எத்தனையோ அரசு பள்ளிகள் கட்டியி்ருக்கலாம், மருத்துவமனை கட்டியிருக்கலாம். ஆனால் இது பற்றியெல்லாம் கேள்வி கேட்க ஒரு நாதி கூட நாட்டில் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
ஆங்கிலேயருக்கு எதிராகத் தைரியமாகக் குரல் கொடுத்த ஹிந்து போன்ற பத்திரிகைகள் கூட கண்டுகொள்ள மறுக்கின்றன. “பெரிசு” கடைசி காலத்தில் ஏதோ சௌகர்யம் செய்து கொள்கிறார், போனால் போகட்டும் என்று விட்டுவிட்டார்களோ, தெரியவில்லை. அட அரசுக்கெதிராக ஆசிரியருக்கு வரும் கடிதங்கள் கூட பிரசுரிக்கப் படுவதில்லை.
இவ்வளவு கொட்டம் அடித்தது போதாது என்று இப்போது மீண்டும் பல கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாடாம். தமிழை வாழ வைக்க வேண்டுமென்றால் தமிழ் மக்கள் சௌகர்யமாக வாழ் வேண்டும். தமிழ் தான் இந்திய மொழிகளுக்கனைத்தும் தாய். 5000 வருடம் பழமையானது. சும்மா பழங்காலப் பெருமை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதில் இவர்களைப் போல் யாருமே இருக்க முடியாது.
இந்த மாநாட்டில் பேசப் படும் விஷயங்களைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. கவிஞர் (??) கனிமொழியின் கவிதைத் தொகுப்பை ஒரு ஆர்வக்கோளாறர் ஆய்வு செய்திருக்கிறாராம். இலக்கியம் என்ற பெயரில் கருணாநிதி அண்ணா பெரியார் எழுதிய குப்பைகளையெல்லாம் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கிறார்களாம். இன்று சானல் மாற்றிக் கொண்டிருக்கும் போது சன் நியூஸில் மாநாட்டு நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பில் வாலி கருணாநிதியைப் பாராட்டி ஏதோ உளறிக் கொட்டிக்கொண்டிருக்கிருந்தார். போறபோக்கைப் பார்த்தால் இந்தியாவிலிருந்து கருணாநிதியின் குப்பைகளை நோபல் பரி்சுக்குகூட பரிந்துரை செய்வார்கள் போலிருக்கு.

இம்மாநாட்டிற்காக கோவையே விழாக்கோலமாய் இருக்கிறது என்று கொலைஞர் டிவியும் சன் டிவியிலும் சொல்கிறார்கள். ஆனால் உண்மையென்னவோ, கடந்த 3 மாதங்களில் காணாத மதுபான விற்பனை கடந்த மூன்று நாட்களில் நடந்திருக்கிறது.
இந்த மாநாட்டினால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இருக்கப் போவதில்லை. டாஸ்மாக் விற்பனையால் அரசுக்கு சில கோடிகள் கிடைக்கலாம். செம்மொழி ஆராய்ச்சி என்ற பெயரில் சில கோடிகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திலிருந்து வாங்க முடியும். அதுவும் சில கழகக் கண்மணிகளின் பாக்கெட்டுக்குத்தான் போகப் போகின்றன. கருணாநிதியை வாழ்த்தி ஆய்வறிக்கைகள் சமர்ர்ப்பிப்பவர்களுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கலாம்.
அப்படியே தமிழின் தொன்மையைக் கொண்டாட வேண்டுமென்றால சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டத்தில் கொண்டாட வேண்டியது தானே. இந்தக் கட்டிடத்தை மறந்தே போன மக்களுக்கு இந்த மாநாடு வள்ளுவர் கோட்டத்துக்கு ஒரு விளம்பரமாகவாவது அமையும். அவிநாசி ரோட்டில் 100க்கும் மேற்பட்ட மரங்களை மாநாடு ஊர்வலம் நடத்துவதற்காக கொஞ்சம் கூட மூளையே இல்லாமல் வெட்டித் தள்ளியி்ருக்கிறார்கள்.
மாநாட்டில் பேசப்போகும் விஷயங்களைப் பாத்தால் தலையில் தான் அடித்துக் கொள்ள வேண்டும். ஔவையார் ஒரு பௌத்தத் துறவியா என்ற பெயரில் ஒருவர் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப் போகிறாராம். யாரப்பா அந்த அறிவுக்களஞ்சியம். தனது ஹிந்து தர்மக் காழ்ப்புணற்சியைக் காட்டிக் கொள்ள இப்படியெல்லாமா பேச வேண்டும்? விநாயகர் அகவல் எழுதிய ஔவையார் பாவம் நொந்து போயிருப்பார்.
தமிழ் இலக்கியத்திற்கே பெருமை சேர்ப்பது ஆழ்வார்களும் நாயன்மார்களும் எழுதிய பதிகங்களும் சைவத் திருமறைகள் தான். அவைகளுக்கெல்லாம் ஒரு நாளாவது ஒதுக்கி்யிருக்கிறார்களா? சித்தர்கள் எழுதியுள்ள பதிகங்களை ஆய்வு செய்தால் இன்றைய ஆங்கிலேய மருந்துக்களை தூக்கிப் போட்டு்விடும் தன்மையுடையவை. அவை பற்றி ஒரு நாயாவது பேசப் போகிறதா? இல்லை. கருணாநிதியும் திராவிட இயக்கமும் தமிழ் தமிழ் என்று அடித்துக் கொண்டதைப் பற்றித்தான் எல்லோரும் உளரப் போகிறார்கள்.
அப்படியே தமிழ் மீது தீராப் பற்றிருந்தால் கட்சி நிதியிலிருந்தோ அல்லது சொந்த நிதியிலிருந்து பணம் எடுத்து செலவழிக்க வேண்டியது தானே? நாம் கொடுக்கும் வரிப்பணத்தை இப்படி விரயம் செய்வது எப்படி நியாயமாகும்? கேள்விகேட்பாரில்லை. மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டிய சிலரை திருச்சியில் கைது செய்திருக்கிறார்கள். எவ்வளவு அராஜகம். ஜனநாயகத்தில் இதற்குக் கூடவா உரிமையில்லை.
மாநாட்டிற்காக சென்னையில் ஓடும் பல குளிர்சாதனை பேர்ருந்துக்களை கோவைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். சில நாட்களாக ஒரு ஏசி பேரூந்தைக் கூடக் காணமுடியவில்லை.

ஆனால் இந்த மாநாட்டிற்காக நான் பல நாட்களாகக் காத்துக் கிடந்ததென்னவோ உண்மை. “இந்த மாநாட்டோடு நான் அரசுப் பணியிலிருந்து விடைபெறப் போகிறேன். கட்சிக்கும் தமிழுக்கும் என் மீதி ஆயுளை அற்பணிக்கப் போகிறேன்” என்று சில மாதங்களுக்கு முன்னர் கருணாநிதி அறிக்கை விடுத்தார். நி்ஜமாக செய்து காட்டப் போகிறாரா, அல்லது இதுவும் “சும்மா லுலுயாயிக்குத்தான் சொன்னேன்” என்று மழுப்பப் போகிறாரா, அடித்த சில நாட்களில் நடக்கப்போகும் அரசியல் மாற்றங்களைப் பார்க்க ஆவலாயுள்ளது.

ஒன்று மட்டும் உண்மையாகிறது. “பேய்கள் ஆட்சி செய்தால், சாத்திரங்கள் பிணம் தின்னும்” என்று பாரதி (பாரதி தானே??) சொன்னது மெய்யாகிக் கொண்டிருக்கிறது. மகான்களின் வாக்கு பொய்க்காது என்று சும்மாவா சொன்னார்கள்?

June 12, 2010

ஃபுட்பால்

என்னதான் கிரிக்கெட் பிடித்த விளையாட்டாக இருந்தாலும், பள்ளியில் அதிகமாக விளையாடியது கால்பந்தாட்டம் தான். வாரம் இரு முறை பி.டி. வகுப்பு இருக்கும். ஐம்பது நிமிடத்தில் ஒரு அணி கூட பேட்டிங் செய்ய முடியாது. தொடர்ச்சியாக வைட் பாலாகப் போட்டுப் போட்டு 5 ஓவர்கள் போட்டு முடிப்பதற்குள் அந்த வகுப்பு முடிந்து விடும். அதனால் எல்லோரும் ஒரு மனதாக ஃபுட்பால் விளையாடலாம் என்று முடிவெடுத்து விடுவோம்.

ஒரு அணியில் பதினோறு பேர் தான் இருக்க வேண்டியது ஆட்ட விதி. ஆனால் எவனையும் விட்டு விட்டு விளையாட்டை ஆரம்பிக்க முடியாது. பாதி ஆட்டத்தில் சப்ஸ்டிட்யூட்டாகப் போடுகிறேன் என்றாலும் யாரும் கேட்க மாட்டார்கள். சில சமயம் ஒரு அணியில் 20 பேரெல்லாம் வைத்து விளையாடியிருக்கோம்.

என்னதான் வியூகம் வகுத்து விளையாட நினைத்தாலும், எவனும் சொன்ன இடத்தில் நிற்க மாட்டான். அனைவரும் ஒரே பந்தைத் துரத்துவோம். தன் காலில் பந்து மிதிபட வேண்டும். எதிர் அணியின் திசையை நோக்கி எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ, அவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டும். "டேய் பாஸ் பண்ணு" என்று என்ன கூச்சல் போட்டாலும் யாரும் காதில் வாங்கிக் கொள்வது கிடையாது. அடுத்த முறை பந்து என் காலுக்கு வரும் போது, நானும் அதே தான் செய்வேன். எனக்கு யாரும் பாஸ் கொடுக்கலியே நானும் யாருக்கும் பாஸ் கொடுக்க மாட்டேன். இது தான் எல்லோருடைய லாஜிக். அதெல்லாம் ஒரு காலம்.

எனக்கு ஃபுட்பால் விதிகளை முதன் முதலில் அப்பா தான் கற்றுக் கொடுத்தார். 1986'ஆம் ஆண்டு உலகக் கோப்பை, பிரான்ஸும் பிரேஸிலும் மோதிக்கொண்ட போட்டி தான் முதலில் பார்த்த ஆட்டம். பிரான்ஸின் மிஷேல் பிளாடினி தான் நான் தெரிந்து கொண்ட முதல் கால் பந்தாட்ட வீரர். அந்த ஆண்டு மெக்ஸிகோவில் உலகக் கோப்பை நடந்ததால் எல்லா ஆட்டமும் நடு இரவிற்குப் பின் தான் தொடங்கும். அம்மா முணுமுணுத்துக் கொண்டே தூங்கிவிடுவாள். அடுத்த ஆட்டத்தில் மரடோனாவின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து அவரின் பரம விசிறியாகிவிட்டேன். இதற்கும் நான் பார்த்து அவர் அடித்த முதல் கோல் கையால் போட்டது (அதற்கு அவர் ஹேன் ஆஃப் காட் என்று பிற்பாடு விளக்கம் வேறு கொடுத்தார்). அப்பா கூட அவரை தகாத வார்த்தைகள் சொல்லித் திட்டிக்கொண்டிருந்தார். 1994 வரை ஒவ்வொரு உலகக்கோப்பையையும் அப்பாவும் நானும் கண் விழித்துப் பார்ப்போம்.

ஒவ்வொரு உலகக் கோப்பையின் போதும் ஊர் பேர் தெரியாத ஒரு அணி வரும். ஒரு கலக்கு கலக்கி விட்டுப் போகும். 1986'ல் ரோமானியா, 90'ல் கேமரூன். அர்ஜன்டினாவோடு நடந்த முதல் ஆட்டத்தில் எக்கச்செக்க ஃபவுல்கள். 2 ரெட் கார்டும் வாங்கி, அர்ஜன்டினாவைத் தோற்கடித்தது. மரடோனாவின் அணி கொஞ்சம் கிலியடைந்ததென்னவோ உண்மை. 94'ல் பல்கேரியா. உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த ஜெர்மனியையே வீழ்த்தியது. 98'ல் குரொயேஷியா. 2002'ச் செனேகல் மற்றும் தென் கொரியா, 20006'ல் ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலீ. யாருமே எதிர்பார்க்கவில்லை, இத்தாலி கோப்பையை வெல்லும் என்று. இந்த வருடமும் ஒரு கறுப்பு ஆடு அணி இருக்கிறது. அது தான் தென் ஆப்பிரிக்கா. முதல் ஆட்டத்திலேயே வலுவான மெக்ஸிகோவோடு சரிசமமாக மோதி டிரா செய்திருக்கிறார்கள். பார்ப்பொம் இவர்கள் எவ்வளவு தூரம் பயணிக்கிறார்கள் என்று?

ஏனோ மற்ற விளையாட்டுகளைப் போலல்லாமல், நாட்டுக்காக நிறைய விளையாடுவதை விட, கிளப்புக்காகத்தான் நிறைய ஆட்டங்கள் நடைபெறுகிறன. அதனாலேயே எந்த நாடு உலகக் கோப்பையை வெல்லும் என்று கணிப்பது சற்று கடினமான விஷயமாகத்தான் இருக்கிறது. இந்த வருடம் இங்கிலாந்திற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக ஆரூடம் சொல்கிறார்கள். எனக்கென்னவோ, மரடோனா போன பிறகு, ஜெர்மனி தான் பிடித்த அணி. அவர்களது விளையாட்டு முறையே வித்தியாசமாக இருக்கும். முதலில் பதுங்கி, பின் பாய்ந்து ஆடுவதில் வல்லவர்கள். அவர்களது டிஃபன்ஸ் பிரமாதமாக இருக்கும். ஆனால் கொடுமை, இந்த வருடம், மைக்கேல் பாலக் விளையாட முடியவில்லை. என்ன கொடுமை சார் இது?

ஒவ்வொரு ஃபுட்பால் உலகக்கோப்பை ஆட்டங்கள் நடைபெறும் போதும், "இப்படி கண் முழிக்கறியே"ன்னு அம்மா திட்டுவாள். இந்த வருடம், அந்த பொறுப்பை காயத்ரி எடுத்துக் கொண்டிருக்கிறாள்.

உலக வரை படத்தில் கண்டு பிடிக்கவே முடியாத, துக்கடா நாடான ஐவரி கோஸ்டெல்லாம் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று விட்டன. இந்தியா என்று தகுதி பெறுமோ?

June 05, 2010

சிங்கம்

சில வருடங்களுக்கு முன், “விஜய், அஜீத், விக்ரம்” இவர்களில் யாருடைய எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு “எனக்கென்னவோ குனிந்து கொண்டே ஒருவர் இவர்கள் எல்லோரையும் முந்தி விடுவார்” என்று மதன் ஆனந்தவிகடனில் பதிலளித்தார். அப்போது பேரழகன் ரிலி்ஸாகியிருந்தது. படத்துக்குப் படம் கெட்-அப் மாற்றம், பாடி லாங்குவேஜ் மாற்றம் என்று வித்தியாசம் காட்டிய சூர்யாவுக்கு யார் கண் பட்டதோ, சன் பிக்சர்ஸ் என்ற சனி திசை பிடித்ததா தெரியவில்லை, சிங்கம் படம் சூர்யாவின் கேரியி்ரில் ஒரு கரும்புள்ளி என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

ஏனோ எல்லாத் தமிழ் ஹீரோக்களுக்கும் காக்கிச்சட்டை தரித்து ஒரு படமேனும் பண்ணிவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களது சினிமா வாழ்க்கை முழுமையடையாது. ஏற்கனவே காக்க காக்க செய்திருந்தாலும், தமிழ் நாட்டின் அதுவும் தென் தமிழ்நாட்டின் மக்களுக்குச் சென்றடையவில்லை என்று யோசித்தார்களா தெரியவில்லை, ஒரு சூ்ப்பர் டூப்பர் மசாலா கொடுத்திருக்கிறார்.

நல்ல தரமான படம் எடுக்கவே மாட்டோம் என்று சன் பிக்சர்ஸ் முடிவெடுத்திருக்கி்றார்களா தெரியவில்லை. குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று சூப்பர் ஃப்ளாப் கொடுத்துக் கொண்டிருக்கும் விஜயின் ரசிகர்கள் / நண்பர்கள், தொடர்ச்சியாக ஹிட் கொடுத்துக் கொண்டி்ருக்கும் சூர்யாவின் மார்க்கெட்டும் சரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களோ என்னவோ. யாமறியோம். சூர்யா, இத்தோடு ஹரி போன்ற இயக்குனர்களின் சகவாசத்தை முடித்துக் கொள்வது அவர் எதிர்காலத்துக்கு நல்லது.

படம் முழுவதையும் சூர்யாதான் தாங்குகிறார். எத்தனை நாட்களுக்குத் தான் ஃபார்முலாப் படங்களையே எடுப்பார்களோ? அனுஷ்கா இப்படியே இன்னும் இரண்டு படம் செய்தால் நமீதா லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள். அம்மணி, கவர்ச்சியா நடிக்கலாம் தப்பில்லை. ஆனால் அது ஆபாசாமாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

விவேக் - I think your days are over buddy. வேறெதுவும் சொல்லத் தெரியவில்லை. எதற்காக இந்த வடிவேல் வேலை உமக்கு? இரட்டை அர்த்த வசனங்களாக உமிழும் உமக்கு பத்மஸ்ரீ பட்டம் வேறு.

என்ன தான் ஹைதர் அலி காலத்துக் கதையாக இருந்தாலும் ஓரிரண்டு திருப்பங்களாவது வைத்திருக்கலாம். போலீஸ் என்றாலே அடிதடியில் தான் இறங்கி ரவுடிகளை அழிக்கவேண்டும் என்றில்லையே. கொஞ்சம் ஸ்ட்ராடஜிஸ்டிக்கா யோசித்து எடுத்திருக்கலாம்.

நல்ல வேளை ஹரி இந்தப் படத்தை விஜய்காந்த் விஷால் போன்றவர்களை வைத்து எடுக்கவில்லை. அப்படியிருந்தால் அரை மணிநேரம் கூட உட்கார்ந்திருக்க மு்டியாது.

மொத்தத்தில் சிங்கம் - உருமல் ஜாஸ்தி!

பி.கு: வேட்டைக்காரன், சுறா, சிங்கம் - இவைகள் தான் சன்பிக்சர்ஸின் சமீபத்திய படங்கள். கலாநிதி மாறன் அடுத்து டிஸ்கவரி சானலை வாங்காமல் இருக்க வேண்டும்.