Pages

September 02, 2008

திண்ணை நினைவுகள்

"தாத்தா, தாத்தா திண்ணைன்னா என்ன தாத்தா", 8 வயதே நிரம்பிய மூன்றாம் வகுப்பு படிக்கும் என் பேரன் என்னிடம் கேட்டான்.
"ஏன்டா கண்ணா உனக்கு திடீர்னு திண்ணை பற்றி சந்தேகம்?"என்றேன்.
"என்னோட தமிழ் பாடத்துல 'திண்ணை' என்ற வார்த்தை அருஞ்சொற்பொருளில் இருக்கு. அதுக்கு எங்க மிஸ்சால ஒழுங்கா அர்த்தம் சொல்ல முடியலை. உங்க வீட்டுல இருக்கற தாத்தா பாட்டி கிட்ட கேளுன்னு சொல்லிட்டாங்க" என்றான்
திண்ணை - இன்று அகராதியில் இடம் பெறும் அளவிற்கு போய் விட்டதா? அருஞ்சொற்பொருளில் அதற்கு ஒழுங்கான ஒரு அர்த்தம் கூட இருக்கவில்லையா? அவனுக்குப் புரியும் படி விளக்கிச் சொல்லலானேன்.
"போச்சு தாத்தா கிட்ட விளக்கம் கேட்டுட்டியா, உனக்கு விளங்கினா மாதிரி தான்", என் பேரனின் பாட்டி இன்னும் என்னை கலாய்ப்பதை விடவில்லை.
"கண்ணா அந்தக்காலத்துல எங்க ஊருல வீடு கட்டும் போது, வழிப்போக்கர்கள் இளைப்பாற ஒவ்வோர் வீட்டிற்கு முன்னாலும், ஒரு மேடை கட்டியிருப்பாங்க. விட்டின் கூரை இந்தத் திண்ணை மேலும் படர்ந்து இருக்கும். அந்தத்தெரு வழியாக நடந்து போறவங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திண்டு அப்புறம் தன்னோட பயணத்தைத் தொடருவாங்க" என்று திண்ணைக்குண்டான காரணத்தைச் சொன்னேன்.
மேலும் தொடர்ந்தேன், "எங்க தாத்தா வீடு இருந்த ஊருல ஒவ்வொரு வீட்டுலயும் திண்ணை இருந்தது. நாங்க சின்னப்பசங்களா இருந்த போது, இந்தத் திண்ணை எங்க வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருந்தது. காலையில், ஒரு நண்பன் வீட்டுத் திண்ணையில் காரம் போர்ட், மதியம் ஒரு நண்பன் வீட்டுத் திண்ணையில் சீட்டு, மாலையில் இன்னொருவன் வீட்டுத் திண்ணையில் செஸ், இரவு மற்றொரு நண்பன் வீட்டுத் திண்ணையில் சாப்பாடு. ஏன் பல நாள் திண்ணையிலே படுத்துத் தூங்கியிருக்கேன். காற்று வேற பிச்சுண்டு போகுமா, தூக்கம் சுகமா வரும் ".
"என்னது திண்ணையிலேயே தூக்கமா?" ஆச்சர்யத்துடன் கேட்டான்.
"ஆமாம். அதிலயும் எங்க விளையாட்டுக்கு ஒரு அளவே கிடையாது. ஏதாவது ஒரு பையன் தூங்கிக் கொண்டிருப்பான். அவன் பக்கத்தில் 10-15 பெரும் கற்களை வச்சுட்டு, ஒரு பெரிய கும்பலை கூட்டிக்கொண்டு வந்து, அவனை எழுப்பி, "ஏண்டா அறிவு கெட்டவனே, இவ்வளவு கல்லை எதுக்காகடா பக்கத்துல வச்சுண்டு தூங்கற"ன்னு நிறைய கலாட்டாவெல்லாம் செய்வோம். பாவம் அந்தப் பையன் இவ்வளவு பேர் தன்னைச் சுற்றி நிற்பதைப் பார்த்து ரொம்பவே நொந்து போவான். அதிலும் சில சமயம் தூங்கற பையன் முகம் கிட்ட ஒரு பூனையையோ நாயையோ விட்டு விடுவோம். அது போய் அவனை நக்க அவன் அடித்துப் பிடித்து ஓட ஒரே தமாஷாக இருக்கும்".
"ஓ தாத்தா நீங்க இவ்வளவு சேட்டை பண்ணியிருக்கீங்களா?"
"எங்க தாத்தா வீட்டு திண்னை கொஞ்சம் பெரிசு. அதிலே நாங்க கிரிக்கெட்டே விளையாடுவொம். ஒரு தடவை கிரிக்கேட் விளையாடி, பல்பை உடைச்சு, தாத்தா கிட்ட நல்லா வாங்கிக் கட்டிண்டோம். சாயங்காலம் ஆயாச்சுன்னா, தெரு மாமிகளெல்லாம் வாசல் தெளித்து கோலம் போட்டுட்டு ஊர் கதை பேச அவரவர் திண்ணைக்கு வந்துடுவாங்க. அப்போல்லாம் மெகா சீரியல் வரலை. நாங்க பசங்க கிரிக்கெட் விளையாட ரொம்பவே இடைஞ்சலா இருக்கும். ஒரு மாமி மேல அடிச்சு, அவள் பல்லைக்கூட உடைச்சிருக்கேன்."
"தாத்தா குறும்புக்கார தாத்தா நீங்க"
"அது மட்டுமா, திண்ணையில உட்கார்ந்துண்டு தெருவுல நடக்கற ஒரு பொண்ணையும் விட மாட்டோம். ஏதாவது கமெண்ட் அடிச்சிக்கிட்டேயிருப்போம்"
"போதுமே, உங்க சுயபிரஸ்தாபம். சின்ன குழந்தை கிட்ட இன்னது தான் சொல்லறதுங்கற விவஸ்தையே இல்லையா" என்று கடிந்து கொண்டால் என் மனைவி.
"அடிப்போடி, இந்தக் காலத்து குழந்தைள்லாம் பிஞ்சுலயே பழுத்ததுங்க" என்று சொல்லி விட்டு மீண்டும் தொடர்ந்தேன். "எங்க தாத்தா இருந்த தெருவுல இருந்த வாத்தியார் ஒருத்தர் திண்ணைல வச்சு தான் சுலோகமெல்லாம் சொல்லித்தருவார். அவர் வீட்டு திண்ணைமட்டுமே பற்றாது. அவ்வளவு கூட்டம் இருக்கும். இப்படியாக நான் சின்னப்பையனாக இருந்த காலத்துல திண்ணை என்னோட வாழ்க்கையில ரொம்பவே வந்திருக்கு.
"அப்புறம் ஏன் தாத்தா நம்ம வீட்டுல திண்ணையில்லை?", சங்கடமான கேள்வியொன்றை வீசினான் என் பேரன்.
"விலை வாசி இருக்கற இருப்புல, நம்ம விட்டு வசால்ல ஒரு தூண் கூட கட்ட முடியலை. இதுல திண்ணைக்கு எங்கே போறது? ஒண்ணு பண்ணு, நீ நல்லா படிச்சு நிறைய சம்பாதிச்சு, தாத்தாவும் நீயும் உட்கார்ந்து பேசறதுக்கு திண்ணை வச்ச ஒரு வீடு கட்டித்தருவியா?"
"கண்டிப்பா கட்டித் தறேன் தாத்தா" என்று சொல்லிவிட்டு துள்ளிக் குதித்து ஓடின என் பேரனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"என்னங்க பால் காரன் மணி அடிக்கறான் பாருங்க கதைவைத் தரங்க"
"அவனை அப்படியே திண்ணையிலேயே போட்டுட்டுப் போகச்சொல்லு".
" ஆச்சு, மறுபடியும் தூக்கத்துல புலம்ப ஆரம்பிச்சாசா, எழுதிருங்க, எழுதிருங்க" , யாரோ என்னைப்பிடித்து உலுப்புவது தெரிந்தது.
" எங்க நம்ம பேரன். அவனுக்கு எங்க தாத்தா வீட்டுல நான் திண்ணையில அடிச்ச லூட்டியெல்லாம் சொல்லிண்டிருந்தேனே, எங்கே அவன்."
"ம்ம், 'அடியேங்கற புருஷனைக் காணோம். இதுல பிள்ளை பொறந்தா சந்தானகோபாலகிருஷ்ணன்'னு பேர் வைக்கறேன்னு வேண்டிண்டாளாம் ஒருத்தி. அந்த மாதிரி இருக்கு. இன்னும் வயசு முப்பது கூட தாண்டலை. இதுல பேரனாம், பேத்தியாம். எழுந்துக்கற வழியப்பாருங்க".
டிஸ்கி:
'திண்ணை' பற்றிய சங்கிலித் தொடரை தொடர்வதற்கு அழைப்பு விடுத்த ரம்யாவிற்கு நன்றி. பின்ன , தமிழ் பேசும் நல்லுலகத்தை அடுத்து என்னத்த எழுதி எப்படி வாட்டியெடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு தக்க சமயத்தில் அழகான ஒரு விஷயத்தைப்பற்றி எழுத ஐடியா கொடுத்ததற்காக!
திண்ணை இத்தோடு நின்றுவிடாமலிருக்க முகுந்தனை அன்புடன் அழைக்கிறேன்

10 comments:

Ramya Ramani said...

\\"போச்சு தாத்தா கிட்ட விளக்கம் கேட்டுட்டியா, உனக்கு விளங்கினா மாதிரி தான்", என் பேரனின் பாட்டி இன்னும் என்னை கலாய்ப்பதை விடவில்லை. "\\

ஹா ஹா ஹா

\\அதிலும் சில சமயம் தூங்கற பையன் முகம் கிட்ட ஒரு பூனையையோ நாயையோ விட்டு விடுவோம். அது போய் அவனை நக்க அவன் அடித்துப் பிடித்து ஓட ஒரே தமாஷாக இருக்கும்". \\

அட பாவமே!!

\\இன்னும் வயசு முப்பது கூட தாண்டலை.\\

Got the Point ;)

\\"ம்ம், 'அடியேங்கற பொண்டாட்டியைக் காணோம். இதுல பிள்ளை பொறந்தா சந்தானகோபாலகிருஷ்ணன்'னு பேர் வைக்கறேன்னு வேண்டிண்டாளாம் ஒருத்தி.\\

இது உங்க ஊரு டயலாக் ??

Ramya Ramani said...

நல்லா திண்ணை பத்தி ஒரு கதையாவே போட்டிருக்கீங்க விஜய் நன்றி ஹை!

Divya said...

\\ம்ம், 'அடியேங்கற புருஷனைக் காணோம். இதுல பிள்ளை பொறந்தா சந்தானகோபாலகிருஷ்ணன்'னு பேர் வைக்கறேன்னு வேண்டிண்டாளாம் ஒருத்தி. அந்த மாதிரி இருக்கு. இன்னும் வயசு முப்பது கூட தாண்டலை. இதுல பேரனாம், பேத்தியாம். எழுந்துக்கற வழியப்பாருங்க".\\


இது தான் டாப்பு டக்கரு:))

Divya said...

திண்ணை பதிவு.....கனவு கற்பனையா போட்ட ஐடியா சூப்பர்!!

ரொம்ப நல்லா இருந்தது பதிவு!

முகுந்தன் said...

அசத்திபுட்டீங்க தல :)


//இன்னும் வயசு முப்பது கூட தாண்டலை. இதுல பேரனாம், பேத்தியாம். //

இது எதுக்கு ? நீங்க யூத்ன்னு காட்டிக்க இதெல்லாம் வேண்டாம் . உங்கள் எழுத்துக்களே போதும் :-)


//திண்ணை இத்தோடு நின்றுவிடாமலிருக்க முகுந்தனை அன்புடன் அழைக்கிறேன்//

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சிங்கார சென்னையில்.எனக்கும் இது போல திண்ணை இருக்கும் வீட்டில் வசிக்க வேண்டும் என்று ஆசை. நிஜமாவே என் கனவில் திண்ணை வந்தால் தான் உண்டு.

Vijay said...

முகுந்தா,
உங்க ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்க்கற மாதிரி ஒரு கதை எழுதிடுங்க

Vijay said...

மீண்டும் முதலில் பின்னுட்டமிட்ட ரம்யாவிற்கு நன்றிகள்

Vijay said...

\\divya said...
திண்ணை பதிவு.....கனவு கற்பனையா போட்ட ஐடியா சூப்பர்!!\\
ரொம்ப ரொம்ப நன்றி ஹை :-)

Divyapriya said...

// என் பேரனின் பாட்டி இன்னும் என்னை கலாய்ப்பதை விடவில்லை.//

நக்கலுக்கு அளவே இல்லை...பாவம், தேமேன்னு இருக்குற உங்க மனைவிய இப்படி போஸ்டு போட்டு கலாய்ச்சுட்டு, அவங்க உங்கள கலாய்ப்பதா எழுதி இருக்கீங்க..."பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம்" ன்னு சொல்றது, இப்ப தான் விஜய் நல்லா புரியுது ;-)


//தாத்தா குறும்புக்கார தாத்தா நீங்க//

கரெக்ட்டு, விஜய் பேரனுக்கு எல்லோரும் ஒரு ’ஓ’ போடுங்க...

நல்லா காமெடியா எழுதி இருக்கீங்க விஜய்…ரசித்து படித்தேன்

Vijay said...

\\divyapriya said...
பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம்" ன்னு சொல்றது, இப்ப தான் விஜய் நல்லா புரியுது ;-)\\

உண்மையைத்தாங்க சொல்லறேன்