ஆஃபீஸ் நண்பன் உபயத்தால் கம்பக்த் இஷ்க் என்ற ஹிந்தி படம் DivX வடிவில் கிடைத்தது. போதாக்குறைக்கு காயத்ரியை வேறு கூட உட்கார்ந்து பார்க்கும்படி சொல்லிவிட்டேன். பம்மல் .கே. சம்பதத்தின் கதையை அப்படியே அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போய் ஏன் எடுத்திருக்கிறார்களோ??? அரை மணி நேரம் கழிந்தும் நகருவேனா என்கிறது படம். காமெடி என்ற பெயரில் படம் முழுக்க வீசுகிறது காமநெடி. படத்தில் தென்படும் அனைத்து பெண்களுமே பிகினியில் காட்சியளிக்கிறார்கள். ஜோக் என்ற பெயரில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள். கம்லஹசனும் மௌலியும் பார்த்தால் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் ள்வார்கள். பேசாமல் கமலே பம்மல் கே. சம்பத்ததையே டப்பிங் செய்திருக்கலாம்.
எனக்குத் தெரிந்து ஒரு படைப்பை மீண்டும் வேறொரு மொழியில் மீண்டும் அதை எடுக்கும் போது மிகுந்த கவனம் தேவை. ஏற்கனவே முதலில் வந்த படத்தைப் பார்த்து, அதன் பாதிப்பும் எதிர்பார்ப்பும் மீண்டும் எடுக்கப் பட்ட படத்தின் மீதும் ஏற்படும். ரீமேக் / டப்பிங் செய்கிறேன் பேர்வழி என்று சில அசல் படத்தை கொலை செய்கிறார்கள்.
என் நினைவில் முதலில் பார்த்த டப்பிங் படம் சங்கராபரணம். தமிழில் டப் செய்திருந்தார்கள். பாடல்களனைத்தும் ஏற்கனவே கேட்டுவிட்டிருந்ததால், தமிழில் கேட்கும் போது கேனத்தனமாக இருந்தது. இதற்கும் முதலில் தமிழ் பிரதையைத் தான் பார்த்தேன். பிற்பாடு தெலுங்கில் பார்த்தபோது தான் நிறைவு உண்டானது. இன்றும் சங்கராபரணத்தைப் பார்த்தால் சலிக்காது.
ஆனால் டப் செய்தாலும் அதன் அழகழியாமல் இருந்ததென்னவோ, சலங்கை ஒலி தான். உடைகள் மட்டும் சற்று வித்தியாசமாக இருந்தாலும் டப்பிங் வசனம், பாடல்கள், இசை, நாட்டியம் என எதிலுமே குறை சொல்ல முடியாது. எல்லோருமே தங்களது குரலிலேயே பேசியிருப்பது இன்னொரு காரணமாகக் கூட இருந்திருக்கலாம்.
ஹிந்தியிலிருந்து தமிழில் எடுக்கப்பட்ட வசூல் ராஜாவும் சரி, தமிழிலிருந்து ஹிந்தியில் எடுக்கப்பட்ட அலைபாயுதேவும் சரி, பார்க்கவே பிடிக்க்லை. சஞ்சய் தத் அப்படியே ஒரு தாதா போல் இருந்தார். கமலுக்கு என்ன தான் உடல் வாகு இருந்தாலும், ஒரு ரவுடியாகப் பார்க்க முடியவில்லை. முன்னாபாய்’இல், அந்த ஆஸ்பத்திரி டீனிடம் சஞ்சய் பேசும் அந்த casual dialogue delivery கமலிடம் மிஸ்ஸிங். என்னதான் சென்னைத்தமிழில் கலாய்த்தாலும், ஒரிஜினல் போல் வரவில்லை.
அலைபயுதேவின் பிளஸ்பாயிண்டே, இளமை ததும்பும் மாதவனின் சிரிப்பும், வசீகரிக்கும் ஷாலுவின் (அஜீத் மன்னிக்க. இப்படித் தான் ஷாலினியைக் கூப்பிடுவேன்) கண்களும் தான். விவேக் ஓபராய், ராணி முகர்ஜி, இருவரிடமும் அந்த இளமையும் வசீகரமும் சுத்தமாக இல்லை. அதிலும் நடராஜன் அடிக்கும் டைமிங் ஜோக்குகளை கொலை செய்திருப்பார்கள் ஹிந்தியில்.
அனில் கபூர் கிட்டத்தட்ட எல்லா பாக்யராஜ் படங்களையும் ரீமேக் செய்திருப்பார் என நினைக்கிறேன். பேடா மட்டுமே மாதுரி தீட்சித் உபயத்தில் பார்க்க முடிந்தது. மற்றதெல்லாம் சொல்லிக் கொள்ளும் படி ஒன்றுமில்லை.
சந்திரமுகி கூட மணிச்சித்ரதாழ் போலில்லை, என்பாள் காயத்ரி. நல்ல வேளை ஏக் துஜெ கேலியே போன்ற படங்களை தமிழில் எடுக்கவில்லை. ஹிந்தியிலேயே தமிழகத்திலும் வெளியிட்டு வெற்றிநடை போட்டது. தெலுங்கில் மனோசரித்ரா என்று ரீமேக் செய்தார்கள் என்று நினைக்கிறேன்.
தமிழிலேயே டப் செய்யப்பட்ட குரு பரவாயில்லை. அபிஷேக் முகம் தான் கொஞ்சம் அழுதமூன்ஞ்சியாக இருந்தது.
ஒரு படத்தை, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் எடுக்கும் போது, அந்தந்த மொழி கலாசாரம் என்பதற்கேற்ப கஸ்டமைஸ் செய்கிறார்கள். இந்தியாவில் வி்ற்பனையாகும் பீஸாவில் தந்தூரி சுவை கொண்டு வருவது மாதிரி. ஆனால் எனக்கென்னவோ, கஸ்டமைஸ் செய்யப்பட்ட பீஸாவும் பிடிக்கவில்லை, படங்களும் பிடிப்பதில்லை. அசலில் எடுக்கப்பட்ட படத்தை அப்படியே, அச்சு பிசகாமல் அப்படியே வேறொரு மொழியிலும் வெளியிட்டால் மக்கள் ரசிப்பார்கள் என்றே தோன்றுகிறது.
கன்னடத் திரைத்துறை வளரவேண்டும் என்பதற்காக பிற மொழிப்படங்கள் கன்னடத்தில் டப் செய்யக்கூடாது என்று கன்ண்ட ஃபிலிம் சேம்பர் தடை விதித்துள்ளதாம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?? விளைவு, ஒரிஜினல் படம் என்பதே கிடையாது. எல்லாமே, மற்ற மொழிகளிலிருந்து கதையைத் திருடி எடுக்கப்படும் படங்கள் தான்.
திரைத்துரையினருக்கு சில வேண்டுகோள்கள். முடிந்தவரை ஒரிஜினல் படங்களை எடுங்கள். ரீமேக் செய்யும் போது அந்தந்த ஊருக்கு ஏற்ற மாதிரி கஸ்டமைஸ் செய்யாமல் முடிந்தவரை ஒரிஜினலை பின்பற்றப் பாருங்கள். படம் துவங்குவதற்கு முன், அசல் படத்தின் தயாரிப்பாளர், மற்றும் இயக்குனர்களுக்கு ஒரு நன்றி டைடில் போடுங்கள். ஒன்றும் குறைந்து போய்விட மாட்டீர்கள்.