நான் படித்தது கோவில்பட்டி அருகிலுள்ள நேஷனல் பொறியியல் கல்லூரி. வீட்டிலிருந்து 60 கிலோமீட்டர் தூரம் இருந்தாலும், ஒரு மணி நேரத்தில் போய் விடலாம். மதுரை செல்லும் பேரூந்துக்களில் செல்லலாம். காலேஜுக்கென்று தனியாக நிறுத்தமெல்லாம் கிடையாது. ஓட்டுனரை நிற்கச் சொன்னால் நம்மைத் திட்டிக் கொண்டே பிரேக் பிடிப்பது போல் பிடிப்பார். தனியாளாக மாட்டிக்கொண்டால், ஓடும் பொதே அவர் பிரேக் போடும் சமயத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். நிமிஷத்திற்கு ஒரு பேரூந்து இருப்பதால் அவ்வளவாகக் காத்திருக்கத் தேவயில்லை.
நான் கல்லுரியில் படித்தது (இன்றைக்கு அவ்வளவாக நலிந்து போய் விட்ட) ராகிங்க் நிறைந்த காலம். இன்றைய கல்லூரி மாணவர்களிடம் ராகிங்க் என்றாலே பயங்கரமான கொடூரமானதொன்று என்று நினைக்கிறார்கள். ஆனால், நான் ராகிங்கை ரொம்பவே ரசித்தேன்.
எங்கள் கல்லூரியில் அதிகார பூர்வமாக ராகிங்க் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் காலேஜ் ஹாஸ்டலில் அவ்வளவாக ராகிங்க் கிடையாது. அப்படியே இருந்தாலும் பாட்டுப் பாடு, டான்ஸ் ஆடு ரகம் தான். சில மாணவர்கள் கோவில்பட்டியில் வாடகை அறைகளில் தங்கியிருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் காலேஜ் பஸ்சிலேயே வந்து போவார்கள். காலேஜ் லெக்சரர்களும் அந்த பஸ்சிலேயே போவதால் அவர்களும் ராகிங்கில் அகப்பட மாட்டார்கள். ஒரு மணி நேரம் எந்த எஸ்கார்டும் இல்லாமல் திருநெல்வேலியிலிருந்து வந்து போகும் என் போன்ற டே ஸ்காலர்கள் தான் சீனியர்களுக்குக் கிடைக்கும் பலியாடுகள்.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயைப் போல் இருக்குமாம். அந்த மாதிரி பஸ் நிறுத்தத்தில் எந்த கல்லூரி மாணவனாக இருந்தாலும், இவன் சீனியரோ என்று தோன்றும். அதில் முதலாமாண்டு பசங்க தான்னு தெரியாம நிறைய பேருக்கு Good Morning wish சொல்லியிருக்கேன். Wish அடிப்பதிலும் ஒரு procedure உண்டும். மகளிர் மன்னிக்கவும். எல்லாவற்றையும் மூடிக்கொண்டு எம்பிக் குதித்து விஷ் அடிக்கணும். அப்படி சீனியரைக் கண்டு விஷ் அடிக்க வில்லையென்றால், தொலைந்தோம். அதனால் தான் எதற்கு வம்பு என்று யாரைப் பார்த்தாலும் விஷ் அடித்துவிடுவது better.
இன்னும் ராகிங்க் வகைகள் பற்றி சொல்லவே இல்லையே. முதலாமாண்டு மாணவன் யாராவது மினி-டிராஃப்டர் வைத்திருப்பார்கள். அதை மஷின் கன் மாதிரி வைத்துக்கொண்டு சத்தம் போட்டுக் கொண்டே சுட வேண்டும். மக்களும் நாங்க செய்யற சேட்டைகளைப் பார்த்து ரசிப்பார்கள். சீனியர்களுக்குப் பயந்து எல்லோரும் காலை ஏழு மணிக்கு முன்னரே பஸ் பிடித்து காலேஜ் போய் விடுவோம்.
ஒரு முறை நான் ராகிங்கில் அகப்பட்ட போது, என்னை சீனியர் பெண்ணிடம் "நீ ஜெயலலிதா மாதிரி இருக்கேன்னு சொல்லு" என்றார்கள். நானும் பயந்து கொண்டே அந்தப் பெண்ணிடம் போய், "மேடம், நீங்க சி.எம் மாதிரி இருக்கீங்களாம்"னு சொன்னதற்கு, அந்தப் பெண் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே இல்லை.
இன்னொரு முறை பஸ் நடத்துனரிடம் போய், "கொஞ்ச நேரம் நான் உங்க வேலையைப்பாக்கறேன்னு சொல்லி அவர் பையை வாங்கிக்கோ "என்பார்கள். இன்னொரு முறை, டிரைவர் ரொம்ப மெதுவாக பஸ் ஓட்டுறார். அவரைப் போய் இந்த மினி டிராஃப்டர் வைத்து சுட்டு விட்டு வா என்று உத்தரவு. இந்த மாதிரியெல்லாம் என்ன கோமாளித்தனம் செய்தாலும் பஸ்ஸில் பயணிக்கும் சக பயணிகளும் ரொம்பவே ரசிப்பார்கள்.
கோவில்பட்டிக்கும் திருநெல்வேலிக்கும் நடுவில் கயத்தாறில் தான் பஸ் நிற்கும். "சிங்கப்பூர் வந்துடுச்சு இறங்கறவங்கள்லாம் இறங்குங்க. லண்டன் போறவங்கள்லாம் ஏறுங்கன்னு பஸ்ஸ சுற்றி இரண்டு பிரதட்சிணம் வைக்கச் சொல்லி உத்தரவு வரும். வேறு வழி, உத்தரவைக் கேட்டுத் தான் ஆகணும்.
என்ன தான் இருந்தாலும் எஞ்சினியரிங்க் படிக்கற பசங்க இல்லையா? அதனால அப்பப்போ கொஞ்சம் அறிவு பூர்வமான கேள்வியெல்லாம் கேட்டு கொடைவானுங்க. ஒரு 50 பைசாவைக் கொடுத்து, அதை integrate பண்ணுன்னு சொல்லுவாங்க. என்னடா இது, 50 பைசாவை எப்படி integrate பண்ண்றதுன்னு பேந்தப் பேந்த முழிப்போம். புடனியில் ஒரு போடு போட்டு, இது 50 காசு இப்போ integrate பண்ணு என்பார்கள். அதாவது 50 cos. cos 50. அதை integrate செய்தால் sin 50. இது தான் பதில். இதைச் சொன்னாலும் இது சரியான பதில் இல்லை என்பார்கள். -sin 50 என்றால், கன்னத்தில் ஒன்று விழும். Cos differentiate செய்தால் தான் -Sin. Integrate செய்தால் -Sin வருமா என்று நம்மையே குழப்புவார்கள். என்னடா இது, இப்படி குடையறானே என்று மனதில் எண்ணிக்கொண்டிருக்கையில், "Integrate செய்தால் +C சேர்த்துக்கணும்'னு தெரியாது என்று கேட்டு புடனியில் இன்னொன்று விழும்.
ஐயோ தாங்கலியேன்னு கத்தறீங்களா? உங்களுக்கே இப்படி இருக்குதுன்னா, பூனை கிட்ட அகப்ப ட்ட எலியாட்டம் இருக்கற எங்களுக்கு எப்படி இருக்கும்? சிரிக்கவும் முடியாது, அழவும் முடியாது. சிரிச்சா, "ஏம்ல, ஒரு integration ஒழுங்கா பண்ணத்தெரியலை. இதுல இளிப்பு வேறயோல" என்று இன்னொன்று புடனியில் விழும்.
ஆனால் ஒரு முறை கூட சிகரெட் பிடிக்கச் சொல்லியோ, பெண்களிடம் அநாகரீகமாக நடக்கச் சொல்லியோ சொன்னதில்லை. அந்த மட்டுக்கு பிழைத்தோமடா சாமி. ஒரு மாதம் இப்படி எங்களையெல்லாம் வதைத்து விட்டு ஒரு welcome party வைத்து எங்களுக்கு நடத்திய ராகிங்கை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். பெரும்பாலும், இரண்டாம் ஆண்டு சீனியர்கள் ரொம்பவே வதைப்பார்கள்.
எப்போடா, நாமும் செகண்ட் இயர் போவோம், நாலு பசங்களை ராக் பண்ணுவோம் காத்திருந்து காத்திருந்து, ஒரு வழியாக நாங்களும் ஒரு நாள் சீனியர் ஆனோம். ஆனால், அந்த வருடம் தான், அண்ணாமலை பல்கலைகழகத்தில் நாவரசு என்ற பையனை ராகிங்க் செய்து, அந்தப் பையன் இறக்க, ராகிங்கையே மக்கள் ஏதோ பாவச் செயல் போல் பார்க்கலானார்கள். நாங்க ஏதாவது பையனை புடிச்சு விசாரித்தாலே, ராகிங்க் செய்கிறோம் என்று பஸ் பயணிகளை எங்களுக்கெதிராக திரள ஆரம்பித்து விட்டார்கள். கடைசி வரை ஒரு பையனை கூட ராகிங்க் செய்யாமலேயே கல்லூரிப் படிப்பு முடித்தாயிற்று.
பி.கு: ஒரு சீனியர் என்னிடம் ராகிங்க் செய்யும் போது, அடுத்த வருடம், என்ன சப்ஜெக்ட் எடுக்கப்போகிறாய் என்றான். நான் Electrical & Electronics என்று பதிலளித்தேன். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டான். ஒரு கண்ம் யோசித்து விட்டுச் சொன்னேன், "Electrical என்றால் conductor, Electronics என்றால் Semi-conductor என்றேன். ரொம்பவே புல்லரித்துப் போய் விட்டான்.