November 15, 2008
இப்போ நல்லா இருக்கா?
November 10, 2008
இவளா என் மனைவி
கொஞ்சம் உங்கள் ஆள் காட்டி விரலால் முகத்திற்கு முன் சுற்றிக் கொள்ளுங்கள். ஒரு சிறு ஃபிளாஷ் பேக். அப்படியே ஒரு 4 வருடங்கள் பின்னோக்கிச் சென்றால், (கல்யாணம் ஆவதற்கு முன், நிச்சயம் ஆனதற்குப்பின்) தீபாவளிக்கு புடவை எடுத்து தருகிறேன் என்று, சென்னை ஆரெம்கேவிக்கு கூட்டிச் சென்றிருந்தேன். என்னிடம், "உங்க பட்ஜெட் என்ன" என்றாள். முதல் தடவையாக கடைக்குக் கூட்டி வந்திருக்கிறேன். பட்ஜெட்டெல்லாம் சொல்லி இமேஜைக் கெடுத்துக் கொள்ளவேண்டாமென்று, "அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. உனக்கு எது பிடிச்சிருக்கோ அதியே வாங்கிடலாம்" என்றேன். எனக்கு வாழ்க்கையில் பிடிக்காததில் ஒன்று, துணிக்கடைகளில் நேரம் கழிப்பது. போனோமா, எது முதலில் பிடிக்கிறதோ, அது நம் பட்ஜெட்டுக்குள் அடங்கி விட்டால் உடனே "பேக் செய்யுங்கள்" என்று சொல்லி விடுவேன்.
புடவைக் கடைக்குள் நுழைந்தவள், சில்க் காட்டன் எந்த செக்ஷன் என்று கேட்டுக்கொண்டு அந்த இடத்திற்குச் சென்றாள். "காஞ்சி காட்டன், பியூர் காட்டன் தெரியும், இதென்ன சில்க் காட்டன். புது ஃபேஷனா" என்று கேட்டுத் தொலைத்தேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவள், "இல்லையே, இதெல்லாம் ரொம்ப பழைய ஃபேஷன் தான்" சொல்லிவிட்டாள். "சரி, நமக்கு தெரியலை போலும்" என்று நினைத்துக் கொண்டு, அவள் என்ன தான் செலக்ட் செய்கிறாள் பார்ப்போம் என்று அவள் நின்ற செக்க்ஷனுக்குப் போனேன். இவள் எந்த ரேஞ்சுக்குப் புடவை எடுக்கப் போறாளோ என்ற உதறல் கொஞ்சம் இருக்கத் தான் செய்தது.
சில புடவைகளைப் பார்த்தாள். விரித்துக் காட்டச் சொன்னள். நானும் என் பங்கிற்கு, அந்தப் புடவையை எடுத்துப் போடுங்க, இந்தப் புடவயை எடுத்துப் போடுங்க்கன்னு கொஞ்சம் ஷோ காட்டினேன். பின்ன, எனக்கு புடவையெடுப்பதில் இஷ்டமே இல்லையென்று நினைத்து விட்டால்?? ஒரு புடவையை எடுத்துக் காட்டி, "இது நல்லா இருக்கா" என்றாள். எனக்கும் அது பிடித்திருக்கவே "நல்லா இருக்கு" என்று தலையாட்டினேன். ("அன்று ஆட்டத்தொடங்கியது, இன்னும் நின்ற பாடில்லையா"ன்னெல்லாம் பின்னூட்டத்தில் கேட்கப்படாது!!)
"இதை பில் போட்டுடுங்க சார்", என்று சொல்லிவிட்டாள். புடவையும் 1500 சொச்சம் தான். "இதற்கு பிளௌஸ் எடுக்க வேண்டாமா" என்றதற்கு, "இந்தப் புடவை பிளௌஸ் அட்டாச்ட் தான். அதனால் வேண்டாம்" என்று சொல்லி விட்டாள். அப்பாடா, பிளௌஸ் செலவும் மிச்சம் என்று சொல்லிக் கொண்டேன். அன்றைய தினம் என் மனைவியாகப் போகிறவள் புடவை செலக்ட் செய்ய எடுத்துக் கொண்டது வெறும் எட்டே நிமிடம் தான். என் கஸின் அக்காவிடம், இந்த விஷயத்தை சொன்னதற்கு, "இப்படி ஒரு அதிசயப் பிறவியா? நீ கொடுத்து வச்சிருக்கடா" என்று வாழ்த்தினாள்.
மீண்டும் உங்கள் ஆள் காட்டி விரலால் முகத்திற்கு முன் சுற்றிக் கொள்ளுங்கள்.
மீண்டும் ஆரெம்கேவி, ஆனால் திநெல்வேலியில். நான் உள்ளே போனதும், "சார், சில்க் காட்டன் புடவை செக்ஷன் எங்க இருக்கு" என்றேன். "என்னை ஒரு முறை முறைத்து விட்டு, "கொஞ்சம் சும்மா இருக்க முடியுமா" என்று சொல்லிவிட்டு, "இல்ல சார், சில்க் புடவை செக்ஷன் எங்க இருக்கு" என்று கேட்டாள். என்னிடம் பட்ஜட் எதுவும் கேட்கவில்லை. "சார், 3000-4000 ரேஞ்சுல உள்ள புடவை எடுத்துக் காட்டுங்க" என்றாள். நிறைய புடவைகளை அலசினாள். நிறைய புடவைகளை தன் மீது வைத்துப் பார்த்தாள். போதாதற்கு கண்ணாடியிலும் பார்த்துக் கொண்டாள்.
எவ்வளவோ புடவைகளை நான் நல்லா இருக்கு என்று சொல்லியும் திருப்தி அடையவில்லை. "இங்க ஒண்ணும் சரியா இல்லை. நல்லியில் போய் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டாள். ஆட்டோ பிடித்து 6 கிலோமீட்டர் தள்ளியுள்ள நல்லிக்குப் போனோன். அங்கேயும் இதே கதை தான். மீண்டும் நிறைய புடவைகள், நிறைய விரித்துப்பார்த்தல், அதே முகம் சுளிப்பு, எதையுமே பேக் செய்யவில்லை.
"எல்லா நல்ல புடவைகளும் தீபாவளிக்கே விற்றுப் போயிருக்கலாம். இருக்கறதுல நல்லதா பார்த்து எடுத்துக்கோ" என்று நான் சொன்னதற்கு எந்த வித ரியாக்ஷனும் இல்லை. பக்கத்துல தானே போத்தீஸ் இருக்கு, அங்கே போகலாம் என்றாள். என் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இ.தி.கு.போல் மாற ஆரம்பித்தது. ஆனால் காட்டிக்கொள்ள வில்லை.
போத்தீஸில் மட்டுமென்ன பார்த்தவுடனேயே புடவையை எடுக்கப் போகிறாளா ? "அம்மா, 3000-4000 ரூபாய்க்கெல்லாம் நீங்க எதிர்பார்க்கும் டிசைன் கிடைக்காது. அதெல்லாம் 5000'க்கு மேல" என்று கடைக்காரரும் சேர்ந்து அவர் பங்குக்கு என் குருதிக்கொதிப்பை இரட்டிப்பு செய்தார். "அப்படின்னா, அந்த ரேஞ்சுலயே எடுத்துப் போடுங்க'என்று சொல்லிவிட்டாள். என் முகம் முற்றிலும் இ.தி.கு. போல் மாறி விட்டத்தை ஒரு வாறாகப் புரிந்து கொண்டவள், மள மளவென புடவைகளைக் களைந்து 5-6 புடவைகளை அதிலிருந்து ஃபில்டர் செய்து, முக்கால் மணி நேர அலசலுக்குப் பிறகு ஒன்றை மனதே இல்லாமல் பேக் செய்யச் சொன்னாள்.
அப்போது தான் எனக்கு இந்த எண்ணம் உதித்தது. செகண்ட் லேடி என்ற ஆங்கில நாவலில், அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியின் உருவம் கொண்ட ஒரு பெண்ணை பக்காவாக தயார் செய்து, ஜனாதிபதியின் மனைவியைக் கடத்தி விட்டு, இவளை அந்த இடத்தில் மாற்றி விடுவார்கள், ரஷ்ய உளவுக்துறையான கே.ஜி.பி. காரர்கள். எனக்கும் அது போல் நேர்ந்து விட்டதா? எட்டே நிமிடத்தில் புடவை செலக்ட் செய்யும் காயத்ரியை கடத்திவிட்டு அவள் போலுள்ள வேறொரு பெண்ணை என் மனைவியாக இருக்கும் படி செய்து விட்டார்களோ? எட்டு நிமிடத்தில் புடவை செலக்ட் செய்த காயத்ரி எங்கே? 3 கடைகள் ஏறி இரண்டு மணி நேரம் செலவு செய்து, மனமே இல்லாமல், என் பர்ஸுக்கு வேட்டு வைத்து புடவை வாங்கும் இவள் யார். இவளா(?!) என் மனைவி?!
டிஸ்கி 1: புடவை வாங்கி கொண்டு சுடிதார் வேறு. யப்பா இப்பவே கண்ணக் கட்டுதேன்னு நான் ஒரு ஓரத்துல உட்கார்ந்து விட்டேன். அரை மணி நேரம் கழித்து போகலாம் என்று சொன்னது தான் ஞாபகம் இருக்கு.
டிஸ்கி 2: இ.தி.கு என்று 3-4 இடங்களில் குறிப்பிட்டிருக்கேன். அப்படின்னா என்னன்னு கண்டுபிடித்தால் சொல்லிவிடாதீர்கள்.
November 04, 2008
மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 4
மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 2
மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 3
எனக்கு வேணும் சன் டைரக்ட், இஸ்கோ லகா டாலா தோ லைஃப் ஜிங்காலாலா, பாக்ஸ் ஃப்ரீ டிஷ் ஃப்ரீ, விஷ் கரோ டிஷ் கரோ ! "ஏ ஏ நிறுத்து நிறுத்து என்னல்லாமோ சொல்லிக்கொண்டு போறே" என்று முழி பிதுங்குகிறீர்களா? இதெல்லாம் DTH செட்-டாப்-பாக்ஸிற்கான விளம்பர வாசகங்கள். இந்தியாவில் சற்றே தாமதமாக வந்தாலும், செட்-டாப்-பாக்ஸின் விற்பனை விண்ணை முட்டுகிறது. அப்படி இந்த DTH என்றால் என்ன? செயற்கைக் கோளிலிருந்து நேராக நம் வீட்டின் வரவேற்பறைக்கே வருவதால் இதற்குப் பெயர் Direct To Home. சரி இந்த DTH இனால் அப்படியென்ன லாபம்?
இந்த என்க்ரிப்ஷன் மட்டும் இல்லையென்றால், செயற்கைக்கோளிலிருந்து எந்த அலைவரிசையில் சிக்னல்கள் வருகிறது என்று தெரிந்து விட்டால் யார் வேணாலும் ஒரு டிஷ் போட்டு, செயற்கைக்கோளிலிருந்து வரும் அலைவரிசையை பதிவிறக்கம் செய்து, சிக்னலகளைப் பார்க்க முடியும். மாதச் சந்தா செலுத்தாமலேயே நம்மால் டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். மாதச் சந்தா செலுத்தவில்லையென்றால் கேபிள் காரன் கேபிள் இணைப்பைத் துண்டித்து விடமுடியும். ஆனால், இந்த DTH முறையில் யார் யார் எங்கெங்கு டிஷ் பொறுத்தியிருக்கிறார்கள் என்று பிராட்காஸ்டருக்கு எப்படித் தெரியும்? இந்த மாதிரி ஹாக் செய்வதற்க்காகவே நிறைய பேர் இருக்கிறார்கள்.
இந்தியாவில் Content Producer'க்கென சில விதிமுறைகள் இருக்கின்றன. அவர்கள் எல்லோரும் எல்லா DTH பிராட்காஸ்டர்களுடன் தங்களுடைய சிக்னல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். முதலில் இலவசமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தான் விதிமுறை கொண்டு வந்தார்கள். பின்னர், எவ்வளவு சந்தாதாரர்கள் இருக்கிறார்களோ அதற்கேற்றாற்போல் பணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று மாற்றியமைத்தார்கள்.
இங்குதான் இந்த DTH பிராட்காஸ்டர்கள் லாபம் பார்க்க ஆரம்பித்தனர். கேபிள் காரகள் எப்படி தங்களுடைய சந்தாதாரர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பித்தனரோ, அதே தில்லு முல்லுவை இவர்களும் செய்ய ஆரம்பித்தனர். சில நாட்களுக்கு முன், டாடா ஸ்கை வைத்கிருப்போர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ESPN பார்க்க முடியாமற்போனதற்கு இப்படி நடந்த தில்லு முல்லு தான் காரணம்.
இந்த DTH பிராட்காஸ்டர்கள் கொண்டு வந்திருக்கும் ஒரு வரவேற்கத்தக்க ஒரு தொழில் நுட்பம், "Pay Per View". அதாவது நாம் பார்க்கும் சானல்களுக்கு மட்டும் சந்தா கட்டினல் போதும் என்ற தொழில் நுட்பம். ஆனால் இவர்கள் சானல்களை பகேஜ் செய்யும் முறையைப் பார்த்தால், அதில் எள்ளளவும் Consumer'க்கு லாபம் இல்லை என்பது தான்.
இந்த DTH ஆபரேடர்கள், நிகழ்ச்சி தயாரிப்பதில்லை, ஆனால் நிகழ்ச்சி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து சிக்னல்களை வாங்கி, அதை வேறு யாரும் பார்க்காத வண்ணம் மாற்றியமைத்து, consumer'க்கு வழங்குகிறார்கள். இவர்கள் சொந்தமாகச் செலவு செய்வது, சிக்னல்களை என்க்ரிப்ட் செய்வது (அதுவும் தனது சொந்த லாபத்திற்காகத்தான்), செட்-டாப்-பாக்ஸ் மற்றும் அதன் மென்பொருள் வடிவமைப்பது தான். செட்-டாப்-பாக்ஸ் மற்றும் விற்றதால் இவர்களுக்கு நிறைய லாபம் இல்லை. மாதாமாதம் நாம் செலுத்தும் சந்தாப் பணம் தான் இவர்களுக்கு தங்க முட்டை போடும் வாத்து. அதனால் தான் தனது வியாபாரத்தைப் பெறுக்க இப்போது பாக்ஸ் மற்றும் டிஷ் இலவசம் என்று கூவிக்கூவி விற்கிறார்கள். எப்படி ஒரு இடத்தில் இரண்டு கேபிள் ஆபரேடர்கள் இணைப்பு கொடுப்பதில்லையோ அதே போல், ஒரு DTH ஆபரேடரிடமிருந்து வாங்கிய செட்-டாப்-பாக்ஸை வைத்து இன்னொரு பிராட்காஸ்டருக்குத் தாவ முடியாது. இதுவும் இவர்கள் பணம் பண்ண இன்னொரு யுக்தி?
அது ஏன்? அடுத்த பதிவில் சொல்கிறேன்.
November 02, 2008
சினிமா சினிமா
1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயதில் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. "இன்று போய் நாளை வா" என்ற பாக்கியராஜ் படத்தை பார்க்க விடாமல் அழுது கொண்டிருந்ததையும், அப்பா என்னை வெளியிலேயே வைத்துக் கொண்டிருந்ததையும் அம்மா சொல்லியிருக்கிறாள். சித்தப்பாவோடு "அலைகள் ஓய்வதில்லை" போய் வாடி என் கப்பக்கழங்கே பாட்டு கேட்டது மட்டும் நினைவில் நிற்கிறது. முழுதாக விவரம் தெரிந்து பார்த்த படம், காக்கிச் சட்டை. சிங்காரி சரக்கு நல்ல சரக்கு பாட்டுக்கு ஆட்டம் போட்டு, வீட்டுக்கு வந்த பின் அம்மாவிடம் வாங்கிக் கொண்டது நன்றாக ஞாபகம் இருக்கிறது.
சிறு வயதில் படங்களில் வரும் சண்டைகளைப் பார்க்கும் போது, இப்படி குதிப்பவர்களை ஒலிம்பிக்ஸிற்கு அனுப்பினால் இரண்டு மெடலாவது தேரும் என்று உணர்ந்தேன்.
2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
இணையத்திலுள்ள விமர்சனத்தை படித்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது என்று ஏமார்ந்து போய் நேற்று ஏகன் போனோம். படம் பார்த்து விட்டு என் மனைவி காயத்ரிக்கு வந்த தலைவலி இன்னும் போக வில்லை. அமர்ந்து என்று சொல்வதை விட கொட்டாவி விட்டுக்கொண்டே பார்த்தேன் என்று சொல்லலம். எப்போடா படம் முடியும், வீட்டுக்கு கிளம்பலாம் என்று On a march என்று ரெடியாக இருந்தோம். படம் விட்டதும், ஓடியே வந்து விட்டோம்.
3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ்ப் படம், "ராமன் தேடிய சீதை". எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நாம் தான் ஒரே பெண்ணைப் பார்த்து விட்டு, அவளைக் கட்டிக் கொண்டோம். ஆனால், சேரன் இப்படி ரவுண்டு கட்டி பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிடுவதைப் பார்த்து காதில் கொஞ்சம் புகை வந்தது. அதெப்படி சேரன் படத்திற்கு மட்டும் இப்படி அம்சமாக கதாநயகிகள் கிடைக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
அரங்கிலன்றிப் பார்த்த தமிழல்லாத படம், "The Punisher". தன் குடும்பத்தை கொன்றவர்களை கொன்று குவிக்கிறான். வீட்டில் ஹோம் தியேடர் வாங்கி பார்த்த முதல் படமும் இது தான்.
4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
இரண்டு படங்கள். மகாநதி மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால். இரண்டு படங்களையும் 6 முறை அரங்கில் போய்ப் பார்த்தேன்.
மகாநதியை இப்போது சமீபத்தில் பார்த்தபோது, ஷோபனா தூக்கத்தில் புலம்பும் காட்சியை காண முடியவில்லை. என்னையும் அறியாமல் கண்களில் உதிரமே கொட்டுகிறதோ என நினைத்தேன்.
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
எப்போது சினிமாக்காரர்கள் அரசியலில் புகுந்தார்களோ அப்போதே சினிமாவிலும் அரசியல் புகுந்து விட்டது. என்னைத் தாக்கிய சம்பவம் என்பதை விட எரிச்சலூட்டிய சம்பவம் என்று தான் சொல்ல வேண்டும். கமல்ஹாசன் இயக்கிய சண்டியர் படத்திற்கு சாதிச் சாயம் பூசி படப்பிடிப்புக்கு நிறைய நெருக்கடி கொடுத்த அரசியல் சம்பவம் ரொம்பவே எரிச்சலூட்டியது. அதனால் படத்தின் பெயரையே விருமாண்டி என மாற்ற வேண்டியிருந்தது. எங்கள் ஊரில் சண்டியரென்பது தெனாவட்டா திரிபவர்களைத் தான் சொல்லுவோம். இதற்கு எந்த சாதியும் விதிவிலக்கல்ல.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
I feel that we live in an era, where technology has reached its zenith. அப்படியிருக்க சமீபத்தில் வெளிவந்துள்ள சிவாஜி, தசாவதாரம் மற்றும் ஏனைய சினிமாக்களில் வெளிக்காட்டப்படும் தொழில் நுட்பம் அவ்வளவாக பிரமிக்க வைப்பதில்லை. இன்ரைய சினிமாக்காரர்களுக்கு மென்பொருள் துறை ரொம்பவே உதவுகிறது.
ஆனால் எந்த வித தொழில் நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் எடுக்கப்பட்ட விட்டலாச்சாரியார் படங்கள் தான் என்னை மிகவும் கவருகின்றன. அதிலும் சந்திரலேகா, ஔவையார், பாதாள பைரவி , மாயா பஜார் போன்ற படங்களில் வந்த தொழில் நுட்பத்தை ரொமபவே மதிக்கிறேன். பேச்சுக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே சொல்கிறேன்.
6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இணையதளத்தில் சினிமா பற்றிய செய்திகள் வாசிப்பதுண்டு. வீட்டில் ஆனந்த விகடன் வாங்கிய காலத்தில் சினிமா செய்திகள் அதில் படிப்பதுண்டு.
7)தமிழ்ச்சினிமா இசை?
என்றென்றும் இளையரஜா. அதிலும் S.P.பாலசுப்பிரமணியம் ஜானகி கூட்டணியில் வந்த டூயட் பட்டுக்கள் ரொம்பவே பிடிக்கும்.
சில ஏ.ஆர்.ராஹமான், வித்யாசாகர் பாட்டுக்கள் பிடிக்கும்.
8)தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
கொல்கத்தாவில் இருந்த போது வாராவாரம் ஹிந்தி படத்துக்குப் போய் விடுவேன். என்னல்லாமோ ஹிந்தி படம் பார்த்தேன்.
கல்யாணம் ஆவதற்கு முன் ஏதாவது நல்ல ஆங்கிலப் படம் பார்ப்பதுண்டு. கல்யாணம் ஆன பிறகு, எப்போதும் கிரிக்கட்டே பார்க்கிறேன் என்பதற்கு தண்டனையாக அவ்வப்போது களியுஞாலு, ஸ்வப்பனக்கூடு கிளாஸ்மேட் போன்ற மலையாளப் படங்களும் பார்க்க நேரிடுகிறது. வெருதே ஒரு பார்யா என்ற மலையாளப் படத்தை எப்படியாவது பார்க்க வைத்து விடவேண்டும் என்ற சபதத்தை காயத்ரி எடுத்துக்கொண்டிருக்கிறாள்.
சிறு வயதில் தூர்தர்ஷனில் போடும் மாநில மொழித் திரைப்பட வரிசையில் சில தெலுங்கு படம் பார்த்த ஞாபகம். குறிப்பிட்டுச் சொன்னால் தியாகையா, சங்கராபரணம், தான வீர சூர கர்ணா.
சத்யஜிட் ராய் எடுத்த பதேர் பாஞ்சாலி என்னை மிகவும் பாதித்தது என்று சொல்ல ஆசை தான். ஆனால் பார்க்கமலேயே எப்படி பாதித்தது என்று சொல்ல?
9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
கள்ளத் தொடர்பு கூட கிடையாது. கமல்ஹாசன் சிம்ரன் ரம்யாகிருஷ்ணன் தவிர வேறெந்த திரைத் துரையினரையும் பார்த்ததில்லை. முடிந்தால் அசினைப் பார்த்து அடோகிரஃப் வாங்க வேண்டும்.
என் தந்தையின் ஒண்ணு விட்ட மாமா தியாகராஜனுக்கு (பிரஷாந்த் அப்பா) உதவியாளராக இருந்திருக்கிறார். கொம்பேரி மூக்கன், மலையூர் மம்புட்டியான் போன்ற படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிறு வயதில் அவரை பார்த்திருக்கிறேன். மற்றபடி வேறெந்தத் தொடர்பும் கிடையாது.
என்னோடு தொடர்பு வைத்துக் கொள்வதால் தமிழ் சினிமாவில் எப்படிப் பட்ட படங்கள் எடுக்கக்கூடாது என்று அறிவுறை வேணாலும் வழங்கலாம்.
10)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்ச் சினிமாவை அரசியலிலிருந்து அகற்றிவிட்டால் கொஞ்சமேனும் உருப்பட வாய்ப்புண்டு. இந்த மாஸ் ஹீரோயிசம், ஹீரொவை கடவுள் போல் காண்பிப்பது நின்றால் எதிர்காலம் நன்றாக இருக்கும். ஆனால் தமிழ் சினிமா கதாநாயகர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று தெரிகிறது. இவர்களே சென்ற தலைமுறையின் வாரிசுகள் தான். அடுத்த 10 வருடத்தில் இவர்களின் வாரிசுகளைத் தான் சினிமாவில் பார்க்க முடியும்.
11) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள்,செய்திகள் எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட
ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்?
தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஏற்கனவே சப்-ப்ரைம் க்ரைஸிஸால் பொருளாதாரம் தில்லானா மோஹனாம்பாள் ரேஞ்சுக்கு ததிகிணத்தோம் போடுகிறது. எவ்வளவு பேர் வேலையில்லாமல் ஆகப்போகிறார்கள் என தெரியவில்லை. இப்போது சினிமாவும் ஒரு இன்டஸ்ட்ரியகிவிட்டது. ஒரு வருடத்திற்கு தமிழ் சினிமாவே இல்லையென்றால் இதனால் சினிமாவையே நம்பியிருக்கும் நிறைய தொழிலாளிகள் பாதிப்பார்கள். விளைவு ரொம்பவே விபரீதமாக இருக்கும். நடிகர்கள், நடிகைகள் எங்காவது போய் கலைவிழா நடத்தி சம்பாதித்துக் கொள்வார்கள். ஆனால் பாவம் இந்த டெக்னீஷியன்கள், ஒப்பனைக்காரர்கள், லைட்மேன் இவர்களெல்லாம் என்ன செய்வார்கள். கிசு கிசு எழுதும் நிருபர்கள் அவர்கள் மென்ன அவல் கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்வார்கள்.
வேண்டாம் இது பற்றிப் பேச மட்டுமல்ல, நினைக்கவே வேண்டாம்.
இந்தத் தொடர் என்னோடு நின்றுவிடாமலிருக்க தற்போது பிளாகுலகிலிருந்து அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருக்கும் ரம்யா ரமணியையும் குந்தவையும் அன்புடன் அழைக்கிறேன்.
October 31, 2008
தொடர் பதிவுக்கு நடுவில் ஒரு கொசுவர்த்திச் சுருள்
நான் படித்தது கோவில்பட்டி அருகிலுள்ள நேஷனல் பொறியியல் கல்லூரி. வீட்டிலிருந்து 60 கிலோமீட்டர் தூரம் இருந்தாலும், ஒரு மணி நேரத்தில் போய் விடலாம். மதுரை செல்லும் பேரூந்துக்களில் செல்லலாம். காலேஜுக்கென்று தனியாக நிறுத்தமெல்லாம் கிடையாது. ஓட்டுனரை நிற்கச் சொன்னால் நம்மைத் திட்டிக் கொண்டே பிரேக் பிடிப்பது போல் பிடிப்பார். தனியாளாக மாட்டிக்கொண்டால், ஓடும் பொதே அவர் பிரேக் போடும் சமயத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். நிமிஷத்திற்கு ஒரு பேரூந்து இருப்பதால் அவ்வளவாகக் காத்திருக்கத் தேவயில்லை.
நான் கல்லுரியில் படித்தது (இன்றைக்கு அவ்வளவாக நலிந்து போய் விட்ட) ராகிங்க் நிறைந்த காலம். இன்றைய கல்லூரி மாணவர்களிடம் ராகிங்க் என்றாலே பயங்கரமான கொடூரமானதொன்று என்று நினைக்கிறார்கள். ஆனால், நான் ராகிங்கை ரொம்பவே ரசித்தேன்.
எங்கள் கல்லூரியில் அதிகார பூர்வமாக ராகிங்க் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் காலேஜ் ஹாஸ்டலில் அவ்வளவாக ராகிங்க் கிடையாது. அப்படியே இருந்தாலும் பாட்டுப் பாடு, டான்ஸ் ஆடு ரகம் தான். சில மாணவர்கள் கோவில்பட்டியில் வாடகை அறைகளில் தங்கியிருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் காலேஜ் பஸ்சிலேயே வந்து போவார்கள். காலேஜ் லெக்சரர்களும் அந்த பஸ்சிலேயே போவதால் அவர்களும் ராகிங்கில் அகப்பட மாட்டார்கள். ஒரு மணி நேரம் எந்த எஸ்கார்டும் இல்லாமல் திருநெல்வேலியிலிருந்து வந்து போகும் என் போன்ற டே ஸ்காலர்கள் தான் சீனியர்களுக்குக் கிடைக்கும் பலியாடுகள்.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயைப் போல் இருக்குமாம். அந்த மாதிரி பஸ் நிறுத்தத்தில் எந்த கல்லூரி மாணவனாக இருந்தாலும், இவன் சீனியரோ என்று தோன்றும். அதில் முதலாமாண்டு பசங்க தான்னு தெரியாம நிறைய பேருக்கு Good Morning wish சொல்லியிருக்கேன். Wish அடிப்பதிலும் ஒரு procedure உண்டும். மகளிர் மன்னிக்கவும். எல்லாவற்றையும் மூடிக்கொண்டு எம்பிக் குதித்து விஷ் அடிக்கணும். அப்படி சீனியரைக் கண்டு விஷ் அடிக்க வில்லையென்றால், தொலைந்தோம். அதனால் தான் எதற்கு வம்பு என்று யாரைப் பார்த்தாலும் விஷ் அடித்துவிடுவது better.
இன்னும் ராகிங்க் வகைகள் பற்றி சொல்லவே இல்லையே. முதலாமாண்டு மாணவன் யாராவது மினி-டிராஃப்டர் வைத்திருப்பார்கள். அதை மஷின் கன் மாதிரி வைத்துக்கொண்டு சத்தம் போட்டுக் கொண்டே சுட வேண்டும். மக்களும் நாங்க செய்யற சேட்டைகளைப் பார்த்து ரசிப்பார்கள். சீனியர்களுக்குப் பயந்து எல்லோரும் காலை ஏழு மணிக்கு முன்னரே பஸ் பிடித்து காலேஜ் போய் விடுவோம்.
ஒரு முறை நான் ராகிங்கில் அகப்பட்ட போது, என்னை சீனியர் பெண்ணிடம் "நீ ஜெயலலிதா மாதிரி இருக்கேன்னு சொல்லு" என்றார்கள். நானும் பயந்து கொண்டே அந்தப் பெண்ணிடம் போய், "மேடம், நீங்க சி.எம் மாதிரி இருக்கீங்களாம்"னு சொன்னதற்கு, அந்தப் பெண் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே இல்லை.
இன்னொரு முறை பஸ் நடத்துனரிடம் போய், "கொஞ்ச நேரம் நான் உங்க வேலையைப்பாக்கறேன்னு சொல்லி அவர் பையை வாங்கிக்கோ "என்பார்கள். இன்னொரு முறை, டிரைவர் ரொம்ப மெதுவாக பஸ் ஓட்டுறார். அவரைப் போய் இந்த மினி டிராஃப்டர் வைத்து சுட்டு விட்டு வா என்று உத்தரவு. இந்த மாதிரியெல்லாம் என்ன கோமாளித்தனம் செய்தாலும் பஸ்ஸில் பயணிக்கும் சக பயணிகளும் ரொம்பவே ரசிப்பார்கள்.
கோவில்பட்டிக்கும் திருநெல்வேலிக்கும் நடுவில் கயத்தாறில் தான் பஸ் நிற்கும். "சிங்கப்பூர் வந்துடுச்சு இறங்கறவங்கள்லாம் இறங்குங்க. லண்டன் போறவங்கள்லாம் ஏறுங்கன்னு பஸ்ஸ சுற்றி இரண்டு பிரதட்சிணம் வைக்கச் சொல்லி உத்தரவு வரும். வேறு வழி, உத்தரவைக் கேட்டுத் தான் ஆகணும்.
என்ன தான் இருந்தாலும் எஞ்சினியரிங்க் படிக்கற பசங்க இல்லையா? அதனால அப்பப்போ கொஞ்சம் அறிவு பூர்வமான கேள்வியெல்லாம் கேட்டு கொடைவானுங்க. ஒரு 50 பைசாவைக் கொடுத்து, அதை integrate பண்ணுன்னு சொல்லுவாங்க. என்னடா இது, 50 பைசாவை எப்படி integrate பண்ண்றதுன்னு பேந்தப் பேந்த முழிப்போம். புடனியில் ஒரு போடு போட்டு, இது 50 காசு இப்போ integrate பண்ணு என்பார்கள். அதாவது 50 cos. cos 50. அதை integrate செய்தால் sin 50. இது தான் பதில். இதைச் சொன்னாலும் இது சரியான பதில் இல்லை என்பார்கள். -sin 50 என்றால், கன்னத்தில் ஒன்று விழும். Cos differentiate செய்தால் தான் -Sin. Integrate செய்தால் -Sin வருமா என்று நம்மையே குழப்புவார்கள். என்னடா இது, இப்படி குடையறானே என்று மனதில் எண்ணிக்கொண்டிருக்கையில், "Integrate செய்தால் +C சேர்த்துக்கணும்'னு தெரியாது என்று கேட்டு புடனியில் இன்னொன்று விழும்.
ஐயோ தாங்கலியேன்னு கத்தறீங்களா? உங்களுக்கே இப்படி இருக்குதுன்னா, பூனை கிட்ட அகப்ப ட்ட எலியாட்டம் இருக்கற எங்களுக்கு எப்படி இருக்கும்? சிரிக்கவும் முடியாது, அழவும் முடியாது. சிரிச்சா, "ஏம்ல, ஒரு integration ஒழுங்கா பண்ணத்தெரியலை. இதுல இளிப்பு வேறயோல" என்று இன்னொன்று புடனியில் விழும்.
ஆனால் ஒரு முறை கூட சிகரெட் பிடிக்கச் சொல்லியோ, பெண்களிடம் அநாகரீகமாக நடக்கச் சொல்லியோ சொன்னதில்லை. அந்த மட்டுக்கு பிழைத்தோமடா சாமி. ஒரு மாதம் இப்படி எங்களையெல்லாம் வதைத்து விட்டு ஒரு welcome party வைத்து எங்களுக்கு நடத்திய ராகிங்கை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். பெரும்பாலும், இரண்டாம் ஆண்டு சீனியர்கள் ரொம்பவே வதைப்பார்கள்.
எப்போடா, நாமும் செகண்ட் இயர் போவோம், நாலு பசங்களை ராக் பண்ணுவோம் காத்திருந்து காத்திருந்து, ஒரு வழியாக நாங்களும் ஒரு நாள் சீனியர் ஆனோம். ஆனால், அந்த வருடம் தான், அண்ணாமலை பல்கலைகழகத்தில் நாவரசு என்ற பையனை ராகிங்க் செய்து, அந்தப் பையன் இறக்க, ராகிங்கையே மக்கள் ஏதோ பாவச் செயல் போல் பார்க்கலானார்கள். நாங்க ஏதாவது பையனை புடிச்சு விசாரித்தாலே, ராகிங்க் செய்கிறோம் என்று பஸ் பயணிகளை எங்களுக்கெதிராக திரள ஆரம்பித்து விட்டார்கள். கடைசி வரை ஒரு பையனை கூட ராகிங்க் செய்யாமலேயே கல்லூரிப் படிப்பு முடித்தாயிற்று.
பி.கு: ஒரு சீனியர் என்னிடம் ராகிங்க் செய்யும் போது, அடுத்த வருடம், என்ன சப்ஜெக்ட் எடுக்கப்போகிறாய் என்றான். நான் Electrical & Electronics என்று பதிலளித்தேன். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டான். ஒரு கண்ம் யோசித்து விட்டுச் சொன்னேன், "Electrical என்றால் conductor, Electronics என்றால் Semi-conductor என்றேன். ரொம்பவே புல்லரித்துப் போய் விட்டான்.
October 25, 2008
மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 3
மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 1
மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 2
மஹான்கள் என்னப்படுபவர்கள் ரொம்பவும் மேன்மை பொருந்தியவர்கள் என்பதால், மக்களைச் சுரண்டுபவர்களை மஹான்கள் என்றழைக்க முடியாது. அதனால் இப்பதிவிற்கான தலைப்பை மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் என்று மாற்றப்பட்டுள்ளது.
அந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்து கொள்ளத்தான் இவ்வளவு தொண்டைத் தண்ணி வற்ற சொல்லவேண்டியதாப்போச்சு?
[தொடரும்]
October 24, 2008
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்





October 15, 2008
எப்போது காதல் வந்தது
October 12, 2008
மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 2
October 09, 2008
மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 1
பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் வந்த கேபிள் தொலைக்காட்சி, எல்லோரையும் திகைக்க வைத்தது. தூர்தர்ஷனின் தயவிலேயே பொழுது போக்கிக்கொண்டிருந்த மக்களுக்கு கேபிள் தொலைக்காட்சி ஒரு பெரிய வரப்பிரசாதம். கிரிக்கெட் மேட்சா தூர்தர்ஷன் மனது வைத்தால் தான் பார்க்க முடியும். சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியா, ஒளியும் ஒலியையும் ஞாயிற்றுக்கிழமை அவர்களாக மனது வைத்து ஏதாவது நல்லதொரு படத்தைப் போட்டால் தானுண்டு. ஒன்பது மணிக்கெல்லாம் டில்லியிலிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியைத் தான் பார்க்க வேண்டும்.
அதெப்படி, செயற்கைக்கோளிலிருந்து நேராக ஒரு கேபிள் ஆபரேடர் பொருத்தியிருக்கும் டிஷிற்குச் செல்லும் சிக்னலை எப்படிச் செயலிழக்கச் செய்ய முடியும்?
