மு.கு: சென்ற பதிவில் கொல்கத்தாவில் அடித்த லூட்டி பற்றி எழுதுகிறேன், என்று சொல்லிவிட்டேன். படித்து விட்டு இதெல்லாம் ஒரு லூட்டின்னு எழுத வந்துட்டானுங்கன்னு கோபித்துக் கொள்ளக் கூடாது.
வீட்டிற்குப் பின்னாலேயே ஒரு லேடீஸ் காலேஜ். 8 மணியளவில் பால்கனிக்கு வந்து நின்றால் ஒரு ஃபேஷன் பரேடே பார்க்கலாம். ஒவ்வொருத்தருக்காய் மார்க் போடுவோம். சத்தம் போட்டு கூப்பிடுவோம். புரியவா போகிறது. சில நாட்கள் பால்கனியில் நின்று கொண்டு டம்பெல்ஸ் எல்லாம் எடுத்து வந்து ஆர்ம்ஸ் காட்டுவோம். பெங்காலி பெண்களை என்ன போட்டு வளற்கிறார்கள் என்று தெரியவில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கூட சீறுடையில் இல்லாமலிருந்தால், இருபது வயது மதிக்கலாம். இவர்களுக்கெல்லாம் ஒரு சூப்பர் ஹிந்தி கோட் வார்த்தை கண்டு பிடித்தோம். BHMB!! எல்லாம் ரசகுல்லா மஹிமை. ரசகுல்லா ரசகுல்லா தான்!!!
நம்மூர் மாதிரி பெண்களுக்கென பஸ்ஸில் இட ஒதுக்கீடெல்லாம் கிடையாது. யாரும் எங்கும் உட்காரலாம். இப்படியொரு விதியிருப்பது 2 மாதங்கள் கழித்துத் தான் தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்ட பிறகு சும்மா இருப்போமா?? ஃபிகர் இல்லாத பஸ்ஸில் ஏறுவதே கிடையாது.
கொல்கத்தாவில் மட்டுமே இன்றளவு இந்தியாவில் இயங்கி வரும் போக்குவரத்து சாதனம், டிராம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேய அரசால் கொண்டு வரப்பட்டது. அன்று இயங்கிய டிராம் வண்டிகளின் பெட்டிகளுக்கும், இன்றைய டிராம் பெட்டிகளுக்கும் ஒரு வித்தியாசம் கூட இல்லை. அன்று குதிரைகள் இழுத்தன. இன்று, மோட்டார் பொறுத்தப் பட்டு ஓடுகின்றன. இரண்டு பெட்டிகள் பொறுத்தப்பட்டிருக்கும். ஒன்றில் கூட்டம் நிரம்பி வழியும். இன்னொன்றில் அவ்வளவாக கூட்டம் இருக்காது. விசாரித்ததில் ஒன்று ஃபர்ஸ்ட் கிளாஸ். வித்தியாசம் என்னவென்றால் ஃபர்ஸ்ட் கிளாசில் காற்றே வராத சத்தம் மட்டுமே வரும் மின் விசிறி இருக்கும். கட்டணத்தில் 50 பைசா வித்தியாசம். மக்கள் அவ்வளவு சிக்கனம்.
நம்மூர் சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால், லேக் ரோட் என்னும் இடத்திலுள்ள ராமகிருஷ்ணா மெஸ் போகணும். பாதாள மார்க்கமாகப் பாயும் மெட்ரோ பிடித்து காளிகாட்டில் இறங்கி 15 நிமிடம் நடக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் தான் இவ்வளவு தூரம் வந்து சாப்பிட முடியும். அதனால், எப்போதுமே nose dashing eating தான்.
திரும்பி காளிகாட் வரை நடப்பதற்கு சக்தியிருக்காது. உண்ட மயக்கம் தொண்டருக்கே உண்டெனில், எங்களுக்கெஞ்ஞனம்? ஓடும் டிராமிலேயே ஏறிக்கொள்வோம். காளிகாட் ஸ்டேஷன் வந்ததும் டிக்கட்டே எடுக்காமல் குதித்து ஓடிவிடுவோம். ஒடும் டிராமிலிருந்து எளிதாக இறங்கி விடலாம், ஏறவும் செய்யலாம். என்ன நடத்துனர் ஏதோ புலம்புவார். நம் பரம்பரையையே வைவார். புரியவா போகிறது. பதிலுக்கு நாங்களும் போடா வெண்ணை என்று சொல்லிவிட்டு, "மாஃப் கீஜியே" என்று சொல்லி விடலாம்.
நம்மூர் சாப்பாடு கிடைக்கும் இன்னொரு இடம், மனோஹர்புக்கூர் ரோட்டிலுள்ள ஹோம்லி ராஜ் என்ற ஹோட்டல். ஆனால் இது கொஞ்சம் காஸ்ட்லி. சாப்பாடு 50 ரூபாய். நன்றாக இருக்கும். செவ்வாய்க் கிழமை தோறும் பொங்கல் போடுவார்கள். காலை 9 மணிக்குள் காலியாகிவிடும். பொங்கல் சாப்பிடுவதற்கென்றே 8 கிலோமீட்டர் தூரம் போயிருக்கிறோம்.
ஊரிலுள்ள நண்பர்களிடம் கொல்கத்தா போறேன் என்று சொன்னதும், "மச்சி, அங்கிட்டு சோனாகஞ்ச்ன்னு இடம் இருக்காம். அங்கிட்டு மட்டும் போயிடதே"ன்னு அறிவுரைத்தார்கள். உபயம் மஹாநதி படம். கொல்கத்தாவில் நான் தங்கியிருந்த இடம் "பெயர் போன" இடம். மனம் சற்றே விசனப்பட்டாலும் வாழ்க்கையில் தவறி விடலாம். வரிசையாக இரண்டு மூன்று நட்சத்திர ஹோட்டல்கள். இரவு 9 மணிக்குமேல் அங்கு தினமும் டிஸ்கோதே. கொல்கத்தாவில் உயர் தட்டு பையன்கள் சில பெண்களை கரெக்ட் செய்து கொண்டு போவார்கள். வெளியே வரும் போது தனது நிலைமையறியாது வருவார்கள். எங்களால் இவர்களை பார்க்க மட்டுமே முடியும்.!!
வாரம் ஒரு படம். டப்பா ஹிந்தி படமானாலும் பார்த்துவிடுவது. அப்படியே புதிதாக படமேதும் இல்லையென்றாலும், இருப்பதில் எது நல்லதாக இருக்கிறதோ, அதை இன்னொரு முறை பார்த்து விடுவது. 30 ரூப்பாய்க்கு மேல் பால்கனி டிக்கட் இருக்காது. அப்படியிருந்தால், தியேட்டரைக் கொளுத்திவிடுவார்கள். மிதுன் சக்கரபொர்த்தி நடித்த ஏராளமான மசாலா பெங்காலிப் படங்களும் நிறைய ஓடும். ஒரு பெங்காலிப் படம் கூடப் பார்த்ததில்லை.
துர்கா பூஜா படு விமரிசையாக இருக்கும். பலவந்தமாக வீடு தோறும் 500 ரூபாய் வசூல் செய்து விடுவார்கள். ஊரே அல்லோல கல்லோலப் படும். ஊரிலுள்ள அனைத்து பெண்களும் துர்கா பூஜா நடக்கும் பந்தலுக்கு வந்து ஆடிப்பாடிக்கொண்டிருப்பார்கள். அட்டு ஃபிகர் கூட ஐஷ்வர்யா ராய் போல் இருக்கும்.
புதிதாய் போர்டபிள் டி.வி வாங்கினோம். எங்கோ தொங்கிக் கொண்டிருந்த கேபிளை இழுத்து டி.வி.யில் சொருகினால், ஆஹா படம் தெரிகிறது. சன். டி.வி மட்டும் தமிழ் சானல்; போதுமே. துட்டே கொடுக்காமல் 10 மாதங்கள் கேபிள் டி.வி. பார்த்தோம்.
ஆஃபீஸில் இலவச இன்டர்நெட். மணிக்கு 60 ரூபாய் என்றிருந்த கால கட்டத்தில் இலவச இன்டர்நெட் ஒரு வரப்பிரசாதம். அதுவும் என்னுடைய டிபார்ட்மன்டில் மட்டும் தான் இந்த வசதி. அங்கு வேலை பார்த்தவர்களுக்கு இது இன்டர்நெட் என்று கூடத் தெரியவில்லை. நான் கேட்டதற்கு, இது ஈ-மெயில் செய்வதற்காக இப்படி மோடமெல்லாம் இருக்கு என்றார்கள். ஈ-மெயில் செய்வதற்கு மட்டும் மோடமா? எங்கே நான் கொஞ்சம் பார்க்கட்டும் என்று சொல்லி, www.hotmail.com திறந்திடு சீசே என்று சொல்லவும், என்ன அற்புதம், hotmail வலைத்தளம் திறக்கலானது.
ஆறு மணிக்கெல்லாம் எல்லாரும் மூட்டையைக் கட்டிக் கொண்டு போய் விட்டபிறகு, இன்டர்நெட்டில் ஏதாவதொரு சாட் ரூமில் ஏதாவது ஃபிகருடன் கடலை போடுவது வாடிக்கையாகிவிட்டது. ஃபிகர் தானா அல்லது, காதல் தேசம் கௌண்ட மணி மாதிரி பர்தா போர்த்தின புலியா தெரியவில்லை. பிளாக்ஸ்பாட் எல்லாம் வந்திருந்தால், எனது இலக்கிய பணி அப்போதே ஆரம்பமாகியிருக்கும்.
சரி இம்புட்டு சொல்லுதியே, என்ன வேலை பண்ணிக் கிழிச்சன்னு கேக்குதீயேளா?? ஒரு வருஷம் முழுக்க, இங்கிட்டு எந்த ஆணியப்புடுங்கலாம்னு யோசிச்சு யோசிச்சே ஒரு வருஷம் ஓடிப் போயிடுச்சி.
டிஸ்கி: சார் நான் வேலையிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராஜினாமா கடிதத்தை என் மானேஜரிடம் கொடுக்கும் போது, "சபாஷ் வெரி குட் டெசிஷன். ஆல் த பெஸ்ட்" என்று கை குலுக்கினார்.