Pages

July 04, 2008

தின்னுட்டியா??

விஜய் டி.வி நடத்தும் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் ஒருவர், வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களில் இருக்கும் நகைச்சுவைகளை அழகாகக் கதை போல் சொல்வார். அப்படி என் வாழ்க்கையிலும் சில ஸ்வாரஸ்யமான சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.
சிறு வயதில் (பத்தாவது படிக்கும் போது என்று நினைக்கிறேன்)அப்பாவோடு ஒரு முறை நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் கான்ஃப்ரன்ஸுக்குப் போயிருந்தேன். இரவு டின்னர் புஃபே (buffet) முறை. நாம போனதே அதற்காகத்தானே?! அப்பா என்னை அம்போ என்று விட்டுவிட்டு அவரது சகாக்களோடு சாப்பிடப் போய்விட்டார். முதல் முறையாக புஃபே டின்னர் சாப்பிடுகிறேன். அதுவும் நட்சத்திர ஹோட்டலில். எதிலிருந்து தொடங்குவது, எதை முதலில் விழுங்குவது என்று ஒரு பெரிய திண்டாட்டாம், மனப்போராட்டம். பிச்சைக்காரன் பாத்திரத்தில், எல்லோர் வீட்டு சாப்பாடும் இருக்குமே. அது மாதிரி ஒரே தட்டில் எதையெல்லாம் எடுத்துக்கொள்ள முடியுமோ, அத்தனையும் எடுத்துக் கொண்டேன். இப்படி நான் சாப்பிடுவதை அம்மா, "அவக்கை மாதிரி சாப்பிடாதே. நீ சாப்பிடுவதை யாரும் எடுத்துண்டு போக மாட்டா" என்று அடிக்கடி திட்டுவாள். இதெல்லாம் எனக்கு செவிடன் காதில் ஊதின சங்கு மாதிரி தான்.
ஒவ்வொரு பதார்த்ததையும் எடுத்துக் கொள்ளும் முன் முன்னால் எழுதியிருக்கும் அதன் பெயரைப் படித்துப் பார்ப்பேன். அது அசைவம் இல்லை என்று தெரிந்த பிறகு தான் எடுத்துக் கொள்வேன்.
இப்படித் தான் ஒவ்வொண்ணா பார்த்துப் பார்த்து எடுத்துக் கொண்டிருக்கும் போது, அது என் கண்ணில் பட்டது. அதற்கு முன்னால் எழுதியிருப்பதும் எனக்குப் புரியவில்லை.சரி இது என்ன என்று தெரிந்து கொள்ள, அங்கு நின்றிருந்த சர்வரிடம், "Is it vegetarian or Non-Vegetarian" என்று கேட்டேன். பின்ன, அம்மாம் பெரிய ஹோட்டல்ல போயி இங்கிஷுல பேசினாத்தானே ஒரு பந்தாவா இருக்கும். அவர் சொன்ன ஒரு வார்த்தை பதில் என்னை இன்னும் சிந்தனையில் ஆழ்த்தியது. ரோஜா அரவிந்சாமி மாதிரி ஒரே வார்த்தையில் அவர் சொன்னது "XXXX". (அவன் என்ன சொன்னான் என்று இறுதியில் சொல்கிறேன். அது என்னவென்று நான் இப்பொழுதே சொல்லிவிட்டால் ஸ்வாரஸ்யம் இருக்காது. கொஞ்சம் பொறுமை காக்கவும் )
நம்ம மரமண்டைக்கு இங்கிலிஷுல கேள்வி மட்டும் தான் பந்தாவா கேட்க முடிந்ததேயொழிய அவர் சொன்னது என்னவென்று புரியவில்லை. அதனால் மறுபடியும் கேட்டேன். அப்படியும் நான் விடவில்லை. மறுபடியும், "Sir, Is it vegetarian or Non-Vegetarian?". இந்த தடவை கொஞ்சம் மருவாதை ஜாஸ்த்தி. அந்தாளுக்கு அப்பவாச்சும் தெரியவேண்டாம். இது வெறும் வெட்டி பந்தா பார்ட்டி. இதுக்கு நாம சொன்னது மண்டையில ஏறலைன்னு. மறுபடியும் அந்தாளு அதே ஒரு வார்த்தையைச் சொன்னான். யாமறிந்த கூட்டு கறிகளிலே இது போல் எங்கும் கேள காணோமே, "இதை try பண்ணிப் பார்ப்போமா" என்று மூளை என்னும் சட்டசபையில், இதைச் சாப்பிடலாமா என்ற மசோதாவைத் தாக்கல் செய்தேன். மூளை தலைமைச் செயலகமான மனதை கன்சல்ட் செய்ய, மசோதாவிற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. மசோதா நிராகரிக்கப்படவே, ச ச இந்தப் பழம் புளிக்கும். இது என்ன எழவோ, சரி போனா போறது. அப்புறமா வந்து பார்த்துக்கலாம் என்று மனதை தேற்றிக் கொண்டு அடுத்த டிஷ் நோக்கி நகரலானேன்.
எதிர்த் திசையிலிருந்து அப்பாவும் எதோ எடுத்துக்கொண்டு வந்தார். அவரிடம் அப்பா, "XXXX அப்படின்னா என்ன" என்று கேட்டேன். அது என்ன ஏதென்று அப்பா சொல்லாமல் அவர் கொடுத்த reaction இருக்கே, அது இன்றும் என் கண் முன்னால் அப்படியே இருக்கிறது. "தின்னுட்டியா???" அவர் வாயிலிருந்து வந்த வார்த்தையே இது தான். "டேய் அது XXXXடா. நெஜமா சொல்லு தின்னையா இல்லையா"
"இல்லைப்பா. அந்தாளு சொன்னது எனக்கு புரியலை. எனக்கென்னவோ ஒரு சந்தேகம் இருந்தது. அதனால நான் அதைச் சாப்பிடலை"
அப்பா சொன்னார் " இங்க பாரு, அம்மா இதெல்லாம் பண்ணிப் போட மாட்டா. இங்க தின்னுண்டாத்தான் உண்டு. அதனால சும்மா சொல்லு. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். யார் கிட்டயும் சொல்லவும் மாட்டேன்"
அதைக் கேட்டதற்குப் பிறகு அது இருக்கும் பக்கமே போகவில்லை. மற்ற சமாசரத்தையெல்லாம் நல்ல ஒரு வெட்டு வெட்டிவிட்டு வீடு திரும்பினோம்.
சரி, அப்படி அந்த சர்வர் என்ன தான் சொன்னான். அவன் சொன்ன சரி, அப்படி அந்த சர்வர் என்ன தான் சொன்னான்.
அவன் சொன்ன ஒரே வார்த்தை "PORK"
ஏண்டா வெண்ணை ஒரு சாதாரண விஷயத்தை இப்படி இழு இழுன்னு இழுத்திருக்கியேன்னு நிறைய பேர் சொல்லறீங்க. என்ன பண்ணறது.
நம்ம கற்பனைக் குதிரையை அவிழ்த்துவிட்டு எங்கேயாவது போய் மேய்ஞ்சுட்டு வா என்று சொன்னால், அது தோட்டத்துக்குள்ளேயே தான் வட்டமடிக்கிறது. அது போய் மேயும் வரை சுய புராணம் தான்.

15 comments:

முகுந்தன் said...

super

Divya said...

\\பிச்சைக்காரன் பாத்திரத்தில், எல்லோர் வீட்டு சாப்பாடும் இருக்குமே. அது மாதிரி ஒரே தட்டில் எதையெல்லாம் எடுத்துக்கொள்ள முடியுமோ, அத்தனையும் எடுத்துக் கொண்டேன்\\

எப்படிங்க இப்படி எல்லாம்.......டைமிங்கா கிண்டலா எழுதுறீங்க, ரொம்ப சிரிச்சேன் இந்த லைன் படிக்கிறப்போ:))

Divya said...

\\விஜய் டி.வி நடத்தும் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் ஒருவர், வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களில் இருக்கும் நகைச்சுவைகளை அழகாகக் கதை போல் சொல்வார். \\

உங்களுக்கு போட்டியா ஒருத்தர் விஜய் டி.வி யில பேசுறாரா...:)))

நிஜம்மாவே மிக மிக சுவாரஸியமா எழுதியிருக்கிறீங்க விஜய், ரசித்து படித்தேன்!!!

Divyapriya said...

இவ்ளோ நடந்தும் அந்த xxxx அ கடசில ஒரு வாய் கூட சாப்டவே இல்லையே!!! அத நினச்சா தான் ரொம்ப வருத்தமா இருக்கு....

Divyapriya said...

\\பிச்சைக்காரன் பாத்திரத்தில், எல்லோர் வீட்டு சாப்பாடும் இருக்குமே. அது மாதிரி ஒரே தட்டில் எதையெல்லாம் எடுத்துக்கொள்ள முடியுமோ, அத்தனையும் எடுத்துக் கொண்டேன்\\

LOL :-D

முகுந்தன் said...

அவசரத்தில் கமெண்ட் போட்டு விட்டேன். நேத்து தூங்க போவதற்கு முன் இதை படித்தேன் . ரொம்ப நேரம் சிறிது கொண்டிருந்தேன் :-)

எனக்கு மட்டும் சொல்லுங்க விஜய், அத நெஜமாவே சாப்பிடீங்களா இல்லையா?
கெளம்பிட்டோம்ல?

Vijay said...

முகுந்தன் இன்று வரை ஒரு வாய் கூட அசைவம் சாப்பிட்டது கிடையாது. சத்தியம்

Vijay said...

\\Divya said... நிஜம்மாவே மிக மிக சுவாரஸியமா எழுதியிருக்கிறீங்க விஜய், ரசித்து படித்தேன்!!!\\
ரொம்ப நன்றி திவ்யா.

Vijay said...

\\ Divyapriya said...

இவ்ளோ நடந்தும் அந்த xxxx அ கடசில ஒரு வாய் கூட சாப்டவே இல்லையே!!! அத நினச்சா தான் ரொம்ப வருத்தமா இருக்கு....\\
ஏங்க உங்களுக்கு இந்த புத்தி. நிஜமா நான் என்னிக்குமே இதெல்லாம் சாப்பிட்டது கிடையாது

முகுந்தன் said...

அட நானும்தாங்க...

முகுந்தன் said...

அட நானும்தாங்க...

தாரணி பிரியா said...

இதே மாதிரி எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு விஜய். நான் படிச்சதெல்லாம் தமிழ் மீடியம். நான் +1 சேர்ந்த புதுசுல எங்க கெமிஸ்டரி மிஸ் கோனிக்கல் பிளாஸ்க் ஒண்ணு லேபிலிருந்து எடுத்துட்ட வர சொன்னங்க. பிளாஸ்க் அப்படின்னு கேட்டடதும் அதை நம்ம காபி ஊத்தற பிளாஸ்க் மாதிரி நினைச்சுட்டு தேடினேன் தேடினேன் அப்படி தேடினேன். கடைசியில் மிஸ் கோபமாகி கண் முன்னாலயே இருந்ததை எடுத்தாங்க. நான் அப்ப எங்க மிஸ்கிட்ட இது கூம்புக்குடுவை சொன்னதும் சிரிச்சாங்க பாருங்க , நான் மறக்க முடியாத நிகழ்ச்சி இது

Vijay said...

\\நான் அப்ப எங்க மிஸ்கிட்ட இது கூம்புக்குடுவை சொன்னதும் சிரிச்சாங்க பாருங்க , நான் மறக்க முடியாத நிகழ்ச்சி இது\\
ஆஹா ஒரு அருமையான சப்ஜெக்ட்டுல ஒரு சூப்பர் பதிவு எழுதலாமே இதை வச்சு. ஆனா, நீங்க தமிழ்ல கூம்புக்குடுவைன்னு சொன்னதற்கு உங்க ஆசிரியை / யர் சிரித்தது. கொஞ்சம் வருந்தத்தக்கது / கண்டிக்கத்தக்கது.

Anonymous said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

Vijay said...

\\Blogger Tamil Paiyan said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்\\
வருகைக்கு மிக்க நன்றி தமிழ் பையன். உங்களது யோசனைக்கு மிக்க நன்றி. கட்டாயம் இணைத்துக் கொள்கிறேன்.