Pages

August 28, 2008

மீசை அரும்பிய பருவம்

மூக்கின் கீழே, வாய்க்கு மேலே இருந்த பொரம்போக்கு நிலத்தை ஓரிரண்டு அரும்பு முடிகள் ஆக்கிரமித்டிருந்த பருவம். வயசுப் பசங்க "மச்சி மீசை மொளச்சிடுச்சுல்ல" என்று வெட்கத்துடன் புன்னகைத்துக் கொள்ள ஆரம்பித்த காலம். நேற்று வரை இவர்களும் எங்கள் வகுப்பில் தான் படிக்கிறார்கள், என்று சொல்லிக் கொண்டிருந்த சில பெண்கள் திடீரென தேவதைகளாகத் தெரிய ஆரம்பித்த பருவம். ஐந்து நாட்களுக்கு வரும் அப்பாக்களின் ஷேவிங்க் பிளேட் மூன்றாகக் குறைக்கப்பட்ட தினங்கள். நெற்கதிர்களை மட்டுமே பயிரிட்டுப் பார்த்த நாங்கள், திடீர் விவசாயிகளாக அவதாரமெடுத்து, காலையில் கடலை சாகுபடி செய்து, மாலை நேரங்களில் அதை வறுத்து விற்பனை செய்ய ஆரம்பித்த பருவம். வைரமுத்துவாகவோ வாலியாகவோ மாறி கவிதைகள் பல புனையும் பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட வயது.
விளக்கமெல்லாம் போதும்லே, விசயத்தைச் சொல்லுலே, செத்த மூதி!!

எங்கள் ஊரில் மாவட்ட அறிவியல் மையம் (District Science Centre) ஒன்றிருக்கிறது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் (Ministry of Human Resources) கீழ் இதற்காக நிதி ஒதுக்கி, இதை நடத்தி வருகிறார்கள். நெல்லையில் சினிமாவையும் நெல்லையப்பரையும் விட்டால், பொழுது போக்க ஒரே இடம். பள்ளி மாணவர்களிடையே அறிவியல் பசியை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் வினாடி வினாப் போட்டி(Quiz Competition), அறிவியல் கண்காட்சிப்போட்டி (Science exhibition) என்று நிறைய போட்டிகள் வைப்பார்கள். இந்தப்போட்டிகளில் வெற்றிபெறுவது ஒவ்வொரு பள்ளிக்கும் பெரிய கௌரவ பிரச்சனை.

ஃபிஸிக்ஸ் கெமிஸ்ட்ரி வகுப்புகளில் நிறைய கேள்விகள் கேட்கிறேன், என்னுள் அறிவுப்பசி, கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிகிறது என்று வாத்தியார் நினைத்தாரோ என்னவோ, "நீ இந்த வருடம் அறிவியல் கண்காட்ச்சியில் ஏதாவது புதிதாக ஒரு இயந்திரம் செய்து வைக்கிறாய்" என்று பள்ளியில் ஆணையிட்டுவிட்டார்கள். "அப்பாடா இவன் தொல்லை ஒரு நாலு நாளைக்கு இருக்கக்கூடாது" என்று ஃபிஸிக்ஸ் கெமிஸ்ட்ரி வாத்தியார்கள் சதி செய்தனரோ தெரியவில்லை.

"புதுசா என்னத்தச் செய்ய? ஆஹா நாம தான் அடுத்த நெல்லை நகர எடிசன் என்ற கணக்கில்", ஸ்கூல் லைப்ரரியிலுள்ள Electronics For You'ஐ புகட்டலானோம். எல்லாம் எந்த நூற்றாண்டிலோ வாங்கிப்போட்டிருந்தார்கள் போல. எல்லாம் பழைய காகிதங்கள். ஒரு வழியாக, ஒரு circuit'ஐ தேர்ந்தெடுத்து, இதைச் செய்யலாம் என்று முடிவெடுத்து, அப்பாவையும் நச்சரித்து, ஒரு printed circuit board அளவிற்கு கொண்டு வந்து விட்டோம். நாங்களும் ஏதோ வைக்கிறோம் பேர்வழி என்ற பெயரில் இதையும் வைத்தாகி விட்டது.

அறிவியல் கண்காட்சியும் இனிதே ஆரம்பமானது. நெல்லை மட்டுமல்லாது மற்ற நகரத்துக்குப் பள்ளிகளிலிருந்தெல்லாம் நிறைய செய்து கொண்டு வைத்திருந்தார்கள். (சமையல் சாப்பாடு அல்ல, அறிவியல் சார்ந்த புதிது புதிதாக இயந்திரங்கள்)

இந்த அறிவியல் கண்காட்சி பற்றி ஒரு மினிதகவல். இதற்கு அனுமதி இலவசம். மாணவர்கள் சீருடையிலோ, அல்லது கல்லூரி அடையாள அட்டையைக் காண்பித்தாலோ கேள்வியெதுவும் கேட்காமல் உள்ளே செல்ல அனுமதித்து விடுவார்கள். பெரும்பான்மையான கூட்டம் பெண்கள் பள்ளி வைத்திருக்கும் ஸ்டாலில் தான் இருக்கும். அல்லது பெண்கள் வைத்திருக்கும் கருவிகளை மட்டும் பார்த்து விட்டு, எங்களையெல்லாம் ஒரு நக்கல் லுக் விட்டு விட்டு போய்விடுவார்கள்.

முதல் நாளே நடுவர்களெல்லாம் வந்து விட்டு, எங்களிடம் கேட்கக்கூடாத out of syllabus கேள்வியெல்லாம் கேட்டுக் குடைந்து விட்டு, சென்று விட்டார்கள். அவர்கள் போனவுடனேயே தெரிந்து விட்டது, நான் வைத்திருந்த இயந்திரத்திற்கு ஆறுதல் பரிசு கூடக் கிடைக்கப் போவதில்லையென்று. பின்ன வெறும் theory மட்டும் சொல்லிவிட்டு, வேலையே செய்யாத இயந்திரத்திற்கு யார் தான் பரிசு கொடுப்பா??

நாங்களும் மற்ற பள்ளியிலிருந்து அப்படியென்ன தான் இயந்திரங்கள் செய்து கொண்டு வைத்திருக்கிறார்கள் பார்ப்போம் என்று ஒரு ரவுன்ட்ஸ் போகப் புறப்பட்டோம். சில குட்டிச்சாத்தான்களை எங்கள் ஸ்டாலில் விட்டு விட்டு மற்ற பள்ளிகளின் ஸ்டால் நோக்கி வீரு கொண்டு நடக்கலானோம்.
"டேய் மாப்ள, அங்க பாரு டா, Girls School ஸ்டால்" என்றான் ஒருவன்.
"வாங்கடா, அங்கிட்டு போவோம்" என்றான் இன்னொருவன்.
அங்கே ஒரு பெண் ஏற்கனவே தான் செய்து வைத்திருந்த ஏதோ எலக்ட்ரானிக்ஸ் கருவியைப் பற்றி வர்ணித்துக்கொண்டிருந்தாள். கேட்பவர்களை விட, அவளைப் பார்ப்பவர்கள் தான் அதிகம் என்ற உண்மை தெரியாமல். நானும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டேன். அவளது வர்ணனை முடிந்தவுடன், கூட்டத்தில் சற்று முன்னேறி, "எக்ஸ்யூஸ்மீ, இந்த device பற்றிச் சொல்ல முடியுமா" என்று கேட்டேன்.
என்ன நினைத்தாளோ, என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "இப்போதானே எல்லோருக்கும் சொல்லி முடித்தேன். உங்க காதுல விழலியா" என்றாள்.
"நான் பாதியிலிருந்து தான் கேட்டேன். முதலிலிருந்து சொன்னால் கொஞ்சம் நல்லா இருக்கும்".
என்னோடு இரண்டு மூன்று பேர்கள் சேர்ந்து கொள்ள மீண்டும் முதலிலிருந்து விளக்கிச் சொன்னாள். கிளாஸ்ல வாத்தியார் நடத்துற பாடத்தையே கவனிக்காத நான் , என்னையும் அறியாமல் அவள் விளக்குவதை நான் கூர்ந்து கேட்பது எனக்கே விந்தையாக இருந்தது

"அவள் சொன்னது தேவகானமாகவோ வீணை மீட்டுவது போலவோ இருந்தது" என்று சொல்லப்போகிறேன் என்று நினைக்கிறீர்களா. அதான் இல்லை. ஸ்கூல்லயே அவ்வளவு கெட்டுப் போகலை.
தொண்டைத் தண்ணிர் வற்ற அவள் விளக்கியதற்கு இரண்டு மூன்று சந்தேகங்களும் கேட்டேன்.
"நீங்க எந்த ஸ்கூல்" என்றாள் என்னிடம்.
என் பள்ளியைச் சொல்லிவிட்டு, நானும் இங்கே ஒரு device செய்து கொண்டு வந்திருக்கேன், நீங்க எங்க ஸ்டாலுக்கு வந்து பாருங்க என்று அச்சடிக்கப்படாத அழைப்பிதழையும் வைத்து விட்டு, நகரலானேன்.

அங்கிருந்து வாந்தாலும், மீண்டும் அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் குறையவில்லை. என்ன காரணத்திற்காக மீண்டும் அங்கே செல்வது? கண்காட்சி இன்னும் ஒரு நாள் இருக்கிறது. எப்போதாவது போய் பார்த்துக் கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.

மறு நாள் என் அழைப்பிற்கு மரியாதை வைத்து வந்தாளா, இல்லை எங்களை மாதிரி அவளும் ரவுண்ட்ஸ் வந்தாளா தெரியவில்லை. தோழிகள் புடை சூழ எங்கள் ஸ்டாலுக்கு வந்தவள் ஒவ்வொன்றாக நோட்டம் விட்டவள் என்னை நோக்கியும் வந்தாள். நான் என்னவோ, நானே கண்டு பிடித்த கருவி மாதிரி அவ்வளவு பெருமையுடன் அதை விளக்கிக் கூறினேன்.

"என்ன வெறும் circuit diagram மட்டும் காட்டறீங்க. அதை இயக்கிக் காட்டுங்க" என்றாளே பார்க்கலாம்.
"ஆஹா பொட்டப் பிள்ளைங்கள கூட்டியாந்து மானத்தை வாங்கிட்டாளே"ன்னு நொந்து கொண்டாலும், "Current leakage உள்ள கருவியைக் கொண்டாங்க, இது கண்டு பிடிச்சுடும்" என்று சொல்லி சமாளித்தேன்.
எனக்கு பரிசு கிடைக்க "All the Best" சொல்லி விட்டு அவளும் சென்றாள். கண்காட்சி முடிந்து, ஆறுதல் பரிசு கூட கிடையாது என்று தெரிந்து கொண்ட பின்பு, ஸ்கூல் டியூஷன் ரிவிஷன் என்று பழைய வாழ்க்கைக்குத் திரும்பலானேன்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, எஞ்சினியரிங்க் காலேஜில் நுழைந்த முதல் நாள். ராகிங்கிலிருந்து தப்பிக்க ஆட்டு மந்தைபோல் முதலாமாண்டு மாணவர்கள் அனைவரும் ஒன்றாகச் சென்று கொண்டிருந்தோம். என்ன ஆச்சர்யம், இரண்டு வருடங்களுக்கு முன் அறிவியல் கண்காட்சியில் பார்த்த அதே முகம்.
"ஓ, இவளும் இதே கல்லூரி தானா. விட்ட குறை தொட்ட குறையாக பள்ளியிலே விட்ட உறவை, கல்லூரியில் தொடரலாமே என்று அவளிடம் சென்று, "ஹலோ, எப்படி இருக்கீங்க. என்னை தெரியுதா? Science Exhibition'
பார்த்தோமே, ஞாபகம் இல்லையா" என்று நான் பேசிக்கொண்டே போக, அவள் சரியாகவே பதில் சொல்லலை. நான் போகும் பஸ்ஸும் வந்து விடவே, "ஒகே, அப்பறம் பார்க்கலாம்" என்று வந்து விட்டேன். இங்க தானே படிக்கறா, நாளைக்கு பார்த்துக் கொண்டால் போச்சு.

"எங்கடா போயிட்ட" என்று நண்பன் ஒருவன் கேட்க, "இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஊர்ல பார்த்த ஒரு மயில் மச்சி" என்றேன்.
"யாருடா?" என்று அவனும் வினவ, "அதோ பச்சை கலர் சுடிதார்லே இருக்காளே அவள் தான்டா" என்றேன்.

"டேய் வெண்ணை அது சீனியர் டா"


21 comments:

முகுந்தன் said...

me the first!!!

முகுந்தன் said...

//சமையல் சாப்பாடு அல்ல, அறிவியல் சார்ந்த புதிது புதிதாக இயந்திரங்கள்//

தெளிவா சொல்லிட்டீங்க , இல்லன்னா நானும் ஏதோ சாப்பாடு என்று தான் நினைத்திருப்பேன் :-)

//காலையில் கடலை சாகுபடி செய்து, மாலை நேரங்களில் அதை வறுத்து விற்பனை செய்ய ஆரம்பித்த பருவம். //

சரி சரி , இப்படியா ரொம்ப நல்லவரா உண்மைய சொல்லறது?

//கிளாஸ்ல வாத்தியார் நடத்துற பாடத்தையே கவனிக்காத நான் , என்னையும் அறியாமல் அவள் விளக்குவதை நான் கூர்ந்து கேட்பது எனக்கே விந்தையாக இருந்தது//

அந்த வயசுல இதெல்லாம் சகஜம் தல ...

//அவள் சரியாகவே பதில் சொல்லலை. நான் போகும் பஸ்ஸும் வந்து விடவே, "ஒகே, அப்பறம் பார்க்கலாம்" என்று வந்து விட்டேன்.//

மிரள வேசிட்டீங்கனு சொல்லுங்க :))

Vijay said...

Yes. You are the First, Mukundan!!!

Ramya Ramani said...

அட சீனியரியே பொண்ணையே முதல் நாளே வம்பு இழுத்தாசா..என்ன தெகிரியம்!!

இந்த ஹாப்பி டேஸ் டைசன் மாதிரியா நீங்க?? (Just Kidding )

Vijay said...

ரம்யா, யாரந்த ஹாப்பி டேஸ் டைசன்?

MSK / Saravana said...

//"எங்கடா போயிட்ட" என்று நண்பன் ஒருவன் கேட்க, "இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஊர்ல பார்த்த ஒரு மயில் மச்சி" என்றேன்.
"யாருடா?" என்று அவனும் வினவ, "அதோ பச்சை கலர் சுடிதார்லே இருக்காளே அவள் தான்டா" என்றேன்.

"டேய் வெண்ணை அது சீனியர் டா"//

என் இனமையா நீர்..

நானும் என் நண்பனும் சீனியர் ஜுனியர் வித்தியாசமில்லாமல் சைட் அடித்திருக்கிறோம்...
(அதன் பின் விளைவுகளைஎல்லாம் யாரும் கேட்காதீங்க..)
;)

Vijay said...

சரவண குமார்,
நாம சீனியர் ஜூனியர்ங்கற பாகுபாடெல்லாம் பார்கறது கிடையாது. சொல்லப்போனால், வேண்டாம், நம்ம பதிவை நிறைய அம்மணிகளும் படிக்கறாங்க. ஒரு டிஸிப்ளின் மெயின்டெயின் பண்ணுவோம்.
நான் படித்தது ராகிங்கெல்லாம் இருந்த நூற்றாண்டு. முதல் நாளே first year பையன் சீனியர் பொண்ணு கிட்ட ஜொள்ளு வுடறதைப் பார்த்தாங்க, அவ்வளவு தான் செத்தேன்.

இந்தக்கதையில் பல கற்பனைகளும்
கலந்திருக்கிறது.

By the way, விசிட்டுக்கு நன்றி.

மங்களூர் சிவா said...

கலக்கல்!

மங்களூர் சிவா said...

/
பெரும்பான்மையான கூட்டம் பெண்கள் பள்ளி வைத்திருக்கும் ஸ்டாலில் தான் இருக்கும். அல்லது பெண்கள் வைத்திருக்கும் கருவிகளை மட்டும் பார்த்து விட்டு, எங்களையெல்லாம் ஒரு நக்கல் லுக் விட்டு விட்டு போய்விடுவார்கள்.
/

:)))

/
முதல் நாளே நடுவர்களெல்லாம் வந்து விட்டு, எங்களிடம் கேட்கக்கூடாத out of syllabus கேள்வியெல்லாம் கேட்டுக் குடைந்து விட்டு, சென்று விட்டார்கள். அவர்கள் போனவுடனேயே தெரிந்து விட்டது, நான் வைத்திருந்த இயந்திரத்திற்கு ஆறுதல் பரிசு கூடக் கிடைக்கப் போவதில்லையென்று
/

:)))))
ROTFL

மங்களூர் சிவா said...

/

"அவள் சொன்னது தேவகானமாகவோ வீணை மீட்டுவது போலவோ இருந்தது" என்று சொல்லப்போகிறேன் என்று நினைக்கிறீர்களா. அதான் இல்லை. ஸ்கூல்லயே அவ்வளவு கெட்டுப் போகலை.
/


ஒத்துக்கறேன் நீ நல்லவந்தான் ஒத்துக்கிறேன்
:))))

மங்களூர் சிவா said...

/
"டேய் வெண்ணை அது சீனியர் டா"
/

நல்லவேளை லெக்சரர் இல்லையே!!

நான் பாலிடெக்னிக் படிக்கும்போது +2 முடித்து பாலிடெக்னிக் படித்தென் லெக்சரர் எல்லாரும் B.E. ப்ரெஷர்ஸ் என்னமோ கூட படிக்கிற பொண்ணுங்க மாதிரியே இருப்பாளுங்க!!

:)))))

Divyapriya said...

//மட்டுமே பயிரிட்டுப் பார்த்த நாங்கள், திடீர் விவசாயிகளாக அவதாரமெடுத்து, காலையில் கடலை சாகுபடி செய்து, மாலை நேரங்களில் அதை வறுத்து விற்பனை செய்ய ஆரம்பித்த பருவம்.//

முடியல விஜய்...முடியல...கொன்னுடீங்க...செம வரி :-)

//"அப்பாடா இவன் தொல்லை ஒரு நாலு நாளைக்கு இருக்கக்கூடாது" என்று ஃபிஸிக்ஸ் கெமிஸ்ட்ரி வாத்தியார்கள் சதி செய்தனரோ தெரியவில்லை//

இருந்தாலும் இருக்கும்...:-D


//"இப்போதானே எல்லோருக்கும் சொல்லி முடித்தேன். உங்க காதுல விழலியா" //

ச்சே, என்ன ஒரு அவமானம்...ரத்தம் கொதிக்குது :-)

//டேய் வெண்ணை அது சீனியர் டா//

ஹா ஹா ஹா :-D

Vijay said...

\\மங்களூர் சிவா said...
கலக்கல்!\\
விசிட்டுக்கு ரொம்ப நன்றிங்க.

\\ஒத்துக்கறேன் நீ நல்லவந்தான் ஒத்துக்கிறேன்
:))))\\
மெய்யாலுமே நான் நல்லவந்தாங்க

\\நல்லவேளை லெக்சரர் இல்லையே!!\\
ஏற்கனவே சரவணகுமாருக்கு சொன்ன பதில் தான். டீஸன்ஸி கருதி அதையெல்லாம் சொல்லலை. :-)

Vijay said...

\\முடியல விஜய்...முடியல...கொன்னுடீங்க...செம வரி :-)\\

ப்ளாகெல்லாம் எழுதி உங்களை மாதிரி உண்மையான எழுத்தாளர்களைக் கொல்லறேன்னு சொல்லறீங்க. இப்படியெல்லாம் சொல்லிட்டதுனால என் கொல்லும் முயற்சியைத் தோற்கடிக்க முடியாது!! :-)

Divya said...

விஜய் கலக்கல் போஸ்ட்டு:))

Divya said...

\\மூக்கின் கீழே, வாய்க்கு மேலே இருந்த பொரம்போக்கு நிலத்தை ஓரிரண்டு அரும்பு முடிகள் ஆக்கிரமித்டிருந்த பருவம். வயசுப் பசங்க "மச்சி மீசை மொளச்சிடுச்சுல்ல" என்று வெட்கத்துடன் புன்னகைத்துக் கொள்ள ஆரம்பித்த காலம். \\

அட.....அரும்பு மீசை முளைக்கும் காலத்தை இப்படி கூட அழகா சொல்ல முடியுமா......அசத்திட்டீங்க விஜய்!!

Divya said...

\"டேய் வெண்ணை அது சீனியர் டா"\\


ROTFL:))

சான்ஸே இல்ல......போஸ்ட் ரொம்ப ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருந்தது படிக்க:))

ரொம்ப ரசிச்சு படிச்சேன் விஜய்!

Anonymous said...

//நெற்கதிர்களை மட்டுமே பயிரிட்டுப் பார்த்த நாங்கள், திடீர் விவசாயிகளாக அவதாரமெடுத்து, காலையில் கடலை சாகுபடி செய்து, மாலை நேரங்களில் அதை வறுத்து விற்பனை செய்ய ஆரம்பித்த பருவம்.//

ஹா..ஹா
நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கின்றீர்கள்.

Vijay said...

\\Divya said...
விஜய் கலக்கல் போஸ்ட்டு:))\\

டான்க்ஸு டான்க்ஸு!!

\\Divya said...
ரொம்ப ரசிச்சு படிச்சேன் விஜய்!\\

மீண்டும் டான்க்ஸு டான்க்ஸு!!

Ramya Ramani said...

ஹாப்பி டேஸ் படத்துல ஒரு கேரக்டர் சீனியர் பொண்ணு "Looks Interesting"nu சொல்லுவாரு அது தான் நினைவு வந்துச்சு..

Vijay said...

\\ kunthavai said...

ஹா..ஹா
நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கின்றீர்கள்.\\

Thans for the Visit and your comments. Keep visiting :-)