சென்னை வந்ததிலிருந்து வாழ்வில் ஏதாவது மாற்றம் வந்திருக்கிறதா, என்று பார்த்தால், நம்ம பக்தி மார்க்கப் போக்கு கொஞ்சம் ஜாஸ்தியாகியிருப்பது தான். வீட்டு வாசலிலேயே ஆஞ்சனேயர். கொஞ்சம் ஒரு எட்டு எடுத்து வைத்தால் ஆதிகேசவ பெருமாள். இந்தப் பக்கம் சுவர்ணபுரீஸ்வரர். பிரதோஷத்தினன்று கூட்டம் 3மணியிலிருந்தே அலை மோதுகிறது. இன்னும் கொஞ்சம் தள்ளிப் போனால் அயோத்தியா மண்டபம், காமாக்ஷி அம்மன் கோவில். இது போதாதென்று மரத்துக்கு மரம் பச்சை விநாயகர் , மேற்கே பார்த்த விநாயகர் என்று தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோயில்கள் வேறு.
உள்ளூர் கோயில்கள் போதாதென்று அக்கம்பக்கத்திலிருக்கும் க்ஷேத்திரங்களுக்கும் போகலாம் என்று போன வாரம் பஞ்ச பூதக்ஷ் க்ஷேத்திரத்தில் வாயு க்ஷேத்திரமான காளஹஸ்திக்குப் போகலாம் என்று முடிவானது.
வேடுவன் ஒருவன் இறைவன் மேல் கொண்டிருந்த தீராத பற்றினால், காட்டிலிகுக்கும் லிங்கத்துக்கு, அர்ச்சகர் பூஜித்த பிறகு, தான் வேட்டையாடிய மிருகங்களை மாமிசங்களாகப்படைத்து வந்தானாம். இறைவன் சந்நதி்யில் இறைச்சி சிந்தியிருப்பதை மறுநாள் பார்த்த அர்ச்சகர், சினம் கொள்வாராம். தாம் பூஜிக்கும் இறைவனை இப்படி்யொருவன் அவமதிக்கிறானே என்ற கோபம். அவர் கனவில் இறைவன் தோன்றி, “நீ யாரை நிந்திக்கிறாயோ, அவனது பக்தியைப் பார்” என்று சொல்லிவிட்டு மறைந்தாராம். மறுநாள் அர்ச்சகரும், மறைவிலிருந்து வேடன் செய்வதையெல்லாம் பார்த்தாராம்.
தான் வேட்டையாடிய மிருகங்களை இறைவன் சன்னதியில் போட்டுவிட்டு இறைவனை வணங்கி நின்றானாம். மறைவிலிருந்து பார்த்த அர்ச்சகருக்குப் பொறுக்கவில்லை. அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. இறைவன் கண்ணிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கயது. வேடன் எவ்வளவோ துடைத்தும் நிற்கவில்லை. கடைசியில் கையில் வைத்திருந்த கத்தியால் தனது கண்ணைப் பிடுங்கியெடுத்து ஆண்டவனுக்குப் பொறுத்தி ரத்தம் வடிவதை நிறுத்தினானாம். மறு கண்ணிலிருந்து இப்போது மீண்டும் ரத்தம் வழிகிறது. இறைவன் தன்னைச் சோதிக்கிறான் என்பதைக் கூட புரிந்திராத வேடன், தனது இன்னொரு கண்ணைப் பிடுங்கத் தயாரான போது ஆண்டவனே பிரத்யக்ஷமாகத் தோன்றி அவனை ஆட்கொண்டார், என்பது தான் காளஹஸ்தியின் ஸ்தல புராணம். தன் கண்ணையே ஆண்டவனுக்குக் கொடுத்ததால், இவரும் ஒரு நாயனமாரானார். கண்ணப்ப நாயனார்.
இறைவன் பெயர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர். அம்மை ஸ்ரீமதி ஞானப்ரசூன்னாம்பிகை சமேதராக காட்சியளிக்கிறார். சுவர்ணமுகி நதிக்கரையில் கோயில் அமைந்திருக்கிறது. முத்துசுவாமி தீக்ஷிதர் கூட ஸ்ரீ காளஸ்தீஸ்வரர் மீது கீர்த்தனம் பாடியுள்ளார்.
சென்னையிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆந்திராவில் தான் காளஹஸ்தி இருக்கிறது. சென்னையிலிருந்து திருப்பதி போகும் வழியில் தடா என்ற ஊரில் இடங்கைப் பக்கம் திரும்பி இன்னும் ஒரு 60 கி.மீ தூரம் பயணித்தால் காளஹஸ்தியை அடையலாம்.
சென்னையிலேயே வெயில் பொறுக்க வில்லை, ஆந்திராவில் எப்படியருக்குமோ அதனால் 4 மணிக்கே கிளம்பிடலாம் என்று தான் முடிவு செய்தோம். ஐந்தேமுக்காலுக்குத் தான் கிளம்ப முடிந்தது. திருப்பதிக்குப் போகும் நால்வழிப்பாதையில் திருப்பதியைத் தவிர வேறெல்லா ஊரின் பெயர்களும் இருந்தன. காளஹஸ்தியை அடையும் போது 7.45. சென்னையிலிருந்து 80 கி.மீ பயணித்தாலே நிலம், மக்கள், பேருந்து எல்லாவற்றிலும் மாற்றம் தெரிந்தன. கொல்டி தேசத்தில் நுழைந்து விட்டோம் என்பதை புரியாத ஜிலேபி எழுத்துக்கள் ஊர்ஜிதப்படுத்தின.
காளஹஸ்தியின் இன்னொரு பெருமை, இது ராஹு கேது ஸ்தலம். ஸர்ப்ப தோஷம் நிவ்ருத்தி செய்வதற்கு இங்கு வந்து பூஜை செய்கிறார்கள். 250 ரூபாய் செலுத்தி, சாதாரண வரிசையில் ஒரு மணி நேரம் காத்திருந்து கும்பலோடு கும்பலாக பூஜை செய்யலாம். 600 ரூபாய் கொடுத்து சிறு கோஷ்டியாக பூஜை செய்யலாம். அல்லது 1000 ரூபாய் கொடுத்து ஸ்பெஷலாக பூஜை செய்யலாம். எல்லா இடத்திலும் மந்திரம் ஒன்று தான். காத்திருக்கும் நேரம் மற்றும் மாறுபடுகிறது. பணத்திக்கேற்ப கவனிப்பு மாறுபடும். காசியிலிருந்து கூட இங்கு வந்து தோஷ நிவ்ருத்தி பூஜை செய்கிறார்கள். காலை 7, 8, 9, 10, 11 மணியென ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேட்ச் என்ற முறையில் பூஜை நடக்கிறது. அவ்வளவு கூட்டத்தையும் நன்றாகவே நிர்வாகம் செய்கிறார்கள். கோயில் பிரகாரம் முழுவதும் கூறை வேய்ந்திருக்கிறார்கள். இல்லையென்றால் வெயிலுக்கு பஸ்மமாகியிருப்போம். கண் கூசும் அளவிற்கு வெயில்.
நாங்கள் போயிருந்தது சனிக்கிழமை. விடுமுறை நாள். 9-10.30 ராகு காலம் வேறு. கூட்டமான கூட்டம். மக்கள் பக்திக்காக வருகிறார்களோ இல்லையோ,எல்லோரும் ஏதோ கோரிக்கையுடனேயே வருகிறார்கள். இறைவனை ஜில்லா கலெக்டர் ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டார்கள். மனுவை எழுத்து மூலம் கொடுக்காமல் பிரார்த்தனையாகக் கொடுக்கிறார்கள். பெங்களூரிலுள்ள சிவன் கோயிலொன்றில் சிவனுக்குக் கடிதமே எழுதிப் போடலாம். அதற்கு இது தேவலாம்.
கோயிலில் தரிசனம் முடித்து வெளியே வரும் போது 12 மணியாகிவிட்டிருந்தது. பசி காதை அடைக்க ஆரம்பித்து விட்டது. சரவணபவன் என்ற போர்டைப் பார்த்த மாத்திரத்திலேயே உள்ளே போய்விட்டோம். சாப்பாடு வந்த பிறகு தான் தெரிந்தது, இது “ஹோட்டல்” சரவணபவன் இல்லை என்று. சாதம் வேகவேயில்லை. சாம்பார் என்ற பெயரில் ஏதோ செய்திருந்தார்கள். எவ்வளவு கூப்பிட்டும் டேபிளை சுத்தம் செய்யவில்லை. ரசத்தில் புளியை அரைத்து விட்டார்களா தெரியவில்லை. அப்படியும் கொடுத்த காசுக்கு நான் மட்டுமே உருப்படியாகச் சாப்பிட்டேன். காயத்ரியும் அம்மாவும் ஒழுங்காகச் சாப்பிடவில்லை. விதியை நொந்து கொண்டு கிளம்பினோம். கொடுமையென்னவென்றால் வெளியே வந்த பிறகு, இன்னொரு கோபுர வாசலில், ஒரிஜினல் ஹோட்டல் சரவணபவன். வாரியார் நக்கலாக சிரிப்பது போலிருந்தது.
வெயில் கண்ணைக் கட்டியதால் 30 படியேறி சிறு குன்றிற்கு மேலிருக்கும் கண்ணப்ப நாயனார் சன்னதிக்குப் போகவில்லை. கார் ஸ்டியரிங்கைக் கூடப் பிடிக்க முடியவில்லை. அவ்வளவு சூடு. தண்ணீரை காரில் வைத்திருந்த தண்ணீர் வெந்நீராக மாறியிருந்தது. கார் ஏ.சி அன்று தான் முழு வீச்சில் ஓடியது. மூன்றரை மணிக்கு வீடு திரும்பியாச்சு.
அவ்வளவு தூரம் போய்விட்டு திருப்பதிக்கும் ஒரு விசிட் அடித்திருக்கலாம். ஆனால் காளஹஸ்திக்குப் போய் விட்டு வேறெங்கும் செல்லக் கூடாது நேராக வீட்டுக்குத் தான் போகவேண்டுமாம். இது ஐதீகமா அல்லது 800 ஆண்டுகளுக்கு முன் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் நடந்த போராட்டத்தால், சைவர்கள் யாரும் திருப்பதிக்குப் போகாமலிருப்பதற்காகக் கட்டிவிடப்பட்ட கதையா தெரியவில்லை. “ஆண்டவன் தம்மி தரிசிக்க வருபவர்களுக்கு இப்படியெல்லாம் கட்டளையெல்லாம் இடவில்லை. அப்படி கண்டிஷன் போடும் கடவுள் நமக்குத் தேவையும் இல்லை” என்று காஞ்சி பராமாச்சாரியார் சொல்லிருக்கார். காயத்ரிக்கு சாமி விஷயத்தில் கேள்வி கேட்டால் பிடிக்காது. அதனால் தேமேயென்று வந்து திரும்பிவிட்டோம். (போன பதிவில் போட்ட புகைப்படத்துக்கேற்ப நடந்துக்க வேண்டாமா??)
பி.கு: இங்கு வரும் பெரும்பாலானவர்கள், ஸர்ப்ப தோஷ பூஜை செய்வதற்காகத் தான் வருவார்கள். அதனால் பூஜை செய்ய ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு ஏகப்பட்ட தரகர்கள் திரிகிறார்கள். சிலர் ஆந்திர அரசு அடையாள அட்டை வேறு வைத்திருக்கிறார்கள். இவர்களிடம் அண்டாதிருப்பது நல்லது. கியூவில் நின்று நாமே டோக்கன் பெற்றுக் கொண்டு பூஜை செய்துவிட்டு வெளியே வந்து விடலாம். எங்களோடு வந்தால், சீக்கிரமே பூஜை செய்து கொண்டு வெளியே வந்துவிடலாம், சுவாமியையும் அம்பாளையும் முதல் ஆளாக தரிசித்து விடலாம் என்றெல்லாம் சொல்கிறார்கள். எல்லாம் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு. எல்லோரையுமே வரிசைப் படி தான் அனுமதிக்கிறார்கள்.
7 comments:
பக்தி மணம் கமழுது:)
ராகு-கேது ஸ்தலம் தமிழ் நாட்டில் தானே இருக்கு ??? அங்கு போய் இருக்கிங்களா ???? இரவு நேரத்தில் அந்த கோபுரம் பார்க்கவே அழகாய் இருக்கும்.
அந்த கதையில அய்யரோட பக்திக்கும் கன்னப்பனோட பக்திக்கும் ஏதோ ஒரு மேற்கோள் வரும் ல..அது நல்ல இருக்கும்.
காளஹஸ்தி யை பற்றி ஏதோ புக் ல படிச்சு இருக்கேன். போனதில்லை.....
Siva Sambo :)
Kalahasthi is பரிஹார ஸ்தலம். You are not supposed to go anywhere after visiting such a place. Simple.
//சென்னை வந்ததிலிருந்து வாழ்வில் ஏதாவது மாற்றம் வந்திருக்கிறதா, என்று பார்த்தால், நம்ம பக்தி மார்க்கப் போக்கு கொஞ்சம் ஜாஸ்தியாகியிருப்பது தான்.//
நல்ல மாற்றம் தான்.
வடக்கிந்திய கோவில்களில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் இங்கு பணம் கொடுத்து சிறப்பு தரிசனம் கிடையாது. நம்மூர்க் கோவில்களில் நான் வெறுக்கும் விஷயங்களில் இது ஒன்று.
\\ வித்யா said...
பக்தி மணம் கமழுது:)\\
ஹாஹா :)
\\ டம்பி மேவீ said...
காளஹஸ்தி யை பற்றி ஏதோ புக் ல படிச்சு இருக்கேன். போனதில்லை.....\\
போய் வாருங்கள். பெரிய கோவில்.
\\Ravi said...
Siva Sambo :)\\
அன்பே சிவம் :)
\\ Mottai said...
Kalahasthi is பரிஹார ஸ்தலம். You are not supposed to go anywhere after visiting such a place. Simple.\\
பரிஹாரம் எல்லாம் மனசுக்குத்தான். சில ஜோசியர்கள் கிளப்பி விடுவது என்று நினைக்கிறேன். வேதத்தில் இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.
\\ குந்தவை said...
நல்ல மாற்றம் தான்\\
நன்றி :)
\\விக்னேஷ்வரி said...
வடக்கிந்திய கோவில்களில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் இங்கு பணம் கொடுத்து சிறப்பு தரிசனம் கிடையாது. நம்மூர்க் கோவில்களில் நான் வெறுக்கும் விஷயங்களில் இது ஒன்று.\\
இதற்காகவே நான் முடிந்த மட்டும் ஸ்பெஷல் கியூவில் போவதில்லை :)
Post a Comment