Pages

December 31, 2008

புத்தாண்டு சபதங்கள்

“இந்த வருடத்திலிருந்து உருப்படியாக என்ன செய்வதாக உத்தேசம்” என்று காயத்ரி கேட்டாள். “சபதமெடுக்க ஒரு நேரம் காலம் வேண்டாமா? புது வருடம் பிறந்ததும், ஒரு நல்ல நாளா பார்த்தா அதைப் பற்றி யோசிக்கலாம்” என்றால் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லை மேலிடம். ஜனவரி 1 அன்று எந்த ராகு காலம் யம கண்டமும் பார்க்க வேண்டாம், என்று சொல்லிவிட்டு, நான் மேற்கொள்ளவிருக்கும் புத்தாண்டு தீர்மானங்கள் என் சம்மதமே இல்லாமல் அதுபாட்டுக்கு நிறைவேற்றப் பட்டன.

தீர்மானம் 1:
உடம்பு எடையைக் குறைக்க வேண்டும்.
கல்யாணத்தின் போது 32’ஆக என் இடுப்பு சுற்றளவு இப்போது 34 ஆகிவிட்டது. வெட்டிவ்ம்பு படிக்கும் நல்லவர்களே, நீங்களே சொல்லுங்கள், இதில் என்னுடைய தவறு என்ன இருக்கிறது. கல்யாணத்திற்குப் பிறகு என்னவள் செயது போட்ட சமையலைச் சாப்பிட்டதன் விளைவு தானே உடம்பு ஏறியிருப்பதற்குக் காரணம். “நான் குண்டாகியிருப்பது உன் சமையலுக்கு நான் கொடுக்கும் காம்ப்ளிமண்ட் தானே” என்று சொன்னால் அதையும் ஒத்துக் கொள்ள மாட்டேங்கிறாள். நாளையிலிருந்து ஐந்தறை மணிக்கு அலாரம் அலறும் என்று வானிலை அறிக்கை மாதிரி அறிவிக்கிறாள்.

தீ்ர்மானம் 2:
அடிக்கடி கோபப் படக்கூடாது. டென்ஷன் ஆகக் கூடாது.
கோபத்தின் ரிஷி மூலம் நதி மூலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தோமேயேனால், நமக்குப் பிடித்த ஒருவர் நமக்குப் பிடிக்காத காரியத்தை செய்யும் போது ,கோபம் வருகிறது. இப்போது சொல்லுங்கள், நான் அடிக்கடி கோபப் படுகிறேனென்றால் அது எதனால், யாரால்? இதைச் சொன்னால், “அதெல்லாம் எனக்குத் தெரியாது. இனிமேல் தேவையில்லாமல் கோபப் படக்கூடாது” என்று இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 3:
உருப்படியாக வெட்டிவம்பு எழுதணும். சும்மா தங்கமணியை வாரி, நாலு பேரை நக்கல் அடிக்காமல் எழுதணும்.
இதைச் சொன்னதும், ”இது தான் நான் எழுதும் கடைசி பதிவு" என்று நினைத்து விட்டேன். நம்ம பதிவை நாலு படிக்கறதுக்கு முக்கிய காரணமே தங்கமணியை நக்கல் அடிப்பதால் தான். முதலுக்கே முடிவு கட்டினால் நான் என்ன செய்ய முடியும்? இதோடு நின்று விடாமல், “வெட்டிவம்பைப் படிப்பவர்கள் சிந்திக்கற மாதிரி எழுதணும்” என்றொரு உபரி தீர்மானமும் வேற, ஒரு அடெண்டமாக. “சிந்திக்கற மாதிரின்னா, புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமான்னு எழுதலாமா. எல்லாரும் மோட்டு வளையைப் பாத்துக் கிட்டு சிந்திக்க் ஆரம்பிச்சுடுவானுங்க” என்று சொன்னால் முறைக்கிறாள்.

தீர்மானம் 4:
மேலும் ஒரு புத்தகம் வாங்காமல் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடிக்கணும்
எனக்குள்ள ஒரு கெட்ட பழக்கம் ஒரு புத்தகம் படித்து முடிப்பதற்குள்ளாகவே இரண்டு புத்தகம் வாங்கிவிடுது. “அலமாரியெல்லாம் வழிந்து நிறைகிறது. எதை மேல வைக்கலாம் என்று கேட்டாலும், அதை இன்னும் படிக்கலை என்றால் எப்படி” என்று காயத்ரி கடிந்து கொள்கிறாள்.

பார்ப்போம், என் வி்ருப்பமில்லாமல் அவளாகவே நிறைவேற்றிக் கொண்ட எத்தனை சபதங்கள் அபத்தங்களாகின்றன என்று?

December 26, 2008

காணக் கண்கள் கோடி வேண்டும்

காலை 5.00 மணி. பெங்களூர் மார்கழிக் குளிரில் ஜாகிங் வாக்கிங் போகும் கடமை கண்ணாயிரங்கள் கூட இழுத்துப் போர்த்தி உரங்கும் நேரத்தில் நான் என்ன செய்கிறேன். மார்கழி மாசத்தில் அதிகாலையில் கோவிலுக்கு வரச் சொன்ன்னாள் அம்மா. அதிகாலையில் எழுந்து குளிரை எதிர்கொண்டு, ஸ்வெட்டர் மஃப்ளர் ஏதும் இல்லாமல் சில்லென்று அடிக்கும் காற்றில் நடந்து பெருமாளை சேவித்து வந்தோம். பெருமாளென்றால் சேவிக்கணும். சிவன் பிள்ளையார் முருகன் இவர்களையெல்லாம் கும்பிடணும்.

இதெல்லாம் நடந்தது ஒரு வாரம். ஒரே வாரம். அடுத்த வாரத்திலிருந்து, “அம்மா, நேற்று ஆஃபீஸிலிருந்து 12 மணிக்குத் தான் மா வந்தேன்” என்று இழுக்க, பிள்ளைக்காக பெருமாளைத் துரந்தது, பித்து மனம் கொண்ட தாய் மனது.

பெங்களூரில் எங்கள் வீட்டருகுலிருக்கும் இந்தப் பெருமாள் மட்டும் தான் அதிகாலையிலேயே எழுந்திருக்கிறார். IT மக்களால் பூஜிக்கப் பட்டு வரும் அருகிலிருக்கும் பிள்ளையாரை 7 மணி வரை யாரும் தொந்தரவு செய்வதில்லை.

சிறு வயதில், மார்கழி மாதத்தில் அம்மா வீட்டுக்கு முன்னால் பெரிய பெரிய கோலமெல்லாம் போடுவாள். ஒரே நேரத்தில் இரட்டை இழையில் கோலம் போடுவாள். ஸ்கேலே இல்லாமல் நேர்கோடுகளும் காம்ப்ஸ இல்லாம ஆர்க் வரைவதும், கோலப் பொடி அவள் இடும் கட்டளையை செவ்வன செய்யும். இம்மாதிரி கோலம் போடும் கலை இன்றைய தலைமுறை பெண்களிடம் அவ்வளவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவ்வப்போது தூங்கிய விழிக்க மறுக்கும் விழிகளோடு என் தங்கை செம்மண் இடுவாள். அம்மாவுக்குத் துணையாக வாசலில் காவல் காப்பது என் வேலை.

ஒரு கோஷ்டி கையில் ஜால்ரவெல்லாம் எடுத்துக் கொண்டு,
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

என்று பஜனை பண்ணிக் கொண்டு போகும். இவர்களோடு பஜனை பண்ணிக் கொண்டு போனால், பெருமாள் கோவிலில் சுடச் சுட வெண்பொங்கலும் பானகமும் கிடைக்கும். அதிகாலையில், அந்த துளசி நறுமணம் கமழ, லக்‌ஷ்மி பூமாதேவி சமேதராகப் பெருமாளை தரிசிக்க, ஆஹா காணக் கண்கள் கோடி வேண்டும்.

இப்போது மணி மீண்டும் 5.20. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிவடைந்து ஊரே நித்திரா தேவியை ஆரத்தழுவிக்கொண்டு உரங்கிக் கொண்டிருக்கும் வேளை. குளிர் இன்னம் கூடியிருக்கிறது. பாதரசம் சென்ற வாரத்தை விட இரண்டு இலக்கங்கள் கீழே இறங்கியிருக்கிறது. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?

ஆஸ்திரேலியாவிற்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் டையே பாக்ஸிங்க் டே டெஸ்ட் மேட்ச் நேரடி ஒளிபரப்பு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

கிழக்கே உதிக்கும் ஆதவன் உதயமாகத் தவறினாலும் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங்க் டே அன்று மெல்பேர்ன் நகரத்தில் டெஸ்ட் மேட்ச் நடப்பது தவறாது. எந்த நாடு அஸ்திரேலியாவிற்கு பயணிக்கிறதோ, அந்நாட்டோடு டிசம்பர் 26 மெல்பேர்ன் நகரத்தில் டெஸ்ட் மேட்ச் நடக்கும். மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் மெல்பேர்ன் கிரிக்கெட் கிரவுண்டில் டெஸ்ட் மேட்ச் பார்க்க, ஆஹா, காணக் கண்கள் கோடி வேண்டும்.

டிஸ்கி: இதுக்கு மட்டும் முழிப்பு வருமாக்கும் என்று அம்மா இடித்துக் காட்டுவது, பின்னாலிருந்து கேட்கிறது.

December 23, 2008

நியானும் மலையாளமும்

எனிக்கும் மலையாளத்துக்கும் நன்னாயிட்டு சம்பந்தமுண்டாக்கும். எனிக்கு நன்னாயிட்டு ஓர்மையுண்டு, எண்ட பாட்டி, அவளண்ட பால்ய காலம் கேரளாவிலே கழிச்சு. எண்ட தாத்தாவுக்கு கேரளத்தில் கஸ்டமர் உண்டு. எண்ட அச்சன் மூக்கைப் பிடித்துக்கொண்டு தமிழ் பரையெங்கில் அதே வல்லிய மலையாளமாக்கும். எண்ட குருவினண்ட பார்யாவுக்கு அம்பலபுழையாக்கும் சொந்த ஊர். எண்ட பார்யாவிண்ட நாடு ஆலப்புழை. இதாக்கும் எண்ட மலையாள சம்பந்தம்.

மலையாளிகளையும், தமிழை மலையாளத்தில் கலந்து தலையாளமாப் பரையும் தலையாளிகளை நியானும் எண்ட சிநெகிதனும் நன்னாயிட்டு களியாக்காம். மலபார் போலீஸண்ட ஒரு தமிழ்ப் படம். ஆ படத்தில் சத்யராஜ் நடிச்சு. அயாள் ஒரு கேரளா போலீஸ். அயாளெண்ட அசிஸ்டெண்ட் கௌண்ட மணி தன்ன. எடா, மலையாளி சத்யாராஜை அயாள் இந்தா இந்தா களிச்சு, எடா நியானும் எண்ட சிநேகிதனும் ஆ படம் கண்டுட்டு உருண்டு புரண்டு சிரிச்சு. ஆ படத்தை எந்த மலையாளி நோக்கினெங்கிலும், அவன் கௌண்ட மணியை கொன்னு களைஞ்சு.

சாரி சாரி, தமிழ் பேசும் நல்லார்கள் ஆன்றோர்கள் சான்றோர்கள் எல்லோரும் என்னை மன்னிக்கணும். இவன் என்னடா பெனாத்துறான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? காயத்ரி பேசுவதற்கு ஒரு காதைக் கொடுத்துக் கொண்டே எழுதினேனா எல்லாம் மலையாளமா வந்துவிட்டது. இது ஒரு மாதிரியான ஃபோபியாவோ? தங்கமணி பேசுவதைக் கேட்டாலே சிந்தனையெல்லாம் Malayalify ஆகிறதே நான் மட்டும் கேரளாவிலேயே செட்டில் ஆகியிருந்தால், ஐயோ, வெட்டிவம்பைப் படிப்பவர்கள் என்னைக் கூலிப் படை வைத்துப் போட்டுத் தள்ளியிருப்பார்கள்.

எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சக்தி மலையாளத்துக்கு உண்டு.
ஒரு எஃபக்ட் என்று கூடச் சொல்லலாம் அது என்ன? எந்த மொழி பேசுபவரானாலும், அயாள் (பார்த்தீர்களா, எழுதும் போதே மலையாளம் மூக்கை நுழைக்கிறது) அந்த ஆள் கேரளாவிலே செட்டில் ஆனால், அவர்கள் பேசும் மொழிக்கு ஒரு மலையாள மூலாம் பூசினது போலிருக்கும்.

நான் கொல்கத்தாவிலே இருந்த போது என் சக அரையாளன், பாலக்காட்டைச் சேர்ந்தவன். அவன், “சாமான்களை எப்படி கொண்டு போகப் போறே” என்று கேட்பதற்கு, “எடா, இந்த சாமானெல்லாம் எப்படியாக்கும் கடத்தப் போறாய்” என்பான். இவன் பேசுவதை தமிழ் தெரிந்த ஒரு மூன்றாவது மனிதர் கேட்டால் என்ன நினைப்பார். இவனுங்க ஏதோ கஞ்சா கடத்தப் போறாங்க போலிருக்கேன்னு நினைக்க மாட்டார். அவன் கூட ஒரு வருடம் இருந்து விட்டு நெல்லைக்கு வந்திருந்த போது, ஒரு ஆள் என்னிடம், “நீங்க மலையாளியா” என்றார். எனக்கு அப்படியே பத்திண்டு வந்தது.

என் நெருங்கின தமிழ் சிநேகிதன் ஒருவன் பெங்களூரிலிருந்து எரணாகுளத்திற்கு மாற்றலாகிப் போய் விட்டான். சமீபத்தில் அவனோடு தொலைபேசியில் பேசும் போது, “நியான் நியான், புவான் புவான்” என்று ஹார்ன் அடிப்பது பேசுகிறான். “டேய், ஏண்டா இப்படி பேசறே” என்றால், “எந்தா செய்யறது. அப்படியாக்கும் வரது” என்று மூக்கால் தலையாளுகிறான்.

தமிழில் நாம் பேசும் சில வார்த்தைகள் மலையாளத்தில் வேறொரு வார்த்தையாக உபயோகப்படுத்துவார்கள். எங்க பெரியம்மாப் பாட்டி கேரளாவிலே செட்டில் ஆனவங்க. அவங்க எங்க வீட்டுக்கு ஒரு தடவை வந்திருந்த போது, என் தங்கையிடம், “எடி, விளக்கைப் பார்க்கலியோடி. அது இன்னும் கத்தறது”. ”என்னது விளக்கு கத்தறதா” என்று பயந்தே போயிட்டேன். நாம அதுக்கு ஹாரனா ஃபிட் பண்ணி வச்சிருக்கோம்னு பார்த்தா, விளக்கு எரிவதைத் தான் கத்தறது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்படித் தான் இன்னொரு முறை ஒரு பையனை அவன் அம்மா வீட்டில் தேடிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பாட்டியிடம், பையனப் பார்த்தீகளா என்று கேட்டதற்கு, “அவன் கொல்லப்புறத்துல தணல்ல நிக்கறான்” என்றார். எல்லாரும் அடிச்சுப் பிடிச்சு, “ஐயோ, தீ ஏதாவது வந்துடுத்தா. பிள்ள தணல்ல நிக்கறான்னு சொல்லறாளே”ன்னு போய் பார்த்தா, அந்தப் பையன் வேப்ப மரத்து நிழலில் விளையாடிக் கொண்டிருக்கிறான். நிழல் என்பதற்குத் தான் தணல் என்று சொல்லுவார்களாம், கேரளாவுல. நல்லா சொன்னாங்க.

இதாவது பரவாயில்லை. ஒரு முறை காயத்ரி என்னிடம் வந்து “இன்னிக்கு ஊர்ல ஆத்துக்கு ஸ்கந்தன் வந்திருந்தானாம்.” ”யாரந்த ஸ்கந்தன்” என்று யோசிப்பதற்கு முன்பாகவே, “அவனோட சின்ன வயசுல கோவில் விசேஷத்துக்கு கூட்டிண்டு வந்திருந்தப்போ, நம்பாத்துல தான் இருந்தான். இந்த வருஷம் கோவில் விசேஷத்துக்கு நம்பாம் வழியா நடந்து போயிண்டிருந்தப்போ தானாவே காம்பவுண்டுக்குள் வந்துட்டானாம்” என்று புல்லரித்துப் போய்ச் சொன்னாள்.

யாரடா இந்த ஸ்கந்தன். சரி, அப்படியே அவன் வந்திருந்தாலும் அதுக்கு ஏன் இவ்வளவு புல்லரித்துப் போகணும் என்று நியானும் குழம்ப, மேலும் சொன்னாள், “இன்னிக்கு அம்மா அவனுக்கு பெரிசா இரண்டு வாய் உண்டக் கட்டியும் வெல்லமும் கொடுத்தாளாம்” என்றாள்.
”யாருடீ இந்த ஸ்கந்தன்” என்றேன். ”ஐயோ பக்கத்து ஊர் கோவில் ஆனையாக்கும்” என்றாளே பார்க்கலாம். வாயடைத்துப் போய் விட்டேன்.

இதே போல் ஒரு முறை, எனக்குத் தெரிந்த ஒருவர் கேரளாவிலுள்ள உறவினர் வீட்டுக்குப் போயிருக்கிறார். உறவினர் மருந்துக் கடை வைத்திருந்தாராம். மருந்து வாங்க வந்த ஒருத்தன், “கேசவனுக்கு பனியாணு (கேசவனுக்குக் காய்ச்சலாம்). நூறு க்ரோஸின் இல்லெங்கில் நூறு பாராசிடமோள் குடுக்காம்” என்றானாம். கடைக் காரர் பயந்து போய், “நூறு பராசிடமோள் கழிச்செங்கில் அயாள் மரிச்சு போகும். அயாள் எவட?” என்றார். மருந்து வாங்க வந்தவன், மீண்டும் அதே பல்லவியைப் பாடியிருக்கிறான். இதைப் பார்துக் கொண்டிருந்தவர், “அந்த ஆள் எங்கே” என்று கேட்டிருக்கிறார். அதற்கு மருந்து வாங்க வந்தவன், ”கேசவன், இவட வர மாட்டான்.” என்றான்.
”ஏன்” என்றதற்கு “அவன் ஆனை” என்றானாம்.

மலையாகளின் மிருகங்கள் மேலுள்ள பரிவை என்னவென்று புகழ?

ஆஃபீஸிலிருந்து லேட்டாப் போனால் என்ன காரணம் சொன்னாலும், காயத்ரி “நியான் இதை விஷ்வசிக்கணுமா” என்கிறாள். குப்பையாக ஒரு இடம் இருந்தால், அவள் அதிகாரியில், அது, ”ஒரு விருத்தி கெட்ட ஸ்தலம்”. ஏதாவது கேலி செய்தால், “களியாக்க வேண்டா” என்பாள். இண்டரஸ்டிங்காக கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தால், “களி தீர்ந்ததா” என்பாள். முந்தைய களிக்கும் இந்த களிக்கும் என்ன வித்தியாசமோ?

தனது மலையாளத் தோழியிடம் பேசும் போது, “நாட்டில் எல்லோரும் சுகம் தன்னே” என்று வினவுவாள். “ஆஹா வீட்டிலுள்ளவர்கள் மட்டும் சுகமா என்று கேட்காமல் நாட்டிலுள்ளவர்கள் பற்றி விசாரிப்பதைப் பார்க்கும் போது, “எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா” என்ற அழகன் பாட்டுத் தான் ஞாபகம் வருகிறது.

ஆக இப்படியாக நியானும் மலையாளத்தோடு உறவாடிக் கொண்டிருக்கிறேன். My Tryst with Malayalam continues.

டிஸ்கி: யப்பா யாரும் வுட்டுக்கு போன் போட்டு நான் இப்படியெல்லாம் எளுதியிருக்கேன்னு சொல்லிப்புடாதீங்க. பயமெல்லாம் ஒண்ணும் இல்ல, இருந்தாலும்...... ஒரு முன்னெச்சரிக்கை அறிக்கை.

December 22, 2008

பட பட பட்டாம்பூச்சி



பட்டாம்பூச்சி விருது கொடுத்த திவ்யப்ரியாவிற்கு கோடானு கோடி நன்றிகள். எனக்கு புக்கர் ப்ரைஸ் கிடைத்த உணர்வு. இந்த விருதை மூன்று பேருக்கு கொடுக்கலாம் என்று தேர்வு செய்திருக்கேன். புதிய பிளாகர்களை ஊக்குவிக்கும் வகையாக (நேரம், இவனெல்லாம் நம்மளை ஊக்குவிக்கணும் என்கிறது நம்ம தலையழுத்து நினைத்தாலும் நினைக்கலாம்) இதோ நான் தேர்ந்தெடுத்திருக்கும் மூன்று பேர் இதோ:


பூர்ணி்மா சரண் - சாரல் என்ற பெயரில் வலைப்பூ எழுதுபவர். ரொமாண்டிக் கவிதைகள் எழுதி அசத்துபவர்.

வானவில் வீதி கார்த்திக் - சென்னை வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு மாணவர்.

கொஞ்சம் லொள்ளு நிறைய ஜொள்ளு சிந்தும் கார்த்திக் - ஆங்கிலததிலும் பட்டையைக் கிளப்பும் இவரது வலைப்பதிவு.

ஏண்டா வெண்ணை, எங்களுக்கெல்லாம் கிடையாதா என்று போன தடவை அவார்ட் வாங்கினவர்கள் தப்பாக நினைக்க வேண்டாம்.

December 18, 2008

என்று முடியும் இந்த....

எப்படித் தான் இந்த மெகா சீரியல்களைக் கண் கொட்டாமல் பார்க்கிறார்களோ, என்று நினைத்துக் கொண்டிருந்த நான், இப்போது வேறு வழியில்லாமல் அந்த கருமாந்திரத்தையும் பார்த்துத் தொலைக்க ஆரம்பித்து விட்டேன்.

ஆஃபீஸ் முடிந்து 7 மணிக்கு மேல் வந்தால் ஆனந்தம் என்ற பெயரில் சோகமே உருவான முகங்களுடன் ஓடுகிறது ஒரு மெகா சீரியல். எத்தனை வருடங்களாக ஓடுகிறதென்று தெரியவில்லை. முடிவு கண்ணில் தெரிவதாக இல்லை. சுகன்யாவிற்கு இரண்டாவது இன்னிங்க்ஸ். ரிடையர்ட் ஹர்ட் ஆனால் நன்றாக இருக்கும்.

எட்டு மணிக்கு மேல் வந்தால் ”திருமதி.செல்வம்” ஓடுகிறது. ஒரு வருடத்திற்கு முன்னால் ஒரு நாள் இந்த சீரியலைப் பார்த்த போது (வேண்டாம் என்று போனாலும் அதுவாக வந்து காதில் விழுந்த ஒரு மாலைப் பொழுது) திருமதி.செல்வமாகப் போகும் பெண்ணை பெண் பார்க்கும் எபிசோட். அந்தப் பெண் பாவம், வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு மாங்கு மாங்கு என்று வேலை செய்வாள். முகத்தை பாவமாக வைத்துக் கொள்வாள். அவள் அம்மா அப்பாவைத் தவிர வீட்டிலுள்ள அனைவருக்கும் இவள் ஒரு பெரிய பாரம்.

இவள் கல்யாணம் செய்து கொண்டு இன்னும் எத்துணை கஷ்டங்களை அனுபவக்கிறாள் என்பது மீதி இரண்டு வருடங்களுக்கு ஜவ் மிட்டாய் போல் இழுக்கப் போகிறார்கள் என்று அன்றே தெரிந்து விட்டது. அன்றுள்ள எபிசோடில் அவளைப் பெண் பார்க்க வரும் பையன் இவளை நிராகரிக்கப் போகிறான் என்று ஆரூடம் சொன்னேன். பின்ன, அவளைப் பெண் பார்க்க வந்த பையன் பெயர் செல்வம் இல்லையே! அதன் பின் அவளை எவ்வளவு பேர் வந்து நிராகரித்தார்களோ, தெரியவில்லை. இப்போது தான் கல்யாணம் ஆகியிருக்கிறது. இன்னும் இவள் படப் போகும் அல்லல்கள் வரவில்லை. அதெல்லாம் முடிவதற்குள் 2011 உலகக் கோப்பை முடிந்து விடும்.

8 மணிக்கு மேல் கிளம்பி, டிராஃபிக்கில் சிக்கி சின்னாபின்னமாகி வீட்டுக்கு 8.30 மணிக்கு வந்தால் கலசம். ரம்யா கிருஷ்ணன், சீரியல் உலகத்திற்கு சினிமாவிலிருந்து வந்த லேட்டஸ்ட் வரவு. சுதா சந்திரனை காண சகிக்கலை. யாராவது அவர் வீட்டு முகவரி தெரிந்தால் அந்தப் பக்கமே போகாமல் இருக்கலாம்.

ஆஃபீஸில் வேலை அதிகமாயிருந்து 9 மணிக்கு வந்தால் கோலங்கள். இதற்கு பேசாம ஓலங்கள் என்று பெயர் வைத்திருக்கலாம். யாராவது அழுது கொண்டே இருக்கிறார்கள். ”ஐயோ பாவமே. ஒரு பொண்ணுக்கு இவ்வளவு கஷ்டங்களா”ன்னு பார்ப்பவர்கள் எல்லோரும் சொல்லணும் என்பது தான் இயக்குனரின் திட்டமோ என்னவோ. தேவ்யானிக்கு பேரக் குழந்தை பிறந்தாலும் கோலங்கள் முடிவடைவதாகத் தெரியவில்லை.

ஆஃபீஸில் பிழிந்தெடுத்து அப்பாடா என்று வீட்டுக்கு 9.30 மணிக்கு மேல் வந்தால் முறைத்து முறைத்துப் பார்க்கும் அரசி். 9.30 மணி ஸ்லாட்டை ராதிகாவிற்கு சன் டி.வி நிறுவனம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. தொண தொணன்னு ஏதாவது பேசிக்கொண்டே இருக்கும் சிங்கபெருமாளைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. ராதிகாவின் எல்லா படைப்புகளிலும் தலை காட்டிவிடும் அஜய் ரத்னம் எப்போதும் ஒரு மஞ்சளோ பிங்கோ, சிகப்பு கலரில் சட்டையும் சம்பந்தா சம்பந்தம் இல்லாத டையும் கட்டிக் கொண்டு முகத்தை இருக்க வைத்துக் கொண்டு, யப்பா, எப்படித் தான் முடிகி்றதோ!!??

சினிமா போதாதென்று இப்போது சீரியலிலும் டபுள் ஆக்ட் கொண்டு வந்ததெல்லாம் கொஞ்சம் ஓவர். அதிலும் இரண்டு ராதிகாவையும் ஒரே ஷாட்டில் காட்டி விட மாட்டார்கள்.

இந்த சீரியல்களை விட அதற்கு பின்னணி இசை தான் ரொம்ப கொடூரம். ”பாங்க ப்பாங்க்” என்று டிரம்பெட்டை காதில் ஊதுவது தலைவலியைத் தான் ஏற்படுத்துகிறது. ஒரு சில சீரியல்களை அம்ருதாஞ்சன் தான் ஸ்பான்ஸர் செய்கிறார்கள். என்ன பொருத்தம்!!

ஏதோ விஜய் டி.வி.யில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 9-10 மணிக்கு வருவதால் கொஞ்ச நாட்களாக இந்த சீரியல் தொல்லை ஒரு மணி நேரம் குறைந்திருக்கிறது அதுவும் இப்போது கடைசி்க் கட்டத்தை நெருங்கி விட்டது. இரண்டு வாரங்களில் முடிந்து விடும். இந்நிகழ்ச்சியைத் திரையிடும் விஜய் டி.வி.யிடம் ஒரு வேண்டுகோள். முடிந்த வரைக்கும் இதற்கு முந்தைய எபிசோடுகளை மீண்டும் ஒளிபரப்புங்கள். திரைக்குப் பின்னால் நடந்த காட்சிகள், ரீ-டேக்குகள், சின்மயி காம்பியர் செய்த போது செய்த பிழைகள், லைட்டர் மொமெண்ட்ஸ் அது இதுன்னு ஒரு இரண்டு மூன்று மாசத்திற்கு இழுத்தடிக்கவும். அதற்குள்ளாகவே அடுத்த சூப்பர் சிங்கர் போட்டி ஆரம்பித்து விடலாம். முடிந்தால் அடுத்து ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டி வைக்கவும். விக்னேஷும் கி்ருஷ்ணமூர்த்தியும் பாடிய பாட்டுக்கள் இன்னும் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கின்றன.

அதற்குள் இந்த சீரியல் கருமாந்திரஙகளெல்லாம் முடிந்து விட்டால் நிம்மதியாக இருக்கும்.

லஷ்கர்-ஏ-தொய்பா, ஜம்மாத்-உத்-தாவா, .எல்.டி.டி.ஈ போன்ற அமைப்புகளை தடை செய்த மாதிரி இந்த சீரியல்களைத் தடை செய்தால் நாடு சுபிட்சம் அடையும்.

என்று முடியும் இந்த மக்களின் சீரியல் மோஹம்!!

டிஸ்கி1: விஜய் டி.வி. ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளும் எனக்குப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.

டிஸ்கி2: சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்ததற்கு பதிலாக ஏதாவது மெகா சீரியல் இயக்குனர் கை காலில் விழுந்து சான்ஸ் வாங்கியிருந்தால் சந்தோஷியுடனோ ப்ரீதியுடனோ ஜோடி நம்பர் 1 ஆடிக்கொண்டிருக்கலாம்.

December 08, 2008

வாரணம் ஆயிரம்

ரொம்ப நாளா இதோ வரேன் அதோ வரேன், வரப்போகிறேன் என்று ஜூட் விட்டுக் கொண்டிருந்த வாரணம் ஆயிரம் படத்தை பார்க்க நானும் காயத்ரியிடம், இந்த வாரம் போகலாம் அடுத்த வாரம் போகலாம் என்று தாக்காட்டிக் கொண்டிருந்தது நேற்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இன்று படம் பார்க்கலைன்னா காலவரையற்ற போராட்டம் என்று அறிவித்தபின் என்ன தான் செய்ய முடியும்.

காலையிலேயே போராட்டம் ஆரம்பிக்கும் கிரக நிலைகள் தெரிந்ததால், பிருந்தாவனில் சாப்பிட்டுவிட்டு , லிடோவில் படம் பார்க்கலாம் என்று முடிவானது. 12.45 மணி ஷோவுக்கு 12.44 மணிக்குத் தான் பிருந்தாவனிலிருந்து புறப்பட்டோம். முன்னோரு நூற்றாண்டில் பிருந்தாவனிலிருந்து லிடோ போவதற்கு 5 நிமிஷம் தான் ஆகும். ஆனால் இப்போது பெங்களூரில் பூகோளமே மாறிய பிறகு தியேட்டரைப் போய்ச் சேர 15 நிமிடங்கள் ஆகிவிட்டது.

போறாக் குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்றொரு பழமொழியுண்டு. அதற்கேற்ப ஒரே ஒரு டிக்கட் தான் இருக்கிறது என்று தெரிய வந்தது. அம்மணிக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைத் தணிக்க வேறென்ன செய்ய முடியும். அங்கிருந்து 10 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் Innovative Multiplex'க்கு சென்றோம். 1.30’க்கு ஷோ. இவ்வளவு rash'ஆக கார் ஓட்டினதில்லை. நல்ல வேளை அங்கே டிக்கட் கிடைக்க முதலிலிருந்து படம் பார்க்க முடிந்தது.

உலகமே பார்த்து முடித்து விட்ட பிறகு படத்தின் கதையைச் சொல்ல நான் என்ன கேனையனா? தசாவதாரத்தை விட இப்படத்தில் சூர்யா அதிக கெட்-அப் களில் வருகிறார். அதிலும் பள்ளி மாணவனாக வரும் இடத்தில் அவர் உழைப்பு தெரிகிறது. ஒரு 35 வயது நிரம்பிய மனிதரை 15-16 வயது மாணவனாக மாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இந்த ரோலுக்கு டூப் கேட்டிருந்தால், நானே போயிருக்கலாம் என்று சொன்னால் காயத்ரி முறைக்கிறாள்.

சமீரா ரெட்டி சுடிதாரில் ஏமாற்றினாலும் ஜீன்ஸில் நன்றாகவே இருக்கிறார். என்ன உயரம் தான் கொஞ்சம் ஜாஸ்தி. அசினைப் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அசினுக்கும் சூர்யாவிற்கும் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி நன்றாக ஒத்துப் போவதால் இனி அவர் சூர்யாவுடன் ஜோடி சேர ஜோ தடை விதித்திருப்பதாக உளவுத்துறை செய்தித் துறை தெரிவிக்கிறது. (தீவிரவதிகள் பற்றி சரியாக உளவு செய்யாத துறை, இனி இது போல் செய்திகள் வெளியிட்டாலாவது உருப்படியாக இருக்கும்.)

படத்தில் நிறைய ஸ்வாரஸ்யமான வசனங்கள். சூர்யா அமெரிக்கன் கன்சுலேட்டில் விசா இண்டர்வியூவில் பேசுவது, சமீரா ரெட்டி வீட்டுக்குப் போய், ”இந்த ஊர்ல படிச்சு, இங்கேயே வேலை பார்த்து, இங்க டேக்ஸ் கட்டினால், நம்ம ஊரு நல்லா இருக்கும். நானும் நல்லா இருப்பேன்ல” என்று வழிகிற காட்சி, ரயிலில் சமீராவைப் பார்த்ததும் கிடார் எடுத்துக் கொண்டு என் இனிய பொன் நிலாவே பாட்டு பாடுவது, இப்படி ஸ்வாரஸ்யமான விஷயங்கள் நிறைய.

சூர்யா தங்கையை சற்று Out of Focus'லேயே காட்டியிருந்தாலும் நன்றாகவே இருக்கிறார். சீரியலில் ரொம்ப கண்ணைக் கசக்காமல் இருந்தால் நாலு பேர் இவரைக் கவனிக்கலாம்.

ரம்யாவோ, திவ்யாவோ, என்ன பெயராக இருந்தாலென்ன, நல்ல தேர்வு. படத்தில் தொய்வு ஏற்படும் போது, பாலைவனத்து ரோஜாவகப் பூத்து, என்னைப் போன்ற இளந்நெஞ்ஜங்களில் T20 ஆடுகிறார். ஒரு நல்ல பாட்டு கொடுத்திருக்கலாம்.

சிம்ரன் பற்றி சொல்லவில்லையென்றால் தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்கவே மன்னிக்காது. தனது பாத்திரத்தை அறிந்து செய்திருக்கிறார். முன்னாள் கனவுக்கன்னியாக இருந்தோமே, இப்படி ஒப்பனை போட்டு கிழவியாக மாற்றிவிட்டார்களே என்று அவர் நினைக்கக்கூடும். ஆனால் பாத்திரத்திக்கேற்ப கலைஞர்களை மாற்றுவதில் தான் ஒரு இயக்குனரின் வெற்றி ஒளிந்திருக்கிறது. அந்த வகையில் கௌதம் மேனன் வெற்றியடைந்திருக்கிறார். ஆனானப் பட்ட கமல்ஹாசனையே தன்னிஷ்டம் போல் இயக்கிவராச்சே.

படத்தின் பெரும் பலம் இசை. சூர்யாவை கிடாரிஸ்டாகக் காட்டுவதால் கிடாரை நன்கு உபயோகப்ப்டுத்தியிறார் ஹாரிஸ் ஜெயராஜ். பாட்டுக்களும் படத்தோடு பயணிக்கின்றன. எடுத்து விட்டோம் இங்கே சொருகி விடுவோம் என்ற ரகத்தில் எந்தப் பாட்டும் இல்லை. கௌதமுக்கும் ஹாரீசுக்கும் சண்டையாம். பிரிந்து விட்டார்களாம். அடுத்த படட்தில் ரஹ்மான் தான் இசையமைக்க்ப் போகிறாராம். Why would all beautiful things in the world come to an end? மீண்டும் இருவரும் இணை சேர பிரார்த்திப்போம். This pair complements each other very well. ரஹ்மான் ஷங்கர் மணிரத்னம் தவிர யாருக்கும் உருப்படியாக இசையமைத்ததில்லை. கௌதம் தவிர யாரும் ஹாரீசுக்கு Operating Freedom கொடுத்ததில்லை. இதை இருவரும் உணர்ந்தால் நல்லது.

படம் ரொம்ப மெதுவாகப் போகிறது. தவமாய் தவமிருந்து போலிருக்கிறது என்று பல விமர்சனங்கள். இருக்கலாம். இரண்டுமே தந்தைகளுக்காக அர்ப்பணிக்கப் பட்ட படம். ஆனால் எந்தவொரு இடத்திலும் கூட ஒன்றில் மேல் இன்னொன்றின் சாயல் இல்லை. ஆங்கிலத்தில் நிறைய உரயாடல்கள், இந்தப் படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு கொடுக்கக் கூடாது என்று கூச்சல் போடும் ஆட்டு மந்தைகளுக்கு நல்ல ரசனை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அருமையான ஆஹா ஓஹோ படமாக இல்லாவிட்டாலும், சூர்யாவின் உழைப்பிற்காகவும், ஜீன்ஸ் போட்ட சமீராவிற்காகவும், திவ்யாவிற்காகவும், முன் பாதி சிம்ரனுக்காகவும், இன்னொரு முறை இப்படத்தை low cost budget’ல் பார்க்கலாம் என முடிவு செய்திருக்கிறாள் காயத்ரி. எதற்காக இன்னொரு அறிவிக்கப்படாத காலவரையற்றப் போராட்டத்தை சந்திக்க வேண்டும். போனால் போகிறது. முடிந்தால் அடுத்த வாரம் பார்த்துத் தொலைப்போம்.

December 01, 2008

ஜொள்ளெனப் பெய்யும் மழை

இரண்டு மூன்று நாட்களாக தீவிரவாதிகள் மேல் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த ராணுவத்தினரையும், தீப்பிடித்தெரியும் தாஜ் மஹல் ஹோட்டலையும் பார்த்து, இரவில் படுத்தால் தூக்கமே வரவில்லை. கண்ணை மூடினாலே துப்பாக்கிச் சத்தமும், ஸ்ரீநிவாசன் ஜெயினும் பர்கா தத்தும் தான் கண் முன் நிற்கிறார்கள். சரி, இந்த வயிற்றெரிச்சல் சமாசாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தால், குருதிக்கொதிப்பு தான் அதிகமாகிறது. அதைக் குறைப்பதற்கான வழியைத் தேடலாமென, அருகிலிருக்கும் டி.வி.டி கடைக்குப் போய், ஏதாவது உருப்படியாக இருக்கிறதா என நோட்டம் விட்டேன்.

வீட்டம்மா வெகு நாட்கள் நச்சரித்து மௌன விரதமிருந்து பிடிவாதம் பல பிடித்தும் "போக முடியாது” என்று மறுத்த "பச்னா ஏ ஹஸீனோ"
என்ற ஹிந்தி படம் கண்ணில் பட்டது. (ஹிந்தியே கூடாது, தமிழ் வாழ்க என்று கோஷம் போடுபவனல்ல நான். ஏனோ, ரன்பீர் கபூரை பிடிக்கவில்லை. தீபிகா படுகோன் போயும் போயும் இவனுக்கு கெர்ள் ஃப்ரெண்டாக இருக்கிறாளே என்ற காண்டாகக் கூட இருக்கலாம்) போனால் போகிறது, வேறொன்றும் உருப்படியாக இல்லையே என்ற ஆதங்கத்தோடு அதை எடுத்துப் போனேன்.

புத்தம் புது படம், நல்ல ப்ரிண்டாகவும் இருந்தது இரட்டிப்பு சந்தோஷம். அதுவும் சப்-டைடிலோடு இருந்ததனால் என்ன பேசறாங்க என்ன சொல்லறாங்க என்ற வீட்டம்மாவின் நச்சரிப்பு இல்லை.

நாயகனுக்கு இந்தப் படத்தில் செம ப்ளே பாய் ரோல். படத்தில் மூன்று நாயகிகள். எடுத்தவுடன் ஜில்லென்ற சுவிட்ஜர்லாண்டில் ஆரம்பிக்கிறது கதை. இரண்டு பெண்களை காதலிப்பது போல் நடித்து, பிறகு அவர்களிடமிருந்து தப்பித்து விடுகிறார் இந்த ப்ளே பாய் நாயகன். ஆஸ்திரேலியா போய் அங்கே, நிஜமாகவே ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு, அவளிடம் காதலைத் தெரிவிக்கையில்,
அவள் காதலை நிராகரிக்கிறாள். அப்போது தன்னால் புண்பட்ட மனங்களின் வேதனையை அறிந்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்க அவர்களைத் தேடிப் போய் படத்தின் இரண்டாம் பாதி தொடர்கிறது.

படத்தில் அங்கங்கே தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே வாடை அடிக்கிறது. படத்திலேயே நாயகன் DDLJ ஷாருக் கான் போல் சேஷ்டை செய்கிறேன் என்று சொல்வது ரசிக்கத்தக்கது. படம் கடைசி வரை போரடிக்காமல் இருக்கிறது. ரன்பீர் கபூர் கொஞ்சம் ஷாருக் கான் போல் செய்ய பிரயத்தனப் பட்டிருக்கிறார்.

ஆனால் படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருப்பது தீபிகா படுகோன். (Note the Point, அவர் கதாபாத்திரம் பிடித்திருக்கிறது என்று சொல்லவில்லை)

சில நடிகைகள் அழகு சொட்டுவார்கள், ஆனால் திரைப்படத்தின் கதா பாத்திரத்தோடு ஒத்துப் போக மாட்டார்கள். ஐஷ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், தியா மிர்ஜா இந்த ரகம் தான். நல்ல வசீகரிக்கும் அழகு, ஆனால் திரையில் தோன்றினால் எதிலுமே ஒட்டாத ஒரு celluloid முகம். அசின் கூட பாலிவுட் போன பின் இந்த லிஸ்டில் சேர்ந்து விடுவாரோ என்று அச்சமாக இருக்கிறது. சில
நடிகைகள் இருக்கிறார்கள், அவ்வளவு அழகு என்று சொல்ல முடியாது. ஆனால் திரையில் தோன்றினால், பார்ப்பவர்களையெல்லாம் தன் பக்கம் பார்க்கும் படி செய்யும் திறன். காஜோல் மற்றும் சிம்ரன் ஏன் அந்தக் காலத்து சாவித்திரி சரிதா கூட இந்த ரகம் தான்.

இவர்களுக்கு இருக்கும் screen presence முதலில் குறிப்பிட்ட நடிகைகளுக்குக் கிடையாது. இன்னொரு ரகம் உண்டு. நல்ல வசீகரிக்கும் அழகு மற்றும் படம் பார்ப்பவரையும் தன் பக்கம் ஈர்க்கும் திறன். ஸ்ரீதேவி, பத்மினி, ஜெயலலிதா, வைஜெயந்தி மாலா, மாதுரி தீக்‌ஷித் போன்றவர்கள் இந்த ரகம். ’கஜினி’ அசின் கூட இந்த ரகம் என்று சொல்லலாம். தீபிகா படுகோனும் இந்த ரகம் தான்.

சிங்காரவேலன் கமல் மாதிரி சொல்ல வேண்டுமானால், “அது... அது வந்து ... நல்லாவே இருக்காம்மா!. ஓஒஹோ” என்று பெரிய ஓ

போடலாம். தீபிகாவிற்காகவே அவர் வரும் காட்சிகளை இன்னொரு முறை பார்த்தேன். அதற்கு மேல் வீட்டம்மா பார்க்க விடவில்லை.

ஆனால் எனக்கும் எனக்குப் பிடித்த நடிகைகளுக்கும் ஒரு ஏழாம் பொறுத்தமுண்டு. முதலில் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத போது,
அவர்கள் மார்க்கெட் ஆஹா ஓஹோ வென்று இருக்கும். நடிப்பதென்னவோ, கேவலமான படங்களென்பதால், நான் அவற்றை பார்க்க மாட்டேன். திடீரென ஒரு நல்ல படத்தில் தோன்றி, என்னை அவர்களது முழுமுதல் விசிறியாக மாற்றிய பின் அவர்களது அடுத்த படத்தை எதிர் நோக்கினால், மார்க்கெட் இழந்து போவார்கள், இல்லை ஏதாவது கிசு கிசுவில் சிக்கி சின்னாபின்னமாவார்கள், இல்லை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிடுவார்கள்.

இப்படித் தான் சுகன்யாவை முதலில் எனக்குப் பிடிக்கவில்லை. (ஹலோ என்ன என் ரசனை இவ்வளவு மட்டமான்னா பார்க்கறீங்க. சுகன்யாவுக்கு கமலே உம்மா கொடுத்தவராக்கும்) மஹாநதி பார்த்த பிறகு சுகன்யாவை ரொம்பவே பிடித்த்ப் போனது. அவரது பேட்டி, நடனம் என்று எது எந்தப் பத்திரிகையில் வந்தாலும், தேடித் தேடிப் படித்தேன், பார்த்தேன் ரசித்தேன். அவரது அடுத்த படத்தை எதிர் நோக்கினால், அந்நாள் அமைச்சருடன் கிசுகிசுக்கப்பட்டு மார்க்கட் இழந்து போனார்.

ஹம் ஆப்கே ஹைன் கௌன் வந்த பிறகு தான் மாதுரி எனக்குப் பிடிக்கலானார். ஆனால் அதுவே அவரது கடைசி வெற்றிப் படமானது.

சிம்ரன் ஃபீல்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் கழித்துத் தான் எனக்குப் பிடிக்கலானார். வாலி வார்த்து விட்டு சிம்ரன் பைத்தியமாகி விட்டேன். இன்றளவும் சிம்ரன் என்றால் ஒரு தனி இது தான். கமலோடு இரண்டு படங்கள் செய்து உச்சாணிக் கொம்பில் இருந்த போதே கல்யாணம் செய்து கொண்டு ஓடிப் போய்விட்டார்.

கஜினி பார்த்து விட்டு அசின் விசிறியானேன். எவ்வளவு அட்டுப் படமாக இருந்தாலும் பரவாகயில்லை என்று ஆழ்வார் முதற்கொண்டு
பார்த்தேன். அசினுக்காக எம்.குமரனில் ஜெயம் ரவியின் காட்டுக் கூச்சலைப் பொறுத்துக் கொண்டேன். தசவதாரம் எப்போதடா ரிலீஸாகும் என்று ஆஸ்கர் ரவியைவிட நான் டென்ஷன் ஆனேன். ஆனால் பாருங்கள், எல்லாருக்கும் டாடா காட்டிவிட்டு, இந்திக்குப் போய் விட்டார்.

ஆனாலும் God is Great. வெற்று நிலமாய்க் கிடந்த என் மனத்தில் தீபிகா படுகோன் என்ற பூந்தோட்டத்தையே உருவாக்கியிருக்கிறார். முதல் படமான ஓம் ஷாந்தி ஓமில் ஷாருக் கான் செய்த கொடுமையால் தீபிகாவையும் பிடிக்காமல் போயிற்று. ஆனால் பச்னா ஏ ஹஸீனோ பார்த்த பிறகு இவருக்கு பரம விசிறியாகி விட்டேன். என்ன ஒரே கொடுமையென்றால் நான் இவருக்கு விசிறியாவதற்கு முன்னாலேயே இவர் ரன்பீர் கபூரோடு கிசு கிசுக்கப்படுகிறார். பார்ப்போம், தீபிகா என் மன வானில் எத்தனை நாள் வட்டமடிக்கிறார் என்று.

டிஸ்கி: கன்னடத்திலும் ஓரிரு படங்கள் செய்திருக்கிறார் என்று கேள்விப் பட்டேன். அது எவ்வளவு பெரிய ஈத்தர படமானாலும் பார்த்துடணும் என்ற முடிவிற்கு வந்து விட்டேன்.