Pages

June 12, 2010

ஃபுட்பால்

என்னதான் கிரிக்கெட் பிடித்த விளையாட்டாக இருந்தாலும், பள்ளியில் அதிகமாக விளையாடியது கால்பந்தாட்டம் தான். வாரம் இரு முறை பி.டி. வகுப்பு இருக்கும். ஐம்பது நிமிடத்தில் ஒரு அணி கூட பேட்டிங் செய்ய முடியாது. தொடர்ச்சியாக வைட் பாலாகப் போட்டுப் போட்டு 5 ஓவர்கள் போட்டு முடிப்பதற்குள் அந்த வகுப்பு முடிந்து விடும். அதனால் எல்லோரும் ஒரு மனதாக ஃபுட்பால் விளையாடலாம் என்று முடிவெடுத்து விடுவோம்.

ஒரு அணியில் பதினோறு பேர் தான் இருக்க வேண்டியது ஆட்ட விதி. ஆனால் எவனையும் விட்டு விட்டு விளையாட்டை ஆரம்பிக்க முடியாது. பாதி ஆட்டத்தில் சப்ஸ்டிட்யூட்டாகப் போடுகிறேன் என்றாலும் யாரும் கேட்க மாட்டார்கள். சில சமயம் ஒரு அணியில் 20 பேரெல்லாம் வைத்து விளையாடியிருக்கோம்.

என்னதான் வியூகம் வகுத்து விளையாட நினைத்தாலும், எவனும் சொன்ன இடத்தில் நிற்க மாட்டான். அனைவரும் ஒரே பந்தைத் துரத்துவோம். தன் காலில் பந்து மிதிபட வேண்டும். எதிர் அணியின் திசையை நோக்கி எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ, அவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டும். "டேய் பாஸ் பண்ணு" என்று என்ன கூச்சல் போட்டாலும் யாரும் காதில் வாங்கிக் கொள்வது கிடையாது. அடுத்த முறை பந்து என் காலுக்கு வரும் போது, நானும் அதே தான் செய்வேன். எனக்கு யாரும் பாஸ் கொடுக்கலியே நானும் யாருக்கும் பாஸ் கொடுக்க மாட்டேன். இது தான் எல்லோருடைய லாஜிக். அதெல்லாம் ஒரு காலம்.

எனக்கு ஃபுட்பால் விதிகளை முதன் முதலில் அப்பா தான் கற்றுக் கொடுத்தார். 1986'ஆம் ஆண்டு உலகக் கோப்பை, பிரான்ஸும் பிரேஸிலும் மோதிக்கொண்ட போட்டி தான் முதலில் பார்த்த ஆட்டம். பிரான்ஸின் மிஷேல் பிளாடினி தான் நான் தெரிந்து கொண்ட முதல் கால் பந்தாட்ட வீரர். அந்த ஆண்டு மெக்ஸிகோவில் உலகக் கோப்பை நடந்ததால் எல்லா ஆட்டமும் நடு இரவிற்குப் பின் தான் தொடங்கும். அம்மா முணுமுணுத்துக் கொண்டே தூங்கிவிடுவாள். அடுத்த ஆட்டத்தில் மரடோனாவின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து அவரின் பரம விசிறியாகிவிட்டேன். இதற்கும் நான் பார்த்து அவர் அடித்த முதல் கோல் கையால் போட்டது (அதற்கு அவர் ஹேன் ஆஃப் காட் என்று பிற்பாடு விளக்கம் வேறு கொடுத்தார்). அப்பா கூட அவரை தகாத வார்த்தைகள் சொல்லித் திட்டிக்கொண்டிருந்தார். 1994 வரை ஒவ்வொரு உலகக்கோப்பையையும் அப்பாவும் நானும் கண் விழித்துப் பார்ப்போம்.

ஒவ்வொரு உலகக் கோப்பையின் போதும் ஊர் பேர் தெரியாத ஒரு அணி வரும். ஒரு கலக்கு கலக்கி விட்டுப் போகும். 1986'ல் ரோமானியா, 90'ல் கேமரூன். அர்ஜன்டினாவோடு நடந்த முதல் ஆட்டத்தில் எக்கச்செக்க ஃபவுல்கள். 2 ரெட் கார்டும் வாங்கி, அர்ஜன்டினாவைத் தோற்கடித்தது. மரடோனாவின் அணி கொஞ்சம் கிலியடைந்ததென்னவோ உண்மை. 94'ல் பல்கேரியா. உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த ஜெர்மனியையே வீழ்த்தியது. 98'ல் குரொயேஷியா. 2002'ச் செனேகல் மற்றும் தென் கொரியா, 20006'ல் ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலீ. யாருமே எதிர்பார்க்கவில்லை, இத்தாலி கோப்பையை வெல்லும் என்று. இந்த வருடமும் ஒரு கறுப்பு ஆடு அணி இருக்கிறது. அது தான் தென் ஆப்பிரிக்கா. முதல் ஆட்டத்திலேயே வலுவான மெக்ஸிகோவோடு சரிசமமாக மோதி டிரா செய்திருக்கிறார்கள். பார்ப்பொம் இவர்கள் எவ்வளவு தூரம் பயணிக்கிறார்கள் என்று?

ஏனோ மற்ற விளையாட்டுகளைப் போலல்லாமல், நாட்டுக்காக நிறைய விளையாடுவதை விட, கிளப்புக்காகத்தான் நிறைய ஆட்டங்கள் நடைபெறுகிறன. அதனாலேயே எந்த நாடு உலகக் கோப்பையை வெல்லும் என்று கணிப்பது சற்று கடினமான விஷயமாகத்தான் இருக்கிறது. இந்த வருடம் இங்கிலாந்திற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக ஆரூடம் சொல்கிறார்கள். எனக்கென்னவோ, மரடோனா போன பிறகு, ஜெர்மனி தான் பிடித்த அணி. அவர்களது விளையாட்டு முறையே வித்தியாசமாக இருக்கும். முதலில் பதுங்கி, பின் பாய்ந்து ஆடுவதில் வல்லவர்கள். அவர்களது டிஃபன்ஸ் பிரமாதமாக இருக்கும். ஆனால் கொடுமை, இந்த வருடம், மைக்கேல் பாலக் விளையாட முடியவில்லை. என்ன கொடுமை சார் இது?

ஒவ்வொரு ஃபுட்பால் உலகக்கோப்பை ஆட்டங்கள் நடைபெறும் போதும், "இப்படி கண் முழிக்கறியே"ன்னு அம்மா திட்டுவாள். இந்த வருடம், அந்த பொறுப்பை காயத்ரி எடுத்துக் கொண்டிருக்கிறாள்.

உலக வரை படத்தில் கண்டு பிடிக்கவே முடியாத, துக்கடா நாடான ஐவரி கோஸ்டெல்லாம் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று விட்டன. இந்தியா என்று தகுதி பெறுமோ?

5 comments:

Rajalakshmi Pakkirisamy said...

:)
Enjoy Sir

Anonymous said...

எல்லா முறையுமே எனது ஆதரவு ஆர்ஜெண்டினாவுக்கு தான்... :) :) மரடோனா இப்ப பயிற்சியாளர் வேற..

ஜெர்மனி எப்பவுமே வலுவான அணி தான்... அவர்கள் உடல்வலுமிக்கவர்கள்... கூடுதல் நேரத்தில் எல்லாம் சிறப்பாக விளையாடுவார்கள்...

இம்முறை டிபன்ஸ் சரியா இருந்தா ஆர்ஜெண்டீனாவுக்கு வாய்ப்பிருக்கு இல்லனா கஷ்டம் தான்...

Karthik said...

நல்ல போஸ்ட் விஜய். நான் கூட ஒரு கொசுவத்தி போஸ்ட் போடலாம் போலிருக்கு. :)

ராமுடு said...

Hi,

Can you describe the rules of Football? I don't know about it and wanted to learn it.. I know its too late. But wish to learn.

முகுந்தன் said...

enakku pidicha vilayaattu cricket. but now lost interest in that too.