Pages

May 18, 2008

ஆஹா!! ஹிந்தி திரையுலகம்

ஐ.பி.எல் மாட்ச் பார்க்க விடாமல், ஜீ டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஃபிலிம் ஃபேர் அவார்ட் நிகழ்ச்சியைத்தான் பார்க்கணும் என்று இன்று மேலிடத்து உத்தரவு. வேற வழி! அதனால கிரிக்கெட்டுக்கு கல்தா கொடுத்து விட்டு ஜீ டி.வியை ட்யூன் செய்யலானேன். அதுவும் நல்லதுக்குத்தான். மேலிடத்து பெர்மிஷனுடன் அறைகுறை நங்கையர்களை ரசிக்க முடிந்ததே.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியர்கள் கரன் ஜோஹரும் சாஜித் என்ற இரு இளம் இயக்குனர்கள். மெய்யாலுமே இவர்களுக்கு உடம்பு பூரா மச்சம் இருக்கணும்பா. வர்றவள் போறவள் எல்லாரும் கன்னத்தில் கிஸ் அடிக்காளுங்க. அப்பட்டியே எவளாச்சும் அடிக்கலைன்னா, இவனுங்களே கேட்டு வாங்கிக்கிடறானுங்க.
இப்படித்தான் லார தத்தாவை கலாய்ச்சானுங்க.
"லாரா, நீ செம ஹாட்டா வந்திருக்கே", கரன்.
"ஒஹ் ரொம்ப தாங்க்ஸ்" லாரா.
"எங்கே எனக்கு ஒரு உம்மா கொடு", கரன்.
அழுத்தமாக ஒரு உம்மா, கரன் கன்னத்தில்.

யப்பா, இதெல்லாம் தமிழ் சினிமா உலகத்தில் நடக்குமா. இது போதாதுன்னு, ஷாருக்கான் மனைவியிடம், "ஐ லவ் யூ" என்று பப்ளிக்கா சொல்லுறானுங்க. கட்டிப்பிடிச்சு மறுபடி கன்னத்தில் ரெண்டு உம்மா. ஆஹா இன்னா கலாசாரம்பா.

அடுத்த தபா, மேலிடத்திடம் எந்த ஹிந்தி டி.வி.யில் அவார்ட் ஃபங்க்ஷன் போடுறாங்கன்னு நானே சொல்லலாம்னு இருக்கேன்.

May 17, 2008

அரசாங்க ஆஸ்பத்திரி மீது காண்டு ஏன்?

"கழுத்துவலித்தொல்லையால் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி" - செய்தி. ராமசந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் இவரை பரிசோதித்து வருகிறார்களாம். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், ஏன் அரசாங்க ஆஸ்பத்திரியில் போய் சிகிச்சை செய்துகொள்ளவில்லை? இவரே அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போகலைன்னா, அங்கே வசதிகள் சரியா இல்லைன்னு தானே அர்த்தம்? இல்லை, அங்கு வேலை பார்க்கும் டாக்டர்கள் மேல் நம்பிக்கை இல்லையா? அவர்கள் திறமையில் சந்தேகமா? ஏன் இடஒதுக்கீட்டில் மருத்துவம் படித்து, இட ஒதுக்கீட்டிலேயே அரசாங்க ஆஸ்பத்திரியிலே வேலையும் கிடைத்தவர்கள் எந்த அளவிற்கு சிகிச்சை கொடுப்பார்கள் என்ற அச்சமா? இல்லை, இவர் அங்கு போனதால் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை கொடுக்காமல், டாக்டர்கள் தன்னை கவனிக்க வந்துவிடுவார்கள் என்பதற்காக அங்கு போகாமலிருக்கிறாரா? எந்த அரசாங்க ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாலும் நுழைவாயிலில் கருணாநிதியின் படத்தைத்தான் மாட்டி வைத்திருக்கிறார்கள். அப்படியிருக்க ஒரு மாநிலத்தின் முதல்வர் என்று சொல்லிக்கொள்பவர், இப்படி செய்வது ஒரு தப்பான முன்னுதாரணம்.
இதைப்பற்றியெல்லாம் ஞானி தனது 'ஓ' பக்கங்களின் குட்டு என்று எழுதுவாரா தெரியாது. அதனால் தான் நான் முந்திக்கொண்டேன்.

May 13, 2008

உனக்கு மட்டுமா தம்பி?!

எங்க அப்பா கடைக்கு பக்கத்தில் ஆர்ய பவன் ஹோட்டல் இருக்கிறது. நெல்லை சைவ பிள்ளைமார் ஹோட்டல். டிஃபன் வகைகள் வெகு ஜோராக இருக்கும். அப்பா கடைக்கு எப்போ போனாலும் அநேகமாக இங்கு ஒரு விசிட் அடித்து விடுவேன். அப்பாவை ஒரு பத்து நிமிஷம் நச்சரிக்க வேண்டும். "சந்தைக்குப் போணும்; ஆத்தா வையும் காசு கொடு" என்று 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசன் ரஜினியை நச்சரிப்பதுபோல் கேட்டுக்கொண்டே இருந்தால் "போய்த் தொலை" என்று ஐந்தோ பத்தோ கொடுப்பார். நேரே இந்த ஹோட்டலுக்குத்தான் விஜயம்.
ஒரு முறை (ஆறோ ஏழோ படிக்கும் போது) சில முக்கியமான கஸ்டமர் வந்திருக்கும் போது, நான் கடைக்குள்ளே என்ட்ரி கொடுத்தேன். எப்போதும் போல தலைச் சொரிந்து கொண்டே "அப்பா" என்றேன். ஒண்ணுமே கேட்காமல் பத்து(!) ரூபாய் எடுத்துக் கொடுத்துவிட்டார். "கஸ்டமர் வந்திருக்கும் போது, இவன் மானத்தை வாங்க வேண்டாம்" என்று நினைத்தாரோ என்னவோ? "ஆஹா! இப்படி கஸ்டமர் வந்திருக்கும் போது அப்பாவிடம் பணம் கேட்காமலேயே கரந்துவிடலாம் போலிருக்கே" என்ற உண்மை வெகு நாட்களுக்குப் பிறகு தான் தெரிந்தது.
பத்து ரூபாய் கிடைத்தது பெரிய பொக்கிஷம் மாதிரி. நேரே ஆர்ய பவன் போனேன். இதற்கு முன் சாப்பிடாதது என்னென்ன என்று பட்டியலிட்டேன். ஒவ்வொண்ணா ஆர்டர் செய்தேன். ஒவ்வொன்றையும் ஆர்டர் செய்யும் முன் சர்வரிடம், இதன் விலை எத்தனை? விலைப்பட்டியலில் போட்டிருக்கும் விலையும் இவன் சொல்லும் விலையும் ஒன்றுதானா என்று வெரிஃபை பண்ணிக்கொள்வேன். பில் அமௌண்ட் பத்து ரூபாயைத் தாண்டிவிடக்கூடாதே என்ற கவனம் வேறு. (என்னென்ன சாப்பிட்டேன் என்று சொல்ல மாட்டேன். நீங்க அப்புறம் கண்ணு போட்டுட்டீங்கன்னா?) அப்பப்போ அப்பா கொடுத்த பணம் பாக்கெட்டில் இருக்கா என்றும் பார்த்துக்கொள்வேன். (பணம் இல்லாம மாவாட்டணுமே என்ற பயம்!)
ஒரு வழியா சாப்பிட்டு முடித்தபின் பில் பத்து ரூபாய்க்குள்தான் வந்திருப்பதைப் பார்த்து நிம்மதி. அப்பாடா! மாவாட்ட வேண்டாம்! பில்லை எடுத்துக்கொண்டு கௌன்டருக்கு பணம் செலுத்தச் சென்றேன். பில்லை வாங்கிகொண்டவர் பில்லைப்பார்த்தார், என்னைப்பார்த்தார். என்ன நினைத்தாரோ, "உனக்கு மட்டுமா தம்பி?" என்று கேட்டார்.
அவர் ஏன் அப்படிக் கேட்டார் என்று புரியவில்லை. ரொம்ப ஜரூரா "ஆமாண்ணே" என்று வெள்ளந்தியாக தலையாட்டினேன். கடைக்குத் திரும்பி வந்ததும் அப்பாவிடம் மீதி சில்லரைக் காசைக் கொடுக்க (அப்போதெல்லாம் பாக்கெட் மணி கிடையாது), "என்னடா இவ்வளவு தானா?" என்றார். "ஆமாம்பா. அந்த ஹோட்டல்ல கூட உனக்கு மட்டுமா தம்பின்னு கேட்டான்" என்று சொல்லித் தொலைத்தேன். அவ்வளவு தான். கடையில் இருந்தவர்களெல்லாம் ஒரே சிரிப்பு. அப்பவும் எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. ஆனால் அப்பா மட்டும் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக பையில் மீதிக்காசைப் போட்டுக்கொண்டார்.
வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம், " உன் பிள்ளை, கஸ்டமருக்கு முன்னால என் மானத்தையே வாங்கிட்டான். கொடுத்த காசு அம்புட்டையும் செலவழிச்சு தின்னுபுட்டு, ஹோட்டல்காரன் கேலியா பேசினதைக் கூட பெருமையா சொல்லிக்கிறான்" என்று தலையயிலடித்துக் கொண்டார். "ஏண்டா, என்னடா பண்ணின? எதுக்கு அப்பா கோபமா இருக்கார்?", என்று அம்மா கேட்டதற்கு, நான் நடந்ததைச் சொன்னேன். அம்மாவும் சிரித்துக் கொண்டே "நல்ல பிள்ளை டா போ" என்றாள்.
இன்றும் எனக்கு ஹோட்டல் காரன் சொன்னது பிடிபடவில்லை. அப்படியென்ன கேட்டுவிட்டான். "உனக்கு மட்டுமா தம்பி?" என்று தானே கேட்டான். என்னைக் கேலியா செய்தான்? இல்லை எல்லோர் முன்னாலும் அவன் சொன்னதை அப்பாவிடம் சொன்னேனே? அது தவறா? ஒண்ணும் விளங்கலைடா சாமி.

May 09, 2008

மொழிப்பிரச்சினை

பெங்களூர் வந்து எட்டு வருடங்கள் ஆகியும் இன்னும் ஒழுங்கா கன்னடம் பிடிபடவில்லை. தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லுவதாலேயோ என்னமோ கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் எண்ணமே வரவில்லை. கொல்கத்தா போய் ஐந்தே மாதங்களில் ஓரளவேனும் பெங்காலி புரிந்து கொள்ள முடிந்தது, ஆனால் இன்னும் கன்னடம் வரவில்லை.
ஆஃபீசிலும் நிறைய ஹிந்தி மக்கள் தான். கன்னடத்தில் மாத்தாட வேண்டாம். அக்கம் பக்கத்திலுள்ள கடைக்காரர்களும் ஹோட்டல்காரர்களும் (கன்னடர்களாகவே இருந்தும்) நன்றாகவே தமிழ் பேசுகிறார்கள். அப்படியே யாராவது கன்னடத்தில் மாத்தாட ஆரம்பித்தால், "கன்னடா கொத்தில்லா" என்று சொல்லிடுவேன். அவர்களும் எனக்கு தெரிந்த ஹிந்தியிலோ ஆங்கிலத்திலோ சில சமயம் தமிழிலேயே கூட பேச ஆரம்பித்து விடுவார்கள். அதனால் கன்னடம் தெரியவில்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது கிடையாது. என் மனைவிக்கும் கன்னடம் அவ்வளவாக தெரியாது. (தமிழே முழுசா தெரியாது. இதுல கன்னடம் மட்டும் தெரியுமா?).
முதன் முதலில் மொழிப்பிரச்சினை உருவானது, எங்கள் வீட்டிற்கு வேலை செய்ய வந்த பெண்மணி மூலமாக. அவளுக்கு தமிழ் தெரியாது, ஹிந்தியும் ஆங்கிலமும் புரியாது. கன்னடம் மட்டுமே தெரியும். மைசூர் பக்கத்திலுள்ள
மாண்டியா தான் சொந்த ஊர். (எப்போ தமிழ் நாட்டிற்கு எதிராக கலவரம் வந்தாலும் இங்கு தான் ஆரம்பமாகும்) அவள் எதோ கேட்க, நான் எதோ சொல்ல, அவள் கேட்டதற்கும் நான் (என் மனைவியையும் சேர்த்து தான்) சொன்னதற்கும் சம்பந்தமே இருந்திருக்காது போலும். அவள் தலையில் அடித்துக்கொண்டு சிரிப்பாள். என் முகம், பணத்தை எல்லாம் இழந்து விட்ட வடிவேல் மூஞ்சி கணக்கா ஆகிடும். தொடப்பம் எங்கேன்னு கேட்டிருப்பாள், இவ்வளவு தான் பாத்திரம் இதை மட்டும் தேய்த்தால் போதும் என்பேன். நான் சொல்வது அவளுக்கு புரியாமல் அவளே தொடப்பத்தைத் தேடி எடுத்து கொள்வாள். குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், துணியை நானே உலர்த்தி கொள்கிறேன் என்பாள் என் மனைவி.
இந்த மாதிரி அவள் என்ன சொல்கிறாள், நாங்கள் என்ன சொல்கிறோம் என்றே புரியாமல், நிறையவே சர்க்கஸ் கூத்துக்கள் நடக்கும்.
இப்படி அல்லல் பட்டு இன்றளவும், கன்னட சரஸ்வதி என் நாவில் குடி கொள்ள மறுக்கிறாள்.

April 28, 2008

எங்கே போனார்கள் கலாசர பாதுகாவலர்கள்

சென்ற வாரம், கோலிவுட்டில் இதற்கு முன் நடத்தியிறாத ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. தசாவதாரம் ஆடியோ ரிலீஸ். ஒலிநாடா வெளியான மறு நாளே, இணையதளத்திலிருந்து டவுண்லோட் செய்துவிட்டேன் என்பது வேறு விஷயம். ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு எப்படித்தான், இப்படி ஆடம்பர கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இவ்வளவு நேரம் கிடைக்கிறதோ? "நாட்டுக்காக நிறைய உழைத்தாகி விட்டது. மீதி நாட்களை இம்மாதிரியான கேளிக்கை நிகழ்ச்சிகளில் தான் செலவிடப் போகிறேன்" என்று அவர் நினைத்திருந்தால், ஆட்சி பொறுப்பை மற்றவரிடம் (அதான் வாரிசு ரெடியா இருக்காரே) ஒப்படைத்துவிட்டு, இவர் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டியது தானே?
ஒரு ஒலிநாடா வெளியிடும் விழாவிற்கு இவ்வளவு விளம்பரமா? அவ்வளவு பணமா ஒரு தனிமனிதனிடம்? இதை எவ்வளவோ நல்வழியில் செலவழித்திருக்கலாமே. "இவ்வளவு ஆடம்பரமாக நடத்தும் ஒரு விழாவிற்கு நான் தலைமை ஏற்பது எனக்குப் பிடிக்கவில்லை" என்று முதல்வர் ஒரு போடு போட்டிருக்கலாமே. ஊருக்குத்தான் உபதேசம் செய்வார்கள் போலிருக்கு. கமல்ஹாசனும் ஆஸ்கர்.ரவிசந்திரனும் தனது செல்வாக்கைக் காட்டிக்கொள்ள ஒரு நல்ல அரங்கம்.
அதிலும் மல்லிகா ஷெராவத் வந்திருந்த லட்சணம், ஐயோ! இப்படி ஒரு ஆடையா அணிந்து வரவேண்டும். கவர்ச்சியை மீறி ஆபாசமே மிஞ்சியிருந்தது. மல்லிகா அணிந்திருந்த உடையைவிட, சிவாஜி பட விழாவிற்கு வந்திருந்த ஷ்ரியா, எவ்வளவோ கண்ணியமான உடை அணிந்துவந்திருந்தார். அதற்கே கழகக்கண்மணிகள் சட்டசபையில் கூச்சலிட்டார்கள். இதெல்லாம், அவர்கள் கண்களில் படவில்லையா இல்லை, உறுத்தவில்லையா?

இவ்வளவு பணம் விரயம் செய்து, படம் மட்டும் ஊத்திக்கொண்டதென்றால், தயாரிப்பளர் 'அம்பேல்' என்பது மட்டும் உறுதி.

April 20, 2008

கிரிக்கெட் திருவிழா(வா)?

கோடை விடுமுறைக்கு முன்னெல்லாம் புதுப்படம் தான் ரிலீஸ் செய்துகொண்டிருந்தார்கள். இப்போது, சினிமாவையும் கிரிக்கெட்டையும் கலந்து ஒரு காக்டெயில் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஐ.பி.அல் லீக் ஆட்டங்கள் பயங்கர ஆர்பாட்டத்துடன் ஆரம்பித்திருக்கின்றன. முதல் மூன்று ஆட்டங்களிலும் த்ரில் இல்லாவிட்டாலும் விறுவிறுப்பாகவே சென்றுள்ளன. பேட்ஸ்மனுங்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த லீக் முறை ஆட்டங்களில் இது வரை அசத்தியவர்கள் அந்நிய நாட்டு வீரர்கள் தான். மண்ணின் மைந்தர்களான ராஹுல் டிராவிட், தோனி, காங்குலி, யுவ்ராஜ், செஹ்வாக் போன்றவர்கள் இது வரை சோபிக்க வில்லை. இனி வரும் ஆட்டங்களில் இவர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் கிரிக்கெட் இவ்வளவு வளர்வதற்குக்காரணம், விளையாட்டையும் மீறிய ஒரு தேசிய உணர்வு தான். அப்படி இருக்கையில் இந்திய அணியில் விளையாடும் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்யும் மெக்குல்லம், ஹஸ்ஸி போன்றவர்களின் ஆட்டம் பார்க்க நன்றாக இருந்தாலும், மனதோரத்தில் ஒரு சின்ன நெருடல். இந்த லீக் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் திறமை காட்டினார்களேயன்றி, இந்த மாதிரியான லீக் ஆட்டங்களுக்கு வெகு சீக்கிரமே மக்களிடம் வரவேற்பு குறைந்து விடும். இப்போதே மொஹாலியில் நடந்த முதல் ஆட்டத்திலேயே பாதி காலி கேலரிதான் காணப்பட்டது.
இவ்வளவு விலை கொடுத்து தங்களை வாங்கியுள்ள கிளப் முதலாளிகள் முகம் சுளிக்காமல் இருக்க இந்திய வீரர்கள் தங்கள் திறமையை காட்டியே ஆக வேண்டும். இல்லையெனில் அடுத்த முறை இந்திய வீரர்களை விட்டுவிட்டு அந்நிய நாட்டு வீரர்களை ஏலம் எடுத்து விடுவார்கள்.




April 16, 2008

அழிக்கப்பட்டு வரும் காலச்சுவடுகள்

சென்ற வாரம், ஹோசூரில் இருக்கும் சந்திரசூடேஸ்வரர் கோயிலுக்குப் போயிருந்தேன். ஒரு சிறிய மலையின் மீது மிகப்பழமையான கோயில். ஹோசூர் ஊரையே இந்த மலைமீதிருந்து பார்க்கலாம். மாலை வேளைகளில் காற்று பிய்த்துக்கொண்டு போகும். என் மனைவிக்கு பெங்களுர் அருகிலுள்ள இடங்களிலேயே மிகவும் பிடித்தது. இங்குள்ள சந்திரசூடேஸ்வரர் ஆலயம் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கோயில் குருக்கள் சொல்கிறார். விஜயநகரை ஆண்ட கிருஷ்ண தேவராயரின் முப்பாட்டனாருக்கு முப்பாட்டன் கட்டியது என்று நம்பப்படுகிறது. ஆலயத்தின் பிரதான மூர்த்தி சிவன். சுயம்பு ரூபத்தில் காட்சி அளிக்கிறார்.

ஆர்பாட்டமும் புதுமையும் நிறைந்த கோயில்களை விட, அமைதியும் பழமையாகவும் இருக்கும் கோயில்களில், மனது ஒருமித்து இறைவனை நினைத்து தியானிக்க முடியும் என்பது என் கருத்து. அதை விட பழமையான ஆலயங்களின் பின்னால் இருக்கும் சரித்திரம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் பிடித்த விஷயம். நான் சொல்வது, கோயில் அமையப்பெற்ற ஸ்தல வரலாறு அல்ல. கோயில் எந்தக் காலத்தில், யாரால் கட்டப்பட்டது. எவ்வளவு நாட்களில் கோயில் கட்டப்பெற்றது. யார் யார் இந்தக் கோயிலை நிர்மாணித்தனர்? அக்கால கட்டத்தில், மக்களின் வாழ்வு எப்படி இருந்தது? இதெல்லாம் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் அதிகம். இந்த விஷயங்களெல்லாம், கோயில் சுவர்களிலே செதுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களில் புதைந்திருக்கும். கவனமாக அதை படித்தோமேயானால், இதிலிருந்து பற்பல ஸ்வாரஸ்யமான விஷயங்கள் புலப்படும். இம்மாதிரி கல்வெட்டுக்களில், என்ன எழுதியிரிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம்.ஆர்வம் என்று சொல்வதை விட ஆசைக்கோளாறு என்றும் சொல்லலாம்.
என்னைப் பொறுத்தவரை, கல்வெட்டுக்கள் எதோ கதை சொல்லும் விஷயங்கள் மட்டுமல்ல. அக்காலத்து மனிதர்கள் தன்னைத் தொடர்ந்து வரும் தலைமுறைக்குச் சொல்ல நினைத்த சில முக்கியமான விஷயங்கள். இப்போ ஆஃபிஸிலே நாம் செய்யும் ப்ரோஜெக்ட்டை, நம்மைத்தொடர்ந்து, அதை மெயின்டெய்ன் பண்ணுபவர்களுக்கு வசதியாக இருக்க டாகுமெண்ட் செய்வதில்லையா? அது போலத்தான், ஏதோ ஒரு முக்கியமான செய்தியை தலைமுறை தலைமுறையாக பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் செதுக்கப்பட்டவை தான் கல்வெட்டுக்கள். இன்றும் வரலாற்றுச் சான்றாக விளங்குவது, கோயில்களில் காணப்படும் எண்ணிலடங்கா கல்வெட்டுக்கள் தான்.


இங்குள்ள ஹோசூர் கோயிலிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் இருக்கின்றன. என்ன தான், விஜயநகர மன்னர்கள் கட்டியிருந்தாலும் கல்வெட்டுக்கள் எல்லாம் 900 வருடங்களுக்கு முன்னமே இருந்த வட்டெழுத்துத் தமிழில் இருந்தது வியக்கத்தக்கது. இந்த லிபியிலிருந்துதான், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள எழுத்துக்கள் உருவாகியிருக்கின்றன. (என்ன சொன்னாலும், என் மனைவி ஒத்துக்கொள்ள மாட்டாள். வட்டாள் நாகராஜ் இதைப் படித்தால் என் வீட்டிற்கு ஆட்டோவில் அடியாள் அனுப்புவார்.)
சென்ற வாரம் ஹோசூர் கோயிலுக்குச் சென்றிருந்த போதுதான் கவனித்தேன், கோயில் சுவர்களை, செப்பனிடுகிறோம் வெள்ளையடிக்கிறோம் பேர்வழியென்று, அக்கெல்வெட்டுக்கள் அழியும் வண்ணம் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கோவிலில் திருப்பணி மேற்கொள்ளும் மனிதர்கள் இது கூடவா தெரியாமலிருப்பர்கள்? கல்வெட்டுக்கள், எவ்வளவோ அந்நிய படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்களைத் தாண்டி காலத்தினால் அழிக்க முடியாத காலச்சுவடுகளை, இப்படியா, பொறுப்பில்லாமல் அதன் மேல் வெள்ளை பூசி, சிமெண்ட் பூசி நம் மனிதர்களே அழிக்கப் புறப்படுவார்கள்?

ஆஃபீஸ் விஷயமாக ஒரு முரை இத்தாலி நட்டிலுள்ள மிலான் நகரம் சென்றிருந்தேன். அங்கு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டுஓமா என்ற சர்ச் உள்ளது. அங்கு மைகேல் ஏஞ்சலோவின் வண்ண ஓவியங்கள் இருக்கின்றன. சர்ச்சின் சில பாகங்கள் காலப்போக்கில் பழுதடைந்ததால், அதை புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் சொன்ன தகவல், வியக்க வைக்கிறது. 17ஆம் நூற்றாண்டில் இந்த சர்ச் எப்படிக் கட்டப்பட்டதோ, அதே போல், அதன் பழமை கெடாத வாறு அதை, புதுப்பித்துக் கொண்டிறுந்தார்கள். இப்படி பழைய கட்டிடங்களை புதுப்பிப்பதற்கென்றே சில நிபுணர்கள் இருக்கிறார்களாம். வெறும் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கட்டிடத்தையே அவர்கள் அப்படி பாதுகாக்கும் போது, அதை விட பழமையான, பல நூற்றாண்டுகளாக அழியாதிருக்கும் காலச்சுவடுகளை, க்ஷண நேரத்தில் அழித்திடுதல் நியாயமாகுமா? போதாக்குறைக்கு, இந்தியாவில் கலாசாரத்துறைக்கென்றே ப்ரத்தியேகமாக ஒரு அமைச்சகம், ஒரு மத்திய மந்திரி, அவர் கீழ் சில அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அமைச்சகம், அதற்கு ஒரு மாநில மந்திரி, இவர்களெல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நல்ல கெட்ட வார்த்தையில் திட்டணும் போல இருக்கு!!

April 11, 2008

தினம் ஒரு பதிப்பு

நம்ம சாலமன் பாப்பைய்யா எப்படி சன் டி.வி'ல தினம் ஒரு திருக்குறள் சொல்றாரோ, அது மாதிரி நான், தினம் ஒரு பதிப்பு எழுதணும்'னு ஒரு ஆசை. தினமும் ஏதாச்சும் எழுதணும்'னா நான் நெசாமவே வெட்டித்தண்டமாத்தான் சுத்திட்டுத்திரியறேன்னு நினைக்கப்படாது.
எங்க வூட்டம்மாவுக்குக்கூட இப்போ நான் இன்னா எழுதுதேன்னு படிக்கற ஆர்வம் வந்திருக்கு. நான் எழுதுறதை தப்புத்தப்பா படிச்சு தமிழை கொலை பண்ணுவது வேறு விஷயம்.

இருந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகம் பயன் பெறுமாரு எழுதட்டாலும், ஏதோ டைம் பாசுக்காச்சும் படிக்கற மாதிரி ஏதாவது எழுதி எல்லாரையும் பதம் பார்க்க போறேன்.

So Guys n Gals, watch out this space daily for more updates from tomorrow.

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ??

அல்லாருக்கும் இந்த தபா தமிழ் புத்தாண்டு வாழ்த்து கிடையாது. அதான் இனிமே பொங்கல் அன்னிக்கே தமிழ் புத்தாண்டு கொண்டாடிக்கிங்கடான்னு சொறிஞர், சாரி கலைஞர் சொன்னப்பரம் வாழ்த்து சொல்ல முடியுமா? என்னமோ இவங்க தான் தமிழ் காலண்டரையே கண்டு புடிச்ச மாதிரி புத்தாண்ட திடீர்னு பொங்கலுக்கு மாத்திட்டாங்க. நல்ல வேளை, இந்த வருஷம் சித்திரை 1 ஞாயிற்றுக்கிழமை வரதுனால ஒண்ணும் இல்லை. இதே ஏதாவது வேலை நாட்கள்ல வந்திருந்தால், ஒரு நாள் லீவு போயிருக்கும். :(

இதுல உள்ள கூத்து என்னன்னா, கலைஞர் தொலைக்காட்சில சிறப்பு ஒளிபரப்பு நிகழ்ச்சி வேற. தமிழ் புத்தாண்ட மாத்திப்புட்டதுனால, இவங்களால சிறப்பு நிகழ்ச்சி ஒண்ணும் ஒளிபரப்பாமல் இருக்க முடியாது. ஏன்னா, மற்ற எல்லா சேனல்களும் சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சின்னு ஏதாவது போட்டுத் தாக்கறான். இவனால நிகழ்ச்சி போடாமலும் இருக்க முடியாது. போட்டாலும் அதுக்கு ஏதாவது சிறப்பு காரணமும் சொல்லணும். அதனால, இவங்க சொல்லுறது, சித்திரை மாதத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சின்னு விளம்பரம் வருது.

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க? ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ??

April 09, 2008

நகர வாழ்க்கையிலே தொலைத்தவை

கல்லூரி படிப்பு முடித்து, பிழைப்புக்காக நகர வாழ்க்கையை ஏற்றுக்கொண்டபின், கொஞ்சம் பணம், வீடு கார் எல்லாம் வாங்கியாச்சு. ஆனால், எதையாவது தொலைத்தால் தானே சில பொருட்கள் கிடைக்கும். அப்படி நகர வாழ்க்கைக்கு நகர்ந்த பின், நான் தொலைத்தது என்ன?
ஆற்றங்கரைக்குளியல்
எப்போ தாத்தா வீட்டிற்குப் போனாலும், ஆற்றங்கரை குளியல் இல்லாமல் திரும்பமாட்டேன். எருமை மாடு கூட இவ்வளவு நேரம் தண்ணியில இருக்காதுடா என்று அப்பா சொல்வார். அவ்வளவு நேரம் தண்ணியிலேயே நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருப்பேன். பெங்களூரிலிருந்து 140 கி.மீ தூரத்தில் இருக்கிறது பக்கத்திலுள்ள ஆற்றங்கரை :(

பாவாடை தாவணி மயில்கள்
பி.கு. நல்ல வேளை, என் மனைவிக்கு, தமிழ் படிக்கத் தெரியாது. அதனால் தைரியமாக இதை எழுதுகிறேன். எங்கள் வீட்டுப்பக்கத்தில், திருநெல்வேலியின், பெயர் 'போன' மகளிர் கல்லூரி இருக்கிறது. எங்கள் வீட்டைக்கடந்து தான் நிறைய பெண்கள் காலேஜுக்குப் போகணும். நிறைய பெண்கள் பாவாடை தாவணியில் தான் தினமும் செல்வார்கள். என்ன தான், பெங்களுர் பெண்கள் ஜீன்ஸும் டி-ஷர்டும் போட்டிருந்தாலும், பாவாடை தாவணி மாதிரி வருமா? இதைப் படித்து விட்டு, சில பெண் வாசகர்கள், நான் சரியான மஹா ஜொள்ளன் என்று நினைக்கலாம். என்ன செய்ய, உண்மையை ஒப்புக்கொண்டு தானே ஆகணும் !

பம்பரம் கோலி கிட்டிப்புல்
நாங்கள் தெருவில் அவ்வப்போது விளையாட்டு சீசனை மாற்றுவோம். சில நாட்களுக்கு பம்பரம், சில நாட்களுக்கு கோலி, சில சமயம் கிட்டிப்புல். மீதி நேரங்களில் கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டு. பம்பர விளையாட்டில் மற்றவர் பம்பரத்தில் ஆக்கர் வைப்பதை (பம்பரத்தின் ஆணியால், மற்றவர் பம்பரத்தில் ஏற்படுத்தும் விழுப்புண்க்கள்) எவ்வளவு வீர தீரமான செயல். வித விதமான கலர்களில் கோலிக்காய் வாங்கி, அம்மவுக்குத்தெரியாமல் பதுக்கி வைத்து, ஆஹா அதெல்லாம் ஒரு காலம். கிட்டிப்புல் சற்றே விவகாரமான விளையாட்டு. சற்றே ஏமாந்தாலும், உடம்பில் ஏதாவது காயம் ஏற்படுத்தி விடும். வீட்டில் நான் கிட்டிப்புல் விளையாடப் போனால் திட்டுவார்கள். இருந்தாலும், எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டு விளையாட ஓடிடுவேன். என் மகனுக்கெல்லாம், இந்த விளையாட்டுக்களை காட்ட வேண்டுமென்றால், ஒரு Documentary படம் எடுத்து வைத்துதான் காட்ட வேண்டும். என் மகன் பம்பரத்தைப் பார்த்தால் ஏதோ antique பொருள் என்று நினைக்கக்கூடும்.

நகர வாழ்க்கையில் தொலைத்தவை அடுத்த பதிப்பில் தொடரும்