தசாவதாரம் இரண்டாம் முறை பார்த்தபோது இன்னும் நிறைய ரசிக்க முடிந்தது. சென்ற முறை பார்த்த போது கவனிக்காத வசனங்களை இம்முறை கவனிக்கவும் ரசிக்கவும் முடிந்தது.
உதாரணத்திற்கு, புஷ் பேசும் ஒரு வசனம்.
புஷ் தனது உதவியாளரிடம்: "Could you please explain it to me?"
உதவியாளர்: "Mr. President, it is a bit complicated:
புஷ் : "Don't explain it to me if it is complicated"
இன்னும் அசினையும் எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கும் விட்டுக்களையும் ரசிக்க இன்னும் 2 தடவை பார்க்க வேண்டும். அது வரை பெங்களூருவில் படம் ஓட வேண்டும்.
பெங்களூருவில் வெடி குண்டு பற்றிய பீதி அடங்குவதற்கு முன்பாகவே அஹமதாபாத் வெடி குண்டு வெடித்து இன்னும் நெஞ்சில் புளியைக் கரைத்துவிட்டது. அஹமதாபாதிலுள்ள எனது மாமா நலமாகவே இருக்கிறார்.
எல்லாவற்றையும் விட மிக மோசமான கொடுமையான செயல், இலங்கைக்கு எதிராக இந்தியா சந்தித்த படு தோல்வி. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், முரளிதரனும் மென்டிஸும் செய்த சூழ்ச்சிக்கு நிஜமாகவே ஆட்டம் போட்டனர். இனிமேலும் தொடரில் விளையாடாமல், "போங்கடா நீங்களும் உங்க ஸ்பின்னும்" என்று சொல்லிவிட்டு "மற்ற இரண்டு போட்டிகளிலும் நீங்களே ஜெயித்து விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டு வந்து விடலாம். ஏதோ அம்பயர் பரிதாபப்பட்டு கையைத் தூக்காமலிருந்தாலும் இந்த மூன்றாவது அம்பயர் வந்து ரொம்பவே படுத்தி விட்டார். முதலில் இந்த அப்பீல் முறையை ஒழித்தாக வேண்டும்.
"ஆமாம், சொல்லறதுல ஒண்ணும் குறைச்சலே இல்லை. அடுத்த மேட்ச் ஆரம்பிக்கட்டும், எந்த தீத்தாலாண்டியோ ஒக்காந்து பேச ஆரம்பிக்கதுலேர்ந்து பார்த்தாகிடும்" என்று என் மேலிடம் புலம்புவதை நான் யருக்கும் சொல்ல மாட்டேன்.
அலுவலகத்தில், சக உழைப்பாளினி(!!!) (அதாங்க colleague) கொடுத்த "மிஸ்டர் கிச்சா" என்ற கதைகளடங்கிய கிரேஸி மோஹன் எழுதிய புத்தகம் படித்தேன். புண்பட்ட நெஞ்சை இப்படித்தான் ஆற்ற வேண்டியிருந்தது. கிச்சா வந்து மூட்டிய கிச்சு கிச்சுவில் விழுந்து விழுந்து சிரிக்க முடிந்தது.
வாய் விட்டு சிரித்தால் நோய் மட்டும் தான் போகுமா? நம்மை சூழ்ந்த துன்பங்கள் கூட பறந்து போயிடும். கிச்சாவால் இந்திய கிரிக்கெட் வீரர்களைத் திட்டித் தீர்ப்பதை கொஞ்சமேனும் குறைக்க முடிந்தது.
இனிமேலும் இவர்களை வீரர்கள் என்று தான் சொல்ல வேண்டுமா. தமிழில் வேறு வார்த்தைகளே இல்லையா?
