Pages

July 25, 2010

பாத்திரங்களுக்காக ஒரு கதை

கதையை விட சில கதாபாத்திரங்கள் நம் மனதில் வேறூன்றி நிற்பார்கள். வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன், குந்தவை போன்ற பாத்திரங்கள் அப்படிப்பட்டவை தான். அந்தப் பாத்திரங்களே கதையை நடத்திச் செல்வார்கள். கதையைவிட அந்தப் பாத்திரங்களுக்காகவே கதையைப் படிப்போம். அப்படிப்பட்ட பாத்திரம் தான் ஹோவார்ட் ரோர்க் (Howard Roark). அய்ன் ராண்ட் (Ayn Rand) 1930’களில் எழுதிய ஃபவுன்டெய்ன் ஹெட் (The Fountain Head) கதையின் நாயகன்.

“தான் செய்வது சரிதான்” என்ற எண்ணம் படைத்த மனிதன் ஹோவர்ட். அவன் ஒரு ஆர்கிடெக்ட். ஒவ்வொரு கட்டிடத்துக்கும் ஒரு உபயோகம் (purpose) உண்டு. அந்தக் கட்டிடம் அந்த உபயோகத்துக்காகத்தான் நிர்மாணிக்கப் (designed to achieve a purpose) பட வேண்டுமே தவிர, சும்மா ஒரு நிர்மாணியின் கலைத்திறனைக் காட்டுவதற்காக அல்ல என்று நம்புபவன். இவனது கொள்கையை ஏற்காமல், அவனைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றுகிறார்கள். சிறிதும் கவலைப் படாமல், தன்னைப் போல் எண்ணம் கொண்ட இன்னொரு நிர்மாணியிடம் போய் வேலைக்குச் சேர்கிறான். பெருவாரியான கட்டிட நிர்மாணிகள், இவர்களை வெறுக்கிறார்கள். இவர்களையும் நம்பி சில வாடிக்கையாளர்கள் இவர்களிடம் வருகிறார்கள். சிலருக்குப் பிடிக்கிறது, சில பேருக்குப் பிடிப்பதில்லை.

ஹோவார்டின் கொள்கைகளிலும் கட்டிடங்களையும் அங்கீகரிக்கும் ஒருவர், சாரி! ஒருத்தி இருக்கிறாள். டொமினிக் ஃப்ராங்கன் (Dominique Francon). எங்கே தான் மிகவும் விரும்பும் பொருளுக்கு அடிமையாகிவிடுமோ என்ற எண்ணத்தில், தான் விரும்பும் பொருளிடமிருந்தே தன்னை தூரப்படுத்திக்கொள்ளுபவள். கொஞ்சம் வினோதமான பாத்திரப் படைப்பு தான் ஹோவார்ட் ரோர்கின் கட்டிடங்கள் மீதும், அவன் கொள்கைகள் மீதும் ஈர்பு ஏற்பட்டவளுக்கு, அவன் மீதும் ஈர்ப்பு ஏற்படுகிறது. இருந்தும் தான் விரும்பும் பொருள்களிலிருந்து தன்னை அன்னியப்படுத்திக் கொள்ளும் டொமினிக், ஹோவர்டின் எதிரியையே மணக்கிறாள். கொஞ்சம் வினோதமாக இருந்தாலும், அவள் அப்படிச் செய்வது, ஹோவார்டின் எதிரியை வீழ்த்தத்தான் என்பது பிற்பாடு தெரிகிறது.

பிறரின் தயவிலேயே பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆவலுடன் இன்னொரு பாத்திரம், பீடர் கீடிங். ஹோவர்டின் நண்பனாக இருந்தாலும், அவனை தொழில் ரீதியாக, ஹோவார்டை தோற்கடிக்க வேண்டும் என்று எண்ணுபவன். இவனைத்தான் டொமினிக் மணக்கிறாள்.

தனது கொள்கைகளிலிருந்து இம்மியளவும் நகராமல் ஹோவார்ட் எப்படி வெற்றி காண்கிறான் என்பது தான் மீதிக்கதை.

கீழே போட முடியாமல் ஒரே மூச்சில் பல புத்தகங்கள் படித்திருந்தாலும், அடுத்த புத்தகத்தை எடுத்ததுமே, பழைய புத்தகத்தில் வந்த பாத்திரங்கள் மனதிலிருந்து மறைந்துவிடுகிறார்கள். ஃபவுண்டெய்ன் ஹெட் படித்து பல நாட்களாகியும், ஹோவார்ட் ரோர்க், டொமினிக் ஃப்ராங்கன் மனதில் நிற்பதற்கு, கதையை விட அந்தப் பாத்திரங்களின் படைப்பு தான் காரணம் என்று நம்புகிறேன்.

ஓரிரு முறை சில பக்கங்கள் படித்துவிட்டு, “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று இந்தப் புத்தகத்தைத் தூக்கிப் போட்டுவிட்டேன். அவ்வளவு மெதுவாக நகரும் கதை. கதை என்பதை விட பாத்திரங்களின் கொள்கைப் பிரசாரம் தான் நிறைய இருக்கும். கொஞ்சம் கொட்டாவி விட வைக்கவும் செய்யும். ஆனால் கதையே, 150 பக்கங்களுக்குப் பிறகு தான் சிறிது நகர்வது போல் இருக்கும். “இவன் சொன்னானேன்னு இதைப் போய்ப் படிக்க ஆரம்பித்தேனே, என்னை செருப்பால அடிக்கணும்” என்று மனதிற்குள் நீங்கள் என்னைத் திட்ட நிறைய வாய்ப்புகள் உணடு. புத்தகத்தைப் படிக்க கொஞ்சம் எக்ஸ்ட்ரா பொறுமை தேவை. இது மற்ற நாவல்களைப் போல் இல்லை என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.

ஹோவார்ட் ரோர்க் தனக்காக கோர்டில் வைக்கும் வாதங்களே 30 பக்கங்களுக்கு மேல் இருக்கும். கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். புரியவில்லை என்றால் மீண்டுமொருமுறை படிக்கவேண்டாம். புத்தி பேதலித்து விடும்.

சூப்பர்ஸ்டார் ஆங்கிலப் படம் நடிப்பதாக இருந்தால், இந்தப் புத்தகத்திலிருந்து நிறைய பன்ச் டயலாக்குகள் சுட்டுக் கொள்ளலாம். அவ்வளவு கொட்டிக் கிடக்கின்றன. இவ்வளவு இருந்தாலும் இப்புதகத்தைப் படிக்க வைத்தது ஒவ்வொரு பாத்திரத்தின் படைப்பும், அவர்கள் தனது கொள்கையில் நின்றதுமே தான்.

டிஸ்கி: “ஏண்டா வெண்ணெய், காந்தி செத்துட்டார்’ன்ற மாதிரி, இம்புட்டு பழைய புத்தகத்தைப் பத்தி இப்போ எழுதியிருக்கே? புத்தகம் படிக்கற யாரும் தவறாது படிக்கற புத்தகம் ஃபவுண்டெய்ன் ஹெட். இதப் பத்தி இப்ப சொல்ல வந்துட்டியே” என்று நீங்கள் நினைத்தால், ரொம்ப மன்னிக்கணும்.

4 comments:

Ramachandranwrites said...

“ஏண்டா வெண்ணெய், காந்தி செத்துட்டார்’ன்ற மாதிரி, இம்புட்டு பழைய புத்தகத்தைப் பத்தி இப்போ எழுதியிருக்கே? புத்தகம் படிக்கற யாரும் தவறாது படிக்கற புத்தகம் ஃபவுண்டெய்ன் ஹெட். இதப் பத்தி இப்ப சொல்ல வந்துட்டியே”

அது தான் அதே தான்

அட வடை எனக்கு தானா ?


me the first aa?

மேவி... said...

வாவ் ...கதை நல்ல இருக்கும்ன்னு நினைக்கிறேன்..... நான் இந்த புத்தகத்தை படித்ததில்லை ....ஆனா நீங்க சொல்லிருப்பதை பார்த்தால் கொஞ்சம் பயமாக தானிருக்கு


"சூப்பர்ஸ்டார் ஆங்கிலப் படம் நடிப்பதாக இருந்தால், இந்தப் புத்தகத்திலிருந்து நிறைய பன்ச் டயலாக்குகள் சுட்டுக் கொள்ளலாம்"

அட ...அவரே வசனகர்த்த என்ன எழுதிதரரோ அத தான் நான் பேசுறேன்ன்னு சொல்லிடாரு ...நீங்க வேற (எது எப்படி இருந்தாலும் இயந்திரனில் ஆங்கில நாவல்களின் வாசனை அடிக்க போவது உறுதி)

Vidhya Chandrasekaran said...

ம்ம்ம். அந்த 150 பக்கத்தை தாண்ட பொறுமையில்லாமல் ஷெல்பிலேயே கிடக்கிறது. இதயும் படியேன் என்று ரகு கொடுத்த புத்தகம்:)

Karthik said...

நானெல்லாம் இன்னும் படிக்கல விஜய். கவலைப்படாதீங்க. :)

படிக்க பார்க்கிறேன்.