இந்தக் கதைக்கு இரண்டு முடிவு தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். இதோ இன்னொரு முடிவு. எது பிடித்திருக்கிறதோ, அதை எடுத்துக்கொள்ளலாம். இது முடிவின் இன்னொரு version . அதனால் இது கதை கேளு கதை கேளு 3.1
-----------------------------------------------------------------------------------------------
"யாரு யாரு பேசறது. நா தழ தழைக்க இரண்டொருமுரை எச்சிலை விழுங்கியவாறு கேட்கலானான் சுரேஷ்.
"க்ரீடிங் கார்ட் கிடைச்சதா?", பெண்குறல் ஏக்கத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டது. ஒவ்வொரு துடிப்புக்கும் இதயம் இலவசமாக இன்னொரு முறை துடித்தது. சுரேஷுக்கு தன் இதயம் அடிக்கும் சத்தம் தனக்கே கேட்டது.
உடம்பில் அட்ரினலின் எங்கும் பாய வியர்த்துக்கொட்டியது."வந்தது என்று சொல்" என்று இதயம் இசைந்து கொடுக்க, "எந்த கார்ட் யார் போட்டது என்று கேள்" என்று மூளை முந்திக் கொண்டு கட்டளையிட்டது. மூளைக்குப் பணிந்து அதன் சொல்படி நடந்தான்.
"நிஜமாகவே வரலியா?" குரலில் ஏமாற்றம் தொனித்தது.
சுரேஷ், "ஓ நிஜமாகவே அனு தான் கார்ட் அனுப்பியிருக்காளா?" என்று மனதிற்குள் பயம் கலந்த மகிழ்ச்சி கொண்டான். இதே பெண்ணை பல முறை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாலும், அவள் பால் காதல் இருக்கவில்லை. அவளும் தன்னை காதலிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்திருக்கவில்லை. அப்படியிருக்க, திடீரென்று அவளே தன் காதலைச் சொல்வதால் திக்கு முக்காடிப் போய் நின்றான்.சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "நீங்க.... நீ, அனு தானே பேசறது?" அவன் கேட்டது தான் தாமதம், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இது அனு தானா, இல்லையா, ஐயோ மண்டையே வெடித்துவிடும் போலிருக்கே. அவள் குரல் எப்படி இருக்கும் என்று மனத்திரையில் ஓட்டி பார்க்க, அவன் மூளையில் செய்லபட்ட குரல் பரிசோதிக்கும் அல்காரிதம் தீர்மானமாக எதையும் சொல்லமுடியவில்லை. அவளாகவும் இருக்கலாம்; அவளில்லாமலாகவும் இருக்கலாம். அனுவேதான் என்று மனம் முடிவெடுக்க, மூளை அங்கீகரிக்க மறுத்தது. விடியும் பொழுது இதற்கு விடை கிடைக்கும் என்ற எண்ணத்தில் படுத்துறங்க முற்பட்டான். உறங்க நினைத்த பல முயற்சிகளனைத்தும் 'திரு'வை நீக்கி விட்டு வினைகளை மட்டுமே கொடுத்தன.
மறுநாள் யாரும் வீட்டில் அதைப் பேசாதிருந்தது, ஒரு மாதிரியான நிம்மதியைக் கொடுத்தது. யாரோ என்னோடு விளையாடுகிறார்கள் என்பதை அம்மா அப்பா புரிந்திருப்பது அவனுக்கு இன்னும் பெரிய நிம்மதி தந்தது. வினோதுடன் கல்லூரிக்குச் செல்லலானான். வினோதும் அதைப்பற்றி வாயைத் திறக்கவில்லை. "சரி தான், இது எல்லாரும் சேர்ந்து தான் இந்த நாடகம் நடத்தறாங்க போல. அதான் யாருமே நேற்று நடந்ததைப் பற்றி மூச்சு விடலை" என்று தனக்குள்ளே ஆறுதல் செய்து கொண்டான்.
தாம்பரம் ரயில் நிலையம் வந்ததும் எப்போதும் செல்லும் ரயிலில் ஏறப்போன வினோத்தை தடுத்து நிறுத்தினான். "ஏண்டா நிறுத்தறே. நாம எப்போதும் இந்த ட்ரெயின்'ல தானே போவோம். மற்ற பசங்களும் இதுல தானே வருவாங்க" என்றதற்கு, "காரணமாகத்தான் சொல்லறேன். அடுத்த ட்ரெயின்'ல போகலாம்" என்று பதிலளித்தான் சுரேஷ்.ஒன்றும் புரியாத வினோத் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கலானான். அடுத்த ரயில் வரவும் வினோத், "டேய் சுரேஷ், அந்த ரயிலிலேயே போயிருக்கலாமில்லையா? பாரு இதுல கூட்டம் ரொம்பி வழியுது"என்று எரிச்சலுடன் ஒரு வழியாக உள்ளே ஏறிக்கொண்டான். அடுத்தடுத்த நிறுத்தங்களில் கூட்டம் பெருகியதே தவிற குறையவில்லை. பழவந்தாங்கல் நெருங்க நெருங்க, சுரேஷுக்கு மீண்டும் மனம் இரட்டிப்பு வேகத்தில் துடிக்கலானது. "எப்போதும் போல அவள் போன ரயிலிலேயே போயிருக்க வேண்டும்" என்று ஒரு சர்வ சமய பிரார்தனை நடத்தினான்.
ஆண்டவன் கொட்டும் போது கூறையைப் பெயர்த்துக்கொண்டு தான் கொட்டுவானாம். கஷ்டங்களிலும் அப்படித்தான் போலிருக்கு. பழவந்தாங்கலில் உள்ள ஆலைகளுக்குச் செல்லும் ஊழியர்கள் சிலர் இறங்க சற்றும் எதிர்பாரத அனுவும் இவர்கள் பயணிக்கும் அதே வண்டியில் உள்ளே ஏறினாள். அதுவும் எப்போதும் ஏறும் மகளிர் கம்பாட்மென்டில் ஏறாமல் இவர்கள் பயணிக்கும் அதே பெட்டியில்.
வினோத், "டேய் இப்போதான்டா புரியுது. நீ ஏன் இந்த வண்டியில வரன்னு. எல்லாம் சொல்லி வச்சுத் தான் செய்யறீங்களா" என்று மீண்டும் கலாட்டா செய்ய, சுரேஷுக்கு தன் கால்களின் கீழ் பூமி நகர்வது போல் தோன்றிற்று. அனு இவர்கள் இருப்பதை கவனிக்கமலிருந்தாலும், வினோத் சும்மா இருக்காமல், "அவள் உன்னை நோக்க, அண்ணல் அவளை நோக்காதது ஏனோ" என்றான்.
நேற்று வரை அனுவை வைத்த கண் வாங்காமல் பார்த்தவனுக்கு, இன்று அவள் நிற்கும் திசையிலேயே கூட பார்வையைத் திருப்பவில்லை. அதிலும் வினோத் இப்படிச் சொல்ல, "டேய் அவள் என்னைப் பார்த்தாளா" என்றான்."நான் என்ன பொய்யா சொல்லறேன். ஒண்ணு நீங்க இரண்டு பேரும் சொல்லி வச்சு இந்த மாதிரி ஒரே ரயிலிலே வரணும். இல்லை போன ரயிலில் உன்னைக் காணாமல் அவளும் இந்த ரயிலுக்காகக் காத்திருந்திருக்கணும்.இதில் ஏதோ ஒன்று தான் நடந்திருக்கு. அதுவும் அவள் எப்போதும் போல பெண்கல் பெட்டியில் ஏறாம இதுல ஏறியிருக்கானா Something is wrong"
சுரேஷ், "டேய் சத்தியமா சொல்லறேன், அவள் கிட்ட நான் முழுசா 5 வார்த்தைகூட பேசினது கிடையாது. ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது?"
வினோத், "சரி உன்னுடைய இந்த சந்தேகத்தை இப்பவே தீர்த்துடாலாம்" என்று சுரேஷ் சற்றும் எதிர்பாராமல், அனுவைநோக்கி கூட்டத்தினூடே நகர்ந்தான்.
சுரேஷ், "வினோத் என்ன பண்ணறே"
வினோத், "பேசாம இரு. என் கூட வற்ரியா?"
சுரேஷ் பதிலேதும் சொல்லாமல் இவன் என்ன செய்யப் போகிறானோ என்றிருந்தது. 5 நிமிடங்களில் வந்து விடும் அடுத்த நிறுத்தமான பரங்கி மலை வருவதற்கு 50 நிமிடங்கள் ஆவது போல் தோன்றிற்று.
வினோத் அனுவிடம் சென்று, "ஹாய் அனு. பார்த்து ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கே? என்ன இன்னிக்கு இந்த ட்ரெயின்'ல? அதுவும் லேடீஸ் கம்பாட்மென்டில் போகாம இதுல போறே?"
அனு, "ஹாய். இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆயிடுத்து. லேடீஸ் கம்பாட்மென்ட் பக்கமே போக முடியலை. அதான் இங்கே ஏறினேன். நீங்க இரண்டு பேரும் இதிலே தான் எப்போதும் போவீங்களா?"
வினோத், "எங்களுக்கும் இன்னிக்கு லேட் ஆயிடுத்து"
இவர்கள் இருவரும் பேசுவதைக் பார்த்துக்கொண்டிருந்த சுரேஷ், திடீரென்று அவர்கள் தன்னை நோக்கி வருவது மீண்டும் பீதியைக் கிளப்பியது.
"ஐயோ என்ன கேட்டானோ தெரியலியே. இப்போ இவள் வந்து என்ன கேட்கப் போகிறாளோ" என்று மனதிற்குள்ளேயே ஒரு போராட்டம்.
அனு சுரேஷ் அருகில் வந்து, "ஹாய் சுரேஷ். நேற்று உன் பிறந்த நாளாமே. உங்க வீட்டுல ட்ரீட் எல்லாம் கொடுத்திருக்கே. Belated Birth Day Wishes" என்றதும் கொஞ்சம் மனம் நிம்மதியானது.
கல்லூரிக்குள் தனது வகுப்பை நோக்கி அனு போன பிறகு வினோத், "பிடி கொடுத்தே பேச மாடேங்கிறா. ரொம்ப மன அழுத்தம் ஜாஸ்தி. நானும் ஏதாவது clue கிடைக்கும்னு பார்த்தால் ஒண்ணுமே தெரியலியே. சுரேஷ் ஒரு ஐடியா. இது கடைசி செமஸ்டர். அவனவன் ஆட்டோகிராஃப் புக்கை எடுத்துக்கிட்டு கையெழுத்து வேட்டை நடத்திக்கிட்டிருக்காங்க. நீயும் அனு கிட்ட ஆட்டோகிராஃப் கேளு. அதை வைத்து அவள் கையெழுத்தைக் கண்டு பிடித்து விடலாம்" என்று ஐடியா கொடுக்க சுரேஷிகும் சரியென்று பட்டது.
மறுநாள் வினோதிடம் சுரேஷ், "டேய் நீ சொன்னியேன்னு அவ கிட்ட போய் ஆட்டொகிராஃப் புக்கை நீட்டினேன்". அதற்கு அவள், "நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்கக்கூடாது'ங்கறதுக்காத் தான் இந்த மாதிரி ஆட்டொகிராஃப் எல்லாம். உன்னை நினைப்பதையே என்னால் மறக்க முடியாது. அப்படியிருக்க மறக்க எப்படி என்னால் நினைக்க முடியும்"னு ஏதேதோ கவித்துவமா பேசி புக்கைத் திருப்பி கொடுத்துட்டாடா".
வினோத், "Total confusion"
சுரேஷ், "I have decided. இனிமேலும் இது பற்றி சிந்திக்காமலிருப்பது என்ற முடிவிற்கு வந்து விட்டேன்".
வினோத், "அப்போ உண்மையை தெரிந்து கொள்ள வேண்டாமா உனக்கு?"
சுரேஷ், "என்னடா பெரிய உண்மை. அனுவைப் பார்த்தால் ரொம்ப கண்ணியமான பொண்ணா இருக்கா. அவள் இப்படி நேரா வீட்டுக்கே கார்ட் அனுப்புவாள் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. நான் இதை இன்னும் தோண்டித் துறுவி அனு இதை கார்டை அனுப்பவில்லையென்ற கசப்பான உண்மையைத் தெரிந்து கொள்வதை விட, இது அனு அனுப்பியது தான் என்ற இனிப்பான பொய்யை சுமந்து கொண்டு இருந்து விட்டுப் போகிறேன்"
வினோத், "OK. It is Upto you"
சில மாதங்களுக்குப் பிறகு....
"சுரேஷ் இல்லையா"
சுரேஷ் அம்மா, "அவன் மொபைல வச்சுட்டு எங்கேயோ வெளியில போயிருக்கானே.என்ன விஷயம்"
"இல்லை, நானும் சுரேஷும் ஒரே கம்பெனியில தான் செலக்ட் ஆகியிருக்கோம். எல்லாருக்கும் சென்னைல தான் ட்ரெயினிங்க். ஆனால் எனக்கும் சுரேஷுக்கும் மட்டும் தான் பூனவுல ட்ரெயினிங்க்'னு வந்திருக்கு. அதான் சுரேஷோட பிளான் பற்றி கேட்கலாம்னு ஃபோன் பண்ணினேன்"
சுரேஷ் அம்மா, "சுரேஷ் வந்ததும் உனக்கு ஃபோன் பண்ணச் சொல்லறேன். உன் பெயரைச் சொல்லவே இல்லையே?"
"அனு"
முற்றும்