Pages

July 05, 2010

இவங்களுக்கெல்லாம் ராவணன் பிடிக்காது

இரண்டு மெகா ஹிட் படங்கள் கொடுத்தால் ஒரு சொதப்பல் படம் கொடுப்பது மணிரத்னத்தின் குணம். டிரய்லரைப் பார்த்ததிலிருந்து ராவணன் ஒரு சொதப்பலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதுவும் பாட்டு ஒன்றும் மனதில் ஒட்டவே இல்லை. படத்தின் விஷுவல்ஸைப் பார்த்தபோதே இது ஊத்திக்கும் என்று தான் நினைத்தேன். இணையத்திலும் பத்திரிகைகளிலும் வந்த விமர்சனங்களும் அப்படியே இருந்ததா, "பார்த்தியா நான் சொன்னது சரியாப் போய்விட்டது பார்" என்று காயத்ரியிடம் சொன்னதை அவள் ஏற்க மறுத்துவிட்டாள். புருஷன் சொல்வதை மனைவி கேட்டுட்டாத்தான் நாடு உருப்புட்டுருமே.

படத்தைப் பார்த்தே ஆகணும் என்று ஒற்றைக்காலில் நின்று, சனிக்கிழமை மத்தியான காட்சிக்குப் போனோம். அடுத்த இரண்டே கால் மணி நேரம் என்னை மணிரத்னம் இருக்கையிலேயே கட்டிப் போட்டுவிட்டார் என்று தான் சொல்லணும். இப்படியொரு அருமையான படத்தையா, ஊடகங்களில் கிழி கிழியென்று கிழிக்கிறார்கள் என்று நொந்து கொண்டேன். உண்மை தான் ராவாணன் எல்லா தரப்பு மக்களையும் திருப்தி படுத்தும் என்று எண்ண முடியாது.

கதாநாயகனை அறிமுகப்படுத்தும் போது அவன் கை கால்கள் கண்கள் மூக்கு நாக்கு என்று பிட் பிட்டாகக் காட்டாமல், ஒரு பில்ட்-அப்பும் கொடுக்காமல் படம் எடுத்தால் சில பேருக்குப் பிடிக்காது.

கதா நாயகன் தோன்றி அடுத்த காட்சியிலேயே 100 பேரோடு ஆடிப் பாடாமல் படம் நகர்ந்தால், பல பேருக்கு இது தமிழ்ப் படம் என்றே ஒத்துக் கொள்ள முடியாது.

கதாநாயகன் எதிராளியைப் பார்த்து பன்ச் டயலக் என்ற பெயரில் காதைப் பஞ்சராக்கும் வசனங்கள் இல்லாமல் இருந்தால், பல பேருக்குப் படம் புரியாது.

இவ்வளவு மழை பெய்தும் அதிலே ஐஷ்வர்யா ராயை நனைய விடாமல், கதாநாயகியின் சதைகளைக் காட்டாமல் படம் எடுத்தல் பல பேருக்கு எரிச்சல் வரும்

கதையோடு ஒட்டாமல் தனியே ஒரு காமெடி கோஷ்டி, காமெடி என்ற பெயரில் காமநெடி வீசும் வசனங்கள் இல்லாமல் கதையமைத்தால் அந்தப் படம் காலணாவுக்கு பெறாது என்பது எழுதப்படாத விதி

ஒப்பனை என்ற பெயரில் முகத்தில் மாவு ஏதும் அப்பிக் கொள்ளாமல் இருக்கும் முகத்தைக் காட்டியே நடிகர்களைக் காட்டினால் யார் தான் பார்ப்பார்கள்?

இதோ பாட்டு வருகிறது பார் என்று ஒவ்வொரு பாட்டுக்கும் ஐரோபா அமெரிக்கா என்று சுற்றாமல், படத்தோடே பயணிக்கும் படி பாட்டுக்களை வைத்தால், கிழித்து குதறாமல் படம் எடுத்தால் யாருக்குப் பிடிக்கும்?

ஃப்ளாஷ் பேக் என்ற பெயரில் இரண்டு ரீல்களுக்கு அழுகுனி காட்சிகள் வைக்கவில்லையென்றால், அது ஃப்ளேஷ் பேக் இலக்கணத்தை மீறுவதாகாதா? ப்ரியாமணியை கற்பழித்து அவர் கதறும் காட்சியைக் காட்டினால் தானே தமிழ் ரசிகர்களுக்கு, வீராவின் கோபம் புரியும். ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டால் போதுமா?

ராவணன் என்று பெயர் வைத்து விட்டு, ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் ராமாயணத்தை நினைத்துப் பார்க்காமல் எப்படிப் படம் பார்ப்பது? அப்படிப் பார்க்கும் போது இது ராமாயணத்தை இழிவு படுத்தும் கதை என்று தான் தோன்றுகிறது.

ராவணனைப் பிடிக்காது என்று சொல்லும் மக்கள் எடுத்து வைக்கும் வாதம் இவை தான். இதெல்லாம் எதிர்பர்த்துப் போகும் மக்களுக்கு ராவணன் பிடிக்காது தான். எப்போதுமே அதி அற்புதமான படைப்புகள் மக்களை மகிழ்விக்க மறுக்கின்றன. ஹே ராம், ராவணன் எல்லாம் அந்த ரகம் தான்.

16 comments:

Vidhya Chandrasekaran said...

ரகு ஆபிசில் படம் நன்றாக இல்லையென்று சொல்லிவிட்டார்களாம். வர தயங்குகிறார். கிழிக்கிற அளவுக்கு என்னதான் இருக்குன்னு இந்த வீக்கெண்ட் பார்த்துடறேன்:)

goma said...

கிழிக்கிற அளவுக்கு என்னதான் இருக்குன்னு இந்த வீக்கெண்ட் பார்த்துடறேன்:)

இதுதான் மணிரத்தினத்தின் ஸ்டைல்,இந்த மாதிரு யோசிக்க வைத்தே எல்லோரையும் பர்ர்க்க்க வைத்துவிடுவது....

goma said...

கற்காலம் உலோக காலம் போல் இந்த காலம், அவசர[துரித காலம்]எல்லாமே சட்டு புட்டுன்னு [ஃபாஸ்ட் ஃபுட்]ரகமாக இருக்கும் காலம்.எதிரே அம்மா நின்னா கூட, வழி மறைக்காதேன்னு சொல்லிட்டே ஓடும் காலம்...வந்தமா உக்காந்தமா சிரிச்சோமான்னு நேரத்தக் கழிப்பதில்தான் நிறைய பேர் தங்கள் டென்ஷனைக் குறைத்து வருகிறார்கள்

Subbu said...

######
"ஒப்பனை என்ற பெயரில் முகத்தில் மாவு ஏதும் அப்பிக் கொள்ளாமல் இருக்கும் முகத்தைக் காட்டியே நடிகர்களைக் காட்டினால் யார் தான் பார்ப்பார்கள்?"
#######
ஏன் கமலை இப்படி வாரி விடறீங்க உங்க ஆஸ்தான நடிகரை இப்படி கமெண்ட் செய்ய கூடாது

Ramachandranwrites said...

"புருஷன் சொல்வதை மனைவி கேட்டுட்டாத்தான் நாடு உருப்புட்டுருமே.
படத்தைப் பார்த்தே ஆகணும் என்று ஒற்றைக்காலில் நின்று, சனிக்கிழமை மத்தியான காட்சிக்குப் போனோம். அடுத்த இரண்டே கால் மணி நேரம் என்னை மணிரத்னம் இருக்கையிலேயே கட்டிப் போட்டுவிட்டார் என்று தான் சொல்லணும்"

பொண்டாட்டி சொன்னா கேக்கணும் கண்ணா. பெரியவங்களை எல்லாம் பாரு.

Ramachandranwrites said...

என்னதான் சொன்னாலும் உலக அழகியை இப்படி காட்டிலும் மேட்டிலும் ஓட விட்டு படுத்தி இருக்க வேண்டாம். எனக்கு கண்ணில் ரத்தமே வந்து விட்டது. மத்தபடி எங்களுக்கு இங்கே அமீரகத்தில் பொழுது நல்லா போச்சு.

நாங்கள் சுராவையே பாத்து பொழைச்சவங்க

M Arunachalam said...

//இவ்வளவு மழை பெய்தும் அதிலே ஐஷ்வர்யா ராயை நனைய விடாமல், கதாநாயகியின் சதைகளைக் காட்டாமல் படம் எடுத்தல் பல பேருக்கு எரிச்சல் வரும்//

நீங்க கண்ணை மூடிகிட்டே படம் பாத்தீங்க போல இருக்கு.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்துக்கு அப்புறம் மணிரத்னம் படத்தை பார்ப்பதை நிறுத்தி விட்டாலும்கூட, விக்ரம் க்காக 'ராவணன்' தமிழ், ஹிந்தி இரண்டு பதிப்பையும் பார்ப்பதாக இருந்தேன். ஆனால், தமிழ் பதிப்பை பார்த்துவிட்டு 'துண்ட காணோம், துணிய காணோம்னு' ஓடி வந்தவன், ஹிந்தி பதிப்பு ஓடும் தியேட்டர் பக்கம்கூட தலை வைத்து படுக்கவில்லை.

எனக்கு வேணும், நல்லா வேணும். விக்ரம் படமாசேன்னு, மணிரத்னம் படத்தை பாத்து தொலைச்ச எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். மணிரத்னம், என்ன தருமிய போல பொரும விட்டுட்டாரே. இனிமே அந்த ஆளு படம் வந்தா, அந்த பக்கமே போகமாட்டேன்.

உசுரே போகுதே, உசுரே போகுதே, "ராவணன்" படத்த பாக்கயிலே.....
காசகுடுத்து இந்த படத்த பாத்தேனே....
என்னபோல மடையன் யாருமில்லே!

Karthik said...

ஸாரி விஜய். என்னால ஏத்துக்க முடியல. எனக்கு ராவணன் பிடிக்கல. ஆனா நீங்க சொன்ன விஷயங்கள எதிர்பார்த்து நான் போகல. :)

vs.siva said...

padam unmayilaye super sir... silarucku mattum than kavithaiyai rasicka theriyum athuckaha mathavangala thappu sollakootathu...

M Arunachalam said...

"இவங்களுக்கெல்லாம் ராவணன் பிடிக்கும்" அப்படீன்னு நான் சொல்லலாமா சார்?

1. மணிரத்னத்தை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள்
2 . ஏ.ஆர்.ரஹ்மானை காதுமூடி (?) தனமாக ஆதரிப்பவர்கள்
3. ஓவர் ஆக்டிங் நடிப்பு பார்க்க பிடித்தவர்கள்
4 . கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் (கடன்காரன் கண்ணில் படாமல் இரண்டு மணி நேரம் இருப்பதற்கு ஏதோ ஒரு படம் ஓடும் தியேட்டருக்குள் ஒளிந்து கொள்பவர்கள்)
5. கால் மூட்டு வலி (Arthiritis) வியாதியால் அவதிப்படுபவர்கள் (கஷ்டப்பட்டு நடந்து, படிகள் ஏறி வந்து 'அப்பாடா' என்று உட்கார்ந்து விட்டு, ஒரு திராபை படத்தை பார்க்க வேண்டி இருந்தாலும், மூட்டு வலியை எண்ணி, இரண்டு மணி நேரம் 'சிவனே' என்று உட்கார்ந்துகொண்டு இருப்பவர்கள்)
6. காது கேளாதோர் (அவர்களுக்குத்தான் எந்த சத்தமோ, இரைச்சலோ, வசனமோ, பாடலோ, கேட்கவே கேட்காதே)

மேவி... said...

raittu

Thenral said...

Ya!Movie was wonderful!Me too saw in theatre!I liked the film especially climax song very much.

Vijay said...

வித்யா,படம் பார்த்தாச்சா ?

\\Blogger goma said...

கிழிக்கிற அளவுக்கு என்னதான் இருக்குன்னு இந்த வீக்கெண்ட் பார்த்துடறேன்:)\\
மற்ற இயக்குனர்கள் வேணா இப்படி பரபரப்பை உண்டு பண்ணி படத்தை ஓட்டுவார்கள். ஆனால் மணிரத்னம் அப்படியல்ல என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி

\\Subbu said...
உங்க ஆஸ்தான நடிகரை இப்படி கமெண்ட் செய்ய கூடாது\\
ஓரிரண்டு படங்களில் செய்தால் ஓகே. எல்லாப் படங்களிலும் மேக்கப்புக்கே இவ்வளவு மெனக்கெடுவதில் எனக்கு அவ்வளவு உடன் பாடில்லை. ஆஸ்தான நடிகர் என்பதற்காக அவர் செய்வதெல்லாத்தியும் புகழ முடியாது.

\\Blogger Ramachandranwrites said...

என்னதான் சொன்னாலும் உலக அழகியை இப்படி காட்டிலும் மேட்டிலும் ஓட விட்டு படுத்தி இருக்க வேண்டாம். எனக்கு கண்ணில் ரத்தமே வந்து விட்டது. மத்தபடி எங்களுக்கு இங்கே அமீரகத்தில் பொழுது நல்லா போச்சு. \\
உலக அழகி இனி அக்கா வேடங்களில் நடிப்பது நல்லது. இல்லை வெகுஜனப் படங்களில் நடிக்கலாம். இந்தப் படத்தில் ஐஷ்வர்ய கொஞ்சம் மிஸ்ஃபிட்.

\\Blogger M Arunachalam said...
உசுரே போகுதே, உசுரே போகுதே, "ராவணன்" படத்த பாக்கயிலே.....\\
எல்லாருக்கும் இந்தப் படம் பிடிக்கும்’னு நான் சொல்லவே இல்லையே சார்.

\\Karthik said...

ஸாரி விஜய். என்னால ஏத்துக்க முடியல. எனக்கு ராவணன் பிடிக்கல. ஆனா நீங்க சொன்ன விஷயங்கள எதிர்பார்த்து நான் போகல. :)\\

அதான் சிலபேருக்கு ராவணன் பிடிக்காதுன்னு தானே எழுதியிருக்கேன். எல்லாருக்கும் பிடிக்கும்’னா சொல்லறேன்.

\\Blogger vssiva said...

padam unmayilaye super sir... silarucku mattum than kavithaiyai rasicka theriyum athuckaha mathavangala thappu sollakootathu...\\
மனித இனத்தின் மகத்தான விஷயமே ஒருவருக்குப் பிடிப்பது இன்னொருவருக்குப் பிடிக்கவில்லை. படம் நன்றாக இல்லை என்று சொல்பவர்களை நான் சாடவில்லை. வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

\\மேவீ\\ நன்றி

\\Thenral said...

Ya!Movie was wonderful!Me too saw in theatre!I liked the film especially climax song very much.\\
கருத்துக்கு நன்றி. ஆனால் என்னவோ இந்தப் படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டிய ஆவல் இது வரை எழவில்லை.

Ravi said...

Dude cast of this movie is pathetic.Also Screenplay for this movie is horrible compared to all other Maniratnam Movies.
In total more hype results zero.

If possible try to watch the Movie Madarasa Pattinam comparatively better than all movies these days :)

Jegan said...
This comment has been removed by the author.
Jegan said...

சிலர் தன்னுடைய மேதாவிதனத்தை காட்டுவதற்கு கமலையும், மணிரத்னம் படத்தையும் எடுத்துகொள்கிறார்கள். இவர்கள் படத்தை மொக்கை என்று விமர்சிப்பதன் மூலம் தாங்கள் ஏதோ உலக படங்களின் ரசிகர்கள் என்று ஜல்லியடிக்கும் கும்பல் நிறையவே உள்ளது. நீங்கள் ஒருவர்தான் முதன்முதலில் ராவணன் படத்தை பற்றி நல்ல விதமாக சொல்லியிருந்தீர்கள். நன்றி. உண்மையில் அற்ப்புதமான படைப்பு. சிங்கம் போன்ற நாலாம் தர படத்தைகூட ஒருமுறை பார்க்கலாம் என்று எழுதுபவர்கள் கமலின் , மணிரத்னத்தின் பெரிய முயற்சிகளுக்கு கேவலமாக விமர்சனம் எழுதுவார்கள்.
( கமலின் சிறந்த படைப்பு " அன்பே சிவம்" என்பது என் கருத்து)
சமீபத்தில் களவாணி படம் பார்த்தேன். வித்தியாசமான முயற்சி. நானும் தஞ்சாவூர்காரன் என்பதால் அதை நுணுக்கமாக ரசிக்க முடிந்தது. முடிந்தால் பாருங்கள். எழுதுங்கள். நன்றி.