Pages

March 28, 2005

காதல் கொண்டேன்

ஒரு நாள் என் மனைவியோடு கதைக்கையிலே, திடீரென வினவினாள் "நீங்கள் இதற்குமுன் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா?"
"ஆஹா இப்படி கேட்டுப்புட்டாளே, இதுக்கு நான் என்னத்தைச்சொல்ல" என வடிவேலு ஸ்டைலில் யோசிக்க ஆரம்பித்தேன். நான் என் வாயை திறப்பதற்குள், "என்ன பயங்கர ஆலோசனை?" என்றாள். "ஒன்றும் இல்லை. யாரிடமிருந்து ஆரம்பிக்கலாம் என்று தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன் என்றேன்." அவ்வளவு தான். அவள் முகம் சிவந்து புருவம் உயர்ந்து, எங்கள் ஊரில் கார்த்திகைக்கு கொளுத்தும் சொக்கப்பானை போல் கொழுந்து விட்டு எரியத்தொடங்கி விட்டது. "அடப்பாவி மனுஷா!! எத்தனை பொண்ணுங்க பின்னாடிடா சுத்தி இருக்கே" என்று தொடங்கி விட்டாள். அதற்குப்பின் அவள் சொன்னதெல்லாம் "unparliamentary" சொற்கள். அவள் சற்று நிறுத்தியதும் நான் சொன்னேன், "அடி பைத்தியக்காரி. உன்னிடம் தான் என் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லியிருக்கிறேனே. நான் sight அடித்த, என்னை sight அடித்த எல்லா பெண்கள் பற்றியும் சொல்லி இருக்கிறேனே. நான் உன்னிடம் விளையாடுகிறேன் என்பது கூட உனக்கு புரியவில்லையா?" என்று சமாதானம் கூறினேன். "இந்த மொகரக்கட்டையை sight வேற அடிச்சிருக்காங்களாம். நான் நம்ப மாட்டேன்" என்று முணுமுணுத்த்தாள்.
"சரி, ஒரு பொண்ணு கூட உங்களை disturb பண்ணலியா??ஒருத்தியைப்பார்த்தும் உங்களுக்கு காதல் என்னும் உணர்வே வரவில்லையா?" என்றாள். இவ்வார்த்தைகள் என்னை ஒரு முறை உலுக்கிப்போட்டு விட்டது. சற்று தனிமையிலே அமர்ந்து யோசித்தேன். "எத்தனை பெண்களை கடந்திருப்பேன். இப்படி என் மனம் துடித்ததில்லை" என்ற பாடல் வரிகளை எத்தனை தடவை ஹம் செய்திருப்பேன். இந்த வரிகளுக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில், என்னை யாருமே cross செய்யவில்லையா" என சிந்தித்தேன்.
அப்போது தான் என் சிந்தையிலே சில நாள் குடிகொண்டிருந்து என்னை சில நாள் அவள் நினைவாலேயே என்னை பித்துப்பிடித்தவன் போல் அலையச்செய்தவள் என் நினைவ்வுக்கு வந்தாள். ஆம் அவளிடம் நான் கொண்டிருந்தது காதல் தான்.
சென்றேன் என் மனைவி இருக்கும் இடம் நோக்கி. (ஆமாம் இவுக இருக்கிறது அந்தப்புறம் பாரு!!!)
சொன்னேன் அவளிடம். "கொண்டேன் கொண்டேன். நானும் காதல் கொண்டேன்"."அப்படியா, யாரந்த நாரிமணி. கல்லுக்கு நிகரான நெஞ்சுடைய என் கணவனையும் கரைத்த அந்த மாதரசி யார்" எனக்கேட்பாள் என நினைத்தேன். ஒரே ஒரு பார்வ்வையிலேயே இவையனைத்தையும் கேட்டாள்.

அவளை நான் கண்டதில்லை. ஆனால், அவளைக்கண்டால் மன்மதன் ரதியை விவாகரத்து செய்துவிடுவான்.
அவள் குரல் கேட்டதில்லை. ஆனால், அவள் பாடினால், கலைமகளும் அவளிடம் இசை பயில ஏங்குவாள்.
அவளிடம் நான் பழகியதில்லை. ஆனல், அவள் ஈகையிலே கர்ணனையும், கருணையிலே புத்தரையும் மிஞ்சியவள்.
ஐஷ்வர்யா ராயை எட்டாவது அதியசயம் என வைரமுத்து பாடினார். இவளைக்கண்டிருந்தால், இவள் தான் முதல் அதியசம். மற்றவை, இவ்வளுக்கு பிறகு தான் என்று பாடியிருப்பார்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒன்று மட்டும் அழகு. இவளுக்கு மட்டும் ஒவ்வொன்றுமே அழகு. இப்படி சொல்லிக்கொண்டே போனேன்.

"நான் நினச்சது சரி தான்" என்றாள். "என்ன நினைத்தாய்", என்றேன். "இல்லை கொஞ்ச நாளாவே, உங்க போக்கே சரியில்லை. தனியா பேசிக்கிறீங்க. சிரிச்சுக்கறீங்க. தூக்கத்துல பொலம்புரீங்க. ஏதோ நட்டு கழண்டிருக்குன்னு நான் நினைத்தது சரி தான்" என்றாள். "அடியே என் நட்டு loose'ஆ இருக்கட்டும், இல்லை டைட்டா இருக்கட்டும். நான் காதலித்த பெண் யாரென்று நீ கேட்கமாட்டாயா". "நான் கேக்காட்டாலும் நீங்க சொல்லாம இருக்கப்போரதில்லை. ம்ம் சொல்லுங்க. நீங்கள் காதல் கொண்ட பெண்ணின் பெயரை" என்றாள். "அவள் பெயர் குந்தவை" என்றேன். என் மனைவியின் முகபாவனையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அந்த பாவத்தின் பெயரும் தெரியவில்லை. நவரசங்க்களிலே fit ஆகாத ஒரு ரசம் என்று தான் சொல்ல வேண்டும். "இப்படி ஒரு பெயரை நான் கேள்விப்பட்டதேயில்லை. சரி யாரவள். எங்கே இருக்கிறாள். என்ன செய்கிறாள்" என்று அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுத்தாள். அவள் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவள் என்றும் சோழ பேரரசன் ராஜ ராஜ சோழனின் தமக்கை என்று கூறியது தான் தாமதம், "perfectly confirmed. ரொம்ப முத்தியே போச்சு. ஏதாவது நல்ல psychiatrist'இடம் காட்ட வேண்டிய கேஸ்" என்றாள் என் காதலை புரிந்து கொள்ளாத என் மனைவி.
ஆம் நான் காதல் கொண்டது சுந்தர சோழரின் புதல்வியை. தன் இளவல் அருமொழி வர்மனை ராஜ ராஜனாக மாற்றியவளை. வீரத்திருமகனான வந்தியத்தேவனின் நெஞ்சையும் கரைத்தவளை. ஒரு முறை குடந்தை சென்றிருந்த போது, தஞ்சையைக்கடக்க நேரிட்டது. காவிரிக்கரையிலே உள்ள ஒவ்வொரு மண்டபத்தைப்பார்க்கும் போதும், "என் குந்தவை இந்த இடத்திற்கு வந்து நீராடியிருப்பாளோ என்று எண்ணி அகமகிழ்ந்தேன்.
என் தாய் என்னிடம், "உனக்கு எப்படிப்பட்ட பெண்ணடா மனைவியாக வரவேண்டும்" எனக்கேட்டபோது, சட்டென என் மன வானில் தோன்றிய மின்னலின் பெயர் "குந்தவை". "அம்மா, எனக்கு குந்தவை போல் ஒரு பெண் மனைவியாக வரவேண்டும்" என்றேன். எனக்கு திருமணம் நிச்சயம் ஆன போது, குந்தவையின் எந்தெந்த குணங்கள் என் fiancee'யிடம் இருக்கிறது எண்ணிப்பார்த்தேன்.
என்னுடைய இந்த காதல், ஏனோ ஒரு சாமான்னிய மனித உள்ளம் படைத்த எவருக்கும் புலப்பட மறுக்கிறது.
மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனித காதல் அல்ல.. காதல் அல்ல...
அதையும் தாண்டி புனிதமானது... புனிதமானது...

4 comments:

Anonymous said...

Anda Engineering Entrance Test kadhai Unnmaileye vaitherichal thaan.

VIKNESHWARAN ADAKKALAM said...

:) super...

Anonymous said...

நான் வேலையில் கொஞ்சம் பிஸியாகிவிட்டேன் . அதான் லேட்.

அடுத்த வார இறுதியில் ஊருக்கு வரேங்கோ.
உங்கள் எழுத்துக்கள் நன்றாக இருக்கின்றது. ஊருக்கு போய்விட்டு வந்து பின்னுட்டம் எழுதுகிறேன்.

குந்தவை

ரோகிணிசிவா said...

நான் வந்திய தேவனை காதலிக்கிறேன்!பெரிய கோவில் , தஞ்சாவூர் போகும் போது எல்லாம் தோன்றும் அவர் இங்க இருந்தார் !
நாம என்னவா இருந்து இருப்போம் ? அப்படினு , என்னைக்கு என்னை போல் ஒருவரை பார்த்த பரவசத்தில் நான் !