Pages

May 09, 2008

மொழிப்பிரச்சினை

பெங்களூர் வந்து எட்டு வருடங்கள் ஆகியும் இன்னும் ஒழுங்கா கன்னடம் பிடிபடவில்லை. தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லுவதாலேயோ என்னமோ கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் எண்ணமே வரவில்லை. கொல்கத்தா போய் ஐந்தே மாதங்களில் ஓரளவேனும் பெங்காலி புரிந்து கொள்ள முடிந்தது, ஆனால் இன்னும் கன்னடம் வரவில்லை.
ஆஃபீசிலும் நிறைய ஹிந்தி மக்கள் தான். கன்னடத்தில் மாத்தாட வேண்டாம். அக்கம் பக்கத்திலுள்ள கடைக்காரர்களும் ஹோட்டல்காரர்களும் (கன்னடர்களாகவே இருந்தும்) நன்றாகவே தமிழ் பேசுகிறார்கள். அப்படியே யாராவது கன்னடத்தில் மாத்தாட ஆரம்பித்தால், "கன்னடா கொத்தில்லா" என்று சொல்லிடுவேன். அவர்களும் எனக்கு தெரிந்த ஹிந்தியிலோ ஆங்கிலத்திலோ சில சமயம் தமிழிலேயே கூட பேச ஆரம்பித்து விடுவார்கள். அதனால் கன்னடம் தெரியவில்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது கிடையாது. என் மனைவிக்கும் கன்னடம் அவ்வளவாக தெரியாது. (தமிழே முழுசா தெரியாது. இதுல கன்னடம் மட்டும் தெரியுமா?).
முதன் முதலில் மொழிப்பிரச்சினை உருவானது, எங்கள் வீட்டிற்கு வேலை செய்ய வந்த பெண்மணி மூலமாக. அவளுக்கு தமிழ் தெரியாது, ஹிந்தியும் ஆங்கிலமும் புரியாது. கன்னடம் மட்டுமே தெரியும். மைசூர் பக்கத்திலுள்ள
மாண்டியா தான் சொந்த ஊர். (எப்போ தமிழ் நாட்டிற்கு எதிராக கலவரம் வந்தாலும் இங்கு தான் ஆரம்பமாகும்) அவள் எதோ கேட்க, நான் எதோ சொல்ல, அவள் கேட்டதற்கும் நான் (என் மனைவியையும் சேர்த்து தான்) சொன்னதற்கும் சம்பந்தமே இருந்திருக்காது போலும். அவள் தலையில் அடித்துக்கொண்டு சிரிப்பாள். என் முகம், பணத்தை எல்லாம் இழந்து விட்ட வடிவேல் மூஞ்சி கணக்கா ஆகிடும். தொடப்பம் எங்கேன்னு கேட்டிருப்பாள், இவ்வளவு தான் பாத்திரம் இதை மட்டும் தேய்த்தால் போதும் என்பேன். நான் சொல்வது அவளுக்கு புரியாமல் அவளே தொடப்பத்தைத் தேடி எடுத்து கொள்வாள். குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், துணியை நானே உலர்த்தி கொள்கிறேன் என்பாள் என் மனைவி.
இந்த மாதிரி அவள் என்ன சொல்கிறாள், நாங்கள் என்ன சொல்கிறோம் என்றே புரியாமல், நிறையவே சர்க்கஸ் கூத்துக்கள் நடக்கும்.
இப்படி அல்லல் பட்டு இன்றளவும், கன்னட சரஸ்வதி என் நாவில் குடி கொள்ள மறுக்கிறாள்.

1 comment:

Divya said...

புது மொழி கத்துக்கனும்னா......கஷ்டபட்டு கத்துக்க முடியாது, இஷ்டப்பட்டு கத்துக்கனும்,

அந்த இஷ்டம் இன்னும் உங்களுக்கு வரவில்லை போலும்!!