Pages

April 28, 2008

எங்கே போனார்கள் கலாசர பாதுகாவலர்கள்

சென்ற வாரம், கோலிவுட்டில் இதற்கு முன் நடத்தியிறாத ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. தசாவதாரம் ஆடியோ ரிலீஸ். ஒலிநாடா வெளியான மறு நாளே, இணையதளத்திலிருந்து டவுண்லோட் செய்துவிட்டேன் என்பது வேறு விஷயம். ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு எப்படித்தான், இப்படி ஆடம்பர கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இவ்வளவு நேரம் கிடைக்கிறதோ? "நாட்டுக்காக நிறைய உழைத்தாகி விட்டது. மீதி நாட்களை இம்மாதிரியான கேளிக்கை நிகழ்ச்சிகளில் தான் செலவிடப் போகிறேன்" என்று அவர் நினைத்திருந்தால், ஆட்சி பொறுப்பை மற்றவரிடம் (அதான் வாரிசு ரெடியா இருக்காரே) ஒப்படைத்துவிட்டு, இவர் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டியது தானே?
ஒரு ஒலிநாடா வெளியிடும் விழாவிற்கு இவ்வளவு விளம்பரமா? அவ்வளவு பணமா ஒரு தனிமனிதனிடம்? இதை எவ்வளவோ நல்வழியில் செலவழித்திருக்கலாமே. "இவ்வளவு ஆடம்பரமாக நடத்தும் ஒரு விழாவிற்கு நான் தலைமை ஏற்பது எனக்குப் பிடிக்கவில்லை" என்று முதல்வர் ஒரு போடு போட்டிருக்கலாமே. ஊருக்குத்தான் உபதேசம் செய்வார்கள் போலிருக்கு. கமல்ஹாசனும் ஆஸ்கர்.ரவிசந்திரனும் தனது செல்வாக்கைக் காட்டிக்கொள்ள ஒரு நல்ல அரங்கம்.
அதிலும் மல்லிகா ஷெராவத் வந்திருந்த லட்சணம், ஐயோ! இப்படி ஒரு ஆடையா அணிந்து வரவேண்டும். கவர்ச்சியை மீறி ஆபாசமே மிஞ்சியிருந்தது. மல்லிகா அணிந்திருந்த உடையைவிட, சிவாஜி பட விழாவிற்கு வந்திருந்த ஷ்ரியா, எவ்வளவோ கண்ணியமான உடை அணிந்துவந்திருந்தார். அதற்கே கழகக்கண்மணிகள் சட்டசபையில் கூச்சலிட்டார்கள். இதெல்லாம், அவர்கள் கண்களில் படவில்லையா இல்லை, உறுத்தவில்லையா?

இவ்வளவு பணம் விரயம் செய்து, படம் மட்டும் ஊத்திக்கொண்டதென்றால், தயாரிப்பளர் 'அம்பேல்' என்பது மட்டும் உறுதி.

April 20, 2008

கிரிக்கெட் திருவிழா(வா)?

கோடை விடுமுறைக்கு முன்னெல்லாம் புதுப்படம் தான் ரிலீஸ் செய்துகொண்டிருந்தார்கள். இப்போது, சினிமாவையும் கிரிக்கெட்டையும் கலந்து ஒரு காக்டெயில் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஐ.பி.அல் லீக் ஆட்டங்கள் பயங்கர ஆர்பாட்டத்துடன் ஆரம்பித்திருக்கின்றன. முதல் மூன்று ஆட்டங்களிலும் த்ரில் இல்லாவிட்டாலும் விறுவிறுப்பாகவே சென்றுள்ளன. பேட்ஸ்மனுங்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த லீக் முறை ஆட்டங்களில் இது வரை அசத்தியவர்கள் அந்நிய நாட்டு வீரர்கள் தான். மண்ணின் மைந்தர்களான ராஹுல் டிராவிட், தோனி, காங்குலி, யுவ்ராஜ், செஹ்வாக் போன்றவர்கள் இது வரை சோபிக்க வில்லை. இனி வரும் ஆட்டங்களில் இவர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் கிரிக்கெட் இவ்வளவு வளர்வதற்குக்காரணம், விளையாட்டையும் மீறிய ஒரு தேசிய உணர்வு தான். அப்படி இருக்கையில் இந்திய அணியில் விளையாடும் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்யும் மெக்குல்லம், ஹஸ்ஸி போன்றவர்களின் ஆட்டம் பார்க்க நன்றாக இருந்தாலும், மனதோரத்தில் ஒரு சின்ன நெருடல். இந்த லீக் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் திறமை காட்டினார்களேயன்றி, இந்த மாதிரியான லீக் ஆட்டங்களுக்கு வெகு சீக்கிரமே மக்களிடம் வரவேற்பு குறைந்து விடும். இப்போதே மொஹாலியில் நடந்த முதல் ஆட்டத்திலேயே பாதி காலி கேலரிதான் காணப்பட்டது.
இவ்வளவு விலை கொடுத்து தங்களை வாங்கியுள்ள கிளப் முதலாளிகள் முகம் சுளிக்காமல் இருக்க இந்திய வீரர்கள் தங்கள் திறமையை காட்டியே ஆக வேண்டும். இல்லையெனில் அடுத்த முறை இந்திய வீரர்களை விட்டுவிட்டு அந்நிய நாட்டு வீரர்களை ஏலம் எடுத்து விடுவார்கள்.




April 16, 2008

அழிக்கப்பட்டு வரும் காலச்சுவடுகள்

சென்ற வாரம், ஹோசூரில் இருக்கும் சந்திரசூடேஸ்வரர் கோயிலுக்குப் போயிருந்தேன். ஒரு சிறிய மலையின் மீது மிகப்பழமையான கோயில். ஹோசூர் ஊரையே இந்த மலைமீதிருந்து பார்க்கலாம். மாலை வேளைகளில் காற்று பிய்த்துக்கொண்டு போகும். என் மனைவிக்கு பெங்களுர் அருகிலுள்ள இடங்களிலேயே மிகவும் பிடித்தது. இங்குள்ள சந்திரசூடேஸ்வரர் ஆலயம் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கோயில் குருக்கள் சொல்கிறார். விஜயநகரை ஆண்ட கிருஷ்ண தேவராயரின் முப்பாட்டனாருக்கு முப்பாட்டன் கட்டியது என்று நம்பப்படுகிறது. ஆலயத்தின் பிரதான மூர்த்தி சிவன். சுயம்பு ரூபத்தில் காட்சி அளிக்கிறார்.

ஆர்பாட்டமும் புதுமையும் நிறைந்த கோயில்களை விட, அமைதியும் பழமையாகவும் இருக்கும் கோயில்களில், மனது ஒருமித்து இறைவனை நினைத்து தியானிக்க முடியும் என்பது என் கருத்து. அதை விட பழமையான ஆலயங்களின் பின்னால் இருக்கும் சரித்திரம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் பிடித்த விஷயம். நான் சொல்வது, கோயில் அமையப்பெற்ற ஸ்தல வரலாறு அல்ல. கோயில் எந்தக் காலத்தில், யாரால் கட்டப்பட்டது. எவ்வளவு நாட்களில் கோயில் கட்டப்பெற்றது. யார் யார் இந்தக் கோயிலை நிர்மாணித்தனர்? அக்கால கட்டத்தில், மக்களின் வாழ்வு எப்படி இருந்தது? இதெல்லாம் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் அதிகம். இந்த விஷயங்களெல்லாம், கோயில் சுவர்களிலே செதுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களில் புதைந்திருக்கும். கவனமாக அதை படித்தோமேயானால், இதிலிருந்து பற்பல ஸ்வாரஸ்யமான விஷயங்கள் புலப்படும். இம்மாதிரி கல்வெட்டுக்களில், என்ன எழுதியிரிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம்.ஆர்வம் என்று சொல்வதை விட ஆசைக்கோளாறு என்றும் சொல்லலாம்.
என்னைப் பொறுத்தவரை, கல்வெட்டுக்கள் எதோ கதை சொல்லும் விஷயங்கள் மட்டுமல்ல. அக்காலத்து மனிதர்கள் தன்னைத் தொடர்ந்து வரும் தலைமுறைக்குச் சொல்ல நினைத்த சில முக்கியமான விஷயங்கள். இப்போ ஆஃபிஸிலே நாம் செய்யும் ப்ரோஜெக்ட்டை, நம்மைத்தொடர்ந்து, அதை மெயின்டெய்ன் பண்ணுபவர்களுக்கு வசதியாக இருக்க டாகுமெண்ட் செய்வதில்லையா? அது போலத்தான், ஏதோ ஒரு முக்கியமான செய்தியை தலைமுறை தலைமுறையாக பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் செதுக்கப்பட்டவை தான் கல்வெட்டுக்கள். இன்றும் வரலாற்றுச் சான்றாக விளங்குவது, கோயில்களில் காணப்படும் எண்ணிலடங்கா கல்வெட்டுக்கள் தான்.


இங்குள்ள ஹோசூர் கோயிலிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் இருக்கின்றன. என்ன தான், விஜயநகர மன்னர்கள் கட்டியிருந்தாலும் கல்வெட்டுக்கள் எல்லாம் 900 வருடங்களுக்கு முன்னமே இருந்த வட்டெழுத்துத் தமிழில் இருந்தது வியக்கத்தக்கது. இந்த லிபியிலிருந்துதான், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள எழுத்துக்கள் உருவாகியிருக்கின்றன. (என்ன சொன்னாலும், என் மனைவி ஒத்துக்கொள்ள மாட்டாள். வட்டாள் நாகராஜ் இதைப் படித்தால் என் வீட்டிற்கு ஆட்டோவில் அடியாள் அனுப்புவார்.)
சென்ற வாரம் ஹோசூர் கோயிலுக்குச் சென்றிருந்த போதுதான் கவனித்தேன், கோயில் சுவர்களை, செப்பனிடுகிறோம் வெள்ளையடிக்கிறோம் பேர்வழியென்று, அக்கெல்வெட்டுக்கள் அழியும் வண்ணம் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கோவிலில் திருப்பணி மேற்கொள்ளும் மனிதர்கள் இது கூடவா தெரியாமலிருப்பர்கள்? கல்வெட்டுக்கள், எவ்வளவோ அந்நிய படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்களைத் தாண்டி காலத்தினால் அழிக்க முடியாத காலச்சுவடுகளை, இப்படியா, பொறுப்பில்லாமல் அதன் மேல் வெள்ளை பூசி, சிமெண்ட் பூசி நம் மனிதர்களே அழிக்கப் புறப்படுவார்கள்?

ஆஃபீஸ் விஷயமாக ஒரு முரை இத்தாலி நட்டிலுள்ள மிலான் நகரம் சென்றிருந்தேன். அங்கு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டுஓமா என்ற சர்ச் உள்ளது. அங்கு மைகேல் ஏஞ்சலோவின் வண்ண ஓவியங்கள் இருக்கின்றன. சர்ச்சின் சில பாகங்கள் காலப்போக்கில் பழுதடைந்ததால், அதை புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் சொன்ன தகவல், வியக்க வைக்கிறது. 17ஆம் நூற்றாண்டில் இந்த சர்ச் எப்படிக் கட்டப்பட்டதோ, அதே போல், அதன் பழமை கெடாத வாறு அதை, புதுப்பித்துக் கொண்டிறுந்தார்கள். இப்படி பழைய கட்டிடங்களை புதுப்பிப்பதற்கென்றே சில நிபுணர்கள் இருக்கிறார்களாம். வெறும் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கட்டிடத்தையே அவர்கள் அப்படி பாதுகாக்கும் போது, அதை விட பழமையான, பல நூற்றாண்டுகளாக அழியாதிருக்கும் காலச்சுவடுகளை, க்ஷண நேரத்தில் அழித்திடுதல் நியாயமாகுமா? போதாக்குறைக்கு, இந்தியாவில் கலாசாரத்துறைக்கென்றே ப்ரத்தியேகமாக ஒரு அமைச்சகம், ஒரு மத்திய மந்திரி, அவர் கீழ் சில அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அமைச்சகம், அதற்கு ஒரு மாநில மந்திரி, இவர்களெல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நல்ல கெட்ட வார்த்தையில் திட்டணும் போல இருக்கு!!

April 11, 2008

தினம் ஒரு பதிப்பு

நம்ம சாலமன் பாப்பைய்யா எப்படி சன் டி.வி'ல தினம் ஒரு திருக்குறள் சொல்றாரோ, அது மாதிரி நான், தினம் ஒரு பதிப்பு எழுதணும்'னு ஒரு ஆசை. தினமும் ஏதாச்சும் எழுதணும்'னா நான் நெசாமவே வெட்டித்தண்டமாத்தான் சுத்திட்டுத்திரியறேன்னு நினைக்கப்படாது.
எங்க வூட்டம்மாவுக்குக்கூட இப்போ நான் இன்னா எழுதுதேன்னு படிக்கற ஆர்வம் வந்திருக்கு. நான் எழுதுறதை தப்புத்தப்பா படிச்சு தமிழை கொலை பண்ணுவது வேறு விஷயம்.

இருந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகம் பயன் பெறுமாரு எழுதட்டாலும், ஏதோ டைம் பாசுக்காச்சும் படிக்கற மாதிரி ஏதாவது எழுதி எல்லாரையும் பதம் பார்க்க போறேன்.

So Guys n Gals, watch out this space daily for more updates from tomorrow.

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ??

அல்லாருக்கும் இந்த தபா தமிழ் புத்தாண்டு வாழ்த்து கிடையாது. அதான் இனிமே பொங்கல் அன்னிக்கே தமிழ் புத்தாண்டு கொண்டாடிக்கிங்கடான்னு சொறிஞர், சாரி கலைஞர் சொன்னப்பரம் வாழ்த்து சொல்ல முடியுமா? என்னமோ இவங்க தான் தமிழ் காலண்டரையே கண்டு புடிச்ச மாதிரி புத்தாண்ட திடீர்னு பொங்கலுக்கு மாத்திட்டாங்க. நல்ல வேளை, இந்த வருஷம் சித்திரை 1 ஞாயிற்றுக்கிழமை வரதுனால ஒண்ணும் இல்லை. இதே ஏதாவது வேலை நாட்கள்ல வந்திருந்தால், ஒரு நாள் லீவு போயிருக்கும். :(

இதுல உள்ள கூத்து என்னன்னா, கலைஞர் தொலைக்காட்சில சிறப்பு ஒளிபரப்பு நிகழ்ச்சி வேற. தமிழ் புத்தாண்ட மாத்திப்புட்டதுனால, இவங்களால சிறப்பு நிகழ்ச்சி ஒண்ணும் ஒளிபரப்பாமல் இருக்க முடியாது. ஏன்னா, மற்ற எல்லா சேனல்களும் சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சின்னு ஏதாவது போட்டுத் தாக்கறான். இவனால நிகழ்ச்சி போடாமலும் இருக்க முடியாது. போட்டாலும் அதுக்கு ஏதாவது சிறப்பு காரணமும் சொல்லணும். அதனால, இவங்க சொல்லுறது, சித்திரை மாதத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சின்னு விளம்பரம் வருது.

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க? ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ??

April 09, 2008

நகர வாழ்க்கையிலே தொலைத்தவை

கல்லூரி படிப்பு முடித்து, பிழைப்புக்காக நகர வாழ்க்கையை ஏற்றுக்கொண்டபின், கொஞ்சம் பணம், வீடு கார் எல்லாம் வாங்கியாச்சு. ஆனால், எதையாவது தொலைத்தால் தானே சில பொருட்கள் கிடைக்கும். அப்படி நகர வாழ்க்கைக்கு நகர்ந்த பின், நான் தொலைத்தது என்ன?
ஆற்றங்கரைக்குளியல்
எப்போ தாத்தா வீட்டிற்குப் போனாலும், ஆற்றங்கரை குளியல் இல்லாமல் திரும்பமாட்டேன். எருமை மாடு கூட இவ்வளவு நேரம் தண்ணியில இருக்காதுடா என்று அப்பா சொல்வார். அவ்வளவு நேரம் தண்ணியிலேயே நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருப்பேன். பெங்களூரிலிருந்து 140 கி.மீ தூரத்தில் இருக்கிறது பக்கத்திலுள்ள ஆற்றங்கரை :(

பாவாடை தாவணி மயில்கள்
பி.கு. நல்ல வேளை, என் மனைவிக்கு, தமிழ் படிக்கத் தெரியாது. அதனால் தைரியமாக இதை எழுதுகிறேன். எங்கள் வீட்டுப்பக்கத்தில், திருநெல்வேலியின், பெயர் 'போன' மகளிர் கல்லூரி இருக்கிறது. எங்கள் வீட்டைக்கடந்து தான் நிறைய பெண்கள் காலேஜுக்குப் போகணும். நிறைய பெண்கள் பாவாடை தாவணியில் தான் தினமும் செல்வார்கள். என்ன தான், பெங்களுர் பெண்கள் ஜீன்ஸும் டி-ஷர்டும் போட்டிருந்தாலும், பாவாடை தாவணி மாதிரி வருமா? இதைப் படித்து விட்டு, சில பெண் வாசகர்கள், நான் சரியான மஹா ஜொள்ளன் என்று நினைக்கலாம். என்ன செய்ய, உண்மையை ஒப்புக்கொண்டு தானே ஆகணும் !

பம்பரம் கோலி கிட்டிப்புல்
நாங்கள் தெருவில் அவ்வப்போது விளையாட்டு சீசனை மாற்றுவோம். சில நாட்களுக்கு பம்பரம், சில நாட்களுக்கு கோலி, சில சமயம் கிட்டிப்புல். மீதி நேரங்களில் கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டு. பம்பர விளையாட்டில் மற்றவர் பம்பரத்தில் ஆக்கர் வைப்பதை (பம்பரத்தின் ஆணியால், மற்றவர் பம்பரத்தில் ஏற்படுத்தும் விழுப்புண்க்கள்) எவ்வளவு வீர தீரமான செயல். வித விதமான கலர்களில் கோலிக்காய் வாங்கி, அம்மவுக்குத்தெரியாமல் பதுக்கி வைத்து, ஆஹா அதெல்லாம் ஒரு காலம். கிட்டிப்புல் சற்றே விவகாரமான விளையாட்டு. சற்றே ஏமாந்தாலும், உடம்பில் ஏதாவது காயம் ஏற்படுத்தி விடும். வீட்டில் நான் கிட்டிப்புல் விளையாடப் போனால் திட்டுவார்கள். இருந்தாலும், எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டு விளையாட ஓடிடுவேன். என் மகனுக்கெல்லாம், இந்த விளையாட்டுக்களை காட்ட வேண்டுமென்றால், ஒரு Documentary படம் எடுத்து வைத்துதான் காட்ட வேண்டும். என் மகன் பம்பரத்தைப் பார்த்தால் ஏதோ antique பொருள் என்று நினைக்கக்கூடும்.

நகர வாழ்க்கையில் தொலைத்தவை அடுத்த பதிப்பில் தொடரும்