Pages

July 31, 2010

கணவன் மனைவி கணினி

சக்தியில்லையேல் சிவமில்லை; சிவமில்லையேல் சக்தியில்லை.
ஆபரேடிங்க் சிஸ்டம் இல்லையேல், அப்ளிகேஷன் இல்லை.
அப்ளிகேஷன் இல்லையேல், ஆபரேடிங்க் சிஸ்டத்துக்குப் பயனில்லை.
ஆபரேடிங்க் சிஸ்டம் சிவம். அப்ளிகேஷன் சக்தி.

அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் புல்லரித்துப் போவது நிச்சயம்
பக்கத்தில் அரிப்பு மாத்திரை வைத்துக் கொள்வது உசிதம்.

அப்பா, எதுகையும் மோனையும் போட்டுத் தாக்கும் புல்லரிக்குதே !!

புல்லரிக்கும் அனுபவம் ஏற்படுவதற்கு, கணினியும் அது சார்ந்த சில கலைச் சொற்கள் பற்றி ஒரு சிறு பாடம் நடத்தி விடுகிறேன்.

எந்த கணினியிலும் ஹார்ட்வேர் சாஃப்ட்வேர் என்று இரண்டு வேர்கள் இருக்கும் என்பது கருவில் இருக்கும் குழந்தைக்குக் கூட தெரிந்து விட்டது. அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. இந்த சாஃப்ட்வேர் பற்றி மட்டும் பார்ப்போம்.

கணினியை வாஞ்சையோடு அழுத்தினால், விண்டோஸ் (Windows) என்று ஒன்று ஓடுகிறதே, அதன் பெயர் ஆபரேடிங்க் சிஸ்டம்(Operating System OS) (இயக்கு தளம்). இந்த சாஃப்ட்வேர் தான், கணினியின் அஸ்திவாரம். இது ஆட்டம் கண்டுவிட்டால், கணினியே ஆட்டம் கண்டு விடும்.

ஆனால் இந்த ஆபரேடிங்க் சிஸ்டம் மட்டுமே இருந்தால், அந்தக் கணினி காலணா காசுக்குப் பிரயோசனப் படாது. அதன் மீது செலுத்தப்படும் வோர்ட், எக்ஸல், பவர் பாயிண்டு, பிரௌசர், மீடியா பிளேயர் இவையெல்லாம் தான் கணினிக்கு கண் காது மூக்கு நாக்கு போன்றவை. இவைகளுக்கு அப்ளிகேஷன் (செயலி) என்று பெயர். இந்தச் செயலிகள் இல்லாத இயக்கு தளம், உயிரற்ற பிரேதம் மாதிரி. ஆனால், இயக்கு தளம் இல்லாத செயலிகளை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அவை உடலற்ற பேய்கள் மாதிரி.

ஆக ஒரு கணினி சீராகச் செயல் பட வேண்டுமென்றால், பிரேதம் போன்ற இயக்குதளமும், பேய்கள் போன்ற செயலிகளும் அவசியம் வேண்டும். இது வரை ஓரளவு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இந்த ஆபரேடிங்க் சிஸ்டம் (இயக்கு தளம்) இருக்கிறதே, அது ஒரு வீட்டுல கணவன் மாதிரி. இந்த அப்ளிகேஷன் (செயலிகள்) எல்லாம் இருக்கே, அதெல்லாம் மனைவி மாதிரி. கணினி ஒரு குடும்பம் மாதிரி.

ஒரு செயலி இயங்குவதற்கு விண்டோஸ், லினக்ஸ் (Linux) போன்ற இயக்கு தளம் தேவை. இந்தச் செயலிகளெல்லாம் ஓடுவதற்கு, முக்கியமானது மெமொரி (RAM). அதைக் கொடுப்பது இந்த இயக்கு தளங்கள் தான். மனைவிகள் சந்தோஷமாக இயங்குவதற்கு முக்கிய தேவை, பணம். “கதவைச்சாத்தடி. கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி” என்று சிறு வயதிலிருந்தே பெண்கள் புத்தியில் புகுத்தப் பட்டிருக்கிறது. இந்த கணவன் என்ற இயக்கு தளம் தான், செயலி என்ற மனைவியின் மெமொரி தேவையை பூர்த்தி செய்யும். எப்போ கேட்டாலும் கொடுக்கணும்.

சில இயக்கு தளங்கள் ரொம்ப கெட்டிகாரத்தனமாக இருக்கும். இந்தச் செயலிகள் அப்பப்போ வந்து நொய் நொய்யென்று இன்னும் கொஞ்சம் மெமொரி தா, என்று கேட்டுக் கொண்டே இருக்கும். அதனால் முதல் முறை கேட்கும் போதே, “சும்மா
வந்து வந்து தொந்தரவு பண்ணாதே. இந்தாப் பிடி. தொலை” என்று சொல்லி கேட்டதை விட நிறையவே கொடுத்து விடும். சில கணவன்மார்களும் இப்படித்தான். சும்மா சும்மா அவர்களிடம் பணம் கேட்டால் பிடிக்காது. முதல் முறை கேட்கும் போதே, கேட்பதை விட அதிகமாகக் கொடுத்து தன்னை தொந்தரவு செய்யாத படி பார்த்துக் கொள்வார்கள்.

சில சமயம் கணினி அப்படியே ஸ்தம்பித்துப் போனதொரு நிலைமையைப் பார்த்திருப்பீர்கள். அது வேறொன்றுமில்லை. கணவன் என்ற இயக்குதளம் இயங்குவதை சற்று நேரம் நிறுத்தியிருக்கும். இயக்கு தளம் நின்று போதற்கு எல்லோரும் அதைத்தான் குற்றம் சொல்வார்கள். ஆனால், இயங்காமல் நின்றதற்கு பெறும் காரணம், மனைவி என்ற இந்தச் செய்லிகள் தான் என்று நிறைய பேருக்குத் தெரிவதில்லை.

கணவன் என்ற இயக்கு தளம் சில விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இயங்குகிறது. இந்த விதிமுறைகள் மனைவிகளான செயலிகளுக்கும் தெரிந்து தான் இருக்கின்றது. “இப்படிச் செய்யாதே” என்று கணவன், சாரி இயக்குதளம் உத்தரவு போட்டால், “நீ என்ன எனக்குச் சொல்வது. நான் இப்படித்தான் செய்வேன்” என்று மனைவியென்ற செயலிகள் அகம்பாவத்துடன் நடந்துகொள்ளும் போது பாவம் கணவன், ஐ மீன் இயக்குதளம் என்ன தான் செய்ய முடியும்? தன் வேலையையும் செய்யாமல் செயலியின் தேவையையும் பூர்த்தி செய்யாமல் சும்மா இருந்துவிடுகின்றன. அதனால் குடும்பம் என்ற கணினியும் ஸ்தம்பித்து விடுகிறது.

பல நேரங்களில் இந்தச் செயலிகளின் தேவை பணம் போன்ற மெமொரி. பாவம் இயக்கு தளத்தினால் எவ்வளவு தான் தர முடியும். ”உன்னுடையது பேராசை”, என்று மனைவி என்ற செயலியிடம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் மேலும் மேலும் கேட்டால், இல்லாத மெமொரியை (பணத்தை) எங்கிருந்து கொண்டு வர முடியும். செயலி இயக்குதளத்தின் விதிகளை மீற, இயக்குதளம் ஸ்தம்பிக்கிறது.

இது யார் குற்றம்? இது தான் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று சொல்வது. செயலியின் பேராசை தான் காரணமென்றாலும், தான் ஸ்தம்பித்ததற்கு செயலிதான் காரணம் என்று காட்டிக் கொடுக்கமாட்டான். பெருந்தன்மையுடையவன், தன் மீது தான் பழி, இயக்குதளம் தான் ஏதோ தவறு செய்துவிடடது என்று வெளியுலகிடம் பிரகடனப் படுத்திக் கொள்வான்.

கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும், நிலமை மோசமாயிருப்பது மனைவி என்ற செயலியால் தான் என்று. பல நேரங்களில் மனைவிமார்கள் ரெஸ்பான்ஸ் எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இந்த கணவன் என்ற இயக்குதளமும் விடாக்கொண்டன் தான். மனைவி என்ற செயலி மூட் அவுட் ஆகியிருந்தாலும், ஒன்றுமே நடக்காதது மாதிரி ஆளேயில்லாத கடையில் டீ ஆற்றுவது மாதிரி தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

இருந்தாலும் இந்த லினக்ஸ் போன்ற இயக்குதளங்கள் கொஞ்சம் சாமர்த்தியமான கணவர்கள். செயலி என்ன தில்லு முல்லு செய்தாலும், அவர்கள் போக்குக்கே போய் அவர்களை சந்தோஷப் படுத்துவார்கள். வெளியுலகிற்கு அந்தக் குடும்பம், ஐ மீன், அந்தக் கணினி சீராக இயங்குவது போல் இருக்கும். ஆனால் அம்மாதிரியான குடும்பங்களைக் காண்பதரிது.

மனைவிக்கு தீடீரென்று ஒரு ஆசை வரும். ஆகாசத்தையே ஏட்டிப் பிடிக்கணும் என்பாள். கணவனுக்கு வேறு வழியே இல்லை. அவளது ஆசையை பூர்த்தி செய்தேயாக வேண்டும். பாவம் தன் ஆசையை கணவன் எப்படி நிறைவேற்றுவான் என்பது பற்றியெல்லாம் மனைவிக்கு அக்கறையில்லை. தன் ஆசை நிறைவேறணும். அவ்வளவு தான்.

இந்த இயக்கு தளமும் ஒரு கணவனைப் போல் தான் இப்போது செயல் படும். செயலி என்ற மனைவி திடீரென்று தான் இயங்க வேண்டும் என்று ஆசை வைப்பாள். “மனைவியின் ஆசையை எப்படி நிறைவேற்றினேன் என்று கணவன் சொல்ல மாட்டானோ (மனைவிக்கும் அது பற்றி அக்கரையில்லை என்பது வேறு விஷயம்)” அது மாதிரி தான் இயக்குதளமும் relocatable address என்ற விதியின் மூலம் செயலி இயங்க வழி வகுப்பான்.

சில சமயம், குடும்பத்தில் பணம் நிறைய இருக்காது. மனைவிக்கோ கணவன் சம்பாதிப்பதை விட அதிகம் தேவை. எந்தக் கணவனுக்குத்தான் மனைவியிடம் போய், “என்னிடம் பணம் இல்லை. சிக்கனமாக இரு” என்று சொல்ல தைரியம்?

பணம் இல்லாவிட்டாலும் இருப்பது போல் ஒரு பாவலா காட்டுவார்கள். அது மாதிரி தான் இந்த இயக்கு தளங்களும். என்ன தான் வைப்பு நிதி என்ற மெமொரி இருந்தாலும் விர்ச்சுவல் மெமொரி (virtual memory) என்ற இல்லாத மெமொரியை இருப்பது போல் காட்டி, செயலிகள் எவ்வளவு கேட்டாலும் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

”அப்ப கணினியை வைரஸ் அடிக்கறதெல்லாம்?”

இந்த வைரஸ் சமாசாரமெல்லாம் கில்மா பார்டி மாதிரி. தொட்டா சுடும்னு தெரிந்தும் அதைத் தொட்டுத் தவிக்கறதில்லையா? அது மாதிரி, கில்மா பார்டியிடம் போனால் ஆபத்து என்று தெரிந்தும் விண்டோஸ் போன்ற இயக்குதளங்கள், வைரஸ்களை அணைத்துக் கொள்கின்றன. தானும் கெட்டு குடும்பத்தையும் கெடுத்துவிடுகின்றன இந்த கில்மா பார்டி. ஆனாலும் லினக்ஸ் போன்ற ஸ்டெடி இயக்குதளங்கள் இந்த கில்மா பார்டிகளிடம் மாட்டிக் கொள்வதில்லை.

July 25, 2010

பாத்திரங்களுக்காக ஒரு கதை

கதையை விட சில கதாபாத்திரங்கள் நம் மனதில் வேறூன்றி நிற்பார்கள். வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன், குந்தவை போன்ற பாத்திரங்கள் அப்படிப்பட்டவை தான். அந்தப் பாத்திரங்களே கதையை நடத்திச் செல்வார்கள். கதையைவிட அந்தப் பாத்திரங்களுக்காகவே கதையைப் படிப்போம். அப்படிப்பட்ட பாத்திரம் தான் ஹோவார்ட் ரோர்க் (Howard Roark). அய்ன் ராண்ட் (Ayn Rand) 1930’களில் எழுதிய ஃபவுன்டெய்ன் ஹெட் (The Fountain Head) கதையின் நாயகன்.

“தான் செய்வது சரிதான்” என்ற எண்ணம் படைத்த மனிதன் ஹோவர்ட். அவன் ஒரு ஆர்கிடெக்ட். ஒவ்வொரு கட்டிடத்துக்கும் ஒரு உபயோகம் (purpose) உண்டு. அந்தக் கட்டிடம் அந்த உபயோகத்துக்காகத்தான் நிர்மாணிக்கப் (designed to achieve a purpose) பட வேண்டுமே தவிர, சும்மா ஒரு நிர்மாணியின் கலைத்திறனைக் காட்டுவதற்காக அல்ல என்று நம்புபவன். இவனது கொள்கையை ஏற்காமல், அவனைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றுகிறார்கள். சிறிதும் கவலைப் படாமல், தன்னைப் போல் எண்ணம் கொண்ட இன்னொரு நிர்மாணியிடம் போய் வேலைக்குச் சேர்கிறான். பெருவாரியான கட்டிட நிர்மாணிகள், இவர்களை வெறுக்கிறார்கள். இவர்களையும் நம்பி சில வாடிக்கையாளர்கள் இவர்களிடம் வருகிறார்கள். சிலருக்குப் பிடிக்கிறது, சில பேருக்குப் பிடிப்பதில்லை.

ஹோவார்டின் கொள்கைகளிலும் கட்டிடங்களையும் அங்கீகரிக்கும் ஒருவர், சாரி! ஒருத்தி இருக்கிறாள். டொமினிக் ஃப்ராங்கன் (Dominique Francon). எங்கே தான் மிகவும் விரும்பும் பொருளுக்கு அடிமையாகிவிடுமோ என்ற எண்ணத்தில், தான் விரும்பும் பொருளிடமிருந்தே தன்னை தூரப்படுத்திக்கொள்ளுபவள். கொஞ்சம் வினோதமான பாத்திரப் படைப்பு தான் ஹோவார்ட் ரோர்கின் கட்டிடங்கள் மீதும், அவன் கொள்கைகள் மீதும் ஈர்பு ஏற்பட்டவளுக்கு, அவன் மீதும் ஈர்ப்பு ஏற்படுகிறது. இருந்தும் தான் விரும்பும் பொருள்களிலிருந்து தன்னை அன்னியப்படுத்திக் கொள்ளும் டொமினிக், ஹோவர்டின் எதிரியையே மணக்கிறாள். கொஞ்சம் வினோதமாக இருந்தாலும், அவள் அப்படிச் செய்வது, ஹோவார்டின் எதிரியை வீழ்த்தத்தான் என்பது பிற்பாடு தெரிகிறது.

பிறரின் தயவிலேயே பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆவலுடன் இன்னொரு பாத்திரம், பீடர் கீடிங். ஹோவர்டின் நண்பனாக இருந்தாலும், அவனை தொழில் ரீதியாக, ஹோவார்டை தோற்கடிக்க வேண்டும் என்று எண்ணுபவன். இவனைத்தான் டொமினிக் மணக்கிறாள்.

தனது கொள்கைகளிலிருந்து இம்மியளவும் நகராமல் ஹோவார்ட் எப்படி வெற்றி காண்கிறான் என்பது தான் மீதிக்கதை.

கீழே போட முடியாமல் ஒரே மூச்சில் பல புத்தகங்கள் படித்திருந்தாலும், அடுத்த புத்தகத்தை எடுத்ததுமே, பழைய புத்தகத்தில் வந்த பாத்திரங்கள் மனதிலிருந்து மறைந்துவிடுகிறார்கள். ஃபவுண்டெய்ன் ஹெட் படித்து பல நாட்களாகியும், ஹோவார்ட் ரோர்க், டொமினிக் ஃப்ராங்கன் மனதில் நிற்பதற்கு, கதையை விட அந்தப் பாத்திரங்களின் படைப்பு தான் காரணம் என்று நம்புகிறேன்.

ஓரிரு முறை சில பக்கங்கள் படித்துவிட்டு, “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று இந்தப் புத்தகத்தைத் தூக்கிப் போட்டுவிட்டேன். அவ்வளவு மெதுவாக நகரும் கதை. கதை என்பதை விட பாத்திரங்களின் கொள்கைப் பிரசாரம் தான் நிறைய இருக்கும். கொஞ்சம் கொட்டாவி விட வைக்கவும் செய்யும். ஆனால் கதையே, 150 பக்கங்களுக்குப் பிறகு தான் சிறிது நகர்வது போல் இருக்கும். “இவன் சொன்னானேன்னு இதைப் போய்ப் படிக்க ஆரம்பித்தேனே, என்னை செருப்பால அடிக்கணும்” என்று மனதிற்குள் நீங்கள் என்னைத் திட்ட நிறைய வாய்ப்புகள் உணடு. புத்தகத்தைப் படிக்க கொஞ்சம் எக்ஸ்ட்ரா பொறுமை தேவை. இது மற்ற நாவல்களைப் போல் இல்லை என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.

ஹோவார்ட் ரோர்க் தனக்காக கோர்டில் வைக்கும் வாதங்களே 30 பக்கங்களுக்கு மேல் இருக்கும். கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். புரியவில்லை என்றால் மீண்டுமொருமுறை படிக்கவேண்டாம். புத்தி பேதலித்து விடும்.

சூப்பர்ஸ்டார் ஆங்கிலப் படம் நடிப்பதாக இருந்தால், இந்தப் புத்தகத்திலிருந்து நிறைய பன்ச் டயலாக்குகள் சுட்டுக் கொள்ளலாம். அவ்வளவு கொட்டிக் கிடக்கின்றன. இவ்வளவு இருந்தாலும் இப்புதகத்தைப் படிக்க வைத்தது ஒவ்வொரு பாத்திரத்தின் படைப்பும், அவர்கள் தனது கொள்கையில் நின்றதுமே தான்.

டிஸ்கி: “ஏண்டா வெண்ணெய், காந்தி செத்துட்டார்’ன்ற மாதிரி, இம்புட்டு பழைய புத்தகத்தைப் பத்தி இப்போ எழுதியிருக்கே? புத்தகம் படிக்கற யாரும் தவறாது படிக்கற புத்தகம் ஃபவுண்டெய்ன் ஹெட். இதப் பத்தி இப்ப சொல்ல வந்துட்டியே” என்று நீங்கள் நினைத்தால், ரொம்ப மன்னிக்கணும்.

July 23, 2010

நான் யார்? நான் யார்?

“நான் யார் தெரியுமா! நான் யார் தெரியுமா”

“அண்ணன் யார் தெரியுமா?? அண்ணன் யார் தெரியுமா??”

“டேய் சும்மா இப்படியே சௌண்டு விட்டுக்கிட்டு இருக்கீங்கடே, அண்ணனைப் பத்தி எடுத்துசொல்லுங்களேண்டா”

“அண்ணன் பொட்டி தட்டற வேலை செய்யறேன்னு சொல்லிகிட்டு வெட்டியா ஒக்காந்து ஈ ஓட்டிக்கினு இருக்கச்சொல, மொக்கையா யாருக்குமே உபயோகம் இல்லாம ஏதாவது யோசிப்பாரு. யோசிச்சதோட இல்லாம எளுதித் தள்ளுவார். அண்ணனை உசுப்பத்தவே ஒரு பட்டாளம் திரியுது”

அடப்பாவிப் பயபுள்ளேளா, கூட இருந்தே குழி பறிக்கானுவளே.
ஐயா, தற்புகழ்ச்சி நமக்குப் புடிக்காதுங்க. இருந்தாலும் கொலைஞர், சாரி கலைஞர் மாரி நானே சில கேள்வி கேட்டுக்கிட்டு அதுக்கு பதிலும் சொல்லிருக்கேன். உங்க தலையெழுத்து இம்புட்டு தூரம் படிச்சுப்புட்டீக. இன்னும் ஒரு பத்து நிமிஷம் செலவழிச்சு மிச்சத்தையும் படிச்சிருங்க.

“எலேய், சொல்ல வந்தத, சொல்லித் தொலைல்ல..”

இனிமேலும் மொக்கையைப் போடாம, மேட்டருக்கு வாரேன்.

வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
என் நெசப் பேரப் போட்டுத் தான் எழுதுதேன். விஜய்ன்ற பேருல தான் எழுதுதேன். முழுப் பேரு, “விஜய் குமார்”.
என்ன, என் பேர கெடுக்க ஒரு நடிகனும் பொறப்புட்டிருக்கான்னு கேக்கைல தான் வருத்தமா இருக்கு.

அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
எல என்ன எழவு கேள்வி கேக்க? என் பேருல தான் எழுதுதேன். இந்தப் பேரு அம்புட்டு பிரபலம் ஆவாட்டி, பிறவால பொஞ்சாதி பேரப்போட்டு எழுதலாம்’னு இருக்கேன். என்ன சொல்லுதீய?

நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
எல நீ கேக்க கேள்வியே சரியா இல்லை. நான் என்ன கண்ணாணம் கட்டின புதுப் பொண்ணா, காலடி எடுத்து வைக்கறதுக்கு? எல்லாம் தமிழ் படிக்கத் தெரிஞ்ச மக்கா செஞ்ச பாவந்தேன். நான் எழுததையும் படிக்கணும்’னு, சில பேர் தலையில எழுதியிருக்கு.
என்னத்தச் சொல்ல? எதோ மனசுல உள்ளத எளுதணும்’னு தோணிச்சு. காசு கொடுத்து இணையதளமெல்லாம் வாங்க, நமக்கு சரிப்பட்டு வராது. மவராசன், “இனாமாத்தேன் கொடுக்கேன், இங்கிட்டு வந்து எழுது”ன்னு இவனுங்க சொன்னானுங்க. அட, மனசுல உள்ளத எளுதிப் பாப்புமேன்னு, தோணிச்சு, எழுத ஆரம்பிச்சுட்டேன்.


உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எலேய், வாழைப் பழத்துல ஊசி ஏத்துத மாதிரியே, கேள்வி கேக்க்கிதியே?
“எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்”னு ஏதோ படத்துல ஒரு கிறுக்குபய கத்திகிட்டு ஒடுவானே, அது மாதிரி, “நான் பதிவு போட்டிருக்கேன், நான் பதிவு போட்டிருக்கேன்”னு கூவச் சொல்லுதியா??
எதுக்குலே, ஆர்குட்டு, ஃபேஸ்புக்கு, ட்விட்டரெல்லாம் இருக்கு? இங்கிட்டு போடுற மொக்கையெல்லாம், அங்கிட்டு போட்டுருவேன். ஏதோ நாமளும் ஏதோ உருப்படியாச் சொல்லுதோம்’னு நினைச்சு நாலு பயலுவ வந்துட்டுப் போறானுவ.

இன்னும் நிறைய கூட்டம் வரணுமா? தொறந்த வீட்டுல நாய் நொழயற மாதிரி, யார் எதுன்னே தெரியாத ஆள் பதிவுல போயி ஆஹா ஓஹோ’னு எழுத வேண்டியது. முடிஞ்சா அந்தாளு பதிவ ஃபாலோ பண்ணறது. பத்து பேர் கிட்ட இப்படி பண்ணினா, ரண்டாவது தேரும். இப்படித் தான் நாம வாசக வட்டத்த உண்டாக்கறது.
எலேய், இத நான் சொன்னேன்னு, யார்ட்டயும் சொல்லிப்புடாத. பொளப்பு நாறிரும்.



வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நாம எழுதறதே சொந்தக் கதை சோகக் கதை தான? நாம பண்ணுன கோமாளித்தனத்தயெல்லாம் எழுதித்தானே பொழப்பே ஓடுது. கற்பனை பண்ணி எழுதினேன்னா, இந்நேரம் 21’ஆம் நூற்றாண்டின் சுஜாதா’வாய்ருக்க மாட்டமா? “நினப்பு தான் பொளப்புக் கெடுக்கும்”னு நினைக்கீயளோ?

நாமும் கதை எழுதலாம்’னு ஒண்ணு ரண்டு கதை எழுதினேன். பாத்துக்க ஒண்ணும் சரிப்பட்டு வரல. எல அதுக்கெல்லாம் ஒரு இது வேணும்’ல சொல்லிக்கிட்டு, மறுபடியும் சொந்தக் கதைக்கே போய்ட்டேன்.



நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
நான் வச்சிருக்க பேரைப் பாத்துட்டு நீ இப்படி ஒரு கேள்வி கேக்கலாமா? சொல்லுல கேக்கலாமா? பொழுதே போகாததுனால தானே நான் எழுதுதேன்’ற பேருல மொக்கையைப் போடுதேன்.

நாலு பேத்துக்கு நல்லது பண்ணி அதுனால நாலு காசு வந்தா நல்லாத்தேன் இருக்கும். ஆனா நாம எழுததப் பாத்துப்புட்டு, “அடப் பாவிபயபுள்ளேளா, நாம் இவன் பதிவ படிக்கதுனால, இவன் நாலு காசு பாக்கறாண்டா”ன்னு வவுத்தெரிஞ்சா, அந்தக் காசு நம்மட்ட தங்குமா? வேணாண்டே, வேணாம். பதிவெழுதி நமக்கு காசு வேண்டாம்.


நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
உருப்படியா இது ஒண்ணு தான் போகுது. கிரிக்கெட் ஆர்வக்கோளாறு கொஞ்சம் ஜாஸ்தியகிடுச்சுன்னாலோ, அல்லது நம்ம கிரிக்கெட் ஆட்டக்காரங்களை காய்ச்சணும்னாலோ, சில்லி போயிண்டுன்னு ஒரு பதிவு ஆரம்பிச்சேன். அது அப்படியே போட்டது போட்ட படியே கெடக்கு. ஒரு நா அதுக்கு மறுபடியும் புத்துயிர் கொடுக்கணும்.


மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
ச, நம்மால இவன(ள)ப் போல எழுத முடியலியேன்னு நிறைய பொறாமை உண்டு. இப்படி என்ன தம்பட்டம் அடிக்க வச்ச வித்யா எழுதுதக் கூட பார்த்து பொறாமயா இருக்கும். இவங்கள்’லாம் எழுததப் படிக்கசொல, “வாடி என் கப்பக்கெழங்கே” பாட்டுல ஒரு வரி வருமே, “அதுக்கு ஞானம் வேணும் ஞானம் வேணும்டோய்யா”ன்னு, அது தான் ஞாபகம் வரும்.

சில பேர் பகுத்தறிவு, பைத்தியக்கார அறிவுன்னு சொல்லிகிட்டு, என்ன ஏதுன்னு முழுசா எதையுமே தெரிஞ்சிகிடாம ஏதாவது தத்துப் பித்துன்னு உளறும் போது, அவங்களைப் போய் நாலு சாத்து சாத்தணும்’னும் தோணும்


உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
நாம எழுததப் படிச்சுப்புட்டு இது வரைக்கும் வீட்டுக்கு ஆடோ வராம இருக்கே, அதுவே பெரிய விஷயம் தான். நான் என்ன எழுதினாலும் மொதல்ல என் பொஞ்சாதிக்குப் படிச்சுக் காட்டிருவேன். மொத மொதல்ல நான் காதலிச்ச பொண்ணு பத்தி எழுதிட்டு அவ கிட்ட படிச்சுக் காட்டினேன். அம்மணிக்கு அப்போ இருந்த தமிழறிவுல எம்புட்டு புரிஞ்சதுன்னு தெரியலை. என்னவோ, எழுதியிருக்க, பரவால்ல’ன்னுட்டா.

எங்கம்மாவும் படிப்பாங்க. நல்ல சுருதி சேர்த்து பாடினாக்கூட, சில வித்வான்கள் வாயத் தொறந்து பாராட்டிற மாட்டாங்க. ஒரு தலையாட்டு தான் இருக்கும். இத விட நல்லா சாதகம் பண்ணி, உன்னால இன்னும் முடியும்’னு மறைமுகமா கொடுக்கற ஊக்கம் அது. அம்மாவும் அப்படித்தான். ஒரு சிரிப்பு மட்டும் தான் வரும்.

தங்கமணியைக் கலாய்ச்சு எழுததை அவுக அப்பாரும் படிக்காராம். என்ன நினச்சுக்கிடுவாகளோ? இவனுக்குப் போயி......., வேண்டாம், விட்ருங்க.


கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.
என்னப் பத்தி நானே.... எப்படி புகழ்ந்துக்கறது? இருந்தாலும் கேக்கீங்களே’ன்னு சொல்லுதேன். நிறைய படிக்கணும்’னு ஆசை. முடிஞ்ச வரைக்கும் கையில ஏதுனாச்சும் பொஸ்தகம் எடுத்துட்டுப் போகறது வழக்கமுங்க.

கஷ்டம் வரும் போதெல்லாம், இது வரைக்கும் வழிகாட்டிய ஆண்டவன் இனிமேல் கைவிட்டுடுவானான்னு, என்னை நானே தேத்திக்குவேன்.

ஓயாம பேசுவேன். எதைப் பத்தினாலும். எல்லாத்துக்கும் அபிப்ராயம் இருக்கும். வேற நம்பளப் பத்தி சொல்லுறதுக்கு ஒண்ணும் இல்லை.

டிஸ்கி: இந்த தொடர் சங்கிலி அருந்துடக் கூடாதாம். அப்படி என்னால அருந்திச்சுன்னா, என் பதிவு தளத்துக்கு மால்வேர் வந்துரும்’னு ஜெர்மனியின் பால் ஆடோபஸ் சொல்லியிருக்காம். அதுனால, இதைப் படிக்கறவங்க எல்லாரும், இதே கேள்விகளை நீங்களே கேட்டுக்கிட்டு பதிலும் போட்டுருங்கய்யா. மவராசனாயிருப்பீய.

நான் பாட்டுக்கு சிவனேன்னு தானே இருந்தேன். ஏதோ ஊருல இருக்க ஹோட்டல் பத்தியெல்லாம் இவுக எழுதறாங்களே’ன்னு இவங்க பதிவ படிச்சா, என்னைப் பத்தி நானே கேள்வி கேட்டுக்கிட்டு பதிலும் நானே எழுதணுமாம். அதான் எழுதிருக்கேன். அவங்களும் அவங்களப் பத்தி எழுதிருக்காங்க. வரட்டா......

July 05, 2010

இவங்களுக்கெல்லாம் ராவணன் பிடிக்காது

இரண்டு மெகா ஹிட் படங்கள் கொடுத்தால் ஒரு சொதப்பல் படம் கொடுப்பது மணிரத்னத்தின் குணம். டிரய்லரைப் பார்த்ததிலிருந்து ராவணன் ஒரு சொதப்பலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதுவும் பாட்டு ஒன்றும் மனதில் ஒட்டவே இல்லை. படத்தின் விஷுவல்ஸைப் பார்த்தபோதே இது ஊத்திக்கும் என்று தான் நினைத்தேன். இணையத்திலும் பத்திரிகைகளிலும் வந்த விமர்சனங்களும் அப்படியே இருந்ததா, "பார்த்தியா நான் சொன்னது சரியாப் போய்விட்டது பார்" என்று காயத்ரியிடம் சொன்னதை அவள் ஏற்க மறுத்துவிட்டாள். புருஷன் சொல்வதை மனைவி கேட்டுட்டாத்தான் நாடு உருப்புட்டுருமே.

படத்தைப் பார்த்தே ஆகணும் என்று ஒற்றைக்காலில் நின்று, சனிக்கிழமை மத்தியான காட்சிக்குப் போனோம். அடுத்த இரண்டே கால் மணி நேரம் என்னை மணிரத்னம் இருக்கையிலேயே கட்டிப் போட்டுவிட்டார் என்று தான் சொல்லணும். இப்படியொரு அருமையான படத்தையா, ஊடகங்களில் கிழி கிழியென்று கிழிக்கிறார்கள் என்று நொந்து கொண்டேன். உண்மை தான் ராவாணன் எல்லா தரப்பு மக்களையும் திருப்தி படுத்தும் என்று எண்ண முடியாது.

கதாநாயகனை அறிமுகப்படுத்தும் போது அவன் கை கால்கள் கண்கள் மூக்கு நாக்கு என்று பிட் பிட்டாகக் காட்டாமல், ஒரு பில்ட்-அப்பும் கொடுக்காமல் படம் எடுத்தால் சில பேருக்குப் பிடிக்காது.

கதா நாயகன் தோன்றி அடுத்த காட்சியிலேயே 100 பேரோடு ஆடிப் பாடாமல் படம் நகர்ந்தால், பல பேருக்கு இது தமிழ்ப் படம் என்றே ஒத்துக் கொள்ள முடியாது.

கதாநாயகன் எதிராளியைப் பார்த்து பன்ச் டயலக் என்ற பெயரில் காதைப் பஞ்சராக்கும் வசனங்கள் இல்லாமல் இருந்தால், பல பேருக்குப் படம் புரியாது.

இவ்வளவு மழை பெய்தும் அதிலே ஐஷ்வர்யா ராயை நனைய விடாமல், கதாநாயகியின் சதைகளைக் காட்டாமல் படம் எடுத்தல் பல பேருக்கு எரிச்சல் வரும்

கதையோடு ஒட்டாமல் தனியே ஒரு காமெடி கோஷ்டி, காமெடி என்ற பெயரில் காமநெடி வீசும் வசனங்கள் இல்லாமல் கதையமைத்தால் அந்தப் படம் காலணாவுக்கு பெறாது என்பது எழுதப்படாத விதி

ஒப்பனை என்ற பெயரில் முகத்தில் மாவு ஏதும் அப்பிக் கொள்ளாமல் இருக்கும் முகத்தைக் காட்டியே நடிகர்களைக் காட்டினால் யார் தான் பார்ப்பார்கள்?

இதோ பாட்டு வருகிறது பார் என்று ஒவ்வொரு பாட்டுக்கும் ஐரோபா அமெரிக்கா என்று சுற்றாமல், படத்தோடே பயணிக்கும் படி பாட்டுக்களை வைத்தால், கிழித்து குதறாமல் படம் எடுத்தால் யாருக்குப் பிடிக்கும்?

ஃப்ளாஷ் பேக் என்ற பெயரில் இரண்டு ரீல்களுக்கு அழுகுனி காட்சிகள் வைக்கவில்லையென்றால், அது ஃப்ளேஷ் பேக் இலக்கணத்தை மீறுவதாகாதா? ப்ரியாமணியை கற்பழித்து அவர் கதறும் காட்சியைக் காட்டினால் தானே தமிழ் ரசிகர்களுக்கு, வீராவின் கோபம் புரியும். ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டால் போதுமா?

ராவணன் என்று பெயர் வைத்து விட்டு, ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் ராமாயணத்தை நினைத்துப் பார்க்காமல் எப்படிப் படம் பார்ப்பது? அப்படிப் பார்க்கும் போது இது ராமாயணத்தை இழிவு படுத்தும் கதை என்று தான் தோன்றுகிறது.

ராவணனைப் பிடிக்காது என்று சொல்லும் மக்கள் எடுத்து வைக்கும் வாதம் இவை தான். இதெல்லாம் எதிர்பர்த்துப் போகும் மக்களுக்கு ராவணன் பிடிக்காது தான். எப்போதுமே அதி அற்புதமான படைப்புகள் மக்களை மகிழ்விக்க மறுக்கின்றன. ஹே ராம், ராவணன் எல்லாம் அந்த ரகம் தான்.