Pages

March 26, 2010

சபாட்டிகல் விடுமுறை

நான் முதலில் வேலை பார்த்த நிறுவனத்தில் சபாட்டிக லீவு (Sabbatical) என்ற சலுகை இருந்தது. வேலை பார்க்கும் போது, மேலே படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் இந்தச் சலுகையை உபயோகப் படுத்திக்கொண்டு, இரண்டு மூன்று வருடங்கள் படித்து முடித்து விட்டு, மீண்டும் நாம் பிடுங்கிக் கொண்டிருந்த ஆணியை, ஐ ஆம் சாரி, பார்த்துக் கொண்டிருந்த அதே வேலையைத் தொடரலாம். ரிஸெஷ்ஷன், ஸ்லோடவுண் என்ற பெயர்களைத் தெரிந்திராத பொற்காலம் அது. சில பெண்கள் குழந்தை வளர்ப்புக்காகக் கூட சபாட்டிகல் எடுத்துக் கொண்டு போய் வந்திருக்கிறார்கள். வேறெந்த விஷயங்களுக்காகவெல்லாம் இச்சலுகையை உபயோகப் படுத்திக்கொள்ளலாம், தெரியவில்லை.

சொல்ல வந்ததைச் சொல்லாமல் வேறென்னவோ எழுதிக் கொண்டிருக்கிறேன். விண்ணைத் தாண்டி வாருவாயா கூட்டிப் போகவில்லையென்றால், நான் வாசப்படி தாண்டிருவேன் என்று காயத்ரி பயமுறுத்தினாள். சிம்பு படங்கள் யாவும் திருட்டு வி.சி.டி.யில் கூடப் பார்க்க லாயக்கிலாதவை என்று நினைப்பவன் நான். விஜய் கூட ஜோடி சேர்ந்த பிறகே த்ரிஷா ரசிகர் மன்றத்தைக் கலைத்து விட்டேன். படத்தைத் தியேட்டரில் போய்ப் பார்ப்பதற்கு கௌதம் மேனனும் ரஹ்மானுமே ஒரு மாதிரியான மோடிவேஷன். தொழில் நுட்ப வளர்ச்சியின்மையால், கைபேசியில் பேசும் போது முகம் தெரியாததனால், முகத்தைச் சுளித்துக் கொண்டு “போகலாம்” என்றேன்.

கதையென்னவோ, ஹைதர் அலி காலத்துக்கும் பழமையான காதல் கதை தான். அம்பிகா அமராவதி, சலீம் அனார்கலி, ரோமியோ ஜூலியட் போல் வலி நிறைந்த காதல் கதை. வித்தியாசமாகச் சொல்லியிருக்கோம் என்று விளம்பரப் படுத்துகிறார்கள். ஆனால் என்ன வித்தியாசம் என்று நானும் கடைசி வரை தேடிப் பார்த்தேன். என் மூளைக்கு ஒன்றும் எட்ட வில்லை. ஆலப்புழை அழகாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. ஆலப்புழை காட்சிகள் வரும்போது, காயத்ரியின் காதில் விழாமல், மனதுக்குள்ளேயே “வாவ்” சொல்லிக் கொள்வேன். உறக்கச் சொன்னால், “பார் எவ்வளவு அழகா இருக்கு. இன்றே, இல்லை இல்லை இந்த க்ஷணமே அங்கே போக வேண்டும்” என்பாள். அவள் சொந்த ஊர் ஆலப்புழை. மாயை எப்போதுமே அழகாகத் தானிருக்கும். அதன் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை கசக்கும் என்று பட்டினத்தார் சொன்னது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

படத்தில் என்னைக் கவர்ந்தது கேமராவும், உடையலங்காரமும் தான். முகங்களை கிட்டத்தில் காட்டி, பின்னாலுள்ளனைத்தையும் டி-ஃபோகஸ் செய்து நிறைய டெப்த் ஆஃப் ஃபீல்டு கொடுத்திருக்கிறார் கேமரா மேன். அவருக்குப் பாராட்டுகள். கண்களைக் கூச வைக்காமல் காஷுவல் உடைகள். ஒரு குச்சிக்குப் புடவை கட்டிவிட்டால் கூட அழகாகத் தானிருக்கும். த்ரிஷா, கேட்க வேண்டுமா? அம்சமாகவே இருக்கிறது. விஜய், விஷால் போன்றவர்களின் படங்களுக்கு உடையலங்காரம் செய்பவர்கள் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.

ரஹ்மான் இசை பற்றி சொல்லவே வேண்டாம். ஆரோமளே பாட்டில் வரும் மெட்டாலிக் கிடாருக்காகவே ரிபீட் மோடில் போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஏன் இப்படி யானை பிளிறும் சத்தத்தில் கத்த வைத்திருக்கிறார் தெரியவில்லை.

திரும்பத் திரும்ப “நான் ஏன் ஜெஸியைக் காதலிக்கணும்” என்று சிம்பு கேட்கும் போதெல்லாம், “ஏன்னா அவ தாண்டா ஹீரோயின்” என்று கத்த வேண்டும் போலிருந்தது.

சில விமர்சனங்கள் ஆஹா ஓஹோ’வென்று கொண்டாடுகின்றன. சில விமர்சனங்கள் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்கின்றன. நாம் செய்யும், செய்ய நினைக்கும் காரியங்களை படத்தில் வரும் பாத்திரங்கள் செய்தால், அல்லது நம்முடைய குணங்களை ஒத்த ஒரு பாத்திரத்தைப் படத்தில் பார்த்தால் அப்படம் நம் மனதில் தங்கி விடும். எல்லோருக்கும் எப்படியோ, நான் ரசித்த படங்கள் அனைத்தும் இந்த ரகம் தான். ஆனால் வி.டி.வி’யில் அப்படியெந்த பாத்திரமும் என்னோடு ஒத்துப் போகவில்லை.

“வாழ்க்கையில் காதலின் வலியை உணர்ந்தவர்களால் தான் இப்படத்தை முழுமையாக ரசிக்க முடியும்” என்றொரு விமர்சனம் படித்தேன். படம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும் போலுள்ளது. இரண்டாம் முறை பார்க்கும் போது, படம் பிடித்திருக்கணுமானால்..... மீண்டும் முதல் பாராவைப் படிக்கவும்.

ஏதாவது புரிகிறதா? புரிந்தால், பின்னூட்டத்தில் தயவு செய்து எழுத வேண்டாம்.

March 03, 2010

சன் தொலைக்காட்சியை தடை செய்தால் என்ன??

நேற்றிரவு 8.30 மணிக்கே, 10 மணிக்கு நித்தியானந்தத்தின் குட்டு வெளிப்படப் போகிறது என்று சன் டி.வி.யில் செய்திச்சுருள் வரத் தொடங்கியாகிவிட்டது. நான் இது வரை நித்தியானந்தத்தின் அருளுரைகளையோ பேச்சுக்களையோ கேட்டதில்லை. அவர்(ன்) செய்தது நியாயம் என்றும் சொல்ல வரவில்லை. இம்மாதிரி ஓரிருவர் இருப்பதால், உருப்படியாக இருக்கும் மற்ற சாமியார்களுக்குத்தான் சிக்கல். நான் சொல்ல வரும் விஷயம் அதுவல்ல.

ஒரு ஆள் கடவுள் பெயரைச் சொல்லி காம லீலைகளில் ஈடுபடட்டும், எக்கேடு கெட்டுப் போகட்டும். இம்மாதிரி ஆட்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது செய்தி ஊடகங்களில் கடமையும் கூட. ஆனால் அதற்காக அதை உலகமே பார்க்கும் வண்ணம் ஒளிபரப்ப வேண்டுமா. அதுவும், இத்தனை மணிக்கு ஒளிபரப்பப் போகிறோம் என்று விளம்பரம் செய்துவிட்டு ஒளிபரப்ப வேண்டும் என்று என்ன கட்டாயம்.

தனது டி.ஆர்.பி ரேடிங்கைக் கூட்ட வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா. Youtube'ல் அந்த வீடியோ படத்தை சில நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை. அவ்வளவு ஆபாசமாக இருக்கிறது. சினிமாப் படங்களுக்கு இருக்கும் தணிக்கை குழு போல் தொலைக் காட்சி சானல்களுக்கு இல்லாதது ஏன் என்று தெரியவில்லை. ஒரு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்று இப்படியெல்லாமா ஒளிபரப்புவார்கள்? அதிகாரம் வர்க்கம் தன் கையில் இருக்கு, தன்னை கேள்வி கேட்க முடியாது என்பதற்காக இப்படியெல்லாமா நடந்து கொள்வது. இந்த கேடுகெட்ட படத்துக்குப் பின்னாலிருந்து ஒருவர் கமெண்டரி வேறு. ஒரு செய்திச்சானல் என்பது குடும்பத்தோடு பார்க்கப் படும் ஒன்று. அதில் இம்மாதிரியான காட்சிகள் ஒளிபரப்பப்படலாமா? இவர்களுக்கென்று ஒரு work ethics வேண்டாம்?

இரவு 11 மணிக்கு மேல் ஆபாசமாக ஆடையணிந்து வரும் நங்கைகளைக் காட்டுகிறார்கள் என்று FTV'ஐ சில நாட்கள் தடை செய்தது, இந்திய அரசு. அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிறகே அந்த சானல் இந்தியாவில் ஒளிபரப்ப அனுமதி வழங்கப் பட்டது. இப்போது நித்தியானந்தாவின் செய்திருக்கும் ஜல்ஸா வேலை, ஆபாசமாகத் தெரியவில்லை. இதென்ன சமூக விழிப்புணர்வூட்டும் ஆவணப் படமா? இப்படிப் பட்ட ஒரு ஆபாசமான படத்தைக் காட்டியதற்காக சன் குழுமம் மேல் யாராவது பொது நல வழக்கு தொடர்ந்தால் நல்லது.

பதிவர்கள் ட்விட்டர்கள் எல்லோரும் நித்தியானந்தம் செய்த லீலைகளையும் அந்தாளைத் திட்டும் நோக்கத்திலேயே தான் ஜல்லியடிக்கிறார்களே, தவிர ஒரு ஊடகம் இப்படி பொறுப்பற்றத்தனமாக நடந்து கொண்டது பற்றி யாரும் வாய் திறக்கக் காணோம். ஆட்சியாளர்களின் சொந்தக்காரர்களை ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயமோ என்னவோ?