மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 1
மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 2மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 3
எனக்கு வேணும் சன் டைரக்ட், இஸ்கோ லகா டாலா தோ லைஃப் ஜிங்காலாலா, பாக்ஸ் ஃப்ரீ டிஷ் ஃப்ரீ, விஷ் கரோ டிஷ் கரோ ! "ஏ ஏ நிறுத்து நிறுத்து என்னல்லாமோ சொல்லிக்கொண்டு போறே" என்று முழி பிதுங்குகிறீர்களா? இதெல்லாம் DTH செட்-டாப்-பாக்ஸிற்கான விளம்பர வாசகங்கள். இந்தியாவில் சற்றே தாமதமாக வந்தாலும், செட்-டாப்-பாக்ஸின் விற்பனை விண்ணை முட்டுகிறது. அப்படி இந்த DTH என்றால் என்ன? செயற்கைக் கோளிலிருந்து நேராக நம் வீட்டின் வரவேற்பறைக்கே வருவதால் இதற்குப் பெயர் Direct To Home. சரி இந்த DTH இனால் அப்படியென்ன லாபம்?
கேபிள்காரர்களின் தயவில் தயவில் டி.வி நிகழ்ச்சிகள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. துல்லியமான டிஜிடல் சிக்னலினால் நல்ல தொரு தரமான வீடியோ பார்க்கலாம். கேபிள் சென்டரில் மின்சாரம் தடைப் பட்டால் நம் வீட்டில் டி.வி பார்க்க முடியாது. செயற்கைக் கோளில் மின்சாரத்தடை ஏற்படாதலால் தடையில்லாமல் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். இதனாலெல்லாம் DTH ரொம்ப சௌகர்யமானதும் லாபகரமானதா என்றால், அவ்வளவு லாபகரமானது இல்லை என்று தான் நான் பதிலளிப்பேன்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சென்ற பதிவில் பார்த்த MSO என்பவர்களுக்குப் பதிலாக டாடா ஸ்கை, டிஷ் டி.வி போன்றவர்கள், இடைத்தரகர்களாக இருக்கின்றனர். இவர்களை Broadcaster'கள் என்று சொல்லலாம். இவர்கள் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் சன் டி.வி ஸ்டார் டி.வி (இவர்களை Content Producer என்று சொல்லலாம்), போன்றவர்களிடமிருந்து சிக்னல்களைப் பெற்று செயற்கைகோளுக்கு அனுப்புகிறார்கள். செயற்கைக் கோளிலிருந்து செட்-டாப்-பாக்ஸ் மற்றும் மினி-டிஷ் கொண்டு நாம் வீட்டில் பார்க்கிறோம். நாம் consumer'கள்.
ஆக Content Producer'களிடமிருந்து consumer'க்கு சிக்னல்கள் சென்றடைய ஒரு Broadcaster தேவைப் படுகிறார். இந்த Broadcaster, content producer' இடமிருந்து சிக்னல்களைப் பெற்று அதை வேறு யாருக்கும் புரியாத வண்ணம் என்க்ரிப்ட் செய்து செயற்கைக்கோளுக்கு அனுப்புகின்றனர். இந்த சிக்னல்களை நமது செட்-டாப்-பாக்ஸிலுள்ள ஸ்மார்ட் கார்டிற்கு எப்படி டிக்ரிப்ட் செய்ய வேண்டும் என்று தெரியும். இந்த என்க்ரிப்ஷன் டிக்ரிப்ஷன் தான் இந்த பிராட்காஸ்டர் செய்யும் பெரிய தில்லாலங்கடி வேலை.
இந்த என்க்ரிப்ஷன் மட்டும் இல்லையென்றால், செயற்கைக்கோளிலிருந்து எந்த அலைவரிசையில் சிக்னல்கள் வருகிறது என்று தெரிந்து விட்டால் யார் வேணாலும் ஒரு டிஷ் போட்டு, செயற்கைக்கோளிலிருந்து வரும் அலைவரிசையை பதிவிறக்கம் செய்து, சிக்னலகளைப் பார்க்க முடியும். மாதச் சந்தா செலுத்தாமலேயே நம்மால் டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். மாதச் சந்தா செலுத்தவில்லையென்றால் கேபிள் காரன் கேபிள் இணைப்பைத் துண்டித்து விடமுடியும். ஆனால், இந்த DTH முறையில் யார் யார் எங்கெங்கு டிஷ் பொறுத்தியிருக்கிறார்கள் என்று பிராட்காஸ்டருக்கு எப்படித் தெரியும்? இந்த மாதிரி ஹாக் செய்வதற்க்காகவே நிறைய பேர் இருக்கிறார்கள்.
இந்தியாவில் Content Producer'க்கென சில விதிமுறைகள் இருக்கின்றன. அவர்கள் எல்லோரும் எல்லா DTH பிராட்காஸ்டர்களுடன் தங்களுடைய சிக்னல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். முதலில் இலவசமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தான் விதிமுறை கொண்டு வந்தார்கள். பின்னர், எவ்வளவு சந்தாதாரர்கள் இருக்கிறார்களோ அதற்கேற்றாற்போல் பணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று மாற்றியமைத்தார்கள்.
இங்குதான் இந்த DTH பிராட்காஸ்டர்கள் லாபம் பார்க்க ஆரம்பித்தனர். கேபிள் காரகள் எப்படி தங்களுடைய சந்தாதாரர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பித்தனரோ, அதே தில்லு முல்லுவை இவர்களும் செய்ய ஆரம்பித்தனர். சில நாட்களுக்கு முன், டாடா ஸ்கை வைத்கிருப்போர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ESPN பார்க்க முடியாமற்போனதற்கு இப்படி நடந்த தில்லு முல்லு தான் காரணம்.
இந்த DTH பிராட்காஸ்டர்கள் கொண்டு வந்திருக்கும் ஒரு வரவேற்கத்தக்க ஒரு தொழில் நுட்பம், "Pay Per View". அதாவது நாம் பார்க்கும் சானல்களுக்கு மட்டும் சந்தா கட்டினல் போதும் என்ற தொழில் நுட்பம். ஆனால் இவர்கள் சானல்களை பகேஜ் செய்யும் முறையைப் பார்த்தால், அதில் எள்ளளவும் Consumer'க்கு லாபம் இல்லை என்பது தான்.
பொதுவாக, தமிழ் குடும்பங்களில் விரும்பிப் பார்க்கும் சானல்கள் சன் டி.வி, கே.டி.வி, ராஜ் டி.வி, விஜய் டி.வி, (நான் பார்க்கா விட்டாலும்)கலைஞர் டி.வி, சன் மியூஸிக், இசையருவி, பொதிகை, மற்றும் இன்ன பிற தமிழ் சானல்கள். வீட்டம்மாக்கள் போனால் போகிறதென்று விட்டால், இ.எஸ்.பி.என், ஸ்டார் கிரிக்கேட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ். குழந்தைகள் இருந்தால் கார்டூன் நெட்வொர்க், சுட்டி டி.வி, ஜெடிக்ஸ். என்னைப்போல் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அறிவுப்பசியுள்ளவர்கள் (ரொம்ப ஓவர்'ன்னு காயத்ரி சொல்கிறாள்) டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிரஃபி, இவ்வளவு தான்.
நமது விருப்பம் இப்படியிருக்க, அவர்கள் தங்களது சானல் பொக்கேக்கயை, தமிழ் பொக்கே, விளையாட்டு பொக்கே, குழந்தைகள் பொக்கே, கல்வி பொக்கே என்று பாகேஜ் செய்திருக்கணும். ஆனால், அவர்கள் அப்படி செய்திருக்க மாட்டார்கள். சன் பொக்கே, ராஜ் பொக்கே, கலைஞர் பொக்கே, ஸ்டார் பொக்கே, விளையாட்டு பொக்கே, என்று தனித்தனியாக பாக்கேஜ் செய்து வைத்திருப்பார்கள். அது என்ன பொக்கே என்று நீங்கள் கேட்கக்கூடும். நான் ஏற்கனவே சொன்னது போல், ஒரே அலைவரிசையில் நிறைய சானல்களைப் பார்க்க முடியும். எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், இப்படி ஒரே அலைவரிசையில் அனைத்து சானல்களும் ஒரு பொக்கேக்குள் அடங்கும் என்று குறிப்பிடலாம். அதாவது சன் நிறுவனம், தான் தயாரிக்கும் அனைத்து சானல்களையும், ஒரே அலைவரிசையில் கொடுக்கும். இதனால் அதனை சன் பொக்கே என்று சொல்லலாம். ஒவ்வொரு பொக்கேவிற்கும் ஒரு அயாயாள எண் உண்டு. தனது அடையாள எண்ணையும் அலைவரிசையையும் சன் நிறுவனம், பிராட்காஸ்டர்களோடு பகிர்ந்து கொள்ளும். இதைத் தொழில் நுட்ப ரீதியாக சொல்லவேண்டுமானால், "Feed Sharing" என்று சொல்லலாம்.
இதே போல் எல்லா Content Producer'களும் தனது சிக்னல்களை பிராட் காஸ்டர்ரோடு பகிர்ந்து கொள்கிறார்கள். இப்படியாக எல்லா Content Producer'களிடமிருந்து வாங்கிய பொக்கேக்களை ரி-பாக்கேஜ் செய்து என்க்ரிப்ட் செய்து மீண்டும் செயற்கைக்கோளுக்கு அனுப்புகிறார்கள். எதற்காக இந்த ரி-பாகேஜ்? இதில் தொழில் நுட்ப ரீதியான காரணம் எதுவும் இல்லை. எல்லாமே வியாபார நோக்கம் தான். உதாரணத்திற்கு, சன் மற்றும் விஜய் டி.வி வேண்டுமானால், தமிழ் பொக்கே வாங்க வேண்டும். ஆனால் இந்த தமிழ் பொக்கேக்கு இவர்கள் வைத்திருக்கும் கட்டணம் சன் பொக்கேக்கும் ஸ்டார் பொக்கேக்கும் இவர்கள் எவ்வளவு கட்டணம் செலுத்துகிறார்களோ, அவ்வளவாகும். மேலும் விளையாட்டு பொக்கே வேண்டுமெனில், அதற்கு இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து அந்த பொக்கேயும் வாங்க வேண்டும். இங்கு தான் இந்த பிராட்காஸ்டர்கள் பணம் பண்ணுகிறார்கள். இவர்கள் ஸ்டார் பொக்கே வாங்கும் போதே விஜய் டி.வி.யுடன் இவர்களுக்கு ஸ்டார் இ.எஸ்.பி.என் வந்து விடும். ஆனால், எப்படி மக்கள் விளையாட்டுக்காக இவ்வளவு பைத்தியமாக அலையும் போது அதில் ஏன் காசு பண்ணக்கூடாது என்ற பேராசை தான். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், இந்தியா கிரிக்கெட் பைத்தியம் பிடித்த நாடு. ஸ்டார் பொக்கேயோடு ஸ்டார் கிரிக்கெட்டும் பிராட்காஸ்டருக்கு வந்து விடும். ஆனால், இவர்கள் ஸ்டார் கிரிக்கெட்டை விளையாட்டு பொக்கேயோடு வழங்காமல் அதை தனியாக விற்று காசு பண்ணுவார்கள்.
இந்த DTH ஆபரேடர்கள், நிகழ்ச்சி தயாரிப்பதில்லை, ஆனால் நிகழ்ச்சி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து சிக்னல்களை வாங்கி, அதை வேறு யாரும் பார்க்காத வண்ணம் மாற்றியமைத்து, consumer'க்கு வழங்குகிறார்கள். இவர்கள் சொந்தமாகச் செலவு செய்வது, சிக்னல்களை என்க்ரிப்ட் செய்வது (அதுவும் தனது சொந்த லாபத்திற்காகத்தான்), செட்-டாப்-பாக்ஸ் மற்றும் அதன் மென்பொருள் வடிவமைப்பது தான். செட்-டாப்-பாக்ஸ் மற்றும் விற்றதால் இவர்களுக்கு நிறைய லாபம் இல்லை. மாதாமாதம் நாம் செலுத்தும் சந்தாப் பணம் தான் இவர்களுக்கு தங்க முட்டை போடும் வாத்து. அதனால் தான் தனது வியாபாரத்தைப் பெறுக்க இப்போது பாக்ஸ் மற்றும் டிஷ் இலவசம் என்று கூவிக்கூவி விற்கிறார்கள். எப்படி ஒரு இடத்தில் இரண்டு கேபிள் ஆபரேடர்கள் இணைப்பு கொடுப்பதில்லையோ அதே போல், ஒரு DTH ஆபரேடரிடமிருந்து வாங்கிய செட்-டாப்-பாக்ஸை வைத்து இன்னொரு பிராட்காஸ்டருக்குத் தாவ முடியாது. இதுவும் இவர்கள் பணம் பண்ண இன்னொரு யுக்தி?
அது ஏன்? அடுத்த பதிவில் சொல்கிறேன்.