Pages

September 16, 2005

கன்னி சமையல் அனுபவம்

"நாம அலைஞ்சு திரிஞ்சு ஒழைச்சு சம்பாதிக்கறது எதுக்கு?இந்த ஒரு ஜாண் வயித்த நிறப்பத் தானே" என்று பாய்ஸ் படத்தில் செந்தில் ஒரு டயலாக் பேசுவார். நிறைய பேர் இதை கவனித்திருக்க முடியாது. ஆனால் எவ்வளவு பெரிய தத்துவம். இவ்வளவு அசால்ட்டா சொல்லிட்டாரே. சரி சமையல் பற்றி தலைப்பை கொடுத்துவிட்டு என்னென்னமோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.

வயிற்றை நிறப்புவதற்கு சாப்பாடு அவசியம். அதை நன்றாகச் சமைத்தல் இன்னும் அவசியம். அப்பாடா, ஒரு வழியா கொடுத்த தலைப்புக்கு ஒரு மாதிரி சம்பந்தம் இருக்கற மாதிரி வந்துடுத்து ;-) சிறு வயதில் அம்மா என்ன சமைத்தாலும் அது பிடிக்காது இது பிடிக்காது என்று அநியாயத்துக்கு அடம் பிடிப்பேன். (ஒக்காத்தி வச்சு அம்மா அதுக்கப்புறம் வாயில திணித்ததெல்லாம் தனி கதை). "என் சமையலை பிடிக்கலைன்னு சொல்லற பாத்தியா! ஒரு நாள் நாக்கு வெண்டிப் போய் (நாக்கு செத்து போய்) என் கால்ல வந்து விழறியா இல்லையான்னு பாரு" என்று சொல்லுவாள்.
வேலை நிமித்தமாக கொல்கொத்தா செல்லும் வரை சாப்பாட்டிற்கு என்றுமே கஷ்டப்பட்டதுகிடையாது. அங்கு சென்ற பின் நிஜமாகவே சாப்பட்டுக்கு லாட்டரி அடித்துள்ளேன். அது வரை சமையலில் அ ஆ கூட தெரியாது. (ஆனா ஆவன்னான்னு படிக்கணௌம்;-)) வென்னீர் போடத் தெரியும். அவ்வளவு தான். அங்கு எல்லா ஹோட்டலும் அசைவம் தான். வேறு வழியில்லாமல் ஒரு சமையல் காரனை அமைத்திருந்தோம். ஒரு நாள் அவன் சொந்த ஊருக்கு போய் விட்டான். சரி இங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டால் வேலைக்காகாது என்று தோன்றியதால் நானும் என் நண்பனும் இன்று நாமே சமைப்போம் என்ற முடிவிற்கு வந்தோம். அதுவரை அடுப்பாங்கரை பக்கம் எட்டிக்கூட பர்த்ததில்லை. சரி என்ன தான் இருக்கு பார்ப்போம் என்று முதலில் நோட்டமிட்டோ ம். உருளைக்கிழங்கும் வெங்கயமும், மற்ற சில பொடிகளும் இருந்தன. stove cooker எல்லாமே கூட இருந்தது. அரிசி மட்டும் இல்லை. நண்பன் அரைக்கிலோ அரிசி வாங்கி வந்தான். அதுவும் விலையுயர்ந்த basmati அரிசி. இதற்கு முன்னால் சமைத்த அனுபவம் என்ன, சமையல் செய்வதை பார்த்த அனுபவம் கூட கிடையாது. அரிசியை எப்படி களைய வேண்டும், எவ்வள்வு தண்ணீர் வேண்டும், ஒன்றுமே தெரியவில்லை. சரி நமக்கு ஒன்றும் தெரியாது என்று காட்டிக்கொள்ளக்கூடாது என்று என் மனசாட்சி கண்டிப்பான கட்டளையிட்டதால் கம்மென்று இருந்துவிட்டேன்.

நண்பன் முதலில் அரிசியை கழுவினான். அம்மா அரிசியை களைவதை பார்த்திருக்கிறேன். இவன் என்னவோ வித்தியாசமாக கழுவுவதை பார்த்து, "டேய் அரிசியை களைய மாட்டாயா. அப்படியே போடுறியே" என்றேன். அவன் தனது பாலக்காட்டுத் தமிழில் (இதை கொஞ்சம் மூக்கால் படித்துப் பார்க்க வேண்டும்) "டாய்! இப்படியாக்கும் என் அம்மா பண்ணுவாள். கேட்டியா" என்றான். அவன் கழுவிய அரிசி குறைவாக இருந்தது போல் தோன்றிற்று. "டேய் நீ போட்டிருக்கற அரிசி எனக்கே காணாது போலிருக்கே, நாம ரெண்டு பேரும் சாப்பிடணும்டா. இவ்வளவு போதுமா" என்று என் போறாத வேளைக்குக் கேட்டுத்தொலைத்தேன். "அப்படிங்கறியோ!!இன்னும் எவ்வளவு போடணுங்கறாய்" என்றான். "நீ வாங்கிண்டு வந்திருக்கறதே கொஞ்சமாத் தான் இருக்கு. அம்புட்டயும் போட்டுடேன்" என்றேன். பாஸ்மதி அரிசியின் எடை மற்ற அரிசிகளை விட எடை கூடுதலாக இருக்கும் என்று தெரியாது. அரைக்கிலோ அரிசியையும் போட்டு விட்டு அடுத்த கேள்வி எழுந்தது. எவ்வளவு தண்ணீர் வைக்க வேண்டும்? அப்போது தான் நான் ஒரு சூப்பர் டூப்பர் ஐடியா கொடுத்தேன். "டேய், அந்த குக்கர் மனுவலில், எவ்வளவு அரிசி வைத்தால் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று போட்டிருப்பான்" என்றேன். ஒரு வழியாக மனுவலை தேடியெடுத்துப் பார்த்தால், தண்ணீர் அளவு பற்றி ஒன்றுமே போடவில்லை. "இதே அமெரிக்காவில் நடந்திருந்தால், அந்த குக்கர் கம்பெனி மீது வழக்கு தொடர்ந்திருக்கலாம். நம் போராத வேளை, இந்தியாவில் இருக்கிறோம், என்று நொந்து கொண்டு, தோராயமா அரிசி முங்குகிற அளவுக்கு தண்ணீர் விட்டோம்.
குக்கரையும் அடுப்பிலேற்றி வைத்து அதன் மீது வெயிட் எல்லாம் போட்டாயிற்று. மணல் கயிறு விசு மாதிரி அதன் மேல் விபூதியோ குங்குமமோ இடாதது தான் குறை.
நண்பன் உருளைக்கிழங்கு கறி பண்ணுகிறேன் பேர்வழியென்று உருளைக்கிழங்கை நறுக்க ஆரம்பித்துவிட்டான். வெறும் சாதத்தையும் உருளைக்கிழங்கையும் எப்படி சாப்பிட. என்ன பண்ணுவது. கடலுக்குள் இறங்குவதென்று முடிவான பிறகு பின் வாங்க முடியுமா?
அடடா முதலில் உருளைக்கிழங்கை வெந்து வச்சுக்கணுங்கறது தெரியாமப் போயிடுத்தே என்று பிறகு தான் தெரிந்தது. சரி என்ன பண்ண, சாதம் ஆகும் வரை பொறுத்திருக்கலாம் என்றிருந்தோம். பத்து நிமிடங்களாகியும், விஸில் வராததால் எனக்கு லேஸாக சந்தேகம் வந்தது. இருந்தாலும் அடுப்பு பக்கம் போக பயம். விஸில் சத்தம் கேட்காமல் குக்கரைத் திறக்கக் கூடாது என்பது எங்கேயோ படித்த ஞாபகம் வேறு. நண்பன் குக்கர் மனுவலை தோண்ட ஆரம்பித்தான். "என்னடா தேடற" என்றதற்கு, "எவ்வளவு விஸில் வந்த பிறகு அடுப்பை அணைக்க ஏதாவது போட்டுருக்கா என்று பார்க்கிறேன் என்றேன். இந்த விபரமும் இல்லை. இரண்டு அபராதங்களுக்காக குக்கர் கம்பெனி மீது கேஸ் போட்டிருக்கலாம். சே. என்ன மனுவல் இது. அரை மணி நேரம் கழித்தும் விஸில் வராததால், அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து திறந்தால், அரிசி இருக்கும் இடமே தெரியாமல் போய் எல்லாம் ஒரு பெரிய மாவுக் குழம்பாகி இருகிப் போயிருந்தது. அதுவும் குக்கரின் விளிம்பு வரை. ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டோ ம். இப்படியாகிவிட்டதே என்று சிரிக்கவா, பசி வயிற்றைக் கிள்ளுகிறதே என்பதை நினைத்து அழவா என்று தெரியாமல் முழித்தோம். அப்படியும் நான் விடவில்லை. ஒரு spoon எடுத்து அந்த மாவையும் தின்ன ஆரம்பித்தேன். நமக்குத்தான் வெறும் சாதம் பிடிக்குமே. அதுவும் பாஸ்மதி அரிசின்னா சும்மாவா? ஆனா எவ்வளவு தான் சாப்பிட. இரண்டு வாய்க்குப்பிறகு ஒன்றும் உள்ளே போகவில்லை. வேறு வழியில்லாமல் எல்லாத்தையும் ஒரு plastic பையில் போட்டு குப்பையில் போட்டு விட்டு, ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் சாயாவும் குடித்துவிட்டு படுத்துக் கொண்டோம்.
இந்த சம்பவம் நடந்த பிறகும், சமையல் செய்யும் ஆர்வம் மட்டும் எனக்கு இன்னும் குறையவேயில்லை. என் சமையல் ருசியாக அமைவதும் இல்லை ;-((
எனது சமையல் அனுபவங்கள் (சமையல் என்ற பெயரில் நான் செய்த / செய்து கொண்டிருக்கும் சர்க்கஸ் கோமாளித்தனங்கள்) பற்றி எழுதவேண்டும் என்றால், ஒரு மெகா சீரியலே எடுக்கலாம். இருந்தாலும் என்னுடைய maiden சமையல் அனுபவத்தை நினைத்தால் இன்றும் விழுந்து விழுந்து சிரிப்பேன்.

September 08, 2005

விமர்சையான விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி திருநாள் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது என் அப்பா ஊரான கல்லிடைக்குறிச்சியில் நடக்கும் பத்து நாள் திருநாள் தான். எங்கள் தெருவில் இருப்பதென்னவோ சிறியதொரு விநாயகர் கோயில் தான். டுண்டி விநாயகர் என்று பெயர். தெருவின் பெயரே தொந்தி விநாயகர் தெரு தான். ஆனாலும் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பத்து நாளும் தெருவே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். பத்தாவது திருநாளாக விநாயகர் சதுர்த்தியன்று திருவிழா நிறைவு பெறும்.
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒருத்தர் கட்டளைதாரராக இருப்பார். தினமும் காலையில் கணபதி ஹோமம் நடக்கும். பிறகு ஜபங்கள் தொடரும். நானும் சில நாள் ஜபத்திற்குச் செல்வதுண்டு. ஜபம் செய்தவற்களுக்கு தட்சிணை தருவார்கள். (நான் தட்சிணை ஏதும் வாங்கக்கூடாது என்று அம்மா கட்டளையிடுவாள்) பிறகு சுவாமிக்கு அபிஷேகமும் தீபாரதனையும் நடக்கும். நான் சிறுவனாக இருந்த காலத்தில் சேண்டியை எடுத்துக்கொண்டு தெரு முழுவதும் சென்று அபிஷேகம் நடக்கப்போகிறது, எல்லோரும் வாருங்கள் என்று தண்டோரா போடுவோம். சில சமயம் நானும் தண்டோரா கோஷ்டியோடு சென்றதுண்டு. இப்போதெல்லாம் மைக்கிலேயே அறிவிக்கிறார்கள்.
பிறகு சர்க்கரைப் பொங்கலும் பஞ்சாமிர்தமும் பிரசாதமாகத் தருவார்கள். பிரசாதம் விநியோகம் போது ஒரு பெரிய அடிபுடி சண்டையே நடக்கும். யாரு நிறைய தடவை பிரசாதம் வாங்குகிறார்கள் என்று சிறுவர்கள் இடையே ஒரு போட்டியே நடக்கும். நான் சக்கரைப்பொங்கல் மட்டும் வாங்கிக் கொள்வேன். பஞ்சாமிர்தம் பிடிக்காது. எல்லோருமாக வாய்க்காங்கறைக்குச் சென்று அங்கு மதில் படியில் உட்கார்ந்து சாப்பிடுவோம்.

மாலையில் சுவாமி புறப்பாடு இருக்கும். மேள தாளங்கள் முழங்க குழந்தைகள் ஆலவட்டம் பிடிக்க, சுவாமி தெருவை ஒரு சுற்று சுற்றி வருவார். நான் சிறு பிள்ளையாக இருந்த போது நான் தான் தீவட்டி பிடிப்பேன் என்று அடம் பிடிப்பேன். நான் தீவட்டி ஏந்திச் செல்வதை என் தாத்தா பார்த்தால் (என்னைத்தவிர) எல்லோருக்கும் திட்டு விழும் என்பதால், எனக்கு தீவட்டி கொடுக்க மாட்டார்கள். தீவட்டி கிடைக்கவில்லையே என்று பலமுறை ஏங்கியிருக்கிறேன். என் நண்பர்களுடன் கொடிச் சண்டை போடுவோம். இரவு தீபாரதனைக்குப் பிறகு பெண்களும் சிறுமிகளும் கோவிலை கழுவிவிட்டு மறுநாள் விசேஷத்திற்குக் கோலம் போடுவார்கள். பருவ வயதை அடைந்த பின் சில பெண்களை கலாய்த்த அனுபவமும் உண்டு. ஒரு படை இளநீர் வெட்ட கிளம்பும். எனக்கு மரம் ஏறத்தெரியாதலால், கீழேயே நிற்பேன். வெட்டும் இளநீரில் சரிபாதி பங்கு எங்களுக்கு. மற்றவை தான் பிள்ளையாருக்கு.

ஒன்பது நாள் திருநாள் முடிந்து பத்தாவது திருநாளாக சதுர்த்தித்திருநாள் நடைபெறும்.
சதுர்த்திக்கு முந்தைய நாள் இரவு தெருவில் எந்த பையனும் தூங்க மாட்டான். எல்லோரும் தோரணம் கட்டுவோம். வீதி வீதியாக சென்று சுவரொட்டிகள் ஒட்டுவோம். அதிலும் "விளம்பரம் செய்யாதீர்" என்று எங்கு ஒட்டியிருக்கிறதோ அங்கு தான் ஒட்டுவோம். சில வீடுகளில் சுக்குமல்லிக் காப்பி, தேனீர், உப்புமா, புளியோதரை தயிர் சாதமெல்லாம் தருவார்கள். இது போததென்று ஏதாவது தின் பண்டமும் தருவார்கள். இந்த கொண்டாட்டங்களுக்காகவே சதுர்த்திக்கு முந்தைய நாள் அங்கு கழிக்க வேண்டும். ஓவ்வொருவர் வீட்டிலும் போட்டிருக்கும் கோலங்களைக் காண கணகள் இரு கோடி வேண்டும்.
காலையில் கணபதி ஹோமம் ருத்ர ஏகாதசி பிறகு தாரா ஹோமம், அப்புறம் சுவாமிக்கு அபிஷேகமும் தீபாரதனையும் நடைபுபெறும்.

மாலையில் தெருவே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். வீதி முழுவதும் மின் விளக்கு பொருத்தியிருப்பார்கள். பதினெட்டுதெருவிலுமுள்ள மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு வருவார்கள். அவர்களை பார்ப்பதற்காகவே நாங்களெல்லாம் திண்ணையில் உட்கார்ந்து வம்படிப்போம். என்ன Brigade Road என்ன Forum. அன்று வரும் ஃபிகருங்களுக்கு ஈடு இணையுண்டா. கோவில் கும்பத்திற்கு அபிஷேகமும் பூஜை நடக்கும். சஹஸ்ரநாம ஜபத்திற்க்குப்பின் ஒரு நீண்ட பிரேக். இரவு பத்து மணியளவில் சுவாமி புறப்பாடு. இம்முறை எல்லா தெருவையும் சுற்றி வருவார். வெகு ஜோராக அலங்காரம் இருக்கும். இந்த சப்பரம் தள்ளுவதே ஒரு பெரிய வைபவம். எல்லா தெருவையும் சுற்றி வந்து சுவாமி இறங்குவதற்கு எப்படியும் இரண்டு மணியாகிவிடும். சுவாமி வந்திறங்கியபின், நாதஸ்வரக்காரர் ஒரு சூப்பர் பாட்டு இசைப்பார். (கணேசன் இசைக்கும் 'நாத முடி மேலிருக்கும் நாகப்பாம்பே'யை கேட்டால் நமக்கே படமெடுத்து ஆடத் தோன்றும்). சுவாமியை உள்ளே வைத்து விட்டு எல்லோருக்கும் பிரசாதம் குடுப்பார்கள். அதிலும் ஸ்பெஷல் புளியோதரை மற்றும் பானகம். சுவாமி கூட வந்தவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். அதை வாய்க்கால் படியில் போட்டு சாப்பிட்டு விட்டு உறங்கி மறு நாள் எழுந்தோமானால், ஊருக்குத் திரும்ப மனதே இருக்காது. பத்து நாளும் ஜே ஜே யென்று இருந்து விட்டு தெருவே அழுத முகமாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் கனத்த இதயத்தோடு திரும்பி ஊருக்கு வருவேன்.
பத்து நாளும் சதுர்த்தி திருநாளை கல்லிடையில் கழிக்க வேண்டும் என்ற நெடு நாள் ஆசை என்று நிறைவேறப்போகிறதோ தெரியவில்லை.